Not One Less (1999) – Chinese

by Karundhel Rajesh June 20, 2012   world cinema

முன்குறிப்பு – தமிழ்ஸ்டுடியோ டாட் காம் இந்த வருடம் மே மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடத்திய குழந்தைகள் திரைப்பட விழாவுக்கான புத்தகத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. புத்தகம் விரைவில் வெளியாகும்.


உலகப்பட ரசிகர்கள், சைனாவின் ஸாங் யிமோவை (Zhang Yimou) மறக்கவே முடியாது. பல்வேறு விதமான பின்னணிகளில் பல அருமையான படங்கள் எடுத்திருப்பவர். சைனாவின் மண்ணின் மைந்தர்கள் எப்படித் தங்களின் வாழ்வாதார பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதே இவரது பல படங்களின் மைய இழையாக இருப்பதும் இவரது ரசிகர்களுக்குத் தெரிந்த விஷயமாக இருக்கும். திரைப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கும்போதே மேடை நாடகங்களையும் இவர் தொடர்ந்து இயக்கிக்கொண்டிருந்தார். புகழ்பெற்ற இத்தாலியன் இசையமைப்பாளர் ஜாகோமோ புச்சினி (Giacomo Puccini)யின் டுராண்டோ (Turandot) என்ற ஆப்ராவை இயக்கியது, யிமோவின் மேடை வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. இந்த ஆப்ராவுக்கு இசை மேற்பார்வை, ஸுபின் மேத்தா. டுராண்டோ மட்டுமல்லாமல், இன்னும் சில புகழ்பெற்ற ஆப்ராக்களையும் இயக்கியுள்ளார் யிமோ.

தனது திரைவாழ்வின் மத்தியில் யிமோ இயக்கியிருக்கும் ஒரு படத்தைப் பற்றிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அதற்கு முன், இந்தப் படம் எடுக்கப்பட்ட பின்னணியை சற்று நோக்குவோம். அறுபதுகளில், மாசேதுங்கின் கலாச்சாரப் புரட்சி இயக்கம் சைனாவெங்கும் வலுக்கட்டாயமாகப் பரப்பட்டுக்கொண்டிருந்தது. இந்த இயக்கக் கோட்பாட்டின்படி, சோஷலிஸம் மக்களின் மேல் திணிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர் எனலாம். மக்களின் மத்தியில் மட்டுமன்றி, அரசியலிலும் இரக்கமின்றி இந்த இயக்கம் பின்பற்றப்பட்டது. ஆதலால், அனுபவம் மிக்க பல அரசியல்வாதிகள், சோஷலிசத்திலிருந்து பிறழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர். அரசுப் படைகளால் கிட்டத்தட்ட சாமானிய மக்கள் அனைவருமே துன்புறுத்தப்பட்டனர். பெண்கள் சர்வசாதாரணமாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகினர். தில்லியில் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியில், ஒரு தலைநகரமே முற்றிலுமாக வேறு ஒரு நகரத்துக்கு மாற்றப்பட்டதுபோல, இந்த இயக்கத்தின் கீழ், நகரங்களிலிருந்த பல இளைஞர்கள், கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். கலாசார அடையாளங்கள் முற்றிலுமாகத் துடைத்தெடுக்கப்பட்டன. சரித்திரப் புகழ்மிக்க பல அடையாளச்சின்னங்கள் அழிக்கப்பட்டன. 1966லிருந்து 1969 வரை மூன்றே வருடங்கள் (அதிகாரபூர்வமாக) இந்த இயக்கம் செயல்பட்டாலும், அது விட்டுச்சென்ற கோரங்கள் பல. 1969ல் இந்த இயக்கம் முடிவடைந்ததாக மாசேதுங்கினால் அறிவிக்கப்பட்டாலும், இந்த இயக்கம் முற்றிலுமாக வேரறுக்கப்பட்ட ஆண்டு, 1978. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் மறைமுகமாக அரசு ஆதரவின்கீழ் செயல்பட்டுக்கொண்டிருந்தது இந்த இயக்கம்.

மேலே எழுதப்பட்டிருப்பது, சைனாவின் ’கலாச்சாரப் புரட்சி’யின் மிக சுருக்கமான வரலாறுதான். அதைப்பற்றி எழுதப்புகுந்தால், ஒரு புத்தகமே எழுதலாம்.

மாசேதுங்கின் பைத்தியக்காரத்தனமான இந்த இயக்கத்தினால் அடிப்படைப் படிப்பையே இழந்த சைனாவின் குடிமக்கள் அனேகம் பேர். இதனால், 1986ல் ஆட்சியில் இருந்த தேசிய மக்கள் காங்கிரஸ், ஒரு சட்டத்தை இயற்றியது. எந்த ஒரு குடிமகனோ அல்லது குடிமகளோ, குறைந்த பட்சம் ஒன்பது வருடங்களாவது அடிப்படைப் படிப்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பதே இந்த சட்டம். ஆனால், அடுத்த சில வருடங்களில், இந்த சட்டம் பின்பற்றப்படவேயில்லை என்பதை அரசாங்கம் மிகத் தாமதமாக உணர்ந்ததால், 1993ல் இருந்து 2000 வரை, இந்தச் சட்டம் மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.
குறைந்தபட்சம் ஒன்பது வருடப் படிப்பு என்ற இந்த நல்ல விஷயம்,கிராமப்புறங்களில் பின்பற்றப்படவில்லை. காரணம், கிராமங்களில், பள்ளியில் இருந்து நின்றுவிட்டு, வேலைகளில் சேர்ந்தனர் குழந்தைகள். குடும்ப ஏழ்மையே காரணம். ஒருவேளை குழந்தைகள் வகுப்புகளில் நிறைந்திருந்தாலும், கல்வித்தகுதி வாய்ந்த ஆசிரியரை வேலைக்கு அமர்த்துவதும் கிராமங்களில் குதிரைக்கொம்பாகவே இருந்தது.
இத்தகைய பின்னணியில்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.


படத்தின் துவக்கத்தில், ஒரு சிறுபெண், பெரிய மூட்டை ஒன்றைத் தூக்கிக்கொண்டு, அழுக்கான கிராமம் ஒன்றுக்கு வருகிறாள். அங்கு இருக்கும் ஒரே பள்ளியின் ஒரே வாத்தியாரைப் பார்த்துப் பேசுகிறாள். வெய் (Wei) என்ற பக்கத்து கிராமத்திலிருந்து வந்திருப்பதாகவும், மேயரிடம் ஏற்கெனவே பேசிவிட்டதாகவும் சொல்கிறாள் அப்பெண். அப்பாவித்தனமான அந்தப்பெண்ணை, கடுமையாகக் கேள்வி கேட்கிறார் ஆசிரியர். அதாவது, ஆசிரியரின் தாய் நோய்வாய்ப்பட்டிருப்பதால், பள்ளியில் வேறு ஒரு ஆசிரியர் ஒரு மாதத்துக்குத் தேவைப்படுகிறது. தனது பள்ளியில் சில வகுப்புகள் படித்திருக்கும் இந்தப் பெண்மட்டுமே அந்த வேலைக்கு இதுவரை கிடைத்திருக்கிறாள். அவளது வயதோ பதிமூன்று மட்டுமே. ஆசிரியருக்குக் கோபம் வருகிறது. ஆனால் வேறு வழியும் இல்லை. அவர் கிளம்பியே ஆகவேண்டும். மேயரிடம் சென்று சண்டையிடுகிறார் ஆசிரியர். மேயரோ, வேறு யாரும் கிடைக்கவில்லை என்றும், இந்தப் பெண் வேண்டாம் என்றால் அந்த ஆசிரியர் விடுப்பே எடுத்துக்கொள்ளாமல் இங்கேயே இருக்கட்டும் என்றும் சொல்லிவிட, பள்ளிக்கே அந்தப் பெண்ணுடன் (சிறுமியுடன்) திரும்பிவருகிறார் ஆசிரியர்.

வகுப்பறையினுள்ளே, அந்தப் பெண்ணுக்கு என்னதான் தெரியும் என்று ஆசிரியர் வினவ, கலாச்சாரப் புரட்சியின் மாசேதுங்கைப் புகழும் பாடல் ஒன்றைத் தவறாகப் பாடுகிறாள் அந்தச் சிறுமி. அவளது பெயர், வேய் மின்ஸி. அவளிடம் தனது புத்தகத்தைக் கொடுக்கும் ஆசிரியர், தினமும் ஒரு அத்தியாயத்தை கரும்பலகையில் எழுதச் சொல்லி, அதனை எழுதிமுடிக்கும் வரை எவரையும் வெளியே விடக்கூடாது என்றும் சொல்கிறார். இதற்குக் காரணம், நாற்பது பேர் இருந்த அந்தப் பள்ளியில், பத்துபேர் ஓடிவிட்டதேயாகும். இன்னும் பலவிதமான கட்டளைகள் கொடுக்கும் ஆசிரியர் (’மிகவும் குட்டியாக எழுதாதே; அதேசமயம் பெரிதாகவும் எழுதாதே. கழுதையின் விட்டையின் அளவு எழுத்துக்கள் இருந்தால்தான் சரியாக இருக்கும்’), ஒரு மாதத்துக்குத் தேவையான சாக்பீஸ்களை அவளிடம் கொடுக்கிறார். ஒரு நாளுக்கு ஒன்று என்ற அளவில், மொத்தம் 26. நான்கு ஞாயிறுகள் விடுமுறை. அவள் தங்குவதும் சமைத்துச் சாப்பிடுவதும் அந்தப் பள்ளியிலேயேதான். திரும்பிச்செல்லும் ஆசிரியரிடம், ஐம்பது யுவான்கள் தனது சம்பளமாகக் கேட்கிறாள் வேய் மின்ஸி. தன்னிடம் பணம் இல்லை என்றும், தனது சம்பளமே ஆறு மாதங்களாக வரவில்லை என்றும் சொல்லும் ஆசிரியர், பணம் வேண்டுமானால், தன்னிடம் கேட்கச்சொல்லிய மேயரிடமே வாங்கிக்கொள்ளுமாறு சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.

இதன்பின்னர்தான் படம் துவங்குகிறது. குட்டிச்சாத்தான்களாக விளங்கும் குழந்தைகளை எப்படி வேய் சமாளிக்கிறாள் என்பதே ஒரு கவிதையைப் போல் செல்கிறது. பாடங்களை கரும்பலகையில் எழுதிவிட்டு வெளியில் காவல் அமர்கிறாள் வேய். யாரையும் வெளியே விடுவதில்லை. இந்தக் கொள்கையில் அவள் எவ்வளவு உறுதியாக இருக்கிறாள் என்றால், விளையாட்டுப் பள்ளி ஒன்றுக்குச் செல்ல இருக்கும் சிறுமி ஒருத்தியை இந்தப் பள்ளியில் இருந்து விட்டுவிடக்கூடாது என்று நினைத்து அவளைக் கொண்டுசெல்லும் காரின் பின்னாலேயே துரத்திக்கொண்டு வேய் ஓடும் அளவு.

வகுப்பில் ஸாங் ஹூய்கே என்ற குறும்பன் திடீரென்று ஒருநாள் காணாமல் போகிறான். ’ஸாங்ஜியாகு’ என்ற பக்கத்து ஊருக்கு வேலைதேடி அவன் சென்றிருப்பதாக வேய்க்குத் தெரியவருகிறது. வகுப்பிலிருந்துதான் யாரையும் வெளியே விட்டுவிடக்கூடாது என்று ஆசிரியர் இவளுக்கு உத்தரவு போட்டிருக்கிறாரே? ஆகையால், அந்த ஊருக்குச் சென்று அவனைத் திரும்பக் கூட்டிவரவேண்டும் என்று மேயரிடம் பணம் கேட்கிறாள் வேய். ஆனால், மேயர் வழக்கப்படி மறுத்துவிடுகிறார். ஆகவே, பிற குழந்தைகளைத் திரட்டி, பணத்தை எப்படியாவது சம்பாதித்துவிடுவது என்று செயலில் இறங்குகிறாள் வேய். பக்கத்து செங்கல்சூளைக்குச் சென்று, செங்கற்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றினால் பணம் கிடைக்கும் என்பதால், குழந்தைகளை வைத்து இந்த வேலையைச் செய்கிறாள். மிகுந்த பேரத்துக்குப் பிறகு, இவர்களுக்கு பதினைந்து யுவான் கிடைக்கிறது. குழந்தைகள் மிகவும் தாகமாக இருப்பதாகச் சொல்லவே, பஸ் டிக்கெட்டுக்கு ஒன்பது யுவான்களைக் கழித்துக்கொண்டு, பாக்கி ஆறு யுவான்களுக்கு குளிர்பானம் வாங்குகிறாள் வேய். அவற்றை ஆனந்தமாக அந்தக் குழந்தைகள் ஒருவர் மாற்றி ஒருவர் அருந்துகின்றன.

பேருந்து நிலையம். டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது. இவளிடம் போதிய பணம் இல்லை என்பதால், நடந்தே பக்கத்து ஊருக்குச் செல்கிறாள் வேய். அங்கு, ஓடிப்போன சிறுவன் இருக்குமிடத்தை விசாரித்துக்கொண்டு செல்கிறாள். ஆனால், அவன் சில நாட்களுக்கு முன்னர் புகைவண்டி நிலையத்தில் தொலைந்துபோனது அப்போதுதான் அவளுக்குத் தெரிகிறது. தொலைந்தவனைத் தேடுவதற்குப் பல உபாயங்களைக் கையாள்கிறாள் வேய். ஆனால், எதுவுமே பலிப்பதில்லை. ஆகவே, காணாமல் போனவனைப் பற்றிய அறிவிப்பு கொடுப்பதற்காக, தொலைக்காட்சி நிலையத்துக்குச் செல்கிறாள் அவள். அங்கே, அவளுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைப்பதில்லை. நிலைய நிர்வாகியின் அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்லமுடியும் என்பதால், நாள்முழுக்க வெளியிலேயே கழிக்கிறாள் வேய். அங்கேயே உறங்கியும் போகிறாள். மறுநாள் வரும் நிர்வாகி, அவளைக் கண்டு பரிதாபப்பட்டு உள்ளே அழைத்துச்செல்கிறார்.

வழக்கப்படி, அறிவிப்பு செய்யப் பணம் வேயிடம் இல்லை. எனினும், அவள் மேல் அன்பு கொண்ட நிர்வாகி, கிராமக் கல்வி குறித்த ஒரு விவாத நிகழ்ச்சியில் அவளைப் பங்கேற்க வைக்கிறார். அவளிடம் அவளது கிராமத்து நிலைமையைப் பற்றிப் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஓரிரு வார்த்தைகளே பேசுகிறாள் வேய். அப்போது, தொலைந்துபோன சிறுவனுக்கு இவள் சொல்ல விரும்பும் செய்தி என்ன என்று கேட்கப்படுகிறது. கேமராவை உற்றுப்பார்க்கும் வேயின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

“எங்கே சென்றுவிட்டாய் ஸாங்? எங்கெல்லாமோ உன்னைத் தேடிவிட்டேன். எனக்கு மிகவும் பயமாக உள்ளது. தயவுசெய்து திரும்பிவிடு ஸாங்” என்று அழுகையுனூடே பேசும் வேயின் இந்த நிகழ்ச்சியை, தெருவில் அனாதையாகத் திரிந்துகொண்டிருக்கும் ஸாங் எதிர்பாராவிதமாகப் பார்க்க நேர்கிறான். தன்மீது அன்பு வைத்து தன்னைத் தேடி வந்திருக்கும் வேயின் கண்ணீர், அவனது கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது. இருவரும் சேர்கிறார்கள்.

தொலைக்காட்சி நிலையத்தாரின் வேனிலேயே கிராமம் திரும்புகிறார்கள் வேயும் ஸாங்கும். இந்த நிகழ்ச்சியைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அனைவரும், பல பொருட்களை இந்தப் பள்ளிக்காக அளித்திருக்கின்றனர். அத்தனை பொருட்களையும் இந்த வேனில் ஊருக்குக் கொண்டுவருகிறாள் வேய். வரும்வழியில், ஸாங்கைப் பேட்டி எடுக்கிறார்கள். வளர்ந்து பெரியவனானதும், வேய்க்குப் பல பொருட்களை வாங்கித் தரப்போவதாகச் சொல்லும் ஸாங்கைப் பார்த்து, எளியதொரு சிரிப்பைப் பரிசாகத் தருகிறாள் வேய்.

பல பாக்கெட்கள் வண்ணச் சாக்பீஸ்களை குழந்தைகளுக்குத் தருகிறாள் வேய். கரும்பலகையில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு எழுத்தை ஒவ்வொரு வண்ணத்தில் எழுத, உணர்ச்சிமயமான இசையோடு படம் முடிகிறது.

இந்தப் படத்தின் பெரியதொரு பலம், தொழில்முறை நடிகர்களை அமர்த்தாது, எளிய கிராம மக்களையே நடிக்க வைத்த ஸாங் யிமோவின் திறமைதான். ஒவ்வொரு காட்சியிலும், நடிக்கத் தெரியாமல் மிக இயல்பாக எதிர்வினை செய்யும் இந்த அப்பாவித்தனமான மனிதர்களின் முகங்களையும் அவற்றில் அரும்பும் புன்னகைகளையும் ஒரு கணம் கவனித்தாலே மனம் இலகுவாவதைத் தவிர்க்க முடியாது. அதேபோல் கதாநாயகி வேய்யாக நடித்திருக்கும் பெண், இப்படத்தைப் பார்ப்பவர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டுவிடுவதைக் காணலாம். குறிப்பாக, இறுதியில் தொலைக்காட்சியில் அழும் காட்சி, மற்றும் வேனில் ஊருக்குத் திரும்பிவருகையில், தனக்கு மலர்கள் தரப்போவதாகச் சொல்லும் சிறுவன் ஸாங்கைப் பார்த்து வெள்ளந்தியாக இப்பெண் சிரிக்கும் காட்சி ஆகிய இரண்டு காட்சிகளே போதுமானவை.

இப்படத்தின் மூலம், சமகால சைனாவின் கல்விப் பிரச்னையைப் பேசியிருக்கிறார் ஸாங் யிமோ. இரானிய இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தாமியின் படங்களைப் பார்த்துதான் இந்தப் படத்தை எடுத்ததாக இயக்குநர் யிமோ சொல்லியிருக்கிறார். அதாவது, கியரோஸ்தாமியின் இயல்பான படமெடுக்கும் முறை.

எப்படி மாசேதுங் அதிகாரத்தால் மக்களைச் சிறைப்படுத்தினாரோ, அப்படி இந்தப் படத்திலும் அதிகார மையங்கள் சில காட்டப்படுகின்றன. கிராம மேயர், தொலைக்காட்சி அலுவலகம், புகைவண்டி நிலையத்தில் வேலை செய்யும் மனிதன் போன்ற கதாபாத்திரங்களை உதாரணமாகச் சொல்லலாம். ’கலாச்சாரப் புரட்சி’ என்ற பெயரில் எளிய கிராமிய மனிதர்களின்மேல் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையைப் போலவே, இப்படத்திலும் சிறுமி வேய் அனுபவிக்கும் கஷ்டங்களையும், இந்த அதிகார மையங்கள் அவளுக்குக் கொடுக்கும் இன்னல்களையும் விரிவாகவே இப்படத்தில் காணமுடியும்.

பல்வேறு திரைப்பட விழாக்களில் எக்கச்சக்கமான பரிசுகளை அள்ளியிருக்கிறது இப்படம். இயக்குநர் ஸாங் யிமோவுக்கு அழியாப்புகழை ஏற்படுத்தித் தந்திருக்கும் இப்படம், ஒரு அருமையான அனுபவம் என்பதில் சந்தேகமே இல்லை.

Not One Less படத்தின் ட்ரெய்லர் இங்கே.

பி.கு – கட்டுரைக்கான பல்வேறு செய்திகள் எனது மூளையில் இப்படத்தைப் பற்றி நினைத்ததும் டகாலென்று தோன்றிவிடவில்லை. இணையத்தை பீராய்ந்தே இப்படத்தைப் பற்றிய பல பின்னணிச்செய்திகளையும் அறிந்துகொண்டேன். ஆகவே இணையத்துக்கு ஒரு நன்றி.

  Comments

17 Comments

  1. Rajesh, I am more interested in reading your reviews than watching the movies itself. The reason being that I cant see many observations that you make about the movie. I envy you..

    Reply
  2. நண்பரே!
    மேயர் என்ற மொழி பெயர்ப்பு சரியாக இருக்கிறதா?
    நம்மூரில் மேயர் என்பவர் மாநகராட்சியோடு அடையாளப்படுத்தப்படுபவர்.
    அவர் அந்த மலை கிராமத்திற்க்கு தலைவர்…
    அவரை பஞ்சாயத்து தலைவர் அல்லது கிராம அதிகாரி என மொழி பெயர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
    நீங்கள் விக்கிப்பீடீயாவை அப்படியே மொழி பெயர்த்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.
    இது பரவாயில்லை .
    சொல் குற்றம்.

    இப்படத்தை கோவையில் நானே திரையிட்டேன்.
    அந்தளவுக்கு என்னை ஆக்ரமித்த படம்.

    அக்னிபுத்திரன் உள்ளிட்ட மிகப்பெரிய கம்யூனிஸ்ட் ஸ்காலர்ஸ் படம் பார்க்க வந்திருந்தார்கள்.
    மாவோ 1976ல் மறைந்த பிறகு… பின்னால வந்த தலைவர்கள் அவரது வழிமுறைகளில் மாறிவிட்டார்கள்.
    அந்த கோளாறை இப்படம் எடுத்து காட்டுகிறது.
    படத்தின் காலம் 1990.
    கோகோ கோலா கிராமங்களில் செலுத்தும் வன்முறையை படத்தில் ஒரு காட்சியில் முகத்தில் அறைந்தாற்ப்போல் சொல்லியிருப்பார்.
    மாவோ கொண்டு வந்ததல்ல கோக்கோ கோலா…

    உங்கள் விமர்சனத்தில் கருத்துப்பிழை இருக்கிரது.
    நிச்சயமாக இப்படம் மாவோவை விமர்சிக்கவில்லை.
    அவரது வழிமுறையை பின்பற்றாத தலைவர்களைத்தான் விமர்சனம் செய்துள்ளார் ஜாங்க் யி மூ.

    இது குறித்து தொடர்ந்து ஆரோக்கியமாக விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

    Reply
  3. To Live என்ற படத்தில் ஜாங்க் யி மூ… மாவோவை விமர்சித்திருந்தார்.
    சிவப்பு புரட்சி… கலைகளை எவ்வாறு அழித்தது என்று மிக விரிவாக…அப்பட்டமாக காட்டியிருப்பார்.

    Reply
  4. thalaiva u great i just read the review fullu & watch the trailer i get the feel of watching the full movie…….and question to u y like tis trailer nt coming in tamil cinema…….and thanks fr introducing great directors…

    Reply
  5. @ Vaasagan – மிக்க நன்றி. எனக்குப் பிடித்த படங்களை என் பார்வையில் வழங்குவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதை எந்த திரைப்பட ரசிகனுமே செய்யலாம் நண்பா.. நீங்களும்தான்.

    @ Bala Ganesan – தமிழில் இப்படியெல்லாம் வருவது மிக அரிது. ஏனெனில், நல்ல இயக்குநர்கள் இங்கு இல்லை. ஓரிருவர் இருக்கிறார்கள். எனினும், விரைவில் அந்த நிலை மாறும் என்று எதிர்பர்ப்போமே.

    Reply
  6. @ உலக சினிமா ரசிகரே – உங்கள் விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. இதோ எனது கருத்துகள்.

    1). //மாவோ 1976ல் மறைந்த பிறகு… பின்னால வந்த தலைவர்கள் அவரது வழிமுறைகளில் மாறிவிட்டார்கள். அந்த கோளாறை இப்படம் எடுத்து காட்டுகிறது.//

    இங்கு நான் மாறுபடுகிறேன். ஏனெனில், மாவோ தனது காலத்தில் கொண்டுவந்த கலாச்சாரப் புரட்சி என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் என்பது மிக எளிதில் விளங்கிவிடுகிறது. இதற்கு நாம் முதலில் கலாச்சாரப் புரட்சி என்பது என்ன என்று பார்த்துவிட வேண்டும். கலாச்சாரப் புரட்சி என்பது மிக எளிதாக சொல்வதென்றால், நான் இந்தக் கட்டுரையில் விளக்கியதுபோல – ‘மக்களின் மத்தியில் மட்டுமன்றி, அரசியலிலும் இரக்கமின்றி இந்த இயக்கம் பின்பற்றப்பட்டது. ஆதலால், அனுபவம் மிக்க பல அரசியல்வாதிகள், சோஷலிசத்திலிருந்து பிறழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர். அரசுப் படைகளால் கிட்டத்தட்ட சாமானிய மக்கள் அனைவருமே துன்புறுத்தப்பட்டனர். பெண்கள் சர்வசாதாரணமாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகினர். தில்லியில் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியில், ஒரு தலைநகரமே முற்றிலுமாக வேறு ஒரு நகரத்துக்கு மாற்றப்பட்டதுபோல, இந்த இயக்கத்தின் கீழ், நகரங்களிலிருந்த பல இளைஞர்கள், கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். கலாசார அடையாளங்கள் முற்றிலுமாகத் துடைத்தெடுக்கப்பட்டன. சரித்திரப் புகழ்மிக்க பல அடையாளச்சின்னங்கள் அழிக்கப்பட்டன’.

    ஆகவே, மாவோ கொண்டுவந்த இந்த கொடிய ‘புரட்சி’ என்பதை விமர்சிக்கும் படமாகத்தான் இப்படம் இருக்கிறது என்று சொல்கிறேன். இதற்கும் காரணம், இந்தக் கட்டுரையிலேயே இருக்கிறது. இந்த இயக்கத்தின் காரணமாகத்தான் பலரும் அடிப்படை வசதிகளையும் படிப்பையும் இழந்தனர். அதனால்தான் இந்தப் படத்தில் காட்டப்படும் கிராமப் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர் தட்டுப்பாடு.

    அவர் வழி வந்த தலைவர்கள் மாறியது நல்லதுதான். அதனால்தான் பலரும் கல்வி பெற முடிந்தது.

    அடுத்து

    2). //நிச்சயமாக இப்படம் மாவோவை விமர்சிக்கவில்லை. அவரது வழிமுறையை பின்பற்றாத தலைவர்களைத்தான் விமர்சனம் செய்துள்ளார் ஜாங்க் யி மூ//

    உங்கள் வாதப்படி, மாவோவின் வழிமுறையைப் பின்பற்றாத தலைவர்கள் என்பது, இந்தக் கலாச்சாரப் புரட்சியைப் பின்பற்றாத தலைவர்கள் என்று ஆகிறது. கலாச்சாரப் புரட்சியைப் பின்பற்றாத தலைவர்களால்தான் அடிப்படைக் கல்வியைப் பற்றிய சட்டம் இயற்ற முடிந்தது. அதனால்தான் பலரும் இழந்த கல்வியைப் பெறும் முயற்சியில் ஈடுபடமுடிந்தது. ஒருவேளை இந்தத் தலைவர்களும் மாவோவைப் பின்பற்றியிருந்தால், ஒரு மனிதன் கூட கல்வியைப் பெற்றிராத கொடிய சூழலே கவிந்திருக்கும்.

    ஆகவே, இந்தப் படம் மாவோவின் முன்யோசனையில்லாத கலாச்சாரப் புரட்சியின் விளைவுகளையே விமர்சிக்கிறது என்பது என் முடிவு.

    நன்றி

    Reply
  7. படத்தில்…எந்த இடத்தில் மாவோவுக்கு எதிராக சொல்லப்படுகிறது என்பதை தயவு செய்து விளக்க முடியுமா?

    Reply
  8. படத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் மாவோவுக்கு எதிரான கருத்துகள் வருகின்றன என்பதே இப்படத்தில் இல்லை. மாறாக, மாவோவின் பிடிவாதமான கொள்கைகளினால் மக்களுக்கு என்ன இன்னல் நேர்ந்தது என்பதே இப்படத்தின் கரு.

    படத்தின் முதலிலிருந்து இறுதிவரை கையாளப்படும் ‘கிராமத்தில் கல்வியின்மை’ என்ற பிரச்னையே மொத்தமாகவே மாவோவின் கலாச்சாரப் புரட்சியின் கொடிய விளைவுகளைப் பற்றித்தான் பேசுகிறது. கலாச்சாரப் புரட்சியின் விளைவாகவேதான் கல்வி கிராமப்புறங்களில் மறுக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தேசிய மக்கள் காங்கிரஸ், 1986 ல் கட்டாயமாக குறைந்த பட்சம் ஒன்பது வருட படிப்பாவது குடிமக்களுக்குத் தேவை என்று சட்டம் இயற்றியது. அதன் விளைவாகவேதான் இப்படம் அடிப்படைக் கல்வியைப் பற்றிப் பேசுகிறது.

    Reply
  9. நண்பரே…இந்தப்பதிவில் ஒரு பகுதியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.Zhang Yimou in this film provides a telling social commentary of the disastrous effects of the restoration of capitalism in China by the self-styled Communists. This indictment of the market orientation of the current regime is craftily veiled in the charm of simple traditional village ways. Even behind the glossy facades of Jiangjiakou City, one senses the palpably inhumane pressures of poverty and homelessness lurking in the background. The uplifting spirit radiating from the film, together with the optimistic conclusion (just the way Beijing likes it) is perhaps the winning formula in Zhang’s struggle against the purveyors of censorship in his country, at least in this instance.
    In an earlier interview on freedom of expression, Zhang commented: “Every director in China has a kind of censor inside his mind: even those independent film-makers who claim they only tell the stories they want to tell. If you are to live and work in China, automatically you have that self-censorship, even before you choose a subject or write a script.
    “If someone says, ‘I don’t care about the government, I just do what I want,’ this is not true. In order to survive, the best we can do is try to preserve as much of ourselves as we can, however little that may be, in our work.”
    This statement, together with his resolve to stay and work in China, portraying the most oppressed layers, is testimony to Zhang’s seriousness as a director and his desire to probe deeply beneath the veneer of Chinese society. He is not necessarily a consciously ‘political’ director, but one who seeks to reveal artistically the complexities of the society he cares about.
    In Not One Less, I believe that Zhang Yimou has managed to fulfil his objectives as a director in portraying a slice of reality of today’s China, without compromising his artistic intentions. This is partly because the plot leaves little scope for exposing the regime, apart from the evidently harsh social conditions, and thus allows for a relatively free rein in telling it in its completeness. This is a beautiful work about ordinary disadvantaged people told by a humanist who cares passionately about them.

    Reply
  10. நண்பரே. அந்தக் கட்டுரையை முழுதாகப் படித்தேன். இந்தக் கட்டுரைக்கு நேர் எதிராகவும் பல கட்டுரைகளைப் படித்தேன். ஒரு சில லின்க்குகள் தான் மேலே நானும் கொடுத்திருக்கிறேன். நண்பர் பால கணேசன், சில தகவல்கள் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். அதையும் பார்த்துவிடுவோம்.

    Reply
  11. நண்பர்களே..நாம் இப்படத்தைப்பற்றியும் அதன் இயக்குனரின் நோக்கம் பற்றியும் பேசுவது ஆரோக்கியமானதுதான். அதேநேரம், அரசியல் பேச முற்பட்டால், அது விவாதமாக மாறிவிடும். அது அவசியமற்றது என்பது என் கருத்தல்ல. எனினும், அரசியல், இயக்கம், போராட்டம், புரட்சி என்பது காலத்தை சார்ந்தது. அது நிகழ்ந்த காலத்தின் தன்மையை, தேவையை அது பிரதிபளிக்கும். ஆகையால் கால ஓட்டத்தில் அது விமர்சனத்துக்குள்ளாவது எங்கும் நிகழக்கூடியதுதான். இது எல்லா புரட்சிக்கும் இயக்கத்திற்கும் பொருந்தும். அது கியூபா புரட்சியாகட்டும் புலிகளாகட்டும், ஏன்? பெரியாரே இங்கு விமர்சிக்கப்படுகிறார். ஆகையால், நாம் அரசியலைத் தவிர்த்துவிட்டு இப்படத்தைப் பார்ப்போமானால், அப்படம் சொல்லும் செய்தியும் அதன் இயக்குனரின் செய்தியும் எடுத்துக்கொள்ள முடியும்.

    ஒரு படைப்பாளனாக யுமோ என்னை மிகவும் கவர்ந்தவர். என்வரையில் உலகின் சிறந்த இயக்குனர்களின் வரிசையில் முதலிடம் அவருக்குதான். அதற்கு காரணம், அவர் படங்களில் இருக்கும் வாழ்வியல். அவருடைய எல்லா படங்களும் சைனாவின் கலாச்சார பின்னனியின் அடிப்படையில் அமைந்த வாழ்வியலை பதிவு செய்திருக்கிறது.

    இதேப்போல இவரின் ‘The Road Home’ திரைப்படமும் கல்வியைப்பற்றிப் பேசுகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக அப்படம் இங்கே ஒரு காதல் படம் என்பதாக புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

    அவரின் மற்றப்படங்களைப்பற்றியும் எழுதுங்கள். நன்றி

    Reply
  12. இந்த படம் கண்டிப்பாக மாவோ வினால் பாதிகப்பட்ட மக்களை பற்றிய படமாகதான் பார்கிறேன். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலே மாவோ நமக்கு நினைவுக்கு வந்து விடுகிறார். இது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.

    Reply
  13. 1950’s இக்கு பிறகு வறுமையான, மோசமான சீனா என்றால் அது மாவோவைத் தானே குறிக்கும் ??

    Reply
  14. நன்றி விஜய். நீங்கள் சொல்வதும் உண்மைதான். இத்தகைய அரசியல் கருத்துகளில் நம்மை புகுத்திக்கொள்ளாமல், படத்தில் ஈடுபடுவோம். ரோட் ஹோம் படமும் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொன்றாக இவரது பிற படங்களை எழுத முயல்கிறேன். நன்றி.

    சிங்காரவேலன் – எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் அதற்கு மாற்றுக் கருத்துகளும் உண்டு என்பது இங்கே வந்துள்ள பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியும். நன்றி

    Reply

Join the conversation