One Flew Over the Cuckoo’s Nest (1975) – English

by Karundhel Rajesh January 5, 2010   English films

ஜாக் நிகல்ஸன். உலகத் திரைப்பட வரலாற்றில், தலைசிறந்த நடிகர்களுக்குள் ஒருவர். பல வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கும் இவர், ஒரு மொக்கைப் படமாக இருந்தாலும், தனது நடிப்பால் பிரமாதப்படுத்தி விடுவதில் ஜித்தர். எத்தகைய வேடத்தையும் அனுபவித்து நடிக்கக்கூடியவர். எனது ஃபேவரைட் நடிகர்களில் ஒருவர். தனது திரைவாழ்க்கையின் உச்சத்தில் இவர் இருந்தபோது நடித்த ஒரு படத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

மனநல விடுதிகள் பற்றி நமது அபிப்ராயம் என்ன? நம் ஊரில், ஏர்வாடி போன்ற சித்ரவதைக் கூடங்கள் தான் பெரும்பாலும் உள்ளன. ஒரு மனநல விடுதியில் உள்ள மருத்துவர்களும் செவிலிகளும், அந்த மனநலம் குன்றியவர்களை (மாற்றுத்திறன் கொண்டவர்களை) எவ்வாறு நடத்துகிறார்கள்? இவர்களைப் பற்றிய அவர்கள் எண்ணம் எவ்வாறு உள்ளது? இத்தனை கேள்விகளுக்கும், நமக்குத் தெரிந்த பதிலையே சற்று நெகிழ்ச்சியாக சொல்லும் ஒரு படம் தான் இந்த ‘ One Flew Over the Cuckoo’s Nest ‘. ஹாலிவுட் சரித்திரத்திலேயே இதுவரை மூன்றே மூன்று படங்கள் தான், க்ராண்ட் ஸ்லாம் என்ற அனைத்து ஐந்து முக்கிய விருதுகளையும் (நடிப்பு – ஆண்; பெண், இயக்கம், சிறந்த படம், தயாரிப்பு) ஆஸ்கரில் பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று இந்தப்படம் (மற்ற இரண்டும் – It Happened One Night – 1934 மற்றும் The Silence of the Lambs – 1991).

இருமுறை ஆஸ்கர் வென்ற இயக்குநர் மிலாஸ் ஃபோர்மேன் இயக்கத்தில் (இதுதான் அவருக்கு முதல் ஆஸ்கர்) 1976ல் வெளிவந்த இப்படம், பல நிஜமான மாற்றுத்திறன் கொண்டவர்களையே நடிக்கவைத்து உருவான ஒரு படமாகும்.

படம், ஒரு விடிகாலையில் தொடங்குகிறது. சிஸ்டர் ரேட்செட், ஒரு மனநல மருத்துவமனையின் தலைமை நர்ஸ். அந்த மருத்துவமனைக்கு, பேட்ரிக் மெக்மர்ஃபி என்ற ஒரு கிரிமினல் அழைத்து வரப்படுகிறான். ரேப் முயற்சிக்கும் வன்முறைக்கும் தண்டனை அனுபவித்து வரும் மெக்மர்ஃபி, அவன் செய்த வன்முறைகளுக்குக் காரணம், அவன் சற்று மனநலன் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறான். அங்கு தலைமை மருத்துவர் அவனிடம் பேசுகிறார். அவரிடம் மிகவும் சகஜமாகப் பேசும் மெக்மர்ஃபியிடம், சிலநாட்கள் அங்கு இருக்கச்சொல்லி மருத்துவர் கூறுகிறார். அப்போதுதான் அவன் மனநலன் பாதிக்கப்பட்டவனா அல்லது அவ்வாறு நடிக்கிறானா என்பது தெரியும் என்றும் சொல்கிறார்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனிதர்கள், பலவிதம். செவிட்டு ஊமையான ஒரு பிரம்மாண்ட செவ்விந்தியன், மனைவியைச் சந்தேகப்படும் ஒருவர், எப்போதும் சோர்வாகவே காணப்படும் ஒருவர், சதா திக்கித்திக்கிப் பேசும் ஒரு இளைஞன், சக்கர நாற்காலியில் இருக்கும் வயதான ராணுவ அதிகாரி, யார் எது செய்தாலும், அதைத் தானும் செய்ய வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தையைப் போன்ற ஒரு மனிதன், எப்போதும் டென்ஷனாகும் ஒரு ஆள்.. இப்படிப் பல மனிதர்கள். அவர்களுக்கிடையே விடப்படும் மெக்மர்ஃபி ஒருவன் தான் தெளிவானவன் வேறு.

ஒவ்வொருவரிடமும் சிறுகச் சிறுக நெருக்கமாகிறான் மெக்மர்ஃபி. அவர்களுக்கும், எப்போது பார்த்தாலும் துறுதுறுவென்று இருக்கும் மெக்மர்ஃபியைப் பிடித்துப்போய் விடுகிறது. மெக்மர்ஃபிக்கு அங்குள்ள ஒரே பிரச்னை, சிஸ்டர் ரேட்சட் தான். அவள் ஒரு சர்வாதிகாரி. இரக்கமே இல்லாதவள். எப்பொழுது பார்த்தாலும் இறுக்கத்துடனே காணப்படுகிறவள். மெக்மர்ஃபி பேசும் நியாயத்தை அவள் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த விடுதியில் சற்று சந்தோஷத்தைக் கொண்டு வர மெக்மர்ஃபி செய்யும் செயல்கள் அவளுக்கு எரிச்சலை மூட்டுகின்றன.

அந்த விடுதியின் கடுமையான செயல்பாடுகளையும் விதிகளையும் மாற்றி, சற்று நெகிழ்வான சூழ்நிலையைக் கொண்டுவர மெக்மர்ஃபி முயல்கிறான். அந்த வருடத்திய பேஸ்பால் உலக ஸீரீஸ் மேட்சுகளைப் பார்க்கவேண்டும் என்றும், அது இரவில்தான் ஒளிபரப்பப்படுவதால், அந்த நேரத்தில் தாங்கள் படுக்கச் செல்லாமல், அந்தப் பந்தயங்களைப் பார்க்க விரும்புவதாகவும் சிஸ்டர் ரேட்சட்டிடம் சொல்கிறான். ஆனால், கல்நெஞ்சம் படைத்தவளான ரேட்சட், அவனுக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்காமல், தான் சொல்வதே அங்கு நடக்கவேண்டும் என்பதால், எந்தக் கருணையும் இல்லாமல் அந்தக் கோரிக்கையை மறுத்து விடுகிறாள். மேலும், அங்கு இருக்கும் அனைவரும் விருப்பப்பட்டால், அது நடக்கும் என்றும் சொல்லி, ஒரு வோட்டெடுப்புக்கு ஆவன செய்கிறாள். ஆனால், மெக்மர்ஃபியையும் இன்னொருவரையும் தவிர, வெறு யாரும் இதற்குக் கையை உயர்த்தாததனால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விடுகிறது.

மறுநாளும் மெக்மர்ஃபியின் விடாப்பிடியான பிடிவாதத்தால், ஒரு வோட்டெடுப்பு நடக்கிறது. இதற்குள் அங்குள்ளவர்கள் மெக்மர்ஃபியைச் சற்றுப் புரிந்துகொண்டுவிட்டதனால், பாதிப்பேர் கையை உயர்த்திவிடுகிறார்கள். ஆனாலும், சரியாகப் பாதிப்பேரே வோட்டுப்போட்டதனால், இம்முறையும் அவனது கோரிக்கை ஒத்திவைக்கப்பட்டு விடுகிறது. கடுப்பாகும் மெக்மர்ஃபி, டி.வி முன்னர் சென்று அமர்ந்துகொண்டு, ஒரு பந்தயத்தைப் பார்ப்பது போல் வர்ணனை செய்ய ஆரம்பிக்கிறான். மெல்ல மெல்ல அங்கு ஒவ்வொருவராக வரத்தொடங்குகிறார்கள். அனைவருக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்ள, அந்த இடமே சந்தோஷத்தினால் மலருகிறது. அனைவரும் கொண்டாட்டத்தில் குதிக்க ஆரம்பிக்கிறார்கள். இது ரேட்சட்டுக்கு முதல் அடி.

இதுபோல் பல சம்பவங்கள் நடக்கின்றன. ஒருசமயம், மெக்மர்ஃபி அங்கிருக்கும் அனைவரும் வெளியே செல்லும் சமயம், பேருந்தைக் கடத்திக்கொண்டுபோய், அங்குள்ள ஒரு துறைமுகத்துக்குச் சென்று, ஒரு படகில் அனைவரையும் கடலுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறான். அந்த உலகம், அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொருவரும் குழந்தையைப் போல் உற்சாகத்தில் குதிக்கிறார்கள். அவர்களுக்கு மீன்பிடிக்கவும் சொல்லிக்கொடுக்கிறான் மெக்மர்ஃபி.

ஒருநாள், ஒரு சிறிய பிரச்னை, பெரியதாக உருவெடுக்கிறது. இதனைத் தூண்டிவிட்டதற்காக, மெக்மர்ஃபிக்கும் செவ்விந்தியனுக்கும், இன்னும் ஒருவருக்கும், கடுமையான மின்சார அதிர்ச்சி கொடுக்கப்படுகிறது.

இப்படிச் செல்கையில், மெக்மர்ஃபி அங்கிருந்து தப்பிக்கத் திட்டம் போடுகிறான். அங்குள்ள செவிட்டு ஊமையான செவ்விந்தியனைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, மெக்மர்ஃபியின் தோழியான ஒரு பெண் மூலமாக, அவளை விடுதிக்கு மதுபானங்களுடன் வரவழைத்து, விடுதியின் காப்பாளரைக் குடிக்க வைத்து, தப்பி விட முயல்கிறான். அங்குள்ள அனைவரும் குடிக்க, இவனும் அளவுக்கு மீறிக் குடித்து, தூங்கி விடுகிறான்.

மறுநாள் அங்கு வரும் சிஸ்டர் ரேட்சட், அலங்கோலமான அந்தச் சூழ்நிலையைக் கண்டு அதிர்ச்சியாகிறாள். கிட்டத்தட்ட இதுதான் கிளைமாக்ஸின் தொடக்கம்.

அப்போது என்ன நடந்தது? ரேட்சட்டின் கொடுமைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்ததா? மெக்மர்ஃபி தப்பித்தானா? கடைசியில் என்ன நடந்தது? விடைகாண இப்படத்தைப் பாருங்கள்.

வெகு நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், மனிதர்களின் இயல்பைப் பற்றிய கேள்வியை நம் முன் வைக்கிறது. ரேட்சட் ஏன் அவ்வளவு கல்நெஞ்சத்துடன் நடந்துகொள்ள வேண்டும்? இத்தனைக்கும் அவள் ஒரு செவிலி. ஆனால், கற்பழிப்பு முயற்சிக்காக அங்கு வந்துள்ள மெக்மர்ஃபி, அத்தனை பேருக்கும் நெருங்கிய நண்பனாக மாறி, அவர்களின் நன்மைக்காக முயல்கிறான். இது ஏன்? இக்கேள்விகளுக்கு விடைதேடி நம்மை சிந்திக்க வைப்பது இப்படத்தின் வெற்றி.

மெக்மர்ஃபியாக, நம்ம ஜாக் நிகல்ஸன். மனிதர், அவருடைய அந்த அலட்சிய சிரிப்பை வைத்துக்கொண்டு படம் நெடுகிலும் விளையாடி இருக்கிறார். அறிமுகக்காட்சியில், அவரை விட வரும் போலீஸ்காரரை, துள்ளிக்குதித்து முத்தமிடுவதில் இருந்து, படம் முழுக்க அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ரேட்சட்டைக் கவிழ்த்துக் காட்டுகிறேன் என்று அனைவரிடமும் சவால் விட்டு, பெட் கட்டி, நம்மைச் சிரிக்க வைக்கிறார். அவர் நடிப்பை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பதால், ஒரு முழுமையான சந்தோஷம் நமக்குக் கிடைக்கிறது.

இதற்கு சற்றும் சளைக்காமல், ரேட்சட்டாக நடித்துள்ள லூயி ஃப்ளெட்சரும் பின்னி எடுத்திருக்கிறார். அவரைப் பார்த்தாலேயே, அறைய வேண்டும் போன்ற வெறுப்பு நமக்குக் கிளம்புவது, அவரது நடிப்பின் வெற்றி. அதுவும், மின்சார அதிர்ச்சி வாங்கி, அங்கு வரும் நிகல்ஸனை, எரித்துவிடுவதைப் போல் ஒரு பார்வை பார்ப்பார். வெறுப்பின் உச்சம் அது!

நாவலாக வந்து, பின்னர் படமாக எடுக்கப்பட்ட இப்படம், நம் ஐ.எம்.டி.பி யில், டாப் படங்களின் பட்டியலில், ஏழாவது இடத்தில் இருக்கிறது. ஆனாலும், எனக்கு இப்படத்தில் ஏதோ ஒன்று குறைவதைப் போன்ற ஒரு உணர்வு இருந்தது. நல்ல படம்தான் என்பதில் மறுப்பில்லை. இருப்பினும், ஐந்து முக்கிய ஆஸ்கர்கள், கிளாஸிக் என்ற ஒரு புகழ்… இத்தனையும் இப்படத்துக்கு சற்று அதிகமோ என்ற எண்ணம், இப்படம் முடிந்தவுடன் எழும்பியது. இப்படத்தை விட, ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் எவ்வளவோ மேல். இருந்தாலும், ஆஸ்கரில் அது இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஃபாரஸ்ட் கம்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. என்னைப்பொறுத்தவரை, ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட படங்களுக்கு சிகரம் என்று ஷஷாங்க்கைத்தான் நான் கருதுகிறேன். ஐ.எம்.டி.பியிலும், அதன்பின் எடுக்கப்பட்ட பல சர்வேக்களிலும், ஹாலிவுட் ரசிகர்கள் இப்படத்தையே இன்னமும் நம்பர் ஒன் என்று தேர்ந்தெடுத்து வருகின்றனர். இருப்பினும், ஆஸ்கரில் நிலவும் அரசியல் காரணமாக இப்படம், முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. இடைபோலத்தான் இந்தக் குக்கூ படத்துக்கும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிட்டதோ என்று இப்படம் முடிந்தவுடன் எண்ணத்தோன்றியது (எனது கருத்து, தவறாகவும் இருக்கலாம்; உங்களுக்கு இப்படம் மிகவும் பிடித்தும் போகலாம்).

எப்படியோ, இது ஒரு நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை.

இப்படத்தின் டிரைலர் இங்கே.

பி. கு – இப்படத்தில் நடித்த நிகல்ஸன் – ஸ்காட்மேன் க்ரோதர்ஸ் ஜோடி, த ஷைனிங்கிலும் (1980) நடித்திருக்கும். அதில் அமானுஷ்ய சக்தி பெற்றவராக வரும் க்ரோதர்ஸ், இதில் ஒரு ஜொள்ளரான இளிச்சவாய்க் காப்பாளராக நடித்திருப்பார். அதிலும், அனைவரும் அவரது அறையில் ஒளிந்திருக்கும்போது, இருட்டில், அவரைத்தேடி, வெளியே இருந்து ஒரு நர்ஸ் கத்த, உள்ளே மயான அமைதியில், மெக்மர்ஃபி கடுப்பில் அவர் ஏன் பதிலளிக்க மறுக்கிறார் என்று கேட்க, அதற்கு திடீரென்று ஒரு குரல் மட்டும் – டேபர் என்ற ஆள் – கொடுத்த பதிலையும், அதற்கு நம் க்ரோதர்ஸின் உடனடி reactionஐயும் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தேன். படத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒரு காமெடி பீஸ் அது. நம்ம சிவாஜி படம் வெகு சீரியஸாகப் போய்க்கொண்டிருக்கும்போது, ரஜினி குரலில் அனைவரும் மிமிக்ரி செய்வதைப் பார்த்து, சிரிப்பு வருமே.. அதைப்போன்றது இது. ஆனால், படத்தில் இந்த டயலாக், பத்தே செகண்டுகள் தான் வரும். இருப்பினும், மிஸ் பண்ணவே முடியாத ஒரு காமெடி இது. இதோ அந்த வசனங்கள். . படத்தைப் பார்த்து சிரித்துக்கொள்ளவும்.

Night Nurse: Mr. Turkle?
McMurphy: Where the fuck is he, why doesn’t he answer her?
Taber: He’s jerkin’ off somewhere.
Orderly Turkle: Ain’t no one jerkin’ off nowhere muthafucker!
McMurphy: Turkle what the fuck are you doing in here? Go out and talk to her.
Orderly Turkle: I’m doin’ the same fuckin’ thing your doin’- hidin’ !

  Comments

21 Comments

  1. நல்ல விமர்சனம். Jack Nicholson இதில் அட்டகாசம் செய்திருப்பார்.

    இதை தமிழில் எடுக்கிறேன் என்று பயங்கரமாக கொலை பண்ணியிருப்பார்கள். (மனசெல்லாம் மத்தாப்பு என்று நினைக்கிறேன். தயவு செய்து பார்க்க வேண்டாம்.)

    Reply
  2. வாங்க ரவி . . மனசுக்குள் மத்தாப்பு பார்த்துட்டேன் . .ஸ்கூல் டேஸ்ல. . அதுல ‘பொன்மாங்குயில் சிங்காரமாய்ப் பண்பாடுதே’ பாட்டு பிடிக்கும் . .மத்தபடி , படம் பிடிக்காது . .இந்தப்படம், நம்ம குக்கூ படத்தோட தழுவல்தானா? அடப்பாவிகளா . . .:-)

    Reply
    • Kesavan

      80% of latest movies ‘re based on old movies only…

      Reply
  3. சரவணக்குமார்MSK இதைப் பத்தி ஏற்கனவே எழுதியிருக்கார் கருந்தேள்.

    http://msk-cinema.blogspot.com/2009/03/one-flew-over-cuckoos-nest-1975.html

    அதான் விட்டுட்டேன். மனசுக்குள் மத்தாப்பு படம் இப்பத்தான் நினைப்பு வருது! 🙂 🙂

    ==

    கலக்கல்!! நீங்க தமிழ்ல எழுத ஆரம்பிச்சது ரொம்ப வசதியாகிடுச்சி. இப்ப நான் நல்லா ரெஸ்ட் எடுக்கறேன்! 🙂 🙂

    Reply
  4. பாலா ரெஸ்ட் எடுக்காதீங்க. லிஸ்ட் கொடுங்க…
    தேளு சுவாரஸ்யமா இருக்கு…(உங்க கருத்து உண்மையா இருக்க வாய்ப்புகள் அதிகம்)

    Reply
  5. ரொம்ப நாட்களாக பார்க்கவேண்டிய திரைப்பட வரிசையில் எனக்குள் இருக்கும் படம். உங்கள் பார்வை என்னை ஒரு திவிர தூண்டுதலை ஏற்படுத்தியிருக்கிறது. உங்கள் பதிவுகளில் அந்த திரைப்படத்தை சார்ந்த பிற விசயங்களையும் எழுதுவது மிகவும் பயனூள்ளதாகவும் அவற்றை தேடி செல்ல தூண்டுவதாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்

    மனசுக்குள் மத்தாப்பு மோகன்லால் நடித்த ஒரு மலையாள படத்தின் மறு ஆக்கம். ஒருவேளை அது குக்கூஸ் நெஸ்டின் காப்பியாக இருக்கலாம் மனதுக்குள் மத்தாப்பு காப்பியின் காப்பி !!

    Reply
  6. நல்ல படத்தைப் பற்றி நல்ல விமர்சனம். பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

    Reply
  7. நல்ல விமர்சனம் நண்பா
    இது மனசுக்குள் மத்தாப்புக்கு இன்ஸ்பிரேஷன்.
    ————
    ஜாக் செம ஆக்டர்ங்க
    இப்பொ சமீபத்தில் வந்த பக்கெட் லிஸ்டிலும் மனிதர் மார்கனுடன் சேர்ந்து கலக்கியிருப்பார்.
    ————
    ஆஸ்கர் என்பது ஒரு அரசியல் தான்.
    டு கில் த மாக்கிங் பேர்ட் என ஒரு படம் அது 1962 படம் ,அதை விட நம் பீம்சிங்கின் படம் கூட மிக நன்றாக எடுக்கப்பட்டிருக்கும்,
    ஆனால் அந்த படத்துக்கு 3ஆஸ்கர்,imdb-8.5, படம் ரொம்ப சராசரி.
    ஷஷான்க் சரியான படம்
    http://geethappriyan.blogspot.com/2009/06/shawshank-redemption1994.html

    Reply
  8. @ பாலா. . நம்ம சரவணக்குமார் பதிவ பாக்கல.. இனிமே அடிக்கடி பாத்துடறேன் . . ஹலோ . .என்ன . . ரெஸ்டா . . நீங்களே ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிட்டா, அப்ப நாங்க. . . 🙂

    @ அண்ணாமலையான் – நீங்க இத பார்த்துட்டு, நம்ம கருத்து உண்மையான்னு சொல்லுங்க . . ரைமிங்கா போட்டு தாக்குறீங்க . . 🙂

    @ ஜெயமார்த்தாண்டன் – உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி . .. தொடர்ந்து வாங்க . .
    காப்பியின் காப்பி – 🙂 பயங்கர காமெடி . .:-)

    @ பின்னோக்கி – மிக்க நன்றி. . கண்டிப்பா பாருங்க . .

    @ கார்த்திகேயன் – நன்றி நண்பா . .

    அமாம்.. மக்கட் லிஸ்ட் ஒரு சூப்பர் படம் . .:) ரெண்டு ஒல்டுங்களும் சேர்ந்து கலக்கிருக்கும்க . . 🙂
    ஒரு நண்பன் ரொம்ப நாளா, மாக்கிங்க்பேர்ட் படத்த பாக்கசொல்லி நச்சிகினு இருந்தான் . . இன்னும் அதா பார்க்கல. . நீங்க சொல்றத பார்த்தா, ரிஜெக்ட் பண்ணிரலாம்கறீங்க. . ரைட்டு . .

    அப்பறம், நானும் என்னோட ஆங்கில ப்ளாக்ல ஷஷான்க்குக்கு போன மார்ச்ல விமர்சனம் போட்ட்ருக்கேன். . – http://giriraajan.blogspot.com/2009/03/world-movie-series-10-shawshank.html. உங்க விமர்சனம் கலக்கல் . . 🙂 உங்க ப்ளாக்க நம்ம லிஸ்ட்ல போட்டாச்சு . . 🙂

    Reply
  9. கருந்தேள் கண்ணாயிரம்,

    வாழ்த்துக்கள். நல்ல பதிவு. மனதுக்கு பிடித்த ஒரு படத்தை பற்றி படிப்பது மத்தாப்பாக இருக்கிறது. (இந்த கருத்தில் டபுள் மீனிங் இல்லை).

    பாலா ரெஸ்ட் எடுக்குறாரா? ரெஸ்ட்டுககே ரெஸ்ட் கொடுப்பது இரண்டே இரண்டு பேர்தான். ஒன்று தமிழக முதல்வர், மற்றவர் அமெரிக்க ஹாலிவுட் முதல்வர் பாலா.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ்காமிக்ஸின் எதிர்காலம் பற்றிய ஒரு சிறப்பு கண்ணோட்டம்

    Reply
  10. நண்பரே,

    நல்லதொரு பதிவு. நெகிழ வைக்கும் முடிவு கொண்ட படம். நாவல் அட்டகாசமாக இருக்கும்.

    Reply
  11. @ விஸ்வா – வாங்க வாங்க. . வணக்கம். பின்னிட்டீங்க போங்க . .:) ஹாலிவுட் முதல்வர் . . . இது நல்லா இருக்கே. . . 🙂 இனி இந்தப் பேர பிரபலப்படுத்திர வேண்டியது தான் . . 🙂

    @ காதலரே – நாவலை இன்னும் படிக்கவில்லை. ஆனால், அது அந்த செவ்விந்தியன் சொல்லும் கதையாக நம்முன் விரியும் என்று படித்திருக்கிறேன். தேடிப்பிடித்துப் படிக்கிறேன். நன்றிகள் பல.

    @ லக்கி லிமட் – பாருங்க பாருங்க. . பார்த்துட்டு, எப்புடி இருந்திச்சுன்னு சொல்லுங்க . .

    Reply
  12. எம்பா தம்ப்பி உங்க கிட்ட டிவிடி வாடகைக்கு கீடைக்குமா? என் பையன் நச்சரிக்கிறான், பெங்லூர்ல தான் இருக்கான், அப்புடியே கீறல் இல்லாம பாப்பான்,திரும்ப கொடுப்பான்.

    Reply
  13. @ ரோகவன் – வணக்கம். நானு பொதுவா பிக்ப்ளிக்ஸ் ல தான் இப்போல்லாம் பாக்குறேன் . . பார்த்துட்டு உடனே திரும்பிக் கொடுத்துருவேன்.. இங்கே பொய் பாருங்க – http://rental.bigflix.com/bigflix/FAQ. உங்க சன்ன இதுல சேர சொல்லுங்க . .ரொம்ப சீப் தான் . .இவங்க கிட்ட இல்லாத படமேஇல்ல . .

    Reply
  14. viki

    நான் இந்த படத்தின் குறுந்தகடு வைத்திருக்கிறேன் ஆனால் இன்னும் பார்க்க நேரம் கிடைக்கவில்லை(இது தவிர As good as it gets,A few good men,Five Easy Pieces) Jack Nicolson அவர்கள் ஒரு Unconventional actor .மிகுந்த வேறுபாடு கொண்ட கதாபாத்திரங்கள் பலவற்றில் பின்னி எடுத்தவர்.இவரின் படம் China town பார்த்திருக்கிறேன்.அமைதியான நடிப்பில் கலக்கியிருப்பார்.படத்தில் பாதி நேரம் மூக்கில்ப்லாஸ்திரியுடன் நடித்திருப்பார்(இங்கு பில்ட் அப் கொடுக்கும் நடிக்க தெரியாத நடிகர்கள் கவனிக்க)
    அந்த கட்சியில் அவரின் மூக்கை கத்தியால் கிழிதுவிடுவர்.அப்போது இதே காட்சி நம் சினிமாவில் வந்தால் எப்படி இருக்கும் என நினைத்த போது இரு விஷயங்கள் தோன்றியது.1. அடுத்த காட்சியிலேயே நம் ஹீரோவிற்கு மூக்கு பள பளவென ஆகிவிடும்!!! 2. அதற்கடுத்த காட்சியில் ஒரு கத்தியை எடுத்து கொண்டு மூக்கை அறுத்தவர்களை தலையெடுத்து விட்டு ஓர் பாடல் பாடும் கொடுமை .

    Reply
  15. விக்கி – சைனா டவுன் ஒரு நல்ல படம். . அந்த மூக்கு சீன் பட்டைய கிளப்பும் . . ஹா ஹா . .நல்ல கற்பனை உங்களுக்கு . . 🙂 நம்ம ஊர்ல மூக்கு அறுத்தா அப்புடியே தான் நடக்கும் . . 🙂 சீக்கிரமே இன்னொரு நிக்கல்சன் படத்த பத்தி போட போறேன் . .:-)

    Reply
  16. ஹாய்,
    இந்தப் படமும் நான் பார்த்திருக்கிறேன்,நல்ல படம் என்றாலும், முன் பகுதியும் கிளைமாக்ஸ்-ம் மட்டுமே படத்தை ஒரு உயரத்திற்கு
    எடுத்துச் செல்லும்….. மற்றபடி படம் ஒன்றும் அவ்வளவு பிரமாதம் இல்லை என்பது என் கருத்து.
    இறுதிக்காட்சியில் ஜாக் நிகல்ஸன்- க்கு செய்யப்படும் Hypothalamus அறுவைசிகிச்சையை உளவியல் படிப்பில் வெறும் செய்தியாக
    கடந்து சென்றது ஞாபகம் வந்தது. கட்டற்ற நோயாளிகளைக் கவனிக்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அது ஒரு விடுதலை என்பதாக நான் நம்பிக்கொண்டிருந்த கருத்து இந்தப்படம் முலமே மாற்றப்பட்டது.

    ஷஷான்க் ரிடேம்ப்சென் நல்ல படம் என்றாலும்…… papillon நாவலில் இருந்து பல கட்சிகள் உருவப்பட்டு இருக்கும்.
    முக்கியமாக சுவற்றின் மண் பாண்ட் பை வழியாக கொட்டபடுவது…… மாதிரி…..

    சரவணன் சாரதி

    Reply
  17. ஹாய் சரவணன் . .ஒரு சில இடங்களில், உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன் . .ஆனால், எனக்கு இந்தப் படம் ஓவராலாக மிகவும் பிடித்தது. . சில சீன்களில் தொய்வு இருந்தது உண்மை . . ஷஷான்க் படத்தில் பாபிலோனின் சில இடங்கள் வருவதை நானும் உணர்ந்தேன் . .:-)

    உங்கள் கருத்துக்கு நன்றி . .அடிக்கடி வாங்க . .

    Reply
  18. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு பெரிசா impression எதுவும் இல்ல. இப்பவும் இந்த படத்துல Jack உண்மையாவே நட்டு கலண்ட கேஸ் தானான்னு தெரியல… உங்களுக்கு யாருக்காவது தெரிஞ்ச சொல்லுங்களேன். Jack ரொம்ப நல்ல நடிகர். அவரோட இந்த படங்களெல்லாம் எனக்கு பிடிக்கும் Term of Endearment, As good as it gets, Bucket list, A few good men (இந்த படத்துல வசனம் ரொம்ப பிரமாதமா இருக்கும்), The departed.

    Reply
  19. Kesavan

    Our nalla movement irukkura padam… ever green movie nu sollalaam, ippo generation kooda itha viyanthu paappanganu ninaikkurean…. for me it’s a perfect movie… no money need to enjoy our life. .. you can enjoy your life anywhere in the world… one of the best movie I ever seen, btw I like the greenmile, apocalypse now, departures (japan),
    I think forest Gump, and shawnshank redemption were overrated than this movie..

    Reply

Join the conversation