Quentin Tarantino: Chapter 0.5 – True Romance

by Karundhel Rajesh August 28, 2014   Cinema articles

‘I loved it when ‘True Romance’ came out and people were saying they couldn’t believe I ended it the same way I did ‘Dogs.’ (It’s) the modern-day equivalent of the Western showdown. I never felt gypped when Sergio Leone ended every Western he did with a showdown; that’s just the way they ended. But every single one of them was different.’

‘In True Romance I was trying to do my version of an Elmore Leonard novel in script form. I didn’t rip it off, there’s nothing blatant about it, it’s just a feeling you know, and a style I was inspired by more than anything you could point your finger at.’

– Quentin Tarantino.

ரிஸர்வாயர் டாக்ஸ் படமாக்கப்பட இருந்ததற்கும் முன்னால், டாரண்டினோ விடியோ கடையில் வேலை செய்துகொண்டிருந்த சமயம், அவர் மூன்று திரைக்கதைகளை எழுதி வைத்திருந்தார். அதில் ஒன்றுதான் True Romance. அந்தத் திரைக்கதையை யாருமே சீந்தவில்லை. டாரண்டினோவை யாருக்கும் தெரியாது என்பதே காரணம். இருந்தாலும், True Romance திரைக்கதையை எப்படியாவது விற்றுவிட்டால் அந்தப் பணத்தில் ரிஸர்வாயர் டாக்ஸ் படத்தை எடுத்துவிடலாம் என்பதே டாரண்டினோவின் திட்டம். True Romance திரைக்கதைக்கு டாரண்டினோ வைத்த விலை – 30,000 டாலர்கள். அதுதான் ஹாலிவுட்டில் ஒரு திரைக்கதைக்கான குறைந்தபட்ச விலை. ரிஸர்வாயர் டாக்ஸை 16MM கறுப்பு வெள்ளைப் படமாக எடுப்பதுதான் டாரண்டினோவின் முதல் எண்ணம். அப்படி எடுக்க இந்தப் பணம் போதும் என்று நினைத்தார். ஆனால், ஒருமுறை இயக்குநர் ரிட்லி ஸ்காட்டின் சகோதரர் டோனி ஸ்காட்டை டாரண்டினோ சந்திக்க நேர்ந்தது.  The last Boy Scout படத்தை டோனி ஸ்காட் எடுத்துக்கொண்டிருந்தபோது அந்தப் படப்பிடிப்புக்கு டாரண்டினோ வந்தார். அதுதான் டாரண்டினோ முதன்முதலில் நேரில் பார்த்த ஒரு படப்பிடிப்பு. ஏனெனில் அதே தயாரிப்பாளர்களின் இன்னொரு திரைக்கதையான Past Midnightடை (அப்போதுதான் மெல்ல டாரண்டினோ என்ற ஆளைப் பற்றித் தெரிந்துகொண்டிருந்த சமயம்) டாரண்டினோவை சரிசெய்துதரச்சொல்லி அவர்கள் கேட்டிருந்த சமயம் அது. அப்போதுதான் டோனி ஸ்காட்டை டாரண்டினோ நேரில் சந்தித்தார். ரிஸர்வாயர் டாக்ஸ் மற்றும் True Romance திரைக்கதைகள் டோனி ஸ்காட்டுக்குக் கிடைத்தன. ஒரு விமானப்பயணத்தின்போது இரண்டையும் மெதுவாகப் படிக்க ஆரம்பித்தார் டோனி ஸ்காட். பயணம் முடிந்து இறங்கியதும் டாரண்டினோவைத் தொடர்பு கொண்டு, இரண்டு படங்களையும் நானே இயக்குகிறேன் என்று வற்புறுத்தத் துவங்கிவிட்டார். ரிஸர்வாயர் டாக்ஸை விட்டுத்தர முடியாது என்று டாரண்டினோ சொன்னதால் True Romanceஸை டோனி ஸ்காட் எடுத்துக்கொண்டார். டோனி ஸ்காட்டுக்கு அந்த இரண்டு திரைக்கதைகளின் முக்கியத்துவம் நன்றாகவே புரிந்திருந்தது.

STREETFIGHTER_01_banner

True Romance ஒரு வகையில் பார்த்தால் க்வெண்டினின் personalityயோடு தொடர்புடையது. அதன் கதாநாயகன் க்ளாரன்ஸ் வொர்லி (Clarence Worley), ஒரு காமிக்ஸ் கடையில் வேலை செய்பவன். Sonny Chiba படங்கள் என்றால் அவனுக்கு உயிர். ஸான்னி ச்சிபாவை நீங்கள் கில் பில் படத்தில் பார்த்திருக்கிறீர்கள். ஹத்தோரி ஹன்ஸோவாக நடித்தவர். எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களின் சூப்பர்ஸ்டார். அவரது படங்கள் ஹாலிவுட்டில் எப்போது வெளியானாலும் தவறாமல் பார்ப்பவன் க்ளாரன்ஸ். எல்விஸ் ப்ரெஸ்லியின் வெறியன். காமிக்ஸ் கடையில் கடந்த நான்கு வருடங்களாக வேலை பார்த்து வருபவன். தனக்கு மிகப்பிடித்த ஸான்னி ச்சிபாவின் ஸ்ட்ரீட்ஃபைட்டர் மூன்று பாகங்களை ஒரு தியேட்டரில் ஒன்றின்பின் ஒன்றாகப் பார்க்க விரும்புகிறான். யாருமற்ற தியேட்டரில் அந்தப் படங்களைப் பார்க்கையில்தான் கதாநாயகி அலபாமாவை சந்திக்கிறான். அவளும் அதே படங்களைப் பார்க்க அங்கே வருகிறாள். இருவருக்கும் அங்கே நட்பு ஏற்படுகிறது. வெளியே வந்து உணவருந்துகிறார்கள். அலபாமா தன்னைப் போலவே இருப்பதால் க்ளாரன்ஸ் அவளைத் தனது காமிக்ஸ் கடைக்கு இரவில் அழைத்துச்செல்கிறான். அவளுக்கு நிஜமான பொக்கிஷமான ஸ்பைடர்மேன் காமிக்ஸின் முதல் புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறான். அவனுக்கு மிகவும் பிடித்த Sgt. Fury and His Howling Commandos காமிக்ஸ் புத்தகத்தை எடுத்து அலபாமாவுக்குப் பரிசளிக்கிறான். அவளை விரும்ப ஆரம்பிக்கிறான்.

இதுதான் திரைக்கதையின் முதல் சில நிமிடங்கள்.

இடையிலேயே வில்லன் ட்ரெக்ஸல் அறிமுகமாகிறான். அவனிடம் ஒரு சூட்கேஸ் நிறைய கோக்கெய்ன் இருக்கிறது. லோக்கல் தாதா. Blue Lou Boyle என்ற பெரிய தாதாவிடம் வேலை செய்பவன். அந்தக் கோக்கெய்ன் சூட்கேஸை இவனுக்குத் தெரிந்த சிலரைக் கொன்றுவிட்டு எடுத்து வந்திருக்கிறான். கதாநாயகி அலபாமா அவனிடம்தான் வேலை செய்கிறாள். இப்படிக் கதையின் எல்லாக் கதாபாத்திரங்களும் ஒருவரோடொருவர் அவர்களுக்குத் தெரியாமலேயே சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் திருடன் போலீஸ் விளையாட்டுதான் இந்தப் படம்.

கதாநாயகன் க்ளாரன்ஸைக் கவனித்தால் அவன் அப்படியே க்வெண்டின் டாரண்டினோதான் என்பது புரியும். முதன்முறை திரைக்கதை எழுதும் யாருமே தங்களை மையமாக வைத்துதான் திரைக்கதை எழுவார்கள் அல்லவா? அப்படி எழுதப்பட்டதுதான் அந்தக் கதாபாத்திரம்.

ரிஸர்வாயர் டாக்ஸ் பார்த்தவர்களுக்குச் சில தகவல்கள். அந்தப் படத்தில் இடையே வரும் ஃப்ளாஷ்பேக் ஒன்றில் மிஸ்டர் ஒய்ட்டாக வரும் ஹார்வி கய்டெலிடம் அவரது பாஸாகிய ஜோ, அலபாமா எப்படி இருக்கிறாள் என்று கேட்பார். அந்த அலபாமா இந்தப் படத்தின் கதாநாயகிதான். இந்தப் படம் முடிந்ததும் அலபாமா மிஸ்டர் ஒயிட்டை சந்திப்பதாகவும், இருவரும் சேர்ந்து கொள்ளைகளில் புகழ்பெற்ற ஒரு ஜோடியாக மாறுவதாகவும் இந்த இரண்டு படங்களுக்கு இடையே கதை நடந்திருப்பதாக டாரண்டினோ யோசித்து வைத்திருந்தார். அதேபோல் ரிஸர்வாயர் டாக்ஸுக்கும் Pulp Fictioனுக்குமே ஒரு தொடர்பு உண்டு. அது என்ன என்பதை அந்தப் படத்தைப் பற்றிப் பார்க்கும்போது கவனிக்கலாம் (க்ளூ – அது மைக்கேல் மேட்ஸன் பாத்திரத்தோடு சம்மந்தப்பட்டது).

true-romance-poster

இந்தக் கதையை அப்படியே எடுத்துக்கொண்டு படமாக்கினார் டோனி ஸ்காட். இடையிடையே வரும் சில காட்சிகள் மட்டும் படத்தில் இருந்து வெட்டப்பட்டன (காமிக்ஸ் கடைக்குக் கூட்டிச்செல்லும் காட்சி படத்தில் இருக்காது. அதேபோல் வில்லன் ட்ரெக்ஸல் கோக்கெய்னை எடுத்துவரும் காட்சி மிகவும் சுருக்கமாக இருக்கும். அதில் டாரண்டினோ எழுதியிருந்த வசனங்கள் முழுமையாக எடுக்கப்பட்டிருந்தால் டாரண்டினோ ஜெயிலில் இருந்திருக்கலாம். காரணத்தை திரைக்கதையைப் படித்தால் தெரியும்). படம் வெளியிடப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்தது. இருப்பினும் இப்போதுவரை ஒரு கல்ட் படமாக இருந்துவருகிறது. படத்தின் திரைக்கதை படுவேகமாகப் பயணிக்கும். படத்தில் வரும் வன்முறைக் காட்சிகள் நன்றாக எழுதப்பட்டிருக்கும். படத்தின் உரையாடல்கள் மிகவும் இயல்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் குறையே சொல்லமுடியாத படைப்பு இது.

இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சி இருக்கிறது. க்ளாரன்ஸின் தந்தையான க்ளிஃப்ஃபோர்ட் வோர்லியிடம், க்ளாரன்ஸைப் பற்றி வின்ஸென்ஸோ காக்கோட்டி (தமிழில் சரியாக எழுத முடியாத பெயர்களில் ஒன்று. Vincenzo Coccotti) என்ற சிசிலியைச் சேர்ந்த தாதா விசாரிக்கும் காட்சி அது. இந்தக் காட்சியைக் கீழே காணலாம். க்ளிஃப்ஃபோர்ட் போலீஸாக இருந்தவர். எனவே அவரிடம் மிரட்டித் தகவல் வாங்க முடியாது. அவரைக் கொல்லப்போவதாக Coccotti சொல்வான். அவன் அவசியம் கொன்றுவிடுவான் என்பது க்ளிஃப்ஃபோர்டுக்குத் தெரியும். அப்படி ஒரு நிலையில் Coccottiயை எரிச்சலின் உச்சத்துக்கே கொண்டுசென்று வெறுப்பு தாங்கமுடியாமல் எப்படி தன்னைச் சுடவைக்கிறார் என்பதைப் பாருங்கள். Try listening to the dialogues too. Vintage Tarantino (இந்தக் காட்சியைப் பற்றிப் பின்னால் இன்னொரு கட்டுரையில் விரிவாகக் காணப்போகிறோம்).

படத்தின் இன்னொரு விசேடமான அம்சம் – எல்விஸ் ப்ரெஸ்லி நேரில் வந்து கதாநாயகன் க்ளாரன்ஸிடம் பேசுவார். அதாவது அவனது கண்களுக்கு அப்படித் தெரியும். அவனுக்கு எப்போதெல்லாம் குழப்பம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அவனது குழப்பத்தைத் தீர்த்து வைப்பார் ப்ரெஸ்லி. அங்கே எல்விஸ் நடமாடுவது க்ளாரன்ஸின் கண்களுக்கு மட்டுமே தெரியும். எல்விஸ் ப்ரெஸ்லியாக நடித்திருந்தது டோனி ஸ்காட்டின் முந்தைய ஒரு படமான Top Gunனில் வில்லனாக நடித்திருந்த வால் கில்மர் (தமிழில் ‘பொய்க்கால் குதிரை’யில் புகைப்படத்துக்குள்ளிருந்து ரவீந்தரிடம் கமல்ஹாஸன் பேசுவது எப்போதோ வந்துவிட்டது). படத்தில் டாரண்டினோவின் பங்களிப்பு திரைக்கதையோடு முடிந்துவிட்டது. அதன் படப்பிடிப்பின்போது டோனி ஸ்காட் டாரண்டினோ நினைத்தபடியே பெரும்பாலும் படத்தை எடுத்திருந்தார். ஆனால் க்ளைமேக்ஸில் ஹீரோ க்ளாரன்ஸ் இறப்பதுபோல் டாரண்டினோ எழுதியிருந்தது டோனி ஸ்காட்டுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவனைப் பிழைக்க வைத்தார். முதலில் க்ளைமேக்ஸ் பிடித்திருந்தாலும், படத்தை ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு காட்சியாக வரிசையாக உருவாக்கிக்கொண்டுவந்த டோனி ஸ்காட்டுக்கு அதற்குள் ஹீரோ பாத்திரத்தை மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. எனவேதான் க்ளைமேக்ஸ் ஸ்காட்டின் விருப்பத்துக்கு ஏற்பப் படமாக்கப்பட்டது.

படத்தில் ப்ராட் பிட்டும் உண்டு. டோனி சோப்ரானோவாக நடித்த ஜேம்ஸ் காண்டோல்ஃபினியும் உண்டு.  கேரி ஓல்ட்மேனும், ஸாமுவேல் ஜாக்ஸனும் இன்னும் பலரும் உண்டு. ஜாலியாக அமர்ந்து பார்க்க இது ஒரு சிறந்த படம். அதேசமயம் டாரண்டினோவின் வசனங்களால் இந்தப் படம் இன்றும் பலரது மனதிலும் அழியாமல் நிற்கிறது.

இந்தப் படத்தின் திரைக்கதையை அவசியம் படித்துப் பாருங்கள். கதாபாத்திரங்களை எப்படி டெவலப் செய்வது,  அட்டகாசமான அடிதடிக் காட்சிகளை எளிமையாக எப்படி எழுதுவது, விறுவிறுப்பை எப்படித் திரைக்கதை முழுதும் ஒரே சீராக வைத்திருப்பது என்றெல்லாம் டாரண்டினோ நடத்தியிருக்கும் பாடம் இது. வன்முறையின் அழகியல் பற்றிக் க்வெண்டின் டாரண்டினோ சொல்லியிருந்ததை சென்ற கட்டுரையில் படித்திருக்கலாம். இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கும். சமூகத்தைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், கதாபாத்திரங்களை முடிந்தவரை முழுமிஅயாகக் கொண்டுவருவதில் டாரண்டினோவுக்கு இணை வேறு யாரையும் சொல்லமுடியாது. டாரண்டினோவுக்கு முன்னர் ஸ்கார்ஸேஸியை அப்படிச் சொல்லலாம். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை டாரண்டினோவின் எல்லாத் திரைக்கதைகளிலும் காணமுடியும். இது அப்படிப்பட்ட படம்.  தொண்ணூறுகளின் சிறந்த த்ரில்லர்களில் ஒன்று.

இந்த வரிசையில் முதல் கட்டுரை —> Quentin Tarantino: Chapter 1 – Reservoir Dogs

  Comments

3 Comments

  1. திரைக்கதைகளை தமிழில் மொழிபெயர்த்து உங்கள் பெயரை பட்டிலில் முதலாவதாக்க முயலுங்கள்.

    Reply
  2. ayyanar

    interesting how do you collect this information? it is pretty old news. nice

    Reply
  3. Christopher

    Dear Rajesh, Very interesting to read your article and blog. Can you please suggest 50 important must watch english movies to your blog followers. Thanks

    Reply

Join the conversation