The Remains of the Day (1993) – English

by Karundhel Rajesh January 27, 2010   English films

சமுதாயத்தில் நாம் என்றுமே நினைத்துப் பார்க்காத பகுதியைச் சேர்ந்த மனிதர்கள் உண்டு. அவர்களும் நம்மைப் போல் வாழ்வின் கடினமான பகுதிகளை ஜீரணித்து வாழ்பவர்கள் தான். இவ்வகையைச் சேர்ந்த மனிதர்களைப் பற்றிய படங்கள் அவ்வளவாக வருவதில்லை. இவர்களது வாழ்க்கையை இன்னமும் திரைத்துறை பதிவு செய்யத் துவங்கவில்லை. அப்படி ஒரு வகை தான் பட்லர்கள். நம்மைப் பொறுத்த வரை, அரைகுறை ஆங்கிலத்தைப் பேசும் யாராக இருந்தாலும், ‘பட்லர் இங்கிலீஷ்’ என்று கிண்டல் தான் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், அவர்களது வாழ்வு இதையெல்லாம் தாண்டி, ஒரு ராணுவ ஒழுங்கைக் கடைபிடிக்கும் முறையில் அமைந்தது. அதில் செய்யும் ஒரு சிறிய தவறும் கூட, அவர்களது வேலைக்கே உலை வைக்கும் தன்மையுடையது. அத்தகைய ஒரு பட்லரின் வாழ்க்கையை அருமையான முறையில் விவரிக்கும் ஒரு படம் தான் ” Remains of the Day”.

படத்தின் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர், ஆண்டனி ‘ஹான்னிபல்’ ஹாப்கின்ஸ். ஹான்னிபலாக நடித்ததன் மூலம் அழியாப் புகழ் பெற்றவர். ஹாலிவுட்டில் இன்னமும் மீதமிருக்கும் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இப்படத்திலும், பிய்த்து உதறியிருக்கிறார். கதாநாயகியாக எம்மா தாம்ப்ஸன். இப்படம், ஒரு நாவலாகும். ஜப்பானிய நாவலாசிரியர் கசுவோ இஷிகுரோ (Kazuo Ishiguro) எழுதி, 1989ல் புக்கர் பரிசு வாங்கி, சண்டே டைம்ஸின் உலகின் நூறு முக்கிய நாவல்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரு புகழ்பெற்ற நாவலைப் படமாக்கியது, புகழ்பெற்ற மெர்ச்சண்ட் – ஐவரி ஜோடி. இப்படம், 1994 ஆம் ஆண்டு ஆஸ்கர்களில், எட்டு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெருமையுடையது.

ஸ்டீவன்ஸ் (ஹாப்கின்ஸ்), இங்கிலாந்தில், டார்லிங்டன் ஹால் என்ற ஒரு பிரம்மாண்டமான மாளிகையில், தலைமை பட்லர் பொறுப்பில் இருப்பவர். அவரது வேலை, அந்த மாளிகையின் பராமரிப்பு. அவருக்குக் கீழ் பலர் பணிபுரிகிறார்கள். ஒரு ராணுவ அதிகாரியின் ஒழுங்கைத் தனது வேலையில் கடைபிடிக்கும் ஸ்டீவன்ஸ், தனது வாழ்வையே, பட்லர் வேலைக்கு அர்ப்பணம் செய்துவிட்டவர். அந்த மாளிகையில் பல வருடங்களாகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர். ஒரு நாள், அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. அக்கடிதத்தில், இருபது வருடங்களுக்கு முன் அவருடன் பணிபுரிந்த மிஸ். கென்டன் (எம்மா தாம்ப்ஸன்), தனது திருமண வாழ்க்கை முறிந்து விட்டதாகவும், தான் முன்னர் அங்கு பணிபுரிந்த நாட்களை நினைத்துப் பார்ப்பதாகவும், மீண்டும் அங்கே பணிபுரிய ஆவலாக இருப்பதாகவும் எழுதியிருக்கிறாள். அந்த மாளிகையின் தற்போதைய உரிமையாளர், லூயிஸ் என்ற அமெரிக்கர். அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, சில நாட்கள் விடுமுறை வாங்கிக்கொண்டு, ஸ்டீவன்ஸ் மிஸ். கென்டன் இருக்குமிடம் நோக்கிப் பயணமாகிறார்.

படம், பல வருடங்கள் முன்னோக்கிச் செல்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன், அந்த மாளிகையில், மிஸ். கென்டன் வேலைக்குச் சேர்ந்த சமயம். அப்பொழுதும் ஸ்டீவன்ஸ் தான் தலைமை பட்லர். அவரது தந்தையை அங்கு வேலைக்குச் சேர்த்து விடுகிறார். அவரது தந்தை, வயதாகி விட்டதால், வேலையில் சிறிது தடுமாறுகிறார். பொருட்களை அங்குமிங்கும் மாற்றி வைத்து விடுகிறார். மிஸ். கென்டன், அவரது தந்தைக்கு நிறையப் பணிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால்தான் அவரால் அதனைச் சமாளிக்க முடியவில்லை எனவும் ஸ்டீவன்ஸிடம் பல முறை சொல்கிறாள். இருந்தாலும், ஸ்டீவன்ஸ், தனது தந்தையால் உறுதியாக அந்த வேலைகளைச் செய்ய முடியும் என்ற எண்ணத்தில், அவளை உதாசீனப்படுத்தி விடுகிறார். ஆனால், ஒரு கட்டத்தில் அவரது தந்தை, தேநீர் எடுத்துச் செல்லும் தருணத்தில், தரை தடுக்கி விழுந்து விடுகிறார். அந்த நேரத்திலும், வெள்ளிப் பாத்திரங்கள் கீழே விழுந்து விட்டதை எண்ணி அவரது தந்தை வருந்துகிறார். தந்தை – மகன் இருவருமே, தங்களது கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். வேலையில் ஒரு சிறு தவறு நடந்தாலும், அதற்காக உயிரையே கொடுக்கத் தயங்காதவர்கள்.

அந்த மாளிகையின் உரிமையாளர், டார்லிங்டன் பிரபு. இங்கிலாந்தின் அரசியலில் முக்கியப் பங்கு வகிப்பவர். இரண்டாம் உலகப்போருக்கு முன், அவரது மாளிகைக்குப் பல விருந்தினர்கள் ,பல நாடுகளிருந்தும் வருகிறார்கள். அத்தகைய ஒரு சூழலில், ஸ்டீவன்ஸின் தந்தை இன்னொருமுறை இத்தகைய தவறு செய்தால், அது விருந்தினர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கும் என்பதால், அவரது தந்தைக்கு, சில எளிய வேலைகள் கொடுக்கப்படுகின்றன. தன்மானத்தில் உயர்ந்தவரான ஸ்டீவன்ஸின் தந்தை, இது தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கருதுகிறார். தான் தடுக்கி விழுந்தது, அந்த இடத்தின் தளத்தின் கற்கள் சரியாகப் பதிக்கப்படாமல் இருந்ததால்தான் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

அப்பொழுது, அந்த மாளிகையில் ஒரு அதிமுக்கியமான கூட்டம் நடைபெறுகிறது. பல நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். அத்தகைய ஒரு சூழலில், திடீரென ஸ்டீவன்ஸின் தந்தை படுத்த படுக்கையாகி விடுகிறார். அவரை ஒரு அறையில் படுக்க வைத்துவிட்டு, ஸ்டீவன்ஸ் அங்கு வந்திருக்கும் விருந்தினர்களைக் கவனிக்கச் சென்றுவிடுகிறார். துணைக்கு, மிஸ். கென்டன் இருக்கிறாள். அந்தக் கூட்டமும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. அக்கூட்டத்தின் கடைசி விருந்து. விருந்தினர்கள் தங்களது நாடுகளின் நிலைப்பாட்டைப் பற்றி ஒவ்வொருவராகப் பேசிக்கொண்டிருக்கும் நேரம். அங்கு, ஸ்டீவன்ஸும் அவரது ஆட்களும் ஒவ்வொரு விருந்தினருக்குப் பின்னாலும் தயாராக நின்றுகொண்டிருக்கின்றனர். அப்பொழுது, ஸ்டீவன்ஸின் தந்தை அவரது கடைசித் தருணத்தில் இருப்பதாகத் தகவல் வருகிறது. விருந்தினர்கள் உரையாற்றும்போது எங்கும் போகக்கூடாது என்பதால், ஸ்டீவன்ஸ் அங்கேயே நிற்கிறார். குறிப்பிட்ட விருந்தினர் பேசி முடித்ததும், விரைகிறார். ஆனால், அவரது தந்தை நான்கு நிமிடங்க்ளுக்கு முன்னர் தான் காலமானதாக, அங்கிருக்கும் மிஸ். கென்டன் சொல்கிறாள். அப்பொழுதும், ஒரு விருந்தினர் அழைப்பதால், தனது தந்தை உயிரோடு இருந்தால் இதைத்தான் விரும்புவார் என்று சொல்லி, அங்கிருந்து சென்றுவிடுகிறார் ஸ்டீவன்ஸ். தந்தையின் கண்களை மூட மிஸ். கென்டன் அவரிடம் அனுமதி கேட்கிறாள்.

சிறுகச் சிறுக, அங்கு வரும் பத்திரிக்கையாளர் கார்டினல் (ஹ்யூ க்ராண்ட்) மூலமாக, ஜெர்மானியர்கள், டார்லிங்டன் பிரபுவை உபயோகப்படுத்திக்கொள்வது ஸ்டீவன்ஸுக்குத் தெரிய வருகிறது. ஆனால், அதற்குப்பின்னும், அங்கு வருபவர்கள் பேசிக்கொள்வதை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை. அது அவரது வேலைக்கு இடையூறாக இருக்கும் என்பதால். அவருக்கு வெட்டிப்பேச்சிலும் விருப்பம் இல்லை. தனது முதலாளி மிக நல்லவர் என்பதே அவர் தனது மனதிற்குள் கொண்டிருக்கும் பிம்பம்.

இடையிடையே ஸ்டீவன்ஸ், தற்காலத்தில் மிஸ். கென்டனைத் தேடிச் செல்லும் காட்சிகளும் காட்டப்படுகின்றன.

மீண்டும் முன்வருடங்களுக்குச் செல்கிறோம். ஸ்டீவன்ஸுக்கும் மிஸ். கென்டனுக்கும் இடையே ஒரு மெல்லிய உறவு துளிர்க்கிறது. ஒவ்வொருவருக்குமே மற்றொருவரைப் பிடிக்கிறது. ஆனால், இருவருக்குமே அதை வெளிப்படுத்தத் தயக்கம். அவர்கள் இருவரும் உரையாடிக்கொள்வதே கடுமையான தொனியில்தான். அதுவும், முற்றிலும் அந்த மாளிகையின் பராமரிப்பு பற்றிய விஷயங்கள் தான். இந்த நிலையில், இருவருக்கும் தெரிந்த ஒரு நண்பர், மிஸ். கென்டனை மணக்க விருப்பம் தெரிவிக்கிறார். இதனை ஸ்டீவன்ஸிடம் தெரிவிக்கும் மிஸ். கென்டனிடம், ஸ்டீவன்ஸ் அப்பொழுதும் அவரது வழக்கமான தொனியிலேயே பேசிவிட்டுச் செல்கிறார். இருவருமே உள்ளுக்குள் உடைந்து சிதறிவிடுகிறார்கள்.

அன்று இரவு. ஸ்டீவன்ஸ், ஒரு விஸ்கி பாட்டிலைக் குடிப்பதற்காக எடுத்து வருகிறார். அப்போது, மிஸ். கென்டன் அழும் சத்தம் கேட்கிறது. அவளது அறைக்குள் தயங்கியபடியே நுழையும் ஸ்டீவன்ஸ். அழுது கொண்டிருக்கும் அவளது அருகாமையில் நிற்கிறார். அவள் அவரைப் பார்க்கிறாள். ஸ்டீவன்ஸ் எதையோ சொல்ல வாயெடுக்கிறார். அவரது மனதை வெளியே கொட்டப்போகிறார் என்று நாம் நிமிர்ந்து அமருகிறோம் .அவர் சொல்வது: “மாளிகையின் முற்றத்தில் நிறைய தூசு இருக்கிறது. நாளை அதனை சுத்தப்படுத்தச் சொல்லுங்கள்”.

இதனைச் சொல்லிவிட்டு அவர் அகன்று விடுகிறார்.

மிஸ். கென்டன் மறுநாள் அவரிடம் வந்து, தான் சீக்கிரமாக வெளியே செல்ல முடிவெடுத்திருப்பதாகவும், தன்னை சீக்கிரமே விடுவிக்கும்படியும் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறாள்.

நிகழ்காலம். ஸ்டீவன்ஸ் மிஸ். கென்டனைச் சந்திக்கிறார். ஸ்டீவன்ஸ் மூலம் டார்லிங்டன் பிரபு ஜெர்மானியர்களால் ஏமாற்றப்பட்டதையும், இங்கிலாந்துப் பத்திரிகை ஒன்று அவரை “துரோகி” என்று அழைத்ததையும், அவர் அப்பத்திரிகை மேல் வழக்குப்போட்டுத் தோற்றதையும், அதனாலேயே இறந்து விட்டதையும், அதன்பின் வெகுநாட்கள் கழித்து ஒரு அமெரிக்கர் அந்த மாளிகையை வாங்கியதையும் அவள் தெரிந்து கொள்கிறாள்.

ஸ்டீவன்ஸிடம், தனது திருமணம் முறிந்ததை அவள் தெரிவிக்கிறாள். பழையபடி வேலைக்குச் செல்லவேண்டும் என்று அவளுக்குத் தோன்றுவதையும் சொல்கிறாள். ஸ்டீவன்ஸுக்கோ, அவள் மீண்டும் தன்னுடன் பணி புரியப்போவதை எண்ணி, உள்ளுக்குள் ஆனந்தம்.

அதன்பின் என்ன நடந்தது? இருபது ஆண்டுகள் கழித்தாவது இருவரும் தங்கள் உள்ளங்களைப் பறிமாறிக்கொண்டார்களா? டி வி டி யில் காணுங்கள்.

இத்திரைப்படத்தைப் பற்றி நான் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. நமது கனவுகளின் காதலர் சொல்லித்தான் இப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் எனக்குப் பிடித்த படமாக மாறிப்போனது இப்படம்.

ஆண்டனி ஹாப்கின்ஸ் இப்படத்தில் இல்லவே இல்லை. மிகவும் நேர்மையான, வேலையில் கடுமையான ஒரு பட்லரையே நாம் காண்கிறோம். படம் முழுவதிலும், எந்த எண்ணங்களையும் வெளிப்படுத்தாத ஒரு இறுகிய முகத்துடன், எப்பொது பார்த்தாலும் ” Thank you Sir”, “My Pleasure Sir”, “indeed sir”, “Would you like anything more sir?” போன்ற உபசார வார்த்தைகளையே கூறிக்கொண்டிருக்கும் ஒரு வேடம் அவருக்கு. அருமையாகச் செய்திருக்கிறார். அவருக்கென இப்படம் முழுவதிலும் அவர் செய்யும் ஒரே காரியம், இறுதியில் மிஸ். கென்டனைத் தேடிச் செல்வது தான். தனது எஜமானரின் கௌரவத்துக்காகத் தன்னையே வருத்திக்கொள்ளும் அற்புதமான ஒரு கதாபாத்திரம்.

மிஸ். கென்டனாக எம்மா தாம்ப்ஸன். ஹாப்கின்ஸுக்கு ஈடு கொடுக்கும் நடிப்பு. அவரது நேர் எதிரான கதாபாத்திரம். உணர்ச்சிகளின் குவியல். தான் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்துவிட்டதைத் துடிக்கும் உதடுகளோடு ஸ்டீவன்ஸிடம் சொல்லும் ஒரு காட்சி போதும், இவரது நடிப்பைப் பற்றிச் சொல்வதற்கு. ஹேட்ஸ் ஆஃப்.

இப்படம் ஒரு அருமையான அனுபவம். சில படங்களைப் பார்த்தால், பார்க்கும்போதே ஒரு இனிமையான அனுபவம் வந்து நம்மைப் போர்த்திக்கொள்ளும். அந்த இனிமை, படம் முடிந்தவுடனும் வெகுநேரம் நம்மை விட்டுப் போகாது. இப்படமும் அப்படியே.

Remains of the Day படத்தின் டிரைலர் இங்கே.

  Comments

26 Comments

  1. Anonymous

    Rajesh,

    Good to see that you are digging very old movie database and writing reviews. Usually most of them will stick to the present. Nice work 

    “U” are different.

    Rgds,
    ~Sha

    Reply
  2. விமர்சனம் அருமை நண்பரே. படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. 🙂

    Reply
  3. நண்பரே,

    ஹாப்கின்ஸின் ஹானிபல் பாத்திரத்திற்கு மயங்காத நான், ஹாப்கின்ஸின் தீவிர ரசிகனானது இப்படத்தின் மூலமாகத்தான். ஹாப்கின்ஸ் நடிப்புக் கடவுள் என்ற எண்ணம் என் மனதில் மேலோங்கி இருந்த காலம் அது.

    அவர் நடித்த படங்கள் என்றால் முதல் நாளே சென்று பார்ப்பேன். என்னுடன் என் மாமாவும் வருவார். படம் முடிவடைந்ததின் பின் ஹாப்கின்ஸின் ஸ்டைலை என் மாமா காப்பி அடித்து நடிப்பார். இனிமையான தருணங்கள் அவை.

    இத்திரைப்படம் மிகவும் உணர்ச்சிகரமான ஒன்று. அதேவேளையில் ஹாப்கின்ஸ் பாத்திரம் தன் உணர்வுகளை சாத்தியத்திற்கு மீறுவதை திரையில் காணும் ரசிகனிற்கு கண்ணீர் மெல்ல எட்டிப்பார்த்து விடும்.

    பத்திரிகையை தனது எஜமானனிற்காக இஸ்திரி போட்டு வைப்பதும், இறுதி பஸ் காட்சியும் மனதை விட்டு அகலாதவை.

    ஏறக்குறைய 15 வருடங்களிற்குப் பின்னாக இத்திரைப்படம் உங்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள உணர்வலைகள் எனக்கு ஆச்சர்யத்தை தந்தது. புதிய தலைமுறைக்கு இப்படம் பிடிக்குமோ எனும் சந்தேகம் எனக்கு இருந்தது. அச்சந்தேகம் உங்கள் பதிவின் மூலம் தகர்ந்தது.

    ஒன்று ஹாப்கின்ஸை திரைகளில் காண்பது அரிதாகவே உள்ளது. அப்படியே தோன்றினாலும் அவரது பாத்திரங்கள் சிறப்பானவையாக எனக்குத் தெரிவதில்லை. அதற்கு காரணம் இப்படத்தில் நான் கண்ட ஹாப்கின்ஸாக கூட இருக்கலாம். இப்படத்தில் அவரிற்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை என்பது மனதிற்கு வருத்தம் தான் இருப்பினும் இப்பாத்திரம் மூலம் ஹாப்கின்ஸ் ரசிகர்கள் மனதில் பிடித்த இடம் அவ்விருதை விட மகத்தானது.

    உங்கள் அழகான நடையில் அருமையான பதிவு, நேயர் விருப்பத்தை நிறைவேற்றியமைக்கு என் அன்பின் நன்றிகள்.

    Reply
  4. படத்தை பற்றிய ஆழமான கருத்துக்களை தெளிவாக கூறியிருக்கிறீர்கள்….

    Reply
  5. பாஸ்,
    இந்த அளவு ரசிப்பு தன்மை எனக்கு கிடையாது பாஸ். நமக்கெல்லாம் டுமீல்,டுமீல் பர,பர படங்கள் தான் லாயக்கு…

    அன்புடன்,
    லக்கி லிமட்
    சுஸ்கி & விஸ்கி தோன்றும் பேரிக்காய் போராட்டம்!

    Reply
  6. நானும்.. லக்கி டைப்தான். தெரியாத்தனமா.. எதுனா நல்லப் படம் பார்த்தாலுண்டு.

    எனக்கு.. ஹானிபல் படத்தையும் இதையும்.. ஒரே நேரத்தில்.. காட்டினீங்கன்னா.. நான் ஹானிபல் பக்கம்தான் கையை காட்டுவேன்.

    Reply
  7. @ Sha – நன்றி . .உங்கள் கருத்துகள் என்னை மேலும் எழுத வைக்கின்றன. அடிக்கடி வாருங்கள்.

    @ ரகுநாதன் – நன்றி நண்பரே . . படத்தையும் பார்த்தீர்கள் என்றால், இன்னமும் மகிழ்ச்சி அடைவீர்கள். . . 🙂

    @ காதலரே – இப்படம் எனது உள்ளத்தையும் கவர்ந்து விட்டது. ஹாப்கின்ஸ் நடிப்புக் கடவுள் தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்தச் செய்தித்தாளை இஸ்திரி போடும் காட்சி, பார்த்தவுடன் என் மனத்தைக் கவ்வியது . . இரு நொடி தான் வரும். ஆனாலும், ஹாப்கின்ஸின் மனதின் உண்மையைப் படீரென்று நமக்குச் சொல்லும் ஒரு காட்சி அது.

    இப்படம், கண்டிப்பாக எவருக்குமே பிடிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இப்படத்தை எனக்குச் சிபாரிசு செய்ததற்காக உங்களுக்கு எனது நன்றிகள் நண்பரே. . உங்களது நினைவுகளைப் படிப்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. நீங்கள் ஏன் இந்தத் தருணங்களைப் பற்றி ஒரு பதிவிடக் கூடாது?

    @ அண்ணாமலையான் – தல.. தாங்கீஸ். . . உங்களோட பதிவுக்கு நானு வெயிட்டிங் . . 🙂

    @ லக்கி – பாஸு . .டாமல் டுமீல் படங்களப் பார்ப்பதோடு, அப்பப்ப இந்த மாதிரிப் படங்களையும் பாருங்க . .உங்களுக்குப் பிடிக்கும் . .:-)

    @ பாலா – தல. .நானும் action படங்களோட ரசிகன் தான் . .இருந்தாலும், அப்பப்ப இந்த மாதிரி டிராமா வும் பார்ப்பேன் . . எனக்குமே ஹான்னிபல் ரொம்ப புடிக்கும் . .ஆனா இதுவும் புடிக்கும் . . ரெண்டுமே ரெண்டு எக்ஸ்ட்ரீம் . .ரெண்டுலேயும் டோட்டலா ரெண்டு துருவங்களோட கதாபாத்திரத்த எடுத்து நடிச்சது தான் நம்ம ஹாப்கின்சோட தெறம . . இதுல சும்மா பின்னிருப்பாரு . . .

    Reply
  8. தல சந்தடி சாக்குல பட்லர் இங்கிலிஷ் பேசறவஙகளை கலாய்த்ததற்கு வன்மையான கண்டனங்கள்…
    எங்களை பார்த்தா உங்களுக்கு கிண்டலா இருக்கா??? 🙂

    இந்த மாதிரி பார்க்குற அளவுக்கு நமக்கு பொறுமையும் கிடையாது, சரக்கும் கிடையாது…நல்ல பயப்படற மாதிரி ஒரு படம் போடுங்க தல…

    Reply
  9. பயப்படற மாதிரின்னதும் வீராசாமி, வேட்டைக்காரன் போட்ராதீங்க… ஏற்கனவே விமர்சனம் படிச்சு பயந்துப்போய் வேப்பிலை அடிச்ருக்கேன்…

    Reply
  10. //ஜப்பானிய நாவலாசிரியர் கசுவோ இஷிகுரோ (Kazuo Ishiguro) எழுதி, 1989ல் புக்கர் பரிசு வாங்கி, //

    Ishiguro is not a Japanese novelist. ஜப்பானிய நாவலாசிரியர் கசுவோ இஷிகுரோ is wrong to describe him thus.

    His enthncitiy is Japanese; he was born to Japanese parents in Japan; but they emigrated to UK when he was just a lactating baby. The correct way to describe him is He is a Japanese Briton, like Asian-Americal, Afro-Amercial, Hispanic-America.

    The novelist does not know a single word of Japanese. He was brought up in UK and knows only English.

    Like Joseph Conrad, another classical novelist who was not an English man, but a Pole, and who surprised English speaking world with his style of English which even an Englishman cant successfully imitate.

    Ishiguro writes English that is today unrivaled. He along with Naipaul is the greatest living prose stylist in English.

    His Booker prize-winning novel Remains of the Day is a classic not only for striking a new way of narration; but also for the style of English remarkable for clarity and which no one can imitate. Simple but beyond our ability to imiate.

    Reply
  11. You are writing on the movie glowingly; but not a word has been said here, about the novel.

    Generally, films has rarely succeeded in bringing out the spirit of the novel it purports to replicate in celluloid form. Many classical novels in English have been turned into movies; but readers of such novels were generally dissatisfied with movie versions. They complain their favourite novel has been mutiliated.

    Nevertheless, in the case of Remains of the Day, the movie matches the book and that is due to the high voltage performances from Hopkins and Ms Thompson. You are right there.

    I watched the movie spell-bound. Your praise is just.

    Reply
  12. @ நாஞ்சில் பிரதாப் – பயப்படுற மாதிரி படத்தைத் தேன் நானும் தேடிக்கினு இருக்கேன் . .ஆனா கிடைக்க மாட்டேங்குதே பாஸு . . சீக்கிரமே உங்களுக்காகவே போட்டுறலாம்.. டெம்ப்ளேட்டும் கடைசிக்கட்டத்துல இருக்கு. . சீக்கிரமே புதிய டெம்ப்ளேட் . . 🙂 . . என்னது வீராச்சாமியும் வேட்டைக்காரனுமா . .அய்யய்யோ செத்தேன் . . நல்ல படமா போடுறேன் . . 🙂

    @ Sword Fish – ஜப்பானிய நாவலாசிரியர்ன்ற தகவல் ஒரு பிழை தான். . ஏன்னா, எழுதும்போது அவர் இங்கிலாந்தில் தான் இருந்தார்ன்னு போட மறந்துட்டேன் . . சுட்டிக் காட்டியதற்கு நன்றி . . அவரைப் பற்றிய உங்கள் கருத்துகளுக்கு நன்றி. . நமது நண்பர்களுக்கு இவரைப் பற்றிய நிறைய தகவல்களைக் கொடுத்துள்ளீர்கள். .

    நாவலைப் பற்றி நான் எழுதாததற்குக் காரணம், அதை நான் இன்னும் படிக்காதது தான். . எனவே, அதைப்பற்றி எழுத மனம் வரவில்லை. . படித்து விட்டு கண்டிப்பாக எழுத முயல்கிறேன் . . அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க . .வந்து உங்க கருத்துகள சொல்லுங்க . . நன்றி . .

    Reply
  13. u r great t k u

    Reply
  14. நண்பர் ராஜேஷ்,
    அந்தோனி ஹாப்கின்ஸின் இந்த படம் போன வாரம் தான் பார்த்தேன்,பிரமித்தேன்,கூடவே எலிப்ஹேண்ட் மேனும் பார்த்தேன்,எட்ஜ் என்ற படமும் பார்தேன்.
    இந்த படங்கள் பார்க்கவில்லை என்றால் உடனே பார்க்கவும்,அந்தோனி ஹாப்கின்ஸ் படங்கள் பற்றி நிறைய எழுத இருக்கிறது,அவரின் பாடி லாங்குவேஜ்,கண்களின் ஸ்டைல்,முகபாவனை ஆஜானுபாகுவான கெஸ்சர் என சொல்லிக்கொண்டே போகலாம் நண்பா,மிக்க நன்றி பகிர்வுக்கு,பாரட்டுக்கள்.ஓட்டுக்கள் போட்டாச்சு

    Reply
  15. //சில படங்களைப் பார்த்தால், பார்க்கும்போதே ஒரு இனிமையான அனுபவம் வந்து நம்மைப் போர்த்திக்கொள்ளும்//

    சில விமர்சனங்களைப் படித்தாலும் ஒரு இனிமையான அனுபவம் நமக்கு கிட்டும். சமீபத்திய உதாரணம் இந்தப் பட விமர்சனம்.
    ரொம்ப ’டீப் லவ்’ சப்ஜெக்டாப் போடுறீகளே…சீக்கிரமே ‘invitation’ அனுப்புவீகளோ? race course road ‘surya international’ல ரூம் போட்டுக் குடுத்தாத்தேன் வருவேனாக்கும்… 🙂

    Reply
  16. @ saran – என்னங்க திடீர்னு வந்து புயல் வேகத்துல ஒரு கமெண்ட் போட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டீங்க . . 🙂

    @ கார்த்திகேயன் – நன்றி நண்பா . .உங்க வலைப்பூல ஏதோ பிரச்னை. . பாக்கவே முடியல. . லோட் ஆகவே இல்ல . . 🙁

    @ மயில்ராவணன் – அதே தாங்க மேட்டரு . . 🙂 ரூம் போட்ரலாம் உடுங்க . . 🙂

    Reply
  17. நண்பா கருந்தேளு…சொல்லவே இல்ல.வீட்டு டிசைன் பட்டயக் கிளப்புது.சூப்பரப்பு.லேட்டானாலும் லேட்டஸ்டா…கா..க..க போங்க..:)

    Reply
  18. Anonymous

    Your new site is looking good. It is very neat and elegant 🙂

    ~Sha.

    Reply
  19. @ மயில்ராவணன் – கொஞ்ச நாளா அக்ஞாத வாசம் (!!) போயிட்டேன் . .பெருசா ஒண்ணுமில்ல. . இந்த டூம்ப் ரெய்டர் அண்டர்வேர்ல்ட் ஆடிக்கினு இருக்கேன் . .அதான் . . இந்த சைக்கிள் கேப்ல சைட்ட மாதிரலாமேன்னு தான் . . இதோ கேம முடிக்கப்போறேன் . . வந்தாச்சு . . . . . . 🙂

    @ sha – நன்றி . . மேல மயில்ராவணனுக்குப் போட்டுருக்கறத படிங்க. . உங்களுக்கும்தான் . .சீக்கிரமே தலைவரு ரீ – என்ட்ரி ஆரம்பிக்கப்போவுது . . 🙂 வர்ட்டா . . . .

    Reply
  20. யப்பா.. இந்த கருப்பு, சிவப்புல இருந்து வெளிய வந்தாச்சா..!! இப்பதான் கண்ணுக்கு நிம்மதியா இருக்கு!! 🙂 🙂

    Reply
  21. KARUNTHEL SUPER APPU

    Reply
  22. nanba nan ipa dan blog open pani iruken yenaku niraya doubt iruku adha clarify panra madheri oru post pota helpa irukum

    Reply
  23. விமர்சனத்துக்கு எதாவது பரிசு உண்டா ?இருந்தா உங்களுக்குத்தான் .அது சரி சாரு உங்களுக்கு ஏதாவது கவனிச்சாரா ? புக் எல்லாம் தடை வருதுன்னு .ரூம் போட்டு யோசிப்பிங்களோ .

    Reply
  24. Gunasekaran A

    நேற்று தான் இந்த படத்தைப் பார்த்தேன். உங்கள் விமர்சனம் மிக அருமை… எம்மா தோம்ப்சன் பற்றி மேலும் எதிர்பார்த்தேன்…நன்று

    Reply

Join the conversation