மெதட் ஆக்டிங் என்றால் என்ன? -1- ஸ்டானிஸ்லாவ்ஸ்கி
Try acting, dear boy..it’s much easier – Laurence Olivier.
ஹாலிவுட் திரைப்பட நடிகர்களுக்கிடையே இன்றும் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடப்படுபவர், ஸர் லாரன்ஸ் ஒலிவியர். ’நடிகர்களுக்கெல்லாம் நடிகர்’ என்று அழைக்கப்படுபவர். ப்ரிடிஷ் நடிகராக இருந்தபோதிலும், ஹாலிவுட் இவரை தத்தெடுத்துக்கொண்டது. இங்க்லாண்டிலும் அமெரிக்காவிலும் பல ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் நடித்து அழியாப்புகழ் பெற்றவர். ஒரு நாள், Marathon Man படத்தின் படப்பிடிப்பில், டஸ்டின் ஹாஃப்மேன் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக பயிற்சி செய்யவேண்டியிருந்தது. அவர் ஒரு மெதட் ஆக்டர் என்பதால் (மெதட் ஆக்டிங் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கதாபாத்திரமாகவே வாழ்வது), அந்தக் காட்சிக்காக மூன்று நாள் உறங்காமல் கண்விழித்து, நான்காம் நாள் படப்பிடிப்புத் தளத்துக்கு வருகிறார். மிகவும் சோர்வுடன், மயங்கி விழுந்துவிடும் தோற்றத்தில் இருந்த ஹாஃப்மேனை அதே படத்தில் நடித்துக்கொண்டிருந்த லாரன்ஸ் ஒலிவியர் பார்க்கிறார். அவரிடம் வந்து, ஹாஃப்மேனின் சோர்வுக்கான காரணத்தை வினவுகிறார். கதாபாத்திரத்துக்காக கண்விழித்தது பற்றி ஹாஃப்மேன் சொல்ல, ஒலிவியர் அளித்த பதில்தான் மேலே இருக்கும் மேற்கோள். ’Try acting, dear boy…it’s much easier’. கதாபாத்திரத்துக்காக தன்னை வருத்திக்கொள்வது ஒலிவியருக்கு உடன்பாடான விஷயமாக இருந்ததே இல்லை. நடிகன் என்றாலே நடிப்பவன் என்றுதான் பொருளாகிறது அல்லவா? அப்படியிருக்கும்போது எதற்காக இப்படி வருத்திக்கொள்ளவேண்டும்? என்பதே அவரது கோட்பாடாக இருந்தது.
மெதட் ஆக்டிங் என்பதைப் பற்றி இன்னமும் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தோம் என்றால், ஹாலிவுட்டில் பல நடிகர்களின் பாணி இந்த மெதட் ஆக்டிங்கை பின்பற்றித்தான் அமைந்திருக்கிறது. குறிப்பாக மார்லன் ப்ராண்டோ, ராபர்ட் டி நீரோ, அல் பசீனோ ஆகியவர்கள். தற்போது ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகராகக் கருதப்படும் டானியல் டே லூயிஸும் மெதட் ஆக்டிங்கைத்தான் பின்பற்றுகிறார். கொஞ்சம் தெளிவாக இந்த மெதட் ஆக்டிங்கைப் புரிந்துகொள்ள, ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். டேனியல் டே லூயிஸ், அவரது முதல் சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை, 1989ல் வெளிவந்த My Left Foot படத்துக்காக பெற்றார். அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம், சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு ஓவிய எழுத்தாளரைப் பற்றியது. இந்தப் படத்தில் நடிக்கும்போது, முழுப்படப்பிடிப்பிலும் சக்கர நாற்காலியிலேயே அமர்ந்துகொண்டு சுற்றினார் லூயிஸ். அதேபோல், அந்தக் கதாபாத்திரத்தின் பிற அவயங்கள் இயங்காது என்பதால், படப்பிடிப்பு முழுவதிலும் அவரது எந்த அவயத்தையும் இயக்கவே இயக்காமல் பிறரை நம்பியே வாழ்ந்தார். இரண்டு மூன்று மாதங்கள் இப்படி வாழ்வது எத்தனை கடினம் என்பதை எண்ணிப் பாருங்கள். இதுதான் மெதட் ஆக்டிங். எதுவாக நடிக்கிறோமோ அதுவாகவே ஆவது. தனது ஒவ்வொரு படத்திலும் வெறித்தனமாக இந்தப் பாணியை பின்பற்றிக்கொண்டிருக்கிறார் லூயிஸ்.
இந்த மெதட் ஆக்டிங் என்ற பாணி எப்போது உருவானது என்று பார்த்தோமேயானால், இருவரது முயற்சிகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. முதலாவது நபர் – கான்ஸ்டண்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (Constantin Stanislavski). இரண்டாவது நபர், லீ ஸ்ட்ராஸ்பெர்க் (Lee Strasberg). இருவரைப் பற்றியும் அவர்களது முயற்சிகளைப் பற்றியும் பார்த்தாலேயே இந்த மெதட் ஆக்டிங் என்பது விளங்கிவிடும்.
ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, ஒரு ரஷ்ய நாடக நடிகர். நாடக இயக்குநராகவும் ஆனவர். இவரது காலம், 1863 – 1938. ரஷ்யாவில் இவரது இளவயதில் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது, நடிக்கப்போகும் கதாபாத்திரத்தின் வேடத்தைப் போட்டுக்கொண்டு நிஜவாழ்க்கையில் அந்தக் கதாபாத்திரம் எப்படியெல்லாம் நடந்துகொள்ளுமோ அப்படியெல்லாம் நடந்துகொள்வது இவரது இயல்பாக இருந்தது என்று அறிகிறோம். தனது இருபத்தைந்தாவது வயதிலேயே நாடக நடிகர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனம் ஒன்றைத் துவங்கினார் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. ஆண்டு 1888. இதன்பின் நாடகங்களை இயக்கவும் துவங்கினார்.
நமக்கு முக்கியமான தகவல், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி உருவாக்கிய முறையான நடிப்பு வடிவம்தான். அவரது காலத்தில் இருந்த சிறந்த நாடக நடிக நடிகையரை கூர்ந்து கவனிக்கும் பழக்கம் ஸ்டானிஸ்லாவ்ஸ்கிக்கு இருந்தது. இதன்மூலம், கதாபாத்திரங்களோடு ஒன்றி நடிக்கும் நடிகர்களையும், அவர்களுக்கு ஒரு படி கீழே நடிக்கக்கூடிய சராசரி நடிகர்களையும் அவரால் அடையாளம் காணவும் முடிந்தது. சிறந்த நடிகர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் எப்படி அவ்வாறு நடித்தனர் என்று கவனித்தால், இந்த நடிகர்கள் அனைவரிடையேயும் சில ஒத்த நடிப்பு முறைகள் இருந்தன. இது தற்செயல்தான் என்றாலும், அவைகளை கவனித்து, பதிவும் செய்யத் துவங்கினார் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. இப்படி சில வருடங்கள் அவர் முயற்சி செய்ததன் விளைவாக, நடித்தலைப் பற்றி ஒரு விரிவான அறிக்கையைத் தயார் செய்ய அவரால் முடிந்தது.
அவரது கையில் இருந்த அந்த அறிக்கையின் உதவியால், நாடக நடிகர்களைப் பயிற்றுவிக்கும் முறைகளையும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி உருவாக்கினார். இந்த முறைகளை உபயோகப்படுத்தினால், சாதாரண நடிகர்களும் சிறந்த நடிகர்கள் ஆகலாம் என்பதையும் முன்வைத்தார். அவரது முறைமைகள், மிகக்கடுமையான ஒழுங்கைப் பின்பற்றின. நாடக மேடையில் ஒரு நடிகர் எவ்வாறு நடக்க வேண்டும், அமர வேண்டும், பேச வேண்டும் என்பதைக்கூட விளக்கினார் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. இவைகளைப்போன்ற விஷயங்களை ஒவ்வொரு முறையும் ஒரு நடிகர் திரும்பத்திரும்ப செப்பனிட்டு ஒவ்வொரு முறையும் சென்ற முறையைவிட இம்ப்ரவைஸ் செய்தால்தான் நடிப்பில் சிறந்துவிளங்கமுடியும் என்பது அவரது கூற்று.
அப்படிக் கோட்பாடுகளை முன்வைக்கையில், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி இரண்டு விதமான முக்கியமான விஷயங்களை உருவாக்கினார். ஒன்று – உணர்வு சார்ந்த நடிப்பு. மற்றொன்று, செயல்பாடுகள் சார்ந்த நடிப்பு. இவையிரண்டுமே ஒன்றுக்கொன்று சார்ந்து இருந்தால் மட்டுமே சிறந்த நடிப்பு வெளிப்படும் என்பது அவரது கூற்று.
உணர்வு சார்ந்த நடிப்பு என்பது, குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும் நடிகர்கள், அந்தக் காட்சியில் வெளிப்படுத்தவேண்டிய உணர்வுபூர்வமான நடிப்புக்கு தூண்டுகோலாக, அந்தக் கதாபாத்திரம் அந்த நேரத்தில் அனுபவிக்கும் உணர்வுகளை மனதினுள் அனுபவிப்பது. உதாரணமாக, போரில் குண்டுகளால் உறுப்புகளை இழந்த சிறுவர்களை சந்திக்கும் ஒரு ராணுவ மேஜர், ஓய்வுபெற்றபின்னரும் உறுப்புகள் சிதைந்துபோன குழந்தைகளைப் பார்க்கும்போது உணர்ச்சிவசப்படுதல். இந்தக் காட்சியை எடுத்துக்கொண்டால், அதில் நடிக்கும் நடிகர்கள், மனதினுள் அந்த மேஜர் அனுபவிக்கும் சித்ரவதையை தாங்களும் அனுபவிக்கவேண்டும். அப்போதுதான் உணர்வுசார்ந்த சிறந்த நடிப்பு வெளிப்படும்.
ஆனால், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி இந்த முறையில் ஒரு பிரச்னையை அனுபவித்தார். அவரது நடிகர்கள் இப்படி மனதினுள் அந்தக் கதாபாத்திரத்துக்கான உணர்வுகளைக் கொணரும்போது அதில் சிலர் அந்த உணர்வுகளால் பாதிக்கப்பட்டு உடைந்துபோவது சிலமுறை நடந்தது. மேடையிலேயே காட்சி முடிந்தபின்னரும் கதறிக்கதறி அழுதுகொண்டிருந்த நடிகர்களை அவர் கண்டார். இதைப்பற்றியும் அவரது பிரத்யேக முறையில் ஆராய்ச்சி மேற்கொண்ட ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, வெறும் உணர்வு ரீதியான நடிப்பு மட்டும் போதாது என்பதைக் கண்டுகொண்டார். உணர்வு ரீதியான நடிப்புக்கு ஒரு நடிகர் தன்னைத் தயார் செய்துகொள்ளும்போது, அதற்கேற்ற செயல் ரீதியான தயாரிப்பும் அவசியம் என்று புரிந்துகொண்டார். உதாரணமாக, நாம் மேலே பார்த்த ராணுவ மேஜர், மனதால் உடைந்து சிதறி அழும்போது, அந்த அழுகைக்கு அவரது உடல் எவ்வாறு ரியாக்ட் செய்கிறது? தனது தலையில் மாறிமாறி அடித்துக்கொண்டோ, நாற்காலியில் அமர்ந்தவாறு கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டோ அல்லது அந்த இடத்தை விட்டே ஓடியோ – இப்படி எதாவது ஒரு முறையில் உடலும் மனமும் இணையும்போது நல்ல நடிப்பு வெளியாகும் என்பதை உணர்ந்தார். இப்படிச் செய்தால், வெறும் உணர்வு ரீதியாக மட்டும் ஒரு கதாபாத்திரத்தை அணுகும்போது அந்த நடிகர்கள் உடைந்து சிதறுதல் தவிர்க்கப்படுகிறது என்றும் புரிந்துகொண்டார். காரணம், மனதினுள் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க ஒரு நடிகன் பாடுபடும்போது, அதுவே கவனமாக பல நாட்கள் அதனை அவன் பயிற்சி செய்வதால் சில சமயங்களில் அந்த உணர்வுகள் அவனை முழுதுமாக மூடிக்கொள்கின்றன. அதுவே, உடல்ரீதியாகவும் அவன் பயிற்சி செய்யும்போது, அந்த நேரம் பாதியாகக் குறைகிறது அல்லவா? அதுதான் காரணம்.
இப்படி பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி உருவாக்கிய சில முறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம். இவைதான் தற்போதைய ‘மெதட் ஆக்டிங்’குக்குக் காரணிகளாக விளங்குகின்றன.
1. ஒரு நடிகன், ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும்போது, அந்தப் பாத்திரத்தைப் பற்றிய பல கேள்விகளை மனதில் எழுப்பிக்கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட சிச்சுவேஷனில் அந்தக் கதாபாத்திரம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற கேள்வி வரும்போது, ‘அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்?’ என்ற கேள்வி உதவும். இதுபோல், ‘எனக்கு இந்த சம்பவம் நிஜவாழ்க்கையில் நடந்திருந்தால் எனது ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும்?’ என்பது இதன் இன்னொரு வடிவம். இதுபோன்ற பல கேள்விகளை எழுப்பி, அவைகளுக்கு உண்மையான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் கதாபாத்திரத்தை ஒரு நடிகன் சிறப்பாக நடிக்க முடியும்.
2. குறிப்பிட்ட கதாபாத்திரம் அந்த நாடகத்தில் செய்யக்கூடிய செயல்களை அலசி, ஏன் அப்படிப்பட்ட செயல்களை அது செய்கிறது என்று யோசித்தல். இப்படி யோசித்தால், அந்த நாடகத்தில் இருக்கும் சம்பவங்களுக்கு மிகவும் முன்னர், அந்தக் கதாபாத்திரத்தின் ஆரம்ப வருடங்களில் இருந்து அது நடந்துகொண்ட முறைகளைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியும். உதாரணத்துக்கு, ஒரு போலீஸ்காரனைக் குத்திக் கொன்றுவிடுகிறாள் கதாநாயகி. ஏன் என்று யோசித்தால், அவளது வாழ்வில் ஒரு கட்டத்தில் போலீஸ்காரர்களால் இன்னல்களை அனுபவித்திருக்கிறாள் என்பது புரியும். அதாவது, அந்தக் குறிப்பிட்ட நாடகத்தில் இருக்கும் விஷயங்களை வைத்துக்கொண்டு கதாபாத்திரத்தின் குணங்களை விளக்குதல் (இதற்குப் பெயர்தான் தற்போது ‘கேரக்டர் ஸ்கெட்ச்’ என்று திரைக்கதைகளில் சொல்லப்படுகிறது. இதனை ஒரு நூற்றாண்டு முன்னரே ஸ்டானிஸ்லாவ்ஸ்கி விளக்கிவிட்டார்). இப்படி ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய முடிவுக்கு வருதல், அந்தக் கதாபாத்திரம் எடுக்கும் முடிவுகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த உதவும்.
3. நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும், குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன என்பதை அந்த நடிகர் உணரவேண்டும். நாடகத்தை முழுதும் பார்த்தால், கடைசியில் அந்தக் கதாபாத்திரத்தின் லட்சியத்தில் அது வெல்கிறதா தோற்கிறதா என்பது புரிந்துவிடும் (கதாநாயகியை மணந்துகொள்ளல், கதாநாயகியோடு தற்கொலை செய்துகொள்ளல், கதாநாயகியின் தந்தையை கொல்லுதல், கதாநாயகியோடு ஊரைவிட்டே ஓடுதல் இத்யாதி). ஆனால், அப்படி தனது இறுதி லட்சியத்தை நிறைவேற்றும் பதையில் ஒவ்வொரு காட்சியாக அந்தக் கதாபாத்திரம் நடிக்கும்போது, அந்த ஒவ்வொரு காட்சியிலும் அதன் நோக்கம் என்ன என்பதை நடிகர்கள் உணர வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட காட்சியின் நோக்கம், பல் தேய்க்க வேண்டும் என்று கூட இருக்கலாம். ஸ்க்ரிப்டில் அது வெளிப்படையாக இருக்காது. ஆனால் அதனை அந்த நடிகர் உணரவேண்டும். அப்போதுதான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும்.
இப்படி உணருவதற்கு, அந்த ஸீனை அந்த நடிகர் உடைத்து, சிறிய பகுதிகளாக பிரித்துக்கொள்ளவேண்டும். எப்படியென்றால், பல் தேய்க்க ப்ரஷ்ஷை தேடுவதாக, ப்ரஷ் கிடைத்தும் பேஸ்ட்டை தேடுவதாக, பேஸ்ட்டை தேடும்போது யாராவது வந்து கழுத்தறுப்பதாக, இப்படி பல காட்சிகள் ஒரு ஸீனில் இடம்பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட காட்சிகளில் ஒவ்வொரு காட்சிக்கும் என்ன நோக்கம் என்பதை அந்த நடிகர் தெரிந்துகொள்ளவேண்டும். ப்ரஷ் கிடைத்தவுடன் சந்தோஷத்தை வெளிப்படுத்தலாம். பேஸ்ட் கிடைத்ததும் உற்சாகம். கழுத்தறுப்பு கேஸ் வந்ததும் கோபம் – ஆனால் அதை வெளிப்படுத்த இயலாத இயலாமை – இப்படி. அதேபோல் வசனங்களைப் பேசுவதிலும், ஒவ்வொரு வரியிலும் ஒளிந்திருக்கும் குணங்களை வெளிப்படுத்தவும் அந்த நடிகர் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணம்: கழுத்தறுப்புடன் பேசும்போது நைச்சியமாக அவரை வெளியேற வைத்தல் – அதற்கேற்ற முகபாவம் – இப்படி.
இப்படியாக, நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றால் அது கான்ஸ்டண்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியே. உண்மையாகவே இலக்கணம் எழுதி அதை தொகுத்து வைத்தவர் இவர். ஆனால், இவர் இப்படி இலக்கணம் எழுதிய 1900களில் மெதட் ஆக்டிங் என்ற விஷயமே இல்லை. இவரது குறிப்புகளிலிருந்து வளர்ந்து, பிந்நாட்களில் பலராலும் பின்பற்றப்பட்டு, இம்ப்ரவைஸ் செய்யப்பட்ட விஷயமே இந்த மெதட் ஆக்டிங். எனவே, அதற்கு முழுமுதல் காரணம் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி என்றால் அது மிகையாகாது.
அடுத்த கட்டுரையில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முயற்சிகளை இன்னமும் கூர் தீட்டிய இன்னொரு நபரைப் பற்றிப் பார்க்கலாம். இந்த மினி தொடர் அவசியம் திரைப்பட ரசிகர்களுக்கு உபயோகமாக இருக்கும். எனவே, மிக விரைவில் இரண்டாம் பகுதி.
தொடரும்…..
பி.கு
லிங்கன் படம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், எனக்கு வெறித்தனமான மெதட் ஆக்டிங் பிடிக்காது என்று சொன்னேன். அப்போது ஸ்டானிஸ்லாவ்ஸ்கியைப் பற்றி விரிவாக சொன்னவர் சாரு. மேலும், மெதட் ஆக்டிங் பற்றிய பல தகவல்களையும் பகிர்ந்தார். ஆகவே, இந்தக் கட்டுரை அவருக்கே டெடிகேட் செய்யப்படுகிறது.
ரொம்ப நாளா உங்க பிளாக் படிச்சுட்டு வந்தாலும் இன்னிக்கு தான் முதல் தடவயா கமெண்ட் போடறேன்.. தெரியாத பல தகவல்களை ரொம்ப எளிமையா எல்லாருக்கும் புரியிற மாதிரி எடுத்துச் சொல்றீங்க.. இந்தப் பதிவும் சினிமா மேல ஆர்வமுள்ள எல்லாருக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
அப்படியே உங்களுக்கு டைம் கிடைச்சா நம்ம பிளாக் பக்கமும் வந்துட்டுப்போங்க.. நன்றி.
நன்றி திரு. ஆண்டிச்சாமி அவர்களே. இனிமேல் யாரையும் லிங்க் விளம்பரம் செய்ய அனுமதிக்கவேண்டாம் என்பதால் உங்கள் ப்லாக் லிங்க் தூக்கிவிட்டேன். தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்
Nice to see you back in the website after a while
Thank you Sathish 🙂
Keep it up Brother……
Cheerz bro 🙂
நல்ல கட்டுரை
Thank you Abilash
கமலஹாசன் method artist இல்லை தானே
எனக்குத் தெரிஞ்சி, கமல்ஹாஸன், தான் ஒரு மெதட் ஆக்டர் என்று நம்பிக்கொண்டிருக்கும் நடிகர் பாண்டிராஜன். முடிந்தால் இந்தியாவில் மெதட் ஆக்டிங் பற்றி ஒரு கட்டுரை போடுகிறேன் 🙂
இதை நான் வன்மையாக உசிகர் சார்பில் கண்டிக்கிறேன்…….
மெதட் ஆக்டிங் என்றால் என்னவென்று தூசி அளவு வரையறை மட்டும் தெரிந்து வைத்திருந்தேன் . ஆனால் இப்பொழுது தான் அதை சீராட்டி குளிப்பாட்டி ஆளாக்கியவரைப் பற்றி அறிகிறேன்.
தொடரட்டும் இந்த பதிவு 🙂
ராஜேஷ். ஒரு கட்டுரையின் வெற்றி அதனுடைய சிம்ப்ளிசிட்டியில் தான் உள்ளது என்பதை மிக அருமையாக உணர்த்தி விட்டீர்கள். உங்கள் எழுத்து மெருகு ஏறிக்கொண்டே போவது நன்கு தெரிகிறது. வாழ்த்துகள் ராஜேஷ்.
உங்கள் கட்டுரையை அப்படியே சேர்த்து வைக்க ஆரம்பித்து விட்டேன் 🙂
THANK U SIR