Princess: சவூதி அரேபிய இரும்புத்திரையும் ஒரு இளவரசியும்
சவூதி அரேபியா பற்றி நமக்கு என்ன தெரியும்? பேச்சு வழக்கில் பரவும் சில செய்திகள் மட்டுமே இதுவரை நமக்குத் தெரியும். அவை என்னென்ன? முதலாவது, திருட்டுக்குக்கூட வழங்கப்படும் மரணதண்டனை. இரண்டாவது, எந்தவித கொண்டாட்டத்துக்கும் வழியில்லாத ஊர் அது. மூன்று. அரேபியர்கள், வட இந்தியர்களை விட மோசமான ஆணாதிக்கவாதிகள். இதுதவிர, ஓரிரண்டு சிறுவிஷயங்கள் ஏதாவது தெரிந்திருக்கலாம். என்னளவில், அங்கே வேலை கிடைத்தும் போக மறுத்த சில நண்பர்களைத் தெரியும். அதே சமயம், அங்கேயே தங்கிப் பணிபுரியும் சில நெருங்கிய நண்பர்களும் உண்டு. அங்கே நான் சென்றதில்லை என்பதால் என்னால் சவூதி அரேபியாவைப் பற்றிக் கருத்துக் கூற இயலாது. ஆனால், நான் சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்று, சவூதி அரேபியா பற்றி இணையத்தில் பல தகவல்களைத் தேட வைத்தது. படிக்கப்படிக்க என்னுள் இனம்புரியாத கோபத்தை உண்டுபண்ணிய புத்தகம் இது. கோபம் ஏன் என்று கட்டுரையின் உள்ளே படித்தால் புரியும்.
சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் – ஒரு இளவரசி. இந்த இளவரசியுடன் நெருங்கிப் பழகிய ஒரு அமெரிக்க எழுத்தாளர். பல வருடங்களாக இருவரும் நெருங்கிய நட்புடன் விளங்கியதால், அந்த இளவரசி, அப்பெண்ணிடம் தனது குடும்பத்தைப் பற்றியும், ஒரு இளவரசியாக வாழ்ந்து வருவதன் பிரச்னைகள் பற்றியும், ஒரு பெண்ணாக அவர் நடத்தப்படும் முறையையும், இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் இந்த அமெரிக்க எழுத்தாளரிடம் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார். பகிர்வது மட்டுமல்லாமல், இந்த விஷயங்களை எழுதவும் சொல்கிறார். இவை எழுத்தில் பதிவுசெய்யப்பட்டால்தான் வெளியுலகுக்கு சவூதி அரேபியாவின் இரும்புத்திரைக்குப் பின்னால் நடக்கும் அசிங்கங்கள் தெரியவரும் என்பது அந்த இளவரசியின் கூற்று. உண்மை வெளியே வந்தால், அவரது உயிருக்கே ஆபத்து என்பதும் அந்த இளவரசிக்குத் தெரியாமலில்லை. இருந்தும், இத்தனை வருடங்கள் அனுபவித்த துயரங்களும் மன உளைச்சல்களும் அவரை இந்த முடிவுக்குத் தள்ளுகின்றன. இந்தப் புத்தகம் வெளிவந்தாலாவது தன்னைப்போன்ற பெண்களின் நிலைமை வெளியுலகுக்குத் தெரிந்து, பிற நாடுகளால் சவூதி அரேபியா நிர்ப்பந்திக்கப்படலாம் என்பது அந்த இளவரசியின் நோக்கம்.
அந்த எழுத்தாளரும், இந்த இளவரசியின் பெயரை மாற்றுகிறார். இளவரசியின் மற்ற விபரங்களையும் சற்றே மாற்றுகிறார். அதன்பின் ஒரு புத்தகத்தை அவர் எழுதி வெளியிட, புத்தகம் இன்ஸ்டன்ட் ஹிட் ஆகிறது. இப்படியுமா பெண்களை ஆடுமாடுகளைப்போல் அடிமைகளாக நடத்துவார்கள் என்று இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லாம் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். இந்தப் புத்தகம் சவூதி அரேபியாவில் தடை செய்யப்படுகிறது. உலகெங்கும் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. இதனைத்தொடர்ந்து, இதே இளவரசியைப் பற்றி இன்னும் இரண்டு புத்தகங்கள் எழுதி வெளியிடுகிறார் அந்த எழுத்தாளர். அவையுமே பெஸ்ட் செல்லர்கள் தான்.
புத்தகங்கள் வெளிவந்தபின், அவைகளைப் படிக்க நேர்ந்த சவூதி அரச பரம்பரையினரால் அந்த இளவரசி கண்டுபிடிக்கப்பட்டாரா என்றால், இல்லை என்ற பதில் வருகிறது. காரணம், சவூதி அரச பரம்பரையில் இருக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை, 21,000. இவர்களில், அரச பரம்பரையினரின் உறவினர்களும் உண்டு. இந்த உறவினர்களைக் கணக்கெடுக்காமல், இந்த அரச பரம்பரை உருவான மன்னரின் வாரிசுகளையும், அவர்களது வாரிசுகளையும் மட்டுமே கணக்கெடுத்தாலும், மொத்தம் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆகவே, அந்தக் குறிப்பிட்ட பெண்மணியைக் கண்டுபிடிப்பது மிகக்கடினம் என்ற பதில் இவற்றை எழுதிய எழுத்தாளரிடமிருந்து வருகிறது.
இந்தப் புத்தகம் 1995ல் வெளிவந்தவுடன், மோனிகா அல் அமஹானி (Monica Al Amahani) என்ற இன்னொரு பெண்மணி, இந்த ஆசிரியரின் மீது வழக்குத் தொடர்ந்தார். காரணம், அவர் எழுதிய ‘Cinderella in Arabia’ என்ற புத்தகத்தைத் திருடியே இந்த princess புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்பது. ஆனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த வழக்கைத் தொடர்ந்த மோனிகா அல் அமஹானி, இன்றுவரை இவரது புத்தகத்தைத் திருடியே Princess புத்தகம் உருவாகியிருக்கிறது என்றும், உண்மையில் அப்படி ஒரு இளவரசி இல்லவே இல்லை என்றும், இதெல்லாம் அப்புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் பணம் சம்பாதிப்பதற்காகச் செய்த திருட்டு வேலை என்றும் சொல்லிவருகிறார்.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்படும் சம்பவங்களின் நம்பகத்தன்மையைக் குறித்தும் சில விவாதங்கள் இணையத்தில் நடைபெற்று வருகின்றன.
சரி. பீடிகை போதும். இப்புத்தகத்தை எழுதிய பெண் எழுத்தாளரின் பெயர், ஜீன் சாஸ்ஸன் (Jean Sasson). புத்தகத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.
மகாராஜா அப்துல் அஸீஸ் (Abdul-Aziz). சவூதி அரேபியாவை ஸ்தாபித்த மனிதர். 1932ல், பிரிந்து கிடந்த நஜ்த் (Najd) மற்றும் ஹெஜாஸ் (Hejaz) பிராந்தியங்களை மீட்டு, ஒருங்கிணைத்து, அப்துல் அஜீஸ் உருவாக்கிய நாடே சவூதி அரேபியா. இவரது பிரதான எதிரிகளான அல் ரஷீத் என்ற குழு, இவரது சிறு பிராயத்தில், இந்தப் பிராந்தியங்களை சிறைபிடித்திருந்தது. அப்போது நாட்டை விட்டு அப்துல் அஸீஸ் விரட்டப்பட்டார். அதன்பின் சில ஆண்டுகள் கழித்து ஒரு படையைத் திரட்டி, இழந்த நாட்டைப் படிப்படியாக மீட்டார் (முதலில் ரியாத் – 1902ல்; அதன்பின் நஜ்த் – 1922ல்; கடைசியாக ஹிஜாஸ் – 1925).
இவர் போர்தொடுத்து மீட்டிருந்த பிராந்தியங்களில் உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற (அக்பரின் வழியில்) பல பெண்களைத் திருமணம் செய்துகொண்டார் அப்துல் அஸீஸ். இந்தப் புத்தகத்தின்படி, மொத்தம் 300 மனைவிகள் இவருக்கு உண்டு என்று தெரிகிறது (ஆனால், இணையத்தில் எவ்வளவு தேடிப்பார்த்தும், அதிகாரபூர்வமான எண்ணிக்கை 22 என்றே இருக்கிறது. ஒருவேளை மற்ற மனைவியர் அதிகாரபூர்வ பட்டியலில் இல்லாமல் இருந்திருக்கலாம்). இந்த மனைவியரின் மூலம் இவருக்குப் பிறந்த குழந்தைகள் மொத்தம் ஐம்பது ஆண்கள் மற்றும் எண்பது பெண்கள் (புத்தகத்தின்படி). இவர்களில், அப்துல் அஸீஸின் மனம்கவர்ந்த மனைவியான ஹஸ்ஸா ஸுதைரி (Hassa Sudairi) என்ற அரசிக்குப் பிறந்த மகன்களே அப்துல் அஸீஸின்அதிகாரபூர்வமான வாரிசுகள். அவர்களே சவூதி அரேபியாவின் ஆட்சியில் நேரடிப் பங்கு வகிக்கிறார்கள்.
இந்த மகன்களில், ஃபாஹ்த் என்று அழைக்கப்பட்ட மன்னரான ஃபாஹ்த் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் (சௌத் பரம்பரையைச் சேர்ந்த அப்துல் அஸீஸின் மகனான ஃபாஹ்த்) என்பவர் மன்னராக இருந்த காலத்தில் (1995) இக்கதை எழுதப்பட்டிருக்கிறது.
(சவூதி அரேபியாவின் மன்னர்கள், இதுவரையில் அப்துல் அஸீஸின் பிள்ளைகளாகவே இருந்துவந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிற நாடுகளைப்போல் ஒரு மன்னர், அதன்பின் அவரது மகன், அதன்பின் அந்த மகனின் மகன் என்று இல்லாமல், ஒரு மன்னரின் மகன்கள் ஒவ்வொருவராக மன்னர்களாக ஆனதே சவூதி அரேபியாவின் மன்னராட்சி முறை. ஆனால் இதிலிருந்த பிரச்னை என்னவெனில், அண்ணன் இறக்கும்வரை தம்பி காத்திருக்க நேர்வதே. இந்த முறையின்படி, தற்போதைய மன்னரான அப்துல்லாஹ், 1924 ல் பிறந்தும், 2005ல், அவரது எண்பத்தி ஓராம் வயதில்தான் மன்னராக முடிந்தது. தற்போது அவருக்கு 87 வயது. 81ம் வயதுவரை இளவரசராகவே வாழ்ந்துவந்திருக்கிறார் இவர்).
இப்படி, முதல் மன்னரான அப்துல் அஸீஸின் நேரடிப் பரம்பரையில் வந்த ஒரு இளவரசியே இக்கதையின் நாயகி. அவரது பெயர், சுல்தானா என்று இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருகிறது. சுல்தானாவின் சிறுவயது நினைவுகள், புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன. சுல்தானாவின் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை, மொத்தம் பதினொன்று. அவர்களில், பத்து மகள்கள் மற்றும் ஒரே ஒரு மகன். சுல்தானாவின் தந்தைக்கு மொத்தம் நான்கு மனைவிகள்.
இதன் காரணமாகவும், சவூதி அரேபியாவில் ஆண்பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டுவந்த முக்கியத்துவம் காரணமாகவும், சுல்தானாவுடன் பிறந்த இளவரசனான அலிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அலியும், தனது தந்தையைப்போல், பிற பெண்களைக் குப்பைக்கு சமமாக நடத்தி வந்தான். பெண்கள் என்ன ஆசைப்பட்டாலும் அது அங்கே நடக்காது என்பதால், சவூதியில் பெண்கள் வாயே திறக்காமல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அலி என்ன கேட்டாலும் கிடைக்கும். அதேசமயம், அவனுடன் பிறந்த பெண்கள் என்ன கேட்டாலும் அது கிடைக்காது. அவர்களின் தரப்பில் அவர்களது தந்தையே முடிவெடுப்பது வழக்கம். ஆகவே, தங்கக் கூண்டுக்குள் அடைபட்ட ஒரு பறவையின் வாழ்க்கையையே இளவரசி சுல்தானா வாழ்ந்துவருகிறாள்.
சிறுவயதில், மன்னர் சௌத்தின் கொடுங்கோல் ஆட்சியை எப்படி அவரது சகோதரர் ஃபைசல் முடிவுக்குக் கொண்டுவந்தார் என்பதையும், அதற்காக அவர்களது மந்திராலோசனை நடைபெற்றபோது அதனை ஒட்டுக்கேட்டதையும் சொல்கிறாள் சுல்தானா. அதுவே அவளது சிறுவயதில் நடந்த முக்கியமான சம்பவமாக இருக்கிறது. காரணம், பெண்கள் இக்கூட்டத்தைக் கவனிப்பது தெரியவந்தால், கொடும்தண்டனை கிடைக்கும்.
இதன்பின்னர், சுல்தானா மெல்ல வளர்கிறாள். தனது மூர்க்கமான சகோதரன் அலியை அவ்வப்போது சில ரசமான சம்பவங்களால் அழ வைக்கிறாள். அவளது சகோதரிக்குத் திருமணம் நடக்கிறது. யாருடன்? அறுபத்தி இரண்டு வயதான ஒரு வியாபாரியின் மூன்றாம் மனைவியாகத் திருமணம் செய்துதரப்படுகிறாள் சுல்தானாவின் சகோத்தரி ஸாரா. திருமணத்துக்குப்பின், அவனது பாலியல் சித்திரவதையின் காரணமாக ஒரு முறை தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்படுகிறாள். இதன் காரணமாக தலாக் (விவாகரத்து) நடந்து, தந்தையின் வீட்டுக்கே திரும்பிவருகிறாள். ஃப்ரான்ஸில் கலை படிக்க ஆசைப்பட்ட ஒரு இளவரசியின் கனவு இவ்வாறாக ஒரு கொடூர முடிவை அடைகிறது. அதன்பின் ஸாராவுக்குக் கிடைத்ததோ இருண்ட, தனிமையான, வெறுமையான வாழ்வுதான்.
இதன்பின் தனது சகோதரிகளுடன் ஐரோப்பா செல்கிறாள் சுல்தானா. சகோதரிகளில் ஒருவரின் புதிய வீட்டை அலங்கரிக்க சில பொருட்கள் வாங்கும் பொருட்டு (என்னதான் துயரங்களை அனுபவித்தாலும், பணத்துக்குப் பஞ்சமே இருந்ததில்லை என்று அவ்வப்போது சொல்கிறாள் சுல்தானா. ஆனால், எங்கும் நிறைந்திருந்த பணத்தாலும் வசதிகளாலும் அவளுக்கு எந்த சந்தோஷமும் கிடைத்திருக்கவில்லை). அப்போது அவளது சகோதரனாலும் அவனது நண்பனாலும் எப்போது பார்த்தாலும் மூர்க்கமாகக் கையாளப்படுகிறாள். அதனை எதிர்க்கவும் செய்கிறாள்.
ஐரோப்பாவில் இருந்து வந்ததும், அவளது தாயாரின் மரணம். அதனைத்தொடர்ந்து, உடனடியாக ஒரு பதினாறு வயதுப் பெண்ணை அவளது தந்தை மணந்து, சுல்தானாவின் வீட்டுக்கு அழைத்துவந்து, அவளது தாயின் இடத்தில் வைக்கிறார். அந்தப் பெண்ணை விட ஓரிரு வயதே குறைவாக இருக்கும் சுல்தானாவுக்கு இது கடும் துயரத்தை ஏற்படுத்துகிறது. சாகும்வரை தந்தையின் கோபத்துக்கு ஆளாகிப் பரிதாபகரமாக இறந்த தாய்க்கு எந்த மரியாதையும் கொடுக்காமல், உடலின்பத்துக்காக இப்படி ஒரு திருமணத்தைச் செய்துகொண்ட தந்தையை அடியோடு வெறுக்கிறாள் சுல்தானா.
இளவரசி சுல்தானாவின் தோழிகள் இருவர் அறிமுகம் ஆகிறார்கள். சவூதியில் பெண்களின் அடிமை வாழ்வில் அலுப்படைந்து, பிற ஆண்கள் சிலருடன் ஊர்சுற்றும் இவர்கள், இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பிடிபட்டு, அவர்களில் ஒரு பெண், அவளது தந்தையால், உறவினர்கள் அத்தனை பேரின் முன்னிலையில் ஒரு கொடூரமான தண்டனைக்கு ஆளாகி இறக்கிறாள். இந்தத் தோழிகளுடன் ஓரிரு நாட்கள் வெளியே சென்ற குற்றத்துக்காக, அந்த இளம் மனைவி உடனடியாக விவாகரத்து செய்யப்பட்டு அவளது இடத்துக்கே திரும்பி அனுப்பப்படுகிறாள். இதுவும் சுல்தானாவின் இயலாமையையும் கோபத்தையும் அதிகப்படுத்துகிறது.
சுல்தானாவின் மாளிகையில் பணிபுரியும் மார்ஸி என்ற பிலிப்பினோ பெண்ணின் கதை அடுத்து வருகிறது. மார்ஸியும் அவளது தோழியும் பணிபுரிய சவூதி அரேபியா வருகிறார்கள். அங்கே, பெண்களுக்கு நிலவும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, தனது தோழி எங்கிருக்கிறாள் என்பதே மார்ஸிக்குத் தெரிவதில்லை. கஷ்டப்பட்டு அவளைக் கண்டுபிடிக்கும் மார்ஸிக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அவளது தோழி பணிபுரியும் வீட்டில் உள்ள எஜமானரின் இரண்டு மகன்களின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத்தான் அந்தத்தோழி அலைத்துவரப்பட்டிருக்கிறாள் என்பதை மார்ஸி தெரிந்துகொள்கிறாள். சவூதியின் கடுமையான சட்டங்களில், பெண்களுடன் பழகுவதோ காதலோ உறவு கொள்வதோ மரண தண்டனைக் குற்றங்கள். ஆகவே, இப்படிப்பட்ட வெளிநாட்டுப்பெண்கள் சவூதி ஆண்களின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்கிறோம். மார்ஸியின் தோழியோடு சேர்த்து, இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் அந்த வீட்டில் இதற்காகவே அமர்த்தப்பட்டிருக்கிறாள். இரண்டு வருட ஒப்பந்தம் முடிந்து, உடைந்த மனதோடு மார்ஸியின் தோழி பிலிப்பைன்ஸ் செல்கிறாள்.
இதன்பின்னர், சுல்தானாவுக்கும் திருமணம் நிச்சயிக்கிறார் தந்தை.
இதற்குப்பின் என்ன ஆனது? புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
உலகெங்கும் பெரும் வரவேற்பு பெற்ற ஒரு புத்தகம் இது. இப்புத்தகத்துக்குப் பின்னர், சுல்தானாவுக்குப் பிறந்த மகள்களைப் பற்றி ‘Daughters of Arabia‘ என்று ஒரு புத்தகமும், அதன்பின் மறுபடி சுல்தானாவைப் பற்றி ‘Desert Royal‘ என்று மற்றொரு புத்தகமும் எழுதியிருக்கிறார் ஜீன் சாஸ்ஸன். அவையுமே வெற்றிகரமாக விற்பனையான புத்தகங்கள்தான்.
சவூதி அரேபியாவில் பெண்கள் அனுபவிக்கும் துயரங்களைப் பற்றி சுல்தானா விரிவாகச் சொல்லியிருந்தாலும், குர்ஆனில் அப்படி விளக்கப்பட்டிருக்கவில்லை என்றும், இது, பெண்களை அடிமைப்பொருளாக வைத்துக்கொள்ள ஆண்கள் செய்த சதி என்றும் விரிவாக விளக்குகிறாள். குர் ஆனில் இருந்து அங்கங்கே உதாரணங்களும் கொடுக்கிறாள். எப்படி அவை சவூதி ஆண்களால் தவறாக அர்த்தம் செய்யப்பட்டு அதனால் பெண்கள் துன்புற நேர்கிறது என்பதும் இப்புத்தகத்தில் சுல்தானாவால் சொல்லப்பட்டிருக்கிறது.
சுல்தானா யார்? அவளது நிஜப்பெயர் என்ன? என்பது இன்று வரை விவாதிக்கப்படும் ஒரு மர்மம். ஜீன் சாஸ்ஸன் இன்றுவரை சுல்தானாவின் அடையாளத்தைப் பகிரங்கப்படுத்தவில்லை. காரணம், அடையாளம் தெரிந்தால் சுல்தானாவுக்கு மரணதண்டனை நிச்சயம் என்று அவர் சொல்லிவருகிறார். அதேசமயம், இப்புத்தகத்தில் உள்ள நிகழ்வுகள் உண்மையில் நடந்திருக்கவில்லை; அவையெல்லாம் சாஸ்ஸனின் கற்பனை மட்டுமே; சவூதி அந்த அளவு கொடூர நாடு இல்லை என்றும் சிலர் சொல்லிவருகிறார்கள். முடிவெடுக்கும் பொறுப்பை இதைப்படிக்கப்போகும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.
சவூதி அரேபியாவில் வாழ்ந்திருக்கும் நண்பர்கள் (செ.சரவணக்குமார் கவனிக்கவும்) இந்தக் கட்டுரையில் உள்ளவற்றைப் பற்றி அவர்களுடைய கருத்தை தெரிவித்தால் மகிழ்வேன்.
பி.கு – இப்புத்தகம் தமிழில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழில் இது வரை இப்புத்தகம் மொழிபெயர்க்கப்படவில்லை என்றால், நான் இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்க்க விரும்புகிறேன்.
Abdul Aziz Picture taken from here
like
அந்த புத்தகத்தை தமிழில் மொழி பெயருங்கள் தல…படிக்க ஆவலாக இருக்கோம்,
மற்றபடி இவைகள் எந்தளவிற்கு உண்மை எனபது அங்கு உள்ள நண்பர்கள் யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்,
@ Denim – இந்த விஷயங்களைப் பற்றி அங்குள்ள நண்பர்கள் தான் சொல்லவேண்டும். அவர்களது கருத்தை எதிர்பார்க்கிறேன். பொறுத்திருந்து பார்க்கலாம்.
சவுதியிலிருந்து வேலையைவிட்டு துபாய்க்கு வந்த நண்பர்கள் சொல்லும் அனுபவங்களை கேட்டடாலே சவுதியை நினைத்தால் பயப்பட வைக்கும். இந்தபுத்தம் உண்மையான சம்பவங்களாகவே தோன்றுகிறது. இஸ்லாமியர்களின் புனிததலம் அமைந்துள்ள நாடானதால் அதன் புனிததன்மையை காப்பாற்ற கடுமையான சட்டங்கள் இருப்பது உண்மைதான்.
நீங்க புத்தகத்தை முதல்ல மொழிபெயர்த்துத ஒரு டிராஃப்ட் காப்பியை உடனே அனுப்பி வைங்க….:))
மறக்காம அமெரிக்கா எழுத்தாளர்கிட்டேருந்து காப்பி ரைட்ஸ் வாங்கிடுங்க :)))
@ நாஞ்சில் – தகவலுக்கு நன்றி. என்னாது காப்பிரைட்டா? அது வாங்காம ரிலீஸ் பண்ணிருவோமா? நாங்கெல்லாம் ஜென்டில்மேன் ஆச்சே 🙂
காஸ்ட்ரோ கார்த்தி – Desert Flower என்ற படம் பத்தி எழுதியது நியாபகம் வருது. என்ன அங்க இருக்குற விஷயங்களில் 70%மாவது இந்தியாவில் பெண்களுக்கு வேறு வடிவுல நடப்பதா தோணுது. குறிப்பா விதவிதமான மன ரீதியான தாக்குதல்கள் – இன்னும் சொல்லபோனா character assassination, சொல்லிகிட்டே போகலாம். நம்ம தலைமுறை கொஞ்சம் நம்பிக்கை அளிக்குது.
——————–
// உலகெங்கும் பெரும் வரவேற்பு பெற்ற ஒரு புத்தகம் இது. இப்புத்தகத்துக்குப் பின்னர், சுல்தானாவுக்குப் பிறந்த மகள்களைப் பற்றி ‘Daughters of Arabia’ என்று ஒரு புத்தகமும், அதன்பின் மறுபடி சுல்தானாவைப் பற்றி ‘Desert Royal’ என்று மற்றொரு புத்தகமும் எழுதியிருக்கிறார் ஜீன் சாஸ்ஸன். அவையுமே வெற்றிகரமாக விற்பனையான புத்தகங்கள்தான் //
ஜான் பெர்கின்ஸ் confessions of an economic hitmanன்னு ஒண்ணு எழுதி, நல்ல விற்பனை ஆனவுடன் தொடர்ந்து அதே டைப்புல எழுத ஆரம்பிச்சு – அந்த புத்தகங்களில் சில விஷயங்களின் மீது இருந்த நம்பகத்தன்மை குறையைத் தொடங்கிருச்சு. இதே அதே மாதிரி டைப்பா இல்லாட்டி மகிழ்ச்சியே. காத்துள்ள போது தூத்துறது மனித இயற்கையே.
அருமையான் பதிவு
வரலாற்றில் பொதுவாக பல் அரச குடும்பங்களில் நிகழும் சம்பவங்களுக்கு சவுதியும் விதி விலக்கு அல்ல.இந்தியாவிலும் இப்படி எல்லாம் ஆட்டம் போட்ட அரசர்கள் காஅணாமல் போய்விட்டார்கள்.உலகில் கொஞ்சம் மிச்சம் மீதி அரச குடும்பங்களும் சில இக்காலத்திலும் இப்படியே இருப்பது கொடுமை. எனினும் வெளிப்படையான் விமர்சனங்களை சவுதி அரச குடும்பம் ஏற்காது.
புத்த்கம் படிக்க வேண்டும்.
நன்றி
When will you release the Tamil Version of this book?
This comment has been removed by the author.
Dear Sir,
may know when will the tamil version of this book released? as we want to read full of this book in Tamil eagerly.
நண்பா,
அவசியம் இதை நீங்கள் மொழிபெயர்க்க வேண்டும்
these things are not limited to Saudi…. Jimmy Saville a very popular TV presenter in UK.. is now being investigated on sexual abuse… UK is not a country with Iron Curtain…. and then how did this happen for 40yrs…. so countries and religion is all myth for these violences… its all about power and money behind all this… u would have read abt the French man In US … he was an UN guy who tried to rape an waiter in hotel… men do these things everywhere in every country… but when it comes to saudi and gulf… westerners try to hide their atroctires behind blaming others… this Jimmy saville was an employ of BBC and he has abused so mnay children….http://en.wikipedia.org/wiki/Jimmy_Savile_sexual_abuse_scandal