Mysskin & His Films – a Critique

by Karundhel Rajesh May 15, 2017   Cinema articles

இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையின் ‘பிரதிபிம்பம்’ பக்கத்தில் மிஷ்கினைப் பற்றி விரிவாக எழுதிய இரண்டு பாகக் கட்டுரையின் முழு வடிவம் இங்கே. நான் ஏற்கெனவே எழுதிய கட்டுரைகளில் புதிய விஷயங்கள் பலவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கொடுத்திருக்கிறேன்.


மிஷ்கினைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர் ‘Auteur‘ என்ற பதத்தைப் பற்றிப் பார்த்தே ஆகவேண்டும். உடனேயே படிப்பவர்கள் தெறித்து ஓடாமல் மேலும் கவனித்தால் தமிழில் உலக சினிமாக்கள் வளர்வதற்குத் தேவையானவை பற்றிப் படிக்கலாம். இல்லை – கமர்ஷியல் மசாலாக்கள் மட்டும்தான் தேவை என்பவர்கள் நேரடியாக இந்தக் கட்டுரையின் கீழ்பாதிக்குப் போய்விடலாம்.

‘Auteur’ என்பதை ‘ஆட்டெர்’ என்றும் ’ஓத்தர்’(ஃப்ரெஞ்ச்) என்றும் சொல்லலாம். ஒரு எழுத்தாளர் ஒரு நாவலை எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது நடையையும் அவரது சமூக நோக்கத்தையும் அவரது பல படைப்புகளிலும் தனியாகக் கண்டுபிடித்துவிடமுடியும். தனது படைப்புகளின் வழியே தான் எப்படி தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைக் கவனிக்கிறோம் என்பதைப் பதிப்பகங்கள், பக்கங்கள், விலைகள் போன்றவைகளிலெல்லாம் கவனம் செலுத்தாமல்/பாதிக்கப்படாமல் முத்திரை போலப் பதிப்பவரே ஆட்டெர். அவர் படங்களிலோ அல்லது எழுத்துகளிலோ ஒரே ஒரு பக்கம்/ஒரு காட்சியைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் இன்னார் என்பதை விளக்கமாகச் சொல்லிவிட முடியும். அந்த வகையில் டாரண்டினோ, ரித்விக் கடக், சத்யஜித் ரே, ஹிட்ச்காக், ஸான் ரென்வா (Jean Renoir), ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (Francois Truffaut), லார்ஸ் வான் ட்ரையர், ஃபெலினி, டேவிட் லின்ச், ஆந்த்தோனியோனி, கிம் கி டுக், கிம் ஜீ வூன், போங் ஜூன் ஹோ, தகாஷி கிடானோ போன்று பலரும் ஆட்டெர்கள்தான். இவர்களது படங்களில் எந்தக் காட்சியைப் பார்த்தாலும் அது இவர்கள் இயக்கியது என்பதைச் சொல்லிவிடமுடியும். இதில் ஒரு பாடபேதம் என்னவென்றால், ஆட்டெர்கள் இயக்குவது மட்டுமல்லாமல் படத்தை எழுதுவதும் முக்கியம் என்றும் ஒரு பள்ளி இருக்கிறது. த்ரூஃபோதான் இந்தப் பள்ளியின் நிறுவனர். இதைப்பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் முடிந்தால் தனியாக விரிவாகப் பார்ப்போம். இப்போது ஆட்டெர் என்றால் என்ன என்பதே முக்கியம். ஆட்டெர் பற்றி என்ன என்று தெரிய மேலே கொடுக்கப்பட்டுள்ளவர்களின் படங்களைப் பார்த்திருப்பதும், த்ரூஃபோ போன்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதைத் தெரிந்திருப்பதும் அவசியம்.

அடுத்ததாக, தமிழில் உலகப்படங்கள் இல்லை என்று பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏன் என்று கவனித்தால், கமர்ஷியல் படங்களே இங்கே முக்கியம். பணம் சம்பாதிப்பது ஒன்றே லட்சியம். அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழில் உலகப்படங்கள் வர வாய்ப்பே இல்லை. கூடவே, எந்த இயக்குநருக்கும் தனிப்பட்ட சமூகப் பார்வை அவசியம். சமூகப்பார்வை உலகப்படங்கள் பார்த்தால் மட்டும் வந்துவிடாது. இலக்கியங்கள் படிக்கவேண்டும். காமன் சென்ஸ் வேண்டும். உலகின் burning issues பற்றியும், அதனால் பாதிக்கப்படும்/கொத்துக்கொத்தாக செத்துவிழும் மனிதர்கள் பற்றியும் empathy வேண்டும். இன்னும் முக்கியமாக, மனிதனை மனிதனாகப் பார்க்கும் பார்வை வேண்டும். இதெல்லாம் ஐரோப்பா, கொரியா போன்ற இடங்களைச் சேர்ந்த இயக்குநர்களுக்கு இயல்பாகவே வருகிறது. எனவே அங்கே ஆட்டெர்கள் அதிகம். அவர்கள் மூலமாக உலகப்படங்களும் அதிகம்.

இனி, தற்காலத் தமிழ்ப்பட சூழலுக்கு வந்தால், இன்றைய தேதியில் ஆட்டெர் என்ற பதத்துக்கு மிஷ்கினே முதல் ஆள். ஆனால் மிஷ்கின் முழுமையான ஆட்டெர் அல்ல. அவர் ஒரு flawed auteur. நல்ல இயக்குநர் என்ற இடத்துக்கு ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறார் என்று அவசியம் சொல்வேன். அப்படிச் சொல்வதற்குப் பிசாசு வரை அவரது பயணமே காரணம். இன்னும் நான்கு படங்கள் போதும்; மிஷ்கின் ஒரு முழுமையான உலக இயக்குநர் ஆகிவிடுவார் என்பது என் கருத்து.

தமிழில் இருக்கும் ஒரு இயக்குநரை உலக இயக்குநர் ஆகப்போகிறார் என்று சொன்னால் உடனே ஒரு கும்பல் எள்ளி நகையாடத் தயாராக இருக்கும். ஏன் அப்படி ஆகக்கூடாது? இந்த ஸ்டேட்மெண்ட்டைப் பார்த்து சிரிப்பதற்கு முன்னர் போய் ஆட்டெர் என்றால் என்ன; உலக சினிமா என்ன சொல்கிறது என்பதையெல்லாம் அனுபவித்துத் தயாராக வந்தால்தான் அவர்கள் முதலில் சிரிக்கவே ஆரம்பிக்கலாம். ஒரு விஷயம் என்னவென்றே தெரியாமல் இருப்பவர்களுடன் பேசவே முடியாது.

மிஷ்கினுக்கு என்று ஒரு பாணி இருக்கிறது. ஒரு படத்தை ஐந்தே நிமிடங்கள் பார்த்தாலும், அது மிஷ்கின் படம் என்பதை மிகத்தெளிவாக சொல்லிவிடலாம். அவர் படங்களின் முதல் ஷாட்கள் பெரும்பாலும் வித்தியாசமான கோணங்களில் இருப்பதை கவனித்திருக்கலாம். ‘அஞ்சாதே’வில் உடற்பயிற்சி செய்யும் அஜ்மலை காண்பித்துவிட்டு அப்படியே கேமரா ந……..கர்ந்து அவரை தாக்க வருபவர்களை காட்டும். ‘யுத்தம் செய்’யில் டாப் ஆங்கிள் ஷாட்டுடன் படம் தொடங்கும். உடனே மழை. ’முகமூடி’யில் இருட்டுக்குள் இருக்கும் கேமரா, மிகத்தொலைவில் இருந்து வரும் லாரியை காட்டும். அந்த ஷாட், இருளும் ஒளியும் கலந்து, ஒரு Noir ஸ்டைலில் இருக்கும் (Noir = மொத்த படத்திலும் அந்த ஷாட் மட்டும்தான்). அதேபோல ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திலும் முதல் ஷாட் ஒரு டாப் ஆங்கிள் ஷாட்தான்.

மிஷ்கினுக்கு என்றே இன்னும் சில ஷாட்கள் உள்ளன. ஒரு ஷாட்டில் வசனங்களை பேசாமல், கதாபாத்திரங்களின் உடல்மொழியாலேயே நடப்பதைப் புரியவைக்கும் விதமான ஷாட்கள். உதாரணம்: அந்த ஷாட்டுக்குள் இருக்கும் கதாபாத்திரம், தலையை மெதுவாக தொங்கப்போட்டுக்கொள்ளும். அல்லது மெதுவாக தலையை உயர்த்தும். இல்லையேல் வலது, இடது பக்கங்களை இதேபோல் மெதுவாக கவனிக்கும். அந்த ஷாட்டும் அந்த செய்கை முடிந்தபின்னரும் ஓரிரு நொடிகள் அப்படியே கட் ஆகாமல் இருக்கும். இந்த ஷாட்களில் நடிக்கும் நடிகர்கள் சொதப்பினால், அந்த ஷாட் நகைச்சுவை ஷாட் ஆகிவிடும்.

இவையெல்லாம்தான் மிஷ்கினை ஒரு flawed auteur என்று நான் அழைக்கக் காரணங்களாக இருக்கின்றன. ஒருவிதமான திரைமொழியைத் தனது சொந்த முத்திரையாகப் பாவிப்பதே ஒரு ஆட்டெரின் பாணி. ஆனால் அவருக்கு இவையெல்லாம் இயல்பிலேயே வரும். எடுத்துத் திணிப்பதைப்போல் இருக்காது. எனவே திரைப்படத்தின் போக்கை இதுபோன்ற முத்திரைக் காட்சிகள் பாதிக்காது. ஆனால் மிஷ்கினின் படங்களில், அவரது ‘முத்திரைக் காட்சிகள்’ வரும்போதெல்லாம் படத்தில் இருந்து நமது கவனம் சிதறுகிறது. இக்காட்சிகள் எப்படி ஒரேபோன்று இருக்கின்றன என்றெல்லாம் எண்ணம் செல்கிறது. இதனால்தான் மிஷ்கின் ஒரு flawed auteur.

மிஷ்கினின் கடைசிப் படமான ‘பிசாசு’ அவசியம் ஒரு அருமையான படம். இந்தப் படம் ஆரம்பித்த அரைமணி நேரத்துக்குள்ளேயே 3 Iron மற்றும் Bittersweet Life படங்களைப் பார்க்கையில் எப்படிப்பட்ட அனுபவம் கிடைத்ததோ அதன் சில துளிகள் தென்பட ஆரம்பித்தன. முழுமையாக அல்ல; அதனால்தான் மிஷ்கினை flawed auteur என்று சொன்னேன். இன்னும் அவர் ஒரு முழுமையான இயக்குநர் ஆகவில்லை. அதற்கு இன்னும் சில படங்கள் பிடிக்கும். ஆனால் அந்தப் பயணத்தில் குறிப்பிடத்தக்க தூரம் சென்றுவிட்டார் என்றுதான் சொல்வேன் (முழுமையான இயக்குநர் என்றால் தமிழில் இல்லை. உலகின் எந்த நாட்டிலும் எவரது படங்களை மொழி வித்தியாசம் இல்லாமல் ரசிக்கிறார்களோ அவரே முழுமையான இயக்குநர்). ‘பிசாசு’ ஒரு பேய்ப்படம் அல்ல. உணர்வுரீதியில் அமைந்த ஒரு நல்ல படம். நம்மூரில் பேய் என்றாலே சில க்ளிஷேக்கள் உள்ளன. பேய் ஏன் அதற்கு நேர் எதிராக இருக்கக்கூடாது? பேய் என்றால் கொடூரமாகத்தான் இருக்கவேண்டுமா? 3 Iron படத்தில் கதாநாயகி ஸுன் – ஹ்வா எப்படி நாயகன் டே-சுக்கின் பின்னாலேயே சென்றுவிடுகிறாள்? இத்தனைக்கும் டே-சுக் அவள் வீடுபுகுந்து அங்கே வாழ வந்திருப்பவன். ஆனால் ஒரு பேச்சு கூட பேசாமல் அவனுடனேயே அவள் சென்றுவிடுகிறாள் என்பதைப் படம் பார்க்கையில் கவனிக்கலாம். அதில் வசனங்கள் மிகக்குறைவு. ஆனாலும் அந்த இரண்டு பாத்திரங்களுக்கும் இடையேயான அன்பும் காதலும் பிணைப்பும் எளிதில் யார் வேண்டுமானாலும் புரிந்துகொண்டுவிடலாம். ஆனால் அதைப் புரிந்துகொள்ளக் குறைந்தபட்சம் கிம் கி டுக் யார் என்றாவது தெரியவேண்டும். அப்படித்தான் பிசாசும். ’இது ஒரு வழக்கமான தமிழ் மசாலா பேய்ப்படம்’ என்று நினைத்துக்கொண்டு பார்த்தால் இந்தப் படம் உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தால் அவசியம் பிடிக்கும்.

இதேபோல்தான் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படமும். உணர்வுபூர்வமான ஒரு நல்ல படம் அது. ஆனால் இப்படத்தில் ஒருசில பிரச்னைகள் உண்டு. கதாபாத்திரங்களின் உடல்மொழி (குறிப்பாகப் படத்தில் வரும் வில்லன். மிகவும் செயற்கை). வில்லன் மட்டும் இல்லாமல், படத்தின் பல நடிகர்களின் உடல்மொழியுமே செயற்கைதான். இதுபோன்று மிஷ்கினின் ஒவ்வொரு படத்திலும் குறிப்பிட்டே சொல்லக்கூடிய அளவு செயற்கை ஷாட்கள் இருக்கும். எனவேதான் மிஷ்கினை flawed auteur என்று குறிப்பிட்டேன்.

அதுவே மிஷ்கினின் ‘யுத்தம் செய்’, மிகத் தரமான திரைப்படம். வாயுரிஸம் என்று சொல்லப்படும், பிற மனிதர்கள், தனித்தோ அல்லது அவர்களுடைய இணையுடனோ இருக்கையில், அவர்களின் தனிப்பட்ட செய்கைகளை மறைந்திருந்து பார்த்து சந்தோஷம் அடையும் செயல் பற்றிய கச்சிதமான படம். இந்த வாயுரிஸத்தைக் கருவாகக் கொண்ட சில முக்கியமான படங்கள் உண்டு. ஒரு சிறந்த உதாரணமாக, 8mm படத்தைச் சொல்லலாம். Snuff படங்கள் எடுக்கும் ஒரு கும்பலையும், அந்தக் கும்பலை வளைத்துப் பிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியையும் பற்றிய படமான இதில், அந்த அதிகாரிக்கு ஒரு ஸ்னஃப் படத்தைக் கொடுத்துத் துப்பறியச் சொல்வதே, ஒரு இறந்துபோன செல்வந்தரின் வயதான மனைவி. அவரது அலமாரியில் இந்த ஸ்னஃப் படம் அகப்படுகிறது (ஸ்னஃப் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு – ஸ்னஃப் படங்களில், சம்மந்தப்பட்ட பெண்களைப் படத்தின் இறுதியில் சித்ரவதை செய்து கொல்லும் காட்சிகளும் இருக்கும்). ஜோயல் ஷூமேக்கரின் இயக்கத்தில், நிகலஸ் கேஜ் நடித்த இப்படம், பார்ப்பவர்களின் மனதை விட்டு அகலாது. இதன் தாக்கம் அப்படிப்பட்டது. அதேபோல், Sex. lies and videotape (1989) படத்தையும் சொல்லமுடியும். ஸ்டீவன் ஸாடர்பர்க்கின் அறிமுகப்படமான இதில், பெண்களுடன் பேசி, அவர்களின் செக்‌ஷுவல் அனுபவங்களையும் ஆசைகளையும் வீடியோவில் பதிவு செய்யும் ஒரு நபரையும், தனது கணவன் மீது உள்ள வெறுப்பினால் (கணவன், இந்தப் பெண்ணின் தங்கையுடன் உறவு கொண்டிருக்கிறான்), அவனுடன் படுத்து, தானும் தன் மனதில் உள்ள எண்ணங்களைப் பதிவு செய்யும் ஒரு பெண்ணையும் பற்றிய படம் இது (எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்று). இன்னமும் பல படங்கள் இருந்தாலும் (Peeping Tom இன்னொரு உதாரணம்), எனக்குப் பிடித்த இரண்டு ஆங்கிலப் படங்கள் இவை.

இப்படிப்பட்ட படங்களின் தரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படமே யுத்தம் செய். படத்தின் மிகப்பெரிய பலம்,  ஜேகே என்ற கதாநாயகனின் கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கும் விதமே. ஜேகே, ஆறுச்சாமி போலவோ, அன்புச்செல்வனைப் போலவோ, அல்லது பல விஜயகாந்த்தின் கதாபாத்திரங்களைப் போலவோ, வலிந்து திணிக்கப்படும் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல. அவன், உங்களைப் போலவும், என்னைப்போலவும், நமது பக்கத்துவீட்டு ராமசாமியைப் போலவும் ஒரு சராசரி மனிதன். அவனுக்கும் பல மனக்குறைகள் உண்டு. அந்த மனக்குறைகளுக்குத் தீர்வு காண முயலும் அதே சமயத்தில், தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட வேலையையும் முடிக்க முயலும் நம்மைப்போன்ற அதே மனிதன் தான் அவன். இது, படத்தின் பெரிய பலமாக அமைந்துவிடுகிறது. அதேபோல், ஜேகே செய்யும் காரியங்களும் ஹீரோத்தனமாக இல்லை. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்கும் வேலையைக் கூட அவன் செய்கிறான். அதேபோல், தனக்குத் தேவையான தகவலைக் கொடுக்க மறுத்து, அவனைச் சரமாரியாகத் திட்டும் பெண்மணியைக் கூட அவனால் எதிர்த்துப் பேச முடிவதில்லை. உடன்வரும் கான்ஸ்டபிள், முன்வந்து திட்டும்வரை, அவன் தலைகுனிந்தே நின்றிருக்கிறான் (’அடி செருப்பால’ என்று அந்தக் கான்ஸ்டபிள் திட்டத் தொடங்கும் காட்சி, படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகளில் ஒன்று).

அதுவே, யுத்தம் செய்யின் பலவீனம், மிஷ்கின் என்றே சொல்லமுடியும். மிஷ்கின், தனது உலக சினிமா அறிவையும், தனது ஆங்கிலப் புத்தக அறிவையும் இப்படத்தில் திணிக்கிறார். அந்த வசனங்களும் தேவையே இல்லாதவை (படத்தில், சேரனின் கதாபாத்திரம், ரஷோமான் திரைப்படத்தை refer செய்து பேசும் வசனத்தையும், இறுதியில், ஆங்கிலப் புத்தகம் ஒன்றின் க்ளோஸப்போடு தொடங்கும் காட்சியையும் பற்றித்தான் சொல்கிறேன்). மிகவும் செயற்கையாக, படத்தின் flowவிலிருந்து தனித்துத் துருத்திக்கொண்டு இந்த வசனங்கள் தெரிந்தன. இது மிஷ்கினின் பல படங்களில் வருவதை நான் கவனித்திருக்கிறேன். அதேபோல், அஞ்சாதே படத்தை நினைவுபடுத்திய ஒரு காட்சி, இப்படத்தில் உண்டு. பாலத்தின் மேல், சேரன் அடியாட்களுடன் இடும் சண்டைக்காட்சி. அஞ்சாதே படத்தில், மருத்துவமனையில், நரேனிடம் ஒவ்வொருவராக வந்து, சரமாரியாக அடிவாங்கிக்கொண்டு, பின்னர் மீண்டும் போய், வரிசையில் நின்றுகொள்ளும் இளிச்சவாய் முகமூடி ஆட்களை நினைவிருக்கிறதா? அதேபோல், இதிலும் வரிசைகட்டி வந்து சேரனிடம் குத்து வாங்கும் அடியாட்கள் உண்டு. ஒவ்வொரு படத்திலும் மிஷ்கின் ஒரேபோன்று சில காட்சிகள் அமைப்பதற்கு இது ஒரு உதாரணம். ஆனாலும், இந்த பலவீனங்களையெல்லாம் மறந்துவிட்டுப் பார்க்கும்படியான மிகத்தரமான படம் ‘யுத்தம் செய்’.

மிஷ்கினின் ‘நந்தலாலா’, அவசியம் நல்ல அனுபவத்தைத் தரும் படமே. ஆனால் என்ன பிரச்னை என்றால், ‘கிகுஜிரோ’ படத்தை அப்படியே தழுவி எடுக்கப்பட்ட படம். அதுதான் அப்படத்தை ரசிப்பதில் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. சில காட்சிகள், தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணம், பாட்டியுடன் அகி கழிக்கும் அந்த ஆரம்ப நிமிடங்கள், அகியின் பணத்தைத் திருடும் திருடன் (கிகுஜிரோவில், சிறுவனிடம் பாலியல் பலாத்காரம் செய்யும் பாத்திரம் வரும்), அகியின் தாயாரை பாஸ்கர் மணி சந்திக்கும் காட்சிகள், தனது தாயாரை பாஸ்கர்மணி சந்திக்கும் காட்சி, நரிப்பல் காட்சி (இது கிகுஜிரோவில், ஏஞ்சல் பெல்லாக வருகிறது), லாரி டிரைவரிடம் ஹார்ன் திருடும் காட்சி (கிகுஜிரோவில், கல்லால் லாரிக்கண்ணாடியை உடைப்பான் கிகுஜிரோ), பாஸ்கர் மணியின் பெயர் நமக்கு முதன்முதலில் அறிமுகமாகும் இறுதி நிமிடங்கள் (கிகுஜிரோவிலும், அவனது பெயர், இறுதிக்காட்சியில் தான் நமக்குத் தெரியவரும்) ஆகிய சில உதாரணங்களைச் சொல்லலாம். பார்த்த உடனே கிகுஜிரோவில் இருந்து அப்படியே எடுத்துவைத்திருக்கும் காட்சிகள் புரிந்துவிடுவதால் அலுப்பே மேலிடுகிறது.

திருடப்படாத, மிஷ்கினே சொந்தமாக வைத்துள்ள காட்சிகளே அருமையாக இருக்கையில், அவர் ஏன் இப்படிச் சுட வேண்டும்? சுடாமலேயே நல்ல படம் ஒன்றை நமக்குத் தந்திருக்க முடியும் இல்லையா?

அதேபோல், கிகுஜிரோவில் இருந்த தெளிந்த நீர் போன்ற அமைதியும் அறியாமையும் (innocence) நந்தலாலாவில் இல்லை. உதாரணம்: கிகுஜிரோவின் தாயாரை, மனநோய் விடுதியில் சென்று சந்திக்கும் காட்சி. ஒரே ஒரு நிமிடம் மட்டுமே அக்காட்சி படத்தில் இருக்கிறது. தாயாரைத் தூரத்தில் இருந்து பார்க்கும் கிகுஜிரோ, உடனேயே வெளியே வந்துவிடுகிறான். ஆர்ப்பாட்டமே இல்லாமல் – ஆனால் அதே சமயம் நமது நெஞ்சைத் தொடும் காட்சி இது. நந்தலாலாவிலோ, அழுது ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் ,இக்காட்சியின் ‘தமிழ்ப்படுத்தப்பட்ட’ வடிவம் நமக்குக் கிடைக்கிறது. ஒருவேளை ஒரு ஒரிஜினல் காட்சியாக இருக்கும்பட்சத்தில், நமக்கு இது பிடிக்கக்கூடும். ஆனால், கிகுஜிரோ ஏற்கெனவே நம் கண்ணுக்குத் தெரிவதால், இக்காட்சி படத்தில் சரியாக அமையவில்லை என்று தெரிகிறது.

கிகுஜிரோவில், தாயை வைத்துக்கொண்டு கிகுஜிரோ அல்லல்படுவதில்லை. தன்னுடன் வந்திருக்கும் சிறுவனை எப்படி சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்பதிலேயே அவனது சிந்தனை செல்கிறது. அது, படத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் தருகிறது. ஏனெனில், இப்படம், கிகுஜிரோவின் தாயைப் பற்றிய படமே அல்ல. இது முழுக்க முழுக்க அந்தச் சிறுவனின் உள்ளத்தில் நிகழும் மாற்றங்களையும் அவனது மென்சோகத்தையும் நமக்கு உணர்த்தும் படம். இவை நிகழ்வதாலேயே, அந்தச் சிறுவனும் தனது நிலையில்தான் இருக்கிறான் என்ற உணர்ச்சி, கிகுஜிரோவின் உள்ளத்தில் ஆணியடித்ததைப் போல் பதிந்துவிடுகிறது. இதுதான் அவன் அந்தச் சிறுவனைப் புரிந்துகொள்வதற்கும் முதல்படியாக இருக்கிறது. ஆனால் நந்தலாலா, பாஸ்கர்மணியின் தாயாரை மையப்படுத்தியே இரண்டாம் பாதியில் செல்வதால், கதை சற்றே தனது நேர்க்கோட்டில் இருந்து பிறழ்ந்துவிடுகிறது. நந்தலாலாவில், ‘ஓ.. நீயும் என்னப்போலதான் அம்மாவைத் தேடிப்போறியா’ என்று பாஸ்கர்மணி வெளிப்படையாகக் கேட்டு, இருவருக்கும் உள்ள ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டியிருக்கிறது. இப்படி இருக்கவேண்டும் என்பதற்காகவே, பாஸ்கர் மணியும் தனது தாயாரைத் தேடிப் பயணிப்பது போன்ற ஒரு ஜோடனையை மிஷ்கின் செய்யவேண்டியிருந்திருக்கிறது. இது, கதையின் போக்கைச் சற்றே அசைத்துப்பார்க்கிறது.

இவையெல்லாம்தான் நந்தலாலாவின் பிரச்னைகள். ஒருவேளை கிகுஜிரோ பார்க்காமல் நந்தலாலா பார்த்தால் படம் பிடிக்கக்கூடும். ஆனால் அதற்காக, கிகுஜிரோவில் இருந்து வெட்டிவைக்கப்பட்ட காட்சிகளை எப்படி மன்னிக்க முடியும்?

ஒருவேளை, கிகுஜிரோவின் இரண்டாம் பாதியைப் போல் நந்தலாலாவை எடுத்திருந்தால், மக்கள் அலுப்படைந்துவிடுவார்களோ என்பதுகூட மிஷ்கினின் கவலையாக இருந்திருக்கலாம். இதுதான் மூலப்படத்தில் இருந்து சுடும்போது நேரும் அவலம். சொந்தமாகப் படமெடுப்பதன் மூலம், இதுபோன்ற சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன.

மிஷ்கினின் ‘அஞ்சாதே’ பற்றி யோசித்துப் பார்த்தால், தமிழின் மிகத்தரமான  ஆக்‌ஷன் த்ரில்லர்களில் அஞ்சாதே முதலிடத்தை வகிக்கக்கூடும் என்று தோன்றுகிறது. காரணம், அஞ்சாதேவில் உணர்வுகள் கலந்த காட்சிகள் மிக அதிகம். இக்காட்சிகளின் வழியாகவே கதை சொல்லப்படுவதால், படம் முழுக்கவும் கதாபாத்திரங்களுடன் ஒன்றிவிடுகிறோம். அதேசமயம் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படும் கதை எத்தகையது? படம் பார்க்கும் ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமரவைக்கும் தன்மையுடைய கதை இது. அதுதான் அஞ்சாதேவின் பலம். இப்படத்தின்மூலம் மிஷ்கின் விஸ்வரூபம் எடுத்தார். மிஷ்கினின் முழுமையான படம் என்று அஞ்சாதேவைக் கட்டாயம் சொல்ல இயலும்.

மிஷ்கினின் இசை பற்றி யோசித்தால், அரோல் கொரேலியாகட்டும் (பிசாசு); இளையராஜாவாகட்டும் (நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்); சுந்தர் சி பாபுவாகட்டும் (அஞ்சாதே); கேவாகட்டும் (யுத்தம் செய்); இந்த எல்லாப் படங்களையும் கவனித்தால், இசையை மட்டும் ஒலிக்க வைத்தாலே அது மிஷ்கின் படம் என்று யாராலும் உடனேயே சொல்லிவிடமுடியும். அதுதான் ஒரு ஆட்டெரின் அடையாளம். யாராக இருந்தாலும் அங்கே அந்த இயக்குநரின் கையில் இருக்கும் ஒரு பேனாதான். அந்தப் பேனாவை வைத்துக்கொண்டு அந்த இயக்குநர் எழுதுவதுதான் எழுத்து. அப்படித்தான் மிஷ்கினின் எல்லாப் படங்களின் இசையுமே. அவசியம் தனது படங்களின் இசையிலும் மிஷ்கின் முத்திரை பதிக்கத் துவங்கியுள்ளார். ஆனாலும் அதில் குறைகள் இல்லாமல் இல்லை. உதாரணமாக, பிசாசு படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் லிஃப்ட் சீக்வென்ஸில் இசை மிகவும் அதிகம். அதேபோல் வசனங்களிலும் காட்சிகளிலும் என்ன சொல்லப்படுகிறதோ அதை இசையும் தனியாக சொல்லப்பார்க்கிறது. அது கூறியது கூறல். ஒரே விஷயத்தை இருமுறை சொல்வது. அது நன்றாகத் தெரியவும் செய்கிறது. அடுத்த சில படங்களில் இது அவசியம் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைவிடவும் பிசாசு படத்தில் இசை நன்றாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதால் சொல்கிறேன்.

சித்திரம் பேசுதடி ஒரு சராசரிப் படமே. அதன்பின் வந்த அஞ்சாதே ஒரு தரமான ஆக்‌ஷன் படம். அதில் உணர்வுகளும் சமபங்கு வகித்தன. யுத்தம் செய் படத்தில் ஆக்‌ஷனை விட உணர்வுகள் மிக அதிகமாக இருந்தன. இருந்தாலும் அது மக்களுக்குப் பிடித்தது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் முற்றிலும் உணர்வுரீதியான படம். பிசாசும் அப்படியே. ஆனால் இதில் உணர்வுகள் சொல்லப்பட்டிருக்கும் விதம் மிஷ்கினின் மனதின் அடியாழத்திலிருந்தே வருகிறது. அதுதான் ஒரு ஆட்டெரின் அடையாளம்.

இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவு தருவதன்மூலம் நமக்கு என்ன லாபம் என்றால், நல்ல படங்கள் எப்படி இருக்கும் என்று தமிழிலேயே நமக்குத் தெரிவதுதான். இந்தப் படத்திலேயே அவரது பிரத்யேக உருவாக்கமும் எண்ணங்களும் பிரதிபலிக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் இப்படிப்பட்ட படங்கள் வெற்றியடைந்தால் அவசியம் மிஷ்கின் இன்னும் சிறப்பான, முழுமையான படங்கள் எடுப்பார் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட படங்கள் வந்தால் இந்தியாவின் சார்பிலும் வருங்காலத்தில் தரமான உலகப்படங்கள் எடுக்கப்படும். அவைகளை மிஷ்கினே இன்னும் சில வருடங்களில் எடுக்கக்கூடும். இருந்தாலும், தான் ஒரு ஆட்டெர் என்று ஒருவேளை மிஷ்கின் நினைத்தால் அது அவருக்கு ஆபத்து. அவரை அது இழுத்துக் கீழே தள்ளிவிடும். மாறாக, இயல்பாகவே மிஷ்கின் இருந்துகொண்டிருந்தால் தமிழ் சினிமாவுக்கு அதைவிட நல்லது வேறு எதுவும் இல்லை. தமிழின் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக மிஷ்கின் மாறிப் பல்லாண்டுகள் ஆகின்றன. அவரால்மட்டுமே சிறப்பாக எடுக்கப்படக்கூடிய கருக்களை எளிதில் இனம்கண்டுகொண்டு, தனக்கே உரிய பாணியில் படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார். என்னளவில், உலகத்தின் பல்வேறு பகுதியில் வாழக்கூடிய மக்களும் ரசித்துப் பார்க்கும் அளவு சிறப்பான படங்களைத் தமிழில் இருந்து எடுக்கக்கூடிய ஒரே இயக்குநராக நான் மிஷ்கினையே சொல்வேன். அவருக்கு அந்தத் திறனும், ரசனையும், ஆழமான அனுபவ அறிவும் உண்டு என்றே கருதுகிறேன். அப்படிச் சில படங்களை மிஷ்கின் எடுக்கக்கூடிய காலகட்டம் வந்துவிட்டது என்றும் நினைக்கிறேன். உலகத் திரை அரங்கில் தமிழகத்தை அடையாளம் காட்டக்கூடிய அப்படிப்பட்ட சிறந்த மிஷ்கினின் படங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

Image courtesy – https://silverscreen.in/tamil/features/mysskin-interview-the-lone-wolf/

  Comments

Join the conversation