Pirates of the Caribbean: On Stranger Tides (2011)–English

by Karundhel Rajesh May 22, 2011   English films

ஆதோ கீர்த்தனாரம்பத்திலே . . . ஒரு இருபத்தைந்து வருடங்கள் முன்னால், டிம் பவர்ஸ் என்பவர், வேலை மெனக்கெட்டு, ஒரு நாவல் எழுதியதிலிருந்து, இந்த பைரேட்ஸ் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. இளமையின் நீரூற்று என்னும் ஒரு ஊற்றைத் தேடிச் செல்வதே இந்த நாவலின் கதை. அதன்பின்னர், பவர்ஸ், வால்ட் டிஸ்னிக்கு அந்த நாவலை விற்றும் விட்டார். வழக்கப்படி, அக்கதையை, ஒரு திரைப்படமாக எடுக்க வால்ட் டிஸ்னி முடிவு செய்தது. பீரியட். அப்படிப் படமாக எடுக்கவேண்டுமென்றால், யாரைப் போட்டால் படம் விற்கும்? ஆரம்பி பைரேட்ஸ் ஸீரீஸின் அடுத்த பாகம். போடு ஜானி டெப்பை. தொடங்கு ஷூட்டிங்கை. இதிலிருந்து, முதல் மூன்று பாகங்களின் இயக்குநர் கோர் வெர்பின்ஸ்கி விலகிவிட்டதால், கட்டாயம் இந்தப் படம் மொக்கையைப் போடப்போகிறது என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். காரணம், மம்மி ஸீரீஸின் மூன்றாம் பாகத்தை ஆவலுடன் சென்று பார்த்து, கொலைவெறியோடு வீடு திரும்பிய அனுபவம் ஒன்று ஏற்கெனவே இருந்தது. அந்த மூன்றாம் பாகத்தில், ஸ்டீவன் ஸாம்மர்ஸ் இல்லாமல், ராப் கோஹன் இயக்கியிருந்தார். அது மட்டுமில்லாமல், இந்த வாரம் இதைக் கிழித்தோம்; அடுத்த வாரம் அதைக் கிழிப்போம் என்றெல்லாம் தனது ப்ளாக்கில் தொடர்ந்து எழுதி, எதிர்பார்ப்பை எகிறவைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அந்த மூன்றாம் பாகத்தைப் போல ஒரு மொக்கைக்கடியை நான் பார்த்துப் பல வருடங்களே ஆகியிருந்தன. எனவே, அதே அனுபவம், இந்தப் பைரேட்ஸ் நான்காம் பாகத்திலும் எனக்குக் கிடைத்துவிடும் என்று அஞ்சி, இந்தப் படத்தைப் புறக்கணிக்கலாம் என்று முடிவு செய்திருந்தபோதுதான், காதலரின் விமர்சனம் வந்தது. அதில் இப்படம் நன்றாக இருந்தது என்று அவர் சொல்லியிருந்தது, முதல் நம்பிக்கையை அளித்தது. ஏனெனில், காதலரின் டேஸ்ட்டும் எனது டேஸ்ட்டும் கிட்டத்தட்ட, பேரலல் ட்ராக்கில் பயணிப்பவை. அதேபோல், தோர் விமர்சனத்திற்குப் பின்னூட்டிய விஸ்வா, படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையை அளித்திருந்தார். எனவே, வீட்டின் அருகில் இருக்கும் முகுந்தா தியேட்டருக்கு நேற்று இரவு சென்றோம்.

போன்ஸ் டி லியோன். இது, ஃப்ரெஞ்ச் சென்ட் அல்ல. புகழ்பெற்ற ஒரு ஸ்பானிஷ் கேப்டன். இளமையின் நீரூற்றைக் கண்டுபிடித்து, தனது வயதை இளமையாக்கிக்கொள்ளவேண்டும் என்று பலகாலம் அலைந்துதிரிந்தவர். இளமையின் நீரூற்றைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, ஃப்ளோரிடாவைக் கண்டுபிடித்துத் தொலைத்துவிட்டார் என்று இவரைப்பற்றிய கதைகள் உண்டு. இந்தப் போன்ஸ் டி லியோன் தான், இப்படத்தின் மைய இழை. இக்கதை நடக்கும் காலத்திலிருந்து இருநூறு வருடங்களுக்குமுன் வாழ்ந்த இந்த போன்ஸ் டி லியோனிடம், இரண்டு கோப்பைகள் இருந்தன. இந்தக் கோப்பைகளினால், இளமையின் நீருற்றின் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு கோப்பையில், கடல்கன்னி ஒன்றின் கண்ணீரை ஒரு சொட்டு கலந்து, அந்தக் கலவையை ஒரு மனிதன் குடித்தால், தனக்கு எதிரில் இருக்கும் இன்னொருவனின் வாழ்நாளில் எஞ்சியுள்ள வருடங்கள், இவனுக்குக் கிடைக்கும். ஒரே நிபந்தனை என்னவெனில், போன்ஸின் இன்னொரு கோப்பையில் நிரம்பியுள்ள தண்ணீரை அந்த இன்னொரு மனிதன் குடிக்க வேண்டும். நிகழ்காலம். லண்டனில், தனது பெயரை உபயோகப்படுத்தி, கப்பலில் ஆள்சேர்ப்பு வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு ஃப்ராடுப்பயலைப் பற்றிய தகவல் அறிந்து, அவனைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்குச் செல்கிறான் ஜாக் ஸ்பேரோ. அங்கு போய்ப் பார்த்தால், இந்தக் கில்லாடி வள்ளல் வேலையைச் செய்துகொண்டிருப்பது, அவனது முன்னாள் காதலி ஆஞ்சலிகா. இந்த இளமையின் நீரூற்றைக் கண்டுபிடிப்பதற்காக, ப்ளேக் பியர்ட் (கருந்தாடி) என்ற கொடூரமான கடல் கொள்ளையனின் கப்பலில் சேர்ந்து, தொலைந்துபோன அவனது மகளே ஆஞ்சலிகா என்று அவனை நம்பவைத்து (கடைசியில், இந்தப் பொய்யே உண்மையாகிவிடுகிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா), அவனது மரணம், ஒற்றைக்கால் மனிதன் ஒருவனால் சீக்கிரம் நிகழப்போகிறது என்பதால், அவனை நீண்ட காலம் வாழவைக்க ஆஞ்சலிகா திட்டமிடும் விபரம் ஜாக்குக்குக் கிடைக்கிறது. இந்த சைக்கிள் கேப்பில், இங்கிலாந்தின் குண்டு மன்னர் ஜார்ஜ் பணித்ததன் பேரில், இதே இளமையின் நீரூற்றைத் தேடி, இங்கிலாந்தின் படையுடன் பயணம் மேற்கொள்வது, ஜாக்கின் பழைய எதிரியும், நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானவனுமான ஹெக்டார் பார்போஸா. இந்த இரண்டு அணியினரைத்தவிர, ஸ்பானியப் படை ஒன்றும், இந்த நீரூற்றை அழிப்பதற்காகச் சென்றுகொண்டிருக்கிறது.

ஆஞ்சலிகாவினால் கடத்தப்படும் ஜாக், ஆஞ்சலிகா சார்ந்துள்ள ’The Queen Anne’s Revenge’ என்ற கப்பலுக்குக் கொண்டுவரப்படுகிறான். ஜாக்குக்கு அந்த நீரூற்றின் இடம் தெரியுமாதலால், ஜாக்கை உயிருடன் வைத்திருக்கும் நிர்ப்பந்தம், கருந்தாடிக்கு. இப்படியாக, மூன்று அணிகள் ஒன்றையொன்று போட்டியிட்டுக்கொண்டு, இளமையின் நீரூற்றுக்குச் செல்கின்றன.

இதன்பின் என்ன ஆனது? கருந்தாடியினால் நீண்டகாலம் உயிர்வாழ முடிந்ததா? என்ற கேள்விகளுக்கு, 3டி திரையில் படத்தைப் பாருங்கள்.

படத்தின் ஆரம்பம் முதல், திரைக்கதையைத் தூக்கி நிறுத்துவது, ஜானி டெப்பின் சுவாரஸ்யமான நடிப்பே. ஜாக்காக இவர் திரையில் அறிமுகமாவதிலிருந்து, இறுதிக் காட்சிவரை, நமது உள்ளத்தைக் கொள்ளைகொண்டுவிடுகிறார். முந்தைய மூன்று பாகங்களிலாவது ஆர்லாண்டோ ப்ளூம் மற்றும் கெய்ரா நைட்லி ஆகிய இருவரும் இருந்ததால், ஜாக் இல்லாத காட்சிகளில், அவர்கள் கொஞ்சமாவது கதையைச் சுவாரஸ்யப்படுத்தினர். ஆனால், இப்படத்தில், வேறு யாருமே இல்லாத நிலையில், படத்தின் அத்தனை காட்சிகளிலும் (நம்ம ரஜினி படங்கள் போல), ஜாக் இருந்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம். இருந்தாலும், அலுக்காமல் அவரது சேஷ்டைகளைப் பார்க்கமுடிகிறது. வழக்கமான ஜாக்கின் அத்தனை கோமாளித்தனங்களும் இதிலும் உண்டு. ஆங்கிலம் பேசும் வடிவேலு போலவே ஜாக் விடும் உதார்கள், படு காமெடி. இதில், ஒரு மிகச்சிறிய காட்சியில், ஜாக்கின் தந்தையும் வந்துபோகிறார்.

வில்லன் கருந்தாடியாக, இயான் மெக்‌ஷேன். இவர் வசனம் பேசும் பல காட்சிகளில், நம்மூர் பி.எஸ். வீரப்பாவை எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். இருந்தாலும் கூட, இவரைப் பார்த்தால், பயம் வரவில்லை. ஒருவித நகைச்சுவை உணர்வே மிகுந்திருந்தது. கூடவே, பார்போஸாவாக, ஜெஃப்ரி ரஷ். முதல் பாகத்தில், பார்போஸாவைப் பார்த்தால் எப்படி டக்கராக இருந்ததோ, அதற்கு நேர் மாறாக, இதில் அவரைப் பார்த்தாலும் சிரிப்பு வந்தது. இரண்டாம் பாகத்தில் அறிமுகமான டேவி ஜோன்ஸ் (பில் நை), இந்த ஸீரீஸின் நிஜமான வில்லன் என்று சொல்லலாம். அந்த அளவு குரூரம், வேறு எந்த வில்லனாலும் இந்த ஸீரீஸில் காட்டப்படவில்லை. எனவே, இப்படத்திலும், சரியான வில்லன் கதாபாத்திரம் இல்லை. பீனலோபி க்ருஸுக்கு இதில் பெரிதான வேலை எதுவும் இல்லை. வழக்கமான ஜாலி ஹீரோயின் பாத்திரம் என்பதால், அவரைப்பற்றிச் சொல்ல ஏதுமில்லை. படத்தில், கடல் கன்னிகள் சம்மந்தப்பட்ட சில காட்சிகள் வருகின்றன. அவை, படு மொக்கை. கதைக்குச் சற்றும் சம்மந்தமில்லாத ஒரு ட்ராக்காக அது இருப்பதால், சுவாரஸ்யம் சிறிதும் அதில் இல்லை.

இவ்வளவு குறைபாடுகள் இருந்தபோதிலும், படம் போரடிக்காமல் சென்றது. படத்தின் இரண்டாம் பாதி, படு வேகம். முதல் பாதி, கொஞ்சம் தொய்வு. படத்தின் பிரம்மாதமான அம்சமாக எனக்குப் பட்டது, இதன் பின்னணி இசை. நமது ஹான்ஸ் ஸிம்மர். குறிப்பாக, கருந்தாடியின் கப்பல் அறிமுகமாகும் காட்சியில், அட்டகாசமான பின்னணி இசையை கவனியுங்கள். இதே இசை, படத்தின் பல இடங்களில் வருகிறது. படு கம்பீரமான கோர்வை இது. கவனித்துப் பாருங்கள்.

வழக்கமான பைரேட்ஸ் படங்களைப்போலவே, இதுவும் இம்மி பிசகாமல் எடுக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். இயக்குநர் மாறினாலும், திரைக்கதையாசிரியர்கள் மாறாததால், படம் பரவாயில்லை. கட்டாயம், கேப்டன் ஜாக் ஸ்பாரோவுக்காக இதைப் பார்க்கலாம். படத்தில் 3டி தேவையேயில்லை என்பது நன்றாகப் புரிகிறது.

On Stranger Tides படத்தின் ட்ரெய்லர் இங்கே.

  Comments

20 Comments

  1. நண்பரே,

    கடற்கன்னிகள் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. கருந்தாடி கூட ஒக்கேதான். மொத்தத்தில் என்னை இப்படம் மிகவும் திருப்தி செய்தது.

    Reply
  2. கருந்தேளாரே,

    ஒரே வார்த்தை – ஜாக் ஸ்பார்ரோ ராக்ஸ். வருக்காகவே அடுத்த பாகமும் அதற்க்கு அடுத்த பாகமும் வந்தால் நன்றாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

    அம்மாவின் ஆட்சியில் தொடர்ந்து நல்ல படங்களாக வருவதை கவனித்தீர்களா என்று என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு சூப்பர் கேள்வி கேட்டார் . அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    கிங் விஸ்வா
    தமிழ் சினிமா உலகம் – ப்ரீஸ்ட் – கல்லறை உலகம் விமர்சனம்

    Reply
  3. கருந்தேளாரே,

    அடுத்த வாரம் குங்க்பு பாண்டா (பாகம் ரெண்டு), அதற்க்கு அப்புறம் எக்ஸ் மென் (பஸ்ட் கிளாஸ்) என்று ஒரே கொண்டாட்டம்தான்.

    பை தி வே, கட்டழகியும் காட்டு டார்ஜானும் என்றொரு படம் கோவையில் ரிலீஸ் ஆகியுள்ளதாம். இது போன்ற படங்களை எல்லாம் இங்கே சென்னையில் ரிலீஸ் செய்யாமல் பலர் சதி செய்கின்றனர். நீங்க பார்த்தாச்சா?

    கிங் விஸ்வா
    தமிழ் சினிமா உலகம் – ப்ரீஸ்ட் – கல்லறை உலகம் விமர்சனம்

    Reply
  4. @ காதலரே- எனக்கு, இரண்டாம் பாகம் மிகத்திருப்தி. முதல் பாகம், கொஞம் டல்லாக இருந்தது போல் ஒரு பீலிங்கி. மற்றபடி, கீழே விஸ்வா சொல்வது சரி. ஜாக் ராக்ஸ் 🙂 ..

    @ விஸ்வா – கட்டழகியும் காட்டு டார்ஜானும் படம், அனேகமாக ஜிபி தியேட்டரில்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன் 🙂 .. அங்குதான் இந்த மாதிரி படமெல்லாம் வரும் 🙂 . . பெங்களூரில் வந்திச்சின்னா கட்டாயம் பார்ப்பேன் 🙂 . . மீ வெயிட்டிங் ஃபார் குரங்குப்பூ பாண்டா ஆல்ஸோ

    அம்மாவின் ஆட்சியில் நல்ல படங்களா? அடடே.. இது நல்ல கருத்தாக இருக்கிறதே 🙂 . .யுவர் ஃப்ரெண்ட் ராக்ஸ் ஆல்ஸோ 🙂

    Reply
  5. நல்ல பதிவு அண்ணா,
    Johnny Depp-க்காகவே அவர் நடிக்கும் படங்களெல்லாம் சென்று பார்ப்பதுண்டு…
    ஆனால் பைரேட்ஸ் ஓவ் த கரிபியன்- 3 எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை.. இந்தப் படம் வித்தியாசமான கதை ட்ரேக் என்பதால் கண்டிப்பாக போய் பார்க்க வேண்டும் என்றிருக்கிறேன்!

    Reply
  6. sampath: அப்பு அது 1970’s la வந்த Arnold படம்

    Reply
  7. மூன்று தலைகளிடமிருந்து கருத்து வந்து விட்டதால் நான்காம் பாகத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

    Reply
  8. ஆஹா…..எனக்கு இன்னும் பார்க்க சான்ஸ் கிடைக்கல தேளு.எனக்கும் 2ம் பாகம்தான் பேவரிட்.3ம் பாகத்துல கிராபிக்ஸ் செம தூளா இருக்கும்..but கொஞ்சம் நீளம்.அப்போ 3Dல பாக்குறதுக்கு பதிலா சும்மாவே பாக்கிறது பெட்டர் என்கிறிங்களா? (ஏற்கனவே 3Dல “Clash of Titans பார்த்து நொந்து போனவன் நான்..)

    Reply
  9. இதுல கதையெல்லாம் வித்தியாசமா இல்லை. பட், ஆக்ஷன் சீக்வென்ஸ் பட்டைய கிளப்பும். ஜானி டெப்பை நம்பினோர் கைவிடப்படார் 🙂

    @ சம்பத் – 🙂 ஹீ ஹீ அப்புடியும் சொல்லலாம் 🙂 . . பெரிய ஆளா இருப்பீங்க போலயே 🙂

    @ லக்கி – 🙂 கட்டாயம் பார்க்கலாம் தல . . போங்க. . போயி பாருங்க 🙂

    @ பாரதி – எஸ். இதுல த்ரீ டி – no use. டோட்டல் வேஸ்ட். டூ டியே பார்க்கலாம். கிளாஸ் ஆப் த டைட்டான்ஸ்? 🙂 வெல்கம் டு த க்ளப் 🙂

    Reply
  10. Fast Five,Priest,Rio,Water for elephants,Bridesmaids ஆகிய படங்களின் விமர்சனங்களையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் கருந்தேள் ப்ளாகின் வெறித்தனமான வெறியர்களில் ஒரு வெறியன்……….

    Reply
  11. // அப்பாலிக்கா, உங்க டிவிடி, ஒரு ‘பிரபலத்துக்கு’ குரியர் ஆகப்போவுது . உங்களுக்கு உரிய க்ரெடிடோடு ‘அங்கே’ சேர்க்கப்படும்//

    இது நீங்க அங்க போட்டிருந்தா கமெண்ட்…அத இங்க மீள்கமெண்டிடுவது தப்பில்லைன்னு நெனைக்கிறேன்…..

    நா என்னமோ சொந்தமா எடுத்த படங்கள சொல்ற மாதிரி “உரிய க்ரெடிடோடு”ன்னு சொல்லியிருக்கீங்களே…நானே நெட்ல இருந்து சுட்டது…….
    அது எல்லாருக்கும் பிரயோஜனப்பட்டா சரிதான்….நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவும் தப்பில்லை….அந்த டிவிடிகள் உங்கள் சொத்து…அதுனால இந்த மாதிரி க்ரெடிட் – டெபிட் கிறது சங்கோஜமாக இருக்கிறது…

    Reply
  12. kolandha – Rio & Water for elephants – ப்ளீஸ் ரெபர் மிஸ்டர் காதலர். மத்தபடி, என்னைத் தூண்டிவிடும் உங்களது சதிச்செயல் பலிக்காது என்பதனை மிகுந்த ஜாலியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்காகவே ஒரு தடாலடி விமர்சனம் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. இன்று நள்ளிரவு வெளியிடப்படும். கபர்தார்.

    Reply
  13. அல்லாரும் ஜானி டெப், ஜானி டெப்ன்னு சொல்றீங்களே…அவுரு பேரத்தான் டாஸ்மாக் சரக்குக்கு வெச்சிருகிறதா பேசிக்கிறாங்க….அப்புடியா…..

    Reply
  14. அப்புறம், எனக்கு இந்தப் படங்களைத் தந்தவர் என்ற முறையில், ‘அங்கே’ உங்களைப் பற்றிச் சொல்லப்படும். ஒரு பிரபலம், சங்கோஜப்படுவதா? கர்வம்தான் படவேண்டும். பதிவுலக சரித்திரத்தில், ஆல்ரெடி புகழ்பெற்று விளங்கும் ஒரு பிரபல பதிவர் இப்படியெல்லாம் சொல்லப்படாது என்று பதிவுலக சூத்திரத்தின் இரண்டாம் அத்தியாயம் தெளிவாகச் சொல்கிறதே உமக்குத் தெரியாதா?

    Reply
  15. // இன்று நள்ளிரவு வெளியிடப்படும்//

    காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
    அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
    துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
    ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
    அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்???

    Reply
  16. //அல்லாரும் ஜானி டெப், ஜானி டெப்ன்னு சொல்றீங்களே…அவுரு பேரத்தான் டாஸ்மாக் சரக்குக்கு வெச்சிருகிறதா பேசிக்கிறாங்க….அப்புடியா…..
    //

    அது, ஜானி டெப்பின் பெரியப்பா ஜானி வாக்கர். ஆனால், சீக்கிரமே உமது வாய் முகூர்த்தப்படி, டெப்பின் பெயரிலும் ஒன்று வரட்டுமே.

    //அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்???
    //
    எனக்குத் தற்புகழ்ச்சி மற்றும் முகஸ்துதி என்பவை அறவே பிடிக்காத விஷயங்கள்

    Reply
  17. ணா..

    உங்க ஆபிஸ்ல இன்னும் FB ban பண்ணிதான இருக்கு.??
    (இத நெசமா வருத்தம் பீறிட டைப் அடித்துக் கொண்டிருக்கிறேன்..
    வேற இந்த குதூகல மனநிலையும் என்னை ஆட்கொள்ளவில்லை என்பதை ஐயம் திரிபற தெரிவித்துக்கொள்கிறேன்..)

    Reply
  18. ஆம். IE 6 தவிர வேறு ப்ரௌசர் இல்லாததால், இன்னும் அந்த ban அப்படியே உள்ளது. இருந்தாலும், ‘தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் மறுபடி வெல்லும்’ என்பதனையும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.

    Reply
  19. // இன்னும் அந்த ban அப்படியே உள்ளது //

    என்னால சோகமா டைப் அடிக்கிற மாதிரி நடிக்க கூட முடியல…அவ்வளவு வெகுளி…..ban அப்படியே உள்ளதா…..அய்யா….ஜாலி……

    // தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் //
    கவ்வட்டும்…..கவ்வட்டும்…நல்லா கவ்வட்டும்….கண்டபடி சகல இடங்களையும் கவ்வட்டும்……..கொஞ்ச நாளைக்காவது ஜனங்க நிம்மதியா இருக்கட்டும்….

    Reply
  20. FB யில் வரமுடியாவிடில் என்ன… அதான் கருந்தேள் இருக்கிறதே.. பல பதிவுகள், வரிசை கட்டிக்கொண்டு தயாராக இருக்கின்றன. ஒவ்வொன்றாக வெளியிடுவேன்.

    Reply

Join the conversation