Red Beard (1965) – Japanese

by Karundhel Rajesh November 10, 2010   world cinema

அகிரா குரஸவா.

இந்தப் பெயரை, உலக சினிமா ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா? இப்பொழுது திரைப்படங்களில் உபயோகப்படுத்தப்பெறும் பல விஷயங்களுக்கு முன்னோடியாக இருந்தவர். தனது படங்களைக் காப்பியடித்த ஹாலிவுட் நிறுவனங்கள் மீது தயங்காது வழக்குகள் தொடுத்து அவற்றில் வெற்றியும் பெற்றவர். இவரது படங்களின் டிவிடிக்களைப் பார்ப்பதில் ஒரு நன்மை என்னவென்றால், அவற்றில் பல டிவிடிக்களில் இவரது அரிய பேட்டிகள் இருக்கும். மட்டுமல்லாது, இவரது படங்களில் பணிபுரிந்தவர்களும், எப்படி சில காட்சிகள் எடுக்கப்பட்டன என்பதை விளக்குவார்கள். இவரது ‘ரஷோமான்’ டிவிடியில், சூரிய வெளிச்சத்தை எப்படி இவர் உபயோகப்படுத்தினார் என்ற ரசமான தகவல் இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில், விறகுவெட்டி, காட்டுக்குள் நடந்து செல்கையில், சில ஷாட்கள், நேராகச் சூரியனைக் காட்டும். சில ஷாட்களில், மரங்களின் ஊடாகச் சூரியனை நாம் காண்போம். இவ்வகையான ஷாட்களை, உலகிலேயே முதன்முறையாகப் படங்களில் அறிமுகப்படுத்தியவர், குரஸவா.

அதே போல், அப்படத்தில், இந்த விறகுவெட்டியைக் காண்பிக்கையில், நடந்து சென்று கொண்டிருக்கும் விறகுவெட்டியின் பின்னாலிருந்து அவனை நோக்கி வரும் கேமரா, ஒரே ஷாட்டில் அவனைத் தாண்டிச்சென்று, அதன்பின் அவனது முகத்தை நோக்கித் திரும்பி, அங்கிருந்து மெதுவே அன்ஸூம் (Unzoom) ஆகும். அந்த ஷாட்டின் முடிவில், விறகுவெட்டியின் முழு ப்ரோஃபைலும் நமக்குத் தெரியும். இந்த ஷாட், மிகக்குறைந்த நேரமே வந்தாலும், 1950ல் சற்று அசாத்தியமான ஷாட்டாகும். இதனை குரஸவா எவ்வாறு செயல்படுத்தினார் என்று ஆனந்தமும் கிளர்ச்சியும் பொங்க, அதன் காமெராவைக் கையாண்ட காஸுவோ மியாகாவா விவரிப்பதை, டிவிடியில் காணலாம். இதனை விவரிக்கும்போது, அவருக்கு எழுபது வயதுக்கும் மேல். குரஸவாவுடன் வேலை செய்த அந்த நாட்களைப் பற்றி அவர் விவரிப்பதைப் பார்த்தாலே, நமக்கும் சந்தோஷம் தொற்றிக்கொள்ளும்.

ரஷோமான் படத்தைப் பற்றிய எனது ஆங்கில விமர்சனம் இங்கே காணலாம். இது, Truthdive என்ற தளத்துக்காக நான் சென்ற வருடத்தில் எழுதியது. அத்தளத்தில், எனது பல ஆங்கில விமர்சனங்களைக் காணலாம்.

நாம், ஏற்கெனவே இந்தத் தளத்தில், குரஸவாவின் ‘ரான்’ (Ran) படத்தைப் பற்றிப் பார்த்திருக்கிறோம். இப்போது, அவரது மற்றொரு மாஸ்டர்பீஸான ரெட் பியர்ட் படத்தைப் பற்றிப் பார்ப்போம்.

படத்தைப் பார்ப்பதற்கு முன்னால், ஒரு டிஸ்கி. இப்படம், முழுக்க முழுக்க சீரியஸான ஒரு படைப்பு. அதிதீவிரமான கலைப்பட விரும்பிகள் மட்டுமே இப்படத்தைச் சந்தோஷமாகப் பார்க்க இயலும்.

அதேபோல், தோஷிரோ மிஃபூனே என்ற அருமையான நடிகரைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். ரஷோமான் படத்தில், தஜோமாரு என்ற திருடனின் வேடத்தில் நடித்த இந்த மிஃபூனே, குரஸவாவோடு மொத்தம் பதினாறு படங்களில் இணைந்திருக்கிறார். அவற்றில் பல படங்களில், சிறந்த நடிகர் விருதையும் பல வெளிநாட்டுத் திரைப்பட விழாக்களில் அள்ளியிருக்கிறார். ரஷோமான் மற்றும் செவன் சாமுராய் (ஆங்கிலத்தில், The Magnificient Seven என்ற பெயரில் சுடப்பட்ட படம்) படத்தில், ஜாலியான ஒரு வேடத்திலும், இப்படத்தில் மிகவும் சீரியஸான வேடத்திலும் வித்தியாசம் காட்டி நடித்திருப்பார்.

மருத்துவமனைகளைப் பற்றி நமது கருத்து என்ன? பணம் பிடுங்கிகள் என்ற எண்ணமே முதலில் தலைதூக்கும். ஆனால், எங்கோ ஒரு இடத்தில், மக்களுக்கு இலவச சேவை செய்யும் நல்ல மருத்துவமனைகளும் இல்லாமல் போவதில்லை. அப்படிப்பட்ட ஒரு மருத்துவமனையில் நிகழும் ஒரு கதையே இப்படம். டோக்கியோவில், ஒரு சிறிய ஊர். அந்த ஊரில், ஒரு பொது மருத்துவமனை. படம் தொடங்குகையில், நொபோரு யாஷுமோடோ (இனி யாஷுமோடோ) என்ற இளைஞன், அந்தப் பொது மருத்துவமனைக்கு வருகிறான். ஜப்பானின் பெரிய நகரங்களில் ஒன்றான நாகஸாகியில் மருத்துவம் படித்திருக்கும் யாஷுமோடோ, ஜப்பானில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் இருக்கும் கவர்னர்களில் ஒருவருக்கு, மருத்துவராக வேண்டியவன். ஆனால், கல்லூரியின் இறுதியாண்டில், மருத்துவம் பழக, இந்தப் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு விடுகிறான்.

மருத்துவமனையில் இருக்கும் மற்றொரு இளம் மருத்துவருக்குப் பதிலாகத்தான் யாஷுமோடோ வந்திருக்கிறான். எனவே, அந்த மருத்துவர், இவனை மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச்சென்று, அந்தந்த இடங்களைப் பற்றி விளக்குகிறார். அப்போது, அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரான க்யோஜோ நீடே பற்றியும் நிறையச் சொல்கிறார். அவருக்கு, சிவப்பு நிறத்தில் தாடி இருப்பதால், அவருக்கு சிவப்புத் தாடி என்றே பெயர். அப்பெயரினால் தான் அவர் அந்த ஊரெங்கிலும் அறியப்படுகிறார். அவர் ஒரு கடுமையான மனிதர் என்று சொல்லும் அந்த மருத்துவர், அவரது கர்வத்தைப் பற்றியும், சட்டென்று எல்லோரையும் திட்டும் அவரது கோபத்தைப் பற்றியும் நிறையச் சொல்கிறார். பேசிக்கொண்டிருக்கையிலேயே, சிவப்புத்தாடியின் அறை வருகிறது. சிவப்புத்தாடியைச் சந்திக்கும் யாஷுமோடோவிடம், அவனது மருத்துவக் குறிப்புகள் முழுவதையும் தன்னிடம் ஒப்புவிக்கும்படிச் சொல்லிவிட்டு, அவர்கள் அங்கிருந்து செல்லலாம் என்று கர்ஜிக்கிறார் செந்தாடி.

அங்கிருந்து வெளியேறும் யாஷுமோடோவுக்கு, முதல் நாளில் இருந்தே அந்த மருத்துவமனை பிடிக்காமல் போய் விடுகிறது. எங்கு பார்த்தாலும் ஏழைகளின் ஓலம், நோய் முற்றிய நிலையில், ஒவ்வொரு அறைக்குள்ளும் ஐந்து நோயாளிகள், அசுத்தமான அறைகள் என்று இருக்கும் அந்தச் சூழல், டச்சுக் கல்லூரியில் படித்த யாஷுமோடோவுக்கு எட்டிக்காயாகக் கசக்கிறது (அது என்ன எட்டிக்காய்? அது அவ்வளவு கசப்பாகவா இருக்கும்?). இதனாலேயே, மருத்துவர்கள் அணியும் சீருடையை அணிய மறுக்கிறான் யாஷுமோடோ. அதேபோல், உணவு உண்ணவும் மறுக்கிறான். அதற்குப் பதில், அரிசியால் செய்யப்படும் மதுவான ஸாக்கேயை நிறையக் குடிக்கிறான்.

செந்தாடி, இவனை ஒன்றும் சொல்வதில்லை. ஒருநாள், மருத்துவமனையிலிருந்து தப்பிச்செல்ல நினைத்து ஓடும் யாஷுமோடோ, அந்த மருத்துவமனையில், யாரும் செல்லகூடாத ஒரு தோட்டத்துக்குள் நுழைந்து விடுகிறான். அங்கே, ’மேண்டிஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். தன்னுடன் உறவு கொள்ளும் நபர்களை உடனடியாகக் கொன்றுவிடுவதால், அவளுக்கு அப்பெயர். அங்கிருந்து இவனை அந்த இளம் மருத்துவர் அழைத்துச் சென்றுவிடுகிறார். சில நாட்களிலேயே, அந்த மேண்டிஸ் தப்பித்துவிட்டதாகத் தகவல் வருகிறது. எப்படியோ யாஷுமோடோவின் அறைக்கு வந்துவிடும் மேண்டிஸ், தனது கதையைக் கூறியவண்ணமே, மெதுவாக இவனை நெருங்கி, தனது இரும்பு ஹேர் க்ளிப்பினால் அவனது கழுத்தைக் கிழிக்க இருக்கையில், புயல் போல் அங்கு வருகிறார் செந்தாடி.

பின்னர், செந்தாடி, யாஷுமோடோவை, நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்கிறார். இப்போதும் மனதில் வெறுப்புடனே இருக்கும் அவன், திடீரென, செந்தாடியின் அவசர அழைப்பின் பேரில், ஒரு அறுவை சிகிச்சைக்கு உதவச் செல்கிறான். ஒரு பெண்ணின் வயிற்றில் நிகழ்த்தப்படும் அறுவை சிகிச்சையை முதல் முதலாக நேரில் பார்க்கிறான். அப்பெண்ணின் வயிற்றில் இருந்து வெளியே வந்து விழும் குடலை, மறுபடி அப்பெண்ணின் வயிற்றிலேயே வைத்துத் தைக்கும் செந்தாடியின் வைத்தியத்தைப் பார்க்கும் யாஷுமோடோ, அந்த அறுவை சிகிச்சையின் கனம் தாங்க முடியாமல், வெளியே வந்து மயங்கி விழுகிறான். அவனை, அங்கிருக்கும் இன்னொரு மருத்துவன், தேற்றுகிறான்.

அதேபோல், அங்கு நெடுநாட்களாக நோயாளியாக இருக்கும் ரோகுஸுகே என்ற முதியவர், மரணத்தின் வாயிலில் இரைத்துக் கொண்டு இருக்க, அவரைக் கவனிக்கும் பொறுப்பை யாஷுமோடோவுக்கு அளிக்கிறார் செந்தாடி. அங்கு சென்று ரோகுஸுகேவின் மரணக் கேவலை நெடுநேரம் கண்ணுறும் யாஷுமோடோவுக்கு, மெல்ல மெல்ல வாழ்வின் புதிர்கள் விடுபட ஆரம்பிக்கின்றன. ரோகுஸுகே இறந்துவிட, அவனது பெண்ணும், அவளது மூன்று குழந்தைகளும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அப்போது, ஸஹாச்சி என்ற இன்னொரு நோயாளியும் மிகவும் தீவிரமான கட்டத்துக்குச் சென்றுவிட, செந்தாடியைப் பார்க்க வேண்டும் என்ற கடைசி ஆசையை அவன் யாஷுமோடோவிடம் வெளியிடுகிறான். இதனைப் பற்றி செந்தாடியிடம் சொல்ல வரும் யாஷுமோடோ, செந்தாடியின் அறையில் கதறிக்கொண்டு இருக்கும் ரோகுஸுகேயின் பெண்ணைப் பார்க்கிறான். அப்பெண், ரோகுஸுகே எவ்வாறு அவனது சொந்த மகளான இவளை வன்கலவி செய்தான் என்பதைப் பற்றிக் கண்ணீர் மல்க விவரிக்கிறாள். இருப்பினும், தனது தந்தையை அழைத்துச் செல்ல வந்ததாகச் சொல்லும் அவள், தனது வறுமையை எண்ணிக் கண்ணீர் வடிக்கிறாள். இதனையும் முழுதாக ஜீரணித்துக் கொள்கிறான் யாஷுமோடோ.

அங்கே, சஹாச்சி, அவனது நண்பர்கள் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அனைவரையும் தன் வீட்டுக்கு வரவழைத்து, அவர்களிடம், இறக்கும் தருவாயில், தனது வாழ்க்கையின் மர்மமான ஒரு கதையை விவரிக்கிறான். படத்தில் இக்கதை, ஃப்ளாஷ்பேக்காக விரிகிறது. ஒரு பெண்ணைப் பார்த்ததும் காதல் கொண்ட சஹாச்சி, அவளைத் துரத்தி, அவளின் சம்மதத்தைப் பெறுகிறான். இரண்டு வருடங்கள் இனிமையாகக் கழியும் இவர்களது மணவாழ்க்கையில், ஒரு பூகம்பம் குறுக்கிடுகிறது. அதில் காணாமல் போகும் தனது மனைவியை, அடுத்த வருடம் ஒரு கோயிலில் காண்கிறான். ஆனால், அவளிடம், எட்டு மாதக் குழந்தை ஒன்று இருக்கிறது. சஹாச்சி தன்னை முதன்முதலில் பார்த்த சமயத்தில், தனது தாய் சொல்படி, இன்னொருவனை மணந்து கொள்ள இருந்ததாகவும், ஆனால் சஹாச்சியை அவளுக்குப் பிடித்துப் போனதால், அவனுடன் வந்ததாகவும், மெல்ல மெல்லத் தன் மனம் அவளை அரிக்கத் துவங்கியதாகவும், பூகம்பத்தன்று, தனக்கு நிச்சயிக்கப்பட்டவனுடன் வாழும் முடிவுக்கு வந்ததாகவும் சொல்லும் அவள், தன்னை மன்னித்துவிடும்படிச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றுவிடுகிறாள். அதன்பின் இறந்துவிடும் அவளின் சடலத்தை, தனது வீட்டுக்குப் பின் புதைத்துவிட்டு, அவளுடனே வாழ்ந்து வந்ததாகச் சொல்லும் சஹாச்சி, இதுவே தனது வாழ்க்கையின் ரகசியம் என்றும் சொல்கிறான். இறந்தும் போகிறான்.

இதன்பின், நகரில் ஒரு விபசார விடுதிக்கு வைத்தியம் பார்க்கச் செல்லும் செந்தாடி, தன்னுடன் யாஷுமோடோவை அழைத்துச் செல்கிறார். அங்கே ஒரு பனிரண்டு வயதுப் பெண், விபசாரத்துக்கு வற்புறுத்தப்படுவதைப் பார்க்கும் செந்தாடி, அவளைத் தன்னுடன் அழைத்துச்செல்ல முடிவெடுக்கிறார். தடுக்கும் அடியாட்களை அடித்து வீழ்த்தும் செந்தாடி, அவர்களுக்கே வைத்தியமும் செய்கிறார். அந்தச் சிறு பெண்ணின் பெயர், ஒடோயோ. தீவிரமான ஜ்வரத்தில் இருக்கும் அந்தச் சிறுமியே யாஷுமோடோவின் முதல் நோயாளி என்றும் செந்தாடி சொல்லிவிடுகிறார்.

தன்னுடனே ஒடோயோவை வைத்துக்கொண்டு சிகிச்சையளிக்கும் யாஷுமோடோவை, ஒடோயோவுக்குப் பிடிப்பதில்லை. ஆனால், மெல்ல மெல்ல அவனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஒடோயோவுக்கும் யாஷுமோடோவுக்கும் இடையே அன்பு துளிர்க்கிறது. அதே சமயம், மருத்துவமனையில் திருட வரும் ஒரு சிறு பையன், ஒடோயோவுக்கு நண்பனாகிறான்.

இதன்பின், அந்தப் பையனின் குடும்பமே ஏழ்மை தாளாது விஷமருந்திவிடும் கொடுமையும் நடக்கிறது. அவர்களுக்கும் செந்தாடியே சிகிச்சையளிக்கிறார். பையன் பிழைத்துக் கொள்கிறான். ஆனால் அவனது அண்ணன் இறந்துவிடுகிறான்.

யாஷுமோடோவின் திருமணப் பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன. தன்னை விட்டுச் சென்ற காதலியின் தங்கை இவனை விரும்ப, இவனுக்கும் அவள்மேல் காதல் வருகிறது. நிச்சயமும் நடக்கிறது.

நிச்சயம் முடிந்து செந்தாடியைச் சந்திக்கும் யாஷுமோடோவிடம், அவன் விரும்பியபடியே, அந்த ஊரின் கவர்னருக்கு வைத்தியம் செய்யும் மருத்துவர் பொறுப்பு அவனைத் தேடி வந்திருப்பதைக் குறிப்பிடுகிறார் செந்தாடி. ஆனால் யாஷுமோடோவோ, இந்த மருத்துவமனையை விட்டு எங்கும் செல்லப் போவதில்லை என்று சொல்கிறான். மனதினுள் சந்தோஷப்படும் செந்தாடி, அவனிடம் எரிந்து விழுகிறார். திருமணம் வேறு செய்துகொண்டு, அவன் ஏழ்மையில் வாடப்போவதாக அவனை எச்சரிக்கிறார். ஆனால் யாஷுமோடோ, தனது முடிவில் பிடிவாதமாக இருந்துவிடுகிறான். அங்கிருந்து வேகமாக நடந்துசெல்லும் செந்தாடியை நோக்கி, பூரிப்புடன் யாஷுமோடோ ஓடும் காட்சியோடு, படம் முடிகிறது.

உண்மையைச் சொல்லப்போனால், படம் எனக்கு மிகவும் பிடித்தது. இப்படம் எடுக்கப்பட்ட காலத்தைக் கவனியுங்கள். 1965. நமது ஊரில், பாண்டவ வனவாசம், சரஸா பி. ஏ, வீர அபிமன்யு (நன்றி: விகிபீடியா) போன்ற படங்கள் எடுக்கப்பட்டு வந்த காலம். அப்பொழுதே, இப்படத்தை எடுக்கக் குரஸவாவால் முடிந்திருக்கிறது. படத்தின் காட்சிகள், பின்னணி இசையே இல்லாமல் நகர்கின்றன. இசை என்பது, மிகமிகக் குறைந்த அளவே இப்படத்தில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. நான் உற்றுக் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், இப்படத்தின் கடைக்கோடி கதாபாத்திரம் வரை அனைவருமே அட்டகாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் ஒரு விஷயம். இப்படத்தின் இறுதியில் வரும் சிறுவன், திருடும் காட்சி ஒன்றில், அவனது கண்களைக் கவனித்துப் பாருங்கள். அதே சிறுவன், விஷமருந்தி, மரணப் படுக்கையில் படுத்திருக்கையில், அவனது கண்களைக் கவனியுங்கள். பிரமிக்கத்தக்க ஒரு மாறுபாட்டைக் காண முடியும். பேயைப் போன்ற ஒரு பார்வையை அவன் வெளிப்படுத்திருப்பான். காரணம்? குரஸவா.

அதே போல், செந்தாடியாக வரும் தோஷிரோ மிஃபூனே. தனது தாடியை அவ்வப்போது உருவிக்கொண்டு, கனத்த குரலில் பேசிக்கொண்டு, சிரிப்பு என்பதையே மருந்துக்குக் கூட வெளிப்படுத்தாமல் நடித்திருக்கும் இவர், செந்தாடியாகவே தான் படம் முழுக்கவும் தெரிகிறார். குறிப்பாக, ஒரு பெண்ணுக்கு இவர் அறுவை சிகிச்சை செய்யும் காட்சியும் (’தொங்கும் குடலை எடுத்து வயிற்றினுள் போடு’ என்று போகிற போக்கில் சாவதானமாகச் சொல்லுவார்), ரோகுஸுகேயின் பெண்ணோடு இவர் பேசும் காட்சியும், இறுதியில் வரும் நிச்சயதார்த்தக் காட்சி மற்றும் கடைசிக் காட்சிகள், இவரது அபாரமான நடிப்பாற்றலைப் பறைசாற்றுகின்றன.

இப்படம் தான், தோஷிரோ மிஃபூனே குரஸவாவுடன் பணிபுரிந்த கடைசிப்படமாகவும் ஆகிப்போனது. காரணம் என்னவெனில், இப்படம் எடுத்துமுடிக்க ஆன இரண்டு ஆண்டுகளிலும், தாடியை மழிக்கவே கூடாது என்று குரஸவா போட்ட கட்டளையினால், வேறு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த மிஃபூனே, தனது படக் கம்பெனியின் மூலமும் வேறு படங்கள் எடுக்க இயலாத சூழலால் கோபமடைந்து, குரஸவாவுடன் சண்டையிட்டதேயாகும்.

படத்தின் குறைகள்? நீளம். மூன்று மணி நேரம் ஓடுகிறது இப்படம். சற்றே குறைத்திருக்கலாம். ஆனால், படத்தின் அத்தனை காட்சிகளும் நன்றாக இருப்பதால், இப்படி இருப்பதே நல்லது என்றும் தோன்றுகிறது. இது, குரஸவாவின் கடைசி கருப்பு வெள்ளைப் படமும் ஆகும்.

செந்தாடி என்ற மனிதனின் பெருந்தன்மையும், அன்பிதயமும் நமக்குக் கிடைத்தால், உலகில் பிரச்னைகளே இருக்காது என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை எடுத்த குரஸவாவுக்கு ஒரு சல்யூட் !

Red Beard படத்தின் டிரெய்லர், இங்கே

  Comments

11 Comments

  1. என்னடா இது கொஞ்ச நாளா புதிய பதிவு ஒண்ணையுமே காணோம்னு வந்தா….

    வடையோட நல்ல படமு அறிமுகமாயிருச்சு. எனக்குப் புரியுமாண்ணு தெரியலே, இருந்தாலும் கிடைச்சா பாத்துர்றேன்…

    Reply
  2. அசுத்தமான அறைகள் என்று இருக்கும் அந்தச் சூழல், டச்சுக் கல்லூரியில் படித்த யாஷுமோடோவுக்கு எட்டிக்காயாகக் கசக்கிறது (அது என்ன எட்டிக்காய்? அது அவ்வளவு கசப்பாகவா இருக்கும்?).

    – hmmmm, a relaxed stream of good narration… kudos 2 your descriptive powers…இந்த பதிவு பதமான பாதாம் ஹல்வா போல இனித்தது.

    Reply
  3. நண்பா
    என்னா விவரிப்பு,எட்டிக்காய் ரொம்பவே கசக்கும் போல,செம ஃபார்ம்ல எழுதியிருக்கீங்க.ரெட் பியர்ட் இது வரை பார்க்கலை,விரைவில் பார்ப்பேன்.சூரிய ஒளிக்காட்சியை ரசித்த விதமும் விவரித்த விதமும் அருமை.பார்த்துவிட்டு நிறைய பேசுகிறேன்.

    Reply
  4. ராஷமன் பார்த்திருக்கிறேன்.அதை விருமாண்டியில் பிரதிஎடுதது வேறு விஷயம்.ஆனால் அப்படத்தில் (ராஷமன்)உபயோகபடுத்திய ஒளிப்பதிவு உக்திகள் இன்றும் நம்மை பிரமிக்க வைக்கும் விஷயம் .
    பழைய படங்களில்(கருப்பு வெள்ளை) என்னை மிகவும் கவர்ந்த சில படங்கள் M, Killing,மெட்ரோபோலிஸ்,citizen kane,Modern times அப்புறம் ராஷமன் .
    குப்ரிக் இயக்கிய கில்லிங் படத்தில் ராஷமன் போன்று(ஆனால் அந்த முறை அல்ல) ஒரே நேரத்தில் நடக்கும் பல சம்பவங்களை தொகுத்து காட்டும் உக்தியை பயன்படுத்தினர்(பின்னர் Quentin Tarantino அதே உக்தியை பல்ப் பிக்ஷன் படத்தில் பயன்படுத்தினார்.அதை அவரே சொன்னதுண்டு.)
    ராஷமன் படத்தில் ஒரே சம்பவத்தை பலர் பலவிதமாக கூறுவதாக திரைக்கதை அமைத்திருப்பார் குரசோவா.
    அவரின் படங்களை தொடர்ந்து தங்கள் தளத்தில் தொகுத்து வழங்குவது அருமை(அப்பத்தான் இந்த தமிழ் படங்களில் நடக்கும் “கலை கொலைகள்” ரசிகர்களுக்கு தெரிய வரும்)

    Reply
  5. நல்லாயிருக்கு விமர்சனம். பார்க்க முயற்சிக்கிறேன்!

    Reply
  6. நண்பரே,

    சிறந்த ஒரு படைப்புக் குறித்த உங்கள் பதிவு, அந்த மருத்துவமனைக்கே சென்று வந்த உணர்வை அளிக்கிறது. இன்றும்கூட மருத்துவத்தை ஒரு அழைப்பாக ஏற்று அர்பணிப்புடன் பணிபுரியும் மருத்துவர்கள் சிலர் இருக்கலாம். சில வேளைகளில் மருத்துவமனையில் வாழ்வு தன் முழுவட்டத்தையும் நடாத்தி முடித்து விடுகிறது இல்லையா.

    Reply
  7. @ சு.மோகன் – இந்தப் படம் உங்களுக்குக் கண்டிப்பா புரியும்.. சிம்பிளான படம் தான். ஆனா கொஞ்சம் நீளம் ஜாஸ்தி 🙂

    @ karuna – ஹைய்யா… எனக்குப் பாதாம் ஹல்வாவை மிகவும் பிடிக்குமே.. 🙂 சேம் பின்ச் 🙂 .. உங்கள் கனிவான கருத்துக்கு நன்றி..

    @ ராமசாமி கண்ணன் – தெரியலையே… ISOhunt இல்லாட்டி பைரேட்பேல தேடிப்பாருங்க.. கட்டாயம் கிடைக்கும்..

    @ கீதப்ரியன் – நண்பா… இது நம்ம ஸ்டைல் படம்.. உங்களுக்குப் புடிக்கலன்னா தான் ஆச்சரியம் … கண்டிப்பா பார்த்துட்டு வாங்க.. நீளம் ஜாஸ்தி.. அதையும் கொஞ்சம் மைண்ட்ல வைங்க..

    @ எஸ்.கே – படமும் அப்படித்தான்.. நன்றி

    @ காதலரே – ஆம்.. இன்று கூட, யாராவது ஒரு சில நல்ல மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. மட்டுமல்லாது, நீங்கள் கூறியபடி, மருத்துவமனை, வாழ்வின் முழு வட்டத்தையும் நடத்தி முடித்துவிடுகிறது… அதனை நமக்கு உணர்த்தும் சில கதாபாத்திரங்கள் இதில் உண்டு.. மருத்துவமனை தான் எப்படிப்பட்ட ஒரு உலகமாக இருக்கிறது… ஹூம்ம்ம்..

    Reply
  8. @ viki – நல்ல பல தகவல்கள் வழக்கப்படி சொல்லிருக்கீங்க.. எனக்கும் நீங்க சொன்ன படங்கள் பிடிக்கும்..M ஆல்ரெடி எழுதியாச்சு.. மற்ற படங்கள் ஒவ்வொன்றாக எழுத முயல்கிறேன்.. குப்ரிக் மாதிரி வருமா? என்ன ஒரு மனிதர் அவர் !! மிக்க நன்றி

    Reply
  9. Thiru

    i had big impact after watching Red Beard. திருட வந்த சிறுவனுக்கும் சிறுமிக்கு இடையிலான உணர்வு பதிவுகள் classic. thala can write your view about High & low end part?

    Reply

Join the conversation