Quentin Tarantino: Chapter 3 – Jackie Brown : Part 5

by Karundhel Rajesh May 20, 2015   English films

க்வெண்டின் டாரண்டினோவைப் பற்றிய விரிவான இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம்.

Quentin Tarantino – An Analysis


“Not only do I think it is the best adaptation of any of my work, I think it is the best script I have ever read. That was not an adaptation; that was my novel.” – Elmore Leonard

ரிஸர்வாயர் டாக்ஸ் படம் வெளியான பின்னர், Pulp Fiction திரைப்படத்தை எடுக்கத் துவங்குமுன்னர், டாரண்டினோ ஒரு நாவலைப் படிக்க நேர்கிறது. அது இன்னும் வெளியாகியிருக்கவில்லை. ஹாலிவுட்டின் ஒரு விசித்திரமான வழக்கம் என்னவெனில், யாரேனும் பிரபலமான நாவலாசிரியரின் புதிய புத்தகம் வெளியாகுமுன்னர் அதன் பிரதி ஒன்று சில ஸ்டுடியோக்களுக்குப் போகும். இது ஏனெனில், அவை நன்றாக இருந்தால் உடனடியாக அவற்றின் திரைப்பட உரிமையை அந்த ஸ்டுடியோக்கள் வாங்கிவிடும். இதன்பின்னரே அவை பதிப்பிக்கப்படும். அப்படி ஒரு பிரதி டாரண்டினோவின் கைகளுக்குக் கிடைத்தது. நாவலின் பெயர் – Rum Punch.   அந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளரின் ஏஜெண்ட், டாரண்டினோவின் நண்பர் லாரன்ஸ் பெண்டரின் நெருங்கிய தோழர். நாவல் டாரண்டினோவுக்கு மிகவும் பிடித்துப்போகிறது. அதை எழுதியவர், டாரண்டினோவுக்கு மிகவும் பிடித்த நாவலாசிரியரும் கூட. அவரது வசனங்கள்தான் தன்னைத் திரைப்படம் எடுக்கத் தூண்டின என்று டாரண்டினோவே சொல்லியிருக்கிறார். எனவே, உடனடியாக, இதைத் திரைப்படமாக எடுக்க விரும்புகிறோம் என்று டாரண்டினோவும் தயாரிப்பாளர் லாரன்ஸ் பெண்டரும் (Lawrence Bender) பதிப்பகத்துக்குத் தகவல் அனுப்புகின்றனர். ஆனால் பதிப்பகமோ, ‘Pulp Fiction முடிந்ததுமே இந்த நாவலைப் படமாக எடுக்கப்போகிறேன் என்று ஒப்பந்தம் இட்டால்தான் கொடுக்க முடியும். அப்படி ஒருவேளை இந்த நாவலைப் படமாக நீங்கள் எடுக்காவிட்டால் நாவலை எழுதியவருக்குப் பிரச்னையாகும். ஏனெனில், இதை நீங்கள் குறைந்த பட்ஜெட்டில்தான் எடுப்பீர்கள். எனவே நாவலையும் குறைந்த பணத்துக்கே எங்களிடமிருந்து வாங்குவீர்கள். அதற்கு நாங்கள் தயார். ஆனால் நீங்களும் சொன்னபடி படத்தை உடனடியாக எடுத்துக்கொடுத்துவிடவேண்டும்’ என்றது.

உடனடியாக டாரண்டினோவும் பெண்டரும் அந்த நாவலைப் படமாக எடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டனர். ஏனெனில், Pulp Fiction முடிந்தபின்னர் என்ன செய்யலாம் என்ற எண்ணம் டாரண்டினோவுக்குத் துளிக்கூட இன்னும் வந்திருக்கவில்லை. ஒருவேளை நாவலை எடுக்கமுடியாமல்போய்விட்டால் கஷ்டம்.

இந்த நிலையில்தான் Pulp Fiction வெளியாகிறது. படம் உலகம் முழுக்கவும் பிரபலம் அடைகிறது. கான் விழாவில் பரிசும் பெறுகிறது. இதனால் லாரன்ஸ் பெண்டரும் டாரண்டினோவும் மிகப்பிரபலம் அடைய, உடனடியாக லாரன்ஸ் பெண்டரிடம் அதே நாவலாசிரியர் எழுதிய மூன்று நாவல்கள் அனுப்பப்பட்டன. ‘இவைகளைப் படமாக எடுக்க சம்மதமா’ என்ற வரியுடன். அவற்றில் ஒன்று – அதே Rum Punch. இம்முறை டாரண்டினோ சற்றே எச்சரிக்கையுடனேயே அந்த நாவலை அணுகினார். ‘இதை நாம் தயாரிக்கலாம். வேறு யாராவது இயக்கட்டும்’ என்பதே இருவரின் எண்ணமாகவும் இருந்தது. அந்த நாவலைப் படித்துச் சிலகாலம் ஆனதால், இன்னொருமுறை படிப்போமே என்று டாரண்டினோ அதைப் படித்தார். படிக்கப்படிக்க, முதல்முறை படிக்கையில் அவர் மனதில் ஓடிய காட்சிகள் அவருக்கு ஒவ்வொன்றாக நினைவு வந்தன. நாவலை முழுதாகப் படித்து முடிக்கையில் அந்த முழு நாவலுமே அவர் மனதில் படமாக ஓடியதாக டாரண்டினோவே சொல்லியிருக்கிறார். எனவே, இவ்வளவு நல்ல நாவலைக் கைவிட மனமே வராததால், உடனடியாக அந்நாவலைப் படமாக எடுக்கப்போவதாக லாரன்ஸ் பெண்டரிடம் டாரண்டினோ சொல்ல, அப்படி உருவானதுதான் ஜாக்கி ப்ரௌன்.

யாரந்த நாவலாசிரியர்?

அவர் பெயர் எல்மோர் லியனார்ட் (Elmore Leonard). 1951ல் எல்மோர் லியனார்ட் எழுதிய Trail of the Apaches என்ற சிறுகதை பிரபலம் அடைந்தது. அது ஒரு வெஸ்டர்ன் கதை. இதனால் அதன்பின்னர் முப்பது வெஸ்டர்ன் சிறுகதைகளை வரிசையாக எழுதி வெளியிட்டுப் பிரபலம் ஆனார் லியனார்ட். இதன்பின்னர் பல வெஸ்டர்ன் நாவல்களையும் எழுதினார். அவைகளில் பலவும் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டன. 3:10 to Yuma படம் நினைவிருக்கிறதுதானே? அது இவரது நாவல்தான். இவர் நாவல்களாக எழுதிக் கிட்டத்தட்ட 17 திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. Get Shorty மற்றும் அதன் இரண்டாம் பாகமான Be Cool ஆகியவையும் இவர் எழுதிய நாவல்களே. அமெரிக்காவின் மிகப் பிரபலமான நாவலாசிரியர்கள் ஒருவர். தனது 87வது வயதில் 2013ல் இறந்துவிட்டார்.

தான் சிறுவயதில் லியனார்டின் நாவல்களைத்தான் முதன்முதலில் படிக்க ஆரம்பித்ததாக டாரண்டினோ சொல்லியிருக்கிறார். அவர் மட்டும் அல்ல. அமெரிக்காவில் பலரும் அப்படித்தான். இதனால் இயல்பாகவே லியனார்டின் வசனமெழுதும் பாணி டாரண்டினோவுக்கு ஒட்டிக்கொண்டது. இருவரின் வசனங்களையும் கவனித்தால், யார் எதை எழுதியது என்றே தெரியாத அளவு ஒரே போன்று அவை இருக்கும். ‘வசனங்களை எப்படி வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம் என்பதை எனக்கு நிரூபித்த நாவலாசிரியர் லியனார்ட்’ என்று டாரண்டினோ சொல்லியிருக்கிறார். வசனங்களில் கதையை மட்டும்தான் சொல்வது என்று இல்லாமல், கதாபாத்திரங்கள் எதைவேண்டுமானாலும் பேசுவதன்மூலம் அவைகளின் தன்மையை ஆடியன்ஸுக்கு விளக்கும் வகையிலான வசனங்களே லியனார்டின் பாணி. அதைத்தான் Pulp Fiction படத்தில் வெற்றிகரமாக டாரண்டினோ உபயோகித்தார்.

ஒரு நாவலைத் திரைக்கதையாக மாற்றுவதுதான் இருப்பதிலேயே மிகவும் கடினமானது. ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ புத்தகத்தில் இதைப்பற்றியே ஒரு முழு அத்தியாயம் உள்ளது. ஏனெனில் நாவல் என்பது குறைந்தபட்சம் 250 பக்கங்கள் உடையது. அதிகபட்சம் 1000 பக்கங்கள் இருக்கலாம். இதனை எப்படி ஒரு 120 பக்கத் திரைக்கதையாக மாற்றுவது? எந்த நாவலாக இருந்தாலும் அதில் ஒருவிதமான பாணி இருக்கும். படிக்கையிலேயே அது நமது மனதில் பதிந்துவிடும். அதே பாணி திரையிலும் அப்படியே இருந்தால்தான் அந்தப் படத்தை மக்கள் ஒத்துக்கொள்வர். உதாரணமாக லார்ட் ஆஃப் த ரிங்ஸ், காட்ஃபாதர் முதலிய நாவல்கள். அதுதான் மிகவும் கடினமானதும்கூட. நாவலாசிரியரின் மனதில் திரைக்கதையாசிரியர் கூடு விட்டுக்கூடு பாய்ந்தால்தான் அது சாத்தியம். அது பலருக்கும் வராத கலை. ஆனால் டாரண்டினோவின் ஆதர்ச எழுத்தாளராக லியனார்ட் இருந்ததால், இருவரின் பாணியும் ஒரே போன்றது என்பதால், டாரண்டினோவுக்கு அது சாத்தியமாயிற்று. நாவலை வைத்துக்கொண்டு ஒரு வருடத்தில் ஒரு திரைக்கதையை எழுதினார் டாரண்டினோ.

நாவலில் வரும் ஜாக்கி ப்ரௌன் என்ற பெண்மணி உண்மையில் கறுப்பினப் பெண் அல்ல. மாறாக, சராசரி அமெரிக்கப் பெண். ஆனால் நாவலைப் படிக்கும்போதே ஆரண்டினோவின் மனதில் உருவாகியிருந்த படத்தில் அந்தக் கதாபாத்திரத்தைக் கறுப்பினப் பெண்ணாகவேதான் அவரால் பார்க்க முடிந்தது. இதனால் அக்கதாபாத்திரத்தை அப்படியே திரைக்கதையில் உருவாக்க முடிவுசெய்தார் டாரண்டினோ. அதுதான் நாவலுக்கும் திரைப்படத்துக்குமான பிரதான வேறுபாடு. திரைக்கதையை எழுதும்போது அந்தக் கதாபாத்திரத்துக்கு உண்டான நடிகையாக பாம் க்ரையர்தான் டாரண்டினோவின் மனதில் தோன்றினார். ஏனெனில், அந்தக் கதாபாத்திரத்துக்கு 40 வயது இருக்கலாம்; அந்த வயதிலும் நிலையான வேலை இல்லாமல் தன் வாழ்க்கையைப் பணயமாக வைத்துக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டே பணம் சம்பாதிக்கிறாள் கதாநாயகி. அவளைச்சுற்றி இருக்கும் அனைவருமே அவளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இன்னுமே போலீஸுக்குப் பயந்தே வாழவேண்டிய சூழல். இந்த வேலையும் எப்போது போகும் என்பதே அவளுக்குத் தெரியாது. இப்படிப் பல சிக்கல்கள் அவளைச் சூழ்ந்துள்ளன. இப்படி ஒரு கதாபாத்திரத்தைத் தனது தோளில் தூக்கிச்சுமக்கும் வெள்ளைக்கார நடிகைகள் யாருமே இல்லை என்பது டாரண்டினோவின் கருத்து. எழுபதுகளின் அதிரடிப் படங்களில் ரிவால்வர் ரீட்டா போன்று நடித்துக்கொண்டு மிகவும் பிரபலமாக இருந்து, இப்படம் எடுக்கப்படும்போது வாய்ப்புகளே இல்லாமல் இருந்த பாம் க்ரையர்தான் (Pam Grier) இதற்குச் சரியான ஆளாக இருப்பார் என்பது டாரண்டினோவுக்கு உடனடியாகத் தோன்றிய எண்ணம்.

பாம் க்ரையர் ஒரு சூப்பர்ஸ்டார் என்பதால், அந்தக் கதாபாத்திரத்தை விளக்கக்கூடிய கஷ்டம் டாரண்டினோவுக்கு இருக்கவில்லை. இப்படி யோசித்துப் பாருங்கள்: டாம் க்ரூஸ் அல்லது அமீர்கான் அல்லது கமல்ஹாஸன்/ரஜினிகாந்த் ஆகியோர் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால், அந்தக் கதாபாத்திரம் எப்படிப்பட்டதாக இருக்கும்? படம் துவங்கும்போது அடக்கி வாசித்தாலும், எப்படியும் பின்னர் அக்கதாபாத்திரம் விஸ்வரூபம் அடைந்து நிற்கும் என்பது ஆடியன்ஸுக்குத் தெரிந்துவிடும்தானே? அப்படிப்பட்டவர்தான் பாம் க்ரையர். அவர் வந்தாலே ஆடியன்ஸுக்கு விசில் அடிக்கத்தோன்றும். இதனால் படத்தில் வரும் ஜாக்கி ப்ரௌன் கதாபாத்திரம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது அவர் அறிமுகமாகும்போதே ஆடியன்ஸுக்குத் தெரிந்துவிட்டது.

சூப்பர்ஸ்டாரான பாம் க்ரையருக்கு ஒரு அட்டகாசமான துவக்கக்காட்சியை வைத்தார் டாரண்டினோ. பாம் க்ரையரின் அதிரடிப் படங்களில் பலவற்றில் அவரது ஓப்பனிங் காட்சி எப்படி இருக்கும் என்றால், அவர் நடந்து வருவதையேதான் காட்டுவார்கள். அப்படி நடந்துவந்து திடீரென்று எதையாவது அந்தப் பாத்திரம் செய்யும். இதனால், அதைவிடவும் அட்டகாசமாக ஒரு காட்சியை எடுக்கவேண்டும் என்பது டாரண்டினோவின் எண்ணம். அப்படி ஒரு காட்சியை நிஜமாகவே எடுத்தார். பாம் க்ரையர் அறிமுகமாகி, நடந்துவரும் மிக நீளமான காட்சி அது. ரஜினியோ கமலோ அறிமுகமாகும் காட்சி நீளமாக இருந்தால் ரசிகர்களுக்குக் குஷி அதிகரிக்கும்தானே? அப்படி ஒரு ஜாலியை இக்காட்சியின்மூலம் டாரண்டினோ அளித்தார். அதைப் பார்க்கையிலேயே பாம் க்ரையரின் கம்பீரம் ஆடியன்ஸுக்குப் புரியவேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். அதேசமயம், துவக்கத்தில் பிரம்மாண்டமாக இருந்து, அந்தக் காட்சி முடிகையில் அந்தக் கதாபாத்திரம் செய்யும் வேலையைக் கவனித்தால் ஆடியன்ஸுக்கு அதன் கஷ்டமும் புரியவேண்டும் என்பது டாரண்டினோவின் நோக்கம். அது அப்படியே துல்லியமாகப் பலித்தது.

இதுதான் அந்த ஓப்பனிங் காட்சி.

அதேபோல், பாம் க்ரையரின் பிரம்மாண்டமான இமேஜுக்கு டாரண்டினோ செய்த மரியாதையாக, இதோ இந்த மற்றொரு ஓப்பனிங் காட்சியையும் காணலாம். இது, திரைப்படத்தின் டிவிடியில் உள்ளது. இதுதான் உண்மையில் எனக்குப் பிடித்தது. ஆனால் இதைத் திரைப்படத்தில் வைக்கமுடியாது. பார்த்தால் தெரிந்துகொள்வீர்கள்.

இதுதான் டாரண்டினோவின் ஸ்டைல். தனக்குப் பிடித்தமானவற்றைத் தான் எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ அப்படியே ஆடியன்ஸுக்கு அளிக்கவேண்டும் என்பது அவரது கொள்கை.

டாரண்டினோவின் ஜாக்கி ப்ரௌன் முழுக்க முழுக்க ஒரு பாம் க்ரையர் படம். படத்தின் தரத்துக்கு அவரது இருப்பு இன்னும் ஒரு சுவாரஸ்யமான ஏற்றத்தை அளித்திருக்கும். இதேபோல் படத்தில் இன்னொரு பிரம்மாண்டமான கதாபாத்திரமாக ஸாமுவேல் ஜாக்ஸன் நடித்திருப்பார். அவரது கதாபாத்திரம் பாம் க்ரையர் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரானது. இதைப்போலவே படத்தில் ராபர்ட் டி நீரோவும் மறக்கமுடியாத கதாபாத்திரம் ஒன்றைச் செய்திருப்பார். இந்த மூன்று பேருடன், அக்காலகட்டத்தின் இன்னொரு மறக்கடிக்கப்பட்ட நடிகரான ராபர்ட் ஃபார்ஸ்டர், மைக்கேல் கீட்டன், இப்போது பிரபலமாக இருக்கும் க்ரிஸ் டக்கர், நடிகை ப்ரிட்ஜெட் ஃபோண்டா ஆகிய பலரும் நடித்திருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்கள் இருக்கும்.

படத்தின் முக்கியமான காட்சிகளில் இது ஒன்று. ஸாமுவேல் ஜாக்ஸனின் கதாபாத்திரத்தின் தன்மையை விளக்க இதை டாரண்டினோவே எழுதினார். நாவலில் இல்லாத காட்சி இது.

எந்த ஒரு நாவலையும் படமாக எடுக்கும்போது, அந்த நாவலின் ஜீவன் கெடாமல் எடுப்பது அசாத்தியம். ஸ்கார்ஸேஸி, ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் கேப்பலா, ஃப்ராங்க் டாரபாண்ட் போன்ற மிகச்சில இயக்குநர்களுக்கே அது சாத்தியம். டாரண்டினோவின் இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு, அது எப்படி மெதுவாக ஒரு நாவலைப்போலவே துவங்குகிறது என்பதும், சிறுகச்சிறுக இந்தப்படத்தின் வேகம் எப்படி அதிகரிக்கிறது என்பதும் தெரியும். நாவலின் ஜீவன் துளிக்கூடக் கெடாமல் பார்த்துக்கொண்டார் டாரண்டினோ (Beaumont என்ற ஸாமுவேல் ஜாக்ஸனின் கதாபாத்திரத்தை நிறுவ அவரே சொந்தமாக ஒரு காட்சியை எழுதியபோதும், எல்மர் லியனார்டே அதை எழுதியிருந்ததைப்போல மேலே இருக்கும் அக்காட்சி அமைந்திருக்கும்).

இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி அறிமுகமாகின்றன என்பதையும், அவற்றுக்குள் நடைபெறும் காட்சிகள் எப்படி சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனித்துப் பாருங்கள். நல்ல திரைப்படம் ஒன்றை எப்படி எழுதுவது என்று அனுபவபூர்வமாக விளங்கிவிடும்.ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, குணாதிசயங்கள், பேச்சு முறை, உடல்மொழி ஆகியவை தெளிவாக இருக்கும். இதனால் படம் ஆரம்பித்ததுமே இவர்கள் நமது நினைவில் தங்கிவிடுவார்கள்.

படம் வெளியாவதற்கு முன்னர் ரிலீஸான ஒரிஜினல் ட்ரெய்லர் இது.

Pulp Fiction படம் வெளியானபின்னர் வெளிவரப்போகும் புதிய படம் என்பதால் ஜாக்கி ப்ரௌன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் டாரண்டினோவோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், லோ பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்து வெளியிட்டார். படமும் ஹாலிவுட்டில் வெற்றிபெற்றது. இந்தப் படத்துக்குப் பின்னர் ஆறு வருடங்கள் திடீரென்று மறைந்துபோனார் டாரண்டினோ. அவர் என்ன செய்கிறார் – எங்கு இருக்கிறார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. மூன்று வெற்றிப்படங்கள் கொடுத்துவிட்டு ஒரு இயக்குநர் சட்டென்று மறைந்துவிட்டால் எப்படி இருக்கும்? அனைவரும் மண்டையைப் பிய்த்துக்கொண்டனர். அவ்வப்போது எதாவது ஒரு விழாவுக்கு டாரண்டினோ வருவார். ஒருசில பேட்டிகள் கொடுப்பார். பின்னர் திடீரென மறைந்துவிடுவார். இப்படியே ஆறு வருடங்களைக் கழித்தார். அந்த ஆறு வருடங்களில் அவர் என்ன செய்தார் என்பதை அடுத்த கட்டுரையில் காணலாம்.

தொடரும்…

Jackie Brown poster taken from – http://fc00.deviantart.net/fs29/f/2008/153/2/5/Jackie_Brown_again_by_oloff3.jpg

  Comments

1 Comment;

  1. Prasanna Kannan

    Wow.. Its Jackie Brown now..
    An ‘infamous’/’underrated’ QT’s gem in pre 2000 era.
    People often talk about Pulp fiction & Reservoir Dogs, but no much about Jackie Brown. Either they might not aware of this flick or they might feel its not up to the standards of PF & RD.
    Whatever.. I would always rate Jackie Brown on top of this 3 😉

    I think this is the only QT’s ‘adapted’ movie. Not sure though..

    Robert De Niro was a surprise and subtle package in this movie.
    My fav. moment was how he handled Melanie when she kept on bullying him.. 🙂
    Robert De Niro: Keep your f**king mouth shut.. All right? .. I mean it.. Not even one f**king word!
    Melanie: Okay..
    BANG!!!!!!!!!!!!!

    Reply

Join the conversation