Psycho (2019) – Tamil

by Karundhel Rajesh February 4, 2020   Cinema articles

தான் ஒரு ஆட்டெர் (உண்மையில் அவர் ஒரு flawed auteur தான்) என்று ஒருவேளை மிஷ்கின் நினைத்தால் அது அவருக்கு ஆபத்து. அவரை அது இழுத்துக் கீழே தள்ளிவிடும். மாறாக, இயல்பாகவே மிஷ்கின் இருந்துகொண்டிருந்தால் தமிழ் சினிமாவுக்கு அதைவிட நல்லது வேறு எதுவும் இல்லை. தமிழின் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக மிஷ்கின் மாறிப் பல்லாண்டுகள் ஆகின்றன. அவரால்மட்டுமே சிறப்பாக எடுக்கப்படக்கூடிய கருக்களை எளிதில் இனம்கண்டுகொண்டு, தனக்கே உரிய பாணியில் படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார். என்னளவில், உலகத்தின் பல்வேறு பகுதியில் வாழக்கூடிய மக்களும் ரசித்துப் பார்க்கும் அளவு சிறப்பான படங்களைத் தமிழில் இருந்து எடுக்கக்கூடிய ஒரே இயக்குநராக நான் மிஷ்கினையே சொல்வேன். அவருக்கு அந்தத் திறனும், ரசனையும், ஆழமான அனுபவ அறிவும் உண்டு என்றே கருதுகிறேன். அப்படிச் சில படங்களை மிஷ்கின் எடுக்கக்கூடிய காலகட்டம் வந்துவிட்டது என்றும் நினைக்கிறேன். உலகத் திரை அரங்கில் தமிழகத்தை அடையாளம் காட்டக்கூடிய அப்படிப்பட்ட சிறந்த மிஷ்கினின் படங்களுக்காகக் காத்திருக்கிறேன் – மிஷ்கின் பற்றிய கட்டுரை. karundhel.com. 2017 May.

தமிழில் வந்துகொண்டிருப்பவை, மிகப்பெரும்பாலும் கமர்ஷியல் படங்கள்தான். வணிகத்திரைப்படங்கள் என்று அழைக்கப்படும் இவைகள், கலைப்படங்கள் என்று அழைக்கப்படும் ஆர்ட் படங்களில் இருந்து பெரும்பாலும் வேறுபட்டிருப்பவை. இவற்றுக்கு இடையே இருக்கும் வித்தியாசங்கள் உங்களுக்கே தெரியும். கமர்ஷியல் – மசாலாப் படங்கள் பற்றி இன்னும் ஆழமான எனது கட்டுரையை இங்கே படிக்கலாம். படித்துவிட்டு வாருங்கள். பின்னர் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம்.

அதேசமயம், தமிழின் பிரச்னை என்ன என்றால், ஒரு கமர்ஷியல் இயக்குநர் சற்றே கலைப்படங்களை நினைவுபடுத்தும்படியான காட்சிகள் வைத்துவிட்டால், உடனே அவர்களை இந்தியாவின் கலைப்பட இயக்குநர்களின் பட்டியலில் வைத்துவிடுவதுதான். பாலசந்தர், விஸ்வநாத், மணி ரத்னம் என்று இந்தப் பட்டியலை நாம் எழுதமுடியும். அதில் மிஷ்கினும் தன்னையே சேர்த்துக்கொண்டிருக்கிறார் என்று இந்தப் படம் பார்த்ததும் தோன்றியது.

மிஷ்கின் பற்றி ஏற்கெனவே பலமுறை விபரமாகவும் எழுதியிருக்கிறேன். மிஷ்கினின் படங்கள் – ஒரு விரிவான விமர்சனம்.

இதையும் ஒருமுறை படித்துப் பாருங்கள். அப்போது இந்த சைக்கோ விமர்சனத்தில் மிஷ்கின் பற்றி எழுதப்பட்டிருக்கும் கருத்துகள் இன்னும் தெளிவாகப் புரியலாம்.

Spoiler alert.

இப்போது சைக்கோ படத்தை எடுத்துக்கொள்வோம். சைக்கோவின் கரு என்ன? ஒரு சைக்கோ கொலைகாரன், வரிசையாகக் கொலைகள் செய்கிறான். போலீஸ்துறையில் அவனைப் பிடிக்கமுடியாமல் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும்போது, பார்வையற்ற ஒரு இளைஞனும், கைகால்கள் இயங்காமல் இருக்கும் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியான பெண்ணும் இணைந்து அவனைக் கண்டுபிடிக்கிறார்கள். இப்போது, சைக்கோ பற்றி இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம். சைக்கோ படம் ஒரு கலைப்படமா? அல்லது கமர்ஷியல் படமா? அவசியம் அது கமர்ஷியல் படம்தான் இல்லையா? அப்படியென்றால், ஒரு கமர்ஷியல் படத்தைக் கலைப்படம் போல எடுக்கலாமா? எடுக்கலாம். அதற்கென்று எந்த விதிமுறையும் இல்லை. கலைப்படம் என்பது, ஆழ்ந்த அழகியல் கூறுகளுடன், இயக்குநரின் மனதில் தோய்ந்த கருத்துகளை வைத்து, எந்த விதமான காம்ப்ரமைஸ்களும் இல்லாமல் எடுக்கப்படும் படம். உதாரணமாக, அலஹந்த்ரோ ஹோடரோவ்ஸ்கியின் El Topo படத்தை எடுத்துக்கொள்வோம். இந்தப் படத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள். அதேபோல் அவரது Holy Mountain படமும். இந்த இரண்டு படங்களும் பார்த்தால், மிஷ்கின் சைக்கோவில் வைத்திருக்கும் க்ளைமேக்ஸ் போன்ற வேறு சில கருத்துகள் கிடைக்கும்.

இதோ ஹோடரோவ்ஸ்கியின் படங்களைப் பற்றிய ஒரு விஷுவல். இதையும் பாருங்கள். மிக வித்தியாசமான விஷுவல்களின் மூலமும், பலவிதமான குறியீடுகளின் மூலமும் தான் நினைத்தவற்றைப் படங்களாக எடுத்தவர் ஹோடரோவ்ஸ்கி. இந்த வீடியோ பார்த்தால், குறியீடுகள் என்பவற்றைப் படத்தில் வைப்பது எத்தனை கடினம் என்று புரியும். இஷ்டத்துக்கு சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் தோன்றியவற்றை வைத்துவிட்டால் அவை குறியீடுகள் அல்ல என்பதும் புரியும்.

இப்போது மிஷ்கினுக்கு வந்தால், அவரது படங்களிலும் சமீபமாகப் பல்வேறு குறியீடுகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. யுத்தம் செய் படத்தில் இருந்து இது தொடங்கியது. அதில் ரஷோமான் படத்தின் reference வரும். கூடவே ஆங்கிலப் புத்தகம் ஒன்றும் இறுதியில் காணப்படும். இதுவே பின்னர் புத்தர், zen என்றெல்லாம் வெளிப்பட ஆரம்பித்தது. அவைகளைப் பற்றிய வரிகளும் காட்சிகளும் படத்துக்கு சம்மந்தம் இல்லாமல் துருத்திக்கொண்டும் தெரிய ஆரம்பித்தது. இதை இன்றுவரை காணலாம்.

சைக்கோ அவசியம் ஒரு கலைப்படம் கிடையாது. அது ஒரு வணிகப்படமே. இருந்தும், சைக்கோவின் மிஅப்பெரிய பிரச்னை, ஒரு கலைப்படத்துக்கே ஆன சில அம்சங்களை இந்தப் படத்தில் மிஷ்கின் வைக்க நினைத்து, இதனாலேயே கலைப்படமும் இல்லாமல் வணிகப்படமும் இல்லாமல் ஒரு திரிசங்கு சொர்க்க நிலையில் படம் மாட்டிக்கொண்டு, படம் பார்க்கும் பெரும்பாலானவர்களைப் பதம் பார்த்ததுதான். ஒரு சைக்கோவை வைத்து, மிஷ்கினின் யுத்தம் செய் பாணியில் எடுக்கப்படும் படம், அட்லீஸ்ட் யுத்தம் செய் அளவுக்காவது இருக்கவேஎண்டாமா? இத்தனைக்கும் சென்ற வருடம்தான் தமிழின் மிகச்சிறந்த சைக்கோ திரில்லர்களில் ஒன்றான “ராட்சசன்” வெளியாகியிருக்கிறது. கூடவே தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதெல்லாம் அவசியம் கொரியன், ஜாப்னீஸ் படங்கள் பார்க்க ஆரம்பித்தாயிற்று. இந்தக் காலகட்டத்தில் வந்து, துளிக்கூட சுவாரஸ்யமே இல்லாமல் ஒரு படத்தை எடுத்துவைத்துவிட்டு, “அன்பை ரசியுங்கள்.. லாஜிக்கே தேவையில்லை.. Suspension of Disbelief என்பதே முக்கியம்” என்றெல்லாம் பேட்டி கொடுக்க மிஷ்கின் ஒருவரால் மட்டுமே முடியும்.

ஒரு உதாரணம் கொடுக்கிறேன். படத்தின் நாயகன், கௌதம். அவனுக்குப் பார்வையில்லை. படத்தின் நாயகி, தாஹினி என்ற ஆர்.ஜே. அவளது குரல் அவனுக்குப் பிடிக்கிறது. அவளையே காதலிக்கவும் ஆரம்பித்துவிடுகிறான். அவள் பின்னாலேயே (சாரி. முன்னாலேயே) சுற்றுகிறான். அவள் எங்கெங்கு செல்கிறாளோ, அங்கெல்லாம் அவன் முன்னாலேயே வந்து நின்றுகொள்கிறான். ஏற்கெனவே சிலமுறைகள் (மூன்று என்று நினைவு) அவனிடம் சொல்லிப் பார்த்துவிட்டதாகவும், ஆனால் பயனே இல்லாமல் மீண்டும் இப்படியே சுற்றுகிறான் என்றும் தனது தந்தையிடம் தாஹினி சலித்துக்கொள்கிறாள். இப்படி ஹீரோ, ஹீரோயினின் பின்னாலேயே அவளுக்குப் பிடிக்காமலேயே சுற்றுவது Stalkingதானே? பார்வை இல்லாமல், கை கால் இல்லாமல், வேறு எதுவுமே இல்லாமல் இருந்தாலுமே அதை நாம் எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? உலகிலேயே இந்தியாவில்தான் இந்த stalking பிரச்னை மிக அதிகம் என்று நமக்கே தெரியும். மிஷ்கின் வைத்தால் மட்டும் அது நியாயமா? கூடவே, ஒரு திருமண நிகழ்ச்சியில் தாஹினி வருகையில் அங்கே ஏற்கெனவே கௌதம் இசையை conduct செய்துகொண்டு இருக்கிறான். அவனைப் பார்த்த கடுப்பில் பார்வையில்லாத கௌதமை அவமானப்படுத்திவிடுகிறாள் தாஹினி. உடனடியாக வெகுண்டு எழும் சிங்கம்புலி, அவனை ஒரு நாற்காலியில் அமர வைத்து, கையில் ஒரு வயலினையும் கொடுத்து, “இந்தா.. பாடு.. உன் காதலைப் பாடுடா” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார். உடனடியாக கௌதம், இதயம் முரளி போல, அதில் வரும் “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” பாடல் போலவே அதே இளையராஜா இசையமைத்த இன்னொரு பாடலைப் பாடுகிறான். இதைக் கேட்கும் நாயகிக்கு ஒரு க்ளோஸப். அதில் அவள் உருக ஆரம்பிப்பது தெரிகிறது.

80களின் படங்களில் வரும் அதே காட்சியை வைப்பது.இதுதான் மிஷ்கினின் குறியீடா? இந்தக் காட்சி முடிந்ததுமே நாயகி, கௌதமிடம் தன்மையாகப் பேசுகிறாள். கூடவே ஒரு போட்டியும் வைக்கிறாள். அவள் மறுநாள் செல்லும் இடத்தை சரியாகக் கண்டுபிடித்து கௌதம் வரவேண்டும். அப்படிச் செய்தால் அவளது பிறந்தநாளுக்கு கௌதம் வரலாம். இதுவுமே அதே 80களின் காட்சிதானே? இதை எடுக்க மிஷ்கின் எதற்கு? கேட்டால், இதில் ஒரு குழந்தைத்தனம், கலை, அன்பின் வெளிப்பாடு என்றெல்லாம் முழ நீளத்துக்குப் பேட்டிகளும், மிஷ்கின் ரத்தத்தின் ரத்தங்களின் வெறிகொண்ட கருத்துகளும் வரும். இந்தக் காட்சியே எதற்கு என்று பார்த்தால், கதை துவங்கும் புள்ளி அடுத்த காட்சியில் வருகிறது. அதற்காக (??!!?!?).

இப்படி ஆரம்பிக்கும் படத்தில், மிகச்சில காட்சிகளே நம் கவனத்தைக் கவர்கின்றன. போலீஸ் அதிகாரி கமலாதாஸின் வீட்டுக்கு கௌதம் செல்லும் காட்சி அதில் ஒன்று. அதேபோல் அவனைத் தேடி கமலாதாஸ் வரும் காட்சியும். இவைகளைத் தவிர, வில்லனின் அறிமுகம், அதைத்தொடர்ந்து படத்தில் காட்டப்படும் முதல் பிணம், போலீஸீன் விசாரணை, இரண்டாம் கொலை – இவைகளில் எதுவுமே புதிதாக இல்லை என்பது மட்டுமல்ல, துளிக்கூட சுவாரஸ்யமே இல்லாமல், மிக மிக lazy writing என்றே சொல்லும்படி எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ரீதியில் யோசித்துப் பார்த்தால், இந்தப் படத்தில் காட்சிகளை விட, சில ஷாட்களே நம் கவனத்தைக் கவர்கின்றன. கமலாதாஸ், Bone Collector படத்தைப் போலவே, போலீஸ் அலுவலகத்துக்குள் கௌதமை அனுப்பி, இருளில் ஃபைல்களைத் தேடச்சொல்லும் காட்சியில், ஒரு இடத்தில் கௌதமை மேலே டார்ச் அடிக்கச்சொல்லி, அங்கே இருக்கும் தன் படத்தைப் பார்க்கும் ஷாட் அவைகளில் ஒன்று.

படம் முழுக்கவே இப்படித்தான் செல்கிறது. போலீஸால் எதுவுமே கண்டுபிடிக்க முடிவதில்லை என்பதை நம்பும்படியாகவும் மிஷ்கின் எடுக்கவில்லை. கூடவே, காட்சிகள் மிக மிக லேசாக, எந்தவிதமான விறுவிறுப்பும் இல்லாமலேயே பெரும்பாலும் செல்கின்றன. ஆனால், இப்படிப்பட்ட காட்சிகளுக்கும், மிஷ்கினின் ரசிகர்களால் கண்களை மூடிக்கொண்டு பல்வேறு சப்பைக்கட்டுகள் கட்டவும் முடியும். அதையும் பலவாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். என் கேள்வியெல்லாம், எந்தவிதமான சார்புநிலையும் இல்லாமல் இப்படத்தைப் பார்த்தாலேயே இந்த ஓட்டைகள் புரிந்துவிடும். அப்படி இருக்க, யாரைத் திருப்திப்படுத்த இப்படி எழுதுகிறார்கள் என்பதே.

படத்தின் வில்லன் ஏன் சைக்கோவாக மாறினான்? எல்லா சைக்கோப் படங்களிலும் வில்லனுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் வரும். நல்லவேளையாக இந்தப் படத்தில் அது இல்லை. இது அவசியம் பாராட்டத்தக்கதுதான். இந்த வில்லனுக்கு ஒரு காரணம் இருந்தாலும், அந்தக் காரணம் வசனங்களிலேயே வந்துவிடுகிறது. அது என்ன காரணம் என்பது பரவலாக அனைவருக்குமே தெரிந்திருக்கும். ‘அவன் கையடிச்சான்’ என்று ரேச்சல் டீச்சர் அலறுவதைப் பார்த்திருப்பீர்கள். கையடிப்பதைக் கண்டுபிடித்து, தனக்கே உரிய ஒரு சைக்கோத்தனத்துடன் அது தப்பு என்று ஆணித்தரமாக ரேச்சல் டீச்சர் நிறுவுகிறார். இதில், தாஹினிக்கு முன்னால் வில்லனும் ரேச்சல் டீச்சரும் அதே சம்பவத்தை அரங்கேற்றும் நாடகமும் படத்தில் உண்டு. ரேச்சலாக நடித்திருக்கும் ப்ரீதம் சக்கரவர்த்தி, அவசியம் நன்றாகவே நடித்திருக்கிறார். இருந்தும், இந்த நாடகக் காட்சிகள், க்ளைமேக்ஸ், அதில் தாஹினியின் கருத்து (அம்மா, குழந்தை), அதைப் பார்த்து மனம் திருந்தும் வில்லன்… எதுவுமே ஒட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம், முதலில் கூறியதுதான். படம் கலைப்படம் இல்லை. கமர்ஷியல் படம். அதில் வந்து, ஒரு கலைப்படத்துக்கே ஆன சில காட்சிகளை வலிந்து திணித்தால் என்ன ஆகும்? கூடவே, இத்தனை கொலைகள் செய்த கொலைகாரனை மன்னித்துவிடுவது, அதைப் பார்த்து அவன் திருந்துவது எல்லாம் மிகப்பெரிய விஷயங்கள். அவற்றுக்கான மிக மிக அழுத்தமான காட்சிகள் வேண்டும். ஆளவந்தானின் க்ளைமேக்ஸில் நந்து அழுவது எத்தனை நம்பமுடியாமல் இருந்ததோ அதைவிட இது நம்பமுடியாமல் இருக்கிறது. இதுவுமே மிக மேலோட்டமான எழுத்தே. இவ்வளவு எளிதில் மன்னித்துவிடமுடியுமா தாஹினி? இறந்தவர்களின் குடும்பத்தார்களை நினைத்துப் பார்த்தீர்களா? அதுசரி. ஒரே பாட்டில் உங்களை விடாமல் stalk செய்த ஹீரோவையே நம்பிவிட்டீர்களே? உண்மையில் இப்படி மிஷ்கின் ஆரம்பத்தில் வைத்தது ஒரு குறீயீடு. காரணம், பின்னால் க்ளைமேக்ஸில் இப்படி வரப்போகிறது என்று படம் பார்ப்பவர்களுக்கு foreshadowing செய்கிறார் (??!!?). இதுதான் படத்தின் மிகப்பெரிய “குறியீடு”.

இவை மட்டும் இல்லாமல், என்னதான் படத்தை நம்பவேண்டும் என்று பிடிவாதமாக அமர்ந்தாலுமே, ஒரு கமர்ஷியல் படமாக சைக்கோவை நம்பிக்கொண்டு இருந்தாலும் எடுபடாத காட்சிகள் பல இருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் சோஷியல் மீடியாவில் மீம்கள் போட்டே குவித்துவிட்டார்கள். உதாரணம், கௌதம் கார் ஓட்டுவது. இதை அட்டகாசமான, விறுவிறுப்பான, பார்ப்பவர்கள் நம்பும்படியான காட்சியாக எடுக்க மிஷ்கினால் அவசியம் முடியும். ஆனால் பின்னணியில் பாட்டு, கலைப்படக் கூறுகள் என்று போட்டுத் தள்ளிவிட்டார் என்றுதான் சொல்வேன். அதேபோல் போலீஸ்காரர் முத்துராமன் பழைய பாடல்கள் பாடுவது, வில்லனிடம் மாட்டியபின்னர், அக்கடா என்று படுத்துக்கொண்டு, ரொம்ப டயர்டா இருக்கும்மா (??!??) என்று சொல்வது, அப்போது தனது குடும்பம் பற்றி ஹீரோயினிடம் சொல்வது, ந்தா கழுத்தை வெட்டப்போறாய்யா… எதுனா பண்ணு என்ற நேரத்தில் இன்னொரு பழைய பாடல் பாடுவது…. இதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம் – லாஜிக்கே இல்லாத மிகச் சோம்பலான எழுத்து. இஷ்டத்துக்கு எழுதிவிட்டு, அன்பு, ஞானம், அத்வைதம், புத்தர், Suspension of Disbelief என்று பேசுவது. அஞ்சாதே, யுத்தம் செய் படங்களில் இருந்த விறுவிறுப்பு இதில் துளிக்கூட இல்லாமல், தான் ஒரு auteur என்று முழுக்க முழுக்கத் தன்னையே கண்மூடித்தனமாக நம்ப ஆரம்பித்துவிட்ட மிஷ்கினின் அலட்சியம்தான் படம் முழுக்கவே தெரிகிறது (சில காட்சிகள் மற்றும் ஷாட்கள் தவிர்த்து). எனவே, கமர்ஷியலும் இல்லாமல், கலைப்படமாகவும் இல்லாமல், மிக மிக மெதுவான காட்சிகளுடன் கூடிய ஒரு படமாகவே சைக்கோ எனக்குத் தோன்றியது.

இந்தப் படத்திலும் மிஷ்கினின் டிரேட்மார்ட் குறியீடுகள் இல்லாமல் இல்லை. கௌதம், புத்தர் (என்ன? இதிலுமா? ஆமாம். இதிலும்தான்), அங்குலிமாலா, கமலாதாஸ், zen, கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் எழுத்தாளர்கள் என்று படம் முழுக்கவே குறியீடுகள் மயம். அதேபோல், மிகச்சரியாக, இதற்கு முந்தைய மிஷ்கினின் படங்களில் எப்படி அவர் வலிந்து திணித்து வைத்தாரோ, அதேபோல் இதிலும் பக்காவாக இந்தக் குறியீடுகள் படத்தைப் பின்னால் இழுத்து ப்ரேக் போடுகின்றன.

படத்தில் இன்னொரு பிரச்னை, பல காட்சிகளில் வரும் மிக மிக அதீதமான, jarring இசை. இவ்வளவு இசைக்கான அழுத்தமான காட்சிகளே படத்தில் இல்லை. எனவே, பாஆஆஆம்ம்ம்ம்ம்ம் என்று இளையராஜாவின் இந்த இசை ஒலிக்கையில், எதுக்கு இந்த பில்டப் என்றே கேட்கத் தோன்றுகிறது. இந்தப் பிரச்னை மிஷ்கினின் முந்தைய படங்களிலும் உண்டு. மேலே மிஷ்கின் பற்றிய அலசலில் இதனை முன்னரேயே எழுதியிருக்கிறேன்.

நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள். மிஷ்கினின் படங்களைப் பாராட்டிய நான் தான் இங்கே விமர்சனம் வைக்கிறேன். எனது முந்தைய கட்டுரைகளிலுமே, மிஷ்கினின் படங்களின் பிரச்னைகள், பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்களை விரிவாக எழுதியே இருக்கிறேன். மிஷ்கினைப் பற்றி மிக மிக விரிவாக critique எழுதியவர்களில் நானும் ஒருவன் தான். இந்த டிஸ்க்ளய்மர் ஏன் என்றால், மிஷ்கினிடம் இருந்து நல்ல படம் வந்தால் எனக்கு மிக மிக மகிழ்ச்சி. அதற்கு அவர் qualified தான். ஆனால் ‘தனது பேட்டிகளில் சைக்கோ பற்றி அவர் ஜஸ்டிஃபை செய்து பேசுவது கொஞ்சம் பயமாகவே இருக்கிறது’ என்று ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததுபோலதான் நானும் உணர்கிறேன். பழையபடி அட்டகாசமான படங்களை மிஷ்கின் எடுக்கவேண்டும். எடுப்பாரா? சத்தியமாக பயம்தான்.

நமது தளத்தில் மிஷ்கின் படங்களின் விமர்சனங்கள் – Mysskin”s films from Karundhel.com

  Comments

4 Comments

  1. நீங்கள் குறிப்பிடும்
    Logic
    Kill bill படத்திற்கும்
    பொ௫ந்துமா?!?!

    Reply
  2. மேலும்
    தமிழ் சினிமா வரலாற்றில்
    மிகச்சிறந்த Thriller
    என்று நீங்கள் குறிப்பிடும்
    ராட்சசன்
    எனக்கு 1990 களில்
    ராஜேஷ் குமார்
    ஆா்னிகா நாசா்
    இவர்களின் எழுதிய
    நாவலின் ஒரு 10 %
    விறுவிறுப்பு
    பாதிப்பை கூட ஏற்படுத்தவில்லை.

    Reply
  3. உங்களுக்கு
    இசை அறிவு
    என்னை மெய் சிலிர்க்க
    வைத்து விட்டது.

    Reply
  4. உங்களுக்கு இருக்கும்
    இசை அறிவு
    என்னை மெய் சிலிர்க்க
    வைத்து விட்டது.

    Reply

Join the conversation