Paa (2009) – Hindi

by Karundhel Rajesh December 5, 2009   Hindi Reviews

எத்தனையோ தடவை கண்டபடி திட்டு வாங்கியிருந்தாலும், நமது அப்பா மேல் நமக்கு உள்ள பாசம் போகவே போகாது. என்ன ஆனாலும் அது அப்படியே தான் இருக்கும். ஒருவேளை சில நிகழ்வுகள் நடந்து, அவர் நம்மை விட்டுப் பிரிந்து இயற்கை எய்தியிருந்தாலும் கூட, அப்பா என்றால் நமக்கு ஒரு பிடிப்பு இருக்கத்தான் செய்யும். நமக்கே இப்படி என்றால், ஒரு பனிரண்டு வயது அப்பாவிக் குழந்தைக்கு, தன் தந்தைமேல் உள்ள பாசம் எப்படி இருக்கும்? அதுவும், தன் தந்தை யாரென்றே தெரியாமல் இருந்துவிட்டு, இன்னார்தான் தன் தந்தை என்று திடீரென்று தெரிந்தால்?

அப்படிப்பட்ட ஒரு குழந்தையின் கதை தான் ‘பா’.

ஆனால், நாமெல்லாம் முன்பே படித்துத் தெரிந்துகொண்டதுபோல், இந்தக் குழந்தைக்கு, ‘புரோஜெரியா’ என்ற நோய். இதன்மூலம், மிகச்சிறிய வயதிலேயே, உடல் உறுப்புகள் அத்தனையும் செயலிழக்கும் நிலையில் தள்ளப்பட்டு, முதிர்ந்த வயதில் உள்ளவர்களின் உடல்நிலையை அடைந்து, பதின்பருவத்திலேயே உயிரை இழக்கக்கூடிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமை இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு வரும். இப்படிப்பட்ட நிலையில் அந்தக்குழந்தை என்ன செய்கிறது என்பதே இப்படத்தின் கதை.

கதைப்படி, வித்யாவும் அமோலும், இங்கிலாந்து நாட்டில் படிக்கிறார்கள். அமோலின் தந்தை ஒரு அரசியல்வாதி. அமோலுக்கு, அரசியலை முறைப்படி படித்து, அரசியலுக்குள் நுழைந்து, நாட்டைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பது லட்சியம். வித்யா மருத்துவப் படிப்பு படிக்கிறாள். அவர்கள் இருவரும் சந்திக்க நேர்கிறது. காதல் வயப்பட்டு, அமோலின் குழந்தையைத் தன் வயிற்றில் சுமக்கிறாள் வித்யா. அமோலுக்கு இது அதிர்ச்சி. அரசியலில் நுழையும் தனது லட்சியத்தை, இந்தச் சம்பவம் பாதிக்கும் என்று எண்ணி, வித்யாவிடம் குழந்தையைக் கலைக்கச் சொல்கிறான். வித்யாவோ, இனி தன்னால் அவன் அரசியல் வாழ்வுக்கு எந்த ஒரு இடையூறும் இருக்காது என்று சொல்லி, அவனை விட்டு விலகி, தன் தாயின் உதவியுடன் அந்தக் குழந்தையைப் பெற்றுக்கொள்கிறாள்.

அந்தக் குழந்தைக்குத் தான் ‘புரொஜெரியா’ நோய். உலகிலேயே, மொத்தம் நாற்பது, ஐம்பது பேருக்கே இந்த நோய் இருப்பதாகச் சொல்லும் மருத்துவர், இக்குழந்தை பதிமூன்று, பதிநான்கு வயதிலேயே இறந்துவிடும் வாய்ப்புகள் நிறைய உண்டு என்று சொல்லிவிடுகிறார்.

அன்றிலிருந்து, இந்த நோய் பற்றி நிறையத் தெரிந்துகொள்ளும் வித்யா, குழந்தையைத் தனது தாயின் உதவியுடன் வளர்க்கிறாள். குழந்தையோ, ஒரு ஜீனியஸாக வளர்கிறது. இக்குழந்தையின் பெயர் ‘ஆரோ’. அதன் பதிமூன்று வயதில், ஒரு பள்ளி விழாவில், M.P யாக இருக்கும் அமோலிடம் விருது வாங்குகிறது. இக்குழந்தையின் விசித்திரமான தோற்றத்தினால், மீடியாவின் கவனத்திற்குள்ளாகிறது. அது எங்குபோனாலும், மீடியா அதனைத் துரத்தும் காரணத்தினால், இதற்கெல்லாம் அமோல் தான் காரணம் என்று நினைத்து, அந்தப் பிஞ்சு மனது, அமோலுக்கு, அவனை வெறுப்பதாக மின்னஞ்சல் அனுப்புகிறது. அமோல் ஒரு உதாரண அரசியல்வாதியாக இருப்பதினால், அந்த மின்னஞ்சலைப் படித்து, அக்குழந்தையின் பள்ளிக்குத் தொடர்புகொண்டு, ஆரோவிடம் மன்னிப்பு கேட்கிறான். ஆரோ இதனை சற்றும் எதிர்பார்க்காததினால், முதலில் குழம்பி, பின்னர் சுதாரித்துக்கொண்டு, ராஷ்டிரபதி பவனைச் சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்துகிறான். ஒப்புக்கொள்ளும் அமோல், ஒரு தேதியைக் குறிப்பிட்டு, அன்று, தானே ஆரோவை அழைத்துச் செல்வதாகக் கூறுகிறான்.

தனது நீண்டநாள் ஆசை நிறைவேறப்போவதை நினைத்து, ஆரோ மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறான். ஆனால், குறிப்பிட்ட நாள் அன்று, அமோலுக்கு ஒரு அரசியல் பிரச்னை. அதனைத் தீர்ப்பதில் அன்றைய நாள் முழுவதையும் எடுத்துக்கொள்ளும் அமோலுக்கு, அன்று இரவுதான் ஆரோவைப்பற்றி நினைவு வருகிறது. ஆரோவோ, அன்றைய நாள் முழுவதும் ஜன்னல் பக்கத்திலேயே காத்திருக்கிறான்.

அடுத்த நாள், ஆரோவின் பள்ளிக்கு அழைக்கும் அமோல், ஆரோவிடம் மன்னிப்பு கேட்கிறான். முதலில் இஷ்டமில்லாமல் பேசும் ஆரோ, தனது குழந்தை உள்ளத்தினால், அனைத்தையும் மறந்து, மறுபடி ராஷ்டிரபதி பவன் செல்லத் தயாராகிறான்.

அந்த நாளும் வருகிறது. அப்போது, தனது தாயாரிடம் பேசும் ஆரோ, தனது தந்தைதான் அமோல் என்று தெரிந்துகொள்கிறான். ராஷ்டிரபதி பவனுக்குத் தனது தந்தையுடன் செல்லும் ஆரோ, தந்தையை நன்றாக கவனித்து, தன்னுடன் ஒப்பிட்டுக்கொள்கிறான். தன்னைப்போலவே தன் தந்தை இருப்பதாக எண்ணிக்கொண்டு, மகிழ்ச்சி கொள்கிறான். ஆனால், டெல்லி சென்றும், திடீரென்று ராஷ்டிரபதி பவனுக்கு வர முடியாது என்று மறுத்துவிடுகிறான். காரணம் கேட்டுக் கோபப்படும் அமோலிடம், அவன் பல வருடங்களுக்கு முன்னர் செய்த தவறுதான் காரணம் என்று சொல்லிவிடுகிறான்.

இருவரும் ஊர் திரும்புகின்றனர். பள்ளியில், ஒருநாள் திடீரென்று கிரிக்கெட் விளையாடிவிடும் ஆரோ, மயங்கி விழுகிறான். மருத்துவமனையில் இருக்கும் ஆரோவைப் பார்க்க வரும் அமோல், ஆரோவின் தாயாரைப் பார்த்து, அதிர்ச்சி கொள்கிறான். ஆரோ தனது குழந்தை என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளும் அமோல், தன்னைத் தொடர்ந்து வரும் மீடியாவிடம் உண்மையைச் சொல்கிறான். ஆனால், வித்யாவோ அவனைத் தனது வாழ்க்கையில் அனுமதிக்கத் தயாராக இல்லை.

இருவரையும் சேர்த்துவைக்கும் பொறுப்பை, ஆரோ எடுத்துக்கொள்கிறான். இருவரும் சேர்ந்தார்களா, ஆரோ என்ன ஆனான் என்பதே மீதிக்கதை.

ஆரோவாக, அமிதாப் பச்சன். தனது திரைவாழ்விலேயே இதுவரை முயன்றிறாத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். படம் முழுவதும் நமக்குத் தெரிவது ஆரோ என்ற பிஞ்சுமனம் படைத்த குழந்தைதானேயன்றி, அமிதாப் பச்சன் என்ற சூப்பர்ஸ்டார் நடிகர் அல்லவே அல்ல. ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு முகபாவத்திலும், ஒரு பதிமூன்று வயதுக் குழந்தையைக் கண்முன் நிறுத்திக் காட்டியிருக்கிறார். ஆரோ பேசும்போது என்ன, அவன் தனக்கே உரிய நடனத்தை ஆடும்போது என்ன, அவன் ஆடி ஆடி நடக்கும்போது என்ன, அவன் புத்திசாலித்தனமாகப் பேசி, மற்றவர்களை மடக்கும்போது வெளிப்படுத்தும் சந்தோஷம் மிகுந்த ஓசையில் என்ன.. பிரமாதமான நடிப்பு! சபாஷ் அமிதாப் பச்சன்! குறிப்பாக, ஆரோ தனது பாட்டிக்கு ஒரு செல்லப்பெயர் வைத்து அழைப்பது, சிறு குழந்தைகளுக்கே உள்ள பிடிவாதம், தனக்கு நண்பியாக விரும்பும் குட்டிப்பெண்ணைப் பார்த்துத் தலைதெறிக்க ஓடுவது போன்ற காட்சிகளில், பட்டையைக் கிளப்புகிறார்.

அமோலாக அபிஷேக் பச்சன். ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதியைக் கண்முன் நிறுத்தியிருக்கிறார் (சஷி தரூர் + ராகுல் காந்தி ?) முதிர்ந்த நடிப்பு. தனது தந்தையின் தந்தையாக நடித்து, பாராட்டுகளை அள்ளிக்கொள்கிறார். வித்யாவாக வித்யா பாலன். இவருடைய நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

பி.சி. ஸ்ரீராம், வழக்கப்படி காமெராவில் விளையாடும் வாய்ப்புகள் இப்படத்தில் குறைவு. எனினும், படத்தின் வலுவான கதைக்குச் சற்றும் குறைபடாத விதத்தில், படத்தின் கூடவே பயணித்திருக்கிறார். ‘முதி முதி’, ‘கலி முதி’, உதி உதி’, ‘ஹிச்க்கி ஹிச்க்கி’ போன்ற பாடல்களில், இளையராஜா முழுத்திறமையையும் காட்டியிருந்தாலும், எல்லாப் பாடல்களிலும் அவர், காதலுக்கு மரியாதையில் ஆரம்பித்த அவரது சமீபகால பின்னணி இசையையே வழங்கியிருப்பது, சற்று நெருடலாக இருக்கிறது. ஆனால், படத்தின் பிண்ணணி இசையில் மனிதர் புகுந்து விளையாடி இருக்கிறார்.

‘மொழி’ போன்று, இப்படத்தை, சந்தோஷமாகக் கொண்டுசென்றிருப்பது, ஒரு நல்ல விஷயம். இயக்குநர் பால்கி, ‘சீனி கம்’ படத்திற்குப்பின், அடுத்த தளத்துக்குச் சென்றிருக்கிறார். அவருக்கு, நமது வாழ்த்துகள்.

மொத்தத்தில், ‘பா’ – இந்த வருடம் வெளிவந்த படங்களில், மிகச்சிறந்த ஒன்று. பல விருதுகளை அள்ளிக் குவிக்கப் போகும் இப்படம், வாழ்வின் சோகங்களை, மகிழ்ச்சியாக மாற்றும் ஒரு அற்புதக் குழந்தையின் கதை.

பா ட்ரைலர் இங்கே.

  Comments

15 Comments

  1. அருமை. இத்திரைப்படத்தை எதிர்பார்திருந்தேன். பார்க்க வேண்டும்.

    நல்ல தெளிவான நடை. நன்றி ராஜேஷ்.

    Reply
  2. Anonymous

    Kalakiting athala

    Reply
  3. Waiting to watch this movie. Good review. Keep it up!

    Reply
  4. @ அனானி – நன்றி. மீண்டும் வருக 🙂

    @ முரளிகுமார், @ கோழிப்பையன் – பாருங்க.. பார்த்துட்டு சொல்லுங்க..

    @ உதயன் – ஹிந்தி தெரியலன்னா பரவாயில்ல.. இந்தப்படம் நல்லாவே நமக்குப் புரியும். .. கண்டிப்பா பாருங்க..

    Reply
  5. Anonymous

    Hi, I came here by Hollywoodbala ‘s referal. but i cant go through a few lines. Pl change the bg color. Black bg with white text is very tough to read. so pl change the color.
    -Vibin

    Reply
  6. @ அனானி – டெம்ப்ளேட்டை சீக்கிரமே மாற்றப் போகிறேன். எனவே, சீக்கிரமே உங்களால் பிரச்னையில்லாமல் படிக்க முடியும். நன்றி.

    Reply
  7. very nice…waiting for DVD 🙂

    Reply
  8. நல்ல திறனாய்வு.. உங்க விமர்சனம் படிச்சிட்டு படம் பார்த்தேன்… நன்றாகத்தான் இருந்தது….

    Reply
  9. நாளைக்குத்தான் நான் பார்க்கப் போகிறேன்..!

    அதென்ன இப்படியொரு பெயரை வைத்திருக்கிறீர்கள்..?

    Reply
  10. @ Baski – வாங்க வாங்க . . 🙂 . . உங்களுக்கு தான் வெய்ட்டிங் . . 🙂

    @ தமிழ்ப்பறவை – உங்க கருத்துக்கு நன்றி . .அடிக்கடி வாங்க. .

    @ உ. த – வணக்கம். . நம்ம இங்கிலீசு ப்ளாக் பேரு Scorp says so. . அதுக்குத் தமிழ்ல என்ன வைக்கலாம்னு யோசிச்சப்ப கிடைச்ச பேரு தான் இந்த கருந்தேள் 🙂 . . படம் பார்த்துட்டுசொல்லுங்க..

    Reply
  11. viki

    விமர்சனம் நல்லாயிருக்கு பார்க்கவேண்டிய படம் என்ன நமக்கு ஹிந்தி தெரியாது///
    என்ன உதயன் கவலைபடாதீங்க இருக்கவே இருக்கு subtitle(துணை தலைப்பு).எனக்கும் ஹிந்தி தெரியாது ஆனாலும் நான் ஹிந்தி படங்களை இவ்வாறு பார்க்கிறேன்(தமிழ் படங்கள் போல் காதை பஞ்சர் செய்யாத பாடல்கள் ஆழமான பாடல் வரிகள் பல படங்களில் கண்டிருக்கிறேன்.[உம].கமினே..பா இன்னும் பார்கவில்லை .கண்டிப்பாக பார்த்துவிடுவேன். நீங்களும் பாருங்கள்.
    *
    விமர்சனம் அருமை வழக்கமான புளித்து போன தமிழ் படங்களை விமர்சனம் செய்யாமல்(அதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.அபத்தமாக முதல் பாதி ஜிவ் இரண்டாவது பாதி ஜவ் என விமர்சனம் செய்பவர்கள்.சாரு விதிவிலக்கு)மற்ற மொழி படங்களை விமர்சனம் செய்யும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.மேலும் தொடருங்கள்.தமிழ் படங்கள் தவிர்த்து.!!

    Reply
  12. viki – மறுபடியும் நன்றி . .:-) கட்டாயம் மற்ற மொழிப்படங்களை நிறையச் செய்கிறேன் . .உங்கள் ஆதரவுக்கு நன்றிகள். . 🙂

    Reply

Join the conversation