பஞ்சு அருணாசலம் – சூப்பர்ஸ்டார்களின் சூப்பர்ஸ்டார்

by Karundhel Rajesh October 11, 2016   Cinema articles

செப்டம்பர் மாத காட்சிப்பிழையில் எழுதிய கட்டுரை இது.


தமிழ்த்திரையில் பல்வேறு முக்கியமான ஆளுமைகளை நாம் கடந்துவந்திருக்கிறோம். அவர்களை இரண்டுவிதங்களில் வகைப்படுத்த முடியும். தனது ஆளுமையை அழுத்தமாகப் பதிவு செய்து, மக்களின் மனதில் இடம்பெற்றவர்கள். எம்.கே.டி, எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன், பானுமதி, ஸ்ரீதர், பீம்சிங், நாகேஷ், சந்திரபாபு, பாலசந்தர் முதலியவர்கள் இந்த வகை. இரண்டாம் வகையினர் இருப்பதும் நமக்குத் தெரியாது; அவர்கள் நம்மை விட்டு மறைந்ததும் நமக்குத் தெரியாது. இவர்களைப் பற்றி நமக்கு நிறையத் தெரியாமல் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு சாதனைகளை இவர்கள் புரிந்திருப்பார்கள். நாம் இப்போது ரசிக்கும் பல விஷயங்களுக்கு இவர்களே மூலகாரணமாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் தனது ஆளுமையைப் பறைசாற்றிக்கொள்ளாமல், அமைதியாகத் தங்களது வேலையை மட்டும் செய்துவிட்டு விடைபெற்றிருப்பார்கள்.

பஞ்சு அருணாசலம் இந்த வகையைச் சேர்ந்தவர்.

பனிரண்டு வருடங்களில், கிட்டத்தட்ட 600 படங்களுக்குக் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்தவர்; கதையாசிரியர்; திரைக்கதை எழுத்தாளர்; இயக்குநரும் கூட; வெற்றிகரமான பல படங்களைத் தயாரித்திருக்கிறார்; ரஜினிகாந்த், கமல்ஹாஸன், எஸ்.பி. முத்துராமன் ஆகியோர்களுடன் கூட்டணி அமைத்துப் பஞ்சு அருணாசலம் எடுத்த படங்கள் இன்றும் மறக்கமுடியாதவை; ரஜினிகாந்த்துக்கு ஆரம்பகாலத்தில் வரிசையாக சூப்பர்ஹிட்களை அளித்தவர் இவர்தான்; ’ப்ரியா’தான் ரஜினிக்கு முதல் சில்வர் ஜூப்ளி. அதை எடுத்தது இவரே; ஜெய்சங்கருக்கு முரட்டுக்காளை படம் மூலமாக மறுவாழ்வு அளித்தவர்; இது மட்டுமல்ல. இளையராஜாவைத் தமிழுக்கு அளித்தவர் பஞ்சு அருணாசலமே. அவர் எடுத்த அன்னக்கிளி படம் எப்படி பிய்த்துக்கொண்டு பட்டிதொட்டியெங்கும் தமிழகத்தில் ஓடியது என்பது அக்காலத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இதுமட்டுமல்லாமல் ஏராளமான பாடல்களையும் எழுதியிருக்கிறார். நாம் திரையில் பார்த்து ரசித்த பல படங்கள், பஞ்சு அருணாசலம் கைவைத்தபின்னர்தான் முழுமையான படங்களாக மாறியிருக்கின்றன. இது சினிமாவுக்குள் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே தெரியும். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருந்தவர். ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியான பல ஹிட்களை எழுதியுள்ளார். மிக வெற்றிகரமான சூப்பர்ஹிட் தயாரிப்பாளர். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் என்று தாராளமாகப் பஞ்சு அருணாசலத்தைப் பற்றிச் சொல்லமுடியும்.

இருந்தும், புகழ் வெளிச்சம் தன்மீது அவ்வளவாக விழாமல் ஒதுங்கியே நின்றுகொண்டார். அதில் மகிழ்ச்சியுடனும் இருந்தார்.

பஞ்சு அருணாசலத்தின் தந்தை கண்ணப்பன், கவிஞர் கண்ணதாசனின் அண்ணன். கண்ணப்பனுக்கு அடுத்தவர், ஏ.எல்.எஸ் என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன். இவர் எஸ்.வரலட்சுமியின் கணவர். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பல புகழ்பெற்ற படங்களைத் தயாரித்தவர். விநியோகஸ்தராக வாழ்க்கையைத் துவங்கி, கிட்டத்தட்ட முப்பத்தைந்து படங்களைத் தயாரித்தவர். தென்னிந்திய ஃபிலிம் சேம்பரின் தலைவராகப் பதிமூன்று வருடங்கள் இருந்தவர்.

காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பியூசி முதல் ஆண்டு படித்துக்கொண்டிருந்த பஞ்சு அருணாசலம், அவரது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு பிரச்னையில் கோபப்பட்டு, அம்மாவிடம் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு சென்னைக்கு ரயிலேறிய சம்பவமே பஞ்சு அருணாசலத்தின் திரைவாழ்க்கையின் ஆரம்பம். அப்படி ரயிலேறியவர், சென்னையில் நேராக ஏ.எல்.எஸ்ஸின் வீட்டுக்குத்தான் வந்திருக்கிறார். ஏ.எல்.எஸ், இவரைப் படிக்கவைக்கவேண்டும் என்று முயற்சிகள் எடுக்க, கதைகள் எழுதுவதற்காக சென்னையிலேயே ஏதேனும் பத்திரிக்கை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துவிடவேண்டும் என்பதே பஞ்சு அருணாசலத்தின் விருப்பமாக இருந்தது. இது ஏ.எல்.எஸ்ஸுக்குக் கடுங்கோபம் வரவழைக்கிறது. இறுதியில், தனது ஸ்டுடியோவிலேயே பஞ்சு அருணாசலத்தை வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறார் ஏ.எல்.எஸ்.

திரைப்படங்கள் எடுப்பதன் நுணுக்கங்களை இங்குதான் பெருமளவில் பஞ்சு அருணாசலம் கற்றுக்கொள்கிறார். அதேசமயத்தில், மாலைவேளைகளில் எப்போதுமே கண்ணதாசனின் ‘தென்றல்’ பத்திரிக்கை அலுவலகத்தில் நேரம் கழிப்பதே பஞ்சு அருணாசலத்தின் வழக்கம். அங்கே கதைகள், கவிதைகள் எழுதுவார். அப்பத்திரிக்கையிலேயே இவரது சில கவிதைகளும் அச்சமயத்தில் இடம்பெறுகின்றன. கண்ணதாசனின் அறிமுகம் கிடைக்கிறது. லியோ டால்ஸ்டாய், மாப்பஸான், காண்டேகர், தாகூர், பங்கிம் சந்திர சட்டர்ஜீ ஆகியோரின் கதைகளைப் படித்திருந்த அருணாசலம், அவைகளைப் பற்றிச் சொல்லிக் கண்ணதாசனின் கவனத்தைக் கவர்கிறார். இதன்பின் அவரது ஒரு தலையங்கத்தைச் சொல்லச்சொல்ல எழுதித் தர, இவரது எழுத்தும் வேகமும் பிடித்துப்போய், தன்னுடனேயே தங்கச் சொல்லிவிடுகிறார் கண்ணதாசன்.

அப்போதுதான், ஒரு சித்தப்பாவான ஏ.எல்.எஸ்ஸின் ஸ்டியோவில் இருந்து திரைப்படங்களுக்குள் நுழைவதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த பஞ்சு அருணாசலம், சிந்தனை வயப்படுகிறார். அவரது வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான முடிவு என்று அவருக்குத் தெரிகிறது. ஸ்டுடியோவிலேயே இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் செட் அஸிஸ்டெண்ட்டாகவே இருந்தால் அவசியம் விரைவில் திரைப்படங்களுக்குள் நுழைந்துவிடலாம். ஆனால் அக்காலகட்டத்தில், அப்போதுதான் திரைப்படப் பாடல்கள் எழுத ஆரம்பித்திருந்த இன்னொரு சித்தப்பாவான கண்ணதாசனுடன் சென்றால், என்ன ஆவோம் என்பதே தெரியாது. ஸ்டுடியோவில் நிலையான சம்பளம் உண்டு. ஆனால் கண்ணதாசனோ அப்போதெல்லாம் சிரமதசையில்தான் வாழ்ந்துவந்தார். மாலையிட்ட மங்கை படத்தைப் பல சிரமங்களுக்கு இடையே கண்ணதாசனும் பங்குதாரர்களும் தயாரித்து, அதன்பின் ஏ.எல்.எஸ்ஸிடமே விற்று, படம் சூப்பர்ஹிட் ஆனபின் சிவகங்கைச் சீமை படம் எடுத்து, அது தோல்வியடைந்த காலகட்டம் அது. அதன்பின்னர் கவலை இல்லாத மனிதன் படத்தைக் கண்ணதாசன் எடுத்துக்கொண்டிருந்த நேரம்தான் பஞ்சு அருணாசலத்தைத் தன்னோடு வந்து சேரச்சொல்கிறார்.

அப்போது, ’எப்படியும் எழுத்தாளன் ஆகவேண்டும் என்றுதானே நினைத்தோம்? எனவே முத்தண்ணனுடன் (முத்தையா என்ற கண்ணதாசன்) இருந்தால் கவிதைகள், கதைகள் என்று எழுத வாய்ப்புக் கிடைக்கும். ஸ்டுடியோவில் வேலை செய்தால் எப்படி எழுத்தாளன் ஆகமுடியும்?’ என்ற முடிவை எடுத்துவிட்டு, நேராகப் போய்க் கண்ணதாசனுடன் சேர்ந்துவிடுகிறார் பஞ்சு அருணாசலம். அப்போது கவிஞர், எம்.எஸ்.வியுடன் கம்போஸிங்கில் இருக்கிறார். இவர் அங்கு சென்றதும், ஒரு பாடலைச் சொல்லி, அப்படியே எழுதச்சொல்கிறார் கண்ணதாசன். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்து பஞ்சு அருணாசலம் எழுதிக்கொண்ட அந்த முதல் பாடல்- ‘பிறக்கும்போதும் அழுகின்றாய்… இறக்கும்போதும் அழுகின்றாய்’..

இப்படியே கண்ணதாசனுடன் பஞ்சு அருணாசலம் வளர்கிறார். கண்ணதாசன் புகழடைய ஆரம்பிக்கிறார். கண்ணதாசனின் பணம் இவரிடமேதான் இருக்கும். அதிலிருந்து அவ்வப்போது இவரைப் பணம் எடுத்துக்கொள்ளச்சொல்வார் கவிஞர். இதன்பின் பஞ்சுவே கவிஞரின் திரை அப்பாயிண்ட்மெண்ட்களை கவனித்துக்கொள்ளும் மேனேஜராகவும் வளர்கிறார். இச்சமயத்தில்தான் ஒருநாள், கவிஞர் ஊரில் இல்லாதபோது ‘சாரதா’ படத்தில் ஒரு பாடல் எழுதவேண்டிய நிர்ப்பந்தம். இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இவரிடம் வந்து இவரையே பாடல் எழுதச்சொல்கிறார். தயக்கத்துடன் இவரும் ஒரு பாடலை எழுதிக்கொடுக்கிறார். அந்தப் பாடல் பிந்நாட்களில் சூப்பர்ஹிட் ஆனது, இன்றுவரை தமிழகத்தின் அத்தனை திருமணங்களிலும் மாறிமாறி ஒலிக்கும் அந்தப் பாடல்தான் – ‘மணமகளே மருமகளே வா வா… உன் வலதுகாலை எடுத்துவைத்து வா வா’.

இப்பாடலுக்குப் பின் அவ்வப்போது பாடல் எழுதும் வாய்ப்புகள் பஞ்சு அருணாசலத்துக்கு வருகின்றன. இதே காலகட்டத்தில் ஒருசில கதை விவாதங்களிலும் பஞ்சு அருணாசலம் பங்கேற்க ஆரம்பிக்கிறார். இவர் பல படங்களைப் பார்ப்பவர் என்பதே காரணம். அடையாறு காந்தி மண்டபத்தில் அதிகாலையில் சென்று வி.சி.குகநாதனுடன் அமர்ந்து கதை விவாதங்களைச் செய்திருக்கிறார் பஞ்சு அருணாசலம். குகநாதனுடன் ஓரிரு படங்களில் உதவி இயக்குநராகவும் வேலை செய்திருக்கிறார். அப்போது ஒரு நாள், ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம் கிடைக்கிறது (ஜே.எல். ஃபிலிம்ஸ்). அவர்களுக்காக ஒரு ஸ்க்ரிப்ட் எழுதுகிறார். தங்கக் கடத்தலை மையமாக வைத்து உருவான திரைக்கதை அது. கதை பிடித்துவிட்டதால் ஜெமினி, சரோஜாதேவி, சோ, சந்திரபாபு என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே சேர்ந்துவிட்டது. இயக்குநர், தெலுங்கு இயக்குநரான கோபிநாத் (நடிகர் சுரேஷின் தந்தை). இரண்டே மாதங்களில் படம் முடிந்தும் விட்டது. ஆனால் படத்துக்கு மீடியேட்டராக இருந்த சேதுராமனுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் படத்தின் பார்ட்னர்ஷிப் பற்றி ஏற்பட்ட மோதல் ஒன்றினால், படத்தை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவுசெய்துவிடுகின்றனர். இதனால் இறுதிவரை அந்தப்படம் வெளியாகவே இல்லை.

இதன்பின் சித்தப்பா ஏ.எல்.எஸ்ஸுக்கே ஒரு கதை பண்ணித் தருகிறார். ஒரு மாதம் கழித்துப் படப்பிடிப்பு. படத்தின் இயக்குநர்கள் ராம்நாத்-ஃப்ரான்ஸிஸ், இந்தப் படத்தை இயக்குமுன்னர் ஒரே மாதத்தில் இன்னொரு படத்தை இயக்கிவிட்டு வரலாம் என்று சென்றதால் கோபம் அடைந்த ஏ.எல்.எஸ், அந்தப் படத்தையே நிறுத்திவிடுகிறார். இதன்பின் இன்னொரு கதையும் ஏ.எல்.எஸ்ஸுக்குச் செய்துதருகிறார் பஞ்சு அருணாசலம். ஒரு வாரம் படப்பிடிப்புக்குப் பின்னர், படத்தைப் போட்டுப் பார்க்கும் ஏ.எல்.எஸ், படம் எளிமையாக இருக்கிறது. பாவமன்னிப்பு, பாசமலர் என்றெல்லாம் உணர்ச்சிகரமான படங்கள் வரும் வேளையில் எளிமையான படங்கள் எல்லாம் ஓடாது என்று முடிவுசெய்து, அந்தப் படத்தையும் அப்படியே நிறுத்திவிடுகிறார்.

இப்படி, தொட்ட படங்கள் எல்லாம் பாதியிலேயே நிறுத்தப்படுவதால், ‘பாதிக்கதை பஞ்சு’ என்றே பஞ்சு அருணாசலம் அழைக்கப்பட்டதை அவரே விரிவாக எழுதியிருக்கிறார்.

இதன்பின்னரும் பல படங்கள் இப்படியே செல்ல, மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்றெல்லாம் பஞ்சு அருணாசலம் யோசித்திருக்கிறார். பின்னர் திருமணம் நடக்கிறது. சில வருடங்கள் இப்படியே கழிகின்றன. ’ஹலோ பார்ட்னர்’ என்ற கதை படமாகிறது. கதை நன்றாக இருந்தாலும், படம் குப்பையாக எடுக்கப்பட்டதால் பஞ்சு அருணாசலம் பயந்துவிடுகிறார். நாகேஷ் ஹீரோ. அவர் அப்போது புகழின் உச்சத்தில் இருந்ததால், படம் மூன்று நான்கு வாரங்கள் ஓடிவிடுகிறது. எனவே படம் தோல்வி இல்லை. ஆனால் அப்படம் பற்றி ஒரு நாள் நாகேஷ், ‘நீ சரியா எழுதல.. அதான் படம் ஓடல’ என்று சொல்லிவிடுகிறார். அன்றில் இருந்து மைக்கேல் மதன காமராஜன் வரை பஞ்சு அருணாசலம் எடுத்த எந்தப் படத்திலும் நாகேஷ் இல்லை. மைக்கேல் மதன காமராஜனிலும் இவராக அவரை புக் செய்யவில்லை. அவராகவே கேட்டதால்தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகப் பஞ்சு அருணாசலம் எழுதியிருக்கிறார்.

பின்னர் ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்ற அடுத்த படத்துக்குத் திரைக்கதை எழுதுகிறார். படம் வெளிவந்து பிரமாதமாக ஓடுகிறது. ’பாதிக்கதை பஞ்சு’ என்ற பெயர் அப்போதுதான் பொய்த்தது. அதற்கு ஆன ஆண்டுகள் – பனிரண்டு. பன்னிரண்டு வருடங்களாகப் பஞ்சு அருணாசலம் எழுதிய எந்தப் படமும் வெளிவரவில்லை ! இது எத்தனை பெரிய துயரம்? இதனால்தான் தற்கொலை எண்ணங்கள் அருணாசலத்தின் மனதில் எழுந்தன. ஆனால் விடாமுயற்சியுடன் சினிமாவிலேயே இருந்துகொண்டிருந்ததால், பன்னிரண்டாவது வருடம் வெளியான ‘கல்யாணமாம் கல்யாணம்’ படம் பஞ்சு அருணாசலத்தின் திரைவாழ்க்கையின் இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாகத் துவக்கிவைத்தது.

1974 ஜனவரியில் ‘கல்யாணமாம் கல்யாணம்’ வெளிவந்து நன்றாக ஓடுகிறது. அதைத் தொடர்ந்து, வரிசையாகப் பத்து படங்கள் பஞ்சு அருணாசலத்தின் எழுத்தில் வெளிவருகின்றன. ஆனால் இவையெல்லாமே 1974ம் ஆண்டுக்குப் பின் வெறும் ஒன்றரை வருடங்களில் வெளியானவை! இக்காலகட்டத்தில்தான் ஜெய்சங்கரின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றான துணிவே துணை, பஞ்சு அருணாசலத்தின் எழுத்தில் வெளியாகிறது. அப்படம் இன்றும் பலருக்கும் நினைவிருக்கக்கூடிய படம். ஒரு ஆங்கிலப் படம் போலவே வேகமான திரைக்கதையோடு எழுதப்பட்டிருக்கும்.

இக்காலகட்டத்தில்தான் ஹிந்திப்படங்கள் தமிழகத்தில் பிரமாதமாக ஓடுகின்றன. காரணம், அவற்றின் பாடல்கள். எனவே, தமிழ்ப்படங்களையும் தாண்டிப் பிரம்மாண்டமாக ஓடும் ஹிந்திப் படப் பாடல்களை மீறி, அவற்றைவிடவும் நல்ல இசையைக் கொடுக்கும் ஒருவரை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் பஞ்சு அருணாசலத்துக்குள் எழுகிறது. அறுபதுகளில் பிரபலமாக இருந்த விஸ்வநாதன், மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்களின் இசை, எழுபதுகளில் சற்றே கேட்டதையே திரும்பக்கேட்கும் உணர்வை அளித்துவந்த காலம் அது.

அப்போதுதான் பஞ்சு அருணாசலத்தின் உதவியாளராக இருந்துவந்த கதாசிரியர் ஆர்.செல்வராஜின் சிபாரிசின்பேரில் அறிமுகமாகிறார் இளையராஜா. அவரை அழைத்து, பாடச்சொல்லிக் கேட்கிறார் பஞ்சு அருணாசலம். பிடித்துவிடுகிறது. இந்தப் பாடல்களுக்கு ஏற்ப ஒரு படம் வேண்டுமே? எனவே மனதிலேயே அப்பாடல்களை வைத்துக்கொண்டு, ஒரு வருடம் கழித்து ஒரு படத்தைத் துவக்குகிறார். அதுதான் அன்னக்கிளி. அப்போது ராஜாவை அழைத்து, வாசிக்கச்சொல்லி ரிகார்ட் செய்துகொள்கிறார். அப்பாடல்களை மது அருந்திவிட்டுக் கேட்டும் பார்க்கிறார். திரும்பத்திரும்பக் கேட்டுப்பார்த்தபின் அந்த ட்யூன்கள் அவருக்கு மிகவும் பிடித்துவிடுகின்றன. உடனடியாக அந்த இசைக்கு ஏற்பப் பாடல்களும் எழுதிவிடுகிறார். படம் எடுக்கப்படுகிறது. அன்னக்கிளி படம் வெளியானபின்னர் நடந்ததெல்லாம் வரலாறு. இளையராஜாவை இப்படியாக, ஹிந்திப்பாடல்களின் ஆதிக்கத்தை அடியோடு குறைத்து, தமிழ்ப்பாடல்களை மறுபடி பிரபலப்படுத்திய கலைஞன் என்று சொல்கிறார் பஞ்சு அருணாசலம்.

panju-arunachalam-mahendran-ilaiyaraja

இதன்பின்னர் ரஜினிகாந்த் என்ற இளைஞர் தமிழில் அறிமுகமாகிறார். அவரைவைத்து கவிக்குயில் என்ற படம் எடுக்கிறார் பஞ்சு அருணாசலம். படம் சரியாகப் போகவில்லை. இருந்தும் ரஜினியின் நடிப்பு பிடித்துவிடுகிறது. எனவே காயத்ரி படம் துவங்குகிறது. அது சுஜாதா எழுதிய கதை. அதை சற்றே தனக்கேற்ப மாற்றி எடுத்து வெளியிடுகிறார். படம் பெரிய வெற்றி அடைகிறது. படத்தில் ரஜினி வில்லன். ஹீரோ ஜெய்சங்கர். ஆனால் ரஜினி அடிவாங்கும்போது ஜெய்சங்கரை ஆடியன்ஸ் திட்டுவதை கவனிக்கிறார் அருணாசலம். அப்போதே, ரஜினி என்ற இந்த இளைஞனிடம் மக்களைக் கவரும் சக்தி உள்ளது என்று புரிந்துகொள்கிறார் (சில வருடங்கள் கழித்து, இதே ரஜினிகாந்த்-ஜெய்சங்கர் காம்பினேஷனை உல்டா செய்து, ரஜினிக்கு ஜெய்சங்கரை வில்லனாக்கி பஞ்சு அருணாசலம் எடுத்த முரட்டுக்காளை மிகப்பிரம்மாண்ட வெற்றியடைந்தது வரலாறு).

காயத்ரி அடைந்த வெற்றியால், ரஜினிகாந்த்தையும் சிவகுமாரையும் வைத்து புவனா ஒரு கேள்விக்குறியை எடுக்கிறார் அருணாசலம். அதில் சிவகுமார் வில்லன். ரஜினி பாசிடிவ் கதாபாத்திரம் செய்திருப்பார். சிவகுமாரை வில்லன் என்று தெரியாமல் வந்து படம் பார்த்த ஆடியன்ஸ் ஆச்சரியம் அடைந்தனர். இது அருணாசலத்தின் முடிவுதான். படம் நன்றாக ஓடியது. இதன்பின்னர் சுஜாதாவிடம் மறுபடி ரைட்ஸ் வாங்கி, ப்ரியா எடுக்கப்படுகிறது. அதிலும் ரஜினிகாந்த்தே ஹீரோ. அதுவும் சூப்பர்ஹிட்.

கமல்ஹாஸனும் ரஜினிகாந்த்தும் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்து, பின்னர் தனித்தனியாக நடிக்க முடிவெடுத்து, அப்படி நடிக்கத் துவங்குகையில், இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற முடிவில் இருவரின் கால்ஷீட்டையும் வாங்கிவைத்திருந்த அருணாசலம், இருவரும் பிரிந்தபின்னரும் சளைக்காமல் இருவருக்கும் தனித்தனிப் படங்களை எழுதி, அவற்றைத் தயாரித்து வெளியிட்ட கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவைதான் கல்யாணராமன் & ஆறிலிருந்து அறுபது வரை. இரண்டுமே பிரமாதமாக ஒடிய படங்கள்.

இதன்பின்னர் ரஜினியிடம் இன்னொரு படத்துக்காக வாங்கி வைத்திருந்த கால்ஷீட்டை, அப்போது மறுபடியும் ஒரு இடைவெளிக்குப் பின்னர் படம் எடுக்க வந்திருந்த ஏ.வி.எம் நிறுவனத்தின் சரவணன் வேறு வழியில்லாமல் கேட்க, அவர்களுக்காக இவரிடம் இருந்த ரஜினியின் கால்ஷீட்டை விட்டுக்கொடுத்து, பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதிக்கொடுத்த படம்தான் முரட்டுக்காளை. பிரம்மாண்டமான முறையில் ஏ.வி.எம் தயாரித்த படம். ரஜினி விக் வைத்துக்கொண்டு நடித்த படம். ரஜினிக்கு வில்லனாக, ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருந்த ஜெய்சங்கர் நடித்த படம். இப்படம் எவ்வளவு பெரிய சூப்பர்ஹிட் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். போலவே கமலுக்காக உல்லாசப்பறவைகள், எல்லாம் இன்பமயம் போன்ற படங்களும் அருணாசலம் எழுதியிருக்கிறார்.

இதன்பின், க்ளாஸ் ஹீரோவாக இருந்த கமல்ஹாஸனுக்காகவே சகலகலா வல்லவனை ஏ.வி.எம்முக்காக எழுதினார் அருணாசலம். ஏற்கெனவே, இப்படம் இறங்கி அடிக்கவேண்டும் என்று சரவணன் அருணாசலத்திடம் சொல்லியிருந்தார். அதேபோல் அப்படம் கமல்ஹாஸனை அனைவரிடமும் கொண்டுபோய்ச் சேர்த்தது. படமும் பெரிய ஹிட்.

இப்படங்களுக்குப் பின்னர் தொடர்ச்சியாக ரஜினி மற்றும் கமலுக்குத் திரைக்கதைகள் எழுதித் தள்ளுகிறார் பஞ்சு அருணாசலம். போக்கிரி ராஜா, பாயும் புலி, தூங்காதே தம்பி தூங்காதே, அடுத்த வாரிசு, தம்பிக்கு எந்த ஊரு, ஜப்பானில் கல்யாணராமன், உயர்ந்த உள்ளம், மனிதன், தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, அபூர்வ சகோதரர்கள், அதிசய பிறவி, தர்மதுரை, பாண்டியன், சிங்காரவேலன், வீரா என்று இத்தனை ரஜினி கமல் படங்களுக்கு எழுத்து வேலை செய்தவர்கள் வேறு எவரும் இல்லை. இப்படங்களுக்கு இடையில், சிவாஜி, கார்த்திக், ராமராஜன், விஜயகாந்த், ராம்கி, சரத்குமார் என்றெல்லாம் மற்ற ஹீரோக்களுக்கும் எழுதியிருக்கிறார்.

kamalrajini

’கமர்ஷியல் படம்’ என்றால் அது எப்படி இருக்கவேண்டும் என்பதற்குப் பஞ்சு அருணாசலம் எழுதிய படங்களே மிகச்சிறந்த உதாரணங்கள். மிக எளிமையான கதை, அக்கதையில் ஒருசில திருப்பங்கள், அலுப்பே தட்டாத காட்சிகள், பாடல்கள், எல்லாமே சிறப்பாக முடித்துவைக்கப்படும் க்ளைமாக்ஸ் என்று அவரது படங்கள் அத்தனை தரப்பு ஆடியன்ஸையும் நிறைவுபடுத்தின. மாஸ் ஆடியன்ஸுக்காக முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், எல்லாம் இன்பமயம், தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்கள்; க்ளாஸ் ஆடியன்ஸுக்காக புவனா ஒரு கேள்விக்குறி, அன்னக்கிளி, நதியைத் தேடிவந்த கடல் போன்ற படங்கள்; மாஸ்+க்ளாஸ் கலந்து உயர்ந்த உள்ளம், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் என்று பஞ்சு அருணாசலம் எழுதாத திரைக்கதைகளே இல்லை. பொதுவாக, திரைப்படங்களில் எழுத்தாளர்களாக இருப்பவர்களுக்கு சரக்கு விரைவில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை தமிழில் உண்டு. உலகம் முழுக்க, மிகவும் வயதானர் இயக்குநர்களும் திரைக்கதை ஆசிரியர்களும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். இருந்தாலும் தமிழில் அப்படி நடப்பதில்லை (ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து). பஞ்சு அருணாசலம் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் வற்றாத கற்பனைத்திறனைக் கொண்டிருந்தவர். அவரிடம் யாரும் சென்று ஆலோசனை கேட்கமுடியும். குறீப்பாகக் கமல்ஹாஸனுக்கு அவர் அளித்துள்ள ஆலோசனைகள் அளப்பரியவை என்று திரைவட்டாரங்கள் சொல்லும். எப்படிப்பட்ட படத்தையும் பார்த்துவிட்டு, அப்படத்தின் பிரச்னைகள், எப்படி எடிட் செய்யலாம், எப்படி அப்படத்தை சுவாரஸ்யமாக மாற்றலாம் என்றெல்லாம் பஞ்சு அருணாசலம் பலருக்கும் ஆலோசனைகள் வழங்குவதில் தேர்ந்தவர்.

தமிழில் மட்டுமல்லாமல், இந்தியத் திரைப்படங்களிலேயே, ஐம்பது வருடங்களுக்கும் மேலாகத் திரைப்படங்கள் எழுதி, இயக்கி, தயாரித்து, வெளியிட்டு வந்திருக்கும் அஷ்டாவதானிகள் மிகக்குறைவு. அவர்களில் பஞ்சு அருணாசலம் தலையாய இடத்தை அவசியம் பெறுவார். ஒரு தலைமுறையின் ரசனையையே மாற்றியமைத்தவர்; மூன்று தலைமுறைகளின் சூப்பர்ஸ்டார்களையும் அவர்களின் படங்களையும் நிர்ணயித்தவர்; பலரையும் நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என்ற முறையில், பஞ்சு அருணாசலத்துக்கு அளிக்கப்பட்ட விருதுகள் போதவே போதாது. இருபினும் அதையெல்லாம் அவர் பெரிதாக நினைக்கவும் இல்லை. எப்போதுமே எளிமையுடனேயே வாழ்ந்துவந்தவர் அவர். அதனாலேயே பெரும்பாலான ஆடியன்ஸுக்கு அவரது பெயர் பரிச்சயம் ஆகிய அளவு அவர் திரைப்படங்களுக்காகச் செய்தது பரிச்சயமாகவில்லை. அதை ஒரு பொருட்டாகவே அவரும் நினைக்கவும் இல்லை. அவர் கடன் பணி செய்து இருப்பதே என்றே இறுதிவரை வாழ்ந்து மறைந்தும் விட்டார்.

பஞ்சு அருணாசலம் தனது திரைவாழ்வின் உச்சத்தில் இருந்தபோதுதான் நான் படங்கள் பார்க்கத் துவங்கினேன். அவர் திரைக்கதை எழுதியுள்ள படங்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் பார்த்தும் இருக்கிறேன். இன்றும் அவைகளைப் பலமுறை பார்க்கமுடியும். அப்படங்களில், ஒரு வணிகத் திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்ற பாடம் அவசியம் உள்ளது. அவற்றை முறைப்படி கவனித்தாலே இப்போதும் ஆடியன்ஸின் மனதில் நிற்கக்கூடிய பிரம்மாண்டமான மாஸ் ஹிட்களை உருவாக்க இயலும். அதுதான் பஞ்சு அருணாசலம் உருவாக்கிவைத்திருக்கும் பாணி. பி.ஏ ஆர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற அவரது நிறுவனத்தின் பெயர் சினிமா ரசிகர்களின் மனதில் இருந்து என்றும் அழியாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். பஞ்சு அருணாசலம் உருவாக்கியிருக்கும் legacy அப்படிப்பட்டது.

சரி. இதுவரை பஞ்சு அருணாசலம் பற்றிப் பார்த்தோம். தமிழ் சினிமாவின் அட்டகாசமான திரைக்கதை எழுத்தாளராக இருந்து மறைந்த இவர், திரைக்கதை எழுதுவது பற்றிச் சொன்னதெல்லாம் என்ன? இதோ சுருக்கமாக. இந்தப் பத்தி விகடனில் வெளிவந்தது.


திரைக்கதை எழுதுவது எப்படி? பஞ்சு அருணாசலம் பாணி

”சினிமாவுக்கு என்று இல்லை… `இப்படித்தான் எழுத வேண்டும்’ என்று யாரும் அறிவுரை சொல்லி எல்லாம் எதுவும் எழுத முடியாது. அது சிறுகதை, நாவல், சினிமா, நாடகம்… என எதை எழுதுவதாக இருந்தாலும், கற்பனையில் ஒரு விஷயத்தை உருவாக்கும் திறன் வேண்டும். அது அனுபவம், வாசிப்பு, பார்த்த படங்கள், கேட்ட இசை… என ஒவ்வொருவரைப் பொறுத்தும் கொடுக்கப்படும் வாய்ப்புகள், சுதந்திரத்தைப் பொறுத்தும் அது மாறும்.

ஓ.கே. சினிமாவில் கதை, ஸ்க்ரீன்ப்ளே, ட்ரீட்மென்ட் உண்டு. ஆனால் நாவல், குடும்ப நாவல், பெருங்கதை, குறுங்கதை, சிறுகதை… இவற்றுக்கு ஸ்க்ரீன்ப்ளே, ட்ரீட்மென்ட் எதுவும் கிடையாது. ‘கதை, ட்ரீட்மென்ட் எழுதுவதில் கல்கி கெட்டிக்காரர்’, ‘கதை, ஸ்க்ரீன்ப்ளே எழுதுவதில் புதுமைப்பித்தன் கெட்டிக்காரர்…’ என்று யாராவது சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி இருக்கும்போது சினிமாவில் மட்டும் இந்த ஸ்க்ரீன் ப்ளே, ட்ரீட்மென்ட் எப்படி வந்தது?

ஸ்க்ரீன்ப்ளே… இதில் ‘ப்ளே’ என ஏன் சொல்கிறார்கள்? கிரிக்கெட் விளையாட்டு உலகம் முழுவதும் ஒன்றுதான். அதில் சிலர் டெண்டுல்கராகவும் சிலர் தோனியாகவும் சிலர் கோஹ்லியாகவும்… அந்த விளையாட்டை எத்தனைவிதமாக விளையாடுகிறார்கள். அதே கிரிக்கெட்தான். ஆனால், அதை ஒவ்வொருவரும் எத்தனைவிதமாக, எத்தனை வருடங்களாக விளையாடுகிறார்கள்? போரடிப்பதே இல்லை.

அதுபோன்ற ப்ளேவை திரையிலும் பண்ணலாம். அதுதான் ஸ்க்ரீன்ப்ளே. ‘அடுத்த பந்தை அடிப்பானா, அது சிக்ஸரா, ஃபோரா, விக்கெட்டா..?’ இப்படி விறுவிறுப்பு குறையாமல் போய்க்கொண்டிருக்கும் ப்ளே போல. ‘நல்ல கதையைச் சொல்கிறேனே…’ என எந்தவித ப்ளேயும் இல்லாமல், கதையைச் சொல்லிக்கொண்டே இருந்தால், ‘அடப்போய்யா… நீயும் உன் கதையும்’ எனக் கொட்டாவி விட்டுவிட்டு எழுந்துபோய்விடுவார்கள். அதனால் நல்ல கதைகளைக்கூட சரியாக ப்ளே பண்ண வேண்டும்.

அடுத்து ‘ட்ரீட்மென்ட்’. இந்த வார்த்தையை உபயோகப்படுத்தும் இடம் மருத்துவமனை. உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பது டாக்டர்களின் வேலை. அப்படி இருக்கையில் சினிமாவில் எங்கிருந்து வந்தது அந்த ட்ரீட்மென்ட்? நம் உடலில் செயல்படாத உறுப்புகளைச் செயல்படவைப்பதுதானே ட்ரீட்மென்ட். அதேபோல்தான் எவ்வளவு மிகச் சிறந்த கதையாக இருந்தாலும், திரைக்கதை என்ற ஒன்றை நீங்கள் எழுதி முடிக்கும்போது, நம்மை அறியாமல், ஆங்காங்கே சில வீக் பாயின்ட்ஸ் வந்துவிடும். அவற்றை உன்னிப்பாகக் கவனித்து அதை ‘ட்ரீட்’ பண்ண வேண்டும். அப்படி ஒரு கதையை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பாகவும் அனைவரும் ரசிக்கும்படியாகவும் புரியும்படியாகவும் செய்யக்கூடியதுதான் நல்ல ட்ரீட்மென்ட்.

இன்று படம் இயக்கும் பல இயக்குநர்களிடம் நான் கதை கேட்டிருக்கிறேன். ‘இது என்ன கதை?’ என ஆரம்பம் முதல் கடைசி வரை கதையை முடிவுபண்ணாமல், அவர்கள் சிந்திக்கும்போதே சினிமாவாகவே, அதாவது ட்ரீட்மென்டாகவே சிந்திக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது தவறு. முதலில் முழுக் கதையைத் தயார்செய்த பிறகே ப்ளே, ட்ரீட்மென்ட்டுக்குப் போக வேண்டும்.

ஆனால் இவர்கள், கதையையே ரெடி பண்ணாமல், ‘ஓப்பன் பண்ணினா பெரிய கார் வந்து நிக்குது’ என்று ஷாட் பை ஷாட்டாகவே சிந்தித்து, ‘இந்த இடத்தில் பாட்டு, அந்த இடத்தில் காமெடி ட்ராக்’ எனக் காட்சிக் காட்சியாக எடுத்துக் கோத்து சினிமா ஆக்குகிறார்கள். அவர்கள் சொல்லும் காட்சிகளைக் கோத்துப்பார்த்தால், அதில் கதை இருக்கிறதா, இல்லையா என்றுகூட பார்ப்பது இல்லை. அப்படியே அதில் கதை இருந்தாலும், அது நன்றாக இருப்பது இல்லை.

ஆனால், நான் ஒரு படத்துக்கு முதலில் அடிப்படையான ஒரு கதையை ரெடி பண்ணுவேன். பிறகு அந்தக் கதையின் ஹீரோ, ஹீரோயின், வில்லன் என முக்கியமான கேரக்டர்களில், யாரை நடிக்கவைக்கலாம் என நடிகர், நடிகைகளை ஃபிக்ஸ் பண்ணுவேன். அந்தக் கதையையும், அந்த நடிகர்- நடிகைகளையும் மனதில் வைத்து திரைக்கதை அமைப்பேன். அந்த ஃப்ளோ இழுவையாக இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பார்க்கும் வகையில் பரபரப்பாக இருக்கிறதா என, பிறகு ட்ரீட் பண்ணுவேன்.

இப்படி நான் எழுதியதை எஸ்பி.முத்துராமன் சார் அழகாக எடுத்துத் தருவார். அவர் தேவைக்கு அதிகமாக எடுத்து, பிறகு வெட்டித் தூக்கி எறிந்ததாக நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. தனித்தனியாக இருந்த நாங்கள் இருவரும், அப்படி ஒரே மாதிரியான அலைவரிசையில் இயங்கி பல வெற்றிகளைத் தந்திருக்கிறோம். ஆனால் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என அனைத்தையும் ஒரே ஆளாக, கன்ட்ரோலில் வைத்துள்ள இன்றைய இயக்குநர்கள் எங்களைத் தாண்டியும் மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தரலாம். அது உங்கள் ப்ளே, ட்ரீட்மென்டைப் பொறுத்தது”

பஞ்சு அருணாசலம், தனது திரைக்கதை எழுதும் கலையை நமக்குச் சொல்லித்தராமலேயே மறைந்துவிட்டார் என்பது துரதிருஷ்டவசமானது. ஒருவரும் அவரிடம் இருந்து இதைத் தெரிந்துகொண்டு உலகுக்கு அறிவிக்க முயலவில்லை என்பது எத்தனை கொடுமை? தனது திரைக்கதை எழுதும் முறையைப் பற்றிப் பஞ்சு அருணாசலம் சொன்னது மேலே இருக்கும் வரிகள் மட்டுமே. நாம் அவரை சரியாக உபயோகப்படுத்தாமலேயே விட்டுவிட்டோம் என்பதை நினைத்தால் நெஞ்சில் வலிக்கிறது.


இனி, ஒருசில பஞ்சு அருணாசலம் பற்றிய வீடியோக்கள்.

 

 

 

 

 

படங்கள் உதவி: விகடன் & ஞானம்

இந்தக் கட்டுரைக்கு விகடனில் வெளிவந்துகொண்டிருக்கும் ‘திரைத்தொண்டர்’ தொடர் உதவியது. பெரும்பாலான பஞ்சு அருணாசலத்தின் படங்களை நானே பார்த்திருக்கிறேன். அவரைப்பற்றியும் நன்கு தெரியும். இருப்பினும், ஒரு சில முக்கியமான தகவல்கள்+அவரது திரைக்கதை எழுதும் முறை ஆகியவை விகடன் திரைத்தொண்டர் தொடரிலிருந்தே எடுத்திருக்கிறேன். விகடனுக்கு எனது நன்றிகள்.

  Comments

3 Comments

  1. செந்தில்

    ////உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பது டாக்டர்களின் வேலை. அப்படி இருக்கையில் சினிமாவில் எங்கிருந்து வந்தது அந்த ட்ரீட்மென்ட்? நம் உடலில் செயல்படாத உறுப்புகளைச் செயல்படவைப்பதுதானே ட்ரீட்மென்ட். அதேபோல்தான் எவ்வளவு மிகச் சிறந்த கதையாக இருந்தாலும், திரைக்கதை என்ற ஒன்றை நீங்கள் எழுதி முடிக்கும்போது, நம்மை அறியாமல், ஆங்காங்கே சில வீக் பாயின்ட்ஸ் வந்துவிடும். அவற்றை உன்னிப்பாகக் கவனித்து அதை ‘ட்ரீட்’ பண்ண வேண்டும். அப்படி ஒரு கதையை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பாகவும் அனைவரும் ரசிக்கும்படியாகவும் புரியும்படியாகவும் செய்யக்கூடியதுதான் நல்ல ட்ரீட்மென்ட்//// இது தவறான தகவலல்லவோ ?

    Reply
    • செந்தில்

      Writing a Writer’s Treatment

      Think of the treatment as a presentation. Executives are very busy people whose time is limited. They don’t want to read a 120 page screenplay because that’s at least two hours of their time. But, they are willing to read a 5 to 10 page treatment about the movie you plan to write for them (or maybe already have written). It’s a sales tool. If they’re excited by the few pages of your treatment, then they’ll be willing to read the entire screenplay. If they’re not excited, then they’ll figure the script is not worth reading.

      Reply
  2. காரிகன்

    பஞ்சு அருணாச்சலம் ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் போக்கை முற்றிலும் மாற்றி நாலாந்திர வணிக சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்தவர். இளையராஜாவை கொண்டுவந்தார் என்பதற்காக அவரை சற்று பாராட்டலாம். (இல்லாவிட்டாலும் இளையராஜா பாரதிராஜா மூலம் தமிழுக்கு வந்துதான் இருப்பார் பதினாறு வயதினிலே மூலமாக)

    Reply

Join the conversation