Papillon (1973) – English
டூம்ப் ரைடர் : அண்டர்வேர்ல்ட் முடிந்தது. இனிமேல், அடிக்கடி பழையபடி பதிவுகளை மக்கள் எதிர்பார்க்கலாம் (அய்யய்யோ . . இனிமே அடிக்கடி எளுதி, மொக்கைய போடப் போரான் போலயே . . ). இதோ இன்றைய படம் . .
சுதந்திரத்துக்கு நாம் கொடுக்கும் விலை என்ன? வெட்ட வெளியில் நின்றுகொண்டு சுதந்திரமான காற்றைச் சுவாசிக்க ஒரு மனிதன் கொடுத்த விலைகளைப் பற்றிய படம் தான் இந்த ‘பேப்பியோன்’. பேப்பியோன் என்ற ஃப்ரெஞ்ச் வார்த்தைக்கு, பட்டாம்பூச்சி என்று பொருள் (சூர்யா . . உங்களுக்கு இன்னொரு பெயர் ரெடி) . . ஆன்ரி ஷாரியே(ர்) (Henri Charrière) என்ற ஒரு மனிதன் எழுதிய அவனது சொந்த வாழ்க்கையே பின்னர் படமாக எடுக்கப்பட்டது. குமுதம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். . எண்பதுகளின் பிற்பகுதியில், ரா. கி. ரங்கராஜன் இந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து, அது குமுதத்தில் ‘பட்டாம்பூச்சி’ என்ற பெயரில் வெளிவந்தது.
1973ல் வெளிவந்த இப்படத்தின் இயக்குநர், ஃப்ராங்க்ளின் ஷாஃப்னர். ‘பேட்டன்’ படத்திற்காக, ஆஸ்கர் வாங்கியவர். இப்படத்தில் பேப்பியோனாக நடித்தது, அதிரடி நாயகன் ஸ்டீவ் மெக்வீன். பேப்பியோனின் நண்பனாக, டஸ்டின் ஹாஃப்மேன்.
ஒரு வகையில், இப்படத்தை, ‘ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்’ படத்தின் முன்னோடி என்றும் கூறலாம். இப்படம், ஒரு நிரபராதி, சிறையில் இருந்து எப்படித் தப்பிக்கிறான் என்பதை, படு விறுவிறுப்பாகச் சொல்லும் படம்.
காலம் 1931. பேப்பியோன் (மெக்வீன்), செய்யாத ஒரு கொலைக்குக் குற்றம் சாட்டப்பட்டு, ஃப்ரெஞ்ச் அரசால், ‘டெவில்’ஸ் ஐலாண்ட்‘ என்ற, ஃப்ரெஞ்ச் கயானாவில் உள்ள ஒரு தீவில் உள்ள சிறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். ஃப்ரான்ஸில் இருந்து அந்தத் தீவுக்குச் செல்லும் கப்பலில், அவனுக்கு அறிமுகமாகிறான் லூயிஸ் டெகா (ஹாஃப்மேன்). ஒரு அரசுப் பத்திர ஃபோர்ஜரி வழக்கில் சிக்கி, லட்சக்கணக்கான ஃப்ராங்க்குகளை ‘அபேஸ்’ செய்தவன். அவனை அனைவருக்கும் அடையாளம் தெரிகிறது. அக்காலக் கைதிகளுக்கு ஒரு பழக்கம். தன்னிடமுள்ள பணத்தை, ஒரு சிறு குழல் வடிவ டப்பியில் போட்டு (யாரும் இப்பொழுது சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லையே . . ), அந்த டப்பியை, மலத்துவாரத்தில் (ஆசன வாய் என்று போட்டால், ஏதோ யோகாசன வகுப்பைப் போல் ஆகிவிடும். எனவே, ரா.கி உபயோகித்த அதே வார்த்தை இங்கே) செருகிக்கொண்டு விடுவதே அது. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, அத்தனை கைதிகளுக்குமே இது தெரியுமாதலால், தூங்கும் போது கூட எச்சரிக்கையுடன் இல்லாமல் போனால், விடியும்போது, கிழிந்து தொங்கும் குடலோடு எழ நேரிடும். டெகாவும் இதையேதான் செய்திருக்கிறான். பேப்பியோனும். டெகாவின் மேல் சக கைதிகள் ஒரு கண் வைத்திருப்பதைக் கவனிக்கும் பேப்பியோன், டெகா தனக்குப் பணம் தர முன்வந்தால், அவனுக்குத் தான் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்கிறான். டெகாவும் ஒத்துக் கொள்கிறான்.
கப்பல், தீவைச் சென்று அடைகிறது. இதற்குள் அந்தத் தீவைப் பற்றி, கப்பலில் இருக்கும் ஒரு கைதியின் மூலமாக பேப்பியோன் அறிந்து கொள்கிறான். சுற்றுவட்டாரத்தில் ஆயிரம் கிலோமீட்டருக்குத் தண்ணீரால் சூழப்பட்டுள்ள ஒரு தீவு அது. அங்கிருந்து தப்பிக்க, கடலில் குதிப்பது ஒன்றுதான் வழி. கடலில் உள்ள சுறாக்கள், கடலின் மிக வலுவான அலைகள் ஆகிய தடைகளைத் தாண்டி, யாரும் இதுவரை தப்பித்தது இல்லை என்றும் அறிந்து கொள்கிறான்.
அந்தத் தீவோ, நரகத்தை விடக் கொடிய ஒரு இடமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும், நடமாடும் பிணங்களைப் போன்ற மனிதர்கள் நிரம்பிய ஒரு சிறைக்கூடம். மலேரியாவும் தொழுநோயும் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு இடம். கைதிகளைக் கபளீகரம் செய்வதற்கு ஆங்காங்கே முதலைகள் வேறு. இரக்கம் சற்றும் இல்லாத சிறை அதிகாரிகள். லஞ்சம் தலை, கை, கால் எல்லாவற்றையும் விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. டெகாவினால் பாதிக்கப்பட்ட ஒரு அதிகாரி, டெகாவையும், பேப்பியோனையும், இருப்பதிலேயே கடினமான பணியான மரம் வெட்டும் பணிக்கு அனுப்பிவிடுகிறார்.
அங்கு பேப்பியோன், க்ளூஸியோ என்ற கைதியைச் சந்திக்கிறான். அவனுக்கும் தப்பிக்கும் எண்ணம் இருப்பதை அறிந்து கொள்கிறான். தப்பிப்பதற்கு முதல் தேவை, ஒரு படகு. அந்தத் தீவுக்கு வரும் ஒரு பட்டாம்பூச்சி விற்கும் போலீஸ்காரனுக்கு லஞ்சம் கொடுத்து, ஒரு படகுக்கு ஏற்பாடு செய்துவிட, பேப்பியோனால் முடிகிறது. கிட்டத்தட்ட அதே நேரத்தில், டெகாவை அடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியைத் தாக்கும் பேப்பியோன், தப்பிக்கிறான். படகு இருக்குமிடத்துக்குச் செல்லும் பேப்பியோன், அங்கு மறைந்திருக்கும் அதிகாரிகளால் சிறைப்படுத்தப்படுகிறான். தான் ஏமாற்றப்பட்டது அவனுக்கு அப்போதுதான் தெரிகிறது.
முதன்முறை தப்பிக்க முயன்றதால், இரண்டு வருட தனிமைச்சிறைத் தண்டனை. அங்கு அவனது உணவு, பூச்சிகள் மிதக்கும் ஒரு திரவம் மட்டுமே. டெகாவினால், அவனது பணத்தை உபயோகப்படுத்தி, தினமும் அரை மூடித் தேங்காய் பேப்பியோனுக்கு அனுப்ப முடிகிறது. ஆனால், அது சீக்கிரமே தெரியவந்துவிடுகிறது. பேப்பியோன், தேங்காய் அனுப்பிய ஆளின் பெயரைக் கக்க நிர்ப்பந்திக்கப்படுகிறான். ஆனால், டெகாவை அவன் காட்டிக்கொடுப்பதில்லை. எனவே, அவனது சிறை, நாலா பக்கங்களிலும் அடைக்கப்பட்டு, இருட்டில் விடப்படுகிறான். உணவும் சரிபாதியாகக் குறைக்கப்படுகிறது.
அங்கிருக்கும் பூரான், கரப்பான்பூச்சி ஆகியவற்றைப் பிடித்து உண்கிறான் பேப்பியோன். இருட்டில் இருப்பதால், மண்டை குழம்பி, மனநிலை பிறழ்ந்த நிலைக்கு ஆளாகிறான். ஒரு சமயத்தில், இந்தக் கொடுமை தாங்காமல், டெகாவின் பெயரைச் சொல்ல முற்பட்டுவிடுகிறான். ஆனாலும் கடைசி நொடியில், சமாளித்து விடுகிறான்.
இரண்டு வருட தனிமைச்சிறை முடிந்து வெளிவரும் பேப்பியோன், அவனது மருத்துவர் மூலமாக, அவருக்குப் பெரும் பணம் அளித்து, ஒரு படகை ஏற்பாடு செய்கிறான். அவனும் டெகாவும் இன்னொருவரும் கஷ்டப்பட்டுத் தப்பித்து, அந்தப் படகை அடைகின்றனர். படகில் கால் வைத்ததும், அதன் தளம் உடைகிறது. மறுபடியும் பேப்பியோன் ஏமாற்றப்பட்டு விடுகிறான். ஆனால், இம்முறை, அங்கிருக்கும் ஒரு ஆளின் உதவியுடன், ஒரு கட்டுமரம் தயாரித்து, பக்கத்தில் இருக்கும் தொழுநோயாளிகள் அடங்கிய ஒரு தீவில், அவர்களது உதவியுடன் ஒரு படகை ஏற்பாடு செய்கிறான். படகில் மூவரும் பல நாட்கள் பயணித்து, ஹோண்டுராஸ் அடைகின்றனர்.
சிறையில் இருந்து தப்பித்துவிட்ட களிப்பில் கரை சேரும் இந்த மூவரும், படகில் இருந்து இறங்கும்போது . . . . .
என்ன நடந்தது என்று டி வி டியில் காணுங்கள். இதுவரைக்கும், படத்தின் 60 % தான். இன்னமும் நிறைய இருக்கிறது.
இப்படத்தைப் பார்க்கப் பார்க்க, குமுதத்தில் நான் படித்த கதை நினைவு வந்துகொண்டே இருந்தது. படம், மிக இயற்கையாகப் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்தத் தீவில் படமாக்கப்பட்ட காட்சிகள். மெக்வீன் மற்றும் ஹாஃப்மேன் நடிப்பு, டாப் க்ளாஸ்.
ஒரு கொடுமையான சிறையைக் கண்முன் நிறுத்துகிறது இப்படம். அதே சமயம், தண்டனைகள் பற்றி அறிந்திருப்பினும், பேப்பியோன் தப்பிப்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதும் நன்றாகக் காட்டப்பட்டுள்ளது.
இந்த நாவலைப் பற்றி ஒரு விஷயம். இது ஒரு உண்மைக் கதை என்ற பேயரில் வெளிவந்தாலும், பல வருடங்கள் கழித்துத் தான், அது ஒரு கற்பனைச் சம்பவங்களும் கலந்த ஒரு படைப்பு என்ற விஷயம் வெளிவந்தது. உண்மை பாதி, கற்பனை மீதி என்ற ரீதியிலேயே தான் இந்தப் படத்தையும் நாவலையும் நாம் அவதானிக்க வேண்டும்.
படம், ஒரு டைனமைட்டைப் பற்ற வைத்த வேகத்தில் செல்கிறது. கடைசியில் சற்று நிதானமாகச் சென்றாலும், படத்தின் முக்கால் பங்கு, செல்வதே தெரியவில்லை. மிக இயற்கையான நடிப்பும், படமாக்கிய முறையும், நம்மைப் படத்தில் ஒன்ற வைக்கின்றன.
பேப்பியோனுக்கு என்ன ஆயிற்று? அவனால் தப்பிக்க முடிந்ததா? டெகா என்னவானான்? படத்தைப் பாருங்கள்.
பேப்பியோன் படத்தின் ட்ரைலர் இங்கே .
செம தூக்கம் . . ஹாஆஆஆவ் . . காலைல வர்றேன் . .:-)
நண்பரே,
இனிய தேவதைகள் உங்களை அணைக்கட்டும்- தூக்கத்தில்தான் :))
பப்பியோன் தமிழ் மூலம், பிரெஞ்சு மூலம் இரண்டும் படித்திருக்கிறேன். ராகி தன் தமிழாக்கத்தில் வெட்டி எறிந்தது அதிகம். அவரின் அச்செயல் அக்கதையின் உயிரையே வெட்டி எறிந்து விட்டது. தமிழ் பண்பாட்டுக் களத்தில் முழுமையாக கதையை வழங்க முடியாத சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். நண்பர்கள் பப்பிய்யோன் நாவலின் முழுமையான மொழிபெயர்ப்பை படிப்பது நல்லது.
திரைப்படத்தையும் பார்த்திருக்கிறேன்.சிறப்பான ஒரு படம். வயது முதிர்ந்த நிலையில் கடலின் அலைகளை நண்பர்கள் இருவரும் பார்த்திருக்கும் காட்சி நினைவில் வருகிறது[ இதில் நான் தவறியிருக்கலாம்]. நாவலின் முடிவும் , திரைப்படத்தின் முடிவும் ஒன்றா என்று என்னால் நினைவு படுத்த முடியவில்லை இருப்பினும் நாவலில் பாப்பியோன் ஆதி குடிகளுடன் தன் நாட்களை கழிக்கும் தருணங்கள், ஆமை வேட்டை, மாந்தீரிகம், ஜல்சா ஜல்சா என்பன நினைவில் கலங்கலாக தெரிகின்றன.
பாப்பியோனின் கதை குறித்த குற்றச் சாட்டுக்களும் உண்டு. குறிப்பாக அவருடன் சிறைத்தண்டனையைக் கழித்தவர்களிடமிருந்து. பாப்பியோன் மூலம் ஹென்ரி சாரியர் காசு பார்த்துக் கொண்டார் என்பது மட்டும் உண்மை.
சிறப்பான பதிவு.
எண்பதுகளின் பிற்பகுதியில்,////
உங்களுக்கு வயசாயிடுச்சோ? எப்படி கேட்ச் பண்ணோம் பாத்தீங்களா?
என்ன ? டைனமட் வேகத்துலயா? உடனே பாக்க ஏற்பாடு செஞ்சுருவோம்..
கலக்கல் பதிவு. நல்ல படங்கள்ல என்ன பழசு,புதுசு எல்லாத்தையும் பதிவு பண்ணுங்க பாஸ்.அஞ்ஞாதவாசம் போயிட்டு வந்தது நல்லதுதான். நல்லா வந்திருக்கு பதிவு.
@ காதலரே – நான் தமிழ் மூலம் மட்டுமே படித்திருக்கிறேன் . .ரா.கி செய்தது சரியே அல்ல. ஒரு கதையை மொழிபெயர்க்கும்போது, நாம் வெறும் மொழிபெயர்ப்பாளன் மட்டுமே. கலாச்சாரக் காவலன் அல்ல. ஒரு பண்பாட்டின், ஒரு மொழியின், ஒரு அனுபவத்தின் சிதறல்களை நாம் நம் இஷ்டப்படி வெட்டுவது கயமை. கட்டாயம் இதன் ஆங்கில மூலம் படிப்பேன். பிரான்சுக்கு வந்தபின், பிரெஞ்ச்சிலும்.
படத்தைப் பற்றி நீங்கள் சொன்ன காட்சி சரியே. தமிழ் நாவலில், நீங்கள் சொன்னவற்றைப் படித்த நினைவு வருகிறது. நீங்கள் சொன்ன குற்றச்சாட்டும் உண்மை. ஹென்றி காசு பார்த்தது அவரது கயமை. . சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு எனது நன்றி.
@ பப்பு – உண்மைய சொல்லனும்னா, இத குமுதத்துல நானு படிக்கும்போது, எனக்கு பத்து வயசு. . அப்பவே நானு பொன்னியின் செல்வன் முழுசா படிச்சிட்டேன் . .:-) அப்ப குழந்தப்பருவத்துல நானு ஒரு பிராடிஜி . .ஆனா இப்ப ஒரு தறுதல . . 🙂
@ அண்ணாமலையான் – என்னங்க ஏதோ கடத்தலுக்கு ஏற்பாடு செய்யுற மேரி சொல்றீங்க . . 🙂 இது உங்களுக்குப் புடிக்கும் . .
@ மயில் – இனி நோ அஞ்ஞாதவாசம் . . 🙂 இதோ அடுத்த பதிவு இன்னிக்கி நைட்டு . . ரெடி . . !! 🙂
பதிவு ரொம்ப நல்லாருக்கு. நான் கதையை ஆங்கிலத்தில் படிக்கவில்லை. ராகி யின் நாவலை முழுபுத்தகமாக தமிழில் வெளி வந்தபின் படித்தேன் .ஒரே மூச்சில் படிக்க வைத்த புத்தகம்.( நபர் கனவுகளின் காதலன் சொன்ன தகவல் புதிது ,யோசிக்க வேண்டியது. )
இந்த கதையை படம்மாகவும் எடுத்திருக்கிறார்கள் என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அறிமுகத்திற்கு நன்றி.
பொதுவாக நாவலை பின்பற்றி எடுக்கப்படும் படங்களில் நாவலில் உள்ள உயிரோட்டம் இருப்பதில்லை.
உணர்வுபூர்வமான ஒன்றுதல் ஏற்படுவதில்லை,ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கும்.
(தமிழில் பிரியாவை பார்த்து சுஜாதா நொந்தே போனார். தி.ஜா.வின் மோகமுள் படம் நாவலின் ஜீவனை கால்வசியே தந்தது.)
ஆனால்
//படம், ஒரு டைனமைட்டைப் பற்ற வைத்த வேகத்தில் செல்கிறது.//
என்று தல கேரண்டி கொடுத்திங்க கண்டிப்பா பாத்துடறேன்.
அந்தக் கதையை நான் படித்ததில்லை. ஆனால் படத்தை பற்றிய உங்கள் விமர்சனம் படிக்கும் போது பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணியாச்சு. டோரென்ட் லிங்க் இருக்கா?
// சிறையில் இருந்து தப்பித்துவிட்ட களிப்பில் கரை சேரும் இந்த மூவரும், படகில் இருந்து இறங்கும்போது . . . . .//
நானும் இறங்கினேன்…அப்புறம் என்ன…ஆவல தூண்டறீங்களே பாஸு. 🙂
sirapana pathivu. innum niraya ethirparkiren
I have seen this movie. Very good to watch. Nice review.
சூப்பர் கண்ணாயிரம்… இந்தவாரம் இந்தப்படம்தான் தல நமக்கு.
ரா.கி.யோட பட்டாம்பூச்சி பாதிதான் படிச்சேன். நண்பனோட ஓசி புத்தகத்தை நண்பன் வாங்கிட்டுபோயிட்டான். இம்மாந்தண்டி புக்கு அது. செம விறுவிறுப்பு பல சம்பவங்கள் நினைச்சே பார்க்கமுடியாதபடி பயங்கரமா இருக்கும்.
இது திரைப்படமா வந்தருக்குன்னு இன்னைக்குத்தான் தெரியும்… நன்றித்தல
@ கைலாஷ் – நீங்கள் சொல்வது சரியே . . நாவல்களில் இருக்கும் உயிரோட்டம் படங்களில் இருப்பதில்லை. அதுவும் குறிப்பாகத் தமிழில் 🙂 . . சுஜாதா பாவம். . இருந்தாலும் அவர் தமிழ்த் திரையுலகத்தைப் புரிந்து கொண்டார். எனவே, பாய்ஸ் போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார். . ஆனால் இப்படம் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. நாவலில் வரும் சில சம்பவங்கள் இதில் இருக்காது. இருந்தாலும்,ரசிக்கலாம்.
@ ரகுநாதன் – டாரண்ட் லிங்க் இல்லையே . . 🙁 . .நானு டி வி டி ல இல்ல பார்த்தேன் . . இருந்தாலும், லிங்க் கிடைக்குதான்னு பார்த்து,அத இங்கயும், மெயில்லயும் அனுப்பறேன் . .:-)
@ Third Eye – ஏதோ என்னால முடிஞ்சவரைக்கும் இன்னும் எழுதறேன் பாஸு . . நன்றி . .
@ Arun – கருத்துக்கு நன்றி . .அடிக்கடி வாங்க . .
@ நாஞ்சில் பிரதாப் – ஓசி புக்கெல்லாம் நண்பனுக்குத் திருப்பிக் குடுத்தா, அப்பறம் நாம எங்கபோயி படிக்கிறது பாஸு . . ஒளிச்சி வெச்சிருக்கலாம் இல்ல . . 🙂 படத்த பார்த்துட்டு சொல்லுங்க . .
உங்க அளவுக்கு எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு V FOR VENDETTA பத்தி ஒரு போஸ்ட் ஒன்னு எழுதி இருக்கேன்…..
வந்து அவசியம் பாத்துட்டு போங்க தல….
An awesome post… will watch this tonight 🙂
Waiting waiting waiting… for Am***** review. I know it will be one of ur best ever 🙂
நண்பர் ராஜேஷ் அருமையான விமர்சனம்
இதை நேற்றே டவுன்லோடு போட்டுவிட்டேன்,நேற்றே ஓட்டு போட்டுவிட்டேன்.
ஒரு நாதாரி அசிங்கமான படத்துடன் அனைவரையும் ஃபால்லோ செய்கிறது
உங்களையும்.உஷார்,ப்ளாக் செய்யவும்.
@ Shree – சூப்பர்! பாருங்க. . பார்த்துட்டு சொல்லுங்க . . அப்பறம், அந்த ரிவ்யூ கிட்டத்தட்ட 70 % ஒவர். இன்னிக்கி நைட்டு வெளியிடப் படும். . :–)
@ கார்த்திகேயன் – இதோ ப்ளாக்கியாச்சு . . இப்பொதான் பார்த்தேன் . . 🙂 நன்றி நண்பா . .
நான் இந்த நாவலைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.
புத்தகம் தரும் எந்த உணர்வையும் இந்தப்படம் எனக்குத்தரவில்லை.
படத்தைப்பார்த்தபோது சம்பவங்கள் ஞாபகம் வந்ததுகூட காரணமாக இருக்கலாம்.
பார்த்து முடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது……………
நாவலைப்படிக்காதவர்களுக்கு படம் பிடிக்கலாம்…. 🙂
நிச்சயமாக நீங்கள் ஒரு நல்ல வேலை செய்கிறீர்கள் Mr .கருந்தேள்…….
—- சரவணன் சாரதி
@ சரவணன் சாரதி – அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் . . ஏனெனில், இதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது . .நாவல் அருமை. . படம் கொஞ்சம் சுமார் தான் . .:-)
மிக்க நன்றி சாரதி . .இன்னமும் சில நல்ல படங்கள் குறித்து கட்டாயம் எழுதுகிறேன் . .அடிக்கடி வாருங்கள் . .