Ran (1985) – Japanese

by Karundhel Rajesh December 30, 2009   world cinema

திரைப்பட உலகில், மக்களுக்காகப் படமெடுக்கும் இயக்குநர்கள் பல பேர் உண்டு. அதே போல், தங்களது திருப்திக்காகப் படமெடுக்கும் இயக்குநர்களும் சில பேர் உண்டு. இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த இயக்குநர்களின் படங்கள், பெரும்பாலும் நம்மைச் சிந்திக்க வைக்கும். அவர்களது படங்கள், ஒரு அழகான, கலாபூர்வமான அனுபவங்களாக இருப்பவை. உலக வாழ்வின் அழகை, அபத்தத்தை, கோரத்தை, துன்பத்தை – இப்படிப் பல உணர்ச்சிகளை – உள்ளது உள்ளபடியே திரையில் காண்பிக்கும் இவர்களது படங்கள், திரைப்பட ரசிகர்களுக்கு விருந்தாக அமைபவை (ஆனால், அதற்காக, வணிகத் திரைப்படங்களை நான் ஒதுக்கவில்லை. அவையும் நமக்குத் தேவைதான்). அத்தகைய ஒரு சிறந்த இயக்குநரான அகிரா குரஸவாவின் ஒரு படம் தான் ‘ரான்’.

இப்படத்தை நாம் பார்க்கும் முன், ஒரு சிறிய விளக்கம். இந்த வலைப்பூவில், அனைத்து வகையான படங்களும் இடம்பெறுவதை, நண்பர்கள் கண்டிருக்கலாம். நான் அனைத்துப் படங்களையும் விரும்பிப் பார்ப்பவன். ஒரு மொக்கைப் படத்தில்கூட, ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும் என்பதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன். எனவே, அத்தனை வகையான படங்களும் இதில் இடம்பெறும். முடிந்தவரை, ஒரே மாதிரியான படங்களைப் பற்றி எழுதாமல், வகைவகையான படங்களைப் பற்றி எழுத முயல்கிறேன். ஒருவேளை எனது விமர்சனங்கள் ஒரே வகையாகப் போய்க்கொண்டிருப்பதாக உங்களுக்குத் தோன்றினால், நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம்.

இப்பொழுது ‘ரான்’. குரஸவா, 1985ல் எடுத்த இந்தப்படம், அவரது படங்களிலேயே அதிக பொருட்செலவில் – 12 மில்லியன் டாலர்கள் – எடுக்கப்பட்ட ஒரு படம். பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து, பதினேழாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை இருந்த காலத்தை, ‘செங்கோகு’ என்று ஜப்பானில் சொல்வார்கள். அந்தக் காலகட்டத்தில் நிகழும் ஒரு கதை தான் இந்த ‘ரான்’. பதவி வெறியில், அதிகார பீடத்தில் இருப்பவர்கள், எவ்வாறு தங்களைத் தாங்களே கொன்றுகுவித்துக்கொள்கிறார்கள் என்பதே இந்தப் படத்தின் மையக்கரு. இப்படம், ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’ நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

‘இசிமோஞ்சி’ என்பது ஜப்பானில் ஒரு அரச வம்சம். இந்த வம்சத்தின் சக்கரவர்த்தி, ஹிததோரா. முதுமையினால் பீடிக்கப்பட்ட இந்த மன்னர், தனது சாம்ராஜ்யத்தை, தனது மூன்று புதல்வர்களுக்கும் பிரித்துக்கொடுக்க விரும்புகிறார். முதல் புதல்வனான தாரோ, இசிமோஞ்சி வம்சத்தின் தலைவனாக அறிவிக்கப்படுவான் என்றும், வம்சத்தின் அரசு தர்பாரான கோட்டை அவனுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவிக்கிறார். இரண்டாவது புதல்வனும் (ஜிரோ) மூன்றாவது புதல்வனும் (சபுரோ), தாரோவுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறார். மூன்றாவது மகனான சபுரோ இதனை ஆட்சேபிக்கிறான். எப்படியும் கிளர்ச்சி நேர்ந்து, அபாயம் விளையும் என்பது அவன் கட்சி. அவன் தன்னை எதிர்ப்பதாக நினைத்துக் கொள்ளும் மன்னர், சபுரோவையும் அவனது மெய்க்காப்பாளன் தாங்கோவையும் தேசப்பிரஷ்டம் செய்து விடுகிறார்.

ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் தாரோ, முழு அதிகாரமும் தனக்கு வேண்டும் என்று மனைவியால் மூளைச்சலவை செய்யப்பட்டு, தனது தந்தையுடன் விவாதிக்கிறான். கோபம் கொள்ளும் ஹிததோரா, அப்போது நடக்கும் ஒரு சிறிய கைகலப்பில், தாரோவின் ஆள் ஒருவனைக் கொன்றுவிட்டு, அந்தக் கோட்டையிலிருந்து தனது சிறிய படையுடன் வெளியேறுகிறார். இரண்டாம் மகனின் கோட்டைக்குச் செல்லும் ஹிததோரா, அவனும் தனக்கு எதிராகத் தான் இருக்கிறான் என்று தெரிந்துகொள்கிறார். அந்தக் கோட்டை, ஹிததோரா இளம் வயதில் கைப்பற்றிய ஒரு கோட்டை. அதன் மன்னனைக் கொன்று, அவன் மகளை, தனது இரண்டாம் மகனான ஜிரோவிற்கு மணமுடித்து வைத்திருக்கிறார் ஹிததோரா. அந்தப்பெண்ணைச் சந்தித்துப் பேசுகிறார். அவள், அவரை மன்னித்துவிட்டதாகக் கூறுகிறாள்.

அங்கிருந்து வெளியேறும் ஹிததோரா, சுற்றுவட்டாரத்தில், எங்குமே உணவு இல்லாததைக் கண்டு மேலும் அதிர்ச்சியாகிறார். முதல் இரண்டு புதல்வர்கள் ஒன்று சேர்ந்து, அவரை அலைக்கழிப்பதைப் புரிந்து கொள்கிறார். வேறுவழியே இல்லாமல், தனது கௌரவத்தைத் துறந்து, மூன்றாவது மகனிடம் செல்ல எத்தனிக்கிறார். அப்போது, தாரோவும் ஜிரோவும் அவர் மேல் படையெடுத்து, அவரது அத்தனை படையையும் கொன்று குவித்து விடுகிறார்கள். இந்தப் போரில், தாரோவை, ஜிரோவின் தளபதி குரோகானேவின் ஆட்கள் வஞ்சகமாகச் சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.

போரின் முடிவில், ஹிததோரா, மனநலன் பாதிக்கப்பட்டு, கால்போன போக்கில் சென்று விடுகிறார். ஒரு பைத்தியம் பிடித்த நாடோடியைப் போல் அலையும் அவருடன், அரசவை விதூஷகனும், மூன்றாம் மகனான சபுரோவின் மெய்க்காவலனும் மட்டுமே இருக்கிறார்கள்.

ஜிரோ, சக்கரவர்த்தியாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். அவனிடம் வரும் தாரோவின் மனைவியான காய்தே, அவனைத் தாக்கி, அவனது பல சூழ்ச்சிகளையும், அவன்தான் தன் அண்ணனான தாரோவைக் கொன்றவன் என்பதையும், தான் வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால், தன்னை அவன் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், தன்னால் அந்த அரண்மனையையும் அந்த வசதிகளையும் விட்டுவிட்டுப் போக முடியாது என்றும் சொல்கிறாள். ஜிரோவும் ஒத்துக் கொள்கிறான். அவள், சிறுகச்சிறுக அவனைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறாள். அவனது முதல் மனைவியைக் கொல்லவும் உத்தரவிட்டு விடுகிறாள். மறுக்கும் தாரோவின் தளபதி குரோகானே, தாரோவிடம், அவளைப் பற்றி எச்சரிக்கை செய்கிறார். முதல் மனைவியிடமும் போய், தப்பித்து ஓடும்படி சொல்லிவிடுகிறான்.

செய்தி கிடைத்து அங்கு தனது படையுடன் வந்து சேரும் மூன்றாவது மகன் சபுரோ, தன் தந்தையைத் தேடுகிறான். ஜிரோவின் படைக்கும் சபுரோவின் படைக்கும் போர் நிகழ்கிறது. ஜிரோவின் முதல் மனைவியை, காய்தேயின் ஆட்கள் கொன்றுவிடுகின்றனர். இது தெரிந்த தளபதி குரோகானே, அவளிடம் சென்று விசாரிக்க, தனது குடும்பமும் இசிமோஞ்சி வம்சத்தால் அழிக்கப்பட்டதை நினைவுகூரும் காய்தே, தான் இப்படியெல்லாம் நடந்துகொண்டது, அந்த வம்சத்தைப் பூண்டோடு அழிப்பதற்காகவே என்று கொக்கரிக்கிறாள். குரோகானே, அவள் தலையைச் சீவிவிடுகிறான்.

போரில், ஜிரோவும் குரோகானேவும் கொல்லப்படுகிறார்கள். எஞ்சி நிற்கும் சபுரோ, தன் தந்தையைக் கண்டுபிடிக்கிறான். தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ஜிரோவின் எஞ்சிய படையினரால், சுடப்பட்டு இறக்கிறான். இந்த அதிர்ச்சி தாளாமல், மாமன்னர் ஹிததோரா, மகனின் சடலத்தின் மீதே விழுந்து உயிர் துறக்கிறார். இசிமோஞ்சி வம்சம், முற்றிலுமாக அழிந்துபோய்விடுகிறது. இந்த இருவரின் சடலங்களும் படையினரால் கொண்டுசெல்லப்படுகின்றன. மலைமீது, குருடனான ஒருவன் (ஜிரோவின் மனைவியின் தம்பி- ஹிததோராவினால் குருடாக்கப்பட்டவன்) ஒரு படத்தைத் தவறவிடுகிறான். புத்தரின் படமே அது. அந்தப் படத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கையில், படம் முடிகிறது.

மிக அருமையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், நெடுகிலும் ஒரு தத்ரூபமான நாடகத்தை நாம் கண்டுகொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் பாதியில் வரும் அந்தப் போர்க்களக்காட்சிகள், எந்த கிராஃபிக்ஸ்களும் இல்லாமல், துல்லியமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. ரத்தமும் வலியும் இந்த அளவு நம் கன்னத்தில் அறைவதைப் போல் படமாக்கப்பட்டிருப்பதை, (இதுவரை) நான் வேறு எந்தப் படத்திலும் கண்டதில்லை. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற புத்தரின் வரிகள், படம் நெடுகிலும் நம்மை வந்து அடைந்துகொண்டே இருக்கின்றன. நடிப்பிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள் இந்தப் படத்தில் நடித்த அனைவருமே.

பண்டைய காலத்தில், ஜப்பானில், மன்னர்கள் எந்த அளவு கௌரவத்துடனும், செறுக்குடனும், ஆணவத்துடனும் வாழ்ந்தார்கள் என்று இந்தப் படம் நமக்குத் தெரிவிக்கிறது. பல பேரைக் கொன்று குவித்த ஒரு பேரரசன், இறுதியில், தான் கொன்ற அனைவரும் தன் முன்னே வந்து நிற்பதைக் காண்கிறான். அத்தகைய ஒரு போரின்போதே, அவனுக்குப் புத்தி பேதலித்து விடுகிறது. இறக்கும் தறுவாயில், தான் செய்ததை எண்ணி வருந்துகிறான். இருப்பினும், என்ன புண்ணியம்? அந்த வலியுடனேயே இறந்தும் போகிறான்.

குரஸவா இப்படத்தைப் பற்றிச் சொல்கையில், “நான் ரான் படத்தின் மூலமாக என்ன சொல்ல விரும்பினேன் என்றால், மனிதர்களின் கோரத்தை, அவர்கள் ஒவ்வொருவரையும் அழித்துக்கொள்வதைக் காணும் அவர்களது கடவுள்கள், இதனைத் தடுப்பதற்குச் சக்தியற்றவர்களாக எவ்வாறு வருந்துகிறார்கள் என்ற உண்மையையே” என்று சொல்லியுள்ளார்.

இப்படத்தை எடுப்பதற்கு முன்பு, இதன் ஒவ்வொரு ஷாட்டையும், சித்திரங்களாக (ஸ்டோரி போர்டுகள்) வரைந்து வைத்துக் கொண்டார் குரஸவா. இதன்மூலம், அவர் நினைத்ததைப் படமாக்க அவரால் முடிந்தது. இதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம், பத்து ஆண்டுகள் !

ஒரு துயர காவியமாக அமைந்த இப்படம், இன்றும் உலகத் திரைப்படங்களில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. குரஸவா என்ற கலைஞனின் குரல், வன்முறைக்கெதிராக அழுத்தமாக இப்படத்தின் மூலம் ஒலிக்கிறது.

ரான் படத்தின் டிரைலர் இங்கே.

  Comments

6 Comments

  1. I saw this movie last night and loved the movie. But u need real patience to watch it… a wonderful stage drama effect but in outdoor locations.

    Reply
  2. ஷ்ரீ – 🙂 வாங்க வாங்க . . நம்ம வலைப்பூவுக்கு உங்களை வரவேற்கிறேன் . . உங்களுக்கு இந்தப்படம் பிடிக்கும்னு எனக்குத் தெரியுமே . .:-) . . என்ன உங்க ப்ளாக்ல இப்போல்லாம் எதுவும் எழுதுறதில்ல . .? நீங்களேஎழுதலன்னா அப்புறம் நாங்க எப்புடி 😉 . .

    Reply
  3. நல்லா இருக்கு .., விமர்சனம் .., இதையும் லிஸ்ட்ல சேத்துக்குறேன்.., சொந்தமா கம்ப்யூட்டர் வாங்குனதும் பாக்கணும்…

    Reply
  4. பேநா மூடி – கண்டிப்பா சேர்த்திக்கங்க . . பார்த்து ரசிங்க . . ஆனா கொஞ்சம் நிதானமா தான் போகும் . .

    Reply

Join the conversation