Periyar (2007) – Tamil (அல்லது) கலகக்காரர் தோழர் பெரியார்
சென்ற வருடம், நண்பர்களால் நடத்தப்படும் ‘குலேபகாவலி’ blogகில், ‘அத்தனையையும் உடைப்போம்’என்று ஒரு கட்டுரை வந்திருந்தது. அந்தக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்தக் கட்டுரையை எழுதிய நண்பரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். அக்கட்டுரையை அவர் எழுதியதே, பெரியாரின் மேல் இருக்கும் மதிப்பினால்தான். பெரியாரைப் பற்றித் தெரியாத ஒரு காலத்தில், அவரின் மீது திணிக்கப்பட்டிருந்த போலி பிம்பங்களினால், அவரது பெயரைக் கேட்டாலே ஒரு அசூயை எனக்கு ஏற்பட்டிருந்தது. அதன்பின்னர், பெரியாரைப் பற்றியும், அவரது கட்டுரைகள் சிலவற்றையும் படிக்க நேர்ந்தது. அப்போது அவரைப் பற்றிய எனது முன்முடிவுகளில் மாற்றம் நேர்ந்தது. அதன்பின், ‘குடியரசு’ இதழ்கள் மொத்தமாக எனக்குக் கிடைத்தன. அதனை ஒரு பொக்கிஷம் என்றுதான் சொல்லவேண்டும். ஜூனியர் விகடனில் பெரியார் தி.கவினரின் ஒரு நேர்காணலை, மே அல்லது ஜூன் 2010 இதழில் படிக்க நேர்ந்தது. அதில், குடியரசு இதழ்களின் தொகுப்பு இருப்பதாகவும், கேட்பவர்களுக்கெல்லாம் இலவசமாக அவற்றை அனுப்பி வைப்பதாகவும் கண்டிருக்க, நானும் மின்னஞ்சல் செய்தேன். உடனேயே வந்த பதிலில், அத்தனை இதழ்களும் எனக்கு வந்து சேர்ந்தன! நானும் என் பங்குக்கு என்னால் முடிந்த வரை எனது அத்தனை நண்பர்களுக்கும் அப்போது அந்த இதழ்களை அனுப்பி வைத்தேன்.
அதன்பின்னர், ‘பெரியார்’ திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளை மட்டும் கண்டேன். அந்த நேரத்தில், பெரியாரைப் பற்றிய புரிதல் நன்றாக எனக்குள் இறங்கியிருந்த காலம் அது அன்பதால், அந்தப் படம் எனக்குப் பிடித்தே இருந்தது. ஆனால் முழுப்படத்தையும் நான் கண்டிருக்கவில்லை. அதன்பின் எங்குமே அப்படம் எனக்குக் கிடைக்கவில்லை (நண்பர் கோவை ஹாலிவுட் பாஸ்கரனிடம் கூட அது இருந்திருக்கவில்லை). அப்போதுதான் சென்றவாரம் தொலைக்காட்சியில், முதலிலிருந்து கடைசிவரை இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
பெரியார் யார் எவர் என்பதைப்பற்றியெல்லாம் நான் எதுவும் எழுதப்போவதில்லை. அது தேவையும் இல்லை என்று நினைக்கிறேன்.
எனக்குத் தோன்றும் சில விஷயங்களைப் பற்றி மட்டுமே இங்கு எழுதவேண்டும் என்று நினைத்தேன். நண்பர்களும் உங்களது கருத்தை எழுதலாம்.
நமது மதங்களில் ஜாதி என்ற விஷயம் எப்படிக் கையாளப்படுகிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். எந்த ஆதார விதிகளால் நமது மதம் கட்டமைக்கப்படுகிறது என்பதைப் பார்த்தால், அது ‘மனுஸ்ம்ருதி’ என்ற புத்தகம் தான். இது உண்மையில் புத்தகமே கிடையாது எனவும், மனு என்பவரால் செய்யப்பட்டு, வழிவழியாக செவிவழியாகவே பரவி, சென்ற நூற்றாண்டில்தான் புத்தகமாக செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைக்கும் தகவல். இந்தப் புத்தகத்தில் இருக்கும் பல விஷயங்கள், இன்னமும் சிலரால் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்திய நாட்டின் சட்டத்தில் எதையெல்லாம் தவறு என்று குறிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தத் தவறுகள் எல்லாமே சர்வசாதாரணமாக மனுஸ்ம்ருதியால் ‘சரி’ என்று சொல்லப்படுகிறது.
இன்னமும் கூர்ந்து நோக்கினால், ‘வர்ணாஸ்ரம தர்மம்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறது. ரிக்வேதத்தில் இருக்கின்ற ‘புருஷ ஸூக்தம்’ என்ற மந்திரத்தில், தெளிவாகவே இவ்வாறு இருக்கிறது. பிராம்மணன், புருஷன் என்று சொல்லப்படுகின்ற கடவுளின் முகமாக இருக்கிறான் (பிராம்மணோஸ்ய முகமாஸீத்), க்ஷத்ரியன் கடவுளின் இரண்டு கைகளாக இருக்கிறான் (பாஹோ ராஜன்ய க்ரத), இரண்டு தொடைகளும் வைச்யர்களாக ஆனது (ஊரூ ததஸ்ய யத் வைஸ்ய), அவனது பாதங்களில் இருந்து சூத்ரர்கள் பிறந்தனர் (பாத்ப்யம் சூத்ரோ அஜாயத). – புருஷ ஸூக்தம் 13வது ஸ்லோகம்.
மனுஸ்ம்ருதியும் இவ்வாறே ஹிந்து மதத்தின் பிரஜைகளை அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டும், தொழிலைச் செய்யும் மனிதர்களைக் கொண்டும் பிரித்தது. இந்தப் பழக்கம், பொதுவில் ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் இன்னொரு ஜாதியையைக் கீழ்மையாக நடத்துவதில் முடிந்தது. இதனால், பிராம்மணன் இருப்பதில் உயர்ந்தவன் (ராகுல் காந்தியின் சமீபத்திய ஸ்டேட்மெண்டை இத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும்), அவனுக்குப்பின் க்ஷத்ரியன், அவனுக்கு அடுத்ததாக வைச்யன், கடைசியில் சூத்திரன் என்று முடிந்து, அந்த சூத்திரனுக்குக் கீழானவனாக பஞ்சமன் என்றுவேறு ஒரு ஜாதி அமைந்து, மொத்தத்தில் ஒவ்வொரு ஜாதியும் அடுத்தவனை அமுக்குவதில் ஆரம்பித்து, அதனால் பயங்கர குத்துவெட்டில் முடிந்தது. குறிப்பாக, எல்லோரையும் விட பிராம்மணன் அடுத்த சாதியினரைக் கேவலமாக நடத்துவதில் முடிந்தது. அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர், சென்னை ரயில்வே ஸ்டேஷனில், பிராம்மணர்களுக்கென்றே தனியாக காஃபி க்ளப்களும், பிற சாதியினருக்குத் தனியாக ஒரு காஃபி க்ளப்பும் இருந்ததாக படித்திருக்கிறேன்.
ஆகவே, நாம் பார்க்கப்போகும் சூழலில், ஜாதி வெறி மக்களின் ரத்தத்தோடு கலந்திருந்தது (குறிப்பாக, பிராம்மணர்கள்). உயர்சாதியினர் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொண்ட இவர்களால், பிறருக்கு அநியாயமாகவே கஷ்டங்கள் கொடுக்கப்பட்டன என்பதையே காண நேர்கிறது.
(ஒரு மிகச்சிறிய உதாரணம் தரவேண்டுமானால், மந்த்ராலயத்தில் ராகவேந்திரர் கோயிலில் உணவு வழங்கப்படும் இடத்தில் இதனைக் கண்கூடாகப் பார்க்கலாம். எனது மனைவிக்கே இது நேர்ந்தது. ‘நீங்கள் ஐயரா?’ என்பது அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்வி. “இல்லை” என்ற பதில் வந்தவுடன், உணவு வழங்க முடியாது என்று பதில் சொல்லி, அங்கிருந்து செல்லச் சொல்லிவிட்டனர். பிறருக்கு அருள் பாலிக்கக் கட்டப்பட்ட கோயிலில் கூட ஜாதி வெறி!)
இதனால், பிற ஜாதியினர் வந்து சென்றபின், அந்த இடத்தைக் கழுவுவது போன்ற செய்கைகள், பிராம்மணர்களிடத்தில் சர்வசாதாரணம். (எனது சிறுவயதில் இதனை என் வீட்டிலேயே கண்டிருக்கிறேன்).
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், பாகவதத்திலும், பாரதத்திலும், இறைவன் சொல்வதாக ஒரு வசனம் உண்டு. ‘எங்கெங்கு அநியாயம் தொன்றுகிறேதோ, எங்கெங்கு நல்லவர்கள் இழிவுபடுத்தப்படுகிறார்களோ, அங்கெல்லாம் நான் அவதரிப்பேன்’ என்று இறைவன் சொல்வதாக ஒரு படுஃபேமஸ் பஞ்ச் டயலாக். (யதா யதாஹி தர்மஸ்ய என்று தொடங்கும்). விஞ்ஞானத்திலும் இதை ந்யூட்டனின் மூன்றாம் விதி மிக எளிதாக சொல்லிவிடுகிறது. எந்த செயலுக்கும், அதேபோன்ற சமமான எதிர்ச்செயல் நிகழ்ந்தே தீரும்.
ஆக, எப்போதுமே பெருகிக்கொண்டே போகும் சமுதாயக் கொந்தளிப்புக்கு வடிகாலாக, யாராவது பிறந்தே தீருவார்கள். கொந்தளிப்பு எந்தப் பக்கம் செல்கிறது என்பது பொறுத்து, இவர்களின் ஆற்றலும் கோபமும் அதேகேற்ற வகையிலேயே இருக்கும். இந்த உலகில் பிறந்த சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் ஆகியவர்களை எடுத்துக்காட்டாக ஆராய்ந்தால், அந்தந்த சமுதாயத்தில் உருவாகி, வேர் பிடித்து, கொந்தளிப்பாக ஒரு குறிப்பிட்ட விஷயம் வெடிக்கின்றபோது, இந்த வடிகாலாக அம்மனிதர்கள் விளங்கியிருக்கிறார்கள் என்பது புரிந்துவிடும்.
அப்படி இந்த ஜாதி ஏற்றத்தாழ்வு அதன் உச்சத்தை அடைந்தபோது, எதிர்க்குரல் கொடுத்து அதனை அடக்கப் பிறந்த மனிதரே பெரியார் என்பது என் முடிவு (பெரியாரைப் பற்றி எழுதும்போது கீதை கடவுள் உதாரணங்கள் எல்லாம் எதற்கு என்று நண்பர்களுக்குத் தோன்றலாம். ஆனால், இப்படி ஒரு உதாரணம் அதில் இருக்கிறது என்பதை சொல்ல விரும்பினேன்).
இதோ திருவாளர் ராமசாமி பேசுகிறார்.
“இவர்கள் பார்வைக்கு அசிங்கமாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடை யுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும் இதற்கு யார் பொறுப்பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கே தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ வேஷ்டி துவைக்கவோ வழியெங்கே ? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய்கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார்களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா ? நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்பட மாட்டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்துவிட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக்கிறோம்.
மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாதவனாய் விடுவான்? ஐரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா? அவர்களை நாம் தீண்டாதார், பார்க்காதார் என்று சொல்லக்கூடுமா? அப்படியே சொல்வதானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப்போல் நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாட்டைத் தின்பது உயிருள்ள ஜெந்துவை உயிருடன் வதைத்து கொலை செய்து சாப்பிடுவதை விட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா ?
கள் இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது என்றும் சொல்வது எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக்கொண்டிருப்பவனும் தொடக்கூடியவன், தெருவில் நடமாடக்கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்? உற்பத்தி செய்வது குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படித் தொடக்கூடியவர்களாவார்கள்? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறோம். இந்தப்பணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக்கியர்கள்; தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடியவர்கள் ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை? இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படி கொடுமைப்படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடுதலையை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்துவாரா? என்பதை நினையுங்கள்.
இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கொண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கென்யா, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவர்க்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி வைத்துக் கொண்டிருக்கும் அக்கிரமத்தை விடவா 1818 – வது வருஷத்து ஆகட்டும், ரெளலட் ஆக்ட்டும், ஆள்தூக்கிச் சட்டமும் 144, 107, 108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையைவிடவா அன்னியர் கொடுமை பெரிது? மதுரைக் கோவிலில் குடிகாரன், மாமிசம் சாப்பிடுகிறவன், குஷ்டரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப்பிரகாரம் கடந்து செல்லலாம். ஆனால் நமது சகோதரர்களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்தவர்களுமாயிருந்தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது, மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்துபோகுமாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ரவுலட் சட்டத்திற்கும், ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம் சொல்வானேன். இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக்கூடிய மாதிரியாவது நாம் நடக்கிறோமா ?
– முதலாவது அரசியல் மாநாடு – காரைக்குடி ஜில்லா – குடியரசு இதழ் – 1925
வருடத்தைக் கவனியுங்கள். 2000 அல்ல. அது 1925. இப்போதைய காலகட்டத்தில் பேசப்படுவதை, எப்போதோ பேசிவிட்டார் பெரியார். பேசுவது மட்டுமல்ல. செய்தும் காட்டினார். சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்த அக்காலத்தில் ஒரு மனிதர் இப்படி வாழ்ந்ததை என்னவென்று சொல்வது? இப்போது யார் வேண்டுமானாலும் ஜாலியாக இவ்வார்த்தைகளைப் பேசிவிட்டு, ரகசியமாக சாமி கும்பிட்டு காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால் அவரது காலத்தில், இப்படிப் பேசும் ஒரு மனிதனை சமுதாயம் எப்படி நினைத்திருக்கும்? கவலைப்படாமல் நினைத்ததை சாதித்தார் திருவாளர் ராமசாமி.
நான் வாழ்ந்துகொண்டிருக்கும் பெங்களூரில், சர்வ சாதாரணமாக ஜாதி உலவுகிறது. பெங்களூர் என்பது புகைப்படங்களிலும், சிற்சில இடங்களாலும் மட்டும்தான் மேல்நாடுகளைப் போன்று இருக்கிறது. ஆனால், பெங்களூரில் வாழும் மக்கள், ஜாதி என்பதை விடாமல் கெட்டியாகப் பிடித்துவைத்துக்கொண்டே வாழ்கிறார்கள். எளிய உதாரணமாக, ஒரு விஷயம் சொல்கிறேன். நான் பெங்களூருக்கு வந்த புதிது. எனது அலுவலகத்தில், முதன்முதலாக என்னுடன் வேலைசெய்பவர்களைச் சந்திக்கிறேன். அதில் ஒருவர் – சாதாரணமாக என்னிடம், “நீ எந்த ஜாதி?” என்று கேட்டார். கடுப்பு தலைக்கேறி, “சொல்ல முடியாது” என்று பதிலளித்தேன். அவர் மட்டுமல்ல. இன்னும் பலரும், என்னிடம் இதே கேள்வியை ஏதோ ‘டீ சாப்புட்டு வரலாம்’ ரேஞ்சில் கேட்டனர். அதில் வட இந்தியர்களும் (பெண்கள் உட்பட) அடக்கம். பெரியாரின் தடியைப் பிடுங்கி, அவர்களின் மண்டையில் பொளேரென்று ஒரு போடு போடலாம் என்று தோன்றியது.
அதே போல், இங்கே சாதிப்பெயரைத் தனது பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்வது சர்வசாதாரணம். ஆகவே, பெயரைச் சொன்னதும் இன்னார் இந்த ஜாதி என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடுவதால், கூட்டம் கூட்டமாக தங்களது ஜாதியைச் சேர்ந்த மனிதர்களுடன் பழகுகின்றனர். என்னதான் நெருங்கிப் பழகினாலும், நம்மிடம் இவர்களுக்கு அந்த நெருக்கம் இருக்காது.
இங்கு பெரியார் பிறக்கவில்லையல்லவா? அதுதான் இப்படித் திரிகின்றனர் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
இந்த சூழலில்தான் பெரியாரும் அவரது உரைகளும் அவரது கொள்கைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. எக்காலத்திலோ சமத்துவம் பற்றியும், மொழியின் மீதுள்ள வெறியின் ஆபத்து பற்றியும், இதேபோன்று அதீத நாட்டுப்பற்று, ஜாதிப்பற்று (குலாபிமானம், தேசாபிமானம், பாஷாபிமானம்) ஆகியவற்றைக் கிழிகிழியென்று விளாசியிருக்கிறார் பெரியார். எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், Icanoclast என்ற பதத்துக்கு சரியான உதாரணமாக (சிலைகளை உடைப்பவன் – அதாவது, சமுதாயத்தில் தொன்றுதொட்டு நம்பப்படும் செக்குமாட்டுச் சிந்தனைகளை உடைத்து, எந்த விஷயமானாலும் கேள்விகளை விடாமல் கேட்பவன்) விளங்கினார் பெரியார். அவரது ஒருசில உரைகளைப் படித்தாலே போதும். ஆனால், அதே சமயம், இந்த பழமைவாத சிந்தனைகளில் ஊறியவர்கள் பெரியாரைப் படித்தால், கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள் என்படும் மிகத்தெளிவு. அப்படி அதிர்ச்சியடைந்து, பெரியாரின் மேல் அவதூறுகளையும் கிளப்புவார்கள் என்பதனையும் சமீப காலமாக கவனித்தே வந்திருக்கிறேன்.
‘பெரியார்’ படத்தில், சத்யராஜ் என்னும் நடிகரை எங்குமே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை பெரியாரே நடமாடினார். ‘பாரதி’ படத்தைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா சொல்கையில், ‘பாரதியின் ஆவி சாயாஜி ஷிண்டேவினுள் இறங்கியிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருப்பார். பெரியார் ஆவி கீவியிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர். ஆகவே, சத்யராஜ் பெரியாரை நன்கு படித்து, அவதானித்திருக்கிறார் என்பதைக் கண்டுகொண்டேன்.பெரியாரைப் பற்றிய ஒரு ஆவணமாகவே இப்படம் விளங்குகிறது. இந்தப் படத்தை ஏன் பெரிய அளவில் மார்க்கெட் செய்யவில்லை?
‘Satire’, ‘pun’ போன்றவைகளெல்லாம் பெரியாரின் கட்டுரைகளில் துள்ளி விளையாடுகின்றன. எப்படியெல்லாம் அரசைத் தாக்குகிறார்? ஈரோட்டில், நகரசபையினர், மலேரியா காய்ச்சல் பரவியபோது, சாக்கடை கட்டாமல் பூங்காக்கள் கட்டிக்கொண்டிருந்தவர்களை எப்படி சவுக்கால் அடிக்கிறார் என்று பாருங்கள்.
“தற்கால நகரசபையார் ஈரோட்டாரின் சுகாதாரத்திற்காகப் பாடுபடுகிற சங்கதியை முன்னமே சொன்னேன். இன்னொரு சங்கதி. ஈரோட்டிற்குப் புதிதாக ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். நமது நகரசபையாரின் தண்ணீர் தர்மத்தைக் காணவே வந்திருக்கிறார். மலேரியா ஜுரம் ஈரோட்டில் கிடைய வே கிடையாது. தண்ணீர்க் குழாய் ஏற்பட்ட நாள் தொட்டு மலேரியா ஜுரம் நடமாடுகிறது. ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இருந்தால் போதாது. வீணாகிற தண்ணீரும் கெட்ட தண்ணீரும் நகர எல்லையை விட்டு ஓடிப் போனாலல்லவோ கொசு ராஜாவின் பரிபாலனம் இல்லாமல் இருக்கும். குழா யில் இருந்து வரும் ஜலமெல்லாம் குழாய்க்கு அடியிலே குட்டையாகத்தான்; மீறினாலோ, ரோட்டிலேதான். சரியாக சாக்கடைகள் கட்டி, தண்ணீரை வெளியேற்றினால் அல்லவோ நிலம் காய்ந்து கொசுக்கள் இல்லாமல் இருக்கும். கொசு ராஜாவின் இளங்குமாரன்தான் நமது மலேரியா ஜுரம். நகரசபை ஆஸ்பத்திரிகளில் எத்தனை பேர் மலேரியா ஜுரத்திற்காக வருகிறார்கள், போகிறார்கள் என்பதை நகரசபையார் ஒரு நாளைக்குச் சென்று பார்த்தால் சங்கதி தெரியும். நல்ல தண்ணீர் ஜனங்களுக்குக் கொடுத்து காலரா என்ற வியாதியை ஊரை விட்டு ஓட்டின புண்ணியம் நகரசபை யாருக்கு உண்டென்பதை மறக்கவில்லை. திருடனைத் துரத்திவிட்டு பக்காத் திருடனைக் கொண்டு வந்த மாதிரியல்லவோ இருக்கிறது காலராவை யோட்டி மலேரியாவைக் கூட்டிவந்தது. காலராவோ மனிதனை இரண்டொரு நாளில் முடிவு செய்துவிடுகிறது. மலேரியா மனிதனை வாட்டி, வாட்டி சித்திரவதை செய்கிறதென்பதை நகரசபையாருக்கு நான் சொல்ல வேண்டிய தில்லை. ‘ தாடி பற்றி எரியும் போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்டான் ஒருவன்’ என்பார்கள். அந்த மாதிரி இருக்கிறது நமது நகரசபையார் காரியம். மலேரியா ஜனங்களை வாட்டுகிறது. சாக்கடை கட்டுகிற சத்தமே காணோம். குளிர் காய்ச் சலினால் வருந்துகிற ஜனங்கள் முக்காடு போட்டுக் கொண்டு கஷ்டப்பட்டு நல்ல காற்று வாங்குவதற்காக “சிங்கார நந்தவனங்கள்” ஏற்படுத்தும் முயற்சி யில் நமது நகரசபையார் இறங்கியிருக்கிறார்கள்! உண்மையாக இந்த ஊரின் சுகாதாரத்தைத் தேடினால் இந்தக் கடைகளையெல்லாம் கட்டிவிட வேண்டும், அவைகளைப் பின்னால் திறந்து கொள்ளலாம். அவசியமான செலவு போக மிச்சமாகும் ஒவ்வொரு தம்பிடியையும் சாக்கடை கட்டுவதில் செலவிட நகரசபையார் முன்வர வேண்டும். ஏழை அழுதகுரல் அம்பலம் ஏறுமா?
இதேது இவன் நிறுத்தமாட்டான் போல் இருக்கிறதே என்று நினைக் காதீர்கள். ‘அழுதபிள்ளைதான் பால்குடிக்கும்’ என்று என் தாயார் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். என் தாயார் போய்விட்டார்கள். நகரத் தந்தையாரிடம் அழுதால் ஏதாவது கிடைக்காதா என்று முன் வந்திருக்கிறேன். தந்தையின் யோக்கியதை உலகம் அறிந்ததே. அடித்தாலும் அணைத்தாலும் தாய் என்பது தெரியும். ஆனால் வேறுகதி இப்போது இல்லையே. “சிங்கார நந்தவனம்” என்று மேலே சொன்னேன். அந்த வனம் ஏற்படுத்தப்போகும் இடங்களில் உள்ள சொந்தவனமான கள்ளிகளை எடுக்க காண்டிராக்ட் கொடுத்திருக் கிறார்களாம். இந்த வேலைக்கு நகரசபையின் அநுமதியுண்டோ இல்லையோ தெரியாது. அவர்களின் அநுமதியை எதிர்பார்த்து தலைவரே செய்கிறாரோ என்னவோ அதுவும் தெரியாது. உண்மையை யாராவது சொன்னால் மிக்க வந்தனம். இதற்காக 500 செலவாகுமாம். இதுவும் கேள்வித்தொகைதான். திருத்தினால் வந்தனத்துடன் ஒப்புக் கொள்ளுகிறேன். இந்தத் தொகை உண்மையாக இருக்குமானால் ஈரோட்டாரின் வரிப்பணம் நாசமாகப் போவ தைக் குறித்தும் வருந்தாமல் இருக்க முடியவில்லை. ³ இடத்திலுள்ள கள்ளியை எடுக்க எவ்வளவு அதிகமானாலும் ரூ.250க்கு மேல் தேவை யில்லை. ஏன் இரட்டிப்புச் செலவு என்று கேட்கிறேன்? அநியாயமாக ஏழைகளின் பணத்தை இப்படி நாசமாக்கலாமா? என்று கேட்கிறேன். அவர்கள் தானே வாயில்லாப் பூச்சிகள். பணக்காரனுக்கு வரி போட்டால் அப்பீல் என்கிறான் – பெரிய இடத்து சிபார்சுகள் பறக்கின்றன – அடுத்த எலக்ஷனில் வோட்டு பயம் உண்டாக்குகிறான் – தன் காரியத்தைச் செயித்து விடுகிறான் – ஏழையோ? வரி போட்ட சங்கதியும் தெரியாது, அப்பீல் போட்டாலும் ஆதரிப் பாரைக் காணோம் – அவனுடைய தயவு யாருக்கு வேண்டும்? ஆனால் நகரசபையாருக்கு ஒரு வார்த்தை. “ஏழை அழுத கண்ணீர் …..” அதற்கு மேல் அவர்கள் இஷ்டம்.இவ்வளவோடு போதும் – அழுது அழுது தொண்டையும் காய்ந்து விட்டது; உடலும் சலித்து விட்டது; ஊற்றுப் பேனாவில் இங்கியும் தீர்ந்து விட்டது – பாக்கி அழுகை பின்னால்…….”
– குடியரசு – கட்டுரை – 05 /07 /1925
சவுக்கடி போதுமா? கூடவே, அவரது தந்தை பற்றியும் ‘சுருக்’ விமர்சனமும்.
நான் இங்கே கொடுத்திருப்பது மிகச்சிறிய உதாரணங்கள் மட்டுமே. பெரியாரின் உரைகள் என்பது ஒரு கடல். அவைகளில் மூழ்கினால், கட்டாயம் சக மனிதனை மதித்து, உலகில் சந்தோஷமாக வாழ முடியும்.
இந்தப் படத்தை இதுவரை பார்த்திராத நண்பர்கள் எப்படியாவது பார்த்துவிடுங்கள். என்னைக் கேட்டால், பெரியார் என்ற இந்தத் திரைப்படத்தை, ஒவ்வொரு பள்ளியிலும் இளஞ்சிறார்களுக்குப் போட்டுக் காட்டலாம். அப்போதுதான் சிறுவயதிலிருந்தே சமத்துவம் என்றால் என்ன? ஜாதி என்றால் எவ்வளவு பெரிய கேடு என்பதையெல்லாம் அவர்கள் உணருவார்கள்.
பி.கு –
- சில வருடங்களுக்கு முன்னர், ஆனந்த விகடனில் ஒரு ஓவியர், பிரபலங்களை அட்டகாசமாக கடைசிப் பக்கங்களில் படம் வரைந்து வந்தார். அப்போது ஒரு நாள், பெரியாரை வரைந்தார். பக்கத்திலேயே சத்யராஜை வரைந்து, இரண்டையும் இணைத்து, பெரியாருக்கு சத்யராஜை விடப் பொருத்தமானவர் யாரும் இருக்கவே முடியாது என்று காட்டினார். அது இப்படம் பார்க்கும்போது நினைவு வந்தது.
- படத்தில் பெரியாரின் இயல்பான மறுபக்கம் நல்லமுறையில் காட்டப்படுகிறது. குறிப்பாக, M R ராதா, பெரியாரின் முன்னிலையிலேயே அவரைப் பகடி செய்வது, அதற்குப் பெரியார் குலுங்கிக் குலுங்கி சிரிப்பது.
- கலகக்காரர் தோழர் பெரியார் என்பது ஒரு நாடகம். நிஜ நாடகக் குழுவினருடையது.
தலைப்பு கொஞ்சம் குழப்புது…….
84 – 85 வயதிலிருந்து, மூத்திர சட்டியோட மேடை மேடையோ ஏறி பேசினவர, உலகத்தில் வேற எங்கேயும் பாத்திருக்க முடியாது – இனியும் பாக்க முடியாது.
கொஞ்சமாச்சும் தமிழ்நாட்டில் சாதி பெயர பின்னாடி சேர்குறதுக்கு மக்கள் வெட்கப்பட முழுமுதல் காரணம்..பெரியார் தான். தவிர, அவர் செய்து வைத்து கலப்பு திருமணங்கள் பயங்கர வீரியமானது.
சாதி – தேசியம் – இவைகளை தாண்டி, பெண் குறித்து அவர் சொன்னதுதான் ரொம்ப ரொம்ப முக்கிய்மானதாக எனக்குப்படுது.
அவரது, எல்லா விஷயங்களையும் ஏற்க பெரியாரின் – திராவிட கொள்கையோட என்னால ஒன்ற முடியவில்லை.
———
கடைசில, பெரியாரையும் institutionalize ஆக்கிட்டாங்க. பெரியார் – சே குவேரான்னு பேசிகிட்டு, வீட்டுக்குள்ள மனைவிய அடிக்கிற ஆட்களை எனக்கு தெரியும்.
Good review
பெரியார் படம் குறித்து, இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்ன்னு தோணுச்சு. அவரே சொன்ன மாதிரி 94 வயது வரை வாழ்ந்தவரின் வாழ்வை சித்தரிப்பது ரொம்ப கடினம் தான் என்றாலும், அவரது வாழ்கையில் இருந்து ஒரு குறிப்பட்ட நிகழ்வை எடுத்து படமாக்கி இருந்தால் இன்னும் grippingகாக இருந்திருக்கும் தோணியது.
பெரியார் படமாவது ரிலீஸ் ஆகி, பரவலா கவனம் பெற்றது. அம்பேத்கார் படத்துக்கு அதுகூட கெடைக்கல……
————-
// ராகுல் காந்தியின் சமீபத்திய ஸ்டேட்மெண்டை இத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும் //
இதுவொரு ரொம்ப முக்கியமான ஸ்டேட்மென்ட்…..எப்படியெல்லாம் நம்பள கேன கூனா நெனச்சுகிட்டு இருக்காங்க என்பதற்கு இதுபோன்ற ஸ்டேட்மென்ட்கள் தான் உதாரணம்…… நீங்க இத்த – சரியா பயன்படுத்தியிருப்பது…..அருமை…..
பெரியார் படம் இன்னும் வீர்யத்துடன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
கருணாநிதி புகழ் பாடும் படலம் சற்று தூக்கலாக அமைந்திருக்கும்.
ஏனென்றால் கருணாநிதி படத்தில் தலையிட்டார்.
எம்ஜியாரை படத்தில் புறக்கணித்திருப்பார்கள்.
இயக்குனருக்கு பாரதி எடுக்கும் போது இருந்த சுதந்திரம் பெரியார் உருவாக்கலில் இல்லை.
பிரமாதம்.. நம்மூரில் தீரன் சின்னமலையை போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை தலைவர்களாக பார்க்காமல் ஜாதிகாரர்களாக பார்கிறார்கள்.. பாரதியார் எங்கள் ஜாதி, சின்னமலை எங்கள் ஜாதி என்று கூறும் முட்டாள்கள் ஏராளம்.. விவேக் சொன்னதுதான் ஞாபகம் வருது.. எத்தன பெரியார் வந்தாலும்..
உங்களுக்கு எப்படி வாரம் மூணு பதிவு போட நேரம் கெடைக்குது..
அருமையான பதிவு, அவசியமான பதிவும் கூட. நல்லது நண்பா! இந்தப்பதிவை நானும் உபயோகித்துக்கொள்கிறேன்.
எதுக்கும் இந்த வீடியோக்களை முழுதாகப் பாத்துட்டு ஒரு முடிவுக்கு வாங்க சார்.
http://www.youtube.com/watch?v=iHJVX679w2k&feature=relmfu
http://www.youtube.com/watch?v=Y5cYO4H2GOk&feature=relmfu
http://www.youtube.com/watch?v=VBmzX252gSM&feature=relmfu
http://www.youtube.com/watch?v=YV0853sm-gQ&feature=relmfu
http://www.youtube.com/watch?v=pSoGCt28tMM&feature=relmfu
http://www.youtube.com/watch?v=ZHvzheWcW7Q&feature=relmfu
http://www.youtube.com/watch?v=lB1Jmp7XCDw&feature=relmfu
How can some one flame only Hidu Gods. Racism is their in every rel. But Iam not supporting that. I had this issue in Udupi, Because I did not have a thert in my body they ask me to take food in other area. Where us The God itself is turned back because of Kanakadhasa. The issue is people who understand the Hinduism in wrong way. No body knows who created this think in India. பெரியார் is written to Jinna, For making T.N as part of Pakistan. For that I did not like him.
nilalaadum ninaivu!
நல்ல பதிவு. ஆற்றொழுக்கான எழுத்துநடை வாழ்த்துக்கள் நண்பா!
மிக அருமையான & அவசியமான பதிவு நண்பரே…ரொம்ப நன்றி…
அட்டகாசமான கொட்டு!
தாத்தா என்றாலே காந்தியும், மாமா என்றாலே நேருவும், அம்மா என்றாலே மாண்புமிகு முதலமைச்சரும்தான் என்ற கருத்துக்கள் திணிக்கப்படும் இந்த தமிழ்நாட்டில், தாத்தா என்றால் பெரியார் என மாற்றி சொன்னால் யாராவது கேக்கவா போகிறார்கள்?! 🙁
பி.கு.:
மாமா என்றாலே வாண்டுமாமாதான் என்று நான் என் பதிவுக்கு விளம்பரம் செய்தால் நீங்கள் என்ன கோபித்துக் கொள்ளவா போகிறீர்கள்?! 😉
>>>Periyar (2007) – Tamil<<<@கொழந்த: இது பெரியார் படம் வெளியான வருடத்தை குறிக்கிறது என நினைக்கிறேன்!
@ கொழந்த – மூத்திர சட்டி பத்தியும் எழுதனும்னு நினைச்சேன். அப்புறம், அது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதுற மாதிரி ஆயிரும்னு அதை விட்டுட்டேன். எனக்கும் அவரோட பெண்ணியக் கொள்கைகளும், கலப்புத் திருமணங்களும் பிடிக்கும். எங்களோடதே கலப்புத் திருமணமாச்சே :-)..
திராவிடக் கொள்கை, தனி நாடு இதெல்லாத்துக்கும் கூட கரெக்டா ஒரு காரணம் வெச்சிருப்பாரு தாத்தா :).. அவரு இப்போ இருந்திருந்தார்ன்னா, பதில் சொல்லிருப்பாரு 🙂 ..
வீட்டுல மனைவிய அடிக்குற ஆட்கள்- இந்த மாதிரி போலிகள் ரொம்பப் பேரு பெருகிட்டானுங்க…என்ன பண்ணுறது? இவங்களை இனம் கண்டுபுடிச்சி கிழிக்க வேண்டியதுதான்.
பெரியார் படம் – குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டும் எடுத்திருந்தால், படம் அட்டகாசமா வந்திருக்கும்தான். ஆனா இப்ப எடுத்திருக்குற படமே நல்லா இருக்கு. பெரியாரின் முக்கியமான அத்தனை மூவ்களும் இதுல இருக்கே…
@ prakash, பெருமாள் கரூர், Seeni & meeraa – மிக்க நன்றி நண்பர்களே
@ உலக சினிமா ரசிகரே – இந்த விஷயம் எனக்குத் தெரியாது. அப்புடியே இருந்தாலும், MGR & கருணாநிதி ரெண்டு பேருமே பெரியாரைப் புரிஞ்சிக்கலைன்னு எனக்குத் தோன்றுவதால், பிரச்னையில்லை.
@ Castro Karthi – யெஸ்.. அந்த மாதிரி ஜாதி வெறியர்கள் பெருகிட்டாங்கதான். திராவிடக் கட்சிகள்ளயே அது இருக்கே. என்ன பண்ணுறது? நாமளாவது தெளிவா இருக்க வேண்டியதுதான். அப்புறம், பிடிச்சதை எழுத, நாமே நேரத்தை உருவாக வேண்டியதுதான். எத்தனை பிசியா இருந்தாலும் இந்த நேரத்தை நான் என் schedule ல இருந்து எடுத்துக்கிட்டேன் 🙂
@ Murali Kumar – மிக்க நன்றி. தாராளமாக இதை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் நண்பா..
@ Jayadev Das – டைம் இருக்கும்போது அந்த லின்க்களை பார்க்கிறேன். நன்றி
@ Tenkasiraju – பெரியார் ஜின்னாவுக்கு எழுதுனதுக்கும் கண்டிப்பா காரணம் இல்லாம இருக்காது. மத்தபடி, உங்கள் பின்னூட்டத்தின் பிற பகுதிகளை ஆமோதிக்கிறேன்.
ப்ளேட்பீடியா – ஜெட்லி சேகரின் தளத்தில் விளம்பரம் செய்யவில்லையா ? 🙂
செஞ்சுட்டா போச்சு! 😀
எனக்கு பிடிச்ச ஒரு சில பதிவர்களின் தளத்துல மட்டும் விளம்பரம் செய்யறேன்! எதிர்ப்பு வந்தா டீசண்டா நிறுத்திக்கறேன், அவ்ளோதான்! 🙂
ஹாஹ்ஹாஹ்ஹா 🙂
Good write up though very short. We are always indepbted to Mahatma, Periyar & Perunthalivar for most of us to come up to this level. Even I think the same as you rightly said, (யதா யதாஹி தர்மஸ்ய)as all the 3 were born one such.
Ours is too an inter-caste, inter-religious marriage. I too live in Bangalore & never came across any body asking for the caste (luckily… my parents are role model to me as even their’s is an intercast one. So I could have blinked).
you should check with the caste chavunists living in Gulf. As Sharuk said similarly, the Arabies kick the chavunism out of these miserable folks.
hi rajesh,
excellent article rajesh. congrats.
சபாஷ் கருந்தேள்! நீங்க ஒரு நல்ல விமர்சகர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்! கட்டுரையின் ஆரம்பத்தை வைத்து நீங்கள் பெரியாரை எங்கே திட்டப்போகிறீர்களோ என்று அஞ்சினேன். நல்லவேளை ஒரு தன்னிகரில்லா தனிப்பிறவிக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிநீர்கள்!
டியர் ராஜேஷ்,
அவரின் திருமணம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றா?
வர்ணாஸ்ரம தர்மம் என்பது எவன் எந்த தொழிலை செய்கிறானோ அவன் அந்த சாதி என்று இருக்கவேண்டுமே ஒழிய அவன் பிறப்பை வைத்து சாதியை தீர்மானிக்க கூடாது! 4 பிரிவுகளுமே இன்று உலகம் முழுக்க பொருந்தும்.
சத்ரியன்( அரசு மற்றும் ராணுவ வேலைகள் செய்பவ்ர்கள்)
பிராமணன்(அறிவியல், கணிதம் தொடர்பான தொழில் செய்பவர்கள்)
வைஸ்சியர்கள்(இறக்குமதி,ஏற்றுமதி வியாபாரிகள்)
சூத்திரர்கள்( விவசாயதொழில் செய்பவர்கள்)
இந்த நான்குவகையான மனிதர்களின் செயல்பாடுகளே ஒரு நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும்! ஆனால் பேராசை காரணமாக வர்ணாஸ்ரம தர்மம் என்பது பிறப்பு ரீதியானது என்றும், உயர்ந்தது, தாழ்ந்தது என்ற கோட்பாடுகளை கொண்டும் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது.
எனக்கு குடியரசு கட்டுரைகள் வேண்டும் எங்கு கிடைக்கும் நண்பரே !
Rajes பெரியாரைஃபுரிந்துகொண்டதனாலயும்ஃசாதிவெறிக்குஃசவுக்கடிஃகொடுத்ததனாலயும்ஃதங்கள்மீதானஃமரியாதைஃஒருஃபடிஃகூடியிருக்கிறது.
நன்றி கோவிந்த். பெரியார் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இஃன்ப்ளுயன்ஸ்.
hi its nice to read. if possible can you send me KUdiyarasu magazines?
பெரியாரைப் பற்றிய சரியான புரிதல் கொண்டவர்களை காணுதல் அரிது. உங்கள் பார்வையும், பதிவும் தெளிவாக, சுருக்கமாக அவர் கொள்கையை விளக்குகிறது.நீங்கள் கூறியது போல் 1925ல் இதைப் பேசிய, சாதீயத்தின் ஆணி வேரையே ஆட்டி வைத்த வீரியம் மிகு மானுடன் அவர். அவரின் கருத்துக்களின் வீச்சு இன்னும் பல நூற்றாண்டு நீடிக்கும். நல்ல பதிவு. மகிழ்ச்சி.
நாசர்