Now or Never (2014) – France

by Karundhel Rajesh December 11, 2014   BIFFES 2014

Bangalore Film festival posts – 1

இனி கொஞ்ச நாட்களுக்கு இன்று முடிவடைந்த பெங்களூர் திரைப்பட விழாவில் நான் பார்த்த நல்ல படங்களைப் பற்றிய மினி கட்டுரைகள் வரும். இந்தப் படத்துடன் துவங்குவோம்.

உணர்வுரீதியாக ஒரு த்ரில்லரை இயக்குவது எப்போதுமே கொஞ்சம் கஷ்டம். கதாபாத்திரங்களின் நிலைமை, அவர்களது பிரச்னைகள் என்று பேச ஆரம்பித்தாலே அந்தப் படம் உடனடியாக வேகம் குறைந்து புஸ்ஸென்று ஆவதுதான் பல படங்களில் நேரும். ஆனால் நிஜவாழ்க்கையில் நமக்கு நிகழும் சில துயரமான சம்பவங்கள் எல்லாமே இப்படிப்பட்டதுதானே? அவற்றில் வேகமும் த்ரிலும் எங்கே இருக்கின்றன? அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு வேகமான திரைக்கதையாலும் கதாபாத்திரங்களின் உருவாக்கத்தாலும் இறுதிவரை நம்மைப் படத்துடன் பிணைப்பதே Now or Never (Maintenant Ou Jamais).

ஜூலியட் ஒரு பியானோ டீச்சர். அவளுக்கு அன்பான ஒரு கணவனும் (சார்லி), இரண்டு அழகான பிள்ளைகளும் உண்டு. சார்லி ஒரு வங்கியில் பணிபுரிகிறான். எந்தப் பிரச்னையும் இல்லாத சந்தோஷமான வாழ்க்கை. பகுதி நேரமாகப் பிள்ளைகளுக்குப் பியானோ கற்றுக்கொடுப்பதன்மூலம் கணவனும் பிள்ளைகளும் இல்லாத வார நாட்களின் அலுப்பான தருணங்களை ஜூலியட் சந்தோஷமாகக் கழிக்கிறாள். இந்த நிலையில் எவருக்குமே தோன்றும் சொந்தவீட்டுக் கனவு இந்தக் குடும்பத்துக்கும் தோன்றுகிறது (இந்தக் காட்சி படத்தின் துவக்கத்தில் வந்ததுமே, சொந்த வீடு கட்டுவதன் பிரச்னைகளைத்தான் இந்தப் படம் சொல்லப்போகிறது என்று எதிர்பார்த்து சந்தோஷமாக ஏமாந்தேன்).

ஃப்ரான்ஸுக்கு வெளியே அமைதியான ஒதுக்குப்புறத்தில் அழகான வீடு தயாராகிறது. அதற்காக வங்கிக்கடன் வாங்குகிறான் சார்லி. எல்லாமே சரியாகச் சென்றுகொண்டிருக்கிறது. வீட்டுக்காகப் பிற சாமான்களை ஷாப்பிங் செய்துகொண்டிருக்கிறாள் ஜூலியட். அப்போது அவளுக்குச் சார்லியிடம் இருந்து அழைப்பு வருகிறது. சார்லிக்கு வேலை போய்விட்டதாகத் தொலிபேசியில் சொல்கிறான். ஒரே நொடியில் ஜூலியட்டின் வாழ்க்கை மாறுகிறது. சார்லிக்கு வேறு வேலைகளும் கிடைக்காத சூழல். வேலை போய்விட்டதால் வங்கியில் இருந்து கடனுக்காக நெருக்கடி துவங்குகிறது. கையிருப்பில் இருக்கும் சேமிப்பும் மிகக்குறைவு. அதைவைத்துக்கொண்டு ஓரிரு மாதங்கள் கூட ஓட்டமுடியாத நிலை.

கொஞ்ச நாட்களில் ஜூலியட்டின் கனவு வீடு ஏலத்துக்கு வரப்போகிறது. சந்தோஷமான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, ஏராளமான கவலைகளுடன் சார்லியும் ஜூலியட்டும் வாழத் துவங்குகிறார்கள். இப்போதைய நிலையில் ஜூலியட்டின் பியானோ வகுப்புகளில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு நாணயமும் குடும்பத்துக்கு முக்கியம். ஜூலியட்டின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஏற்கெனவே அந்த வருடம் முடிந்ததும் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பதாகச் சொல்லியிருந்ததால், குழந்தைகளின் ஆசிரியர் ஜூலியட்டிடம் அதைப்பற்றிக் கேட்கிறார். இப்போதே முடிவெடுத்தால்தான் வரும் வருடத்தில் இவர்களுக்கான இடம் அந்தப் பள்ளியில் அப்படியே இருக்கும். இந்தப் பிரச்னையுடன் சேர்த்து, அடிக்கடி வீட்டுக்கு வரும் வங்கி அதிகாரிகள் பணத்தைப் பற்றியும் தவணைகள் பற்றியும் மிரட்டலான தொனியில் கேட்கும் சங்கடமும் சேர்த்து எப்போதும் சந்தோஷமாக இருந்த ஜூலியட்டை அதற்கு நேர் மாறாக மாற்றுகின்றன.

அப்போது ஒரு நாள், இரவில் தனியாக நடந்துவரும் ஜூலியட்டின் ஹேண்ட்பேகை யாரோ ஒருவன் பறித்துக்கொண்டு ஓடிவிடுகிறான். அவனுக்குப் பின்னால் ஓடி, குரல் எழுப்பக்கூட ஜூலியட்டால் முடிவதில்லை. அந்தப் பையில்தான் அவளது கார்ட்கள், செல்ஃபோன் ஆகியவை உள்ளன. கொஞ்சம் பணமும் (80 யூரோக்கள்). மறுநாள் போலீஸிடம் புகார் அளிக்கிறாள். ஓரிரு நாட்களில் போலீஸீடம் இருந்து அவளுக்கு அழைப்பு வருகிறது. திருடனைப் பிடித்தாயிற்று என்றும், ஒரு அடையாள அணிவகுப்பில் அவனைச் சரியாக ஜூலியட் அடையாளம் காட்டினால் அவனை உள்ளே தள்ளிவிடுவதாகவும் போலீஸ் அதிகாரி சொல்கிறார். அப்போதுதான் பரோலில் வெளிவந்திருக்கும் கிரிமினல் அவன் என்பது தெரிகிறது.

சிறையில் நடக்கும் அணிவகுப்பில் அவன் நிற்கிறான். ஜூலியட்டுக்கு அவனை நன்றாக அடையாளம் தெரிகிறது. ஆனால் அவனை அடையாளம் காட்டாமல், திருடன் அங்கே இல்லை என்று சொல்லி அவனை வெளியே விட்டுவிடுவதற்குக் காரணமாக இருந்துவிடுகிறாள்.

இதுதான் படத்தின் முக்கியமான காட்சி. இதன்பின்னால்தான் படம் ஒரு த்ரில்லராக மாறுகிறது. ஜூலியட் அந்தத் திருடனை ஏன் அடையாளம் காட்ட மறுக்கிறாள் என்பதற்குப் படத்தில் உறுதியான காரணம் உண்டு.

Leïla_Bekhti_Cannes_2011

ஜூலியட்டாக நடித்திருப்பது லெய்லா பெஹ்தி (Leïla Bekhti). இத்தனை இயல்பாக ஒரு நடிகையைப் பார்ப்பது கொஞ்சம் அரிதுதான் என்று தோன்றியது. ’உலகப் படம்’ என்று பரவலாக அறியப்படும் வகையான நீள நீள ஷாட்கள், மிஷ்கின் டைப் மூவ்மெண்ட்கள், வானத்தையே வெறித்துப் பார்ப்பது, வசனமும் இல்லாமல் இசையும் இல்லாமல் எதையோ செய்துகொண்டு இருப்பது – அதைப் பல நிமிடங்கள் காட்டி அலுப்பை ஏற்படுத்துவது என்பதெல்லாம் துளியும் இல்லாமல், எல்லாருக்கும் புரியும் விதமாக இருக்கும் படம் இது. இந்தப் படத்தின் பின்னணி இசையைக் கவனியுங்கள். நீங்கள் கவனிக்கவே தேவையில்லாமல் இசையே உங்களை கவனிக்க வைக்கும். இசை என்பது ஒளிப்பதிவைப் போல் ஒரு படத்தில் தனியாகத் தெரியாமல், படத்தின் கதையினுடனேயே படம் முழுக்கப் பயணப்படவேண்டும் என்பது என் கருத்து. இதில் அப்படித்தான் இருக்கிறது.

சில உலகப்படங்களைப் பார்க்கையில், தமிழில் இந்தப் படம் வந்தால் அவசியம் ஹிட் ஆகும் என்று தோன்றுமல்லவா? இது அப்படிப்பட்டது. ஆனால் இதில் இன்னும் சில மாற்றங்கள் செய்யவேண்டும். சென்னையில் அவசியம் பல இயக்குநர்களின் கண்ணில் படத்தான் போகிறது. விரைவில் தமிழில் (காப்பியாகத்தான்) எதிர்பார்ப்போம்.

படத்தின் இயக்குநர் ஸெர்ஜ் ஃப்ரைட்மேன் (Serge Frydman) பல படங்களுக்கு திரைக்கதை எழுதியதன்மூலம் பிரபலம்.

சென்னையின் திரைப்பட விழாவில் இது அவசியம் திரையிடப்படும். மறக்காமல் பாருங்கள். இங்கே படம் முடிந்ததும் பலத்த கரகோஷம் வாங்கிய படங்களில் இது ஒன்று.

350727

  Comments

3 Comments

  1. siva

    thk u

    Reply
  2. ANaND

    நீங்கள் எழுதிய விதத்திலே காட்சிகள் கண் முன்னே விரிகிறது … அருமை ….. டிரைலர் பாத்ததுக்கு அப்பறம் , ATM திருடன் , பேங்க் புருஷன் மூணுபேரும் சேர்ந்து கொள்ளை அடிக்க போறங்கன்னு நினைக்கிறன் ,,, !

    Reply
    • Jay

      She remembered me Rathi agnihotri…. 🙂 🙂

      Reply

Join the conversation