மயக்கம் என்ன (2011) – தமிழ்

by Karundhel Rajesh December 2, 2011   Tamil cinema

செல்வராகவனின் ‘மயக்கம் என்ன’ படத்தைப் பற்றி ஒரு சுருக்கமான கட்டுரை எழுதியிருந்தேன். அதனைப் படித்த நண்பர்கள், இன்னமும் விரிவாக எனது கருத்தை அறிய விரும்பியதால், இந்தக் கட்டுரை.

‘மயக்கம் என்ன’ திரைப்படம் கையாளும் கரு என்ன? அப்படத்தின் அடிநாதமாக விளங்குவது என்ன? எளிய முறையில் சொன்னால், படத்தின் ஒன்லைன்? எல்லோருக்கும் தெரிந்த கதை தான். வாழ்க்கையில் அடி மேல் அடி வாங்கும் இளைஞன், அவன் விரும்பும் ஒரு பெண்ணின் துணை கொண்டு குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்வதே கதை. இந்தக் கதை, செல்வராகவனின் முந்தைய படங்களில் இருந்தாலும், இப்படம் எனக்குப் பிடித்தே இருந்தது. காரணம், படத்தை செல்வராகவன் எழுதியிருந்த விதம். செல்வராகவனின் படங்களில், காதலை அவர் கையாளும் விதத்தை நன்கு அறிவேன். இரண்டு மனிதர்களிடையே உருவாகும் காதல் என்ற அந்த உணர்வை, மிக மிக அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் எழுதுவதே அவரது படங்களை வேறுபடுத்துகிறது. இதற்கு ‘மயக்கம் என்ன’வும் விதிவிலக்கல்ல. இப்படத்திலும் காதல் வருகிறது. மிக இயற்கையாகவே அது காட்டப்படுகிறது.

காதல் எல்லாம் சரி. திரைப்படம் முழுமையாக எப்படி இருக்கிறது? என்று ஒரு கேள்வி எழுகிறது. இதற்குப் பதில் அளிக்கவேண்டும் என்றால், ஒரு நல்ல இயக்குநர் என்பதற்கு அடையாளம் என்ன? என்னும் கேள்வியைக் கொஞ்சம் அலச வேண்டும்.

உலகின் எந்த இயக்குநராக இருந்தாலும் சரி. அவருக்கென்று ஒரு அடையாளம் இருந்தே தீரும். அந்த அடையாளத்தில் இருந்து, என்னதான் ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக எடுத்தாலும் கூட, அவர் தப்ப முடியாது. எப்படி ஒரு குற்றவாளியை, அந்த நபர் தன்னையறியாமலேயே விட்டுச்செல்லும் சிறு சிறு தடயங்கள் காட்டிக்கொடுத்துவிடுமோ, அப்படி அந்த இயக்குநரையும், அவர் அமைக்கும் காட்சிகளிளிருந்தும் வசனங்களிலிருந்தும் ஒரு திரைப்பட ரசிகன் கண்டுபிடித்துவிடுவான். உதாரணத்துக்கு, க்வெண்டின் டாரன்டினோ படங்களில் அமைந்திருக்கும் patternகளை உதாரணமாகச் சொல்லலாம். படத்தின் கதைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாமல், அமெரிக்க நடைமுறை வாழ்வை அலசும் எக்கச்சக்க கேலியுடன் அமைந்த வசனங்கள், ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள், அத்தியாயப் பெயருடன் அமைந்த ஸீன்கள், எழுபதுகளின் மசாலாத் திரைப்படங்களை நினைவூட்டும் ஓரிரண்டு காட்சிகள் இப்படி.

அதேபோல், இந்தப் படத்திலும் செல்வராகவனது டிபிகல் signature காட்சிகள் நிறையவே உள்ளன.

செல்வராகவனின் டெம்ப்ளேட் எப்படிப்பட்டது? எடுத்த எடுப்பில், வாழ்க்கையைத் தொலைத்த விடலை (அல்லது) இளைஞன்; அவனது நடைமுறை வாழ்க்கையை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தும் பாடல் – அது கிண்டலான வகையில் எழுதப்பட்டிருக்கும் – ஒன்று; பாடல் முடிந்தபின் – அல்லது பாடல் ஆரம்பிக்கும்முன் – படத்தின் நாயகி அறிமுகம் – இரண்டு; கதாநாயகனுக்கு நாயகியைப் பிடிக்காது – இருவருக்கும் இடையே கோபம் – மூன்று; தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்தின் கேலிக்கும் வசைகளுக்கும் ஆளாகும் கதாநாயகன் – நான்கு; அவனால் அந்த வசைகளைத் தாங்கமுடியாமல் குடியை மருந்தாகத் தேடுவான் – ஐந்து; கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் காதல் மலர்வது – ஆறு; அந்தக் காதலில், கட்டாயமாக ஒரு பெரிய சிக்கல் – இது, கதாநாயகியைச் சார்ந்தே இருக்கும் – ஏழு; இந்த இடத்தில், கதாநாயகனது உளவியல் ரீதியான பாதிப்பு – இது, அவனது மனநலன் முழுமையாகப் பாதிக்கப்படுவதில் முடிவது – எட்டு; இதன்பின், கதாநாயகியால் கதாநாயகன், வாழ்க்கையில் முன்னேறுவது – ஒன்பது; இறுதியில், கதாநாயகி அல்லது கதாநாயகன் இறப்பது – பத்து.

இதுதான் செல்வராகவனின் டெம்ப்ளேட் என்று உறுதியாகவே சொல்லமுடிவதன் காரணம், அவரது முந்தைய படங்கள்தான்.

இப்படியொரு டெம்ப்ளேட்டை வைத்துக்கொண்டு வரிசையாகப் படமெடுக்கும் எந்த இயக்குநரையும், திரைப்பட ரசிகன் விரைவில் புறக்கணித்துவிடுவான். காரணம், அவரது கதைகள் ஒரேபோன்று இருப்பதே.

ஆனால், செல்வராகவனை அப்படியெல்லாம் புறக்கணிக்கமுடியாது என்று இப்படத்தைப் பார்த்ததும் தெளிவாகவே புரிந்தது.

இப்படியொரு பயங்கர predictableஆன ஒரு டெம்ப்ளேட்டை வைத்துக்கொண்டே, அட்டகாசமான படம் ஒன்றைத் தந்திருக்கிறார் செல்வராகவன். என்னதான் படத்தில் எளிதில் யூகித்துவிடக்கூடிய காட்சிகள் வந்தாலும், நம்மைப் படத்தில் ஆழமாக ஈடுபடவைப்பது – மறுபடியும் சொல்கிறேன் – படத்தை அவர் எழுதியுள்ள விதமே.

படத்தில் அறிமுகமாகும் கார்த்திக், வழக்கமான செல்வராகவன் படங்களில் வரும் அதே கதாநாயகன். உருப்படியாக ஒன்றையும் செய்யாமல், வாழ்க்கையை வெட்டியாகக் கழித்துக் கொண்டிருப்பவன். அவனுக்கு ஒரு நண்பர் கும்பல் இருக்கிறது (படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு அம்சம், இந்த நண்பர் கும்பல்). அந்த கும்பலில் இருக்கும் அனைவருமே மிக நெருக்கமாக இருப்பவர்கள். ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத தன்மையுடையவர்கள். இந்தச் சூழலில்தான், அத்தகைய நண்பன் ஒருவன், தனது காதலியை அனைவரிடமும் அறிமுகப்படுத்துகிறான். அதாவது, காதலி என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கும் பெண்ணை. முதல் பார்வையிலேயே, அந்தப் பெண்ணைக் கார்த்திக்குக்குப் பிடிக்காமல் போகிறது. காரணம்? தனக்கு மிக நெருக்கமான ஒருவனின் வாழ்வில், தன்னைவிடவும் இன்னொரு பெண் முக்கியமாக இருப்பதைத் தாங்கமுடியாத possessiveness. அந்தப் பெண்ணுக்கும், தன்னைப் பிடிக்காத ஒருவனைப் பிடிக்காமலே போய்விடுகிறது. இது, முதல் ஓரிரண்டு சந்திப்புகள் வரையில்.

உங்களது மிக அருகில் எப்போதும் இருக்கும் ஒரு பெண்ணின் இருப்பை உணர்ந்திருக்கிறீர்களா? அந்தப் பெண் உங்களுடன் பேசவேண்டும் என்று அவசியமேயில்லை. அந்தப் பெண்ணை உங்களுக்குப் பிடிக்கவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. அவளது இருப்பே போதுமானது. அதேபோல்தான் அந்தப் பெண்ணுக்கும். என்னதான் வேறொரு ஆணுடன் பழகிவந்தாலும், அந்த ஆணிடம் தன விரும்பும் குணநலன்கள் இல்லையெனில், மெதுவாக அப்பெண்ணின் கவனம், தன்னுடனே இருந்துகொண்டிருக்கும் அந்த இன்னொரு ஆணின் மேல் படர்வதைத் தவிர்க்கவே முடியாது. எவ்வளவு unintentionalஆக இருந்தாலும் இந்த மாற்றம் நடக்கும். மெதுவாக, அந்தப் பெண்ணின் அசைவுகளை அவன் கவனிக்கத் துவங்குவான். அவளது சிரிப்பு, அவள் முகம் சுழிக்கும் அழகு, தலையைக் கோதிவிட்டுக்கொள்ளும் இயல்பு, நடப்பது, பேசுவது . . இப்படிப்பட்ட விஷயங்கள், கட்டாயம் அவனது கவனத்தைக் கவரத் துவங்கும். அதேபோல், அந்த ஆணையும், அப்பெண் கவனிக்கத் துவங்குவாள்.

இதனை செல்வராகவன் டக்கராகப் புரிந்துவைத்திருக்கிறார். அவரது வாழ்வில் பல காதல்கள் கடந்திருக்கலாம் (அவர் விகடனில் எழுதிய தொடரைப் படித்திருக்கிறீர்களா?). மெதுவாக, கார்த்திக்கின் கவனம் யாமினியின் பக்கம் திரும்புகிறது. கார்த்திக்கின் நண்பன், தான் விரும்பும் யாமினியையும் கார்த்திக்கையும் ஒரு திரைப்படத்துக்கு அழைத்துச் செல்கிறான். அந்தத் திரைப்படத்தில், ஒரு கட்டத்தில், மிகச் சாதாரணமாக யாமினியைப் பார்க்கும் கார்த்திக்கின் மனதில், வெடித்துக் கிளம்புகிறது காதல். காதல் அவன் மனதில் உதிக்கும் அந்தத் தருணம் – படத்தில் அழகாகக் காட்டப்பட்டிருக்கிறது.

நண்பனின் காதலி என்பதால், அப்பெண்ணின்மேல் தனக்கு எழும்பிய காதலைப் புறக்கணிக்க முயல்கிறான் கார்த்திக். யாமினிக்குமே இந்த நேரத்தில் கார்த்திக்கின் மேல் கவனம் திரும்புகிறது என்பது படத்தின் இடையில் அவள் பேசும் வசனங்களின் மூலம் நமக்குப் புரிகிறது.

பறவைகளைப் புகைப்படங்கள் எடுக்கும் வேலையாக, கார்த்திக் காட்டுக்குச் செல்ல விரும்புகிறான். அவனது பயணத்துக்குப் பணம் தருவதோடு மட்டுமில்லாமல், தானும் வருவதாகச் சொல்கிறான் நண்பன். கார்த்திக் வருகிறான் என்பது தெரிந்தவுடன், அதுவரை அசுவாரஸ்யமாக இருந்த யாமினி,
உடனே கிளம்பி வருவதாகச் சொல்லிவிடுகிறாள். காட்டில், ஒரு விடுதியில் தங்கியிருக்கும் இவர்களுக்கு இடையில், பல சுவாரஸ்யமான உரையாடல்கள் நிகழ்கின்றன. குறிப்பாக, இரவில், Tribal Dance பார்க்கச் செல்கையில், அந்தக் காட்டுப்பாதையில், இருவரும் உரையாடுவதைக் கவனியுங்கள். பயங்கரப் புதிரானதாக அமைந்திருக்கும் அந்த உரையாடல், படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று. யாமினியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை, எவ்வளவோ கொக்கிகள் போட்டும் கார்த்திக்கால் கண்டுபிடிக்க இயல்வதில்லை.

தொடர்கிறது ‘அடிடா அவள’ பாடலும், அதனையடுத்த காட்சிகளும்.

தன் புகைப்படங்களை ‘மலம்’ என்று திட்டிய தன்னுடைய ஆதர்ச மனிதரால் மனம் உடைந்து, குடித்துக்கொண்டிருக்கிறான் கார்த்திக். அப்போது, நண்பனிடமிருந்து ஃபோன். யாமினியின் காரில் ஏதோ பிரச்னை என்றும், இரவில், தனியாக அவள் நின்றுகொண்டிருப்பதாகவும், தான் பெங்களூரில் மாட்டிக்கொண்டதால், இரண்டு நண்பர்களிடம் உதவி கேட்டதாகவும், கார்த்திக்காவது உதவி செய்வான் என்று நம்பி அவனை அழைத்ததாகவும் கெஞ்சும் நண்பனிடம், யாமினிக்கு உதவி செய்வதாகக் குரைத்துவிட்டு, அங்கே முழு போதையில் செல்கிறான் கார்த்திக்.

இரவு. மழை. யாருமற்ற பேருந்து நிறுத்தம். கார்த்திக்கின் மனம் முழுக்க, புறக்கணிக்கப்பட்ட வலி. எதையும் கேட்க வேண்டாம் என்றும், கேட்டால் உடைந்து சிதறிவிடுவேன் என்றும் அவளிடம் சொல்கிறான் கார்த்திக். அப்படிச் சொல்லும்போதே, அழுதுவிடுகிறான். உங்களது வாழ்வில், ஒரு பெண்ணின் மேல் காதல் வரத்துவங்கும் தருணம். உங்களது தோல்வியை, முழு போதையில், அப்பெண்ணிடம் பகிர்ந்திருக்கிறீர்களா? தனது தோல்வியை, அப்பெண்ணின் அரவணைப்பு ஒன்று மட்டும்தான் சரிசெய்யமுடியும் என்று தீவிரமாகக் கார்த்திக்கின் மனம் நம்புகிறது. போதையில் இருப்பதால், அவனது மனமும் கனிந்திருக்கிறது. இதெயெல்லாம் விட, தனக்குப் பிடித்த இளைஞன் ஒருவன், தோல்வியால் மனம் துவண்டுபோயிருக்கிறான். தனது அருகிலேயே, இயலாமையில் மனம் குமைந்துபோய் நின்றுகொண்டிருக்கிறான் என்றால், அந்தப் பெண்ணுக்கு எப்படி இருக்கும்?

இருவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.

மறுநாள், தன் செய்த முறையற்ற காரியத்தினால் மனம் வெறுத்துப்போய், சென்னையை விட்டே மைசூர் சென்று, யாருக்கும் எந்தத் தகவலும் தராமல் வாழ்கிறான் கார்த்திக். ஒருநாள் யாமினியிடமிருந்து வந்திருக்கும் அழுகை கலந்த வாய்ஸ்மெய்லைக் கேட்டு, அதன்பின் சென்னை திரும்புகிறான். நண்பனின் வீட்டில், தன்னை அணைத்துக்கொண்டே அழும் யாமினியின் அன்பைப் புரிந்துகொள்கிறான். அவனாலுமே இனிமேல் யாமினி இல்லாமல் வாழ இயலாது.

இதன்பின் நண்பனின் கோபத்துக்குக் கார்த்திக் ஆளாதல், சமாதானங்கள், பின் கார்த்திக்கின் திருமணம் என்ற ரீதியில் காட்சிகள் செல்கின்றன.

இடைவேளை. படத்தின் ஆரம்பம் முதல், இடைவேளை வரை, எந்தத் தங்குதடையும் இல்லாமல் படத்தை மிகவும் ரசித்தேன்.

இடைவேளைக்குப் பின்னர், தமிழ்ப் படங்களுக்கேயுரிய பல டெம்ப்ளேட் காட்சிகள் வரிசையாக வருகின்றன. பீ. வாசுவின் படங்களில் இக்காட்சிகள் வந்திருந்தால் பிரச்னையில்லை. செல்வராகவனின் படங்களில் இக்காட்சிகள் வருவதுதான் கொடுமை என்று தோன்றியது.

இருப்பினும், இரண்டாம் பாதியில் நல்ல காட்சிகள் இல்லாமல் போவதில்லை. கதாநாயகி ரிச்சாவின் நடிப்பாற்றலின் முழு வீச்சும் இரண்டாம் பாதியில்தான் வருகிறது. குறிப்பாக, தரையில் சிதறியிருக்கும் ரத்தத்தை ரிச்சா துடைக்கும் காட்சி. அதில் அவரது நடிப்பு – அட்டகாசம் ! இதைப்போல் ரிச்சாவின் நடிப்பு மிளிரும் பல காட்சிகள் இரண்டாம் பாதியில்தான் வருகின்றன. இருப்பினும், பல டெம்ப்ளேட் காட்சிகளும் தடதடவென்று அணிவகுத்துவந்ததால், இரண்டாம் பாதியின் நல்ல காட்சிகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இது, படத்தின் பெரிய குறைபாடு.

படத்தின் பின்னணி இசை, வழக்கமான செல்வராகவனின் படங்களில் வரும் அதே பாணியிலான இசை. அதாவது, ஒரே இசை அல்ல. ஆனால், ஒரு தீம் இசை; முக்கியமான காட்சிகளில் பெருகும் மெல்லிய பியானோ இசை; பிரதான வசனங்களில் இசை நின்று போதல் என்ற அதே செல்வராகவனின் பாணியில் அமைந்த இசை. பாடல்களும் நன்றாக இருந்தன. படத்தின் எல்லாப் பாடல்களுமே எனக்குப் பிடித்திருந்தது.

Plagiarism பற்றிய சில காட்சிகள் படத்தில் வருகின்றன. ஆனால், அதில் சற்றே தனது கவனத்தை செல்வராகவன் குறைத்துக்கொண்டுவிட்டார் என்றே தோன்றியது. தனது புகைப்படம் இன்னொருவரால் பிரசுரிக்கப்படும்போது, அதனை எளிதில் நிரூபித்துவிட முடியும் என்பதால், தனுஷ் ‘சார்… சார்” என்று கெஞ்சிக்கொண்டு நிற்கும் காட்சிகள் அந்த அளவு ஒட்டவில்லை.

Facebook ல் நண்பராக இருக்கும் மாமல்லன் கார்த்தி, இப்படம் பற்றி, ‘இது செல்வராகவனின் முதல் படம் அல்ல; அவரது ஆறாவது படம். அதிலும் கூட இப்படிப்பட்ட predictable டெம்ப்ளேட் காட்சிகளை அவர் வைத்திருப்பது, படத்தின் இயல்புத்தன்மையைப் பெரிதும் குறைக்கிறது. விக்ரமனின் ஸ்டைலில் உள்ள க்ளைமேக்ஸ், ரிச்சாவின் கதாபாத்திர சித்தரிப்பில் உள்ள மாறுதல், இன்னபிற விஷயங்களால், நம்பகத்தன்மை குறைந்துவிடுகிறது’ என்று சொல்லியிருந்தார். அவரது கருத்துகளை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன். இருந்தும், இத்தனை குறைபாடுகளை ‘மயக்கம் என்ன’ படம் கொண்டிருந்தாலும், எனக்கு மிகப்பிடித்த படங்களில் இதுவும் ஒன்று என்று தயங்காமல் சொல்லுவேன். செல்வராகவனின் திறமை, கட்டாயம் ஒவ்வொரு படத்திலும் இம்ப்ரவைஸ் ஆகிக்கொண்டேதான் இருக்கிறது. அதில் சந்தேகமில்லை. என்ன ஒன்று. இனிவரும் படங்களில், நான் ஆரம்பத்தில் சொல்லியிருக்கும் டெம்ப்ளேட் காட்சிகளை அவர் வெட்டிவீசிவிடவேண்டும். கதையை இன்னமும் மெருகேற்ற வேண்டும். அவ்வளவே.
காதலை, செல்வராகவனின் அளவு மிக இயற்கையாகவும் முழுவீச்சிலும் சொல்லக்கூடிய திறமை படைத்த தமிழ் இயக்குனர், என்னைப்பொறுத்தவரை இப்போது இல்லை என்றே தோன்றுகிறது.

படத்தைப் பார்த்துவிட்டீர்களா? இல்லையெனில், எந்தவித முன்முடிவுகளும் மனதில் வைத்துக்கொள்ளாமல், படத்தைப் போய்ப் பாருங்கள். கட்டாயம் ஒரு இனம்புரியாத காதல் உணர்வை அடைவீர்கள்.

‘மயக்கம் என்ன’ – செல்வராகனின் பிரதான படங்களில் ஒன்று. தவற விட்டுவிடாதீர்கள்.

படத்தின் அருமையான பாடல் ஒன்று – இங்கே கேட்கலாம்.

  Comments

16 Comments

  1. hi nanba,

    i hate mayakam enna movie bcoz of stupid charcterisation of hero and heroin..also confusing characters of heroine.wat the heroin is doing in first half with his friend..is it dating or love??if she is bold lady means she will tel his decision with his dating partner.also danush is not showing any possessiveness in film,frm first scene onwards he is showing some anger to the gal.also his dialogs r so bad in movie..

    Karunthel pls answer to my question, one of my friend told this movie is looks like Russel crowe “A Beautiful mind” i didn’t saw the movie..so only asking u..bcoz u have good knowledge in english movie

    Reply
  2. கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்…….

    Reply
  3. //தனுஷ் நடிப்பை பத்தி ஒன்னுமே சொல்லாம ஏமாத்திட்டீங்களே தலைவா? //

    // what are your answer to this review?
    http://keetru.com/index.php?option=com_content&view=article&id=17635%3A2011-12-01-10-15-15&catid=11%3Acinema-review&Itemid=129 //

    // கார்த்திக் மிக உயர்ந்த இடத்துக்கு போக யாமினி செய்த உதவி என்ன? காதல் காட்சியில் வன்முறை இல்லாமல் சொல்லும் பானியில் முருகதாஸ் எப்படி? //

    // everything abt your movie review is gud but nothing about the hero. //

    மேல கமென்ட் போட்டிருக்குற நண்பர்கள் எதுவும் தவறாக வித்தியாசமாக நினைக்க வேண்டாம்…..

    ரெண்டு தடவ எழுதியும் – Fbல பல கமெண்ட்கள் வந்தும், திரும்ப இத்தன பார்வைகள் – கருத்துகள் – கேள்விகள் வர அளவுக்கு ரொம்ப முக்கியமா படமா ?? (நா படம் பாக்கல…ரொம்ப ஆச்சரியப்பட்டு தான் கேக்குறேன்….தவிர,ராஜேஷ் ரெண்டு தடவலாம் எழுதி நா படிச்சதில்லை..)

    Reply
  4. @ cute photos – தனுஷ் காண்பிக்கிறது, கோபம்தான். ஆனா எதுக்கு ஒரு அந்நிய பொண்ணு மேல கோபப்படணும்னு யோசிங்க.. தன் நண்பனின் அன்பு இப்ப அந்தப் பொண்ணு மேல திரும்பிடும்ன்ற பொஸஸிவ்னெஸ் தான் காரணம்னு விளங்கும்.

    ஹீரோயின் கதாபாத்திர சித்தரிப்புல சில goof ups இருக்கு. அதை நானும்தான் மேல சொல்லிருக்கேன். நண்பர் மாமல்லன் கார்த்தியோட கருத்தை கடைசி பேரால படிங்க..

    அப்புறம், beautiful mind படம் மாதிரி ஒண்ணு ரெண்டு காட்சிகள் இருக்குறது உண்மைதான். ஆனா அதையெல்லாம் தாண்டியும் படம் எனக்கு ரொம்பவே புடிச்சது நண்பா.. 🙂

    @ கொழந்த – நான் ஏன் ரெண்டு வாட்டி எழுதினேன்? சின்னதா எழுதும்போது பயங்கர தூக்கத்துல எழுதுனேன். அப்புறம், இண்ணிக்கி தோணிச்சி.. இதுல எனக்குப் புரிஞ்சதை எழுதுவோம்னு.. அதுவும் சில நண்பர்களின் கருத்தை FBல படிச்சப்புறம்தான். தெளிவா இந்தப் படத்தைப் பத்தி எழுதுவோம்னுதான் எழுதினேன் 🙂

    Reply
  5. கேபிள், நேசமித்ரன் முதலியோர் எழுதியதை வாசித்துவிட்டுப் பார்க்க வேண்டியதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஜாக்கி எழுதிய பிறகு முடிவை மாற்றிக்கொண்டேன். இன்றுதான் பார்த்தேன். நல்ல படம்தான். எல்லாருடைய உழைப்பும் பாராட்டத் தக்கது. Beautiful mind படத்தின் கருத்துக்களவு என்று தோன்றினாலும் பாராட்டப்படவேண்டிய படம்தான். ஆனால் என்ன, நம்பகத் தன்மைதான் சற்றுக் குறைவு. உங்கள் விமர்சனமும் இதைக் குறிப்பிடுகிறது.

    Reply
  6. நண்பா,
    நலமா?
    படம் பார்க்க வேண்டும்போல இருக்கிறது,5ஆம் தேதிக்கு பின்னர் தான் முடியும்,பார்த்து விடுகிறேன்.நல்லவிரிவான பார்வை நண்பா,நன்றி

    @கொழந்த,நலமா ?போனே இல்லையேப்பா?

    Reply
  7. படம் இன்னும் பார்க்கலையே தல…. வெயிட்டிங்கி ஃபார் டிவிடி:))
    அந்த புதிய தலைமுறையில் வந்த செல்வராகவன் இன்டரவியுவை பார்த்தேன்… சொன்னாமாதிரி இவ்ளோ விசயம் படத்தை பத்தி கேட்கறதுக்கு இருக்கும்போது…. டெம்ப்ளேட் கேள்விகளா கேட்டு கடுப்பேத்துனானுங்க…

    Reply
  8. விரிவா எழுதுனதுக்கு ரொம்ப நன்றி தல…ஒரு கிரியேட்டர் பத்தி இவ்வளவு நுணுக்கமா புரிஞ்சு வச்சுருக்கிங்க பாத்திங்களா இதலாம் உங்க கிட்ட இருந்து வாங்க தான் விரிவ எழுத சொன்னது….:) :)மத்தபடி செமையான ரெவியு…. பெர்சனலா முதல் பாதி பல விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சது…
    .

    Reply
  9. @கொழந்த… ஒவ்வொரு மனிஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்… நீங்க எப்போ தமிழ் படம் ஏதவாது ஒன்னுத்துக்கு விமர்சனம் எழுதுறதா உத்தேசம்…

    Reply
  10. @ rajasundararajan – ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்கி இல்லையா 🙂 .. எனக்கும் படம் புடிச்சது. சொன்னமாதிரி, சில நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும், இது கட்டாயம் நல்ல படம்தான். 6ம் தேதி வர்ரீங்களா?

    @ கீதப்ரியன் – நண்பா… கொழந்த பிரபல பதிவர் ஆகிவிட்டது. அதுனால, யாரு கிட்டயும் பேசுறதில்லை. நாமதான் கூப்புட்டுப் பேசணுமாம். இன்னும் என்னென்னமோ கண்டிஷன் சொல்லிச்சி. ஹாங்கவுட் வாங்க.. பிரபல பதிவர் கொழந்தை கலந்துகொண்டு சிறப்பிப்பார் 🙂

    @ நாஞ்சில் – 🙂 என்னாது வெயிட்டிங் ஃபார் டிவிடியா? போராளிய சுடச்சுட கிழிச்சி வெச்சிருக்கீங்க 🙂 . . கவனமா இருங்க.. தமிழர் படை வருது 🙂

    @ முரளி – எப்புடியோ இந்த ஹாங்கவுட்ல டிஸ்கஸ் பண்ண மேட்டர் ரெடி 🙂

    Reply
  11. அருமை தல ……. இதை தான் உங்ககிட்ட நானும் உங்கள் ரசிகர்களும் எதிர்பார்த்தது,

    Reply
  12. நான் நாலு தடவ பாத்துட்டனுல்ல… நாளைக்கு 5வது தடவ என்னா ஸ்பஷல்னா… என் ஆளுகூட போறன்…

    இந்த படம் Beautiful mind காப்பி அப்படினு ஒரு வதந்தி உளவுதே… அதை பற்றி கருந்தேளின் கருத்து?(புதிய தலைமுறைல நான் சேந்துக்கவா?

    Reply
  13. //உங்களது மிக அருகில் எப்போதும் இருக்கும் ஒரு பெண்ணின் இருப்பை உணர்ந்திருக்கிறீர்களா? அந்தப் பெண் உங்களுடன் பேசவேண்டும் என்று அவசியமேயில்லை. அந்தப் பெண்ணை உங்களுக்குப் பிடிக்கவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. அவளது இருப்பே போதுமானது.//

    Fantastic!!

    Reply
  14. Abhinav

    “மயக்கம் என்ன”, எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக இருந்தாலும், படத்தின் திரைக்கதை ரஸ்ஸல் க்ரோவ் நடித்த “A Beautiful Mind” படத்தின் திரைக்கதையின் தழுவல் என்றே தோன்றுகிறது. உதாரணம்: தனக்கு மிகவும் பிடித்த துறையில், மனநிலை பாதிப்பு உட்பட பல தடங்கல்களை மனைவியின் உதவியுடன் தாண்டி வாழ்க்கையில் சாதிக்கும் ஒருவனின் கதையே இரண்டு படங்களுமே. அதை நம்மூருக்கு ஏற்றவாறு மாற்றி, தனது அக்மார்க் மசாலாக்களைத் தூவி செல்வராகவன் எடுத்திருக்கிறார்.

    Reply
  15. உணர்வு ரீதியான விடயங்கள் மிகவும் தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது.
    ஆனால் தனுஸ் படம் நசனல் ஜோக்ரபியில் களவாடியவரால் வந்திருக்கிறது என்றதும் என் மனதில் வந்தது, அதை தனுஸ் நிருபிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் போது அவரோ அவருடன் இருக்கும் பாத்திரங்களோ என்னில் இருந்து அந்நியமாகி விட்டது ஏன் இந்த லொஜிக் ஆல் படம் கூட அந்நியமாகி விட்டது.
    ஆனால் நடிப்புக்கு முழுப் புள்ளி வழங்க வேண்டும்

    Reply

Join the conversation