பிணந்தின்னிகளும் நானும் – 1 – பின்நவீனத்துவம் என்றால் என்ன?
பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஜுராஸிக் பார்க் படத்தில் டைரான்னோஸாரஸ் ரெக்ஸ் துரத்தும்போது ‘அது வருது. . எல்லாரும் ஓடுங்க’ என்று தெறிப்பதே வழக்கமாக இருக்கிறது. ஒரு தமிழ் வாசகர் என்ற நிலையில் இருக்கும் நாம் எல்லோரும் எப்படிப்பட்ட ஆக்கங்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்று பார்த்தால், வாரப் பத்திரிக்கைகளில் அல்லது காமிக்ஸ்களில் அல்லது மாத நாவல்களில் நமது இன்னிங்ஸை ஆரம்பித்திருப்போம். அதன்பின் மெதுவாக பொன்னியின் செல்வன் போன்ற கதைகள், அதன்பின் கொஞ்சம் வாசிப்பு அனுபவத்தைத் தேடும் மனிதராக இருந்தால் பாலகுமாரன், ஜெயகாந்தன், சுஜாதா என்று நின்றிருக்கும். இதன்பின் இன்னும் தீவிரமான வாசகராக இருந்தால் பல இலக்கியவாதிகளின் படைப்புகளைப் படித்திருப்போம். தமிழில் ஆக்கங்களைப் படிக்கும் ஒரு வாசகனாக, என்னை எடுத்துக்கொண்டால் காமிக்ஸிலிருந்து ஆரம்பித்து மாத நாவல்கள்+வாரப் பத்திரிக்கைகள் என்று போய் சுஜாதாவுக்கு வந்து, அதன்பின் இலக்கியத்துப் பக்கம் தலைவைத்துப் படுக்க ஆரம்பித்திருக்கிறேன் (ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டால் காமிக்ஸுக்கு முன்னரே நாவல்கள் – குறிப்பாக ஜேம்ஸ் ஹாட்லி சேஸில் ஆரம்பித்தேன்). இப்படி இந்த வரிசையில் ஒவ்வொரு படியாக ஏறும்போதே பரிச்சயமான ஒரு விஷயமே இந்த பின்நவீனத்துவம். இந்தப் பெயரை முதன்முதலில் கேட்கும்போதே வினோதமாக – பின்னால் இருந்து யாரோ உதைப்பது போன்று நகைச்சுவையாக ஒரு பிம்பம் என் மனதில் தோன்றியிருந்தது. இதன்பிறகு இத்தனை காலம் அதைப்பற்றிக் கொஞ்சம் பீராய்ந்ததில் அதைப்பற்றிக் கொஞ்சம் புரிந்தது. குறிப்பாக சமுதாயத்தில் அதன் பங்கு.
நான் கஷ்டப்பட்டு அவ்வப்போது இணையத்தில் தேடிப் புரிந்துகொண்டவை (அல்லது குழம்பிக்கொண்டவை) இனி.
பின்நவீனத்துவம் என்பதை ஓரிரு வரிகளில் மிகாமல் விளக்கச் சொன்னால், அதற்கும் முன்பு நவீனத்துவம் என்பதைப் பற்றிப் படிக்க வேண்டும். நமது பெரியார்தான் எனக்கு நினைவுக்கு வருகிறார். அவர் ஒரு iconoclast – ஸ்டீரியோடைப் நம்பிக்கைகளை வெடி வைத்துத் தகர்த்தவர். மக்களை கேள்வி கேட்கச் சொன்னவர். இதையே அப்படியே எழுத்தின் பக்கம் கொண்டு வந்தால், வழிவழியாக வந்துகொண்டிருந்த நம்பிக்கைகளையும் அந்த நம்பிக்கைகளின் வாயிலாக வெளிப்பட்டுக்கொண்டிருந்த எழுத்து, கலை, இசை ஆகியவற்றையும், தற்காலத்தின் சிந்தனையில் எழுந்த மாற்றங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்துவதே (அல்லது தியதே) மாடர்னிஸம் (எ) நவீனத்துவம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அதுவரை சொல்லப்பட்டுக்கொண்டிருந்த பல விஷயங்கள், புதிய சிந்தனையாளர்களாலும் விஞ்ஞானிகளாலும் உடைக்கப்பட்டு (உதாரணம்: தியரி ஆஃப் ரிலேட்டிவிடி) பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இந்த புதிய சிந்தனைகளுக்கு ஏற்ப எழுத்து, கலை மற்றும் இசை வடிவங்கள் புதிதாக வெளிப்படத் துவங்கின. இதுவே மாடர்னிஸம்.
ஆனால், இது இந்த வரிகளோடு முடிந்துவிடுவதல்ல. நவீனத்துவம் என்பது ஒரு சமுத்திரம். ஓரிரு வரிகளில் அதை விளக்குவது அசாத்தியம். ’சினிமா’ என்று சொன்னால் அதில் எத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கின்றன? அதுபோல்தான் நவீனத்துவம்.
இந்த நவீனத்துவம் என்பதில் அந்தப் படைப்பில் சொல்லப்படும் விஷயம் முழுதாகப் புரியவேண்டும் என்றால் அது படைக்கப்பட்ட காலகட்டம் + அந்தப் படைப்பில் சொல்லப்படும் உதாரணம் + அந்தப் படைப்பாளியின் பின்னணி ஆகியவை முழுதாகப் புரிய வேண்டும். உதாரணமாக, ஒரு கட்டிடத்துக்குள் இருக்கும் பல்வேறு மனிதர்கள் மைக்கைப் பிடுங்கி மடால் மடாலென்று ஒருவரையொருவர் அடிப்பதைப் பற்றி ஒரு சிறுகதையை நாம் படித்துப் புன்னகைப்பதற்கும், அந்தக் கூட்டம் நமது அரசியல்வாதிகள் என்று புரிந்துகொண்டபின் சிரிப்பதற்கும், அதை எழுதியவர் குஷ்வந்த் ஸிங் என்பது தெரிந்தபின்னர் வெடிச்சிரிப்பு சிரிப்பதற்கும் உள்ள வேறுபாடு. குறிப்பிட்ட படைப்பின் காலகட்டம், அப்படைப்பு சொல்லவரும் விஷயத்தின் பின்னணி மற்றும் அந்தப் படைப்பாளி யார் என்பவை நன்றாகப் புரிந்துகொண்டால் அது நவீனத்துவத்தின் அனுபவத்தை முழுதாக்கித் தரும். அதேபோல், ஒன்றுமே தெரியாமல் ஒரு நவீனத்துவ படைப்பை அனுபவிப்பது, அப்படைப்பின் முக்கியத்துவத்தை முற்றிலும் அழித்தும் விடும்.
இது, நவீனத்துவத்தின் ஒரு சிறிய சிதறல் மட்டுமே. நவீனத்துவம் என்பதில் இன்னமும் பல்வேறு விஷயங்கள் உண்டு. உதாரணமாக, பொதுவான ஒரு நவீனத்துவ படைப்பில் பெரும்பாலும் மையம் என்ற ஒன்று இருக்கும். அந்த மையம் என்பது எதுவோ, அதைத்தவிர பிற வழிமுறைகள் அந்தப் படைப்பினால் நிராகரிக்கப்பட்டுவிடும். Shortest path first போல.
சரி. இப்போது நவீனத்துவம் என்பதை ஓரளவு நானே புரிந்துகொண்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். நவீனத்துவம் புரிந்துவிட்டது. அப்படியென்றால் பின்நவீனத்துவம்?
நவீனத்துவத்தை பின்னால் உதைத்தால் அதுவே பின்நவீனத்துவம்.
இப்படி யோசித்தால் புரிந்துவிடும். ஒரு படைப்பில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களின் முக்கியத்துவம், அதன் பின்னணியை அறிந்தால் இன்னமும் நன்றாகப் புரியும் என்று பார்த்தோம் அல்லவா? இந்தப் பின்னணியை அறியாமல் அந்தப் படைப்பை அணுகினால் அது அப்படைப்பின் சாரத்தை சிதைத்துவிடுகிறது என்றும் பார்த்தோம். இது அப்படைப்பை அணுகும் வாசகன் அல்லது பார்வையாளனின் குறைபாடு. அவனுக்குப் பின்னணி புரியவில்லை. ஆகவே அது ஒரு சாதாரணமான படைப்பு என்று தவறாக நினைக்கிறான். ஆனால் அப்படைப்பின்மேல் எந்தக் குற்றமும் இல்லை. அது அவனது முன்னே முழுதாகவே வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அப்படைப்பில் சொல்லப்பட்டிருக்கும் இப்படிப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் வேண்டுமென்றே தவறாகவோ அல்லது குறைவாகவோ அல்லது நகைச்சுவையாகவோ அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டோ இருந்தால்? அது பார்வையாளனின் குறைபாடு அல்ல. மாறாக, படைப்பாளியின் சாமர்த்தியம். இதனால், அந்தப் படைப்பின் முக்கியத்துவம், அதன் பின்னணியைச் சார்ந்தது என்ற கோட்பாடே உடைந்துவிடுகிறது. அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் பார்வையாளனுக்குப் புரியவேண்டுமென்றால் அதன் பின்னணி அவனுக்குத் தேவையில்லை. ஏனெனில் அந்தப் பின்னணியே இங்கு வேண்டுமென்றே தப்பாக இருக்கிறது.
இதுதான் பின்நவீனத்துவம்.
ஆகவே, ஒரு படைப்புக்கும் அதன் காலகட்டம் மற்றும் பின்னணிக்கும் உள்ள தொடர்பு, அதன் படைப்பாளியால் மாற்றப்படுகிறது அல்லது அழிக்கப்படுகிறது. வேண்டுமென்றே. இதன்மூலம் படைப்பாளியின் ஐடெண்டிடி என்பதும் அழிகிறது.
எப்படியெல்லாம் இந்த அழித்தல் அல்லது சிதைத்தல் நடைபெறுகிறது?
பகடியின் மூலமோ அல்லது நகைச்சுவையின் மூலமோ அல்லது டார்க் ஹ்யூமரின் மூலமோ முரண்நகையின் மூலமோ (irony) அல்லது intertextuality என்கிற – ஒரு பிரதியினுள் இடம்பெறும் மற்றொரு பிரதி – என்பதன் மூலமோ இன்னும் இதுபோன்ற பல விஷயங்களின் மூலமோ இந்த சிதைத்தல் நடந்தேறுகிறது.
சில பின்நவீனத்துவ கதைகளில் கதை பாட்டுக்கு சென்றுகொண்டிருக்கும்போது தடாலென்று சரித்திர சம்பவங்களோ அல்லது தேவதைக்கதைகளோ (Nano ஒரு உதாரணம்) டக்டக்கென்று மாறிமாறி சொல்லப்படும். இதுவே பிரதிக்குள் பிரதி. ஆனால் அதேசமயம் படைப்பில் இடம்பெறும் இந்தப் பிரதிக்குள் பிரதி என்ற விஷயத்தில் அந்த விஷயம் கேலியும் செய்யப்படலாம். இன்னமும் பல உதாரணங்கள் அடுத்த கட்டுரையில்.
அதேபோல், பின்நவீனத்துவ படைப்புகளில் மையம் என்ற ஒன்று இருப்பதில்லை. காட்டில் வழி தேடி அலையும் மனிதனுக்கு முன்னர் ஒரே ஒரு வழியை மட்டும் காட்டிவிட்டு, பிற வழிகளை நிராகரிப்பது நவீனத்துவம் (அவ்வழி சரியானதாகக்கூட இருக்கலாம்). அவனிடம் போய், ‘இந்த ஒரே வழியை நம்பாதே.. இன்னமும் பல வழிகள் இருக்கின்றன’ என்று சொல்வது பின்நவீனத்துவம் (இங்கே ஒரே ஒரு வழி என்று நிறுவப்பட்டுள்ளது உடைக்கப்படுகிறது. அதைத்தவிரவும் இன்னும் பல வழிகள் இருக்கின்றன என்று சொல்லப்படுவதன்மூலம்). fragmentation.
பின்நவீனத்துவம் என்பது நவீனத்துவத்தைக் கேள்வி கேட்கிறது. ‘நீ இப்படி சொன்னாயே? ஆனால் இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை நீ சொல்லவில்லை. அவற்றையும் கருத்தில் கொண்டு ஆராய்வோம் வா’ என்று சொல்கிறது. கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், பின்நவீனத்துவம், விடைகளை நிறுவுவதில்லை. அது ஒரு திறந்த விவாதத்துக்கு அழைக்கிறது. முடிவு செய்துகொள்ளவேண்டியது நாம்தான்.
இன்னொரு மேட்டர் என்னவென்றால், பின்நவீனத்துவம் & நவீனத்துவம் ஆகிய இரண்டும் இலக்கிய வகைகள் என்று லேபிள் குத்தப்படும் விஷயங்கள் அல்ல. அவை கோட்பாடுகளும் அல்ல. மாறாக, இவ்விரண்டும் ஒருவித அப்ஸர்வேஷன்கள். எல்லாவற்றிலுமே இவற்றைப் பார்க்க முடியும்.
நவீனத்துவத்தின் விகிபீடியா விளக்கத்தைப் படித்தால், பின்நவீனத்துவத்தைப் பற்றிப் படிக்கிறோமோ என்று குழம்பும் அளவு இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே போன்றே விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால், நான் பீராய்ந்து பெற்ற புரிதலே இது (அல்லது குழப்பமே இது). படிக்கும் நண்பர்களுக்கு இது எவ்வளவு புரிந்ததோ தெரியவில்லை. அதேபோல் ‘என்னடா இது திடீர்னு எதையோ ஆரம்பிக்கிறான்?’ என்றெல்லாம் எண்ணவேண்டாம். அடுத்த கட்டுரையோடு இது முடிகிறது. அதைப் படித்தால் காரணம் புரியலாம். எனது இந்தக் கட்டுரை தவறு என்று நினைக்கும் நண்பர்கள் இங்கே அவர்களின் கருத்தை (அல்லது) புரிதலை எழுதலாம். எது சரியென்று அதன்பின் நான் தெரிந்துகொள்வேன்.
பி.கு – 1. அடுத்த கட்டுரைக்குப் பின் ஒரே ஒரு கட்டுரை மட்டும் – ’பின்நவீனத்துவமும் சினிமாவும்’ என்று எழுதட்டுமா? முடிந்தவரை ஜாலியாக.
2. ஏலியன்கள், திரைக்கதை, உலக சினிமா விமர்சனங்கள் ஆகியவை ஜெட் வேகத்தில் ரெடியாகிக் கொண்டிருக்கின்றன. Brace Yourselves.
3. அடுத்த கட்டுரையில் Death of the Author (செத்தீங்க).
இது அட்டகாசம். அடுத்த கட்டுரையும் இடுங்க சந்தேகம் இருந்தால் கேட்கலாம். . .
இதிலிருக்கு சந்தேகத்தினை கேட்கிறேன். பின்நவீனத்துவத்தில் மையம் இல்லை என்கிறீர்களே ஆனால் நேனோ சிறுகதை எங்கு சென்றாலும் சிருஷ்டியின் ஆக்கத்தினில் நடக்கும் வதைக்கு தா வருகிறது ஆக அதுவும் ஒரு வகையில் மையம் தானே ????
Welcome back தலைவா ….. எனக்கு இருந்த ரெண்டு முடியும் நட்டுகிச்சு … ஜெயமோகன் websitela இந்த வார்த்தைய அப்பப்பா பார்பேன் … அது நாமளா தக்க வரது ஒடுங்க … தெறிச்சி ஓடிருவேன் …. ஏதோ புரிஞ்ச மாத்ரி இருக்கு… மறுபடியும் படிக்கனும்ன்னு நேனைக்ரைன்…
மொத்த கட்டுரைளையும் … கடைசியா எழுதிய ரெண்டு line நல்லா புரிஞ்சது… waiting for your next’s
அடிக்கடி பதிவு போடுங்க பாஸ் ….மொதல்ல மாதிரி இப்பல்லாம் பதிவு போடறதே இல்ல …இந்த பதிவ ஒருதடவ படிச்சா புரியாது போல இருக்கு..மறுபடியும் ட்ரை பண்ணி பார்க்கணும்
‘ரொமான்ற்றிசிசம் -> மார்டனிசம் -> போஸ்ட்மார்டனிஸம் -> நியோரொமான்ற்றிசிஸம்’ என்று இந்த வரிசையில் எழுதினால் இன்னும் எளிதாகப் புரியும்; பயனுள்ளதாகவும் அமையும். எடுத்துக்காட்டுகள் தந்து விளக்கினால் நல்லது.
ஒன்றுமே புரியல. கண்ணைக்கட்டுது. தியரி படிச்சா மாதிரி இருக்கு.
தோழர எங்களையும் இப்படியான (மெடுல்லா ஆப்லங்கேட்டா குழம்புர மாதிரி) ஒரு பதிப்பை போட்டு அத வாசிக்க வச்சு “பின்நவீனத்துவ” ஆளுங்களா மாத்திடீங்களே !””!
onnum puriyala
பின்நவீனத்துவம் என்பது நவீனத்துவத்தைக் கேள்வி கேட்கிறது. ‘நீ இப்படி சொன்னாயே? ஆனால் இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை நீ சொல்லவில்லை. அவற்றையும் கருத்தில் கொண்டு ஆராய்வோம் வா’ என்று சொல்கிறது. கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், பின்நவீனத்துவம், விடைகளை நிறுவுவதில்லை. அது ஒரு திறந்த விவாதத்துக்கு அழைக்கிறது. முடிவு செய்துகொள்ளவேண்டியது நாம்தான்..
இந்த ஒரு பத்தி நீங்கள் கூற வந்ததை மிக எளிமையாக கூறிவிட்டது.
அது சேரி , திரைக்கதை எழுதுவது எப்படி- னு ஒன்னு இருக்கு அதை பற்றி தங்களுக்கு எதாவுது தெரியுமா…???
நல்ல கட்டுரை, நிறைய பேர் பினநவினம் என்றால் ஏதோ ஒரு கதை சொல்லும் முறை என புரிந்து வைத்திருக்கிறார்கள். மனிதனின் அனுபவ அறிவும் அதன் முலம் எழுந்த நிகழ்கால சிந்தனை வளர்ச்சி / முதிர்ச்சி பின்நவினத்துவம். அப்புறம் பின்நவினம்னா இதுதான் / இப்படிதான்னு கூட சொல்லகூடாதாம் அதுவே பின நவினத்துக்கு எதிராம். Don’t Define but Experience. வருங்க காலத்தில் நமது இறை நம்பிக்கைகள், அரசியல் சிந்தனைகள், பெண்ணியம், மார்க்கிசியம், நமது உறவுகள் போன்ற விசியங்களிலும் பின நவின சிந்தனைகளின் பாதிப்பு தவிர்க்க முடியாததாக இருக்கும்.
போன பின்னுட்டமிட்டபிறகுதான் மேலே உள்ள படத்தை பார்த்தேன். Down With Meta Narrativeன்னு ஒரு வாசக பலகை. அந்த ஒரு வாசகத்தை பற்றியே நிறைய பேசலாம்
இன்செப்ஷன் போல? Cubism?
uyarndha sindhanai. good attempt. (naan padichathai sonnen!) but, thalai suthuthu!
Searched in net about post modernism to understand charu’s novels. None helped but after reading this post i hope i could understand something. Going to read zero degree once again to know whether i can get to the core or not. Useful post.
அருமையான பதிவு. எனக்கு நல்லதொரு ‘ஆரம்பம்’. நன்றி. 😀
தெளிவாக விளக்க முயற்சி செய்துள்ளீர்கள். பாராட்டுகள்!