ஆஸ்கர் விருதுகள் – 2017 – பரிந்துரைகள் பற்றிய குமுதம் கட்டுரை
குமுதத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டபோது எழுதிய கட்டுரை இது. விருதுகள் அளிக்கப்படுவதற்கு முன்னால். விருதுகள் அளித்ததற்குப் பின் இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையை நாளை வெளியிடுகிறேன்.
ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருதுகளின் நாமிநேஷன்களில் ஏதேனும் பிரச்னைக்குரிய அம்சம் இல்லாமல் இருக்காது. பொதுவாக ஆஸ்கர்கள் என்பது ஒரு whitewash. அதாவது, வெள்ளையர்களின் விழா. ஏதேனும் ஒப்புக்குச் சப்பாணியாக, வெள்ளையர்கள் அல்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது ஒவ்வொருமுறையும் பிரச்னையாக விவாதிக்கப்படும். இதுபோலவே, இந்த முறையும் சர்ச்சைக்குரிய நாமினேஷன்கள் இல்லாமல் இல்லை. விரிவாகக் கவனிப்போம்.
முதலில், சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில், La La Land மொத்தம் பதிநான்கு பிரிவுகளில் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் எதிலெல்லாம் விருதுகளை அள்ளும் என்பது விரைவில் தெரிந்துவிடும். இது ஒரு சாதனை. இதற்கு முன்னர் இரண்டே படங்கள்தான் இத்தனை பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன (All about Eve – 1950 & Titanic – 1997). லா லா லேண்டின் இயக்குநர், டாமியன் சஸெல் (Damien Chazelle), ஆஸ்கர்களுக்குப் பரிச்சயமானவர்தான். 2014ல் வெளியான Whiplash படத்துக்காகச் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (ஆனால் வெல்லவில்லை). விப்லாஷ் உலகெங்கும் பெற்ற வரவேற்பு நமக்கே தெரியும். இது இவரது இரண்டாவது படம். இப்போது லா லா லாண்டை ஒரு ம்யூஸிகலாக எடுத்துள்ளார். உலகெங்கும் உள்ள விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்படக்கூடிய படமாக இருக்கிறது லா லா லாண்ட். அவசியம் ஒருசில விருதுகளை வாங்கப்போகிறது. இதனுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் படங்களில், Hell or High Water கட்டாயம் நல்ல தேர்வு. Hacksaw Ridge, இயக்கிய மெல் கிப்ஸனுக்காகப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக, மெல் கிப்ஸனை ஆஸ்கர் கமிட்டி ஒதுக்கியே வைத்திருந்தது (2006ல், குடித்துவிட்டு வண்டி ஓட்டிக் கைதாகும்போது யூதர்களைக் கண்டபடி கெட்டவார்த்தையில் திட்டியிருந்தார் மெல் கிப்ஸன். இது இணையமெங்கும் பிரபலமானது. இதைத்தொடர்ந்து பலரும் கிப்ஸனின் மேல் கடுப்பாயினர்).
இந்தப் பட்டியலில் இருக்கும் Arrival, ஒரு கடும் திராபை (திரைக்கதை ரீதியிலும், வசூல் ரீதியிலும்). இந்தப் படத்தை, இண்டர்ஸ்டெல்லாரை விஞ்சிவிட்டது என்றே இணையத்தில் சில விமர்சகர்கள் கருத்து இட்டுக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தை நீங்கள் பார்க்க நேர்ந்தால் தெரியும்- இது ஒரு overhyped படம் என்று. ஒருவன், ஒரு மணி நேரமாக ஒரு வெங்காயத்தை உரித்துக்கொண்டே இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அரைவல் அப்படிப்பட்டது. இதை இயக்கியவர் டெனிஸ் வில்லன்யூவ். இவரது முந்தைய படங்களான Prisoners மற்றும் Sicario ஆகியவையும் இதேபோன்று overhype செய்யப்பட்டவையே. இதனாலேயே இவருக்கு ஒரு அறிவுஜீவி இமேஜ் இருப்பதால் இந்தப் படமும் இம்முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவில் இடம்பெற்றிருக்கும் Lion மற்றும் Fences ஆகியவையும் ஓரளவு நல்ல தேர்வுகளே.
ஆனால், எந்தப் படம் உலகம் முழுக்க எதிர்பார்க்கப்பட்டதோ, எந்தப் படத்தை முப்பது வருடங்களாக இயக்கவேண்டும் என்ற கனவைச் சுமந்துகொண்டிருந்தாரோ, அத்தகைய இயக்குநரான மார்ட்டின் ஸ்கார்ஸேஸியின் Silence படத்தை ஆஸ்கர்களில் கண்டுகொள்ளவே இல்லை. இது இந்த ஆண்டின் மாபெரும் ஏமாற்றம். அதில் சந்தேகமே இல்லை. அரைவல் போன்ற அரத திராபைகளைத் தேர்வு செய்யும் கமிட்டி, சைலன்ஸை விட்டுவிட்டது எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும், ஸ்கார்ஸேஸி போன்ற ஜீனியஸ் இயக்குநருக்கு எதிராக இத்தனை கொடூரமாக ஆஸ்கர் கமிட்டி செயல்படும் என்பது முற்றிலும் மனக்கசப்பையே தருகிறது (இப்படத்துக்கு, சிறந்த ஒளிப்பதிவின் கீழ் ஒரே ஒரு நாமினேஷன் மட்டுமே). அதேபோல், சென்ற வருடக் கான் (Cannes) விழாவில் பெரிதும் பாராட்டப்பட்ட Loving படத்தையும் சிறந்த படத்துக்கான ஆஸ்கர்களில் கண்டுகொள்ளவில்லை.காரணம்? லவிங் படத்தின் கதை, அதில் உள்ள கதாபாத்திரங்களின் நிறம் ஆகியவையே.
சிறந்த நடிகர் பிரிவில் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் (ஹாக்சா ரிட்ஜ்), ரையன் காஸ்லிங் (லா லா லாண்ட்), டென்ஸல் வாஷிங்டன் (ஃபென்ஸஸ்) ஆகியோர் எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான். இவர்கள் மூவருக்குமே பலத்த போட்டி உண்டு. மூவரில் யாருக்குக் கிடைத்தாலும் நல்லதுதான். நான்காவதாகக் கேஸி ஆஃப்லெக் (பென் ஆஃப்லெக்கின் சகோதரர்), ஐந்தாவதாக விக்கோ மார்டென்ஸன் (காப்டன் ஃபண்டாஸ்டிக்) ஆகியோரும் உள்ளனர். விக்கோவுக்குக் கிடைப்பது மிக மிக சந்தேகம். இந்தப் பட்டியலில் இருக்கும் மிகப்பெரிய நகைமுரண், Lion படத்துக்காகச் சிறந்த நடிகராகத் தேர்வுசெய்யப்படவேண்டிய தேவ் படேல், அதே படத்துக்காகச் சிறந்த துணை நடிகர் பிரிவில் இடம்பெற்றிருப்பதே. ஒரு படத்தின் ஹீரோவை எப்படித் துணைநடிகராகத் தேர்ந்தெடுக்கமுடியும்? ஆஸ்கர் கமிட்டிக்கே வெளிச்சம் (தேவ் படேல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வெள்ளையர் அல்ல என்பதை நினைவில் வைக்கவும்).
சிறந்த நடிகை பிரிவில், மெரில் ஸ்ட்ரீப், இருபதாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் (Florence Foster Jenkins). இது ஒரு சாதனை. ஆனால் அதேசமயம், இப்படத்துக்காக இவரைத் தேர்ந்தெடுக்கவேண்டியதில்லை. முந்தைய இரண்டு மூன்று விருது விழாக்களில், டொனால்ட் ட்ரம்ப்பைக் கடுமையாக மேடையில் விமர்சித்திருந்தார் ஸ்ட்ரீப். இந்தப் பேச்சுக்கள் கொடுத்த பப்ளிஸிடிதான் இதற்குக் காரணம் என்றே பலரும் கருதுகின்றனர். இதை இங்கே சொல்லநேர்வது ஏனென்றால், அரைவல் படத்தில் சிறப்பாக நடித்திருந்த ஆமி ஆடம்ஸ், பட்டியலில் இடம்பெறவே இல்லை. படம் கடும் மொக்கை என்றாலும், நடிப்பு என்று கவனித்தால் கட்டாயம் ஆமி ஆடம்ஸ் ஸ்கோர் செய்வார். ஸ்ட்ரீப்புக்குப் பதில் ஆமி ஆடம்ஸின் பெயரே இடம்பெற்றிருக்கவேண்டும். இந்தப் பட்டியலில் எம்மா ஸ்டோனின் பெயர் (லா லா லாண்ட்) எதிர்பார்க்கப்பட்டதே. நாம் ஏற்கெனவே பார்த்த லவிங் படத்துக்காக, அதன் கதாநாயகி ரூத் நெக்காவின் பெயரும் பட்டியலில் உண்டு.
மற்றபடி, இன்னொரு பெரிய ஏமாற்றம், Finding Dory படத்தையும் இம்முறை ஆஸ்கர்கள் கண்டுகொள்ளவில்லை. உலகெங்கும் பிரமாதமான வரவேற்புப் பெற்ற அனிமேஷன் படம் இது. அதேசமயம், இதைவிட சுவாரஸ்யத்தில் மிகக் குறைவான Moana படம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இன்னொரு முக்கியமான விஷயம், சிறந்த ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில், ஆஸ்கர் சரித்திரத்திலேயே முதன்முறையாக, கறுப்பினத்தைச் சேர்ந்த ப்ராட்ஃபோர்ட் யங் (அரைவல்) தேர்வுசெய்யப்பட்டிருப்பதே. யோசித்துப் பாருங்கள். இதுவரை 88 ஆஸ்கர் விழாக்கள் நிகழ்ந்துள்ளன. எண்ணற்ற கறுப்பின ஒளிப்பதிவாளர்கள் இருந்து வந்துள்ளனர். ஆனால் சரித்திரத்திலேயே முதன்முறையாக இப்போதுதான் அப்படிப்பட்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வதா கோபப்படுவதா? இதுதான் ஆஸ்கர் கமிட்டியின் மெத்தனம்.
அடுத்ததாக, உலகெங்கும் கிழித்துத் தோரணம் கட்டப்பட்ட ‘சூஸைட் ஸ்க்வாட்’ படத்துக்கு ஒரு ஆஸ்கர் நாமினேஷன். சிறந்த சைகை மற்றும் ஒப்பனைக்காக. அதேசமயம், உலகெங்கும் பிய்த்துக்கொண்டு ஓடிய ‘டெட்பூல்’ படத்துக்கு எந்த நாமினேஷனும் இல்லை (கோல்டன் க்ளோப்களில் இது நாமினேட் செய்யப்பட்டது). இதுவும் நகைமுரணே.
ஆனால், இந்த ஆஸ்கர்களின் ஒரே நல்ல அம்சம் என்னவெனில், இதுவரை இல்லாத அளவு, இம்முறை அமெரிக்கர்கள் அல்லாதவர்களில் ஓரளவு கணிசமான சதவிகிதத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வுசெய்யப்பட்டிருப்பதே. உண்மையில், சென்ற வருடமும் அதற்கு முந்தைய வருடமும், சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை ஆகிய இருபது பெயர்களில் ஒருவர் கூட வெள்ளையரல்லாதோர் இல்லை! இதைத்தான் முதல் பத்தியில் குறிப்பிட்டேன். ஆனால் இம்முறை, மொத்தமாகப் பதினெட்டு ஆஃப்ரோ அமெரிக்கர்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வருடமும் வெள்ளையரல்லாதோர் இடம்பெறாமல் இருந்திருந்தால் கட்டாயம் மிகப்பெரிய பிரச்னை வெடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படியாக, அமெரிக்கர்களுக்கு மட்டுமே சொறிந்துகொடுக்கும் விருது விழாவான ஆஸ்கர்கள் இம்முறை, கொஞ்சம் ‘உலகளாவிய’ விழாவாக மாறுவதாகத் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. அமெரிக்கர்களல்லாதோருக்கு விருதுகள் கிடைக்கின்றனவா இல்லையா என்பதில் இனும் சில நாட்களில் திரைக்கதையின் முடிவு தெரிந்துவிடும். என்ன இருந்தாலும், இது கச்சிதமாக எழுதப்பட்ட திரைக்கதை என்பதில் எனக்குத் துளிக்கூட சந்தேகம் இல்லை.
Waiting for logan review
இது காலம் காலமாக பேசப்பட்ட ஒன்று என்றாலும் நல்ல விஷயம்தான் நடப்பதாகத் தொரிகிறது.அப்பட்டமாக பொய் விருது வழங்கும் எத்தனையோ இருந்தாலும் இது எவ்வளவோ மேல் என்று தான் தோன்றுகிறது.