Paradesi (2013) – Tamil

by Karundhel Rajesh March 19, 2013   Tamil cinema

இப்போதெல்லாம் விமர்சனம் எழுதும்போது, குறிப்பிட்ட ஒரு டிஸ்க்ளெய்மர் போடாமல் எழுத முடியாது என்று தோன்றுகிறது. அது இதுதான் – ‘சம்மந்தப்பட்ட படத்தின் இயக்குநருடன் எனக்கு வாய்க்கால் தகராறு எதுவும் இல்லை. அன்னாருக்கும் எனக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. நான் கையில் வைத்திருந்த கம்மர்கட்டை அவர் பிடுங்கிக்கொண்டு ஓடியதில்லை. அல்லது அவரது கையில் இருந்த குச்சி ஐஸை நான் கவ்விக்கொண்டு ஓடியதில்லை. ஒரு படத்தைப் பற்றிப் பாஸிடிவான விமர்சனம் மட்டும்தான் செய்யவேண்டும் என்பது இல்லை. நமக்குப் பிடிக்கவில்லை என்றால் என்னென்ன விஷயங்கள் பிடிக்கவில்லை என்பதையும் எழுதலாம்’.

ஏனெனில், தமிழ்நாட்டின் விமர்சிக்கக்கூடாதவர்கள் பட்டியலில் சமீபத்தில் பாலாவும் சேர்ந்துவிட்டார் என்று தோன்றுகிறது. காரணம் ஏன் என்றும், பரதேசி எப்படி இருந்தது என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.

முதலில், ஆரண்ய காண்டம் கட்டுரையின் முதல் பத்தியில், ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு பள்ளி இருக்கிறது என்று எழுதியிருந்தேன் அல்லவா? அது நினைவிருக்கிறதா? க்ளிக் செய்து படித்துப் பாருங்கள். அதுதான் உண்மை. குறிப்பாக, இந்திய மொழிகளில் படம் எடுக்கும் எந்த இயக்குநரும் இந்த டெம்ப்ளேட் விஷயத்திலிருந்து தப்பியதில்லை. எந்த இயக்குநராக இருந்தாலும் அவர்கள் எடுக்கும் முக்காலே மூணு வீசம் படங்களின் டெம்ப்ளேட் ஒரே போன்றுதான் இருக்கிறது. ஒவ்வொரு படங்களையும் வித்தியாசமாக, versatileலாக எடுக்கும் இயக்குநர்கள் மிக அரிது. விஷால் பரத்வாஜ், அனுராக் காஷ்யப், சுதீர் மிஷ்ரா போன்ற மிகச்சில இயக்குநர்களே அப்படி இருக்கிறார்கள். தமிழில் இப்போது பிரபலமாக இருக்கும் எந்த இயக்குநரும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டியதில்லை.

‘ஏன்? ஒரே டெம்ப்ளேட்டில் படம் எடுத்தால் என்ன? சுவாரஸ்யமாக இருந்தால் போதாதா? அது ஏன் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்கவேண்டும்?’ என்று கேட்கலாம். காரணம், ஓரிரு படங்கள் இப்படி வந்ததும், பிற படங்கள் அலுத்துவிடுகின்றன. நான் ’டெம்ப்ளேட்’ என்று சொன்னது கதையை மட்டும் அல்ல. கதை ஒரே போன்று இருந்தாலும், கதாபாத்திர உருவாக்கம், இசை போன்ற பிற விஷயங்களும் இந்த டெம்ப்ளேட்டைத் தீர்மானிக்கும் விஷயங்களாக இருக்கின்றன. அதுதான் அலுப்புக்குக் காரணமாக இருக்கிறது.

சரி. இப்போது நான் சொல்லும் ஒரு கதாபாத்திரத்தை மனதில் நினைத்துப் பாருங்கள். கரடுமுரடான முடி. கறுத்த உருவம். அடிமைப்பெண் எம்.ஜி.ஆர் போல சாய்ந்து சாய்ந்து நடக்கும் நடை. தலையை எப்போதும் சாய்த்தே வைத்திருக்கும் உருவம். சாதாரணமாக உச்சரிக்கும் வசனத்தைக் கூட அடிவயிற்றில் இருந்து எக்கி, முக்கி, உப்புக்காகிதத்தை வைத்துத் தேய்த்தது போன்ற ஒரு குரலில் உறுமும் பாணி. எப்போது பார்த்தாலும் அலறிக்கொண்டிருப்பது – சுருக்கமாக, கை காலை நேராக, இயல்பாகவே பயன்படுத்தாமல், நமது மூதாதையர்களைப் போலவே நடமாடிக்கொண்டிருக்கும் உருவம்.

இதுதான் பிதாமகன் படத்தில் விக்ரமின் வேடம் – சித்தன். அதேதான் பரதேசியில் அதர்வாவின் கதாபாத்திரமும் கூட. ராசா. கிட்டத்தட்ட இதுவேதான் சேதுவும் என்பதை அறிக. இந்தப் பாத்திரம் தான் ஹீரோ. இந்த ஹீரோ, இதுவரை வந்த பாலாவின் படங்களில் எப்படியெல்லாம் டெம்ப்ளேட்டாக்கப்பட்டிருக்கிறார்?

1. ஹீரோ மேற்சொன்னபடி படு செயற்கையாகவேதான் நடமாடுவார். அவரது உடை, அரதப்பழைய உடையாக இருத்தல் முக்கியம். சாக்குத்துணியில் தைத்திருந்தால் பயங்கர ஜாலி. செருப்பு, சீப்பு, சோப்பு முதலிய அயிட்டங்களை ஹீரோ பார்த்தால் அதை வாயில் போட்டு விழுங்கும் அளவு பசியோடு இருத்தல் அதனினும் முக்கியம்.

2. அவரது சிகையலங்காரம்- அப்போதுதான் கரடியுடன் மல்யுத்தம் புரிந்ததுபோல் காட்டுத்தனமாக இருத்தல் வேண்டும். முடி இருக்கவேண்டும் – ஆனால் அது முடியாக இருக்கக்கூடாது. தொட்டாலேயே கையைக் கீறீ ரத்தம் பீய்ச்சுவதுபோல் கம்பிப் பாகு பதத்தில் இருக்கவேண்டும்.

3. இந்த ஹீரோவுக்கு அவரது வாழ்வில் ‘சிரித்தல்’ என்றாலே அது ஏதோ ஏலியன் வஸ்து என்ற புரிதல் இருக்கவேண்டும்.

அடுத்தது – ஹீரோயின். ஹீரோயின் டெம்ப்ளேட்டை பாலா எப்படி பயன்படுத்துவார்?

இந்த விஷயத்தில் அவரது டெம்ப்ளேட் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று – ஹீரோயின் பிராமணப் பெண். அல்லது வெள்ளையாக அதைப்போன்ற உருவாக்கம். அல்லது ஒரேயடியாக அதற்கு நேர் எதிராக கன்னங்கரேல் என்ற உருவம். இதில் ஒரு சூத்திரம் என்னவென்றால், ஹீரோவின் நிறம் கருப்பாகிக்கொண்டே போனால், ஹீரோயினின் நிறமும் கருமையாகிக்கொண்டே வரும். ஹீரோ சேதுவாக்கப்படுவதற்கு முன்னிருக்கும் விக்ரமாக இருந்தால், ஹீரோயினும் அதே நிறத்தில் அமைந்த அபிதா. ஹீரோ பிதாமகன் சித்தனாக இருந்தால் ஹீரோ அதேபோன்ற சங்கீதா. ஹீரோ நந்தா சூர்யாவாக இருந்தால் ஹீரோயின் லைலா. இதுவேதான் பிதாமகனிலும் சூர்யா லைலாவுக்குப் பொருந்தும். ஹீரோ நான் கடவுள் அகோரியாக இருந்தால் ஹீரோயின் அதே நிறத்தில் அமைந்த பூஜா. ஹீரோ ராசா அதர்வா என்றால் ஹீரோயின் அதேபோன்ற அங்கம்மா என்ற வேதிகா. இதில் ஒரே விதிவிலக்கு அவன் இவன் ஆர்யாவும் தேன்மொழியாக நடித்த மதுஷாலினியும். இதேபோல் பரதேசியின் இரண்டு ஹீரோயின்களில் வேதிகா பிதாமகன் லைலாவைப் போலவும், தன்ஷிகா பிதாமகன் சங்கீதாவைப் போலவும் அமைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்தது வில்லன். கிட்டத்தட்ட பாலாவின் அனைத்துப் படங்களிலும், வில்லன் அல்லது கொடிய பாத்திரங்கள் அறிமுகமாகும்போது, ‘இதோ வில்லன் வந்துவிட்டான்’ என்று ஆடியன்ஸுக்கு கட்டியம் கூறும் கொடூர இசை வரும். பரதேசியிலும் வருகிறது. அதேபோல், பாலா படத்தில் வரும் வில்லன்கள் அத்தனைபேரும் பயங்கர கொடியவர்கள்தான். அவர்கள் படம் முடிவதற்குள் ஏதேனும் கர்ணகடூரமான செயலைச் செய்தே ஆகவேண்டும். சேதுவில் மண்டையைப் பாறையில் மோதுவது, நான் கடவுளில் எலும்பை உடைப்பது, அவன் இவனில் அம்மணமாக ஓடவிட்டு கொல்வது – இந்த வரிசையில் தற்போதைய பரதேசியில் கால் நரம்பை அறுப்பது. சில சமயங்களில் ஹீரோவே இந்த பாகிஸ்தான் வேலையை செய்வதும் உண்டு. உதாரணம்: நந்தாவில் புடுக்கை அறுக்கும் சூர்யா. இதிலும் ஒரு சமன்பாடு இருக்கிறது. வில்லன் செய்யும் கொடூர வேலைக்கு இருமடங்காக ஹீரோவின் வேலை இருக்கும். கடைசியில் ’வில்லனே தேவலையே’ என்ற ஒரு குழப்பமான மனநிலையில் கொண்டுவந்து அது விட்டுவிடும். கூடவே யார் வில்லன் – யார் ஹீரோ என்பதுமே சமயத்தில் மறந்துபோய் வில்லனைப் பார்த்து விசில் அடிக்கும் அனர்த்தம் நேரவும் வாய்ப்புகள் அதிகம் (இதற்காகத்தான் சந்தேகத்துக்கு இடமின்றி வில்லனுக்கு பின்னணி இசையோ என்னமோ).

இதற்கு மத்தியில்தான் பாலாவின் கதை பயணிக்கும். கதையை அமைப்பது, இப்படிக் கதாபாத்திரங்களை உருவாக்கியபின்னர் சுலபம்தானே? இந்தக் கதாபாத்திரங்களை இணைத்தால் போதுமே?

இப்படியெல்லாம் நான் எழுதியிருப்பதால் எனக்குப் பாலா படங்கள் அறவே பிடிக்காது என்பது அர்த்தம் அல்ல. சேது எனக்கு முதலில் பார்க்கையில் பிடித்தது. அப்படித்தான் நந்தாவும். பிதாமகனும். ஆனால் நான் கடவுள் படத்திலிருந்து பாலாவின் படங்கள் அலுக்க ஆரம்பித்துவிட்டன. இதன்பிறகு அவரது முந்தைய படங்களை மறுபடியும் பார்க்க ஆரம்பித்தபோதுதான் இந்த டெம்ப்ளேட் பிடிபட்டது. அவையும் மொத்தமாக அலுத்துவிட்டன.

பரதேசியின் கதையைப் பற்றி இதுவரை எழுதப்பட்டுள்ள பல கட்டுரைகளில் படித்திருக்கலாம். இந்தப் படத்தின் பிரச்னைகள் என்ன? அதேபோல் இந்தப் படத்தில் எனக்குப் பிடித்தவை என்ன?

இந்தப் படத்தில் அதர்வாவின் நடிப்பு, பல இடங்களில் செயற்கை தட்டியது. அதர்வா கோயிலில் கண்களை மூடிக்கொண்டு நிற்பதைக் கவனித்தீர்களா? வாயைப் பிளந்துகொண்டு, தலையை சாய்த்துக்கொண்டு பிதாமகன் விக்ரமைப் பார்ப்பதைப்போலவே இருந்தது. பல இடங்களில் அவரது ரியாக்‌ஷன்கள் அத்தனையுமே அப்படித்தான் இருந்தன. இயல்பாக இல்லாமல் அவரது செய்கைகள் மிகவும் உறுத்தின. இதைப்போலவேதான் வேதிகாவின் பாத்திரமும். கிராமத்துப் பெண்ணாக ஒரு சேட்டுப்பெண் நடிப்பதன் பிரச்னைகள் தெளிவாகத் தெரிந்தன. வேதிகா பஞ்சாயத்தில் சைகையில் அதர்வாவுடன் பேசும் காட்சிகள் ஒரு உதாரணம். தன்ஷிகாவின் நடிப்பு மட்டுமே எனக்குப் பிடித்தது. அதர்வாவின் பாட்டி – அட்டகாசம். கூடவே விக்ரமாதித்யனும்.

படத்தின் முதல்பாதியும் சரி – இரண்டாம் பாதியும் சரி – மிகவும் மெதுவாக, எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் சென்றன. முதல்பாதி கூட ஓகே. விக்ரமாதித்யன் & பாட்டி இருக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாதி, உண்மையிலேயே துலாபாரம் படத்தின் இரண்டாம் பாகம் போல இருந்தது. என்னைப்பொறுத்தவரை, இதுபோன்ற ஒரு இருண்ட பின்னணியுடைய படத்தைக் கூட, எல்லாக் காட்சிகளிலும் அழுகையை நிரப்பாமல் எடுக்க முடியும். அடைபட்டிருக்கும் அடிமை ஜனங்களின் வலியையும் துயரத்தையும் காண்பிக்க ஒரு சில காட்சிகள் போதுமானது. எல்லாக் காட்சிகளையுமே சோகமயமாக ஆக்கினால்கூட, திரைக்கதை கொஞ்சமாவது வேகமாக இருந்தால் அவற்றை ரசிக்க இயலும். ஆனால், இரண்டாம் பாதியில் படத்தை நகர்த்துவதற்கு எந்தக் காட்சியும் துணைபோகவில்லை. பொதுவாகவே எந்த நாட்டுப் படமாக இருந்தாலும் இப்படிப்பட்ட gloomy பின்னணியுடைய படங்களை கவனித்தால் அவற்றில் ஒரு மெல்லிய நகைச்சுவை இருப்பதைக் காணமுடியும். அல்லது அந்தக் கதாபாத்திரங்களின் அன்றாட வாழ்வில் நிகழும் ஒருசில சந்தோஷத் தருணங்களைக் காண்பிப்பார்கள். அப்படி எடுத்தால்தான் அலுக்காமல் படம் செல்லும். எப்போது பார்த்தாலும் அழுதுகொண்டே இருந்தால் என்னதான் செய்வது? அந்த டீ எஸ்டேட்டில் நிகழும் குரூரத்தை மட்டுமே இரண்டாம் பாதி முழுவதிலும் பார்த்துக்கொண்டே இருப்பதால், மிக சீக்கிரம் அந்த நிகழ்ச்சிகளின்மீது நமது ஈடுபாடு குறைந்துபோய், எப்போது படம் முடியும் என்று மனம் எண்ணத் துவங்குவதைத் தடுக்கமுடியவில்லை. என்னதான் தேயிலைத் தொழிலாளர்களின் மரண வேதனையை பாலா எடுத்திருந்தாலும், அந்த empathy நமக்கு வராமல் போவதே படத்தின் பெரிய குறைபாடு.

இருந்தாலும் இரண்டாம் பாதியின் ஒரே பிடித்த காட்சியாக, ஊருக்குச் செல்வதற்காக நம்பிக்கையோடு வரும் தொழிலாளர்களின் கண்ணுக்கு முன்னர் பணத்தைக் காட்டி, ஒரு பைசா கூட கொடுக்காமல் அவர்களைத் திருப்பியனுப்பும் காட்சியைச் சொல்லலாம்.

இந்தப் படத்தின் இன்னொரு குறை என்னவென்றால், என்ன சம்பவம் நடந்தாலும் அதற்கு ஒரு கொள்கை விளக்கமாக ஒரு பாடல் வருகிறது. அதில் ஓரிரண்டு பாடல்கள் மிக மிக நீ…….ளம் வேறு. ‘கல்லாணம்’ என்றதும் ஒரு பாடல். காதல் வந்ததும் ஒரு பாடல். ‘கிளம்புங்கய்யா எஸ்டேட்டுக்கு’ என்றதும் இன்னொரு பாடல். அங்கு சென்றதும் வருகிறது ஒரு மிகப்பெரிய பாடல். அதன்பின்னர் பாதிரியார் வந்ததும் அங்கே ஒரு பாடல்.

நடன இயக்குநர் சிவசங்கர் வரும் காட்சிகள், படத்தின் அதீத மொக்கையான காட்சிகள் என்று சொல்வேன்.

பாலாவுக்கு வாழ்வின் வண்ணங்களின் மீது நம்பிக்கையே இல்லையோ என்ற எண்ணம் இந்தப் படம் முடிந்ததும் தோன்றியது. அத்தனை நெகட்டிவாக, அத்தனை dullலாக இருக்கிறது படம். ஒரு படம் நமக்குப் பிடிக்கவேண்டும் என்றால் நம்மால் அந்தப் படத்தில் லயிக்க இயலவேண்டும். அதாவது, படத்தோடு ஒன்றிவிடுவது. ஆனால் அந்த ஒன்றல் சமாச்சாரமே இந்தப் படத்தில் இல்லை. மாறாக படத்திலிருந்து மிகவும் அந்நியப்பட்டுத்தான் இந்தப் படத்தைப் பார்க்க முடிந்தது. உதாரணமாக, ஊர் மக்கள் எல்லாம் மிருகங்கள் போல் வரிசையாக நின்று தண்ணீரை வாயால் உறிஞ்சுவது போல எல்லாம் காட்சிகள் தமிழ்ப்படத்தில் வருவதே வழக்கொழிந்துவிட்டது என்று நம்பிக்கொண்டிருந்தேன். படத்தின் மிக மிக அந்நியமான காட்சிகளில் இது ஒன்று. கூடவே எப்போது பார்த்தாலும் ஓலக்குரல்கள். அழுகை. அதிலும் க்ளைமாக்ஸ் ஊளை ஒரு கொடுமை.

படத்தின் காமெரா, இசை, பாடல்கள் போன்ற பிற விஷயங்களைப் பற்றி நான் பேசவே போவதில்லை. காரணம், கதை நன்றாக இருந்தால் பிற விஷயங்களும் தானாகவே பொருந்திவிடும். ஆனால் இந்தப் படமே மிகவும் அலுப்பாக இருந்த காரணத்தால் வேறு எதிலும் மனம் லயிக்கவில்லை.

ஆனால், பரதேசி தமிழகத்தில் இப்போது critical acclaimedடாக இருப்பதன் காரணமும் புரியாமல் இல்லை. தமிழில் கடைசியாக வெளிவந்த சிறந்த படங்கள் ஆரண்ய காண்டமும் ஆடுகளமும் மட்டுமே. இவை தரமான படங்கள். இந்தப் படங்களுடன் ஒப்பிடும் அளவு வேறு படங்களே இதுவரை இல்லை. அருமையான அனுபவத்தை அளிக்கக்கூடிய படங்கள் என்றால் தமிழ்நாட்டில் பஞ்சம்தான். அந்த exposure மிகக் குறைவாக இருப்பதன் காரணம்தான் பரதேசி தற்போது ஒரு சிறந்த படமாக முன்நிறுத்தப்படும் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் ஹிந்தியில் இந்தப் பிரச்னை இல்லை. அங்கு தரமான படங்கள், விஷால் பரத்வாஜ் & அனுராக் காஷ்யப்பின் படங்களாக வருடம் தோறும் வந்துகொண்டிருக்கின்றன (ஆனால் அனுராக்கும் அவ்வப்போது டப்பா படங்களை எடுப்பதுண்டு. That girl in yellow boots ஒரு உதாரணம்). அத்தகைய அனுராக் காஷ்யப் இந்தப் படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறார். இதற்கும் காரணம் என்னவென்று கவனித்தால், அனுராக் ஒரு நல்ல கலைஞன் – ஆனால் ரசிகன் அல்ல என்பது தெரிகிறது. இதற்கு வேறெங்கும் போக வேண்டியதில்லை. அனுராக்கின் நகைச்சுவையான பேட்டிகளை (அதாவது படிப்பவர்களுக்கு நகைச்சுவை) படித்தால் போதும். அவரது ரசனை, தேர்ந்த கலைஞனின் ரசனையாக இல்லாமல் இருப்பது புரியும். ஆனால் அப்படிப்பட்ட நபர் கேமராவுக்குப் பின்னால் நிற்கும்போது மட்டும் முற்றிலும் மாறிவிடுவது ஆச்சரியம்தான்.

இதில் படம் வெளிவருவதற்கு முன்னர் பாலா அதில் நடித்தவர்களை (போலி) பிரம்பால் அடித்தும் உதைத்தும் ‘நடித்துக்’ காட்டிய ஒரு டீஸர் ட்ரெய்லர் வேறு வெளிவந்து படத்துக்கு இலவச விளம்பரம் தேடிக்கொடுத்துவிட்டது.

சிறந்த படம் என்று முன்நிறுத்தப்படும் ஒரு படம் எப்படி இருக்கவேண்டும்? படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை படம் பார்க்கும் ஆடியன்ஸை மெய்மறக்கச் செய்வதே சிறந்த படம். ‘ஏன்? பரதேசியும்தான் என்னை மெய்மறக்க வைத்தது’ என்று நண்பர்கள் சொல்வார்களேயாகில், ஒவ்வொருவருக்கும் இருக்கும் ரசனையின் காரணத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு உணர்வு – படம் பிடிக்கிறதா அல்லது அலுக்கிறதா என்ற உணர்வு – தோன்றலாம். தவறில்லை. ஆனால், என்னைப்பொறுத்தவரை, இந்தப் படம் இப்போது முன்வைக்கப்படும் இடத்துக்குத் தகுதி உடையது அல்ல. அந்த இடத்துக்கு ஒரு படத்தை பாலா எடுக்கவேண்டும் என்றால் இன்னும் வெகுதூரம் பயணிக்கவேண்டும்.

பி.கு

1. Red Tea (எரியும் பனிக்காடு) இன்னும் நான் படிக்கவில்லை. காரணம், ஒரு நாவல் திரைப்படமாக எடுக்கப்படும்போது அந்தப் படத்தை முதலில் பார்த்துவிடுவதே என் வழக்கம். நாவலை இனிமேல்தான் படிக்கவேண்டும்.

2. பொதுவாக தமிழகத்தில் நிலவும் சாபக்கேடு என்னவெனில், நமக்கு அடுத்தவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை. அதாவது, அடுத்தவர்கள் அவர்களது கருத்தை வெளிப்படையாக சொல்லும் சூழல் இல்லை. உதாரணம் இந்தப் படம். இதன் விமர்சனமாக, படம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறேன். எத்தனை நண்பர்கள் இந்த விமர்சனத்தை என்னைத் திட்டாமல் படிக்கிறார்கள் என்றும் பார்க்கத்தான் போகிறேன். எனக்கும் பாலாவுக்கும் நான் முதல் பத்தியில் சொன்னதுபோல் எந்தத் தகராறும் இல்லை. இது படத்தைப் பற்றிய எனது கருத்து. அது புரிந்துகொள்ளாமல் மொக்கையாக ‘முடிஞ்சா ஒரு படம் எடுத்துப் பாரு’ என்றெல்லாம் காமெடி கமெண்ட்கள் வராது என்று எதிர்பார்க்கிறேன்.

3. இதோ பரதேசி பற்றி ‘சினிமா என்கிற கலையும், இழவு வீட்டு ஒப்பாரியும்’ என்ற இந்த விமர்சனத்தையும் படித்துப் பாருங்கள். நண்பர் சித்தார்த் அவரது ஃபேஸ்புக்கில் அருமையாக எழுதியிருக்கும் விமர்சனம் இது. படித்துப் பார்த்துவிட்டு விவாதத்துக்கு வரும்படி நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இதோ இது கவிஞர் ராஜ சுந்தர்ராஜனின் விமர்சனம் – ‘ஒரு நொந்தகுமாரன் கதை’. அடுத்து இங்கே அராத்தின் விமர்சனம்.

4. படத்தைப் பற்றி பாலாவின் கலைநயமிக்க பேட்டியை அவசியம் எதிர்பார்க்கிறேன்.

  Comments

23 Comments

  1. நாயன்மாரே…

    Reply
  2. Fan of good cinemas

    “இப்படியெல்லாம் நான் எழுதியிருப்பதால் எனக்குப் பாலா படங்கள் அறவே பிடிக்காது என்பது அர்த்தம் அல்ல. சேது எனக்கு முதலில் பார்க்கையில் பிடித்தது. அப்படித்தான் நந்தாவும். பிதாமகனும். ஆனால் நான் கடவுள் படத்திலிருந்து பாலாவின் படங்கள் அலுக்க ஆரம்பித்துவிட்டன. இதன்பிறகு அவரது முந்தைய படங்களை மறுபடியும் பார்க்க ஆரம்பித்தபோதுதான் இந்த டெம்ப்ளேட் பிடிபட்டது. அவையும் மொத்தமாக அலுத்துவிட்டன.” Hats off to this. Actually i first felt the same but when i was watching Naan Kadavul i really started realizing bala’s template. I think he is a sadist. And all his projects projecting the same. I don’t know why some people are celebrating him as a one of the greatest directors of tamil cinema. Mahendran, Bharadhi Raja, Bhagya Ray are some directors attracted me with their peculiar way of story telling. But this guy doesn’t fit in that list at all. Rajesh, i really thank you to come up with a bold review of a overrated movie. Hats off. Doing great boss.

    Reply
  3. /”சேது எனக்கு முதலில் பார்க்கையில் பிடித்தது. அப்படித்தான் நந்தாவும். பிதாமகனும். ஆனால் நான் கடவுள் படத்திலிருந்து பாலாவின் படங்கள் அலுக்க ஆரம்பித்துவிட்டன. இதன்பிறகு அவரது முந்தைய படங்களை மறுபடியும் பார்க்க ஆரம்பித்தபோதுதான் இந்த டெம்ப்ளேட் பிடிபட்டது. அவையும் மொத்தமாக அலுத்துவிட்டன.”/

    அண்ணே.. எனக்கும் சேம் ஃபீலிங்ஸ் தான்..!! கடைசியா வந்த நான் கடவுள்,அவன் இவன் எனக்கு பிடிக்கலை.

    ஆனா பரதேசி எனக்கு பிடிச்சிருந்தது.. பாலாவோட டெம்ப்ளேட் இந்தப் படத்திலயும் தொடர்ந்தாலும் இந்தப்படத்தில சொல்லியிருக்கற விஷயங்கள் நம்பும்படியா இருந்துச்சு.. முக்கியமா பிதாமகன் மாதிரி ‘கொரவளய கடிக்கறதோ’, நான் கடவுள் மாதிரி ‘கழுத்த அறுக்கறதோ’, இல்ல அவன் இவன் மாதிரி ‘உயிரோட எரிக்கறதோ’ இல்லாம ரொம்ப யதார்த்தமான முடிவை சொன்னதும் எனக்கு படம் பிடிக்க ஒரு காரணம். அதே போல இது தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவங்கள் தாங்கறதால பார்க்கும் போது என்னால படத்துல ஒன்ற முடிஞ்சது.. படம் முடிஞ்சு வெளில வர்றப்போ மனசு கனத்துப் போனது என்னவோ மறுக்க முடியாத உண்மை.

    /”நடன இயக்குநர் சிவசங்கர் வரும் காட்சிகள், படத்தின் அதீத மொக்கையான காட்சிகள் என்று சொல்வேன்.”/

    100 க்கு 100 உண்மை.

    Reply
  4. /”பொதுவாக தமிழகத்தில் நிலவும் சாபக்கேடு என்னவெனில், நமக்கு அடுத்தவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை. அதாவது, அடுத்தவர்கள் அவர்களது கருத்தை வெளிப்படையாக சொல்லும் சூழல் இல்லை. உதாரணம் இந்தப் படம். இதன் விமர்சனமாக, படம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறேன். எத்தனை நண்பர்கள் இந்த விமர்சனத்தை என்னைத் திட்டாமல் படிக்கிறார்கள் என்றும் பார்க்கத்தான் போகிறேன்.”/

    உங்கள்ட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயமே இதுதான்.. யார் என்ன சொன்னாலும் உங்க கருத்துல ஸ்ட்ராங்கா இருப்பீங்க.. விட்டுக் கொடுக்க மாட்டீங்க..!! படம் பத்தின உங்க கருத்துக்களில் நான் கொஞ்சம் மாறுபடறேன்..!! ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு.. 🙂 🙂

    Reply
  5. ராஜசுந்தரராஜன்

    அய்யோ! நான் வாழ்க்கையில் ரெம்ப அடிபட்டுவிட்டேன். அப்படி, தற்கொலை செய்துகொள்ளும் நிலைமையை நானாகவே தாண்டிவிட்டேன். பாலா ஒரு நல்ல டெக்னீஷியன் என்று சொன்னேன்தான், அதற்காக? இப்போது இந்தப் பதிவைப் படித்துவிட்டுச் சிரித்துக்கொண்டு இருக்கிறேன். தற்கொலை எல்லாம் பண்ணமுடியாது. எனக்கல்ல, post போட வேண்டியது ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், எம்.டி.முத்துக்குமாரசாமி முதலியவர்களுக்கு. (இது விஜய் சரவணன் விமர்சனத்துக்கு என் பின்/கருத்தூட்டம். கருந்தேளுக்கும் இதுவே!)

    Reply
  6. ராஜசுந்தரராஜன்

    ஒரு திருத்தம்: மேலே நான் சொன்னது சித்தார்த் கந்தசாமியின் விமர்சனம் (விஜய் சரவணன் வழியாக வந்த சித்தார்த் கந்தசாமியின் விமர்சனம்)

    Reply
  7. Guru

    i am seeing your reviews also has the template structure.

    Reply
  8. NoOneSider

    bullshit review

    Reply
  9. Arun

    நண்பர் ராஜேஷ்,

    நீங்கள் தமிழ் படங்களைப் பற்றி முன்னர் எழுதிய விமர்சனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நடுநிலை தவறாது ஒரு படத்தைப் பற்றிய உங்களின் பார்வை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது சாரு ஒரு படத்தை மட்டம் தட்டினால் அதை நீங்கள் முழுவதுமாக வழிமொழிவது, நீங்கள் நடுநிலையை சந்தேகிக்க வைக்கிறது.

    எத்தனையோ உலக சினிமாக்களில் (Ex: A Serbian Film) மிக அதீத வன்முறைக் காட்சிகளைக் கொண்ட படங்களையெல்லாம் பாராட்டி விட்டு, சேது படத்தில் பாறையில் மோதுவதையும், எலும்பை உடைப்பதையும் கிண்டல் செய்கிறீர்களே?

    Reply
  10. அருண்…நீங்க சொல்றது கொஞ்சம் கூட நியாயமே இல்லாத ஸ்டேட்மெண்ட். சாரு படத்தைப் பார்ப்பதற்கு முன்னரே – படம் வெளிவருவதற்கு முன்னரே – பாலா படங்களைப் பற்றிய என் கருத்தை ஃபேஸ்புக்கில் விபரமாக எழுதிவிட்டேன். விஸ்வரூபம் பத்தி நான் எழுதினதையும் சாரு எழுதியதையும் பார்த்தீங்கன்னா ரெண்டும் ரெண்டு எக்ஸ்ட்ரீம். எனக்கு பரதேசி படம் புடிக்கல. அவருக்கும் புடிக்கல என்பது மட்டுமே ரெண்டு பேருக்கும் ஒற்றுமை.

    இப்போ அடுத்த பாயிண்ட். செர்பியன் ஃபில்ம்ல அதீத வயலன்ஸ் உண்மை. ஆனா அதுல அருமையான ஒரு கதையும், அதை அந்த வேகம் குறையாம நேரேட் பண்ணிய திரைக்கதையும் இருந்தது. அதனால்தான் எனக்கு அது புடிச்சது. அதே சமயம் சேது முதல்ல பாக்கும்போது எனக்குப் பிடிச்சதுன்னு தானே சொல்லிருக்கேன்? இந்த நேரேஷன் தான் அருமையான படங்களையும் ஆவரேஜ் படங்களையும் பிரிக்கும் ஒரே வஸ்து.

    அடுத்தது என் நடுநிலைமை பத்தி. நான் எப்பவுமே நடுநிலைல இருந்துகிட்டு வழவழா கொழகொழான்னு பேசினதே இல்லையே? ஒண்ணு பிடிக்கும் – இல்லாட்டி பிடிக்காது. இப்படித்தானே சொல்லிருக்கேன்.

    ஆனா பொதுவா நான் சாருவின் நண்பன் என்பதால் அவரு சொல்வதைத்தான் நான் எழுதுவேன்ன்னு தான் பல பேரு நினைக்கிறாங்க. கொஞ்சமே கொஞ்சம் காமன் சென்ஸ் யூஸ் பண்ணா அது இல்லைன்னு புரிஞ்சிரும். ரெண்டு பேருக்கும் பல விஷயங்கள்ல பல மாறுபட்ட கருத்துகள் இருக்கு. அப்படி மாறுபட்டபோது யாருமே அதைப் பத்தி கேக்காம வசதியா மறந்துட்டு ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசும்போது மட்டும் கேள்வி கேட்பது லாஜிகலான்னு நீங்களே சொல்லுங்க.

    உங்க சந்தேகத்தை வெளிப்படையா கேட்டதுக்கு மிக்க நன்றி. சில காமெடி பீஸ்கள் மாதிரி கமெண்ட் மாடரேஷன் வெச்சி நமக்கு சாதகமான கமெண்ட்கள் மட்டும் பம்பிப்பம்பி வெளியிட்டு ஒரு கான்வர்சேஷன் நடக்கும் சாத்தியத்தை மறுப்பது எனக்குப் புடிக்காது. அந்த வகையில் இது ஒரு ஹெல்தியான டிஸ்கஷன் என்று நினைக்கிறேன். அதற்கும் இன்னொரு நன்றி.

    Reply
  11. Arun

    நண்பர் ராஜேஷ்,

    நீங்கள் சாருவின் விமர்சனத்திற்குப் பிறகுதான் உங்கள் விமர்சனத்தை அளித்தீர்கள் என்று நினைத்தேன். இப்போ புரிந்தது. தவறுக்கு மன்னிக்கவும்.

    A Serbian Film பற்றிய உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால் எனக்கென்னவோ சேது படத்தில், அந்த பாறையில் மோதும் காட்சி திரைக்கதையுடன் ஒன்றி வந்தது என்றே தோன்றுகிறது. பிதாமகன், நான் கடவுள் வரை பாலா அதை கடைபிடித்தார். ஆனால் ‘அவன் இவன்’ படத்தில் சுத்தமாக திரைக்கதையில் தோற்றுப் போனார் என்பது என் கருத்து.

    நான் இன்னும் பரதேசி பார்கவில்லை. பார்த்து விட்டு வருகிறேன். நம் விவாதத்தைத் தொடரலாம்.

    Reply
    • திரு ராஜேஷ், அருண்,
      sorry for this much time to take for this feed back
      please check this page

      (அவன்–இவன் : குட்டிச்சுவரின் அழகியல் )

      http://rasa9.blogspot.in/2011/07/blog-post_11.html

      and give your views

      giri

      Reply
  12. Balaji R

    I agree with you Rajesh, i do feel there is no Vow factor in this movie…let us hope Bala’s best is yet to come…

    Reply
  13. Mohd arafath

    hmhm ok tell me what u gonna expect in a BALA film? a masala movie.. ? with 5 duets and 5 fights? or a action triller?

    Reply
  14. saravana jackie

    தமிழ்ல நல்ல படம் வரணும் னு எனக்கு ஆசை .. ஹாலிவுட் படம் எதாவது உதாரணம் சொல்லுங்க எந்த மாதிரி படம் தமிழ் இல் வந்த நல்ல இருக்கும் நு . மற்ற நாட்டு திரைப்படம் எதாவது உதாரணம் சொல்லுங்க ராஜேஷ் சார்

    Reply
  15. Vaasagan

    Kudos to you Rajesh. Even though I liked the movie, for the same reason you have mentioned in your review that there are no other better movies in tamil, I agree with everything that you have said above. I havn’t read all the reviews about paradesi, but I consider this to be the best review for the movie, better than the ones which praise the movie all out. The only point I am not sure about is does Bala give elaborate interviews about his movies? He has always been humble and never talked big words about any movie that too particularly his movies as far as I have seen and read. He is so out of place in any promotional event or any event for that matter and doesn’t want to talk at all. I have read his ivandhaan bala and he comes across as a straight forward person capable of handling the truth.

    Reply
  16. sekar

    ஆடுகளம் படத்தின் இரண்டாம் பாதி பெரிதாக ஒன்றும் இருக்காதே நண்பா…தங்கள் விமர்சனத்தை ஒத்து போகிறேன்

    Reply
  17. pattabiraman

    திரு ராஜேஷ்
    எவ்வளவோ திரைப்படங்களை உங்கள் சிறந்த தரமான விமர்சனத்திற்கு பிறகு ரசித்து பார்த்துள்ளேன் புதிய பல விஷயங்களை தெரிந்து கொண்டும் உள்ளேன். சமீபத்தில் பரதேசி திரைப்படம் பற்றிய உங்களின் பார்வைகளையும் மதீப்பீடுகளையும் சக ரசிகன் என்ற அளவில் மதித்து ஏற்கிறேன். பாலாவின் டேம்ப்லேட் கதைகளும் கதாபாத்திரங்களும் உங்களுக்கு சலிப்பை தந்ததில் வியப்பில்லை. அதற்காக சிறந்த ஒளிப் பதிவை ஒற்றை வார்த்தையில் நிராகரிப்பது உங்களை போன்ற ஒருவர் செய்வது மிகுந்த நெருடலை தருகிறது. அடுத்த முறை விமர்சிக்கும் போது இதையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.

    Reply
  18. giri

    திரு ராஜேஷ்,
    sorry for this much time to take for this feed back
    please check this page

    (அவன்–இவன் : குட்டிச்சுவரின் அழகியல் )

    http://rasa9.blogspot.in/2011/07/blog-post_11.html

    and give your views

    giri

    Reply
  19. naveen

    rajesh unga vimarsanathulayum oru template follow pandreenga! entha tamil padathayum paaratta koodathu, rajini padathukku munnadaiye kevalamana vimarsanam eluthi vechi publish pandrathu foreighn filmskum chaaru nivethithavukkum sombu adikirathu! thirunthatha jenmam! n also sariyana reply pannama delete pandrathu! nalla varuveenga sir! vazhthukkal tamil cinema voda pithamagan neengathan! Vengaayam!

    Reply
    • Rajesh Da Scorp

      நவீன். சில பேருக்கு உண்மைய எழுதினா புடிக்காது. நீங்க அந்த கேடகரின்னு தெரியுது. தமிழ் படங்களை நான் பாராட்டியும் இருக்கேன். தேஞ்சி போன ரெகார்டு போல இந்த கமெண்ட் எத்தனையாவது தடவை போடுறேன்னு எனக்கே தெரியல. முன் முடிவு எடுத்துகிட்டு தீர்ப்பு சொல்றதுக்கு முன்னால் ஒருவாட்டி என் ப்ளாகை படிங்க. நீங்களா முட்டாள்தனமா எதையோ நினைசிக்கினு அதை இங்க வந்து வாந்தி எடுக்காதிங்க. நான் இதுவரை கமெண்ட் மாடரேஷன் வெக்கல. டிலீட்டும் பண்ண மாட்டேன். ரஜினி படத்துக்கு முன்னமேயே விமர்சனம் எழுதி வெச்சேன்னு என்னமோ நான் எழுதும்போது வந்து பார்த்த மாதிரி பேசுறீங்க .. செம்ம காமெடியா இருக்கு 🙂

      Reply

Join the conversation