Queen (2014) – Hindi

by Karundhel Rajesh April 9, 2014   Hindi Reviews

எப்போதுமே தந்தை சொல்வதைக் கேட்டே நடக்கும் ஒரு சராசரி தில்லிப் பெண், திடீரென ஃப்ரான்ஸுக்கும் ஆம்ஸ்டர்டாமுக்கும் தனியாகச் சென்றால் என்ன ஆகும்?

ஹிந்தியில் ஸ்ரீதேவி நடித்து English Vinglish படம் 2012ல் வந்தது அல்லவா? அந்தப் படத்தில் பக்கா இந்தியப் பெண்ணாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, ஹிந்தி சினிமாவை 50 வருடங்கள் பின்னால் இழுத்திருந்தனர். இயக்குநர் பால்கியின் மனைவியான கௌரி ஷிண்டே இயக்கிய படம் அது. அதில் ந்யூயார்க்குக்குச் சந்தர்ப்பவசத்தில் சென்று எதுவும் புரியாமல் மாட்டிக்கொள்ளும் இந்தியப் பெண்ணாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். அவரது நடிப்பில் பிரச்னை இல்லை என்றாலும், அது வழிவழியாக இந்தியப் படங்களில் சித்தரிக்கப்படும் அதே ‘சீதை’ டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்ட படம். இரண்டாம் பகுதியில் பல காட்சிகள் அருமையானவைகளாக எடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு இருந்தும் அப்படி இல்லாமல் அந்தப் படம் போலி செண்ட்டிமெண்ட்களால் நிரப்பப்பட்டு சராசரி இந்தியத் தாய்மார்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும். அதே கதைதான் இந்தப் படமும் என்றாலும், மிக இயல்பாகக் கதையை நகர்த்தி, எந்தப் போலித்தனமும் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக இந்தியப் பெண்களிடம் ஒரு தன்மையைக் காணலாம். ஒரு காலகட்டம் வரையில் கணவன் என்னென்ன விதமாக அவர்களைத் துன்புறுத்தினாலும் அவனையே கண்கண்ட தெய்வமாக வணங்கிவந்தனர். ராமாயண காலத்திலிருந்து, இப்படிப்பட்ட போலிப் பெண்ணியவாதம்தான் இந்தியப் பெண்ணுக்கே உதாரணமாகச் சொல்லப்பட்டது. இப்போது அதில் ஒரு மாற்றம் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் எந்தவித dependencyயும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட காலத்தில்தான் இங்லீஷ் விங்லீஷ் எடுக்கப்பட்டு, பண்டைய காலத்தைச் சேர்ந்த அத்தனை ஆணாதிக்க விதிகளையும் பெண்ணின் தலையில் போட்டு, பெண்களை கற்காலத்துக்கே திரும்பிச் செல்ல வற்புறுத்தியது. அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, தற்போதைய பெண்களின் நிலையைக் கச்சிதமாகப் பேசியிருக்கிறது க்வீன்.

ராணி என்பவள் தில்லியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஸ்வீட்ஸ்டால் அதிபரின் மகள். எந்த முடிவை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்தாலும், தந்தையைக் கேட்டு அவர் சொல்படி நடப்பவள். அவளது வட்டம் மிகக்குறுகியது. ஆண்களிடம் பேசுவதெல்லாம் கனவில்கூட நினைக்கக்கூடாதது என்று நினைப்பவள். தந்தையின் நண்பரின் மகன் விஜய் ஒருமுறை இவளைப் பார்க்க, உடனேயே அவனுக்கு இவள்மேல் காதல். இருவரும் மெல்லப் பழக ஆரம்பிக்கின்றனர். திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் திருமணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னர், இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லிவிடுகிறான் விஜய். காரணம் ராணியின் பழமைவாத வாழ்க்கை. பல நாடுகளுக்கு வேலை நிமித்தமாகச் செல்லவேண்டியிருக்கும்போது, இப்படி ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அது தனக்கு ஒத்துவராது என்பது விஜய்யின் மனதில் சிறுகச்சிறுக வளர்ந்துகொண்டே வரும் எண்ணம். இதனால் விஜய் திருமணத்தை நிறுத்தும் முடிவை எடுக்கிறான். ராணியின் மனம் உடைந்து சிதறுகிறது.

சில நாட்கள் கழித்து, திருமணம் முடிந்தபின்னர் ஹனிமூனுக்கு ஃப்ரான்ஸ் & ஆம்ஸ்டர்டாம் செல்லவேண்டும் என்று எடுத்துவைத்திருக்கும் விமான டிக்கெட்டை ராணி பார்க்கிறாள். விஜய் இல்லாமல் தனியாகவே அங்கு செல்லவேண்டும் என்று அவளுக்குத் தோன்றுகிறது. இதுவரை வாழ்க்கையில் தனியாக எங்குமே செல்லாத ராணி, முதன்முறையாக அப்படிச் செல்வது, தொலைதூரத்தில் உள்ள ஒரு நாட்டுக்கு. தந்தை வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார். ஃப்ரான்ஸ் செல்கிறாள் ராணி.

ஃப்ரான்ஸிலும் ஆம்ஸ்ட்டர்டாமிலும் அவளுக்கு நடக்கும் அனுபவங்கள்தான் இந்தப் படம்.

இதுபோன்ற படங்களில் ஒரு அம்சம் அவசியம் இருக்கும். படம் ஆரம்பிக்கும்போது எப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறதோ, அதற்கு நேர் எதிரான மனநிலையில் படம் முடியும்போது அது மாறிவிடும். அதுதான் கதாபாத்திர வளர்ச்சி. மாறுதல். Transformation. அது இதிலும் இருக்கிறது. படம் ஆரம்பிக்கும்போது படுபயங்கர மொக்கையான பெண்ணாக இருக்கும் ராணி, படம் முடியும்போது மிகுந்த தன்னம்பிக்கையோடு சுயமாக முடிவெடுத்துச் செயல்படும் இந்நாளைய பெண்ணாக ஆகிவிடுகிறாள். அப்படி அவள் ஆவதற்கு என்னென்ன அனுபவங்கள் உதவின என்பதுதான் கதை.

ஃப்ரான்ஸிலும் ஆம்ஸ்ட்டர்டாமிலும் ராணி எதிர்கொள்ளும் சாகஸங்கள் அட்டகாசமாக எழுதப்பட்டு எடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட இயல்பான சம்பவங்களை ஹிந்தியில் பார்த்து வெகுநாட்களாகிவிட்டன. ஒரு உதாரணம்: ராணி சென்று தங்கும் ஹோட்டலில் யாரோ இருவர் மிகுந்த சத்தத்தோடு உறவு கொள்வது அவளுக்குக் கேட்கிறது. பயந்துவிடுகிறாள். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் ராணியிடம் பேசுகிறாள். அவள் பெயர் விஜயலக்‌ஷ்மி (Lisa Haydon) என்றும், இந்தியத் தந்தை மற்றும் ஒரு ஸ்பானிஷ்+ஃப்ரெஞ்ச் தாய்க்குப் பிறந்தவள் என்றும் ராணிக்குத் தெரிகிறது. விஜயலக்‌ஷ்மிக்கு ஒரு மகனும் உண்டு. கட்டுப்பெட்டியாக இருக்கும் ராணியின் கண்முன், அவள் எப்படி ஆக விரும்புகிறாளோ அப்படிப்பட்ட விஜயலக்‌ஷ்மி இருப்பது அவளுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளிக்கிறது. ஃப்ரான்ஸ் முழுக்க ராணியை அழைத்துக்கொண்டு சுற்றுகிறாள் அவள். இருவரும் பல சாகஸங்கள் புரிகிறார்கள். பல விஷயங்களை விஜயலக்‌ஷ்மியிடம் கற்றுக்கொள்கிறாள் ராணி. அவளது வாழ்க்கையில் முதன்முறையாக மதுவும் அருந்துகிறாள்.

பின்னர் அங்கிருந்து ஆம்ஸ்ட்டர்டாம் செல்கிறாள். செல்லும் இடம் ஒரு ஹாஸ்டல். அங்கு பலரும் சேர்ந்துதான் தங்குவது வழக்கம். இதனால் இவளது அறையில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒலெக்ஸாண்டர், ஃப்ரான்ஸைச் சேர்ந்த டிம், ஜப்பானைச் சேர்ந்த டாகா ஆகிய இளைஞர்கள் ஏற்கெனவே தங்கியிருக்கின்றனர். இப்படியெல்லாம் ரகளைகள் அவளது வாழ்க்கையில் இதுவரை நடந்ததில்லை என்பதால் பதறுகிறாள் ராணி. ஆனால் வேறு வழியில்லை. சிறுகச்சிறுக அவர்களுடன் பழகி, அவர்களின் மிக நெருங்கிய தோழி ஆகிவிடுகிறாள். அவர்களுடன் ஆம்ஸ்ட்டர்டாமில் சில சாகஸங்கள். குறிப்பாக ஒரு செக்ஸ் ஷாப்பில்.

இதற்கிடையே அங்கே ஒரு ரெஸ்டாரண்ட் முதலாளி, ராணியின் உண்ணும் பழக்கத்தைக் கண்டு டென்ஷன் ஆகி இந்திய உணவுகளைக் கண்டபடி திட்டுகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் ஒரு உணவுப் போட்டி அங்கே நடைபெறுகிறது. அவருக்கு வேறு ஆள் கிடைக்காததால் ராணியை வந்து சமைக்கச் சொல்கிறார். அவள் சமைப்பது – கொல்கொப்பே என்று அழைக்கப்படும் பானி பூரி. அது அங்கு எல்லாருக்கும் பிடிக்கிறது. பணம் கிடைக்கிறது. அப்போதுதான் ராணியின் வாழ்க்கையில் முதல் லிப் டு லிப் கிஸ் நடந்தேறுகிறது. அதுவும் ராணியே முன்வந்து.

ஒரு சமயத்தில், விஜயலக்‌ஷ்மிக்கு அனுப்பவேண்டிய ஒரு MMSஸை தவறுதலாக பழைய காதலன் விஜய்க்கு ராணி அனுப்பிவிட, அதில் அவளது பிரமாதமான ஃபோட்டோவைப் பார்த்து முதன்முறையாக தனது முடிவின்மேல் விஜய்க்கு சந்தேகம் வருகிறது. கிளம்பி ராணியைத் தேடி வருகிறான். அவனுக்குத் தகுந்த விடையை ராணி இறுதியில் அவனிடம் அளிக்கிறாள். முடிவில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழக் கிளம்புவதோடு படம் முடிகிறது.

ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கையை அட்டகாசமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் விகாஸ் பால் (Vikas Bahl). அதனால்தான் இந்தப் படம் எனக்குப் பிடித்தது. சைதாலி பார்மார், பர்வீஸ் ஷேக் ஆகியவர்களுடன் சேர்ந்து விகாஸும் திரைக்கதையை எழுதியிருக்கிறார். படத்தில் ராணியாக நடித்திருப்பது கங்கனா ரணௌத் (ராணாவத் அல்ல). கங்கனாவின் பல படங்கள் வித்தியாசமானவை. அவற்றை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்/பார்த்திருக்கலாம். 27 வயதில் இப்படிப்பட்ட versatile படங்கள் கிடைப்பது அரிதுதான். அலியா பட் (Highway) போன்று அரைகுறை நடிப்பெல்லாம் இல்லை. கச்சிதமான இயல்பான நடிப்பு இவருடையது. ஹைவேயில் ஒருவேளை கங்கனா நடித்திருந்தால் படம் வேறுமாதிரி வந்திருக்கலாம். காரணம் என்னவென்றால், க்வீனில் கங்கனாவின் பல வசனங்கள் அவரே எழுதியவை. கூடவே படத்தின் சில காட்சிகளுமே கங்கனாவால்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட creative inputs எப்போதுமே ஒரு படத்தை இன்னும் மெருகேற்றும் என்பதில் சந்தேகம் இல்லை (இந்த இடத்தில், இப்படிப் பல படங்களினுள் நுழைந்து இன்புட்கள் கொடுத்து, கதாபாத்திரத்தை செயற்கைப்படுத்தி, அதில் குறிப்பிட்ட நடிகர்/நடிகை தனியே துருத்திக்கொண்டு தெரிவது இன்னொரு வகை. அதற்கும் நான் சொல்லும் இயல்பான இன்புட்களுக்கும் சம்மந்தம் இல்லை. அப்படிப்பட்டவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய வகை இது).[divider]

கங்கனாவுக்கு அடுத்தபடியாக இந்தப் படத்தின் பெரும்பங்கு பாரத்தைத் தூக்கிச் சுமந்திருப்பது – அமித் த்ரிவேதி. அமித்தைப் பற்றியும் சொல்வதற்கு எதுவுமே இல்லை. இவரது படங்களின் லிஸ்ட்டை ஒருமுறை பாருங்கள். அத்தனை படங்களும் வித்தியாசமானவை. இயல்பானவை. கனமான பின்னணி உடையவை. அனுராக் காஷ்யப்பின் கண்டுபிடிப்பு. Dev-D யின் இசையைக் கேட்டவர்களால் அமித் த்ரிவேதியை மறக்கமுடியாது. ஸ்டீரியோடைப்பான ஹிந்திப் பாடல்களின் இடையே அட்டகாசமான ட்யூன்களை விதவிதமான இசைக்கருவிகளின்மூலமும் பல experimentationகளின் மூலமும் அமைத்திருப்பார். இன்றுவரை அவரது இந்த வித்தியாசமான பாணி தொடர்கிறது. அந்த வகையில் ரஹ்மானின் freshness இவரிடமும் இருக்கிறது. ஆனால் ரஹ்மான் தொடாத சில இடங்களை அனாயாசமாகத் தொட்டிருப்பது அமித் த்ரிவேதியின் ஸ்டைல். இதை ஜஸ்ட் லைக் தட் போகிறபோக்கில் உதிர்த்துவிட்டு நான் செல்லவில்லை. தேவ் டியின் எமோஷனல் அத்யாச்சார் (Rock) கேட்டாலே அது புரிந்துவிடும். ரோஜா முதலிய ரஹ்மானின் ஆரம்பகால ஆல்பங்கள் வந்தபோது அந்த இசையில் இசையை அழகுபடுத்தும் அம்சங்களைவிட, பாடல்களின் experimentationகள்தான் முன்னணியில் இருந்தன அல்லவா? அது இன்னும் ரஹ்மானிடம் தொடர்வதுதான் அவரது வெற்றியின் காரணம். அதேபோல்தான் அமித் த்ரிவேதி. அவரது பாடல்களில், பாடலை அழகுபடுத்தவேண்டும் என்ற எந்த முயற்சிகளும் எனக்குத் தெரிந்து நான் கேட்டவரையில் இல்லை. மாறாக அந்த இடம் படத்தில் எங்கு வருகிறது, அந்தப் பாடலின் மூலமாக கதை எப்படி நகர்கிறது, அந்தக் காட்சியின் உணர்வுகள் என்னென்ன, எப்படியெல்லாம் அவைகளைப் பாடல்களின் மூலம் உணர்த்தமுடியும் என்பது அமித்துக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

இன்னொரு விஷயம் – இது நான் உணர்ந்தது. அமித்தின் பாடல்களில், என்னதான் முக்கி முனகி நாம் கேட்டாலும், அதில் தனிப்பட்ட ஒரு identificatioனை நான் உணர்ந்ததில்லை. எப்படி ரஹ்மானைக் கேட்டாலே அது ரஹ்மான் என்பது தெரிந்துவிடுமோ, அப்படி அமித்தைக் கேட்டாலும் அது விளங்கிவிடும். அப்படிப்பட்ட identification அல்ல நான் சொல்ல வருவது. ஒரு காட்சியில் வரும் பாடல், எப்படி அந்தக் காட்சியோடு ஒன்றுகிறது – அதில் இருக்கக்கூடிய விஷயங்களின் இசை எப்படி – இதுபோன்ற அம்சங்களை அமித் நன்றாகக் கவனிக்கிறார் என்பது என் எண்ணம். உதாரணத்துக்கு, இந்தப் படத்திலேயே, திருமண ஏற்பாடுகள் நடக்கையில் London Thumakda என்று ஒரு பாடல் வருகிறது. திருமண வீட்டில் அப்படிப்பட்ட இசைதான் இருக்கும். அதிலும் அது தில்லி. தில்லியின் திருமண இசை – பஞ்சாபிக் குடும்பத்தினருடையது – எப்படி இருக்கும்? இதைத்தான் சொல்கிறேன். அதேபோல் ஃப்ரான்ஸிலும் ஆம்ஸ்ட்டர்டாமிலும் நடக்கும் கதையில் அந்தந்த இடத்தில் வரும் பாடல்களில் கச்சிதமாக அந்தந்த இடங்களின் இசை இருக்கிறது. இப்படிக் கதையோடு ஒன்றி இருக்கும் இசை அமித்தின் இசை. நான் சொல்லவந்த identification, இசையை ரொமாண்டிஸைஸ் செய்து, கிராமத்தில் நடந்தாலும் ஒரே இசை, நகரத்தில் நடந்தாலும் ஒரே இசை என்று ஒரேபோன்ற இசையோடு தங்களை identify செய்கிறார்கள் சிலர் – அப்படிப்பட்ட identification அமித்திடம் இல்லை என்பதைத்தான்.[divider]

அமித் த்ரிவேதியை உபயோகிப்பவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் அனுராக் காஷ்யப்பும் விக்ரமாதித்ய மோட்வானேயும். இப்போது விகாஸ் பேலும் அதில் சேர்ந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட அமித் த்ரிவேதியின் இசை, தியேட்டர்களில் படம் பார்க்கும்போதுதான் காட்சியோடு ஒன்றி முழுவேகத்தில் உங்கள் காதுகளையும் மனதையும் அறையும். அதற்காகவே இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.

முதல் பேராவில் சொன்னதுபோல், இங்லீஷ் விங்லீஷ் செய்த முட்டாள்தனத்தை செய்யாமல் மிக இயல்பாக எடுக்கப்பட்டிருக்கும் படம் இது (ஆனால், irony என்னவென்றால், அந்தப் படத்துக்கும் இதே அமித் த்ரிவேதிதான் இசை). எங்களுக்கு மிகவும் பிடித்தது. படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் இன்று நாங்கள் சென்றபோது (Garuda Mall – INox) கிட்டத்தட்ட ஹௌஸ்ஃபுல்.

பி.கு

1. இந்தப் படத்தின் எடிட்டர் – அனுராக் காஷ்யப். தயாரிப்பாளர்கள் அனுராக் காஷ்யப்பும் விக்ரமாதித்ய மோட்வானேயும். இதுதான் இவர்களின் வெற்றி ஃபார்முலா. Collaboration. சேர்ந்தே செம்மையாக உழைப்பது.

2. படத்தின் அடுத்த ப்ளஸ் பாயிண்ட் – லிஸா ஹெய்டன். தனது தொடையில் உலகெங்கும் படுபிரபலமான Mick Jaggerன் நாக்கை பச்சை குத்திக்கொண்டு வருபவர். ஏன்? படத்தைப் பாருங்கள்.

  Comments

5 Comments

  1. Is it possible to comment in Tamil, here? How?

    Enjoyed reading the review. I have watched the movie and you have covered all the angles of this movie. Kangana was fantastic here. I didn’t know that she was involved in direction also! I have seen her in ‘Fashion’. She was very good.

    I remembered ‘Monsoon Wedding’, as soon as the movie started! After she went abroad, I remember ‘Mitr my friend’! But, this was entirely different and as you said, the direction was superb. I was thinking her surname was to be pronounced as Ranawat..though it is written as Ranaut! Ranawat is Rajastani, I think!

    I never expected Hayden to act so well. She did her role very well. Even the hero Vijaya Rao (?) did his role well. So many small small instances are there to remember and enjoy…esp. the expression the French man’s face after the kissing scene! How Kangana burps again and again…Now, this is becoming a post!

    Loved the song, ‘aha aha…hunagaamaaa’. The whole crowd in Sathyam theatre (repeated crowd, I am sure) were shouting the song and some were dancing, that too, in Chennai!

    Now, will share this!

    Reply
    • Rajesh Da Scorp

      Thank you for the detaield comment. I personally remembered ‘Hollywood Bollywood’ when I saw this one. It’s all in the mood, isn’t it? The director had skillfully pulled us in to the film, and that’s the result we tend to think about the other films which impressed us.

      I too thought it’s ரணாவத், and later got corrected by observing the pronounciation from the net. You are very right in observing the rajastani roots for Ranawat.

      ANd again, all the actors have done their parts well. Absolute agreement there. And, it was very much surprising to know the dancing thingy at Satyam. Real feat in itself :-). Cool to know. I would very much wanna experience it :).. Sooner.

      Overall, I liked the comment. It was a review in itself. Cheers.

      Reply
  2. siva

    Sir we have Mani rathnam’s “Mouna raagam”, “Alaipaayuthae”, Mahendran’s “Mullum Malarum”, Balachandar’s all movies and Balumahendara’s all movies. Those hindi people cant give like us movies sir. I accept they are giving now only such movies. But our directors given from 80’s,90’s……

    Reply
    • Rajesh Da Scorp

      But the movies you have mentioned are not of this genre boss. This is of a very different make. Pl see it and then we can have a detailed discussion. Cheers

      Reply
  3. Murale

    அட்டகாசம் ராஜேஷ் , உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவே என் முதல் பின்னூட்டம். இந்தப் படத்தை என் நண்பனுடன் எஸ்கேப் இல் இரவுக் காட்சி பார்த்தேன். என்னை மிகவும் கவர்ந்தது கங்கனா மற்றும் லிசா வின் அற்புத நடிப்பு மற்றும் இயல்பான காட்சி அமைப்பு . குறிப்பாக என்னை இந்த படத்தின் பாடல் , இசை மிகவும் ஈர்த்தது . உங்கள் பதிவைப் படித்து தான் இதற்க்கு இசை அமித் திரிவேதி என்று தெரிந்து கொள்கிறேன் . அமித்தை சாரு கொண்டாடியதால் தெரியும். தயாரிப்பு அனுராக் எனபது தெரியும் , எடிட்டிங்கும் அவர் என்பதை இங்கு படித்தே அறிந்தேன் .

    “Too many cooks spoil the broth” என்பார்கள் , இங்கு அப்படி நடக்கவில்லை .

    இந்தப் படத்தைப் பற்றி ஏன் தங்கையிடம் அவர் கணவருடன் இருக்கும் பொழுது “இந்திய உறவுகளில் உள்ள போலிப் புனிதங்களை உடைத்து செல்லும் ஒருவளின் கதை ” மிகவும் அற்புதமாக இருந்தது . பாடல் வரிகளும் பிரமாதம் என்றேன் ( ஆங்கில சப் டைட்டில் க்கு நன்றி ) உடனே தங்கை கணவர் “புனிதங்களை உடைப்பது ரொம்ப ஈஸி அதெல்லாம் இல்லேன்னா இங்கே யாரும் வாழ முடியாது என்றார்.”

    மேற்கொண்டு விவாதிக்க விரும்பாமல் பேச்சை திசை திருப்பினேன்.

    தங்கையை கண்டிப்பாக இந்தப் படம் பார்க்குமாறு பரிந்துரைத்திருக்கிறேன் .

    Reply

Join the conversation