பிணந்தின்னிகளும் நானும் – 3 – Message bearers from the stars
சென்ற இரண்டு கட்டுரைகளில் ஓரளவாவது பின்நவீனத்துவம் பற்றித் தெரிந்துகொண்டோம். இந்தக் கட்டுரை, ஏன் நான் அந்த இரண்டு கட்டுரைகளை எழுதினேன் என்பதைப் பற்றி. கூடவே, எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு – தமிழிலிருந்து ஆங்கிலம் பற்றி.
வெர்னர் ஹெர்ஸாக் பற்றி நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். உலக சினிமாவின் இன்றியமையாத இயக்குநர். ஜெர்மானியர். இவர் க்ளாஸ் கின்ஸ்கியை வைத்து எடுத்த படங்கள் மிகவும் அருமையான அனுபவத்தைத் தரக்கூடியன. வெர்னர் ஹெர்ஸாக் பற்றி ஒரு மிக நல்ல அறிமுகத்தை இதோ இங்கே படிக்கலாம். கொழந்த எழுதிய அட்டகாசமான கட்டுரைகளில் இது ஒன்று.ஹெர்ஸாக் பற்றித் தெரியாத நண்பர்களுக்கும், தெரிந்த நண்பர்களுக்குமே கூட இது மிக நல்லதொரு அறிமுகத்தைக் கொடுக்கும்.
இந்த அளவு இல்லாவிட்டாலும், நான் எழுதிய ஒரு சாதா கட்டுரையும் இங்கே படிக்கலாம்.
இவரது படங்களில் வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்காது. கலை என்பது அதன் உச்சத்தைத் தொட்டிருக்கும் திரைப்படங்கள் இவருடையவை.
பின்நவீனத்துவத்துக்கும் ஹெர்ஸாகுக்கும் என்ன சம்மந்தம்? இந்தக் கட்டுரையில் ஹெர்ஸாக் எங்கே உள்ளே நுழைகிறார்?
அண்மையில் ஒரு தமிழ்ச் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தேன். அந்த சிறுகதை சாதாரண சிறுகதை அல்ல. அது ஒரு ஹெர்ஸாக் திரைப்படத்தையொத்த அனுபவத்தைத் தரக்கூடியது. அதைப்பற்றித்தான் இந்தக் கட்டுரை. அதற்குத்தான் இந்த பின்நவீனத்துவ கட்டுரைகளும்.
இந்தக் கதையின் தமிழ்ப் பெயர் ‘நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்’. ஆங்கிலத்தில் ‘Message bearers from the stars and necrophiles’. எழுதியவர் சாரு நிவேதிதா. எழுதப்பட்ட ஆண்டு 1993.
ரைட். இப்போது சிறுகதையை கவனிப்போம்.
ழாக் திதியே என்ற ஃப்ரெஞ்ச் நபர், வடக்கு ப்ரஸீலியன் காடுகளில் ஒரு நெடிய பயணத்தை மேற்கொள்கிறார். அவர் அங்கே எழுதிய குறிப்புகள், ‘Book Of Fuzoos (Male Edition) என்ற பெயரில் 1972ல் பதிப்பிக்கப்படுகின்றன. இந்தக் குறிப்புகளின் முக்கியத்துவம் என்ன? இதைப்பற்றி ஒரு பெரும் புத்தக விமர்சனமாக விரிகிறது இந்த சிறுகதை. இதில் விசேஷம் என்னவெனில், சிறுகதையே ஒரு புத்தக விமர்சனம். இதை எழுதிய எழுத்தாளனின் கூற்றுப்படி, திதியே எழுதிய இந்தக் குறிப்புகள், மனித வரலாற்றின் மாபெரும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஒத்தவை. அந்த விஞ்ஞானிகள் யார் எவர் என்பதையும், சிறுகதையின் தொடக்கத்திலேயே எழுத்தாளன் விபரமாக எழுதுகிறான். கலிலியோவின் மரணத்தில் ஆரம்பித்து, டாவின்சி, ஜோஸப் பிரீஸ்ட்லி (ஆக்ஸிஜன்), காப்பர்னிகஸ், ந்யூட்டன் போன்றவர்களைப் பற்றி எழுதிவிட்டு, இவர்களைப் போன்றவர்களின் புத்தகங்களைப் படிப்பதே – பொதுவில் வாசிப்பு என்பதே- நமக்கெல்லாம் ஒரு luxury என்று சொல்கிறான்.
இதன்பின் ழாக் திதியே யார் என்பதைப் பற்றியும், அவர் ப்ரஸீலின் காடுகளுக்குள் சென்றதைப் பற்றிய விபரங்களும், அங்கு அவர் யாரையெல்லாம் சந்தித்தார் என்பதும் விபரமாக இக்கதையில் எழுதப்பட்டுள்ளன.
இந்த சிறுகதையின் விசேடம் என்ன?
ழாக் திதியே பற்றிச் சொன்னதும், நெக்ரோஃபீலியா என்ற வார்த்தையைப் பற்றி விவரிக்கிறான் எழுத்தாளன். சவங்களின் மேல் ஏற்படும் ஈர்ப்பே இது. அங்கே ஒரு பெரிய அடிக்குறிப்பு வருகிறது. நெக்ரோஃபீலியா என்ற வார்த்தை முதன்முதலில் உபயோகிக்கப்பட்ட விதம் குறித்து. இதுமட்டுமல்லாமல், அந்த வார்த்தையின் முக்கியத்துவம் குறித்தும் இந்த அடிக்குறிப்பில் வருகிறது. ஸ்பானிஷ் தத்துவவாதி உனாமுனொ (Unamuno), அவர் முன்னிலையில் அமர்ந்திருந்த ஜெனரல் மிலன் ஆஸ்த்ரே கோஷமிட்ட ‘‘Viva la Muerte! (மரணம் வாழ்க) என்ற கோஷத்தை மறுத்து, இது ஒரு நெக்ரொஃபீலிக் கோஷம் என்று சொல்லி, இதனாலேயே சிறைப்பட்ட வரலாறு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதன்பின் திதியே சந்தித்த பழங்குடி இனங்களைப் பற்றிய விபரங்கள் வருகின்றன. இறுதியாக அவர் சந்தித்த ஃபூஸுக்கள் என்ற இனத்தவர் பற்றிய விவரிப்பு இருக்கிறது. அவர்களின் வாழ்வு முறைகள், சமுதாய பழக்கவழக்கங்கள் பற்றியெல்லாம் விபரமாக எழுதுகிறான் எழுத்தாளன். இவை பற்றி ழாக் திதியே எந்தெந்தப் பக்கங்களில் எழுதியிருக்கிறார் என்பதும் வருகிறது. இந்தப் பழங்குடியினர், ஓவியர்களும் கூட என்று சொல்லும் எழுத்தாளன், திதியேவின் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் சில ஓவியங்களைப் பற்றி எழுதுகிறான்.
இதன்பிறகு நெக்ரோஃபீலியா பற்றிய விரிவான அனாலிசிஸ் வருகிறது. இந்தப் பழங்குடியினரிடம் காணப்படும் இந்த நெக்ரோஃபீலியா பற்றி எழுதிவிட்டு, அத்வைதத்துக்கும் நெக்ரோஃபீலியாவுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், இது தவிர சமுதாயத்தில் காணப்படும் பல விஷயங்களும் நெக்ரோஃபீலியாவின் நீட்சியோ என்ற கேள்வியையும் இந்த எழுத்தாளன் கிளப்புகிறான். இப்படி எழுப்பப்படும் சந்தேகங்கள், பதினெட்டு கேள்விகளாக இச்சிறுகதையின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன
இதுதான் சிறுகதை.
இந்தச் சிறுகதையைப் பற்றிய எனது குறிப்புகள் இனி:
சிறுகதை ஆரம்பிப்பது, ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையைப் போன்றதொரு நடையில். செல்லச்செல்ல அந்த நடை தீவிரமடைந்து, இச்சிறுகதையில் சொல்லப்படும் சம்பவங்களோடு நம்மைக் கோர்க்கிறது. இதனால்தான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் ஹெர்ஸாக் பற்றிச் சொல்லியிருதேன். அவரது படங்களில் இந்தச் சிறுகதையில் வரும் விவரிப்புகளைப் போன்ற காட்சிகளைப் பார்த்திருக்கிறேன்.
கூடவே, இந்தக் கதையில் பரக்க விவரிக்கப்படும் நெக்ரோஃபீலியா என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டால், அந்த வார்த்தையைப் பற்றிய அத்தனை விஷயங்கள் இச்சிறுகதையில் அடிக்குறிப்புகளாக எழுதப்பட்டிருக்கின்றன. அந்த அடிக்குறிப்புகள் மட்டுமே தனியான ஒரு ட்ராக்கில் பயணிக்கின்றன. அதாவது, இப்படி சொல்லலாம். ஒரே நேரத்தில் இரண்டுவிதமான நடைகள் இச்சிறுகதையில் காணப்படுகின்றன. ழாக் திதியேவின் புத்தகம் பற்றிய விவரிப்பு ஒருவிதம் என்றால், அந்தப் புத்தகத்தில் வரும் ஃநெக்ரொஃபீலியா பற்றிய அடிக்குறிப்புகள் ஒருவிதம். நான் லீனியர் வகை இது. கதையில் ஒரு மையம் இல்லை. பல விஷயங்களையும் தொட்டுச் செல்கிறது இந்தச் சிறுகதை. பல கேள்விகளையும் எழுப்புகிறது. நெக்ரோஃபீலியா என்பதைப் பற்றி – பல்வேறு விஷயங்களுடன் (அத்வைதம், சங்க இலக்கியத்தின் அகம்- புறம் ஆகிய வடிவங்கள், பிரமிடுகள், ழான் பால் சார்த்தரின் Hell is other people கோட்பாடு போன்ற பல விஷயங்கள்) ஒப்பிட்டு, இவையெல்லாமே நெக்ரோஃபிலிக் எண்ண வெளிப்பாடுகளின் நீட்சியா என்று கேள்விகளை எழுப்புகிறான் எழுத்தாளன்.
நெக்ரோஃபீலியா பற்றி எரிக் ஃப்ராமின் விளக்கங்களை எழுதும் எழுத்தாளன், திதியேவின் புத்தகம் அவரைவிடவும் நெக்ரோஃபீலியா பற்றி ஆராய்ந்திருந்தும், ஏன் அந்த அளவு புகழ்பெறவில்லை என்றும் கேட்கிறான். கூடவே, நெக்ரோஃபீலியா என்ற விஷயத்தை சற்றே extend செய்தால், அழுகல் நாற்றத்தை விரும்புபவர்களும் நெக்ரோஃபீலியாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லி, இதனால் கூவத்தின் அருகே வசிப்பவர்களை necrophilic என்று சொல்லலாமா? ? என்பதுபோன்ற சில கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
சிறுகதையின் இறுதியில் பதினெட்டு விரிவான கேள்விகள் எழுத்தாளனால் எழுப்பப்படுகின்றன. இந்தக் கேள்விகளிலிருந்து, ஃபுஸூக்களை ஒரு விரிவான ஆவணப்படத்தினால் பதிவு செய்திருக்கிறார் திதியே என்பது தெரிகிறது. அந்தப் படம் வெளியிடப்பட்டதா? ஒருவருக்கும் தெரியாது. போலவே திதியேவின் புத்தகம் ஒரு male edition. இதைப்போலவே ஒரு female editionனும் இருக்கிறது என்பதும் தெரிகிறது. திதியே எரிக் ஃப்ராமை வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்கிறோம்.
இதுபோன்ற பல தகவல்கள் இச்சிறுகதையால் வாசகனுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவையெல்லாமே கேள்விகள் மட்டுமே. அறுதியாக எந்த முடிவும் வாசகனின் மீது திணிக்கப்படுவதில்லை. வாசகனுக்கு இவற்றைப் படித்து சுயமாக இந்தச் சிறுகதையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை அறியும் வாய்ப்பு இருக்கிறது. வாசகனாக எதைப் புரிந்துகொள்கிறானோ அதுதான் அவனைப்பொறுத்தவரையில் பதில்.
கூடவே, இந்தச் சிறுகதையில் வரிகளுக்கு இடையே விளக்கப்பட்டுள்ளவை சில விஷயங்கள். அவை என்னவென்று சிறுகதையைப் படித்தபின்னர் தானாகவே வாசகனுக்குப் புரியலாம். அது black humor. முழுக்கதையையும் படித்தபின்னர் அதில் விளக்கப்பட்டிருக்கும் அத்தனையும் எழுத்தாளனால் பகடி செய்யப்படுகின்றன என்பது reading between the lines. சிறுகதையைப் படித்தபின்னர் எந்தக் கோணத்தில் இந்தக் கேள்விகள் அத்தனையும் ஆரம்பிக்கின்றனவோ அந்தப் புள்ளியே முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடுவதே இது.
இந்தக் கதையை மொழிபெயர்த்தவன் என்ற முறையில், இது என் கருத்து. படிக்கும் நண்பர்களுக்கு வேறு கருத்துகள் இருக்கலாம்.
முதல் கட்டுரையில் பின்நவீனத்துவம் என்பதைப் பற்றி நாம் பார்த்தோம் அல்லவா? நான் லீனியர் பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்தச் சிறுகதை அவ்வகையைச் சேர்ந்தது.
இந்தச் சிறுகதை மட்டுமல்லாமல் இன்னும் சில சிறுகதைகள் மற்றும் சாருவின் ஒரு பேட்டி அடங்கிய மின்புத்தகம் – ‘Morgue Keeper’ அமேஸான் கிண்டில் வெளியீடாக ஆன்லைனில் கிடைக்கிறது. இதில் எனது இரண்டு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன (ஒன்று நாநோ. மற்றொன்று இந்தச் சிறுகதை). ப்ரீதம் சக்ரவர்த்தியின் மொழிபெயர்ப்புகள் இரண்டு இருக்கின்றன. வைஷ்ணா ராய், ஜெயகுமார் சத்யமூர்த்தி மற்றும் வைஷ்ணா ராய் ஆகியவர்களும் இதில் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
புத்தக தயாரிப்பில் பங்குபெற்றவன் என்ற முறையில் இந்த மின்புத்தகத்தை விமர்சிக்கும் தகுதியை நான் இழக்கிறேன். இருந்தாலும், ஒரு மொழிபெயர்ப்பாளன் என்ற முறையில் இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது கருத்தை விரைவில் கிண்டில் லிங்க்கில் பதிவு செய்வேன்.
புத்தகத்தை வடிவமைத்திருப்பவர் நமது ஹாலிவுட் பாலா. கீழேயுள்ள லிங்க்கில் இந்த மின்புத்தகத்தை வாங்கலாம்.
பி.கு:
புத்தகத்தைப் பற்றியும், எனது இரண்டு மொழிபெயர்ப்புகள் பற்றியும் நண்பர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன். Feedback என்பது என்னைப்பொறுத்தவரை விலைமதிப்பில்லாதது. பாஸிடிவ் ஃபீட்பேக்கை விட, நெகடிவ் ஃபீட்பேக் என்பது மேலும் என்னை செம்மைப்படுத்த வழிவகுக்கும். எனவே முடிந்தவரை உங்களின் கருத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே.
மொத பதிவையே இப்பதான் படிக்க போறேன்…..
ஆனா – நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும் கதையை பொறுத்தவரை, ஒரு நிமிசத்துக்கு ஆடி போயிட்டேன். அதுமாதிரி மக்கள் இருக்காங்க போலனு நெட்ல தேடிக்கொண்டு இருந்தேன். ரொம்ப பிடித்த கதை.
தங்களை புகழ வேண்டும் என சொல்லவில்லை. நான் ஆக்கிலத்தில் அட்டுவீக். ஆங்கிலம் எழுதும் போது வாசிக்கும் போதும் ஒரு மிருதுத் தன்மை எனக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதனை கொண்டாடுவேன். அது அனைத்து மொழிபெயர்ப்பிலும் தங்களின் இரு கதைகளில் மட்டுமே இருந்தது. எதையும் சொல்லும் நிலையில் நான் இல்லை. நேனோவினை இன்னமும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். சவாலாக இருக்கிறது. எப்படி மொழிபெயர்த்தீர்கள்.. . உண்மையில் வாழ்த்துகள் கருந்தேள்
போங்கப்பா சாமிகளா நமக்கு ரொம்ப குழப்புது.
கஷ்டமான விஷயத்தை படு சுவாரஸ்யமாக சொல்கிறீர்கள். அருமையாக உள்ளது.