Mongol (2007) – Mongolian
நீண்ட பல நாட்கள், மடிக்கணினி பழுதடைந்ததில் ஓடிவிட்டன. இன்று மாலை தான் அந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. எனவே, இடைப்பட்ட நாட்களில் பதிவிட்ட நண்பர்களது பதிவுகளைப் பார்க்க முடியவில்லை. நாளை தான் அத்தனை பதிவுகளையும் பார்க்கப்போகிறேன்.
சரித்திரம், எனக்கு மிகப்பிடித்த விஷயம். சிறு வயதில் பொன்னியின் செல்வனில் ஆரம்பித்த அந்த சரித்திர ஆர்வம், அதன்பின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், ஒரு சில சாண்டில்யன் கதைகள், காந்தளூர் வசந்தகுமாரன் கதை வரை, புனைவுகளில் இருந்தது. ஓரளவு விவரம் தெரிந்த வயதில், வந்தார்கள் வென்றார்கள் வரவே, அந்தப் புத்தகத்தைப் படித்ததில் இருந்து, மொகலாயர்கள் மேல் கவனம் திரும்பியது. அதன்பின் உலக சரித்திரத்தை மேய்ந்ததில், அந்த சரித்திர ஆர்வம் மேலும் கூடியதேயன்றி, குறையவில்லை. பின், சரித்திரப் படங்களின் மேல் கவனம் சென்றதில், பென்ஹர், டென் கமாண்ட்மெண்ட்ஸ், த ப்ரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட் (எனக்கு இதுநாள் வரை மிகப்பிடித்த அனிமேஷன் படங்களில் இது தலையாய ஒன்று), கிங்டம் ஆஃப் ஹெவன், ஃப்ரம் ஹெல், ஸ்பார்டகஸ் போன்ற படங்களை மறக்க இயலாது.
பொதுவாகவே, சரித்திரத்தைப் படித்ததில், ஒரு விஷயம் புரிந்தது. இந்தியர்களைத் தவிர, மற்ற நாட்டு மன்னர்கள், தங்களது சாம்ராஜ்யத்தை விஸ்தரிப்பதில் பெரும் கவனம் செலுத்தியிருக்கின்றனர். அலெக்ஸாண்டரில் இருந்து இன்றைய சதாம் ஹுஸைன் வரை. நாம் தான் எந்தக் காலத்திலும் சாம்ராஜ்ய விஸ்தரிப்பு என்ற ஒன்றை நினைத்தே பார்க்காமல் இருந்து விட்டோம். நமக்கு, இந்தியாவிற்குள் அமைந்த சிறு சிறு நகரங்களே போதுமானவையாக இருந்திருக்கின்றன. சற்று யோசித்துப் பார்த்தால், சோழர்களில் ஒரு சிலர் தவிர, வேறு எந்த மன்னனும் இந்தியாவிற்கு வெளியே படையெடுத்ததில்லை என்று தெரிகிறது (அல்லது, ஒருக்கால் அப்படி எவராவது இருந்திருந்தால், நண்பர்கள் தெரிவிக்கவும்).
ஆனால், மற்ற நாடுகளில், மன்னர்கள் அப்படி இருந்ததில்லை. யாராக இருந்தாலும் சரி, சாம்ராஜ்ய விஸ்தரிப்பைத் தங்களது தலையாய கடமையாக வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது.
அப்படி ஒரு மன்னனைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.
மன்னன் என்பதை விட, தலைவன் என்று அழைக்கலாம். சிதறிக்கிடந்த தனது நாட்டு மக்களையெல்லாம் ஒன்று திரட்டி, உலகம் பார்த்திராத பெரும் படை ஒன்றை அமைத்து, சென்ற இடமெல்லாம் வெற்றிகளைக் குவித்து, தனது பெயரைக் கேட்டாலே எதிரிகள் நடுநடுங்கி மூர்ச்சையடையும்படிச் செய்த ஒரு தலைவன் இவன். மிகக்கொடூரமான ஒரு தலைவனும் கூட. ஈவு இரக்கம் பார்க்காமல், வெற்றியடைந்த நாட்டு மக்களையெல்லாம் கொன்று குவித்து, அவர்களது தலைகளைச் சேகரித்து, பிரமிடுகளை அமைத்து, வெற்றியைக் கொண்டாடிய ஒரு தலைவன்.
ஜெங்கிஸ் க்ஹான் (க்ஹான் – from the epiglotis – நன்றி.. மை நேம் ஈஸ் கான்) !
அவன் வாழ்ந்த காலத்தில், மங்கோலியா, சீனா, பல்கேரியா மற்றும் பல நாடுகளை சரமாரியாக வென்று, தனது பெயரை உலகம் முழுவதும் நிலைநாட்டிய ஜெங்கிஸ் கானின் இளமைப் பருவத்தைப் பற்றிய படமே இந்த ‘மங்கோல்’.
ஜெங்கிஸ் கானின் இயற்பெயர், தெமுஜின் என்பதாகும். மங்கோலியாவைச் சேர்ந்த நாடோடிகளில் ஒரு கும்பலான கியாத்களின் தலைவராக இருந்த யெஸுஹை என்பவருக்குப் பிறக்கிறான் தெமுஜின். தனது ஒன்பதாவது வயதில், தந்தையுடனும், மற்ற சில பிரமுகர்களுடனும், ‘மெர்க்கிட்டுகள்’ என்னும் இன்னொரு கும்பலைத் தேடிச் செல்வதில் இருந்து படம் தொடங்குகிறது.
கியாத் என்ற கும்பலின் தலைவரான யெஸுஹை, மெர்க்கிட்டுகளின் பெண்ணைத் தேடிச் செல்வது ஏனெனில், முந்தைய காலத்தில், இந்த மெர்க்கிட்டுகளின் பெண்ணை, கியாத்கள் கடத்தியிருந்ததேயாகும். தற்காலத்தில், பலத்தில் பெரிதாக இருக்கும் மெர்க்கிட்டுகளால் தனது மக்களுக்குப் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதால், அவர், தனது மகனான தெமுஜினுக்கு, மெர்க்கிட்டுகளின் பெண்களில் ஒருத்தியைத் திருமணம் செய்துவிடவேண்டும் என்று, அவர்களைத் தேடிச் செல்கிறார்.
வழியில், மற்றொரு சிறிய குழுவின் இருப்பிடத்தில், இரவைக் கழிக்க நேர்கிறது. அந்த இடத்தில், அந்தக் குழுவைச் சேர்ந்த ஒரு சிறுமி, தெமுஜினுடன் பேசுகிறாள். தன்னை மறுநாள் தேர்ந்தெடுக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றுவிடுகிறாள். சிறுவன் தெமுஜினுக்கு, தன்னை அதிகாரம் செய்யும் அந்தப் பெண்ணின் ஆளுமை பிடித்துவிடுகிறது.
மறுநாள், மெர்க்கிட்டுகளைத் தேடிச் செல்ல வேண்டாம் என்றும், இந்த இடத்திலேயே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து விடலாம் என்றும் தனது தந்தையிடம் சொல்கிறான் தெமுஜின். பலத்த யோசனைக்குப் பின், யெஸுஹை சம்மதிக்கிறார்.
அந்தப் பெண்ணின் பெயர், ‘போர்த்தெ’ என்பதாகும். அவளைத் தனது வருங்கால மனைவியாகத் தேர்ந்தெடுத்துவிட்டு, சிறுவன் தெமுஜின், தனது தந்தையுடன், தங்களது கூடாரங்களை நோக்கிப் பயணிக்கிறான். வழியில், டாடர்கள் என்னும் தங்களது எதிரிகளைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் கொடுக்கும் விஷம் கலந்த பாலை, விஷம் என்று தெரிந்தும், குல வழக்கத்தை மீறக்கூடாது என்பதால், குடித்துவிட்டு, இறந்து போகிறார் யெஸுஹை.
ஆனால், சிறுவன் தெமுஜினைத் தலைவராக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தார்குதாய் என்பவன் எதிர்ப்புத் தெரிவித்து, வீரர்களைத் தன்பக்கம் இழுத்துக் கொள்கிறான். இதன் விளைவாக, தெமுஜின் தப்பித்து ஓட நேர்கிறது. அவன் பெரியவனாக வளர்ந்தவுடன், அவனைத் தன் கையினாலேயே கொல்வதாக சூளுரைக்கிறான் தார்குதாய்.
தப்பித்து ஓடும்போது, ஜமூகா என்னும் சிறுவனைச் சந்திக்கிறான் தெமுஜின். அந்தப் பிராந்தியத்தின் தலைவனின் மகனான ஜமூகா, தெமுஜினைத் தனது சகோதரனாக அறிவித்து அன்பு காட்டுகிறான். ஆனால், அங்கும் வரும் தார்குதாய், தெமுஜினைப் பிடித்து, சிறைவைத்துவிடுகிறான்.
அங்கு, தன் மேல் அன்பு கொண்ட ஒரு முதியவரால் இரவில் விடுவிக்கப்படும் தெமுஜின், தப்பித்து ஓடுகிறான்.
பதிநான்கு வருடங்கள் கழித்து..
இளம் தெமுஜின், தார்குதாயால் சிறைப்பிடிக்கப்படுவதைக் காண்கிறோம். மறுபடியும் தப்பிக்கும் தெமுஜின், தனது மனைவியான போர்த்தெவைத் தேடிக் கண்டுபிடித்து, மணந்து கொள்கிறான். தனது தாயிடம் போர்த்தெவை அழைத்து வருகிறான்.
அன்றிரவு, பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்களின் இருப்பிடத்தைத் தாக்கும் மெர்க்கிட்டுகள் (தெமுஜின் பெண் பார்க்க முதலில் செல்வதாக இருந்த கும்பல்), தெமுஜினையும் போர்த்தெவையும் துரத்த, அம்பினால் துளைக்கப்படும் தெமுஜினை, அவனது குதிரையை விரட்டுவதன் மூலம் எதிரிகளிடமிருந்து தப்புவிக்கிறாள் போர்த்தெ. ஆனால், அவள் பிடிபடுகிறாள்.
அங்கிருந்து, தனது சகோதரனான ஜமூகாவைத் தேடிச் செல்லும் தெமுஜின், அவனது படையோடு, மெர்க்கிட்டுகளைத் தாக்கி, மனைவியைச் சிறை மீட்கிறான். ஆனால், இதற்குள், எதிரிகளால் வன்புணர்ச்சி செய்யப்படும் போர்த்தெவுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. அவளைக் கொண்டு செல்லும் வழியில், தெமுஜினின் குணநலன்களால் கவரப்படும் ஜமூகாவின் இரு தளபதிகள், தெமுஜினோடு சேர்ந்து விடுகின்றனர். இது, ஜமூகாவுக்குப் பிடிப்பதில்லை.
சிறிது காலம் கழித்து, தெமுஜினின் குதிரைகள் திருடப்படுகின்றன. திருடர்களில் ஒருவனை, தெமுஜின் கொன்றுவிடுகிறான். ஆனால், அது, ஜமூகாவின் தம்பியான டாய்ச்சார். யுத்த மேகங்கள் சூழ்கின்றன.
கடைசி வரை போராடும் தெமுஜின், சண்டையில் தோற்றுவிடுகிறான். அதனால், ஜமூகாவினால் அடிமையாக்கப்பட்டு, மங்கோலியாவின் தாங்குத் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த ஒரு ஆளால் விலைக்கு வாங்கப்படுகிறான். அவனது படைவீரன் ஒருவனைக் கொன்றுவிடுவதால், அங்கேயே ஒரு இருட்டுச் சிறையில் வைக்கப்படுகிறான் தெமுஜின் (இதே தாங்குத் சாம்ராஜ்யத்தை, பிற்காலத்தில் ஜெங்கிஸ் கான் தாக்கித் தரைமட்டமாக்கினான் என்பது வரலாறு).
காலம் கழிகிறது. தன்னைப் பார்க்க வரும் ஒரு சந்நியாசியை, தனது மனைவியைத் தேடும்படி அனுப்புகிறான் தெமுஜின். வழியிலேயே இறந்துவிடும் அந்த சந்நியாசி எடுத்து வந்த அடையாளத்தை, தெமுஜினின் மனைவி போர்த்தெ பார்க்கிறாள். நடந்ததை யூகித்து, தாங்குத் நகரத்துக்கும் வருகிறாள். காவலாளிகளுக்கு லஞ்சம் அளித்து, தெமுஜினை விடுவிக்கிறாள்.
மீண்டும் தனது இடத்துக்கு வரும் தெமுஜின், அங்குள்ள பல நாடோடி கும்பல்களை ஒருங்கிணைக்க ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு கும்பலாக சென்று சந்தித்து, அவர்களை இணைத்து, ஒரு பெரிய படை உருவாக்குகிறான். அதே நேரத்தில், ஜமூகாவும் பெரிய தலைவனாக உருவெடுக்கிறான்.
இந்த இருவருக்கும் மறுபடி ஒரு யுத்தம் மூள்கிறது. ஜமூகாவின் படை, தெமுஜினின் படையை விட பலத்தில் பல மடங்கு பெரியது. ஆனால், இம்முறை, யுத்த தந்திரங்களில் தேர்ந்த ஒரு தளபதியாக இருக்கும் தெமுஜினின் புத்திசாலித்தனமான வியூகத்தால், ஜமூகாவின் படை சிதறியோடுகிறது. தனது வாழ்க்கையின் முதல் பெருவெற்றியைச் சுவைக்கிறான் தெமுஜின். சிறைப்படுத்தப்படும் ஜமூகாவை, பெருந்தன்மையுடன் விடுவித்துவிடுகிறான்.
ஜமூகாவின் படையையும் தனது படையுடன் இணைத்துக் கொள்ளும் தெமுஜின், தான் பிறந்த நோக்கத்தை உணர்கிறான். தன்னிடம் இருக்கும் ஒருங்கிணைந்த பெரும் படையைப் பயன்படுத்தி, உலகத்தை வெல்லும் பயணத்தைத் தொடங்குகிறான். அன்றிலிருந்து அவனது பெயர், ’ஜெங்கிஸ் கான்’ என்று மாறுகிறது.
ஸெங் என்ற சீன வார்த்தைக்கு, ‘அறம்’ என்பது பொருள் என்று இணையம் சொல்கிறது. அத்தகைய ஒரு பெயரைத் தனக்கு உரியதாக்கிக் கொண்ட ஜெங்கிஸ் கான், அதன்பின் தோல்வியையே காணவில்லை. சென்ற நாடுகளையெல்லாம் வென்று, மங்கோலிய சாம்ராஜ்யத்தின் பெயரை உலகமெங்கும் தெரியப்படுத்திய ஒரு மகத்தான வீரனாக வருங்காலத்தில் விளங்கினான்.
ஜெங்கிஸ் கானின் இளமைப்பருவத்தை நமக்கு எடுத்துரைக்கும் இப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, படமாக்கப்பட்ட விதத்திலும் சரி, அட்டகாசமான உருவாக்கம். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், எல்லா விதத்திலும் சிறந்து விளங்கும் இப்படம், நமது தமிழ்ப்படங்களுக்கு ஒரு பாடம்.
ஜெங்கிஸ் கானைப் பற்றிய பல விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் இணையம் சொல்கிறது. கிடைத்த தகவல்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இறுதியில் வரும் அந்த யுத்தத்தைக் காணத் தவறாதீர்கள். ஜெங்கிஸ் கானின் ஆளுமைக்கு அந்த யுத்தமே ஒரு உதாரணம். அவனது வியூகம் வகுக்கும் விதத்தை அருமையாக நமக்குப் புரிவித்து விடுகிறது.
படத்தைப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.
மங்கோல் படத்தின் ட்ரெய்லர் இங்கே
பி.கு – இப்படத்தைப் பற்றி நமது பாலா எப்பொழுதோ எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன். அவரது தளத்தில் போன வருடம் இப்படத்தைப் பற்றிப் படித்த நினைவு உள்ளது
நல்லா எழுதிருகீங்க தேள்…
//க்ஹான் – from the epiglotis – நன்றி.. மை நேம் ஈஸ் கான்) //
haha..க்ஹான்… க்ஹான்… ன்னு ஷாருக் சொல்றது நினைவுக்கு வந்துடுச்சு…
விமர்சனத்தை படிக்கும்போதே சிலவிசயங்கள் புரியமாட்டுதே…படத்தைப்பார்த்துட்டுத்தான் விமர்சனத்தை படிச்சா ஒருவேளை சரியா விளங்கும்…
முகலாயர்கள் பற்றி மதன் எழுதிய புத்தகம் கூட முகலாயர்களை பற்றி மேலோட்டமகா எழுதப்பட்டதே…முகலாயர்கள் சாமாரஜ்யமும் வரலாறும் மிகபெரியது…
//ஜெங்கிஸ் கானின் இயற்பெயர், தெமுஜின் என்பதாகும்.//
//அந்தப் பெண்ணின் பெயர், ‘போர்த்தெ’ என்பதாகும். //
ஏங்க.. நாம என்ன கோனார் தமிழுரையா எழுதுறோம்??
அதெல்லாம் சரி… உங்க நண்பர் சொன்ன பின்னாடி, விமர்சனம் எதையும் எழுதாம, படத்தோட கதையை மட்டும் 2-3 பதிவா எழுதிட்டு விட்டுடுறீங்களா…ன்னு ஒரு டவுட் இருக்கு
-ன்னு ராமசாமி சொன்னாரு. இந்த குற்றச்சாட்டுக்கு உங்க பதில் என்ன?
—
மங்கோல் எழுதியாச்சிங்க. விளம்பர லிங்க்..!!!
http://www.hollywoodbala.com/2009/03/mongol-2007.html
கண்டிப்பா இந்த படத்தை பார்த்துடறேன்..ராஜேஷ்.. உன்னை பத்தி ஈரோடுகதிர் வலைசரத்தில் எழுதி இருக்கின்றார்.. வாழ்த்துக்கள்..
//முகலாயர்கள் சாமாரஜ்யமும் வரலாறும் மிகபெரியது.//
என் வரலாறு கூடத்தான் ரொம்ப பெரியது. நானெல்லாம் எழுதறேனா என்ன நாஞ்சில்?
ய்ய்யாய்.. யாருப்பா அது?? நம்ம கருந்தேளை பத்தி நல்லாத எழுதினது?
விடுய்யா வண்டிய ஈரோடுக்கு..!!
பாலா வலைச்சரத்துல எழுதி இருக்கார்…
அப்படியா ஜாக்கி? ஈரோடுக்கு வண்டியை விட்ட வேகத்தில் திருப்ப வேண்டியதா போச்சி. அவரு சுத்தத் தமிழ்ல எழுதுறாருங்க. நமக்கு அலர்ஜி.
விடுய்யா.. வண்டியை வலைச்சரத்துக்கு.
நண்பரே,
சிறப்பான பதிவு. ஜெங்கிஸின் ஆரம்பகாலம் இப்படத்தில் சுவாரஸ்யமாக கூறப்பட்டிருக்கும்.
நண்பா
படம் பார்த்திருக்கிறேன்,அந்த கிளைமேக்ஸ் ஃபைட் உண்மையிலேயே மறக்கமுடியாத ஒன்று.அருமையான படம்,அருமையான விமர்சனம்
லஸ்ட் அண்ட் காஷன் என்னும் காண்டனீஸ் படமும் பார்த்திருந்தால் எழுதுங்கள்,
வழக்கம் போல மிகச் சிறப்பான பதிவு.
//சற்று யோசித்துப் பார்த்தால், சோழர்களில் ஒரு சிலர் தவிர, வேறு எந்த மன்னனும் இந்தியாவிற்கு வெளியே படையெடுத்ததில்லை என்று தெரிகிறது.
ஏறக்குறைய உண்மை தான். இந்திய துணைக்கண்டத்து மன்னர்கள் தங்களுக்குள்ளேயே அடித்து கொண்டனர். எந்த இந்திய துணைக்கண்டத்து மன்னர்களும் பிற பகுதிகளில் சாம்ராஜ்ய விஸ்தரிப்பு நடத்தியதாக தெரியவில்லை. சோழர்களின் கிழக்காசிய படையெடுப்பு கூட பொருள் சேர்க்கும் (கொள்ளையடிப்பு என பொருள் கொள்க) முயற்சியாகவே கருதப்படுகிறது. இலங்கைத் தீவு மட்டுமே சோழ அரசின் ஒரு பகுதியாக சில காலம் இருந்திருக்கிறது.
ஜெங்கிஸ் கான் காலத்தில் மங்கோலிய பேரரசு கொரியா முதல் மத்திய ஐரோப்பா வரை நீண்டிருந்தது. எல்லா நாடுகளும் மங்கோலியர்களிடம் பெரிய எதிர்ப்பின்றி வீழ்ந்தன. அதிமூர்க்கதனத்தாலும் போர்க்கலையில் இருந்த திறமையினாலும் இது சாத்தியமாயிற்று. மங்கோலியர்களை தடுக்கத் சீனப் பெருஞ்சுவர் (ஜெங்கிஸ் கான் காலத்திற்கு முன்பாகவே) எழுப்பிய கதை தான் உங்களுக்குத் தெரியுமே. ஜப்பானை தாக்க மங்கோலியர்கள் இருமுறை நடத்திய படையெடுப்புகள் டைபூன்களின் புண்ணியத்தால் தோல்வியடைந்து, மங்கோலிய பேரரசின் முடிவை ஆரம்பித்து வைத்தன.
i think this movie is planned for a triology..
இது உங்கள் நடையில்லையே???????????என்னாச்சு!!!!!!!!!!!!!!!!தேளுக்கு????????
@ இராமசாமி – நன்றி நன்றி நன்றி நன்றி 😉 …. உங்கள் பேராதரவை அடிக்கடி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.. 😉
@ நாஞ்சில் பிரதாப் – ஹீஹீ… 😉 சும்மா டமாஸுக்கு அந்த க்ஹான் மேட்டரு 😉 .. அப்பாலிக்கா, முகலாயர்கள் பத்தி உங்க கருத்து உண்மைதான்.. அது மிகப்பெரியது.. மதன் புக், juz a tip of the iceberg தான் 😉
@ பாலா – //ஏங்க.. நாம என்ன கோனார் தமிழுரையா எழுதுறோம்??
அதெல்லாம் சரி… உங்க நண்பர் சொன்ன பின்னாடி, விமர்சனம் எதையும் எழுதாம, படத்தோட கதையை மட்டும் 2-3 பதிவா எழுதிட்டு விட்டுடுறீங்களா…ன்னு ஒரு டவுட் இருக்கு
-ன்னு ராமசாமி சொன்னாரு. இந்த குற்றச்சாட்டுக்கு உங்க பதில் என்ன?//
ஆ… !! இது என்ன அபாண்டம் ! ப்ளாகுக்கு வந்த சோதனை ! ஆக்சுவலா, நேத்து நைட்டு, செம தூக்கம்.. அதுனாலதான், ஓரளவோட நிறுத்திட்டு, பப்ளிஷ் பண்ணிட்டேன்.. இதோ அடுத்த போஸ்ட் இண்ணிக்கி நைட்டு.. அதுல பாருங்க.. பின்னிரலாம் 😉
அப்பறம், அந்த கோனார் உரை பத்தி … சும்மா ஒரு ஜாலிக்கி தான் அப்புடி எழுதுறது 😉 .. பின்னால வர்ர சந்ததிகள், டங்கு மேல பல்லப்போட்டு கேள்வி எதுனா கேட்டுட்டா, அப்புறம் நமக்கு முடியெல்லாம் வெள்ளையாயிரும்ல 😉
@ ஜாக்கி – உங்க ப்ளாக், நேத்து தான் பார்த்தேன்.. 😉 .. நன்றி ஜாக்கி ;-).. அப்புறம், ஈரோடு கதிர் போஸ்ட்.. இதோ போயி பாக்குறேன் 😉
@ காதலரே – உங்கள் கருத்துக்கு நன்றி 😉
@ கார்த்திகேயன் – நண்பா.. லஸ்ட் & காஷன் – பார்க்கவில்லை. டவுன்லோட் போட்ரலாம் ;-).. நன்றி நண்பா..
@ பென் – நீங்கள் சொல்லியுள்ள பாயிண்ட்டுகள், இந்த போஸ்ட்டுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. உங்கள் கருத்தோடு முழுதும் ஒத்துப் போகின்றேன்.. நன்றி பென்..
@ யாத்ரீகன் – ஆமாம்.. இது ஒரு ட்ரையாலஜியின் முதல் பாகம் தான்.. இரண்டாம் பாகத்தின் பெயர் – ‘த க்ரேட் கான்’. ஆனால் அதைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. தேடிப்பார்த்து விடுகிறேன்.. நன்றி..
ணா..ஸ்கூல்ல எனக்கு கிடச்ச சோசியல் சயின்ஸ் வாத்தியார் கதை சொல்லுவதில் கில்லாடி(நிறைய பேருக்கு அப்படி கிடைக்காததுனால தான் ஹிஸ்டரியே கசப்பாயிடுது என்று நினைக்கிறேன்)ஸ்கூல்ல இதைப்பத்தி வரும் போது அருமையா கோர்வையா சொல்லுவார் (பாபர் நாமா படிச்சிருக்கீங்களா?பாபர் கூட தைமூர்-செங்கிஸ்கான் வழி வந்தவர்கிறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்).
நம்புறீங்களோ..இல்லையோ..போன மாசம் இந்தப்படத்த எதேச்சையா பார்த்து வாங்கினேன். சரி..யாரும் இதைப்பத்தி பதிவு போடல போல.நம்ம போட்டு பீட்டர்வுடலாம்ன்னு நெனச்சா..பாலாவும் எழுதியிருக்கார்..இப்ப நீங்க. அப்பறம் சின்னவயசு செங்கிஸ்கான் அந்த அடைபட்ட கட்டையிலிரிந்து எப்படி தப்பிகிறான்னு சரியா சொல்லாத மாதிரி தெரியுதே..உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
//மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், எல்லா விதத்திலும் சிறந்து விளங்கும் இப்படம், நமது தமிழ்ப்படங்களுக்கு ஒரு பாடம்//
மிகவன்மையாக கண்டிக்கிறேன். உங்களுக்கெல்லாம் தமிழ் படத்த இழுக்குறதே வேலையா போச்சு. குறைந்த பட்ஜெட்டில் அற்புதமான ஒரு சரித்திர காவியம் போன வருஷம் வந்துச்சே ஞாபகமில்லையா? (அது என்ன படம்ன்னு கரெக்ட்ட சொல்லுங்க பார்ப்போம்) அந்த மாதிரி செட்டிங்ஸ்யோட யாரால எடுக்க முடியும்? என்ன வசனம்? ச்சே..சான்ஸ்சே இல்ல.வேணும்னா உங்களுக்கு டிவிடி அனுப்பி வைக்கிறேன்.
கொழந்த – பாபர் நாமா படிச்சாச்சி 😉 ஷ்ரீ பரிசா கொடுத்த புத்தகம் அது ! அதுக்கப்புறமும் படிக்காம இருக்க முடியுமா 😉
அப்புறம், நீங்க சொன்ன மடம்.. ச்சீ.. படம், ஒலக இலக்கியவாதிகளின் முதுபெரும் தலைவர் வசனம் எழுதி, அண்டவெளி அற்புத நடிகர் குனீத் நடித்து வெளிவந்த ‘பழியின் பூசை’ திரைப்படமல்லவா ? 😉 வாவ்.. அதனை, ஆஸ்கருக்கு இம்முறை அனுப்ப இருப்பதாக, நம்பத்தகாத வட்டாரத்திலிருந்து வந்த செய்தி தெரிவிக்கிறது 😉
அருமையான் விமர்சனம்
இந்த செய்திகள் வரலாற்றீல் உணமையாக இருக்குதா இல்ல உண்மை பாதி சினிமா பாதி படமா இது???
ஜெங்கிஸ் கான் பற்றிய செய்திகளே மிகவும் கம்மிதான்… கிடைத்த செய்திகலை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம்.. உண்மை பாதி சினிமா பாதி என்றுதான் சொல்ல வேண்டும் மந்தாகினி 😉
“லஸ்ட் அண்ட் காஷன் என்னும் காண்டனீஸ் படமும் பார்த்திருந்தால் எழுதுங்கள்,”
I think cable had written about this picture.
Good Review .
ணா..நீங்கதான் நெறைய புத்தகம் படிக்கீறீங்கள்ள..அத அப்பப்ப எடுத்துவிட்டா என்ன? இல்லாட்டி இந்த மாதிரி பதிவு போடைல அதோடு சம்பந்தமுடைய புத்தகங்களையும் குறிப்பிட்டா என்னைய மாதிரி சிறுசுகள் அதையும் தெரிஞ்சுகிட்டு படிப்போம்ல..ஏன் இந்த ஓரவஞ்சனை? அப்பறம் “பழியின் பூசை” கண்டுபிடிச்சதுக்காக கீழ்க்கண்ட புத்தகங்களை உங்களுக்கு அனுப்ப ஆவலாக உள்ளேன். உங்கள் முகவரியை குறிப்பிடவும்.
மீசை முளைத்த வயதில்
நெஞ்சுக்கு நீதி
சங்கத் தமிழ்
ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம்
வெள்ளிக்கிழமை
//ஷ்ரீ பரிசா கொடுத்த புத்தகம்// உங்க பழைய பதிவ பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன். உங்களுக்கு கல்யாணம் ஆயிரச்சாமே? அப்ப நீங்க யூத் இல்லையா?
நல்ல படம். அதுவும் இப்படம் எடுக்கப்பட்ட லொகேஷன் அருமையாக இருக்கும்.
படத்த பார்த்துட வேண்டியதுதான்…. அறிமுகத்திற்கு நன்றி…
செங்கிஸ்கானை பற்றி பாடத்தில் கொஞ்சம் படித்திருக்கிறேன். பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் என்று. ஆனால் அவர் கொடுங்கோலன் போல் படித்ததாக ஞாபகம். தங்கள் பதிவிற்கு நன்றி!
அருமை ராஜேஷ். மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
This comment has been removed by the author.
முதன் முதலாக செங்கிஸ்கான் தான் Physiological War அறிமுகபடுத்தியது,
இவர் படைக்கு எதிர்ல இவங்கள விட பலமான படை இருந்தாலும் தோற்றால் என்னா ஆகும்னு எதிரி படை வீரர்கள் நினைகின்ற முதல் நிமிடத்துல இருந்து இவரோட[படைகள்]வேட்டை ஆரம்பம் ஆகுமாம்,
இவர்கள் மத்திய கிழக்கில் படை எடுத்தப்ப எகிப்தில் குத்துஸ் சுல்தான் மட்டும் இல்லனா இஸ்லாம் மதம் பரவியதில் மாற்றம் வந்திருக்கும்,
மங்கோல்ஸ் முதன் முதலா பலப் வாங்குனது எகிப்தில்தான் கருந்தேள்,
அப்புறம் நம்ம அருள் மொழிவர்மர் [ராஜ ராஜ சோழன்] மற்றும் ராஜேந்திர சோழர் தான் ஐரோப்பியர் மத்த நாடுகள கண்டு பிடிக்குறதுக்கு முன்னாடியே [ஐரோப்பியர்களுக்கு மட்டும் தான் கண்ணு தெரியும் கண்டு பிடிக்க]சோழர்கள் கடல் கடந்து படை எடுத்து நம்ம செட்டியார்கள் துணையோட உலக மயமாக்கல்க்கு அடிகோலினார்கள்,
தாய்லாந்து, சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகள்ள அவுங்களுக்கு தெரிஞ்ச அரசர்கள்னா சோழர்கள் தான்,
தாய்லாந்துல பெரிய புராணம் பாடித்தான் அரசர்களுக்கு முடிசூட்டுவது வழக்கம்,
நாமளும் இப்படினா எப்படித்தான் படம் எடுப்போமா,
முடிஞ்சா இந்த லிங்க் போய் பாருங்க கருந்தேள்,
http://en.wikipedia.org/wiki/Tamil_bell
இது ஏதோ படம்ன்னு அப்ப பாக்காம போயிட்டேன் தல…..
இப்பவே டௌன்லோட் போட்டுடுறேன்…. 😉
// சரித்திரம், எனக்கு மிகப்பிடித்த விஷயம். சிறு வயதில் பொன்னியின் செல்வனில் ஆரம்பித்த அந்த சரித்திர ஆர்வம், அதன்பின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம்//
இது பொதுவாக எல்லாருக்கும் பொருந்துமோ?
செங்கிஸ்கான் பெற்ற வெற்றிகளுக்கு போர்த்தந்திரமும்,மூர்க்கமுமே காரணம்.மதன் எழுதிய “வந்தார்கள் ,வென்றார்கள்”ளில் இவருடைய மூர்க்கத்தனம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருப்பதாக நினைவு.
இந்தப் படத்தை இதுவரை பார்த்ததில்லை.சீக்கிரம் பார்க்கிறேன்.
@ முத்துபாலக்ருஷ்ணன் – ஓ ரைட்டு.. கேபிள் எழுதிட்டாருன்னா ஓகே.. நன்றி..
@ கொழந்த – புத்தகங்கள் பத்தி அப்பப்ப எழுதுறேன்.. Mario Vargas Llosa எழுதின Deth in the Andes பத்தி கொஞ்ச நாள் முன்ன எழுதினேன்.. இனி அப்பப்ப எழுதிடுறேன் 😉
அப்புறம், ‘’உங்க பழைய பதிவ பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன். உங்களுக்கு கல்யாணம் ஆயிரச்சாமே? அப்ப நீங்க யூத் இல்லையா?//
அடப்பாவி !! என்ன இது அபாண்டம்? நாமெல்லாம் 100 வயசு ஆனாலும் யூத்துதான்யா 😉 டோண்ட்டு வொர்ரி பீ ஹாப்பீ 😉
@ பின்னோக்கி – ஆமா தலைவா… லோகேஷன் சும்மா பின்னும் !! பட்டையைக் கிளப்பிருக்காங்க..
@ ஜீவன்பென்னி – ரைட்டு தல.. நன்றி..
@ எஸ்.கே – ஆமா.. அவரு கொடுங்கோலன் தான்.. ஆனா அதுனால தான் அவரால ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிஞ்சது. ஆனா இந்தப் படத்துல அவரோட கருணையான பக்கத்தையும் காட்டிருக்காங்க..
@ சரவணக்குமார் – நன்றி நண்பா..
@ Keanu – நீங்க சொன்ன கருத்துகள் டாப்பு ! உங்க லின்க் கண்டிப்பா போயி பாக்குறேன்.. சோழர்கள் பத்தி நிறைய ஆராய்ச்சிக்கட்டுரைகள் படிச்சிருக்கேன்.. அதப்பத்தி முடிஞ்சா எழுதறேன்.. நேரம் கிடைக்கும்போது.. 😉
@ ஆனந்த் – ரைட்டு !! பட்டையைக் கிளப்புங்க 😉
@ Dr. சாரதி – // சரித்திரம், எனக்கு மிகப்பிடித்த விஷயம். சிறு வயதில் பொன்னியின் செல்வனில் ஆரம்பித்த அந்த சரித்திர ஆர்வம், அதன்பின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம்//
//இது பொதுவாக எல்லாருக்கும் பொருந்துமோ?//
கண்டிப்பா.. தமிழர்கள் அத்தனைபேருக்கும் பொருந்தும் 😉 நாமெல்லாம் அப்புடித்தானே வளர்ந்தோம் 😉
@ இலுமி – வந்தார்கள் வென்றார்கள் படத்துல தைமூர் பத்தி விரிவா வரும். ஜெங்கிஸ்கான் பத்தி ஒரே ஒரு வரிதான் இருக்கும்.. இந்திய எல்லையில் தனது வெறிபிடித்த படையோடு ஜெங்கிஸ்கான் வந்து, அதன்பின் இரான் பக்கம் கவனத்தை செலுத்தியதால் இந்தியா பிழைத்தது – இந்த ரீதில இருக்கும் அந்த வரி 😉
அப்புறம், ஜெங்கியோட மூர்க்கம் உலகப்பிரசித்தம். எதிரிகளை இரக்கமே காட்டாமல் கொன்று, தலைகளை வைத்து பிரமிடு அமைத்த முன்னோடி அவரு 😉
கரெக்ட்டு.இப்ப நினைவுக்கு வருது.நானு தான் தைமூர்,ஜெங்கிஸ்கான் ரெண்டு பேரையும் குழப்பிட்டேன்.நீங்க சொன்ன மாதிரி மனிதத் தலை பிரமிட் ஆரம்பிச்சு வச்சது ஜெங்கிஸ்கான் தான்னு நினைக்கிறேன்.
http://www.bearpit.net/lofiversion/index.php/t3514.html
போய்ப் பாருங்க. 🙂
ரொம்ப கொடூரமான கொலைகார படை அவர்களுடையது,
படையெடுத்து செல்லும் போது வழியில் தண்ணீர் தாகம் ஏற்பட்டாலும் கூட குதிரையில் இருந்து இறங்காமல் குதிரையோட கழுத்துல கத்தியால கிழிச்சி ரத்தத்தால தாகத்த தணித்து கொள்வார்களாம்,
வந்தார்கள் வென்றார்கள்ல மதன் சார் எழுதிருப்பார்,
//ரொம்ப கொடூரமான கொலைகார படை அவர்களுடையது,
படையெடுத்து செல்லும் போது வழியில் தண்ணீர் தாகம் ஏற்பட்டாலும் கூட குதிரையில் இருந்து இறங்காமல் குதிரையோட கழுத்துல கத்தியால கிழிச்சி ரத்தத்தால தாகத்த தணித்து கொள்வார்களாம்,
வந்தார்கள் வென்றார்கள்ல மதன் சார் எழுதிருப்பார்,//
கொடூரம்ங்கறது அவரவர் பார்வைல இருக்கு… பாலைவனத்திலே நெடுந்தொலைவு போகும்போது இது பல முந்தய, பிந்தைய குழுக்கள் செய்கின்ற செய்கைதான். தயிர்சாதம் சாபிடற நமக்கு வேணா இப்படித் தெரியலாம்:)) அந்தப்பகுதில வாழும் மக்களுக்கு எதார்த்தம் இதான்…
கருந்தேள்… உங்க பதிவ தொடர்ந்து படிச்சுட்டு வர்றேன்… இதப்படிச்சுட்டு உடனடியா இந்த படம் பார்த்தேன், மலைத்தேன்… அதுவும் குறைந்த budget என்பது அருமை…
Conn Igulden எழுதிய trilogy படித்து இருக்கீங்களா? மிக அருமையா எழுதி இருப்பார்… குறிப்பா இளைமைகால தெமுஜின்…..
சந்திப்போம்,
Prem