The Midnight Meat Train (2008) – English

by Karundhel Rajesh October 3, 2011   English films

Clive Barker என்று ஒரு மனிதர் இருக்கிறார். இவரைப் பற்றி ஸ்டீவன் கிங், “I have seen the future of horror, his name is Clive Barker” என்று பாராட்டும் அளவு அவரையே அசர அடித்த எழுத்தாளர். Books of Blood என்று 1984ல் இவர் பதிப்பித்த முதல் சிறுகதைத் தொகுப்பைப் படித்துவிட்டுத்தான் ஸ்டீவன் கிங் அப்படிச் சொன்னார். இதுவரை அவை ஆறு தொகுதிகளாக வந்துள்ளன. ஆங்கிலத்தில், வெற்றிகரமான எழுத்தாளராக இருப்பது ஒரு வரம். அதிலும், பேய்க்கதைகள் எழுதுவதில் திறமை இருந்தால், புகழேணியின் உச்சத்தில் அமர்ந்துவிடமுடியும். ஆனால், ஸ்டீரியோடைப் பேய்க்கதைகளாக அவை இருக்கக்கூடாது. கதை, படிப்பவர்களைப் பதற அடிக்க வேண்டும். அப்படியொரு விசேட திறமை வாய்ந்தவரே இந்த கிளைவ் பார்க்கர். பல பேய்க்கதைகளை எழுதியிருக்கிறார். Hellraiser படங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அது இவரது கைவண்ணம்தான். எழுத மட்டும் செய்யாமல், முதல் ஹெல்ரைசர் படத்தை இயக்கியும் இருக்கிறார். Candyman சீரீஸ் படங்களும் இவர் எழுதியவையே.

தனது Books of Blood முதல் தொகுதியில் இவர் எழுதிய சிறுகதையே இந்த ‘The Midnight Meat Train‘.

லியோன் என்ற புகைப்பட நிபுணனை சந்திக்கிறோம். பெரும்பாலும் போலீஸ் துறைக்காகப் புகைப்படங்கள் எடுக்கும் நபர் அவன். வெளிவாய்ப்புகள் அரிதாகவே அவனுக்குக் கிடைக்கும். ஆனால், புகழ்வாய்ந்த ஒரு புகைப்படக்காரனாக ஆகவேண்டும் என்ற வெறி உள்ளவன். இத்தகையதொரு சூழ்நிலையில், சூஸன் ஹாஃப் என்ற, நகரின் புகழ்வாய்ந்த பெண்மணியின் அப்பாய்ன்மென்ட்டை, லியோனின் நண்பன் மூலமாகப் பெறும் லியோன், அப்பெண்மணியிடம் தனது புகைப்படங்களைக் காட்ட, அப்புகைப்படங்களில் தனக்குத் தேவையான rawness இல்லையென்று சொல்லும் சூஸன், பார்த்தநொடியில் தன்னைப் பதற அடிக்கும்படியான புகைப்படங்கள் சிலவற்றை அவன் எடுக்க முடிந்தால், அவற்றை வைத்து அவனுக்கு ஒரு புகைப்படக்கண்காட்சியைத் தன்னால் ஏற்பாடு செய்துதர முடியும் என்று சொல்கிறாள். சூஸன் ஏற்பாடு செய்யும் கண்காட்சியால் கட்டாயமாக லியோனுக்குப் பெரும் புகழ் கிடைக்கும்.

ஆக, அதிரடியான படங்கள் எடுக்கவேண்டுமென்றால், நகரின் இரவு வாழ்க்கையைப் படம் பிடித்தால்தான் உண்டு என்று முடிவு செய்கிறான் லியோன். அதன்படி, இரவில், நகரின் ரயில்வே ஸ்டேஷனில் உலவுகிறான். அப்போது, ஒரு அழகியை மூன்று பேர் துரத்துவதைக் கண்டு, அவர்களை வரிசையாகப் புகைப்படம் எடுக்கிறான். அவர்களைத் தொடர்ந்துகொண்டே போய், அப்பெண்ணை அவர்கள் வன்கலவி செய்ய முயல்வதையும் படம் எடுத்துவிடுகிறான். அப்போது அவர்கள் அவனைத் தாக்க வர, அங்கேயிருக்கும் closed circuit கேமராவைக் காண்பித்து, அவர்களைத் துரத்திவிடுகிறான் லியோன். நன்றி சொல்லும் அந்தப் பெண், அங்கே வரும் ஒரு ரயிலில் ஏறுகிறாள். அவள் ரயிலில் ஏறுவதைப் பலவாறாகப் புகைப்படம் எடுக்கிறான் லியோன்.

மறுநாள் செய்தித்தாளில், அந்தப் பெண்ணின் புகைப்படம் போட்டு, முந்தையநாள் இரவிலிருந்து அவளைக் காணவில்லை என்று வந்திருக்கும் செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடையும் லியோன், போலீஸிடம் சென்று அப்புகைப்படங்களைக் காட்டுகிறான். அந்தப் பெண்ணிடம் வம்பு செய்தவர்கள்தான் அவளைக் கொன்றிருக்கக்கூடும் என்றும் சொல்கிறான். லியோனின் இப்புகைப்படங்களை இதன்பின் காணும் சூஸன், பெரிதும் மகிழ்கிறாள். தான் எதிர்பார்த்த வன்முறையும் கோபமும் இப்புகைப்படங்களில் வந்துள்ளதால், சீக்கிரமே லியோனின் புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்வதாகவும், இன்னமும் இதேபோன்ற சில புகைப்படங்கள் இருந்தால் நல்லது என்றும் அவள் சொல்வதைக் கேட்கும் லியோன், மறுபடியும் அடுத்த நாள் இரவில் இதேபோன்று புகைப்படங்கள் எடுக்கக் கிளம்புகிறான்.

ரயில்வே நிலையம். ஆஜானுபாகுவான ஒரு மனிதன், அங்கே அமர்ந்திருக்கிறான். அந்தச் சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல் அமர்ந்திருக்கும் அவனை, ரகசியமாகப் புகைப்படங்கள் எடுக்கிறான் லியோன்.

மறுநாள் புகைப்படங்களை டெவலப் செய்யும் லியோனுக்குப் பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. அம்மனிதனின் கையில் இருக்கும் ஒரு மோதிரத்தைப் புகைப்படத்தில் பார்க்கும் லியோன், இரண்டு நாட்கள் முன்னர், இவன் காப்பாற்றிய பெண், ரயிலில் ஏறுகையில், கதவைத் திறந்துவிட்டவன் அதே மனிதன் தான் அன்று அறிகிறான். அப்போது அவன் எடுத்த புகைப்படத்தில், இவனது கை பதிவாகியிருக்கிறது. அதே மோதிரத்தோடு. இந்த மனிதனின் பின்னிருக்கும் மர்மத்தை அறிந்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்யும் லியோன், மறுநாள் அவனைத் தொடர ஆரம்பிக்கிறான்.

லியோனின் கெட்டகாலம் தொடங்குகிறது.

இதன்பின் என்ன நடக்கிறது என்பதைப் படத்தில் காணுங்கள். இதுவரை நான் எழுதிய கதை, முதல் அரைமணி நேரக் கதைதான்.

படத்தின் க்ளைமேக்ஸ் வரை படுவேகமாகச் சென்ற இந்தப் படம், இறுதியில் கொஞ்சம் தொய்வடைந்ததுபோலத் தோன்றியது. இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதையால், நன்றாக இருக்கிறது படம்.

ரத்தம் சிதறுவது, கண்களை (நிஜமாகவே) நோண்டுவது, பற்களை உடைப்பது, வயிற்றைக் கிழிப்பது ஆகிய ‘பாகிஸ்தான்’ வேலைகள் இப்படம் நெடுக உண்டு. ஆகவே, ரத்தத்தைப் பார்த்து உங்களுக்கு இருட்டிக்கொண்டு வரும் என்றால், இப்படத்தைப் பார்க்காமல் இருப்பது நலம். நான் பார்த்தது, எந்த வெட்டும் இல்லாத director’s cut. அதுதான் நன்றாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன்.

படத்தில் ஒரு சிறிய ஆச்சரியம், கௌரவ வேடத்தில் Brooke Shields நடித்திருப்பதே.

The Midnight Meat Train படத்தின் Trailer இங்கே.

  Comments

16 Comments

  1. கருந்தேள் உஙக்ள் ஆதரவு யுடான்ஸுக்கு தேவை. உடன் யுடான்ஸில் உங்கள் பதிவுகளை இணைத்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.http://udanz.com.

    Reply
  2. நானும் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. அனால் cilmax குரிதிப்புனலை நினைவுபடுத்தியது.

    Reply
  3. பார்க்க தூண்டும் விமர்சனம்

    Reply
  4. கருந்தேள் விமர்சனம் சிறப்பாக உள்ளது. நீங்கள் The Tree of Life திரைப்படத்தை பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறீர்களா? இல்லையெனில் அப்படத்தைப்பற்றி விரைந்து எழுதுங்கள்.உங்கள் விமர்சனத்தை படித்துவிட்டுத்தான் அப்படத்தை பார்க்க வேண்டும் என்று இருக்கிறேன்.

    Reply
  5. அருமையாக விவரித்திருக்கிறீர்கள். உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பார்க்கிறேன்…

    Reply
  6. @ கேபிள் – உடான்ஸ்குள்ள கொஞ்ச நாள் கழிச்சி வரேன். கொஞ்ச நாள் அதை அப்சர்வ் பண்ணிட்டு, அப்புறம் வரேன் உள்ளார . இன்வைட் பண்ணதுக்கு மிக்க நன்றி.

    @ MANASAALI – குருதிப்புனல்? மே பி. ஆனா இதுல விழுற அடி, அதை விட அதிகமாச்சே 🙂

    ஷீ – நிசி – 🙂

    @ திருமேனி – உங்களுக்கு ஏதாவது விசேட சக்தி இருக்கா? பேரு வேற திருமேனினு வெச்சிருக்கீங்க. tree of life வெகு விரைவில் இங்க எழுதுவேன். வெகு வெகு விரைவில் 🙂 .

    @ கணேஷ் – நன்றி. பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லவும்.

    Reply
  7. ரொம்ப ஹாரரா இருக்குமோ?:-)
    ஆனா தத்ரூபமா எடுக்கிறாங்களே அதான் அங்க சூப்பர்!

    Reply
  8. எஸ்.கே – ஹாரர் அதிகம் இருக்காது. ஆனால், நம்ம மனசைப் பிசையுற உணர்ச்சி ஜாஸ்தி. கண்ணை நோண்டுறதை டீட்டெயிலா காட்டுனா உங்களுக்குப் பிடிக்குமா? அந்த ரேஞ்சுல இருக்கும்.

    Reply
  9. boss எப்பவுமே என்னோட taste suspense horror thriller தான் சின்ன வயசுல நான் முதல் முதலா பார்த்து பயந்து உச்சா போக கூட வெளிய போகாம விடாம செய்த படம் ” silver bullet ” அப்பிடி மிரட்டுன நம்ம தலைவர் stephen kingகையே மிரட்டுன ஒருத்தரோட படம் கண்டிப்பா பார்க்கனும்……. boss தமிழ்ல எவளவோ தேடிடேன் கெத்தா ஒரு கதையோ நாவலோ கிடைக்கல எல்லாமே எவனாலயாவது ரேப் பண்ண பட்டு செத்து போன ஆவி கதையாவே இருக்கு so “ச்ச என்ன கதைடா ” ன்னு சொல்றமாதிரி கதைகளையும் நம்மளுக்கும் புரியுறமாதிரி தமிழ்ல translate பண்ணி எழுதினா ரொம்ப பிரயோசனமா இருக்கும் !!!!!

    Reply
  10. எனக்கு மிகவும் பிடித்த ஹாரர் படங்களில் ஒன்று. அந்த மாமிச குடோன் காட்சி தான் ரொம்பவே பயமுறுத்தியது. 🙂

    Reply
  11. @ MANASAALI – குருதிப்புனல்? மே பி. ஆனா இதுல விழுற அடி, அதை விட அதிகமாச்சே 🙂

    நான் அடி விழறத சொல்லல. நாசரின் கைகூலியா (சுவாமிஜி என்று நினைக்கிறேன்) கே. விஸ்வநாத் இருப்பார். பின் அந்த போஸ்ட்டுக்கு கமல் வருவார். இதில் கிளைமாக்சில் நம் ஹீரோ வேட்டைக்கு போவாரே அப்படி.

    Reply
  12. O அப்புடி !!ரொம்ப கரெக்ட் தான் 🙂 . படு வித்தியாசமா யோசிச்சிருக்கீங்களே தலைவா 🙂 . . பின்றீங்க போங்க

    Reply
  13. #கருந்தேள் கண்ணாயிரம் said:
    October 5, 2011 10:21 AM

    O அப்புடி !!ரொம்ப கரெக்ட் தான் 🙂 . படு வித்தியாசமா யோசிச்சிருக்கீங்களே தலைவா 🙂 . . பின்றீங்க போங்க#

    நெசமா தான் சொல்றீகளா? இல்ல கிண்டல் பண்றீகளா?

    Reply
  14. @ ஆனந்த் ஷா- தமிழ் பேய்ப்படங்களைப் பத்தி உங்க பாயிண்ட்டை நானும் ஒத்துக்குறேன். Horror juz for the sake of it அப்புடீன்னு இன்னும் எதுவும் வரல. சீக்கிரமே வரும்னு எதிர்பார்ப்போமே

    @ MANASAALI – நிஜமாவேதான் சொன்னேன். ஆனா போன கமெண்ட்டை டைப் பண்ணும்போதே, நீங்க இப்புடி கேக்கத்தான் போறீங்கன்னும் நினைச்சேன். அது நிஜமாயிடுச்சு. ஏன்னா, நாம நிஜமாவே சொன்னாலும் மத்தவங்க இப்புடித்தான் பாஸ் நினைக்குறாங்க :-). நீங்க படு வித்தியாசமா யோசிச்சது ரொம்பவே நிஜம் தலைவா

    Reply
  15. எது எப்படியோ நன்றி. பதிலுக்கும் விமர்சனத்திருக்கும்.

    Reply

Join the conversation