The Rebel without a crew – part 1

by Karundhel Rajesh April 15, 2015   Book Reviews

Scene – 1:

தன்னைத் துரத்திவரும் அடியாட்களிடமிருந்து தப்பிக்க, ஒரு மாடியிலிருந்து குதித்து, கம்பி ஒன்றைப் பற்றிக்கொண்டு தெருவின் அடுத்த மூலைக்குப் பயணிக்கிறான் அவன். அப்படி அந்தக் கம்பியில் பயணிக்கும்போது பாதியில் கை நழுவி, ரோட்டில் வந்துகொண்டிருக்கும் பஸ் ஒன்றின்மீது குதித்து இறங்கி ஓடுகிறான். அவனது பெயர் – எல் மாரியாச்சி. இந்தக் காட்சி எடுக்கப்பட்டது ஒரே ஒரு காமெராவில். படத்தின் மொத்த பட்ஜெட் – வெறும் 7000 டாலர்கள்.

Scene – 2:

எல் மாரியாச்சி, அந்த ஊரின் பாருக்குள் வந்து, அங்கிருக்கும் அத்தனை பேரையும் சுட்டுக்கொல்கிறான். அவன் தேடும் நபர் – அவனது அண்ணன்.

Scene – 3:

தங்களைத் துரத்தும் அமெரிக்க போலீஸிடமிருந்து தப்பிக்க மெக்ஸிகோ செல்லும் ஸேத் மற்றும் ரிச்சர்ட் சகோதரர்கள், அங்கே ஒரு இரவு விடுதியில் காட்டேறிகளுக்கு மத்தியில் மாட்டிக்கொள்கிறார்கள்.

மேலே கொடுத்திருக்கும் ஸீன்களை எழுதியவர்கள் – ராபர்ட் ரோட்ரிகஸ் & க்வெண்டின் டாரண்டினோ (From Dusk Till Dawn).

ஹாலிவுட் மசாலாக்கள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட டெம்ப்ளேட்டையே ஃபாலோ செய்யும். அந்தந்த டெம்ப்ளேட்களை உருவாக்கியவர்கள், சில இயக்குநர்கள். இந்த இயக்குநர்களாலேயே ஹாலிவுட் தற்போதைய இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இப்படி, தங்களுக்கும் ஒரு ரசமான டெம்ப்ளேட்டை உருவாக்கி, அதில் சிறந்து விளங்குபவர்கள் இந்த இரட்டையர்கள். இவர்களது அத்தனை படங்களையும் நண்பர்கள் பார்த்திருக்கக்கூடும். கதை என்பதே இல்லாமல் திரைக்கதையை வைத்தே திரைப்படங்களை சுவாரஸ்யமாக மாற்றும் கலை தெரிந்தவர்கள் இவர்கள். இதுவுமே ஒரு புதிய ட்ரெண்ட் தான். இவர்களுக்கு முன்னரும் அப்படிப்பட்ட இயக்குநர்கள் இல்லாமல் போகவில்லை என்றாலும், ஓரு படம் கூட விதிவிலக்கில்லாமல், எடுக்கும் அத்தனை படங்களிலுமே கதையே இல்லாமல் வெறும் திரைக்கதையை வைத்தே அந்தப் படங்களை ஓடவைத்த பெருமை இவர்களையே சாரும் (அப்படி கதை என்பது இடம் பெற்றிருந்தாலும், விறுவிறுப்பான சம்பவங்களே இவர்களது திரைப்படங்களில் பிரதான அம்சம் – அதாவது, எண்பதுகளின் திரைப்பட ஸ்டைல்).

நான் முதன்முதலில் பார்த்த இவர்களில் ஒருவரது திரைப்படம் – Desperado. AXN சானலில் ஒரு தீபாவளியன்று ‘மூவி மாரத்தான்’ என்ற பெயரில் இதையும் ஸாம் ரெய்மியின் ‘The Quick and the Dead’ திரைப்படத்தையும் ஒளிபரப்பினார்கள் ( 2000 A.D October). கூடவே, 12 Monkeys படமும், True Lies படமும். அந்த ஆண்டுதான் நான் எனது இளங்கலைப் படிப்பை முடித்திருந்த வருடமும். True Lies திரைப்படத்தை தியேட்டரிலேயே பார்த்திருந்ததால், டெஸ்பராடோ படத்தைப் பார்ப்பதில்தான் ஆர்வமாக இருந்தேன். காரணம் – அதன் ட்ரெய்லர். நான் நினைத்ததைப் போலவே, அந்தப் படம் என் மனதில் நீங்காத இடம் பிடித்தது.

அந்தப் படத்தைப் பார்த்தபின்னர்தான் ரோட்ரிகஸின் பிற படங்களைப் பார்த்தேன். அதேபோல், டாரண்டினோவின் படங்களையும் அதன்பின்னர்தான் பார்த்தேன். டெஸ்பராடோவின் ஆக்‌ஷன் ஸீக்வென்ஸ்கள்தான் என்னை முதலில் கவர்ந்தன. அதன்பின் வசனங்களின் எள்ளல், குரூர நகைச்சுவை, கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றை மிக லேட்டாக உணர்ந்துகொண்டேன். இதன்பின் இந்த இரண்டு இயக்குநர்களைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். அவர்களின் திரைப்படங்களின் genre, ஸ்டைல் ஆகியவை அதன்பின் புரிந்தது.

ரோட்ரிகஸின் இளவயதை கவனித்தால், அவருக்கும் நோலன், பீட்டர் ஜாக்ஸன் போன்ற இயக்குநர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை தெரியவருகிறது. ரோட்ரிகஸும் இவர்களைப் போலவே சிறுவயதில் கைக்குக் கிடைத்த காமெராவை வைத்து திரைப்படங்கள் எடுக்க முயன்றிருக்கிறார். அவரது பதினோராம் வயதில் தந்தை வாங்கிக்கொடுத்த VCR (Video Cassette Recorder – நினைவிருக்கிறதா? ‘டெக்’ என்று அழைக்கப்பட்ட சாதனம். வீடியோ காஸெட்கள் பரவலாக உபயோகிக்கப்பட்டுக்கொண்டிருந்த தொண்ணூறுகளின் நாட்களில் பள்ளி சென்ற நண்பர்களுக்காவது தெரிந்திருக்கும்) ப்ளேயருடன் வந்த காமெராவில் படம் எடுக்கத் துவங்கிய ரோட்ரிகஸ், அவரது பாப்புலாரிடியின் காரணமாக, பள்ளியின் கால்பந்து விளையாட்டுக்களை வீடியோ எடுக்க நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது ஃபூட்டேஜைப் பார்த்த நிர்வாகம் டென்ஷன் ஆகி, அவரை அந்தப் பொறுப்பிலிருந்து உடனடியாகத் துரத்தியது. ‘சலங்கை ஒலி’ படத்தில் புகைப்படங்கள் எடுக்கும் சிறுவனை நினைவிருக்கிறதா? அதுபோல், சிறுவன் ரோட்ரிகஸும் விளையாட்டை வீடியோ எடுப்பதற்குப் பதில் விளையாடுபவர்களின் முகங்கள், பந்து காற்றில் பறப்பது, விளையாடும் மாணவர்களின் பெற்றோரின் உணர்ச்சிபூர்வமான செய்கைகள் ஆகியவற்றை எடுத்து, எடிட் செய்து, திரைப்படம் ஒன்று ஓடுவது போன்று வீடியோக்களை ரிலீஸ் செய்ததே காரணம்.

ரோட்ரிகஸ் மற்றும் டாரண்டினோ ஆகியவர்களின் படங்கள் எப்போதுமே ஒரே போல் இருக்கும். நகைச்சுவையான வசனங்கள் மூலமாக, குறிப்பிட்ட காட்சியின் தீவிரத்தன்மை ஆடியன்ஸுக்கு உறைக்காத அளவு, அந்தக் காட்சியின் கடைசிவரை எழுதப்பட்டிருக்கும். திமிரான, அடுத்தவரை இன்ஸல்ட் செய்யும் வசனங்கள், கேலி, satire போன்றவையெல்லாம் சாதாரணம். குறிப்பாக டாரண்டினோ. அதேபோல், ரத்தம், குரூரம், வன்முறையை மிகைப்படுத்துதல் ஆகியவையும் இவர்களின் படங்களில் அவசியம் இருக்கும்.

நாம் எல்லோருக்குமே nostalgia என்ற உணர்வு இருக்கிறது. குறிப்பாக திரைப்படங்களைப் பொறுத்தவரையில். ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட படங்களைப் பிடிக்கும். சிறுவயதில் அந்தப் படங்களை நாம் சிலாகித்துப் பார்த்திருப்பதே பெரும்பாலும் காரணமாக இருக்கும்.  அந்த நாஸ்டால்ஜியாவைத் தவறாமல் தங்களது ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்துவது இவர்கள் ஸ்டைல் (ஆனால் இதில் ரோட் ரிகஸ் மட்டும் தற்போது சிறுவர் படங்களாக எடுத்துத் தள்ளி, நீர்த்துவிட்டார் என்பது என் வருத்தம். அவ்வப்போது Planet Terror, Sin city என்றெல்லாம் இவர் எடுத்தாலும், மறுபடி பழைய எல் மாரியாச்சி போல எதையாவது இயக்கி வெளியிட்டால் சந்தோஷம்).

ஒரு துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு, அந்தத் துறையில் சாதித்த ஜாம்பவான்கள் எழுதிய புத்தகங்களோ, கொடுக்கும் பேட்டிகளோ அவசியம் சிறந்த ஊக்கமருந்தாக அமையும். அந்த வகையில் ராபர்ட் ரோட்ரிகஸ் எழுதிய அவரது வாழ்க்கையைப் பற்றிய புத்தகமான ‘Rebel without a Crew’, சினிமாவைப் பற்றி நான் இதுவரை படித்த புத்தகங்களிலேயே அவசியம் தலைசிறந்தது. இந்தப் புத்தகத்தில், ஏழைச்சிறுவனாக இருந்த ரோட்ரிகஸ் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இயக்குநரானார் என்பதை மிகக் கேஷுவலான ஸ்டைலில், ஆங்காங்கே தெறிக்கும் நகைச்சுவையோடு அட்டகாசமாக எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகம் எத்தனை முறை படித்தாலும் எனக்குச் சலிப்பதில்லை. எனவே அதை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்தப் புத்தகத்தை ஒரே தடவை படித்தால்கூட, உடனடியாக ஓடிப்போய் ஒரு திரைப்படத்தை எடுக்கவேண்டும் என்று வெறி கிளம்பும். அந்த அளவு ராபர்ட் ரோட்ரிகஸின் ரத்தம், வியர்வை, உழைப்பு ஆகியவற்றைப் பற்றி மிகவும் inspiringகாக அவரே எழுதியிருக்கிறார்.


rebel_feature2
மிகச்சிறு வயதில் இருந்தே திரைப்பட ரசிகனாகவே குட்டிப்பையன் ரோட்ரிகஸ் வளர்ந்திருக்கிறான். ஐந்தாவது படிக்கையில், ஒரு நோட்டுப்புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் சிறு கார்ட்டூன்கள் வரைந்து, பக்கங்களை வேகமாக நகர்த்தி அவைகள் நகர்வதை ரசிப்பது ரோட்ரிகஸின் வழக்கம். இது எட்டாவது வரை தொடர்ந்தது. அப்போதுதான் இயக்குநர் ஜான் கார்ப்பெண்டரின் ‘Escape from New York’ படத்தை ரோட்ரிகஸ் பார்க்கிறார். உடனடியாக, திரைப்படம் ஒன்றை எடுக்கவேண்டும் என்ற ஆசை தொத்திக்கொள்கிறது. ஆனால் கையில் எந்த உபகரணமும் இல்லையே? என்ன செய்யலாம்?

அப்போதுதான் மிகமிகத் தற்செயலாக ரோட்ரிகஸின் தந்தை ஒரு JVC வீடியோ காஸெட் ரெகார்டர் வாங்குகிறார். இது ஏனெனில், அவர் ஒரு சேல்ஸ்மென். இதனால் புதிதாக வரும் உபகரணங்களைப் பற்றிப் பேசி ரெகார்ட் செய்து அதை அவரது கஸ்டமர்களுக்குப் போட்டுக் காண்பித்தால் எளிதில் அவற்றை விற்றுவிடலாம் என்பது அவரது யோசனை. ஆனால் இந்த ரெகார்டர், சிறுவன் ரோட்ரிகஸுக்கே அதிகம் பயன்பட்டது. இந்த ரெகார்டர் மிகவும் விலையுயர்ந்தது என்பதால் அதனுடன் ஒரு வீடியோ கேமராவையும் கடையில் இலவசமாக அளித்தனர். பாஸந்தியை அளித்து, கூடவே ரஸமலாயையும் இலவசமாக அளித்தால்?

உடனடியாகச் சிறுவன் ரோட்ரிகஸ் அவற்றை வெறித்தனமாக உபயோகப்படுத்த ஆரம்பித்தான். ரோட்ரிகஸுடன் பிறந்தவர்கள் பத்து பேர் (இதையும் மீறி அவரது தந்தை முழுநேர சேல்ஸ்மேனாகவும் வேலை பார்த்து வந்தார்). ரோட்ரிகஸ் மூன்றாவது குழந்தை. தனது குடும்பத்திலேயே இத்தனை பேர் இருந்ததால், வரிசையாக எல்லாருக்கும் வேடங்கள் அளித்துக் குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்தார். அவரிடம் இருந்த வீசிஆரில் மொத்த soundtrackகையும் அழித்துவிட்டு வேறு ஒலிகளைச் சேர்க்கும் தொழில் நுட்பம் இருந்தது. எனவே எளிதில் அவரது குறும்படங்களுக்கு இசையைக் கோர்க்க ரோட்ரிகஸால் முடிந்தது. இந்த நேரத்தில், ரோட்ரிகஸே வீசிஆரை எடுத்துக்கொண்டுவிட்டதால் தந்தை இன்னொரு வீசிஆரை வாங்குகிறார். இது இரண்டு லட்டுகளைத் தின்ன ஆசைப்படும் நபராக ரோட்ரிகஸை மாற்றிவிட்டது. இதனால் இரண்டு வீசிஆர்களையும் இணைத்து, ஒன்றில் இவர் எடுத்த படத்தைப் போட்டுவிட்டு, இன்னொன்றில் pause பட்டனை உபயோகப்படுத்தித் தேவையில்லாத ஃபூட்டேஜ்களை அழித்துக் கச்சிதமாக எடிட் செய்வதைக் கற்றுக்கொண்டான் சிறுவன் ரோட்ரிகஸ். எனவே கண்டபடி படங்கள் எடுக்க ஆரம்பித்தான். தனது உடன்பிறந்தவர்களைக் கொண்டே குங்ஃபூ படங்கள், Science Fiction, Action படங்கள் என்றெல்லாம் கலக்கியெடுத்தான்.

இப்படி எடிட் செய்வதாலேயே, குறைந்த அளவிலேயே ஃபூட்டேஜ்களை எடுக்கவும் இதற்குள் சிறுவன் ரோட்ரிகஸுக்கு எளிதாகவே தெரிந்துவிட்டது. அதிக ஃபூட்டேஜ்களை எடுத்தால் எடிட் செய்ய நேரம் பிடிக்கும். எனவே ஒரு டேக் – அல்லது இரண்டு டேக்குகளிலேயே நினைத்த காட்சியை எப்படி வரவழைப்பது என்பதைப் புரிந்துகொண்டான்.

பள்ளியில் ஹைஸ்கூல் வருகிறது. இப்போதுதான் கால்பந்துப் போட்டிகளில் ரோட்ரிகஸ் செய்த சாகசங்களும் நடக்கின்றன. ஒரு action படத்தைப் போல் கால்பந்துப் போட்டியின் வீடியோக்களை அனாயாசமாக எடிட் செய்து கொடுக்கிறான் ரோட்ரிகஸ். இந்தச் சமயத்தில்தான் கார்லோஸ் கல்-லார்டோ என்ற இன்னொரு சக சினிமா பைத்தியத்தை மாணவன் ரோட்ரிகஸ் சந்திக்க நேர்கிறது. அவனது ஊரான மெக்ஸிகோவில் சென்று இருவரும் தெருக்களில் அலைந்து action படங்கள் எடுக்கின்றனர். இச்சமயத்தில்தான் மாணவன் ரோட்ரிகஸுக்கு ஆச்சரியகரமாக யூனிவர்ஸிடி ஆஃப் டெக்ஸாஸில் ஒரு ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. சந்தோஷமாக அந்தக் கல்லூரியில் போய்ச் சேர்கிறான். ஆனால் அங்கே என்ன பிரச்னை என்றால், முதல் இரண்டு வருடங்கள் கணிதம், விஞ்ஞானம், சரித்திரம் மற்றும் ஆங்கிலப் பாடங்களைப் படித்தே ஆகவேண்டும். அவற்றில் கிடைக்கும் மதிப்பெண்களை வைத்துக்கொண்டுதான் அந்தப் பல்கலைக்கழகத்தின் திரைப்படத்துறையில் சேர்ந்து படிக்கமுடியும். ரோட்ரிகஸோ பாரதியார் போல ‘கணக்கு பிணக்கு ஆமணக்கு’ என்று திரிந்துகொண்டிருந்த மாணவன். இதனால் படுகுறைவான மதிப்பெண்கள் எடுத்து, திரைப்படத்துறையில் சேரவே முடியாத நிலையில் இருந்த நேரம்.

அப்போது லோக்கல் செய்தித்தாள் ஒன்றில் கார்ட்டூனிஸ்டாக ஒரு சிறு வேலை ரோட்ரிகஸுக்குக் கிடைக்கிறது. அந்தச் சமயத்தில் தினமும் நம்மூர் சிந்துபாத் போல ரோட்ரிகஸ் துவங்கிய ‘Los Hooligans’ என்ற கார்ட்டூன், படுபயங்கரமாகப் பிரபலம் அடைகிறது. இந்த நேரத்த்திலேயே, தன்னிடம் இருந்த மொக்கை கேமராவில் தன் சகோதர சகோதரிகளைப் போட்டு ரோட் ரிகஸ் எடுத்த ‘David and his Sisters’ மற்றும் ‘Waterlogged’ ஆகிய குறும்படங்கள், சிலபல விருதுகளையும் வாங்கிவிடுகின்றன. இதன்பின் இவர் எடுத்த ‘Austin Stories’ – குறும்படங்களில் ஒரு வித்தியாச முயற்சி. மூன்று பாகக் குறும்படம் அது (Trilogy). இது, ஆஸ்டினின் National Third Coast Film and Video Festival என்ற விழாவில் முதல் பரிசு பெறுகிறது. என்ன வேடிக்கை என்றால், போட்டியில் இடம்பெற்ற இவரது டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் திரைப்படத்துறையின் சீனியர்கள் எடுத்த எல்லாப் படங்களையும் இது புறம்தள்ளிவிட்டது.

இந்தப் படத்தை எடுத்துக்கொண்டு, திரைப்படத்துறையின் ப்ரொஃபஸர் ஸ்டீவ் மிம்ஸிடம் சென்று ரோட்ரிகஸ் காட்ட, மதிப்பெண்கள் தேவையே படாமல் உடனடியாக அங்கே ரோட்ரிகஸ் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இப்போது ரோட்ரிகஸுக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம் என்னவென்றால், திரைப்படத்துறையில் 16mm கேமரா இலவசமாகவே கிடைத்ததுதான். சும்மாவே தலைவிரிகோலமாக ஆடும் வீடியோ பைத்தியத்திடம், ‘உன் மொக்கை கேமரா வேண்டாம்; இதோ தெளிவான 16mm மேமரா இருக்கிறது. எடுத்து உபயோகி’ என்று சொன்னால் என்ன ஆகும்?

அப்போது 800$ செலவில் ரோட்ரிகஸ் எடுத்ததுதான் ‘Bedhead’. ரோட் ரிகஸின் மிகச்சிறந்த குறும்படங்களில் ஒன்று. எக்கச்சக்க விருதுகளை அள்ளியது. இந்த இடத்தில் புத்தகத்தில் அட்டகாசமான ஒரு விஷயத்தை ரோட்ரிகஸ் சொல்கிறார். அவரது மொழியிலேயே அதைப் பார்க்கலாம்.

I decided what I needed was as much practice making features as I had gotten making short films. I realized it was the experience that had gotten me where I was. If you want to learn the guitar, you don’t take a couple of guitar classes and expect to do anything innovative. You practice in your garage until your fingers bleed. I had done that with my home movies. I made over thirty short narrative movies, edited, with opening and closing credits, sound effects, and music.

I had realized when I got into the film class that a lot of the other students had never touched even a video camera, yet they wanted to be filmmakers. They spent almost $1,000 on films that didn’t turn out as good as they expected, so they figured they weren’t cut out for movies and would go into something else. I remember my first movies on video. I never would have wanted to spend $1,000 on those terrible experiments. Since it was video, it was no great expense; and since I loved to make movies, I just kept at it until I got better. So, if you’re noodling around with a video camera, keep it up. Don’t listen to film snobs who tell you that you’re wasting your time, either. I started on video and used the less expensive format to learn storytelling, and later found the tiny jump to film was no big deal at all. It’s all the same thing

இந்தப் படம் அளித்த வெற்றியின் போதையில்தான் பிந்நாட்களில் ரோட்ரிகஸின் வாழ்க்கையை மாற்றப்போகும் ஒரு சிந்தனை உதித்தது. அது – ‘ஒரு முழு நீளத் திரைப்படம் எடுத்தால் என்ன?’

இந்த வீடியோவின் எல்லா அனிமேஷன்களும் ரோட்ரிகஸின் சொந்த முயற்சியே.

தொடரும்..

PS:- இதை ஒரு கட்டுரையில் முடிக்க முடியாது. எனவே அடுத்த கட்டுரையில் முடித்துவிடலாம்.

Picture taken from: http://cdn.collider.com/wp-content/uploads/el-mariachi-carlos-gallardo-robert-rodriguez.jpg

  Comments

Join the conversation