Quentin Tarantino: Chapter 2 – Pulp Fiction – Part 3

by Karundhel Rajesh November 3, 2014   Cinema articles

க்வெண்டின் டாரண்டினோவைப் பற்றிய விரிவான இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம்.

Quentin Tarantino – An Analysis


 

நடனப் போட்டியில் வென்றபின் மியாவும் வின்ஸெண்ட்டும் வீடு வருகிறார்கள். இருவருமே போதை மருந்தின் பிடியில்தான் இருக்கிறார்கள். அப்போது மியா இருவரும் மது அருந்தலாம் என்று சொல்கிறாள். வின்ஸெண்ட் கழிவறைக்குச் செல்கிறான். மியா ஒரு பாடலை அங்கிருக்கும் ப்ளேயரில் போடுகிறாள். அதுதான் ’Girl.. You will be a woman soon’. இந்தப் பாடல் ஒரிஜினலாக Neil Diamond 1967ல் பாடியது. இதனை ஒரு cover versionஆக Urge Overkill 1992l செய்திருந்தனர். கவர் வெர்ஷன் என்றால், ஏற்கெனவே ஒருவர் பாடியிருக்கும் பாடலை எடுத்துக்கொண்டு மறுபடியும் இசையமைத்துக் கொண்டுவருவது. நீல் டயமண்டை இசை ரசிகர்கள் மறக்க முடியாது. மிகப் பிரபலமான நபர். இருந்தாலும், இப்போது இந்தப் பாடலைச் சொன்னால் அர்ஜ் ஓவர்கில்தான் பலருக்கும் நினைவு வருமளவு இன்னும் இந்தப் பாடல் பிரபலம். படத்தில் கச்சிதமாக வைக்கப்பட்டதுதான் காரணம்.

முதலில் இந்தக் காட்சிக்கான பாடலை யோசிக்கையில் இந்தப் பாடல் டாரண்டினோவின் மூளையிலேயே இல்லை. வேறு பல பாடல்கள் கேட்டு யோசித்துக்கொண்டிருக்கும்போது சட்டென்று அவருக்குத் தோன்றிய பாடல் இது. இந்தப் பாடலைப் பற்றி, ‘நீல் டயமண்டின் ஒரிஜினலைவிடவும் நன்றாக இசையமைக்கப்பட்டிருக்கும் பாடல்’ என்று டாரண்டினோ சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாடலுக்கு மியா வெளியே நடனமாடிக்கொண்டிருக்கும்போது உள்ளே வின்ஸெண்ட், அங்கிருந்து நேராக வீட்டுக்குச் சென்றுவிடுவதுதான் உத்தமம் என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். மியாவுடன் ஏதேனும் கசமுசா ஆகிவிட்டால் அவன் பாஸ் மார்ஸெலஸ் வாலஸால் கைவேறு கால்வேறாக வின்ஸெண்ட் பிய்க்கப்படுவது உறுதி. அப்போதுதான் விதிவசத்தால் அவர்கள் ரெஸ்டாரண்ட் செல்வதற்கு முன்னர் வின்ஸெண்ட் வாங்கிவந்த ஹெராயின் மியாவின் கையில் கிடைக்கிறது. அவள் அதனைக் கோக்கெய்ன் என்று நினைத்து மூக்கால் உறிஞ்சி, OD ஆகி மயக்கம் அடைந்துவிடுகிறாள். இது வின்ஸெண்ட்டுக்குத் தெரியாது. ஒருவழியாக, ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு வெளியே வரும் வின்ஸெண்ட்டின் reaction விலைமதிப்பற்றது (திரைக்கதையில் இந்த இடத்தில் இன்னும் ஓரிரண்டு வரிகள் வசனம் வரும். அது படத்தில் இல்லை).

மியாவைக் கிட்டத்தட்ட செத்தேவிட்ட நிலையில் பார்க்கும் வின்ஸெண்ட், அவனது வாழ்க்கை மார்ஸெலஸ் வாலஸின் கைகளால் நொறுக்கப்படப்போவதை உணர்கிறான். உச்சபட்சப் பரபரப்பில் அவளைத் தூக்கிக் காரில் போட்டுக்கொண்டு, ஹெராயினை வாங்கிய நண்பன் லான்ஸின் வீட்டுக்குப் புயல் வேகத்தில் பறக்கிறான். லான்ஸுக்கு ஃபோன் செய்கிறான். லான்ஸோ ஃபோன் பேசும் நிலையில் இல்லை. விடாப்பிடியாக அவனைப் பிடிக்கும் வின்ஸெண்ட், மியாவை அவனது வீட்டில் கொண்டுவந்து கிடத்துகிறான்.

பொதுவாக இப்படி ஒரு காட்சி எந்தப் படத்தில் வந்தாலும் அது மிகவும் சீரியஸான காட்சியாகத்தான் இருக்கும். எழுதும்போதே அப்படித்தான் எழுதத் தோன்றும். ஆனால் இதை வயிறு வெடித்துச் சிரிக்கவைக்கும் ஒரு காட்சியாக டாரண்டினோ எழுதியிருப்பார் (‘You’re supposed to laugh until I stop you laughing’ – QT). இதுபோல் ஆடியன்ஸை அவர்கள் எதிர்பார்க்கும் உணர்ச்சி இல்லாமல் முற்றிலும் வேறான உணர்ச்சியால் திசைதிருப்புவது டாரண்டினோவின் வழக்கம் என்பதை ரிஸர்வாயர் டாக்ஸ் படத்தின் காதை வெட்டும் காட்சியிலேயே பார்த்தோம். முதலிலிருந்து இறுதிவரை சிரித்துக்கொண்டே இருக்கவைக்கும் அந்தக் காட்சி இங்கே. இதில் வரும் வசனங்களையும், அவை பேசப்படும் தருணங்களையும் கவனியுங்கள். ப்ளாக் ஹ்யூமர் என்ற நகைச்சுவை வகைக்கு – உயிராபத்தான தருணங்களில் முட்டாள்தனமாக நடந்துகொண்டு ஆடியன்ஸைத் தங்களையறியாமல் சிரிக்க வைப்பது – மிக அட்டகாசமான உதாரணம் இந்தக் காட்சி என்பது விளங்கும்.

இந்தக் காட்சியை வின்ஸெண்ட் லான்ஸின் வீட்டுக்கு வருவதற்காக அவனைத் தொலைபேசியில் அழைக்கும் காட்சியில் இருந்து பார்த்தால்தான் இந்த டார்க் ஹ்யூமர் நன்றாகப் புரியும். கூடவே லான்ஸும் அவனது மனைவி ஜோடியும் பேசிக்கொள்வது, ஜோடி லான்ஸையும் வின்ஸெண்ட்டையும் பார்த்து எரிச்சல் அடைவது, வின்ஸெண்ட்டும் லான்ஸும் மியாவைப் பற்றிப் பேசுவது ஆகிய எல்லாவற்றையும் கவனித்துப் பாருங்கள். சிரிப்பை அடக்குவது கடினம் என்று புரியும்.

இந்தக் காட்சிக்குப் பிறகு மியாவை வீட்டில் கொண்டுவந்து விடுகிறான் வின்ஸெண்ட். பயத்தில் பேசவே முடியாத நிலையில் இருக்கிறான். அந்தக் காட்சி முடியும்போது மியா ஏற்கெனவே அவனிடம் சொல்லாமல் விட்ட ஒரு ஜோக்கைச் சொல்வாள். அதற்கு சுத்தமாக முடியாத நிலையில் மெலிதாக சிரித்துவிட்டு, மியா உள்ளே செல்கையில் ஒரு ஃப்ளையிங் கிஸ்ஸை அடித்துவிட்டு வின்ஸெண்ட் செல்வான்.

இதன்பின் தான் புட்ச்சின் அத்தியாயம் துவக்கம். The Gold Watch என்ற பெரிய அத்தியாயத்தின் மூலம் புட்ச் பாக்ஸிங் போட்டியில் வெல்வதையும், இதனால் மார்ஸெலஸ் வாலஸ் கடுப்பாகி புட்ச்சைத் தேடுவதையும், பின்னர் புட்ச்சின் காதலி, அவனது வீட்டிலேயே அவன் தந்தை அளித்த தங்கக் கடிகாரத்தை மறந்து வைத்துவிடுவதையும், இதனால் ஆத்திரமடையும் புட்ச் தானே அங்கு சென்று, எதேச்சையாக அங்கிருக்கும் வின்ஸெண்ட்டைக் கொல்வதையும், வெளிவரும்போது அவனை மார்ஸெலஸ் வாலஸ் பார்த்துவிட்டுத் துரத்துவதையும், இருவரும் மேய்னார்ட் என்ற கடைக்காரன் ஒருவனால் கட்டிப்போடப்பட்டு, அவனது பார்ட்னர் ஸெட் என்னும் போலீஸ்காரன் வந்ததும் முதலில் மார்ஸெலஸ் வாலஸ் அவர்களால் Sodomyக்குள்ளாக்கப்படுவதையும், அப்போது புட்ச் மேய்னார்டை ஒரு சாமுராய் கத்தியால் கொன்று மார்ஸெலஸைக் காப்பாற்றுவதால் அவனை ஊரை விட்டே ஓடச்சொல்லும் மார்ஸெலஸ் ஸெட்டைக் கொல்ல ஆரம்பிப்பதையும் இந்த அத்தியாயம் சொல்கிறது.  இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் வரும் புகழ்பெற்ற நான்கு பக்க வசனம் மிகவும் நகைச்சுவையானது. க்ரிஸ்டோஃபர் வா(ல்)க்கன் பேசுவது.

இந்த அத்தியாயத்தின் விசேஷம் என்ன தெரியுமா? மேய்னார்டின் கடைக்குள் புட்ச் வருகையில் அந்தக் கடையில் பல்வேறு சமாச்சாரங்கள் அடுக்கப்பட்டிருக்கும். பின்னர் புட்ச் அங்கிருந்து தப்பிக்கையில் ஒவ்வொரு ஆயுதமாக எடுத்துப் பார்ப்பான். அவையெல்லாமே டாரண்டினோவுக்கு மிகப் பிடித்தமானவை. பின்னால் கில் பில்லில் முக்கியப் பங்கு வகிக்கப்போகும் ஸாமுராய் கத்தியும் அவற்றில் ஒன்று. அந்தக் கத்தியால்தான் மேய்னார்டை புட்ச் கொல்வான் (ஏற்கனவே பார்த்த ரெஸ்டாரண்ட் காட்சியில் மியா விவரிக்கும் அவளது தொலைக்காட்சித் தொடரின் கதைதான் கில்பில் என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்துவிட்டோம்).

இதிலும் டார்க் ஹ்யூமர் இல்லாமலில்லை. எல்லோராலும் பயத்துடன் பார்க்கப்படும் மார்ஸெலஸ் வாலஸை ஒரு சாதாரணக் கடைக்காரன் ஸோடோமைஸ் செய்வது அப்படிப்பட்டதே. போலவே அதில் மார்ஸெலஸ் வாலஸாக நடித்திருக்கும் விங் ரேம்ஸின் முக்கல் முனகல்களைக் கேட்டாலே சிரிப்பு வரும். அந்தக் காட்சி முடிந்ததும் மார்ஸெலஸும் புட்ச்சும் பேசிக்கொள்ளும் காட்சியில் விங் ரேம்ஸ் அனாயாசமாக நடித்திருப்பார். அவரது ‘I am going medieval on his ass’ வசனம் புகழ்பெற்றது. போலவே ‘Oh that now what’ என்று சொல்லி அவர் பேசும் வசனமும். இதோ இந்த வீடியோவில் மார்ஸெலஸின் வசனங்கள் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றைப் படித்துப் பாருங்கள். பின்னால் பான்னி சிச்சுவேஷன் அத்தியாயத்தில் அறிமுகமாகப்போகும் மிஸ்டர் வுல்ஃப் கதாபாத்திரம் இப்போதே வசனங்களின் மூலம் ஆடியன்ஸுக்குக் காட்டப்பட்டுவிடும். புட்ச்சிடம் பேசிய மார்ஸெலஸ் ஃபோனில் வுல்ஃபை அழைப்பான். ‘Hello Mr. Wolf. It’s Marsellus. Gotta bit of a situation’ என்று அவரிடம் மார்ஸெலஸ் பேசுவதைக் கேட்கலாம் (இது வேற்றுமொழியில் இருந்தாலும், வசனங்கள் இங்கே ஹைலைட் செய்யப்படுவதுதான் முக்கியம்).

இதில் Gimp என்று அழைக்கப்படும் ஒரு அடிமையை வேறு மேய்னார்டும் ஸெட்டும் அடைத்து வைத்திருப்பார்கள். இவர்கள் ஸோடோமைஸ் செய்வதை அவனுக்கு முன்னால் அரங்கேற்றுவார்கள். அப்படி ஸோடோமைஸ் செய்யும் இடம்: Russel’s Old Room. ஆனால் ரஸ்ஸல் யார் என்பது படத்தில் இருக்காது. ’ரஸ்ஸலின் பழைய அறை’ என்றதுமே ரஸ்ஸல் என்ற மனிதன், அவன் உபயோகப்படுத்திய அறை என்றெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறதுதானே? அதுதான் அந்தப் பெயரில் உள்ள சூட்சுமம். இதுவும் ஒரு திரைக்கதை நுணுக்கம்தான். உயிரற்ற பொருட்களில் உயிருள்ள மனிதர்களை உலவ விடுவது. இதன்மூலம் காட்சியின் இயல்புத்தன்மை அதிகரிக்கும்.

ஒன்றை யோசித்தால், பல்ப் ஃபிக்‌ஷனில் எல்லாக் காட்சிகளுமே எப்போதுமே இரண்டு மனிதர்களுக்குள்ளாகத்தான் நடக்கின்றன. துவக்கத்தில் பம்ப்கினும் ஹனிபன்னியும்; பின்னர் வின்ஸெண்ட்டும் ஜூல்ஸும்; அடுத்து வின்ஸெண்ட்டும் மியாவும்; இதன்பின் புட்ச்சும் அவன் காதலி ஃபேபியனும்; இதன்பின்னர் என்ன நடக்கிறது என்று பார்த்தால் புட்ச் தனியாக மாட்டிக்கொள்கிறான்; முதலில் வின்ஸெண்ட்டைக் கொல்கிறான். பின்னர் ஸோடோமைஸ் செய்யும் மேய்னார்டிடமும் ஸெட்டிடமும் (இங்கும் இரண்டு பேர்) மாட்டிக்கொள்கிறான். எப்போது அவன் அங்கிருந்து தப்பிக்கிறான் என்றால், இன்னொரு இணையுடன் சேரும்போதுதான் (மார்ஸெலஸ்). இதுதான் பல்ப் ஃபிக்‌ஷனின் மையக்கருத்து என்பது டாரண்டினோவின் வாய்மொழி. இந்தப் படத்தில் ஒரு டீமாக இருக்கும்போதுதான் அனைவருக்கும் அனைத்தும் நடக்கிறது.

அதேபோல் மார்ஸெலஸை மேய்னார்டும் ஸெட்டும் ஸோடோமைஸ் செய்யும் காட்சியில் ஒரு அசத்தலான இசை வரும். அதன்பெயர் – Comanche. இந்தப் பாடல், The Revels என்ற ராக் குழுவினருடையது. பாடல் உருவான வருடம் 1961. ஏன் இந்தப் பாடல்? உண்மையைச் சொன்னால், இந்தக் காட்சியில், மார்ஸெலஸைக் குனியவைத்து ஸோடோமைஸ் செய்யும்போது அந்த ரிதத்துக்கு இணையாக ரிதம் இருக்கும் பாடல் ஒன்றையே டாரண்டினோ தேடினார். அப்படி அவர் முடிவுசெய்தது – The Knack என்ற குழுவின் My Sharona என்ற பாடல். அதைக் கீழே பார்க்கலாம். அதன் ரிதத்தை கவனியுங்கள். ஒரேபோன்ற ட்ரம்ஸ் இசை, ஸோடோமைஸ் செய்வதற்குச் சரியான ரிதமாக இருக்கும்.

ஆனால் அந்தக் குழுவில் ஒரு நபர், போயும் போயும் ஸோடோமைஸ் செய்யும் காட்சி ஒன்றுக்கு எங்கள் பாடலைக் கொடுப்பதா என்று மறுத்ததால், அந்தப் பாடல் டாரண்டினோவை விட்டுப் போயிற்று. மாறாக Reality Bites படத்தில் அந்தப் பாடல் உபயோகப்பட்டது. அப்போது டாரண்டினோவின் மனதில் உதித்ததுதான் Comanche பாடல். My Sharona பாடலை விடவும் அட்டகாசமான ரிதத்தோடு மார்ஸெலஸ் வாலஸ் ஸோடோமைஸ் செய்யப்படும் காட்சிக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியது.

இந்தக் காட்சி முடிந்தபின்னர்தான் படத்திலேயே எனக்கு மிகப்பிடித்த அத்தியாயம் – The Bonnie Situation – வருகிறது. அதைப்பற்றியும், படத்தின் epilogue பற்றியும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

தொடரலாம்…

பி.கு – Sodomy அல்லது Sodomize செய்யப்படுதல் என்றால், ஆண்கள் உறவுகொள்ளுதலைக் குறிக்கும்.

  Comments

2 Comments

  1. greedaran

    Rajesh, I dint expect you complete this in a hurry. I found your detailed review style missing at many interesting places. I am eagerly waiting for KILL BILL-1, especially about the music played behind.

    Reply
  2. Thiru

    thala only pulp fiction let me down from the high expectation than all other QT movies,can you please back up with your views how ?i had better feeling watching Reservoir Dog than Pulp fiction. as a request why you are not expressing your view about Alejandro González Iñárritu.

    Reply

Join the conversation