Nayattu censored with an U/A certificate

Nayattu (2021) – Malayalam

by Karundhel Rajesh May 14, 2021   Cinema articles

நாயாட்டு படத்தில் வைக்கப்பட்ட கருத்துகள் பற்றி விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. படத்தில் தலித்களை வில்லன்களாக சித்தரித்து, அவர்கள் வேண்டுமென்றே எதிர்தரப்பான போலீஸைப் பழிவாங்க நினைத்து, அதை அரசியல் ஆக்கி, இறுதியில் தேர்தலில் மக்கள் மனதை மாற்றக்கூடிய சக்திகளாக ஆக்கப்பட்டு இருப்பதைப் பலரும் விமர்சிப்பதைக் காண முடிகிறது. அப்படி விமர்சிப்பவர்களின் நியாயம் நன்றாகவே புரிகிறது.

காரணம் தமிழில் தலித்களை மலினமாக சித்தரித்தே படங்கள் பெரும்பாலும் வந்துள்ளன. ஹவுசிங் போர்டில் இருக்கும் நபர் கெட்டவன் என்றே வசனங்கள் இடம்பெற்ற படங்களும் உண்டு. குப்பம் என்றால் அடியாள்.

இதைப்பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் பல வருடங்கள் முன்னர் ‘நான் மகான் அல்ல’ படம் பற்றி நான் எழுதியிருந்தபோது, பதிலாக எழுதிய கடிதம் ஒன்றை நீங்கள் இங்கே படிக்கலாம்.

எனவே, நாயாட்டு படத்தை விமர்சிக்கும் தமிழ் நண்பர்களின் கருத்தை நான் முற்றிலும் புரிந்துகொள்கிறேன்.

ஆனால், நாயாட்டு ஒரு தமிழ்ப்படம் அல்ல. அது ஒரு மலையாளப்படம். இப்படி நான் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கொஞ்சம் விரிவாகப் பார்த்தால், தமிழ்ப்படங்கள் போல் மலையாளப்படங்கள், பைனரியாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, இவன் தலித் – எனவே கெட்டவன். இவன் தலித் அல்ல – எனவே நல்லவன் என்று பேசுவதில்லை. மலையாளப் படங்களின் பின்னணியை நாம் ஆராய்ந்தால் இது நன்றாகவே புரியும். சில உதாரணங்கள் பார்க்கலாம்.

முதலில் முகாமுகம் (1984) – அடூர் கோபாலகிருஷ்ணனின் படம். இந்தப் படத்தின் நாயகன் ஒரு கம்யூனிஸ்ட். ஆனால் படம் செல்லச்செல்ல அவன் மாறுவான். அவன் மூலமாகக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது குற்றச்சாட்டை வைக்கிறார் அடூர் என்ற பிரச்னை இப்படத்தின் மூலம் எழுந்தது. மிகுந்த விமர்சனத்துக்குள்ளான படம் இது. கேரளா ஒரு கம்யூனிஸ்ட் பூமி என்பது அனைவருக்குமே தெரியும். அப்படியென்றால் அடூர் எதற்காக கம்யூனிஸ்ட்களின் கொள்கைகளை இப்படத்தில் விமர்சிக்க வேண்டும்?

அடுத்து Left Right Left (2013) – இந்தப் படமும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான விமர்சனமே. குறிப்பாக பினராயி விஜயன் மற்றும் வி.எஸ். அச்சுதானந்தனுக்கிடையான பனிப்போர் பற்றியது. கூடவே, கம்யூனிஸ்ட் கட்சி ஒரு காலத்தில் எப்படி இருந்தது – அதன்பின் படிப்படியாக எப்படி மாறி, பிற கட்சிகள் போலவே எப்படி தொண்டர் படை, வன்முறை ஆகியவற்றில் ஈடுபடுகிறது என்பதைப் பற்றிய படம் இது. இப்படமும் எதிர்ப்பையே சம்பாதித்தது. ஆனால் இதில் இருப்பவை எல்லாம் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. உண்மைச்சம்பவங்களின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்ட படம் இது.

மூன்றாவதாக, உப்பு (1987) – 1987ம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற மலையாளப்படம். இதில் முஸ்லிம்களின் சட்டங்கள் பற்றிய விமர்சனங்களை வைத்தனர் இயக்குநர் வி.கே. பவித்ரனும் திரைக்கதையாசிரியர் கே.எம்.ஏ. ரஹீமும். எப்படி என்றோ எழுதப்பட்ட சட்டங்களை தற்காலத்தில் மனிதர்கள் தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்கின்றனர் என்பதைப் பற்றிய படம். இதுவும் மிகுந்த விமர்சனத்துக்குள்ளானது.
குறிப்பாக முஸ்லிம்கள். ஆனால் இயக்குநர் பவித்ரன், இப்படத்தில் இஸ்லாமை நான் விமர்சிக்கவில்லை. அதன் விதிகளை வைத்துக்கொண்டு எப்படி மனிதர்கள் சுயநலமாக செயல்படுகின்றனர் என்பதையே விமர்சித்தேன் என்று தெளிவாகவே பேசினார்.

இவை மூன்றையும் தவிர, இன்னும் பல படங்கள் இப்படி உள்ளன. தட்டத்தின் மறையத்து போன்ற ஒரு சாதாரண ரொமாண்டிக் படத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய பொறி கிளப்பும் வசனங்கள் உண்டு. பி.ஜே.பியையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் வெளிப்படையாக விமர்சிக்கும் வசனங்களும் பல படங்களில் உண்டு. சாதாரணமாகவே ஒரு நாட்டுப்புறப் பாடலை எடுத்துக்கொண்டால், அம்மா குடித்த பிராந்தி பற்றிய பாடல் தமிழகமெங்கும் ஹிட் ஆகவில்லையா? நாயாட்டு படத்திலேயே ஒரு திருமணம் வருகிறது. அதில் பாடப்பெறும் பாடல் குடி பற்றியதே. அதில் பெண்கள் குடிப்பது ஜாலியாக வருகிறது. அங்கமாலி டைரீஸ் படத்தில் ஒரு திருமணத்தில் நாயகி லிச்சி ஒரு திருமணத்தில் குடித்துவிட்டு ஜாலியாக அனைவருடனும் ஆடுகிறாள். அந்தப் படத்தின் முதல் காட்சியிலேயே ஏசு வேடம் போட்ட ஒருவர், மதுபானக்கடையில் குடிப்பார்.

2013ல் வெளியான பபீலியோ புத்தா படத்தை எடுத்துக்கொண்டால், அந்தப் படத்தில், தலித்களை எப்படி மேல்தட்டு சாதிகள் ஒடுக்கின என்பது பற்றியே பேசப்படுகிறது. கம்மட்டிப்பாடம் படம் போலவே இதிலும் நிலப்பிரச்னை வருகிறது. இந்திய அரசியல் கட்சிகள் எப்படி ஒன்றுசேர்ந்து தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றின என்பது பற்றியதுதான் படம். காந்தியின் கருத்துகளைப் பற்றிய விமர்சனமுமே படத்தில் உண்டு.

ஆனால் அதேசமயம், ’செல்லுலாய்ட் படத்தை எடுத்துக்கொண்டால், அதில் யாருமே சாதிப்பின்னணியோடு காட்டப்படவில்லை; ஜே.சி டேனியேல் கூட அப்படி இல்லை. ஆனால் படத்தில் வரும் பி.கே. ரோஸி பாத்திரம் மட்டும் தெளிவாக, தலித்தாகக் காட்டப்படுகிறது. அது ஏன்?’ என்ற கேள்வியை, 3D Stereo Caste என்ற, மலையாள இசை உலகில் நிலவும் சாதிய வித்தியாசங்களைப் பேசும் டாக்குமெண்ட்ரியை எடுத்த ஏ.எஸ். அஜீத் குமார் ஒரு பேட்டியில் எழுப்புகிறார். அவரது விரிவான பேட்டியில் இப்படிப் பல கேள்விகள் வருகின்றன. ’மலையாளத் திரை உலகில் பெரும்பாலும் நாயர்களும் சிரியன் கிறிஸ்தவர்களும்தான் ஹீரோக்களாக வருகிறார்கள். இப்போதெல்லாம், சாதி பற்றிய கேள்விகளை எழுப்புபவர்களாக இவர்களே ஆகிவிட்டனர். எப்போதோதான் சாதி இருந்தது; இப்போது இல்லை என்றும், எங்கோ பிஹாரில், தமிழ்நாட்டில் மட்டுமேதான் சாதிய வித்தியாசங்கள் இருக்கின்றன; கேரளத்தில் இல்லை என்றும் இவர்களே பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், சாதிய வித்தியாசங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தாலே, அவர்களின் மீது சாதிய முத்திரையை இவர்கள்தான் குத்துகின்றனர். குறிப்பாக தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் மீது’ – என்பதும் அவரது கருத்தே. அவரது விரிவான பேட்டியை இங்கே படிக்கலாம்.

எனவே, இங்கே நான் சொல்ல வருவது ஒன்றுதான். மலையாளம், தமிழ்த் திரையுலகம் போல எந்த லாஜிக்கும் இல்லாமல் தட்டையாக சாதி வித்தியாசத்தை சொல்லவில்லை என்பதே. பாரதி கண்ணம்மா போலவோ, சின்னக்கவுண்டர், நாட்டாமை, தேவர் மகன் போலவோ எந்த nuancesஉம் இல்லாமல் வெறுமனே சாதியை ரொமாண்டிசைஸ் செய்யும் படங்கள் மலையாளத்தில் குறைவு., அங்கே விமர்சனங்கள் எல்லாவற்றின் மீதுமே வைக்கப்படுகின்றன. ஆணாதிக்கவாதிகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஆதிக்க சாதியினர், அரசியல் என்று எல்லாமே கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றே நினைக்கிறேன். அப்படித்தான் தலித் அரசியலுமே கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அதன் விளைவுதான் நாயாட்டு போன்ற படங்கள்.

சாதி என்று எடுத்துக்கொண்டால், எண்ணற்ற மலையாளப் படங்களில் சாதி பற்றிய cringe வசனங்களும் காட்சிகளும் உண்டு. ஆனால் அதேசமயம், விமர்சனங்கள் வைப்பதிலும் மலையாளப்படங்கள் தவறியதில்லை. எனவே, தமிழ்ப்படங்களையும் மலையாளப்படங்களையும் ஒப்பிடவே முடியாது. சார்லி போன்ற ஒரு படத்தில், இயல்பாக, குடித்திருக்கும் சார்லி, வீட்டுக்குள் வரும் திருடனின் பெயரைக் கேட்டு, அவன் பெயர் சுன்னி என்று தெரிந்ததுமே, அவன் பெயருக்காக நக்கல் அடித்து, ’கேரளா காங்கிரஸிலேயே இதைவிட நல்ல பெயர் இருக்கிறது’ என்று கிண்டல் செய்து, காரல் மார்க்ஸ், ரோஸா லக்ஸம்பெர்க், வி.எஸ். அச்சுதானந்தன், VSOP – இப்படிப் பெயர் வைக்கவேண்டும் என்று சொல்லும் காட்சி உண்டு. இப்படிப்பட்ட காட்சியைத் தமிழில் ’மாறா’ என்று உருவாக்கும்போது அந்தக் காட்சியில், அண்ணாதுரை, வ.உ.சிதம்பரனார், எம்.ஜி. ராமச்சந்திரன் என்றேல்லாம் தமிழ்ப்பெயர்களை உபயோகிக்க முடியவில்லையே? தமிழில் மலையாளப்படங்கள் போல வெளிப்படையாகப் பெயர் சொல்லி விமர்சிக்க முடிகிறதா? இல்லை.

இதனாலேயே, தமிழ்ப்பட ரசிகர்களாகிய நமக்கு, வேற்றுமொழிப் படத்தில் எங்காவது சாதி என்பது வந்துவிட்டாலேயே, அது தவறு என்ற மனப்பான்மை வந்துவிடுகிறது. இது அவசியம் ஒருவித White man’s guilt தான் என்பது என் கருத்து. எப்படியென்றால், 20 வருடங்கள் முன்னர் வரையிலேயே சாதி oppression என்பது தமிழ்நாட்டின் so called மேல்சாதிகளில் இருந்தே வந்திருக்கிறது. இதை அதன்பின் புரிந்துகொண்ட நாம், அதெல்லாம் வேண்டாம் என்று உதறித் தள்ள முயற்சிக்கும்போது, நம் கண்ணில் படும் சாதி குறித்த எல்லாமே தவறு என்ற கருத்து வருகிறது. அது சரிதான் . ஆனாலும், மலையாளம் போன்ற ஒரு wider diaspora பற்றி நாம் புரிந்துகொண்டால் மட்டுமே நாயாட்டு போன்ற ஒரு படத்தைப் பார்க்க முடியும் என்று எண்ணுகிறேன். தலித்தை வில்லன் என்று சித்தரிக்கும் அதே மலையாளப்படம்தான் பபிலியோ புத்தாவை எடுத்திருக்கிறது. Issue based என்பது மட்டுமேதான் இப்படிப்பட்ட படங்களைப் பார்க்கையில் நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறேன்.

இல்லையேல் எப்படி ஆகும் என்றால், தலித் பற்றி எப்போதுமே glorify செய்தே படங்கள் வரவேண்டும் என்ற எண்ணமே மேலெழும். தலித் மட்டும் இல்லாமல், மதங்கள், பிற சாதிகள் என்று எதையுமே விட்டுவைக்காமல் கேள்விகள் கேட்பதில் மலையாளப் படங்களுக்கு ஒரு பெரிய இடம் உண்டு என்பதை நாம் புரிந்துகொண்டால் மட்டுமே நாயாட்டு படத்தால் தமிழ்நாட்டு ஆடியன்சிடம் எழும் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

  Comments

12 Comments

  1. சூப்பர்… நல்ல point of view…

    Reply
  2. Omprakash

    எனக்கு தெரிந்து தலித் அரசியல் ரொம்ப தீவிரமாக எல்லாம் இல்ல, அதை சொல்லி ஓட்டு வாங்க கூட முடியும்னு தோனல, CDF என்கிற பேரில் கம்யூனிஸ்ட் கட்சி பினராயி, தலித் என்கிற வார்த்தை மறைவில் அவர்கள் இளுவா சங்கத்தையும் விமர்சிக்கறாங்கன்னு தோனுது, நீங்க குறிப்பிட்ட படங்களில் தொண்டிமுதலும் த்றிஷாக்சியும் சேர்த்துகலாம், அதுல நாயர் – இளுவா ஜாதியினர் இடையிலான புகைச்சலை கொஞ்சம் காட்டிருப்பாங்க

    Reply
    • Rajamani

      Good observation Mr Vaal

      Reply
  3. Raghu nathan murugesan

    பட்டாசு தல

    Reply
  4. Sundara Raj

    Super… தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வை

    Reply
  5. Anonymous

    அட்டகாசமான பார்வை. சூப்பர்ப் 🙂

    Reply
    • Anonymous

      Issue based only

      Reply
  6. மதிசுதா

    /////மாறா’ என்று உருவாக்கும்போது அந்தக் காட்சியில், அண்ணாதுரை, வ.உ.சிதம்பரனார், எம்.ஜி. ராமச்சந்திரன் என்றேல்லாம் தமிழ்ப்பெயர்களை உபயோகிக்க முடியவில்லையே/////

    இந்தப் பதிவின் ஒட்டு மொத்த ஹைலைட் வரியே இது தான்

    Reply
  7. Muhilarasan

    நான் ரொம்ப நாளா உங்க blog ஐ படிச்சிட்டு வரேன். ஆனா இதுதான் என் முதல் comment. நீங்க எனக்கு சினிமா பத்தி பல விசயங்கள அறிமுகப்படுத்தி இருக்கிங்க ! அதுக்கு முதல்ல நன்றி ! உங்க blog ல சொன்ன மலையாள படத்தெல்லாம் பார்த்துட்டு இருக்கேன் . இந்த படத்தையும் list ல சேர்த்துட்டேன் . அப்புறம் மலையாளத்துல இதுவரைக்கும் பார்த்ததுல ishq, munnariyippu, charlie இந்த மூணு படமும் எனக்கு personal ஆ ரொம்ப புடிச்ச படம் ! ஆனா charlieஅ தமிழ்ல மாறா னு எடுத்து சாவடிச்சிட்டாங்க . நீங்க பழைய மாதிரி blog ல நிறைய பதிவு post பன்றது இல்லையே , நிறைய போடுங்க boss

    Reply
  8. Anonymous

    Mr. Rajesh please tell about Quentin Tarantino 9th film once upon a time in Hollywood

    Reply
  9. Anonymous

    Please

    Reply

Join the conversation