Mukkabaaz (2018) – Hindi
இந்தியாவின் வட பகுதிகளிலும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும், சாதி என்பது இன்றுமே பிரதான பங்கு வகிக்கும் ஒரு விஷயம். பெயருக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்ப்பதே அங்கெல்லாம் வழக்கம். நான் பெங்களூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுமே – அதிலும் ITயில்- என்னிடம் பேசிய வட-கிழக்கு-மேற்கு இந்தியர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் நேரடியாகவே முகத்துக்கு நேராகவே, ‘நீ எந்த சாதி?’ என்றே கேட்டிருக்கின்றனர். அதில் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. காரணம் அவர்களுக்குள், அவர்களின் பெயர்களைக் கேட்டதுமே அது புரிந்துவிடுகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பெயருக்குப் பின்னால் தகப்பன்களின் பெயர்களைப் போட்டுக்கொள்வதால் அவர்களுக்கு இந்தக் குழப்பம். தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக்கொள்ளும் வழக்கம் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது என்றாலுமே, இன்றும் இங்கும் சாதியின் பெயரால் நடக்கும் பிரச்னைகளை நாம் படித்துக்கொண்டும் கேள்விப்பட்டுக்கொண்டும்தான் இருக்கிறோம். ஆனாலும் ஒருசில விஷயங்களில் வட-கிழக்கு-மேற்கு இந்தியாவுக்கு நம் தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை.
இந்தச் சூழலில், வட இந்தியாவில் முன்னேறத் துடிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனுக்கு சாதியின் பெயரால் நடக்கும் அநியாயங்கள் என்னென்ன என்பதை ஒரு முக்கியமான விஷயமாக எடுத்துக்கொண்டு பேசியிருப்பதே ‘முக்காபாஸ்’ படத்தின் பிரதான அம்சம்.
அனுராக் காஷ்யப் இப்படத்தில் செய்திருப்பது என்னவென்றால், ஒரு சாதாரண காதல் கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு இப்படிப்பட்ட உண்மையான பிரச்னைகள் சார்ந்த காட்சிகளைப் பின்னணியில் வைத்திருப்பதுதான். இதனாலேயே இந்த சாதாரணமான கதை, அசாதாரணமான ஒரு தளத்தில் வைக்கப்பட்டுவிடுகிறது. படத்தின் வில்லனின் பெயர் ‘பக்வான் தாஸ் மிஷ்ரா’. மிஷ்ரா என்பது பிராம்மணர்கள் உபயோகிக்கும் சாதிப்பெயர். அவனுமே படம் முழுதுமே, ‘நாமெல்லாம் பிராமணர்கள். நம்மை விடக் கீழ்சாதியினரிடம் நாம் தோற்றுவிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். அந்த ஊரின் பெரிய மனிதனாகவும் இருக்கிறான். அவனால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்துவிடமுடியும். இந்தச் சூழலில், ‘டாக்குர்’ சாதியைச் சேர்ந்த ஒருவன், இவனது பிராம்மண சாதியைச் சேர்ந்த ஒரு நெருங்கிய உறவுக்காரப்பெண்ணைக் காதலித்துவிட்டால்? (இவனது சகோதரன் மகள்). இவனது உதவியில்லாமல் அவனால் குத்துச்சண்டை வீரனாக ஆகவே முடியாத சூழ்நிலை என்றால்?
இதுதான் முக்காபாஸ். இதில் இருக்கும் இரண்டு விஷயங்கள் – எளியவன் ஒருவன் குத்துச்சண்டை வீரனாக மாறுவது மற்றும் ஏழை ஒருவன் பணக்காரப் பெண்ணைக் காதலிப்பது ஆகியவை இந்திய சினிமாவில் மிகப்பழைய விஷயங்கள். ஆனால் அவைகளை மிக இயல்பாக, சாதி சார்ந்த பின்னணியில் காட்டியதுதான் அனுராக் காஷ்யப்பின் சாமர்த்தியம். அதனாலேயே முக்காபாஸ் பலராலும் பேசப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.
இதில் ஒருசில குறியீடுகளை அனுராக் காஷ்யப் வைத்திருக்கிறார். முதலாவது, கதாநாயகிக்கு வாய்பேச இயலாது. அவள் ஒரு பெண். அதிலும் ஆணாதிக்க சிந்தனைகள் உச்சத்தில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த பெண். எனவே, வாய்பேச முடிந்தாலும் அவளால் இவைகளுக்கெதிராகக் குரல் எழுப்ப இயலாதுதான். இதுதான் அவளால் பேச முடியாமல் இருப்பதற்கான குறியீடு. ஆனால் அவளது செய்கைகளின் மூலம் தன்னைக் காதலிப்பவனை மணந்துகொண்டுவிடுகிறாள். அவன் தனது லட்சியத்தை அடைவதற்கு உற்ற துணையாகவும் இருக்கிறாள். மிகவும் தைரியமான, வெளிப்படையான ஒரு பெண் இப்படத்தின் நாயகி.
படத்தின் நாயகன், தனது விளையாட்டுத் திறமையால் ஒரு அரசு அலுவலகத்தில் சேர்கிறான். அவனுக்கு மேலதிகாரியாக இருப்பவர் ஒரு யாதவ். இவனோ ஒரு டாக்குர். யாதவ் இனம், டாக்குர்களிடம் பல்லாண்டுகாலம் அடிமையாக இருந்தது என்பது நமக்கே தெரியும். இந்த சூழலில், யாதவ் சாதியைச் சேர்ந்த அந்த மேலதிகாரி, டாக்குர் சாதிக்காரன் ஒருவன் அவருக்கு அடிமையாக வேலை செய்வதை – குறிப்பாக அவன் மேஜையைத் துடைப்பதை புளகாங்கிதத்தோடு வீடியோ எடுக்கிறார். எடுக்கும்போதே அவனிடம் சொல்லவும் செய்கிறார் – ‘காலம் எப்படி மாறிவிட்டது பார்த்தாயா? என் தந்தை, உங்கள் இனத்தினரிடம் வேலைக்காரராக இருந்தார் தெரியுமா?’ என்று. இதுபோன்ற வசனங்கள் படம் நெடுகிலும் ஆங்காங்கே இருக்கின்றன. ஒரு இடத்தில், மகள் விருப்பப்படும் நாயகனுக்கே தனது பெண்ணை மணம் செய்துகொடுக்க முடிவுசெய்துவிடும் சகோதரனை அழைத்து, ‘அடேய். அவள் உனது பெண் தானே? அப்படியென்றால் உன் முடிவுதானே அங்கே எடுக்கப்படவேண்டும்? அவள் நினைப்பதையெல்லாம் நாம் செய்துவிடலாமா? நம் குடும்பத்தில் எப்போதுமே பெண்களின் முடிவுகளை நாம் மதிக்காமல்தானே இருந்திருக்கிறோம்?’ என்று கேட்கிறான். இதுபோன்ற வசனங்களால், அந்தப் பிராந்தியம் இன்றும் எப்படி இருந்துகொண்டிருக்கிறது என்பதை அனுராக் அட்டகாசமாகக் காட்டியிருக்கிறார்.
படத்தில் காண்பிக்கப்படும் இன்னொரு விஷயம் – இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு அமைப்புகளில் ஏன் நல்ல வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. குறிப்பாக, மூளை வீங்கிய முதலாளிகள் எதைப்பற்றியும் யோசிக்காமல் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளால் எப்படித் திறமையான வீரர்களை வீணடிக்கிறார்கள் என்பதைக் கச்சிதமாகக் காட்டியிருக்கிறது இப்படம்.
படத்தில் தற்கால இந்தியாவைத் தோலுரித்துக் காட்டும் பல வசனங்கள் இருக்கின்றன. ‘பாரத் மாதா கீ ஜேய்’ என்று கத்திக்கொண்டே ஹீரோ வில்லனை அடி வெளுக்கும் காட்சி ஒரு உதாரணம். படம் ஆரம்பிப்பதே மாட்டுப் பிரச்னை சம்மந்தப்பட்ட காட்சியோடுதான். அதேபோல், ஒரு காட்சியில், தன்னிடம் வந்து இறைஞ்சும் ஹீரோவை எப்படி வில்லன் அவமானப்படுத்துகிறான் என்று கவனியுங்கள்.
ஒட்டுமொத்தமாக, இப்படத்தைப் பற்றி அனுராக் காஷ்யப் சொல்லியிருப்பதே போதும். ‘தற்கால இந்தியாவில் நடக்கும் பல பிரச்னைகளை இப்படத்தில் வைக்க விரும்பினேன். ஆனால் சென்சாரில் வெட்டுப்படக்கூடாது என்பதால், சாமர்த்தியமாக அவைகளை உள்ளே நுழைத்தும் விட்டேன்’. இதுதான் இப்படத்தின் அடித்தளம். இதற்கு மேல்தான் பிற சம்பவங்கள். வழக்கமான அனுராக்கின் ப்ளஸ் பாயிண்ட்களான இயல்பான நடிப்பு, பாடல்கள், காட்சிகள் ஆகிய எல்லாமே இப்படத்தில் உண்டு என்பதால், படம் சுவாரஸ்யமாகவும் இயல்பாகவும் செல்கிறது. இருப்பினும், படத்தின் நீளம் என்னைக் கொஞ்சம் நெளியவும் வைத்தது. இரண்டு மணி நேரங்கள் மட்டும் என்று இருந்திருந்தால் இன்னும் வேகமாகவும் அட்டகாசமாகவும் இருந்திருக்கும்.