Quentin Tarantino: Chapter 2 – Pulp Fiction – Part 2

by Karundhel Rajesh September 24, 2014   English films

‘If I was like writing a movie, the day that I sit down to do it, whatever is going on with me at that time will find its way into the piece. It has to, or the piece isn’t worth making. All my movies are achingly personal’ – Quentin Tarantino.

Pulp Fiction திரைப்படத்தின் முதல் காட்சி, பம்ப்கின்னும் ஹனி பன்னியும் ரெஸ்டாரண்ட்டைக் கொள்ளையடிக்கத் திட்டமிடும் காட்சி. ரிஸர்வாயர் டாக்ஸ் படத்தைப் பார்த்துவிட்டு க்வெண்டினின் இரண்டாம் படத்துக்காகக் காத்திருக்கும் எந்த நபருக்கும் இந்தக் காட்சியைப் பார்த்ததுமே இது ஒரு டாரண்டினோ படம் என்று புரிந்துகொள்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ரிஸர்வாயர் டாக்ஸின் முதல் காட்சியை நினைவுபடுத்தும் வகையிலேயே இந்தக் காட்சியும் அமைந்திருக்கும். அதிலும் ஒரு ரெஸ்டாரண்ட். இதிலும் ஒரு ரெஸ்டாரண்ட். அதில் ரெஸ்டாரண்ட்டில் அமர்ந்திருக்கும் கொள்ளைக்குழுவின் அங்கத்தினர்கள் கிட்டத்தட்ட உணவை முடித்தபின்னர் இயல்பாகப் பேசிக்கொள்ளும் காட்சி. இதிலும் கிட்டத்தட்ட உணவையும் காஃபியையும் முடிக்கும் தருவாயில் பம்ப்கின் ஹனிபன்னியிடம் தனது திட்டத்தை விவரிக்கும் காட்சி. அதில் ரெஸ்டாரண்ட்களில் வேலை செய்யும் சர்வர்களின் வாழ்க்கையையும், இவர்கள் வைக்கும் டிப்ஸ்கள் அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவுகின்றன என்பதைப் பற்றியும் பெரும்பாலான பேச்சு ஓடும். இதில் கடைகளின் முதலாளிகளையும் ரெஸ்டாரண்ட் முதலாளிகளையும் ஒப்பிடும்வகையில் பெரும்பாலான பேச்சு ஓடும். அதில் காட்சி முடியும்போது அட்டகாசமான Little Green Bag பாடலுடன் டைட்டில்கள் காண்பிக்கப்படும். இதில் காட்சி முடியும்போது ஃப்ரீஸ் ஆகி, Misirlou இசையுடன் டைட்டில்கள் ஓடும்.

இந்த Misirlou இசையின் பிரத்யேக அம்சம் என்னவென்றால், ‘The King of the Surf Guitar’ என்று அழைக்கப்பட்ட டிக் டேலினால் (Dick Tale) இசையமைக்கப்பட்ட ஒலிக்குறிப்பு இது.ஸர்ஃப் ம்யூஸிக் என்பது கடலில் Surfing செய்வதிலிருந்து வந்தது. அறுபதுகளில் மிகப்பிரபலமான இசைவடிவம். இதன் பிதாமகர்களில் ஒருவர்தான் டிக் டேல். ஸர்ஃப் இசையின் பிரதான அம்சம் – பெரும்பாலும் பாடுபவர் இல்லாமல் ஒரு கிதாரோ அல்லது ஸாக்ஸஃபோனோதான் இசையின் பிரதானமான விஷயமாக இருக்கும். டிக் டேல் இதில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்தவர். இசை வெளிப்பட்டு அதன் சிதறல்கள் ஓய்ந்து அடங்கும் வரையிலான (அலைகளைப் போன்ற) reverberationகளில் முடிந்தவரை பரிசோதனைகள் செய்வது டிக் டேலின் ஸ்பெஷாலிடி. இந்த வகையில், இந்த Misirlou பாடலைக் கிட்டத்தட்ட 95 முறைகள் பதிவு செய்ததாக அவர் குறிப்பிடுகிறார். 1962ல் வெளிவந்த இந்தப் பாடல் இன்றும் டிக் டேலின் பிரம்மாண்டமான ஹிட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தப் பாடலுடன் படத்தைத் துவங்கக் காரணம் என்ன?

‘இந்தப் பாடல் படத்தின் ஆரம்பத்தில் ஒலிக்க ஆரம்பித்ததுமே, படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு இது ஒரு epic திரைப்படம் என்ற எண்ணம் உள்ளூற எழுந்துவிடுகிறது. இந்த இசையின் முக்கியத்துவம் அப்படி. அதுமட்டுமில்லாமல் என் படத்தை வருங்காலத்திலும் பலரது நினைவுகளில் தங்கியிருக்கச் செய்யும் திறமை இந்தப் பாடலுக்கு உண்டு என்று நினைக்கிறேன்’ என்பது டாரண்டினோவின் கருத்து.

இதோ Dick Taleன் Misirlou. இந்தப் பாடல், ஒரு பழைய middle east நாட்டுப்புறப் பாடலின் கிதார் வடிவமாகும்.

டைட்டிலின் பாதியிலேயே இந்தப் பாடல் டக்கென்று மாற்றப்பட்டு Jungle Boogie பாடல் ஒலிபரப்பப்படும். அது மாற்றப்படும் தருவாயில் ரேடியோவில் அலைவரிசை மாற்றப்படும் ஓசை வரும். அதுவும் ரிஸர்வாயர் டாக்ஸில் வருவதுதான். அந்தப் படத்தில் பின்னணியில் அவ்வப்போது இப்படிப்பட்ட ரேடியோ இசை அடிக்கடி வரும்.

இதன்பின் படம் துவங்கும்போது வின்ஸெண்ட்டும் ஜூல்ஸும் ஒரு காரில் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எந்த அறிமுகமும் இல்லை. அவர்களின் பேச்சில் டக்கென்று குறுக்கே நுழைகிறோம். அப்போது ஜூல்ஸ் வின்ஸெண்ட்டிடம் ஹேஷ் பார்களைப் பற்றிக் கேட்கிறான். ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மூன்று வருடங்கள் கழித்து அப்போதுதான் வந்திருக்கிறான் வின்ஸெண்ட் என்பதால் அங்கே அவன் சென்ற கஞ்சா விற்கும் கடைகளைப் பற்றி ஜூல்ஸிடம் சொல்ல ஆரம்பிக்கிறான். ஆம்ஸ்டர்டாமுக்கும் அமெரிக்காவுக்குமான வித்தியாசங்கள், அங்கே அவனது அனுபவங்கள் என்று பேச்சு நீள்கிறது. இதுவரை படம் பார்த்துக்கொண்டிருக்கும் யாருக்கும் இந்த இருவர் யார் என்பதோ அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதோ எதுவும் தெரியாது. இந்தப் பேச்சின் இயல்புத்தன்மையிலும் நகைச்சுவையிலும் மயங்கி ஆடியன்ஸும் சிரிக்கத் துவங்கியிருப்பார்கள் (இப்போது மேலே பார்த்த Quoteட்டை நினைவுபடுத்திக்கொள்ளவும். இதெல்லாம் டாரண்டினோ பல்ப் ஃபிக்‌ஷன் திரைக்கதை எழுதும்போது ஆம்ஸ்ட்டர்டாமில் அனுபவித்தவை).

இந்தக் காட்சி முடிந்ததுமே வண்டியை நிறுத்தி, வண்டியின் பின்னால் இருந்து துப்பாக்கிகளை இருவரும் எடுத்துக்கொண்டு மேலே செல்லும்போதுதான் இருவரும் சரியான நபர்கள் இல்லை என்பதும் என்னமோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதும் ஆடியன்ஸுக்கு உறைக்க ஆரம்பித்திருக்கும். ஆனால் இதற்குள் ஆடியன்ஸ் வின்ஸெண்ட்டையும் ஜூல்ஸையும் பார்த்து சிரித்து, அவர்களின் கதாபாத்திரங்களை விரும்ப ஆரம்பித்தாயிற்று. இப்போது, இந்த இருவரும் செய்யும் குற்றங்களில் ஆடியன்ஸுக்கும் பங்குண்டு என்பதுதானே உண்மை? இதுதான் டாரண்டினோவின் ஸ்டைல். ஆடியன்ஸை எந்தக் காட்சியாக இருந்தாலும் உள்ளே இழுத்துவிட்டு ஒரு எதிர்பாராத தருணத்தில் அவர்களின் கன்னத்தில் அறைவது. இதையேதான் ஏற்கெனவே நாம் பார்த்த Reservoir Dogs படத்தின் காதை அறுக்கும் சித்ரவதைக் காட்சியிலும் க்வெண்டின் அமைத்திருப்பார்.

இதற்குப்பின்னர்தான் படத்தின் மிகப்பிரபலமான காட்சி வருகிறது. பர்கர் ஸீன் என்றே அழைக்கப்படும் இந்தக் காட்சியில், க்வெண்டினே பிரத்யேகமாக எழுதிய (Ezekiel 25:17 – The path of the Righteous man) பைபிள் வாசகங்களைப் பேசியவாறு ஜூல்ஸின் கதாபாத்திரம் அந்த அறையில் இருப்பவர்களை சுட்டுக்கொல்லும்.

இதன்பின்னர் Vincent Vega & Marsellus Wallace’s Wife என்ற அத்தியாயம் ஆரம்பிக்கிறது.

நேரடியாக ப்ரூஸ் வில்லிஸின் மண்டையில் ஆரம்பிக்கும் காட்சியில், ப்ரூஸ் வில்லிஸின் புட்ச் கதாபாத்திரம் யாரோ ஒரு ஆள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறது (பின்னணியில் ஓடுவது Let’s Stay Together – Al Greenன் பாடல்). மிக நீளமாக ஓடும் அந்த வசனம் மூலம் ஒரு பாக்ஸிங் பந்தயத்தில் ஐந்தாவது ரவுண்டில் புட்ச் தோற்கவேண்டும் என்று அந்தக் கதாபாத்திரம் சொல்கிறது. அதற்கு முன்னரே அந்த உருவம் புட்ச்சுக்குப் பணமும் கொடுக்கிறது. அப்போது அந்த உருவத்தின் பின்னந்தலை (அதில் இருக்கும் ப்ளாஸ்திரியோடு) தெரிகிறது. அப்போதுதான் உள்ளே ஜூல்ஸும் வின்ஸெண்ட்டும் மிகவும் நகைச்சுவையான உடைகளை அணிந்துகொண்டு வருகிறார்கள். அங்கே புட்ச்சுக்கும் வின்ஸெண்ட்டுக்கும் பிரச்னை உருவாகிறது. இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொள்கிறார்கள். அதுதான் இருவரும் வரும் வேறொரு காட்சிக்கான ஆரம்பம்.

இந்தக் காட்சி முடிந்ததும் வின்ஸெண்ட் அவனது நண்பனிடம் கோக்கெய்ன் வாங்கும் காட்சி. இந்தக் காட்சியில் வரும் ரோஸானா ஆர்க்வெட்டின் Fellatio வசனம் புகழ்பெற்றது. உடல் முழுதும் piercing செய்துகொண்டிருக்கும் ஆர்க்வெட், தனது க்ளிட்டில் உள்ள piercing எதற்கு என்று சொல்லும் காட்சி (பின்னணியில் Bustin’ Surfboards பாடல்).

இந்தக் காட்சிக்குப் பிறகுதான் படத்தில் எனக்கு மிகப்பிடித்த சீக்வென்ஸ் துவங்குகிறது. வின்ஸெண்ட், மார்ஸெலஸ் வாலஸின் மனைவி மியாவை ரெஸ்டாரண்ட் அழைத்துச்செல்லும் சீக்வென்ஸ். இதில் பல நகைச்சுவையான விஷயங்கள் உண்டு. Black comedyயும் உண்டு. எல்லாவற்றுக்கும் சிகரமாக, ஜான் ட்ரவோல்டாவின் நடனம் இதில்தான் வருகிறது.

ஜான் ட்ரவோல்டாவின் Saturday Night Fever பற்றி எல்லாத் திரைப்பட ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். எழுபதுகளின் முடிவில் ஒரு மிகப்பெரிய இளம் சூப்பர்ஸ்டாராக ஜான் ட்ரவோல்டாவை ஆக்கிய படம். உடனேயே Crease படமும் வெளிவந்து பிய்த்துக்கொண்டு ஓடியதால் இளம்பெண்கள் ஆர்கஸத்தில் திளைக்கும்போது நினைக்கும் நபராக ஜான் ட்ரவோல்டா ஆனார். தனது 24ம் வயதில் புகழின் உச்சத்தில் இப்படி ஒரு நடிகர் இருப்பதை நினைத்துப்பாருங்கள். இந்த இரண்டு படங்களுமே ஜான் ட்ரவோல்டாவின் நடன ஆற்றலை அட்டகாசமாகக் கொணர்ந்த படங்கள். இதன்பின்னர் வெளிவந்த சில தோல்விப்படங்களால் ட்ரவோல்டா ஒரு தோல்வியுற்ற நடிகராக ஆகி, எப்போதாவது சில படங்களில் தலைகாட்டிவந்த காலம் அது. இதைப்பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்திருக்கிறோம். பிடிவாதமாக வின்ஸெண்ட்டின் பாத்திரத்துக்கு டாரண்டினோ ட்ரவோல்டாவைத்தான் நடிக்கவைக்க விரும்பினார் என்றும் கவனித்தோம்.

இந்த ரெஸ்டாரண்ட் காட்சியில்தான் மியாவை முதன்முதலில் நம் கவனிக்கப்போகிறோம். அதுவரை மியா எப்படிப்பட்ட பாத்திரம் என்றே நமக்குத் தெரியாது. இந்தக் காட்சியின் வசனங்களில் இரண்டு பேரின் கதாபாத்திரங்களையும் அழகாகக் காட்டியிருப்பார் டாரண்டினோ. இருவரும் உணவை ஆர்டர் செய்வதில் இருந்து (வின்ஸெண்ட்டின் தேர்வு – Douglas Sirk Steak – bloody as hell மற்றும் Vanilla Coke. மியா தேர்வு செய்வதோ Durward Kirby Burger – bloody as hell மற்றும் a 5 dollar shake). இந்த ஐந்து டாலர் ஷேக்கைப் பற்றியே இதன்பின் சுவாரஸ்யமான வசனம் உண்டு. இதன்பின் தான் இருவரும் மெல்லமெல்லப் பேச ஆரம்பிக்கிறார்கள். அப்போது மியாவின் சுவாரஸ்யமான டிவி பைலட் எபிஸோடின் கதை வருகிறது (மியா சொல்லும் இந்தக் கதையைக் கவனித்தவர்களுக்கு, இந்தக் கதைதான் டாரண்டினோ பின்னால் எடுத்த கில் பில்லின் சுருக்கம் என்பது புரியும். எப்படி? வசனத்தைக் கவனியுங்கள்). இதன்பின் மார்ஸெலஸ் வாலஸ், டோனி ராக்கி ஹாரர் என்று அழைக்கப்பட்ட நபரை மாடியில் இருந்து தூக்கி எறிந்ததைப் பற்றி வின்ஸெண்ட் கேட்கும் வசனம்.

அப்போதுதான் அறிவிப்பாளர் அங்கு நடக்கும் நடனப் போட்டியைப் பற்றி அறிவிக்கிறார். ஏற்கெனவே மரியுவானாவின் பாதிப்பில் இருக்கும் மியா, உடனடியாக அதில் கலந்துகொள்ள வின்ஸெண்ட்டையும் அழைத்துக்கொண்டு செல்கிறாள்.

அப்போது ஒலிக்கும் பாடல்தான் You Never can Tell. சக் பெர்ரி (Chuck Berry)யின் மிகமிகப் பிரபலமான பாடல்களில் ஒன்று. Chuck Berry, அமெரிக்காவின் ராக் & ரோல் பிதாமகர்களில் ஒருவர். ஐம்பதுகளில் இறுதியில் அவர் உருவாக்கிய பாடல்தான் இது. இந்தப் பாடலின் விசேஷம் – பாடல் உருவாக்கப்பட்டபோது சக் பெர்ரி சிறையில் இருந்தார். காரணம், Mann Act என்ற ஒரு குறிப்பிட்ட சட்டத்தை அவர் மீறியதே. அந்த சட்டம் விபசாரத் தடுப்புச் சட்டங்களில் ஒன்று. பெண்களை ஓரிடத்தில் இருந்து விபசாரத்துக்காக வேறோரிடத்துக்குக் கொண்டு செல்வதைத் தடுக்கும் சட்டம் இது. மெஹிகோவில் (Mexico) அவரைக் கவர்ந்திருந்த ஜேனிஸ் நோரீன் எஸ்கலாண்ட்டி என்ற 14 வயதுப் பெண்ணுக்கு சக் பெர்ரியின் ஸெய்ண்ட் லூயிஸ் நைட் க்ளப்பில் வேலை கொடுத்தார். ஆனால் அதன்பின் அந்தப் பெண் வேலையை விட்டு நீக்கப்பட்டார். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பெயரில் சக் பெர்ரி கைது செய்யப்பட்டார். அந்தச் சமயத்தில் ராக் & ரோல் இசை முழுவீச்சை அடைந்திருந்த காலம். அதை உருவாக்கியவர்களில் சக் பெர்ரியும் ஒருவர். புகழின் உச்சம். அப்படி சிறையில் இருந்தபோதுதான் இந்தப் பாடலை சக் பெர்ரி உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. 1964ல் வெளியானது. அமெரிக்க folk இசையையும் western இசையையும் கலந்து உருவாக்கப்பட்ட Rockabilly வகையான பாடல் இது.

இந்தப் பாடலைக் கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான முறைகள் கேட்டிருக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. உற்சாகம் தொற்றிக்கொள்ளும். நீங்களும் கேட்டுப்பாருங்கள்.

பாடல் துவங்கும்போது அறிவிப்பாளர் அழைத்ததும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் மியாவைக் கவனியுங்கள். அவள் மரியுவானாவின் பாதிப்பில் இருக்கிறாள் (வின்ஸெண்ட்டும் கோக்கெய்ன் செலுத்திக்கொண்டிருந்திருக்கிறான்). எனவே எந்தத் தடைகளும் இல்லாமல் இயல்பாகவும் குறும்பாகவும் எல்விஸ் ப்ரஸ்லியின் பாணியில் மைக்கை சாய்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். பின்னர் வின்ஸெண்ட்டின் பெயரைச் சொல்கையில் குரலையும் எல்விஸ் போலவே மாற்றிச் சொல்கிறாள். பாடல் தொடங்குமுன்னர் ஜான் ட்ரவோல்டாவின் மிக மெதுவான ஷூ கழற்றிவைக்கும் காட்சி. பாடலுக்கான எதிர்பார்ப்பு இது. சக் பெர்ரியின் அட்டகாசமான பாடல் இப்படியாகத் துவங்குகிறது.

பாடலை முதன்முதலில் திரையரங்கில் பார்த்தவர்கள் அவசியம் புல்லரித்துப் போயிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஜான் ட்ரவோல்டாவின் கடந்தகாலம் அப்படிப்பட்டது. ஒரு உதாரணமாக, ரஜினியோ கமலோ பத்து வருடங்களாகப் படமே இல்லாமல், திடீரென்று அட்டகாசமான ஒரு சூப்பர்ஹிட்டில் நடிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ரஜினி/கமலின் அறிமுகக் காட்சியைப் பார்க்கும் ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அதே உணர்வுகள்தான் இந்தப் பாடலில் ஜான் ட்ரவோல்டா ஆடுவதைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் இருந்தது. அதிலும் அந்தப் பாடல் எப்படிப்பட்டது? ராக் & ரோலின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று. அந்த நேரத்தின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தப் பாடல் படமாக்கப்பட்டபோது உமா தர்மனுக்குப் பயம். ட்ரவோல்டாவுடன் எப்படி ஆடுவது? ஆனால் ட்ரவோல்டா ஒவ்வொரு ஸ்டெப்பாக உமாவுக்குக் கற்றுக்கொடுத்தார். கூடவே, பாடல் படமாக்கப்பட்டபோது அந்த மேடையைச் சுற்றிச்சுற்றி உற்சாகமாகத் துள்ளிக்குதித்தபடி டாரண்டினோ வர, அவர் ஒவ்வொரு நடன வகையின் பெயரையும் சொல்லிக் கத்த, உடனடியாக அந்த நடனத்தை மாற்றி ஆடினார் ட்ரவோல்டா. எல்லாமே ஆன் த ஸ்பாட். அந்த நடனப் போட்டியே Twist பற்றித்தான். ஜான் ட்ரவோல்டாவோ Twistட்டில் அடித்துக்கொள்ளமுடியாத ஆள். அவரது எட்டாவது வயதில் முதன்முறையாக ஒரு ட்விஸ்ட் நடனப் போட்டியில் முதல் பரிசு வாங்கியவர். எனவே, இந்தக் காட்சி ஆரம்பிக்குமுன்னர் ட்ரவோல்டாவை அழைத்த டாரண்டினோ, ‘ட்விஸ்ட்டில் உங்கள் திறமை எனக்குத் தெரியும்; ஆனால் இதில் க்ளாஸிக் ட்விஸ்ட் மட்டும் இல்லாமல், தற்போது பிரபலமாகி வரும் இன்னும் சில புதிய வகைகளையும் ஆடினால் நன்றாக இருக்கும்’ என்று சொல்கிறார். அப்போது ட்ரவோல்டா, ‘உங்களுக்கு என்ன வேண்டுமோ அவற்றை அவ்வப்போது கத்துங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று பதில் கொடுக்கிறார்.

அன்றைய தினம் அந்த அரங்கே விழாக்கோலம் கொண்டிருந்தது. ஜான் ட்ரவோல்டா ஆடுவதைப் பார்க்க அந்தப் படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் தயார். காட்சி துவங்குமுன் உமாவுக்கு ட்விஸ்ட்டின் மூவ்களைக் கற்றுக்கொடுக்கிறார் ட்ரவோல்டா. அதன்பின்னர் காட்சி துவங்குகிறது. டாரண்டினோ படுபயங்கர உற்சாகத்துடன் மேடையைச் சுற்றி ஒரு குழந்தையைப் போல் துள்ளிக் குதித்தவாறு, ‘Watusi!!!’, ‘Hitchhiker!!!’, ‘Batman!!!’ என்றெல்லாம் ட்விஸ்ட்டின் வகைகளைச் சொல்லிச்சொல்லிக் கத்த, உடனடியாக அதற்கு ஏற்றவாறு ட்ரவோல்டா அனாயாசமாகத் தன்னை மாற்றிக்கொண்டு ஆடுவதை வீடியோவில் பார்க்கலாம்.

இப்படியாக இந்தப் படத்தின் மறக்கமுடியாத காட்சிகளில் ஒன்றாக ஆனது இந்த நடனப்போட்டி.

தொடருவோம்…

டாரண்டினோவைப் பற்றிய இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளைப் படிக்க இதோ லிங்க்.

Quentin Tarantino – An Analysis

pulp fiction poster taken from http://artwallpapers.biz/photos/wp-content/uploads/2012/01/31/Pulp-Fiction-1994-Wallpaper-5.jpg

  Comments

7 Comments

  1. படிக்கும் போதே புல்லரிக்குது பாஸ்…. செம்ம செம்ம….. ஜான் டிரவால்டோ எபிசோட் பற்றிய டீடெயிலிங் சூப்பர்ப்….

    Reply
  2. ஏற்கனவே பார்த்த படம் என்றாலும் இன்று இரவு மீண்டும் பார்க்கி தூண்டிட்டீங்க…. உங்க எழுத்தின் வசீகரம் அப்படி….. ரசிகன்யா நீர்….

    Reply
  3. Thanigai

    //இளம்பெண்கள் ஆர்கஸத்தில் திளைக்கும்போது நினைக்கும் நபராக// எல்(ல்)லாருமே அப்படி அவசியம் ஒருவரைப்பற்றி நினைக்கத்தான் செய்வார்களா

    Reply
  4. Ramraj

    1)There is some more irony in the burger scene where SMJ asks the What guy :
    // “Does he (Wallace) look like a b*tch?”
    “NO”
    “Then why you tryin’ to f*ck him like a b*tch?” //
    But as the story moves on, you know what Zed did to Wallace 😛

    2) You already mentioned about the // “I’ll be back before you can say blueberry pie” “Blueberry pie” // scene. Another such scene is:
    When Vincent Vega stabs Mia with the adrenaline shot, Mia awakes screaming and then the drug dealer says
    // “If you’re all right, then say something”
    “Something” //:D

    3) Another epic dialogue is :
    // “Don’t do sh*t unless…”
    “Unless what?”
    “Unless you do it first” // 🙂

    4) Now, to some people who say that this film is trash, this film doesn’t have moral values or this film has too much violence, drugs:
    QT deliberately kept many scenes like when Captain Koons explains Butch about the watch’s importance he mocks at war as
    // “This time they called it World war 2″ // also that scene not only shows the importance of that watch but also shows the true meaning of war and the innocent soldiers died in them.
    Also the violence and drugs part,he didn’t exaggerate anything. He shows the true color of America at that time, in his own methods. And also by this dialog QT proves that he’s the best :
    //” Or it could mean you’re the righteous man and I’m the shepherd and it’s the world that’s evil and selfish. I’d like that. But that sh*t ain’t the truth. The truth is, you’re the weak, and I am the tyranny of evil men. But I’m trying, Ringo. I’m trying real hard to be the shepherd ” //

    So, for haters QT ‘s reply would be : // ” Look you want to play blind man, go walk with the shepherd, but me – my eyes are wide f*cking open. ” //

    Thanks for the interesting write up that made me watch this masterpiece again. Cheers 🙂

    Reply
  5. Ramraj

    Also boss can you enlighten me with some answers in the next write up:
    1) What’s inside the suitcase?
    2) Why did Wallace throw Tony Rocky Horror off the window?
    3) Why is Vincent reading the shown book in washroom? Is there any specific meaning for the book?

    Reply
  6. Ji I have few doubts.. QT Uses lot of vintage classic soundtracks in his movies.. WHETHER HE FACED ANY COPYRIGHTS ISSUES?? WHAT IF WE USE SAME OR OLD TAMIL TRACKS IN OUR MOVIES/SHORTFILMS ???

    Reply
  7. Anonymous

    ❤️❤️

    Reply

Join the conversation