ஆஸ்கர் விருதுகள் – 2017 – சர்ச்சையும் விருதுகளும் – தினகரன் (இலங்கை) கட்டுரை
இந்தக் கட்டுரை, விருதுகள் வழங்கப்பட்டபின்னர் இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையில் எழுதியது.
சில நாட்களுக்கு முன்னர் நடந்துமுடிந்த ஆஸ்கர் விருதுகளின் க்ளைமேக்ஸில், ‘லா லா லேண்ட்’ பட்டமே சிறந்த படமாக அறிவிக்கப்பட்டு, பின்னர் உடனடியாகத் தவறு நடந்துவிட்டதாகச் சொல்லப்பட்டு, ’மூன்லைட்’ படத்துக்கு அந்த விருது கொடுக்கப்பட்டதைக் கவனித்திருப்பீர்கள். இந்த மாபெரும் தவறு எப்படி, ஏன் நடந்தது என்பதைவிடவும் (PWC நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்றுள்ளது), சிறந்த படமாக அறிவிக்கப்பட்ட மூன்லைட்டின் குழுவினர், லா லா லேண்ட் படத்தின் குழுவோடு மேடையைப் பகிர நேர்ந்தது என்பதே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. மூன்லைட், கறுப்பினத்தவர்களைப் பற்றிய படம். வெள்ளையர்களுக்குக் கறுப்பின மக்களின்மேல் எப்போதுமே ஒருவித அசூயை உண்டு. விருது மூன்லைட்டுக்கு என்று திருத்தி அறிவிக்கப்பட்டபின்னர், விழாவைத் தொகுத்தளித்த ஜிம்மி கிம்மெல், லா லா லேண்டுக்காகவே முதலில் பரிதாபப்பட்டார். இதனை நீங்கள் வீடியோவில் பார்த்தால் தெரியும். வெள்ளையர்களால், வெள்ளையர்களுக்காகவே நடத்தப்படும் ஒரு நிகழ்வில், சிறந்த படமாக ஒரு கறுப்பினப்படம் அறிவிக்கப்படும்போது, வெள்ளையர்களின் படம் தோற்றுவிட்டதே என்ற பரிதாப உணர்வே அரங்கில் அதிகம் மேலிட்டது. கூடவே, மூன்லைட்டுக்குக் கிடைத்திருக்கவேண்டிய உச்சபட்ச மரியாதை கிடைக்காமல், லா லா லேண்ட் குழுவோடே மேடையைப் பகிர நேரிட்டது.
இதைத்தான் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டும் என்று கருதுகிறேன்.
மூன்லைட்டுக்கே சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது (மஹெர்ஷாலா அலி). அதேபோல், சிறந்த adapted திரைக்கதையையும் மூன்லைட் பெற்றது.
சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டவர், பென் ஆஃப்லெக்கின் சகோதரர் கேஸி ஆஃப்லெக் – ’மேன்செஸ்டர் பை த ஸீ’ படத்துக்காக. இது மிகவும் நல்ல தேர்வு. இவருடன் போட்டியில் இருந்த ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் (ஹாக்சா ரிட்ஜ்), ரையன் காஸ்லிங் (லா லா லாண்ட்), டென்ஸல் வாஷிங்டன் (ஃபென்ஸஸ்) ஆகியோர் எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான். ஆனால், இதில் நகைச்சுவையான அம்சம், Lion படத்துக்காகச் சிறந்த நடிகராகத் தேர்வுசெய்யப்படவேண்டிய தேவ் படேல், அதே படத்துக்காகச் சிறந்த துணை நடிகர் பிரிவில் இடம்பெற்றிருப்பதே. ஒரு படத்தின் ஹீரோவைத் துணைநடிகராக ஆஸ்கர் கமிட்டி எப்படித் தேர்வுசெய்தது என்பது ஆஸ்கர் கமிட்டிக்கு மட்டுமே வெளிச்சம் (தேவ் படேல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வெள்ளையர் அல்ல என்பது யோசிக்கப்படவேண்டிய அம்சம்).
சிறந்த நடிகைக்கான விருது, எதிர்பார்க்கப்பட்டபடியே எம்மா ஸ்டோனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது (லா லா லேண்ட்). சிறந்த இயக்குநருக்கான விருதும் லா லா லேண்டுக்காக, டேமியன் சஸலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. முப்பத்து இரண்டே வயதில், இவ்விருதை வாங்கும் மிகவும் இளமையான இயக்குநர் இவரே. இவரது ‘விப்லாஷ்’ படத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். 2014ல் வெளியான அப்படத்துக்காகச் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மிகவும் திறமையான இளம் இயக்குநர்களில் ஒருவர். அதேசமயம், மூன்லைட்டின் இயக்குநர் பேரி ஜென்கின்ஸும் லேசுப்பட்டவர் இல்லை. இவரும் ஒரு இளம் இயக்குநர்தான். 2008ல் வெளியான ’மெடிசின் ஃபார் மெலன்கலி’ படத்துக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டவர். இம்முறை இவருக்குத்தான் இவ்விருது வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்பது ஆஸ்கர் படங்களைப் பார்த்த பல விமர்சகர்களின் கருத்து. இவ்விருவருக்கும் பலத்த போட்டி நிலவியது. ஆனால் இறுதியில் லா லா லேண்ட் வென்றது.
சிறந்த திரைக்கதைக்காக, மான்செஸ்டர் பை த ஸீ படம் விருது வென்றிருக்கிறது. இதுவும் நல்ல தேர்வே. இத்துடன் இடம்பெற்ற படங்களில், ‘ஹெல்ல் ஆர் ஹை வாட்டர்’ படம் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. மிகவும் நல்ல படங்களில் இதுவும் ஒன்று.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரப் பிரிவில், ‘சூசைட் ஸ்க்வாட்’ படம் விருது பெற்றிருக்கிறது. வழக்கமாக இப்படிப்பட்ட ஒரு வணிகப்படம் இவ்விருதை வெல்லும் வாய்ப்பு குறைவு. இந்தப் படமே ஒரு சராசரியான படமும் கூட என்றாலும், இந்தப் பிரிவில் பல்வேறு சூப்பர்ஹீரோக்களைக் கச்சிதமாக உருவாக்கியிருந்ததால், சரியாகவே இவ்விருது கொடுக்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் (ஆனால் இப்படத்தை விடவும் சிறந்த படமான ‘டெட்பூல்’, எந்தப் பிரிவிலும் தேர்வு செய்யப்படவில்லை).
சிறந்த அனிமேஷன் படங்களில், ‘ஸூடோஃபியா’ தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் வெளியான மிகச்சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. சந்தேகமில்லை. ஆனால், அத்துடன் இடம்பெற்ற ‘கூபோ அண்ட் த டூ ஸ்ட்ரிங்க்ஸ்’ படமும் மிகச்சிறந்ததொரு படம். உண்மையில் ஸூடோஃபியா ஒரு வழமையான கமர்ஷியல் படமே. ஆனால் கூபோ, சொல்லும் கதையிலும், எடுத்துக்கொண்ட கருவிலும் மிகச்சிறந்த கருத்துகள் பலவற்றைச் சொல்லியது.
இந்த விழாவில், மிகப்பெரிய ஏமாற்றங்களில் ஒன்று, இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியின் ‘சைலன்ஸ்’ படத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டது. வழக்கமாக ஸ்கார்ஸேஸி எடுக்கும் படங்கள் எப்போதும் ஆஸ்கர்களில் கவனிக்கப்படும். ஆனால், அவரது முப்பது வருடக் கனவுப்படமான சைலன்ஸ் இம்முறை எந்தப் பெரிய பிரிவிலும் கண்டுகொள்ளப்படவே இல்லை.
இன்னும் பிற பிரிவுகளில் கொடுக்கப்பட்ட விருதுகள் குறித்து நீங்களே இணையத்தில் படித்திருக்கலாம்.
ஆஸ்கர்களைத் தொடர்ந்து கவனிக்கையில், சென்ற வருடமும் அதற்கு முந்தைய வருடமும், சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை ஆகிய இருபது பெயர்களில் ஒருவர் கூட வெள்ளையரல்லாதோர் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இம்முறை அந்தக் கொடூரம் நடக்காமல், பல வெள்ளையரல்லாதோரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது ஓரளவு ஆசுவாசம் தரக்கூடியது. ஆனால், புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துக்ளக் தனமாக அறிவித்திருக்கும் பல முட்டாள்தனமான சட்டங்களால் (சில நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் யுனைடட் ஸ்டேட்ஸினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது அவற்றில் ஒன்று), இரானிய இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹதி, இவ்விழாவைப் புறக்கணித்திருப்பதாக அறிவித்திருந்தார். அவருக்குத்தான் சிறந்த வெளிநாட்டுப் பட விருது வழங்கப்பட்டது (’த சேல்ஸ்மேன்’). இது எவ்வளவு பெரிய நகைமுரண்? அதேபோல், இவ்விழாவில், மெக்ஸிகோவைச் சேர்ந்த கேல் கார்ஸியா பெர்னால் விருது ஒன்றை வழங்க வருகையில், ‘ஒரு மெக்ஸிகனாக, ஒரு வெளிநாட்டுக்காரனாக, அங்கிருந்து யுனைடட் ஸ்டேட்ஸுக்கு வேலை நிமித்தம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளியாக, ஒரு மனிதனாக, நம்மையெல்லாம் பிரித்தாள நினைக்கும் எல்லாவிதமான சுவர்களையும் நான் எதிர்க்கிறேன்’ என்று பேசியது குறிப்பிடத்தக்கது. வெள்ளையர்களால் பெரும்பான்மையான வெள்ளையர்களுக்காக விருதுகளை வழங்கும் ஆஸ்கர்களில் இதுபோன்ற பிரச்னைகளை நான் தீவிரமாகக் கவனிக்கிறேன். இவைதான் எனக்கு முக்கியமானதாகப்படுகின்றன. குறிப்பாக, நான் முதல் பத்தியில் சொல்லியிருப்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.