My Name is Khan (2010) – Hindi

by Karundhel Rajesh March 2, 2010   Hindi Reviews

பல காலம் தொட்டே, நமது நாட்டில், சில ப்ரச்னைகள் இருந்து வருகின்றன. இதுவரை இவைகளுக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை. இப்பிரச்னைகளைப் பற்றிப் பேசினாலே, அடிவிழும் சாத்தியக்கூறுகள் அதிகம். அவற்றில் ஒன்றுதான், முஸ்லிம்கள். இந்தியாவில் மட்டும் இல்லை – உலகத்தில் எந்த மேற்கத்திய நாடாக இருந்தாலும், அங்கு முஸ்லிம்கள் என்றாலேயே ஒரு வெறுப்பு உள்ளுக்குள் இருந்து வெளிப்படுவதை, இக்காலத்தில் எவராலும் தடுக்க இயலவில்லை. இத்ற்குக் காரணம் கேட்டால், அவர்கள் தீவிரவாதிகள் என்ற ஒரே புளித்துப் போன பதில் தான் கிடைக்கும். உண்மையைச் சொல்லப்போனால், மற்ற மதங்களிலும் தீவிரவாதம் பெருமளவில் உண்டு.முஸ்லிமாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக, பிற மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டவர்கள் எவ்வளவு பேர்?

இப்படிப்பட்ட ஒரு உலகளாவிய பிரச்னையைப் பற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லும் ஒரு படமே ‘மை நேம் ஈஸ் கான்’.

ரிஸ்வான் கான், ஆஸ்பெர்கர்ஸ் சிண்ட்ரோமினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன். இக்குறைபாடு, மனிதர்களை மற்றவர்களுடன் பழகுவதைக் கடினமாக்குகிறது. சத்தம் கேட்டால் பயம், கட்டுமானங்களைக் கண்டால் பயம், தனிமையும் சில நேரங்களில் பயம், குறிப்பிட்ட சொற்களையே மறுபடி மறுபடி சொல்லுதல் என்ற ஒரு கடினமான – இவையோடு இன்னும் சில குறைபாடுகளும் சேர்ந்த ஒரு டிஸார்டர் அது. சிறுவயதிலேயே இக்குறைபாடுகளோடு வளரும் ரிஸ்வான், பள்ளியில் மற்ற சிறுவர்களின் கேலிக்குள்ளாவதால், அவனது தாய், அவனை ஒரு ஆசிரியரிடம் தனியே கல்வி கற்க வைக்கிறாள். அங்கு, ரிஸ்வானுக்குள் உள்ள திறமை வெளிப்படுகிறது. எந்தப் பொருள் பழுதடைந்தாலும், அதை அவன் சரி செய்துவிடுகிறான்.

தனது அண்ணனின் மேல் தாய் காட்டும் பரிவு, தம்பியான ஸாகிருக்குப் பொறாமையை உண்டுபண்ணுகிறது. அண்ணனை வெறுக்கத் தொடங்குகிறான்.

ஒரு நாள், ஒரு இந்து முஸ்லிம் கலவரத்தின் போது (1983), சில முஸ்லிம்கள், ஹிந்துக்களைத் தாக்கி, அனைவரையும் கொல்ல வேண்டும் என்று பேசிக்கொள்வதைக் கேட்கும் ரிஸ்வான், அதை அப்படியே தனது தாயாரிடமும் சொல்கிறான். உடனே, ஒரு குறிப்பேட்டில் இரு மனிதர்களின் படங்களை அவனது தாய் வரைகிறாள். அதில் ஒரு மனிதனின் கையில் கம்பு இருக்கிறது. இன்னொருவனின் கையில் இனிப்பு. இதை ரிஸ்வானிடம் காட்டும் அவனது அம்மா, இதில் ஹிந்து யார், முஸ்லிம் யார் என்று கேட்கிறாள். ரிஸ்வானுக்கு இரண்டுமே ஒன்றாகவே தெரிகிறது. அப்போது, கெட்ட செயல்களைச் செய்கிறவன் கெட்டவன் – நல்ல செயல்களைச் செய்பவன் நல்லவன் என்று அவள் விளக்குகிறாள். உலகிலேயே இந்த இரண்டு பிரிவுகள் தான் உள்ளன என்றும் சொல்கிறாள். இது, சிறுவனான ரிஸ்வானின் உள்ளத்தில் நன்றாகத் தைக்கிறது.

ரிஸ்வான் பெரியவனாகிறான். ரிஸ்வானின் மேல் உள்ள கோபத்தால், தம்பி ஸாகிர், அமெரிக்கா சென்று விடுகிறான் – ஒரு ஸ்காலர்ஷிப்பின் மூலம். அவனது தாய், மரணமடைகிறாள். ரிஸ்வானை ஸாகிர், சான்ஃப்ரான்சிஸ்கோ அழைத்துக் கொள்கிறான்.

சான்ஃப்ரான்சிஸ்கோவில், அழகுப் பொருட்கள் விற்கும் ஒரு சேல்ஸ்மேனாக ஸாகிரின் அலுவலகத்திலேயே வேலை செய்கிறான் ரிஸ்வான். ஒருநாள், மந்திராவைச் சந்திக்கிறான். ஒரு விபத்தில் இருந்து அவனை மந்திரா காப்பாற்றுகிறாள். துணைக்குத் தனது தாய் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் ரிஸ்வான், மந்திராவின் அந்தக் கண நேர அன்பில், தனது தாயைப் பார்க்கிறான். அவள் ஒரு ஸலோனில் வேலை செய்கிறாள். எனவே, தினமும் அங்கு சென்று அழகுப் பொருட்களை விற்கத் தொடங்குகிறான். மந்திராவிடமும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படிக் கேட்கிறான்.

கொடுமைக்காரக் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று, தனது குட்டிப்பையன் ஸாமுடன் வாழ்ந்து வரும் மந்திராவைப் பற்றி, ரிஸ்வான் அறிந்து கொள்கிறான். மெதுவே இருவருக்கும் நட்பு துளிர்க்கிறது. இதன் விளைவாக, திருமணமும் நடக்கிறது. வழக்கப்படி, தம்பி ஸாகிரின் எதிப்பை மீறித் திருமணம் நடக்கிறது.

இதன் விளைவாக, மந்திராவின் பெயரும், மந்திரா கான் என்று மாறுகிறது. அவர்களது பக்கத்து வீட்டுக்கார ரிப்போர்ட்டர் மார்க், ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்று, இறக்கிறார். அதே சமயத்தில், 9/11 ட்வின் டவர் இடிப்பால் ஏற்படும் கலவரம், அமெரிக்காவை ஒரு முஸ்லிம் எதிர்ப்பு நாடாக மாற்றுகிறது. இதன் விளைவாக, மந்திராவின் மகன் ஸாம், ஒரு சண்டையில் இறந்து விடுகிறான். மகனை இழந்த சோகத்தில், மந்திரா, மகனின் பெயரில் வந்து ஒட்டிக்கொண்ட ‘கான்’ என்ற பெயரால் தான் இந்த மரணம் நிகழ்ந்தது என்றும், ரிஸ்வானின் முகத்தில் கூட விழிக்கத் தான் விரும்பவில்லை என்றும் கதறுகிறாள். அலறலின் உச்சத்தில், அமெரிக்க அதிபரிடம் போய், தான் ஒரு தீவிரவாதி இல்லை என்று சொல்லி, அவரது நன்மதிப்பைப் பெற்று வரும்படி சொல்கிறாள். ரிஸ்வான், வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

அவனது மனத்தில், மந்திராவின் அன்பே நிறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் போன்ற ரிஸ்வான், மந்திரா சொன்னபடியே அமெரிக்க அதிபரைச் சந்திக்க முயன்றுகொண்டே இருக்கிறான்.

அது நிறைவேறியதா என்பது தான் மீதிப்படம்.

இப்படத்தின் முதல் ஆச்சரியம், இதன் இயக்குநர் கரண் ஜோஹரிடமிருந்து இப்படி ஒரு படம் வந்திருப்பது தான். குச் குச் ஹோதா ஹை, கபி குஷி கபி கம் ஆகிய மெலோட்ராமாக்களை இயக்கிய கரண் ஜோஹர், கபி அல்விதா நா கெஹ்னா என்ற ஒரு (சற்றே) வித்யாசமான ஒரு படத்தைக் கடைசியாக இயக்கியிருந்தார். அல்விதா நா கெஹ்னா எனக்குப் பிடித்தது. கிட்டத்தட்ட ப்ரிட்ஜஸ் ஆஃப் மேடிசன் கௌண்டியின் தீமில் இருக்கும். அதற்க்கடுத்த படம் இதுவாக இருந்தது தான் ஆச்சரியம்.

இரண்டாவது ஆச்சரியம், ஷாரூக் கான். நல்லதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார். படம் முழுவதும் ஒரு குழந்தையைப் போல் நடிப்பது சாதாரணம் அல்ல. நான் சில டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ளவர்களுடன் பழகியிருக்கிறேன். அச்சு அசல் அவர்களின் பழக்கவழக்கங்களை அப்படியே திரையில் காண்பதைப் போலவே இருந்தது. அசத்திவிட்டார் ஷாரூக்.

மூன்றாவது ஆச்சரியம், இப்படிப்பட்ட ஒரு மிகவும் சென்சிடிவ் தீமை எடுத்துக் கொண்டது. கரணின் இதற்கு முந்தைய படமான அல்விதாவிலும் இதைப் போன்றே ஒரு சென்சிடிவ் தீம் இருந்தது.கரண் ஒரு இயக்குநராக வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது.

இப்படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தன. ’தேரே நைனா’, ‘சஜ்தா’, ’ நூர் இ ஹுதா’ போன்ற பாடல்கள் அருமை. அதிலும், சஜ்தா. ரிஸ்வானின் திருமணம் நிகழும் நேரத்தில் தொடங்கும் இப்பாடல், அவனது குடும்ப வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நமக்குச் சொல்கிறது. இப்பாடலை நீங்கள் யூ ட்யூப்பில் காணலாம்.

இப்படத்தின் சில காட்சிகள், உள்ளத்தைத் தொடும் வகையில் அமைந்திருக்கின்றன . குறிப்பாக, ரிஸ்வான் தனியாக சான்ஃப்ரான்சிஸ்கோவில் பேருந்தில் செல்லும் காட்சி, அவன் ஒரு மசூதியில் தொழும்போது, அங்குள்ள சிலர், குரானின் ஒரு கதையை மாற்றி, குரானில் வன்முறை சொல்லப்பட்டிருக்கின்றது என்று சொல்லி, அங்குள்ள மற்ற முஸ்லிம்களை மனம் மாற வைக்கும்போது, அந்தக் கதையின் உண்மையான வடிவத்தைச் சொல்லும் ரிஸ்வான், அந்த ஆளைக் கல்லால் அடிக்கிறான் – அவனைச் சைத்தான் என்று சொல்லி. இக்காட்சி, ரிஸ்வான், மாமா ஜெனி என்ற ஒரு கறுப்பினப் பெண்ணிடமும் அவளது மகனிடமும் கழிக்கும் சில நிமிடங்கள்,
தனது கதையை ரிஸ்வான் ஒரு சர்ச்சில் குழுமியிருக்கும் மக்களிடம் சொல்லும் காட்சி ஆகியன, நல்ல முறையில் எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், நான் கண்ட ஒரு குறை – இப்படத்தை ஒரு உலகத்தரமான படம் என்று அத்தனை மீடியாவும் சொல்லும்போதும் – இன்னமும் இப்படம் கொஞ்சம் நல்ல முறையில் செதுக்கப்பட்டிருந்தால், உண்மையான ஒரு உலகப் படமாக இருந்திருக்கும் என்பது தான். சில காட்சிகள் சற்றே சாதாரணமாக இருப்பதையும் நாம் கவனிக்கத் தான் வேண்டும்.

இப்படம் முழுவதும் நமது மனதைத் தொடும் ஒரு விஷயம் – கதை முழுக்க ரிஸ்வானாலேயே சொல்லப்படுவதே. அவனது அப்பாவித்தனமான புரிதலில், சக மனிதர்களின் தோழமையின்மையை அவன் எந்தக் கோபமும் இல்லாமல், மிகச் சாதாரணமாக சொல்லும்போது, நம்மால் யோசிக்காமல் இருக்க இயலாது. அவன் பின்னணியில் சொல்வது அத்தனையும், மந்திராவை முன்னிறுத்தியே உள்ளது. அவன் சிறையில் அனுபவித்த சித்ரவதைகளை மந்திராவிடம் சொல்வது போலவே சொல்லிக்கொண்டு செல்கிறான். மனதைத் தொடும் ஒரு வசனம் அது.

மொத்தத்தில், ‘மை நேம் ஈஸ் கான்’ ஒரு நல்ல படம். மிகச்சில காட்சிகளில், உலகப்படங்களின் எல்லையைத் தொட்டுச் செல்கிறது. துணிச்சலாக இப்படி ஒரு படத்தை எடுத்த கரண் ஜோஹருக்கு நமது வாழ்த்துகள்.

  Comments

19 Comments

  1. கருந்தேளாரே,

    மீ தா பர்ஸ்ட்.

    Reply
  2. சமீப காலங்களில் எந்த ஒரு வசனமும் இந்த வசனத்தை அளவிற்கு பாதிக்கவில்லை: My name is khan & am not a terrorist.

    Reply
  3. சும்மா ஒரு காமெடிக்கு நண்பர் கூறியதை சொல்கிறேன்: இளைய தளபதி விசை நடிப்பில் அவரின் தந்தை சன்றசெகராவின் இயக்கத்தில் இந்த படம் வந்தால்,,,,,,,

    தலைப்பு: என் பெயர் விஜய்.

    மெய்ன் வசனம்: அண்ணா, என்னோட பேரு விஜய்ங்கண்ணா. நான் சாதா ஆளுங்கன்னா. தீவிரவாதி எல்லாம் இல்லீங்கண்ணா.

    இதற்க்கு மேல் கற்பனை உங்களிம் விட்டு விடுகிறேன்.

    Reply
  4. ஹா ஹா ஹா . . . என் பெயர் விஜய் . . நினைத்துப் பார்க்கவே பயங்கர காமெடியாக உள்ளதே . . அப்படி ஒரு படம் வெளிவந்தால், நம்ம தமிழ்ப்படத்தை விடவும் பிய்த்துக் கொண்டு ஓடும் என்பதில் சந்தேகமில்லை . . 🙂 (சுறா வந்தப்பறம் தான் அவர ஓட்ட ஆரம்பிப்பாங்கன்னு நெனைச்சேன் . .ஆனா இப்பவே ஆரம்பிச்சாச்சு . . ஹீ ஹீ) . . .

    Reply
  5. கொஞ்சம் சிக்கலான விஷயத்ததான் தொட்டுருக்காரு டைரக்டர்…

    Reply
  6. கமெண்ட்டுக திடீர்ன்னு அப்ஸ்கான்ட் ஆக ஆரம்பிச்சிட்டு . . நான் விஸ்வாக்குப் போட்ட கமெண்டும் , நம்ம அண்ணாமலையான் போட்ட கமெண்ட்டும் மறைஞ்ஜிருச்சு . .இதோ அவை:

    கருந்தேள் கண்ணாயிரம் – ஹா ஹா ஹா . . . என் பெயர் விஜய் . . நினைத்துப் பார்க்கவே பயங்கர காமெடியாக உள்ளதே . . அப்படி ஒரு படம் வெளிவந்தால், நம்ம தமிழ்ப்படத்தை விடவும் பிய்த்துக் கொண்டு ஓடும் என்பதில் சந்தேகமில்லை . . 🙂 (சுறா வந்தப்பறம் தான் அவர ஓட்ட ஆரம்பிப்பாங்கன்னு நெனைச்சேன் . .ஆனா இப்பவே ஆரம்பிச்சாச்சு . . ஹீ ஹீ) . . .

    அண்ணாமலையான் – கொஞ்சம் சிக்கலான விஷயத்ததான் தொட்டுருக்காரு டைரக்டர்…

    Reply
  7. விமர்சனம் நல்லாயிருக்கு. “MY NAME IS KHAN & I’M NOT A TERRORIST”
    இதனைப் படிக்கும் பொழுது மனச என்னமோ பன்னுது.

    Reply
  8. நல்லா எழுதியிருக்கிங்க..அழகான வார்த்தை அமைப்புகளோடு..
    நன்றாக ரசித்து உணர்ந்து பார்பவர்களால் தான் இப்படி எழுதமுடியும் என்று நினைக்கிறேன்.

    Reply
  9. நண்பரே,

    மனதைத் தொடும் விமர்சனம். தாடியைக் கண்டாலே ரயிலினுள் உள்ள பொதுமக்கள் பார்வையில் ஒர் சந்தேகம் வந்தேறும்படி ஊடகங்கள் அவர்களை மாற்றியமைத்து விட்டிருக்கின்றன. வேதனையான உண்மை.

    Reply
  10. //மொத்தத்தில், ‘மை நேம் ஈஸ் கான்’ ஒரு நல்ல படம். மிகச்சில காட்சிகளில், உலகப்படங்களின் எல்லையைத் தொட்டுச் செல்கிறது. துணிச்சலாக இப்படி ஒரு படத்தை எடுத்த கரண் ஜோஹருக்கு நமது வாழ்த்துகள்.//
    இந்த மனசுக்காகவே உங்கள வாழத்தலாம் பாஸ்.

    Reply
  11. இது போல சிரமங்களை நானும் நிறைய அனுபவித்திருக்கிறேன். சிலர் செய்யும் தவறுகளை வைத்து மொத்த இனத்தையும் அடையாளப்படுத்தி பேசும்போது மனம் படும் வேதனை சொல்ல முடியாது. நல்ல விமர்சனம். நன்றி!!

    Reply
  12. @ விண்மீன் – ஆமாம். . அந்த டயலாக்க ஷாரூக் சொல்லும்போது, மனசப் புழியும். . அடிக்கடி வாங்க . .

    @ ராமசாமி – படிச்சேன் . . பட் தப்பா எடுத்துக்காதீங்க பாஸு . .எனக்கு அது காமெடியா தெரியல. . மே பீ எனக்கு நகைச்சுவை உணர்வு கம்மியோ என்னமோ . .

    @ வினோத் கௌதம் – ரசிச்சி தான் பார்த்தேன் . .சில காட்சிகள் மனசில தைச்சது . .அதான் காரணம்னு நினைக்கிறேன் . . நன்றி ..

    @ காதலரே – பாயிண்டைப் பிடித்தீர்கள் . .ஊடகங்கள் செய்யும் தொல்லை கொஞ்சநஞ்சமில்லை . . மக்களை நன்றாகப் பயமுறுத்திவிட்டிருக்கிறார்கள் . .இது என்று மாறுமோ தெரியவில்லை நண்பரே . . மிகவும் வருத்தமாக உள்ளது . .

    @ மயில் – நீங்க பாருங்க . . நீங்களும் வாழ்த்துவீங்க . . நல்ல படம் . .

    @ மைதீன் – புரிகிறது நண்பா . . சீக்கிரம் காலம் மாறும் . .கவலை வேண்டாம் . . அடிக்கடி வாருங்கள் . .

    Reply
  13. @ கார்த்திகேயன் – உங்களுக்குப் புடிக்கும் . .ஆனா சில காட்சிகள் மட்டும் கொஞ்சம் சாதாரணமா இருக்கும் . .பார்த்துட்டு சொல்லுங்க நண்பா . .

    @ இல்ல்யூமினாட்டி – பார்த்துருவோம் . .:-)

    Reply
  14. mama said எனும் forrest gumpஐ ஒத்து இருப்பதாக ஒரு டாக்?

    Reply
  15. ஹிந்தி மொழி திரைப்படம் அவ்வளவா பாக்கறது இல்ல. காரணம் மொழி புரியாததுனால. இந்த படம் subtitle லோட பார்த்தேன். தரம் மிகுந்த காட்சிகள் இருந்தாலும் படம் grip இல்லாமலே போகுது.

    Reply

Join the conversation