The Ninth Gate (1999) – English
அமானுஷ்ய சக்திகள் குறித்து உங்களுக்கு நம்பிக்கை உண்டா? நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, திரைப்படங்களிலும் நாவல்களிலும் இந்தச் சங்கதி ஏராளமாக உண்டு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரனை உங்களுக்குத் தெரியுமா? எனது சிறு வயதில், இவரது புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நான் படித்த முதல் புத்தகம், ‘அறிவுக்கு அப்பாற்பட்ட அதிசய சக்திகள்’. அதில், ரஸ்புடீனிலிருந்து, யூரி கெல்லர், இந்திராதேவி, அரிகோ போன்ற உலகின் அமானுஷ்ய சக்தி படைத்த மனிதர்களைப் பற்றிப் படித்ததில் இருந்தே, இந்தச் சங்கதிகளில் எனக்கு ஆர்வம் அதிகமாக ஆனது. அந்தப் புத்தகத்திலேயே, எரிக் வான் டானிக்கென்னின் ‘Chariots of the Gods’ புத்தகத்தின் ரெஃபரன்ஸும் இருந்தது. இந்த டானிக்கென், பரபரப்பாக எழுதுவதில் கில்லாடி. உலகின் கடவுள்கள் எல்லாருமே வேற்று கிரக ஜந்துக்கள் தான் என்பதே இந்த சேரியட்ஸ் ஆக் காட்ஸின் கருத்து. இது மிகப் பரபரப்பாக விற்றுத் தீர்ந்த ஒரு புத்தகமும் கூட. மாயன்கள் திடுமென உலகின் வரைபடத்திலிருந்து மறைந்த மாயம், அஸ்டெக்குகள், துதன்காமென்னின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம், மாயன்களின் கடவுளான குக்குல்கன், அங்கே இருந்த ஒரு மிக ஆழமான கிணறு, கிணற்றினுள் கிடந்த பண்டைய கால எலும்புக்கூடுகள் ஆகிய விஷயங்கள், இன்னமும் பசுமையாக நினைவிருக்கின்றன. இத்தனை பரபரப்பான விஷயங்களையும், ஒரே புத்தகத்தில் அடக்கி, எண்பதுகளின் மத்தியில் வெளியிட்டவர் ரவிச்சந்திரன். அதன் பின், ரவிச்சந்திரனின் ‘பேசும் ஆவிகள்’ மாத இதழை வெகு காலம் படித்து வந்தேன். அதில் இருக்கும் படு சுவாரஸ்யமான செய்திகள், படிக்கவும் கற்பனை செய்து பார்க்கவும் மிகச் சுவையாக இருக்கும்.
சிறுவயதிலேயே ஆவி விஷயங்களைப் பற்றிப் படித்தமையால், இன்றும் அந்த ரீதியிலான படங்களை விரும்பிப் பார்ப்பேன். அப்படிப் பார்த்த ஒரு படத்தைப் பற்றிய கட்டுரை தான் இது. புத்தாண்டின் முதல் கட்டுரை.
படத்தைப் பற்றிப் பார்க்குமுன், இன்னொரு விஷயம். ஐரோப்பாவில் பல ரகசியக் குழுக்கள் உண்டு. இந்தக் குழுக்களின் நோக்கமே, நமது உலகுக்கு அப்பால் உள்ள ரகசியங்களை அறிந்து கொள்வதே. இந்தியாவிலுமே, வாமாசாரம் என்ற பிரிவைப் பற்றி நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இடதுசாரி மாந்த்ரீக விஷயங்கள் இதில் அடங்கியிருக்கின்றன. துர்மாந்த்ரீகம் என்று இப்போது அழைக்கப்படும் விஷயம் இது. இதைப்போலவே, ஐரோப்பாவிலும் சில குழுக்கள் உண்டு. அவர்களின் முக்கிய நோக்கம், பல புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள ’லூஸிஃபர்’ (Lucifer) என்ற சக்தியை பூமிக்கு வரவழைப்பதே. இந்த லூஸிஃபரின் மூலம், அண்டவெளியில் உள்ள பல ரகசிய, கோரமான உலகங்களைப் பற்றியும் அவற்றின் ரகசியங்களையும் அறிந்து கொள்ளலாம் என்பது இந்தக் குழுக்களின் நோக்கம்.
இந்த லூஸிஃபருக்கு, இன்னொரு எளிமையான பெயர் உண்டு. அது –
சாத்தான்.
சாத்தான் என்பவன், கடவுளின் மாற்று. கடவுள் என்று ஒரு கதாபாத்திரம் இருக்குமானால், அதற்கு நேர் எதிராக, சாத்தானும் இருந்தாகவேண்டும் என்பது தர்க்க நியதி. அப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே சுவாரஸ்யமாக உள்ளது அல்லவா? நல்ல நோக்கத்துடன் செயல்படும் கடவுள்; அவரது திட்டங்களைத் தவிடுபொடி ஆக்குவதற்கென்றே வந்து குதிக்கும் சாத்தான்; இவர்களுக்கு இடையே நிகழும் போர். எத்தனை படங்கள் இந்தக் கருவோடு வந்திருக்கின்றன !
The Ninth Gate படத்தின் கதை, சைத்தானே (இனிமேல் லூஸிஃபர்) தன் கைப்பட எழுதிய ’Invocation of Darkness’ என்ற புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்தப் புத்தகத்தில், துர்மாந்த்ரீக வழிபாடும், சைத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் துர்தேவதைகளை நமக்குக் கீழ் கொண்டுவருவதும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தை இன்னமும் விரிவாக்கி, ’The Nine Doors to the Kingdom of Shadows’ என்ற புத்தகத்தை, பதிநேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிஸ்டைட் டோர்ச்சியா (Aristide Torchia) என்ற மந்திரவாதி எழுத, அவருக்குப் பரிசாகக் கிடைக்கிறது உயிரோடு எரிக்கப்பட்ட (Heritic) தண்டனை. அதனைத் தொடர்ந்து, அந்தப் புத்தகங்களும் கொளுத்தப்பட, மூன்றே மூன்று பிரதிகள் மட்டுமே தற்போது மிஞ்சுகின்றன.
டீன் கார்ஸோ, ஒரு புத்தக வியாபாரி. அதிலும், மிக அரிதான புத்தகங்களைப் பற்றிய தகவல்கள், இவரது தனித்திறமை. டீன் கார்ஸோவை, போரிஸ் பால்கன் என்ற செல்வந்தர் – இவரும் ஒரு அரிய புத்தக சேகரிப்பாளர் – அழைக்கிறார். இந்த நைன் டோர்ஸ் புத்தகத்தின் கதையைச் சொல்லி, இவரிடம் இருக்கும் ஒரு பிரதியை டீன் கார்ஸோவுக்குத் தருகிறார். இன்னமும் மீதமுள்ள இரண்டே இரண்டு பிரதிகளையும், இந்தப் பிரதியையும் ஒப்பிடச் சொல்லி, இவற்றில் எந்தப் புத்தகம் உண்மையான பிரதி என்றும், ஒருவேளை மூன்று புத்தகங்களுமே உண்மைதானா என்றும் கண்டுபிடிக்கச் சொல்லி, அப்படி இருந்தால், அந்தப் பிரதிகள் இரண்டுமே தனக்கு வேண்டும் என்றும் சொல்லி, அதற்காகப் பெரும் பணமும் தருகிறார்.
குழப்பத்தில் ஆழும் கார்ஸோ, அரைமனதாக ஒப்புக்கொள்கிறார். பால்கனுக்கு இந்தப் புத்தகத்தை விற்றவர், மற்றொரு புத்தக விரும்பி. பெயர் ஆண்ட்ரூ டெல்ஃபர். ஆனால், விற்ற கையோடு அவர் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொள்கிறார். அவரது மனைவி, லியானா. லியானாவை முதலில் சந்திக்கும் கார்ஸோ, அவளிடம் இந்தப் புத்தகத்தைக் காட்டி, இதைப்பற்றிய எதாவது குறிப்பை, டெல்ஃபர் விட்டுச் சென்றாரா என்று விசாரிக்க, புத்தகத்தைக் காணும் லியானா கண்ணில் ஒளி. அப்புத்தகம் தனது என்றும், தனக்கு அது வேண்டும் என்றும் அவள் சொல்ல, மறுக்கும் கார்ஸோவுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறாள். இருந்தும் கார்ஸோ, அவளைத் தவிர்த்துவிடுகிறார்.
மற்ற இரண்டு புத்தகங்கள் ஐரோப்பாவில் இருப்பதால், அங்கு செல்ல ஆயத்தமாகிறார் கார்ஸோ. அப்போது தான், விசித்திரமான பல சம்பவங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நடக்க ஆரம்பிக்கின்றன.
அந்தச் சம்பவங்கள் என்ன? கார்ஸோவுக்கு வெற்றி கிடைத்ததா? லூஸிஃபர் என்ன ஆனான் ஆகிய கேள்விகளுக்கு விடை வேண்டுமென்றால், படத்தைப் பார்க்க வேண்டியதுதான்.
இந்தப் படம், முழுக்கவுமே செஃபியா வண்ணத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆரம்ப நிமிடங்களிலேயே எங்களின் கவனத்தைக் கவர்ந்து , படு விறுவிறுப்பாகச் செல்ல ஆரம்பித்துவிட்டது. படத்தின் முக்கால்வாசிப் பகுதிவரை, கார்ஸோ, தனக்கு நேரும் சம்பவங்களுக்கு எதிர்வினை புரிவதிலேயே நேரத்தைச் செலவிடுகிறார். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்துதான், தனது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்பட ஆரம்பிக்கிறார்.
அதேபோல், படத்திலும் சில வித்தியாசமான கதாபாத்திரங்கள் உண்டு. கார்ஸோவுடனே படம் முழுக்க வரும் பச்சைக் கண் அழகியைக் கவனியுங்கள்.
ஆனால், ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு சுவாரஸ்யமாக ஆரம்பித்ததோ, அவ்வளவுக்கவ்வளவு ஏமாற்றத்தையும் இப்படம், இறுதி நிமிடங்களில் அளிக்கக்கூடும். இதனை நினைவு வைத்துக்கொண்டு, படத்தைப் பாருங்கள்.
படத்தின் இயக்குநர், ரோமன் பொலான்ஸ்கி. ஆம். நாம் ஏற்கெனவே பார்த்த Chinatown படத்தின் இயக்குநர். பியானிஸ்ட் என்ற அருமையான படத்துக்கு உரியவர். சென்ற வருடம், எழுபத்தேழில் செய்த ஒரு பீடஃபைல் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர். மிக அருமையான ஒரு இயக்குநர்.
படத்தில், நமது கவனத்தைக் கவர்பவர், சந்தேகமில்லாமல் ஜானி டெப். லேசான அலட்சியத்தோடும், படு சீரியஸான முகத்தோடும் இவர் மேற்கொள்ளும் கார்ஸோவின் பயணத்தை, நம்மால் ஒவ்வொரு நிமிடமும் சுவாரஸ்யத்தோடு ரசிக்க முடிகிறது.
படத்தின் மிகப்பெரிய பலவீனம், இதன் இறுதி நிமிடங்கள். இந்த ரீதியிலான படங்கள், சொல்ல வரும் விஷயத்தைத் தெளிவாக நம் முன் விவரித்து விட வேண்டும். அதை விட்டுவிட்டு, வழா கொழகொழாவென்று எதையோ முன்வைத்தால், எப்படி ரசிக்க முடியும்?
இறுதி நிமிடங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சந்தேகமில்லாமல் இது ஒரு விறுவிறுப்பான படம்.
The Ninth Gate படத்தின் ட்ரெய்லர் இங்கே.
சூப்பர். இதான் நம்ம டேஸ்ட் உள்ள படம்.
பை தி வே, நீங்க ஜான் கார்பென்டரின் இன் த மவுத் அப் மேட்னஸ் என்ற படத்தை இன்னமும் பாக்கலியே? (அபோகலிப்ஸ் த்ரிலஜியில் கடைசி படம்?) அதுலயும் நம்ம சாத்தான் கதை ஆசிரியராக வருவார். படத்தின் ஆரம்ப காட்சிகளும், பில்ட் அப்-பும் சூப்பர் ஆக இருக்கும், முடிவு இந்த படத்தை போலவே சொதப்பும்.
செம படம். எனக்கு கடைசிக் காட்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தலை. ஆனா, படத்துல புத்தகம் வெச்சிருக்குறவங்க எல்லாரையும் பாக்கும் போது, இப்படி ஒரு நூலகம் அல்லது புத்தக அலமாரி எல்லார் வீட்டிலயும் இருக்கணும்னு நினைச்சேன். படத்தோட கதைய முடிஞ்ச அளவு தொடாம விட்டிருகீங்க. பாக்குறவங்க ரசிப்பாங்க.
கடவுள் = சாத்ததான் இந்த இந்த கதையை வச்சு ஒரு 212121 படம் வந்திருக்குமா? 🙂
தி ஓமன் சீரிஸ் ரொம்பவே பிடித்திருந்தது. விறுவிறுப்புக்கு கியாரண்டி கொடுத்துதால இதையும் பார்க்கிறேன் 🙂
Padam nethu than parthen lastla ore mokkai………………….ana jony depp rombha nalla panni irupparu………………….thanks to KARUNDHEl
இந்த மாதிரி படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா முடிவு சரியில்லன்னு சொல்றீங்க! பார்க்கலாம்!
Nice to read … I hope nice to see…
புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா.
புத்தாண்டை ரோமன் பொலான்ஸ்கியின் படைப்புடன் தொடங்கியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
நண்பரே,
விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் இப்போது என்ன ஆனார்!? பதிவின் ஆரம்ப பகுதியில் நீங்கள் வழங்கியிருக்கும் தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது. சிறப்பான ஆக்கம்.
அப்ப கண்டிப்பா பாக்கணுமே
Romba arrumaya eluthirukeenga…. Nannum intha padam pathirukeen…
DVD கடையில் இந்த அட்டையை பார்த்தேன். ஆனா நம்ம ஆளுங்க அதில் ரோமன் போலன்ஸ்கி பேரை போடாம விட்டதால எதோ பேய் படம் என்று பயந்து கீழே போட்டுட்டேன். ஆனா கதை சொல்ல துவங்குவது வரை நீங்க கொடுத்த துவக்கக் உரையை இந்த பதினெட்டு பட்டியில் யாரும் கொடுத்தது இல்லீங்க…இல்லீங்க…இல்லீங்க…SIMPLY SUPERB….:)
Raja,
Vikravandi Ravichandran books ethavathu markattla kidaikuda?
நானும் முதலில் படித்த ஆவிகள் சம்பந்த பட்ட புத்தகம் இது தான். எங்கள் ஊர் லைப்ரரியில் இருந்தது. இப்போது காணவில்லை.
நான் நிறைய விசயத்தில் பார்த்து விட்டேன். நமக்குள் ஏகப்பட்ட ஒற்றுமைகள். நண்பரே.
பெரிய இயக்குனரும் பெரிய நடிகரும் சேர்ந்து குடுத்த படங்களுள் என்னை பெரிதாக பாதிக்காத படம் இது. ஒருவேளை இந்த படம் பார்த்த சமயத்தில் (கிட்டத்தட்ட அதே வாரம் அல்லது மாதம்) JOHNNY DEPP ன் படம் SECRET WINDOW னு பாத்தேன். எனக்கு பிடிக்காத genre அது (இதுக்கு முக்கிய காரணம் DAVID LYNCH ன் LOST HIGHWAY , MULLHOLLAND DRIVE மற்றும் DAVID பின்சேர் ன் FIGHT CLUB ) ஏனோ எனக்கு இந்த PSYCHOLOGICAL THRILLER பிடிக்கல. (ஒரு வேலை DAVID பெயர் வச்சவங்கல்லாம் இந்த genre படம் எடுபாங்கலோ) மாந்திரீகம் மாதிரியான விஷயமா இருந்தும் படம் திருப்தி கரமா இல்ல.