Maya (2015) – Tamil
கட்டுரையில் மிகச்சில ஸ்பாய்லர்கள் இருக்கலாம்.
ஒரு திகில் படத்தின் வேலை என்ன? ஆடியன்ஸை அவ்வப்போது பயமுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும். எத்தனைக்கெத்தனை இத்தகைய த்ரில் மொமெண்ட்கள் படத்தில் இருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை ஆடியன்ஸ் அந்தப் படத்தோடு ஒன்றமுடியும். ‘ஜம்ப்ஸ்’ என்று சொல்லக்கூடிய இத்தகைய திடும் தருணங்கள் மாயா திரைப்படத்தில் ஆங்காங்கே சரியாகவே வைக்கப்பட்டுள்ளன. இதனாலேயே ஆடியன்ஸ் அவைகளை ரசிப்பதையும் உணர முடிந்தது. உண்மையில் தமிழில் ஒரு தரமான ஹாரர் படம் இதுவரை வந்திருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை ‘யாவரும் நலம்’ படம்தான் தெரிகிறது. சமீபத்தில் வந்திருக்கும் டிமாண்ட்டி காலனியையும் இந்த லிஸ்ட்டில் சேர்க்க முடியும். இவைதவிர, தமிழில் ஹாரர் படங்களுக்குப் பெரிய vacuum ஒன்று இருப்பதை உணர முடிகிறது (ஹாரர் காமெடிகளை நான் லிஸ்ட்டில் சேர்க்கவில்லை. அவையுமே இப்போதுதான் வர ஆரம்பித்துள்ளன. மற்றபடி ‘நாளைய மனிதன்’, 13ம் நம்பர் வீடு’, ‘வா அருகில் வா’, ‘மைடியர் லிஸா’ போன்ற படங்களெல்லாம் இந்த லிஸ்ட்டில் வராது. அவை ஹாரர் படங்களின் Spoofகள் என்று உறுதியாக நம்புகிறேன்).
உண்மையில் உலகத் திரைப்படங்களில் வந்திருக்கும் Genreகளில் பல இன்னும் தமிழில் முயற்சித்தே பார்க்கப்படவில்லை என்ற வகையில், இப்போதைய காலகட்டம்தான் தமிழ்த் திரைப்படங்களில் சற்றேனும் இத்தகைய வகைகள் இடம்பெறத் துவங்கும் காலம். எனவே ‘மாயா’வும் அப்படியே. ஹாரர் என்ற வகையில், அந்த வகைக்கு முழுதும் ஜஸ்டிஃபிகேஷன் அளிக்கும் வகையிலான ’தமிழ்ப்’ படங்களில் மாயா ஒன்று. அதில் சந்தேகமே இல்லை.
ஹாரர் படங்களில் ஆங்காங்கே இடம்பெறும் ஜம்ப்ஸ்களில் இசை பெரும்பங்கு வகிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். ஒரு திடுக்கிடும் தருணத்தில், பின்னணி இசை ஆடியன்ஸை ஜம்ப் செய்ய வைக்காவிட்டால் அந்தத் தருணத்தின் பயங்கரம் பெரும்பாலும் பாதியாகக் குறைந்துவிடும். அந்த வகையில் இசையை எடுத்துக்கொண்டாலும் இத்தகைய ஜம்ப்ஸ்களுக்கு உறுதுணையாகவே இருக்கிறது. படத்தில் வரும் இத்தகைய திடுக்கிடும் தருணங்களில் ஆடியன்ஸ் (பெரும்பாலும் பெண்கள்) அலறிவிட்டுச் சிரிப்பதை ரசிக்க முடிந்தது. எனவே, ‘மாயா’, இத்தகைய தருணங்களைக் கச்சிதமாக யோசித்து எழுதி எடுக்கப்பட்ட படம். அதிலும் எனக்கு சந்தேகம் இல்லை. திரைக்கதையில் ஆங்காங்கே வரும் திருப்பங்களைக் கவனித்தால் இது நன்றாகத் தெரிகிறது.
ஹாலிவுட்டின் ஹாரர் படங்களை இயக்குநர் அஷ்வின் சரவணன் நன்றாக ஆராய்ந்திருக்கிறார் என்பதும் அதில் வரும் போல்டர்கைஸ்ட் படத்தைப் பற்றிய விளக்கம், அதனுடன் வரும் இன்னும் சில ஹாரர் படங்களை இணையத்தின் மூலம் லிஸ்ட் போடுவது என்பதிலெல்லாம் தெளிவாகவே தெரிகிறது. அதிலும் போல்டர்கைஸ்ட் என்ற உச்சரிப்பு என்னைக் கவர்ந்தது. இது ஒரு சப்பை மேட்டராக இருந்தாலும், 95% பேர் அதனை ‘போல்டர்ஜிஸ்ட்’ என்றே சொல்வது வழக்கம். அதன் உண்மையான உச்சரிப்பை உள்ளது உள்ளபடியே இதில் சொன்னது ஜாலியாக இருந்தது.
கதையையும் எடுத்துக்கொண்டால், மெண்டல் அஸைலம் என்பது மிகப் பலமான, உணர்ச்சிமிக்க பின்னணி. அதை வைத்துக்கொண்டு மாயாவின் கதையை நன்றாகவே சொல்கின்றனர். அதேபோல் அப்ஸராவின் வாழ்க்கையிலும் வரும் பிரச்னைகள் நம்பும்படியே உள்ளன. ‘இத்தனை பேரிய வீட்ல இருக்க.. பணம் இல்லையா?’ என்ற கேள்வியை நான் உண்மையில் நினைத்தேன். ஆனால் கொஞ்சம் தள்ளி அதே கேள்வி படத்திலும் வருகிறது.
ஆனால், இடைவேளைக்குப் பிறகு வரும் பெரிய காட்டு சீக்வென்ஸ் எனக்கு அலுப்பாக இருந்தது. முதல் பாதியில் வந்த ஜம்ப்ஸ்களுக்கு நேர் எதிராக, பழையகாலத் தமிழ் ஹாரர் ஸ்பூஃப்களின் சாயலில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் அந்த சீக்வென்ஸில் இருந்தன. மிகப்பெரிய சீக்வென்ஸ் அது. என்னதான் அந்த சீக்வென்ஸில் அப்ஸராவுக்குப் படத்தில் ஒரு முக்கியமான விஷயம் நடந்தாலும், மெல்ல மெல்ல சுவாரஸ்யம் குறைந்து ஒருவித அலுப்பான உணர்வு அந்த சீக்வென்ஸ் முழுதுமே இருந்தது. படத்தின் மிகப்பெரிய நெகட்டிவ் அம்சமாக இது எனக்குப் பட்டது. காரணம், ஆரம்பத்தில் இருந்து கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளின் மூலம் ஆடியன்ஸை பயமுறுத்திக்கொண்டே வந்து, திடீரென்று ஒரு பழைய தமிழ்ப்படத்தை/தொலைக்காட்சி நாடகத்தை அங்கே போட்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் அந்த சீக்வென்ஸ் முழுதும் தோன்றிக்கொண்டே இருந்தது. இந்த சுடுகாட்டு சீக்வென்ஸ் முழுதுமே மிகவும் predictable காட்சிகள் ஏராளமாக உண்டு (’நானே வருவேன்’ என்ற வரிகள் உச்சரிக்கப்படும்போது, அதே கண்கள் காலத்திய பாடல் ஒருவேளை வந்துவிடுமோ என்று நிஜமாகவே பயந்தேன்..)
அதேபோல், ஆரம்பத்தில் சொல்லப்படும் மாயாவின் கதையைக் கேட்கும்போதே அந்தக் கதையில் வரும் குழந்தை யார் என்பது எளிதில் விளங்கிவிட்டது. படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு கதைகள் ஏன் என்பதும் அப்ஸரா, இயக்குநர் ஆர்.கேவை சந்தித்துப் பேசும்போதே தெரிந்துவிட்டது. மாயாவின் மோதிரம் என்ன ஆயிற்று என்பதற்கும் எளிதில் புரியக்கூடிய லீட் ஷாட் ஒன்று படத்தில் வருகிறது (சரக்கு). அப்போதே அதுவும் புரிந்துவிடுகிறது.பின்னர் அர்ஜுன் யார் என்பதைச் சொன்னதும், உடனே அப்ஸராவும் அர்ஜுனும் பேசிக்கொள்ளும் பழைய ஷாட்களை இப்போது அர்ஜுனை வைத்து மறுபடியும் போட்டுக்காட்டியதும் அலுப்புதான். ஆல்ரெடி அர்ஜுனைப் பற்றித் தெரிந்ததுமே ஆட்டோமேடிக்காக ஆடியன்ஸுக்கு அவையெல்லாம் நினைவு வந்துவிடும். இதுபோன்ற விஷயங்களை ஸ்பூனில் எடுத்து ஆடியன்ஸுக்கு ஊட்டவேண்டிய அவசியமே இல்லை.
அடுத்ததாக, மாயா மற்றும் அப்ஸராவுக்கான தொடர்பு இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டிருக்கலாம். அது இல்லாததால், அப்ஸரா படத்தைப் பார்த்து முடிக்கையில் ஒரு ஆடியன்ஸ் என்ற முறையில் வரவேண்டிய உணர்வு எனக்கு வரவில்லை. இத்தகைய உணர்ச்சிமிக்க காட்சிகள் ‘பிசாசு’ படத்தில் மிஷ்கினால் அருமையாகக் காட்டப்படிருக்கும். இதனால் அப்படத்தோடு இறுதிவரை ஒன்ற முடிந்தது.
இறுதியாக, படத்தில் இறப்பவர்களின் மேக்கப் – அந்தக் கண்கள் – எனக்கு அவ்வளவாக ஒட்டவில்லை. ஆடியன்ஸை எகிற வைக்கும் ஜம்ப்ஸ் தவிர பாக்கி இருக்கும் காட்சிகளில் இசை கொஞ்சம் அதிகம்தான். சத்தமாக ஒலித்துக் காதைப் பதமும் பார்க்கிறது.
எனக்கு மனதில் இன்னமும் உள்ள குறை என்னவென்றால், ஆஃப்டரால் கொரியன்(Tale of Two Sisters), ஜாப்னீஸ் (Ringu) படங்களிலேயே மிகக்குறைந்த பட்ஜெட்டில் ஹாரரை அவ்வளவு அட்டகாசமாகக் கையாளும்போது, ஏன் இன்னும் நம்மால் ஒரு முழுமையான ஹாரர் படத்தைக் கொடுக்க முடியவில்லை? அதாவது, தமிழ் ஹாரர் படம் ஒன்றை வெளிநாட்டினர் பார்த்து ரசிக்கும் நிலை ஏன் இன்னும் வரவில்லை என்பதே. மாயாவின் முதல் பாதியைப் பார்த்தபோது ஒருவேளை அந்தக் குறை இப்படத்தின்மூலம் போக வாய்ப்புகள் இருக்குமோ என்று நினைக்க ஆரம்பித்தேன். ஆனால் இடைவேளைக்குப் பிறகு வந்த சுடுகாட்டு சீக்வென்ஸ் பார்த்ததும் அந்தக் குறை மறுபடியும் எழுந்துவிட்டது.
இப்படிப்பட்ட குறைகள் இருந்தாலும், மாயா அவசியம் தமிழில் ஹாரர் படங்களைத் தரமாக எடுப்பதற்கான அஸ்திவாரத்தை நன்றாகவே போட்டிருக்கிறது. ஒரு ஹாரர் படத்தில் என்னென்ன இருக்கவேண்டும்? எப்படியெல்லாம் படமாக்கலாம்? இத்தகைய கேள்விகளுக்கு யாவரும் நலம், மாயா போன்ற படங்களைக் காட்டலாம். இந்தக் கதையில் நயன்தாராவைப் போட்டிருப்பது அவசியம் புத்திசாலித்தனமான விஷயம்தான். இதில் இருந்து இம்ப்ரவைஸ் செய்து மேலும் பல வித்தியாசமான ஹாரர் படங்கள் தமிழில் அவசியம் வரவேண்டும்.
இது horrer வகைப் படம் என்று சொல்ல முடியாது. Ghost thriller வகை. திரைக்கதையில் பெரிய கோட்டை விட்டு விட்டார்கள். Ghost story, Missed call போன்ற படங்களில் இருக்கும் ஓரு தொடர்பு சங்கிலி இப்படத்தில் இல்லை. இருப்பினும் நல்ல முயற்சி.
I WAS EXPECTING A REVIEW ON MI 5
Puli Review podunga Sir please….
Puli Review podunga Sir please…. neenga sonna correct a irukum sir.. unga Reveiw paarthutu appurama padathha paarkalamnu irukom Sir..
Hi Rajesh.
Am your big fan and frequently checking your postings. Because of your writings, am getting more thirst & tastes about the films. Expecting your frequently posts here and i guessed you will be soon in films. Like that I have noticed your name in Netru Indru Nalai film. Good one.
Note : I had inspired by the movie “Thani Oruvan” film recently. Expecting your review on that if possible.
Thanks
Manimaran