Requiem for a Dream (2000) – English

by Karundhel Rajesh January 14, 2010   English films

நமது வாழ்வில் எத்தனை விஷயங்களுக்கு நாம் அடிமைகளாக இருக்கிறோம்? அவை இல்லாமல் நம்மால் எதுவுமே செய்ய முடிவதில்லை. ஒரு உதாரணத்துக்கு, இந்தத் தொலைக்காட்சிக்கு நம் நாட்டுப் பெரும்பாலான பெண்கள் அடிமை. அதேபோல், போதைமருந்துகளுக்கும் பலர் அடிமை. இயையல்லாது, நமது வாழ்வில் நல்ல விஷயங்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பலவற்றுக்கும் கூட நாம் காலப்போக்கில் அடிமைகளாக மாறிக்கொண்டே வருகிறோம். இப்படி ஆவதால் உள்ள தீமைகளைப் பற்றி நாம் என்றூமே யோசித்ததில்லை. ஒரு கட்டத்தில், நாம் என்னதான் யோசித்தாலும், இந்த விஷயங்கள் அவற்றில் நம்மை அப்படியே இழுத்துப்போட்டு விடுவதனால், நம்மல் அவற்றை விட்டு விடுபடவே முடிவதில்லை.

இத்தகைய அடிமைத்தனத்தைப் பற்றி நமக்கெல்லாம் தெரிந்த டேரன் அர்னாவ்ஸ்கி (ஃபௌண்டன், த ரெஸ்லர்) எடுத்த ஒரு அருமையான படம்தான் இந்த ‘ரெகீம் ஃபார் எ ட்ரீம்’ .

ரெகீம் ஃபார் எ ட்ரீம் என்றால், ஒரு கனவின் இறுதி ஊர்வலம் அல்லது ஒரு கனவிற்கான இரங்கற்பா என்று எடுத்துக்கொள்ளலாம். இப்படத்தில், மூன்று பேர், தாங்கள் சில விஷயங்களுக்கு அடிமைப்படுவதனால் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சம்மட்டியால் அடித்ததைப் போல் சொல்லியிருக்கிறார் அர்னாவ்ஸ்கி. கிம் கி டுக்கின் ‘ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர் அண்ட் ஸ்ப்ரிங்’ படத்தைப் போலவே, இதிலும், மூன்று காலங்கள் காட்டப்படுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படத்தில் வரும் கதைமாந்தர்களின் வாழ்வு எப்படிச் செல்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

முதலில் கோடைக்காலம். ஸாரா கோல்ட்ஃபார்ப் என்பவள் ஒரு விதவை. அவளுக்கு ஒரு மகன். பெயர் ஹாரி. இவள், ஒரு அபார்ட்மெண்ட்டில் தனியாக வாழ்ந்து வருகிறாள். அவளுடைய முழுநேரமும், தொலைக்காட்சியில் ‘கேம் ஷோ’ என்று சொல்லக்கூடிய நிகழ்ச்சிகளைப் பார்த்தபடியே இருக்கிறாள். அந்த அபார்ட்மெண்ட்டில் உள்ள மற்ற முதிய தோழிக்களோடு பேசிக்கொண்டு காலம் கழித்து வருகிறாள்.

அவளது மகன் ஹாரியோ, எந்த வேலையும் இல்லாமல், தனது காதலி மரியனோடும், நண்பன் டைரோனோடும் ஊர் சுற்றிக்கொண்டு இருப்பவன். கையில் காசில்லையென்றால், தனது தாயின் வீட்டிற்குச் சென்று, தொலைக்காட்சியைக் கொண்டு போய் அடகுக்கடையில் வைத்து, அந்தப்பணத்தைக் கொண்டு போதைமருந்து ஊசிகளைப் போட்டுக்கொள்பவன். இந்த மூவருமே போதை மருந்துக்கு அடிமைகள் தாம்.

ஒருநாள், ஸாராவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவள் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த கேம் ஷோவில் பங்குபெற அவள் அழைக்கப்படுகிறாள். அவளால் தன்னையே நம்ப முடியவில்லை. மிகவும் சந்தோஷப்படுகிறாள். தனது மகனின் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் தான் அணிந்திருந்த உடைதான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து, அந்த உடையைப் போட்டுப் பார்க்கிறாள். ஆனால் அது அவளுக்கு இறுக்கமாக இருக்கிறது. எனவே, எப்படியாவது உடல் இளைக்கவேண்டும் என்று நினைத்து, தனது தோழிகளிடம் யோசனை கேட்கிறாள். அவர்கள் சொல்லும் உணவு முறைகளையெல்லாம் உண்டு பார்க்கிறாள். அவளால் பத்தியம் இருக்க இயலவில்லை. வேறு வழி ஏதாவது உள்ளதா என்று அவள் கேட்கும்போது, சக தோழி ஒருத்தி சொல்லும் யோசனையின் பேரில், ஒரு மருத்துவரைச் சென்று பார்க்கிறாள். இதற்குள் அவளுக்கு அந்த நிகழ்ச்சியிலிருந்து விண்ணப்பம் அனுப்பப்படுகிறது. அதனை நிரப்பித் தபாலிலும் அனுப்பிவிடுகிறாள்.

ஹாரியும் அவனது நண்பனும், கொஞ்சம் பணத்தைத் திரட்டி, போதை மருந்து விற்கத்தொடங்குகிறார்கள். அதில் நிறையப் பணம் சேர்கிறது. ஹாரி, தனது எதிர்காலத்தைப் பற்றிக் கனவுகாணத் தொடங்குகிறான். இந்தப் பணத்தை வைத்து, மரியனுக்கு ஒரு நல்ல துணிக்கடை ஆரம்பித்து, அவளது டிசைன்களுக்கு
உயிர்கொடுக்க வேண்டும் என்பது அவனது கனவு. அவன் நண்பனோ, தான் ஒரு தாதா ஆகவேண்டும் என்று கனவு காண்கிறான்.

காலம் இப்போது இலையுதிர்காலம். மருத்துவரிடம் செல்லும் ஸாரா, அவர் கொடுத்த மருந்துகளை உட்கொள்ளத் துவங்குகிறாள். அவை முறையான மருந்துகள் அல்ல. அவை, ‘ஸெடேட்டிவ்’ என்று கூறப்படும் மாத்திரைகள். எனவே, சிறிதுகாலம் சென்றதும், அவளுக்கு, கொஞ்சம்கொஞ்சமாக மூளை பாதிக்கப்படத் துவங்குகிறது. இல்லாத காட்சிகளைக் காணத்தொடங்குகிறாள். அறையின் மூலையில் உள்ள ஃப்ரிட்ஜ், அவளைத் துரத்துவதாகக் காண்கிறாள். பயப்படத் தொடங்குகிறாள். இன்னமும் அந்த கேம் ஷோவிலிருந்து அவளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை.

ஹாரியின் நண்பன் டைரோன், ஒருநாள் ஒரு கொலையின் நடுவே மாட்டிக்கொள்கிறான். போலீஸ் அவனைக் கைது செய்கிறது. தன்னிடமுள்ள பணத்தைக் கொடுத்து அவனை மீட்கிறான் ஹாரி. மேலும், இந்தச் சண்டைகளால், போதை மருந்து கிடைப்பது கடினமாகிறது. அவர்கள் போதை மருந்து அடிமைகள் என்பதனாலும், போதை மருந்தை விற்கவேண்டும்; அதனால் பணம் சம்பாதித்து, எதிர்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்பதனாலும், வேறு வழியே இல்லாமல், மரியனை, அவளது மருத்துவரோடு உடலுறவு கொள்ளச் சொல்கிறான் ஹாரி. அவர்களது உறவு இதனால் பாதிக்கப்படுகிறது. அவள், பணத்தைக் கொண்டுவந்து அவனிடம் கொடுக்கிறாள்.

காலம் இப்போது பனிக்காலம். ஹாரியும் டைரோனும், ஃப்ளோரிஃடா செல்ல முடிவெடுக்கின்றனர். அங்கு சென்றால் ஏதாவது செய்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு. ஹாரியின் கையில், ஊசி குத்திக் குத்தி, ஆறாத ரணம் ஏற்படுகிறது. அது நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. அவர்கள் ஃப்ளோரிடா சென்றபின்னர், தனித்து விடப்படும் மரியன், பலவாறான எண்ண அலைக்கழிப்புகளுக்கு ஆளாகிறாள். அவள் போதைமருந்து அடிமை வேறு என்பதால், அவளால் அவள் மூளையில் உதிக்கும் எண்ணங்களின் பாரத்தைத் தாங்க முடிவதில்லை. மிகவும் தனியே உணரும் அவள், தாங்க முடியாத போதை மருந்து எண்ணத்தினால், ஒரு தாதாவைத் தேடிச் செல்கிறாள். அவன், அவளை அன்று இரவு அவனது நண்பர்களை சந்தோஷப்படுத்தினால், போதை மருந்தைக் கொடுப்பதாகச் சொல்கிறான்.

ஸாரா, உச்சபட்ச மன அதிர்வுக்கு உள்ளாகி, அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்துக்கே சென்று, அவளுக்கு வாய்ப்புத் தருமாறு அழுகிறாள். அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அவளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்படுகிறது. தாதாவைப் பார்த்துவிட்டு வந்து, ஹாரியை நினைத்து அழுதுகொண்டிருக்கும் மரியனை, ஹாரி கூப்பிடுகிறான். அவனது கை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதனால், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல, அந்த காயத்தைப் பார்த்து சந்தேகப்படும் மருத்துவர், போலீஸுக்குத் தகவல் கொடுத்து விடுகிறார். அவர்கள் இருவரும் கைது செய்யப்படுகிறார்கள். அந்த நேரத்தில்தான் ஹாரி, மரியனைக் கூப்பிடுகிறான்.

மரியனால் தாங்க முடியாமல், அவனை உடனே வரச்சொல்லி, அழுகிறாள். அவன் உடனே வந்துவிட்டால், இந்த நரகத்திலிருந்து தனக்கு விடுதலை கிடைக்கும் என்று அவள் நினைக்கிறாள். அவனை எண்ணி அழத்தொடங்குகிறாள். ஆனால், மாலை நேரம் வருகிறது. ஒரு முடிவுடன், நன்றாக ஒப்பனை செய்துகொள்ளும் மரியன், அந்த தாதா வரச்சொன்ன இடத்துக்குச் செல்கிறாள்.

இதன்பின் என்ன நடந்தது? ஹாரியினால் திரும்ப வர முடிந்ததா? அவனும் மரியனும் சேர்ந்தார்களா? மரியன் என்ன செய்தாள்? ஸாரா அவளது மகனான ஹாரியுடன் சேர முடிந்ததா? அத்தனை கேள்விகளுக்கும், நெஞ்சை அறுக்கும் முறையில் பதில் சொல்கிறது இப்படம்.

இப்படத்தைப் பார்த்து முடிக்கும் நேரத்தில், நான் ஒரு அதிர்ந்து போன மனநிலையில் இருந்தேன் என்று சொன்னால், அது ஒரு அண்டர்ஸ்டேட்மெண்ட் என்றுதான் சொல்லுவேன். இப்படத்தைப் பற்றி, அடுத்த நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். அந்த அளவிற்கு, அர்னாவ்ஸ்கி ஒரு கலக்கு கலக்கி விடுகிறார். ஆனால், இவை எதுவும் நம்ப முடியாத நிகழ்ச்சிகள் அல்ல. அத்தனையும் நிஜமாக நடக்கக்கூடியவை தான்.

வாழ்க்கை இந்த அளவுக்கு நம்மைச் சுற்றி இறுகுகிறது. அதன் பிடியிலிருந்து விடுபட, சில பேருக்கு முடிகிறது. சில பேர், அந்தப் பிரச்னைகளுக்கே அடிமைகளாகி, அதிலேயே மூழ்கி இறக்கிறார்கள். இதனை இவ்வளவு பட்டவர்த்தனமாகச் சொல்லும் ஒரு படத்தை, இதுவரை நான் கண்டதில்லை.

இக்கதை, ஒரு நாவலாக எழுதப்பட்டதாகும். இப்படத்தில், அதன் கதாபாத்திரங்கள், Addiction என்ற நிலைக்கு ஒவ்வொருமுறை செல்லும்போதும், அதனை நேரடியாகக் காண்பிக்காமல், ஒரு தாக்கத்தோடு எப்படிக் காண்பிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் அது.

இப்படத்தில், முதல் பாதியில், தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை வைத்து ஹாரியும் டைரோனும் மரியனும் சந்தோஷப்படுவது, நமது ஆய்த எழுத்தில் வரும் அந்தப் பாடல் – மாதவனும் மீரா ஜாஸ்மினும் ஒரு கேஸ் ஏஜென்ஸி ஆரம்பிப்பார்களே – அப்பட்டமாக இதைப் போலவே இருந்தது. அப்புறம் பார்த்தால், இப்படம் வெளியான ஆண்டு 2000. சரிதான்! (அமோரெஸ் பெரோஸ் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது).

மொத்தத்தில், டேரன் அர்னாவ்ஸ்கி ஒரு தலைசிறந்த இயக்குநர் என்பதை ஒவ்வொரு ஷாட்டிலும் நிரூபிக்கும் படம் இது. இதன் ஐ.எம். டி. பி ரேட்டிங்கை சற்று எடுத்துப்பாருங்கள்.

ரெகீம் ஃபார் எ ட்ரீம் படத்தின் டிரைலர் இங்கே.

  Comments

13 Comments

  1. படத்தைப் பார்க்க கொஞ்சம் பொறுமை தேவைப்படும். போதை மருந்து உபயோகத்திற்காகவே NC-17 வாங்கியிருந்தது. அப்படியும்.. கொஞ்சமான கமர்ஷியல் சக்ஸஸ்னு படிச்ச நியாபகம் இருக்கு.

    அருமையானப் படம்!! ஆர்ட் ஃப்லிம் எஃபெக்ட்டில் இருப்பதால்.. கொஞ்சம் புரிவதுதான் கஷ்டம்!!


    வெல்டன் கருந்தேள்! 🙂 🙂

    Reply
  2. அருமையான பகிர்வு. இந்தப் படத்தைப் பார்த்து இரவு முழுவதும் சரியாக தூக்கம் இல்லை. மனத்தில் ஒரு வித அழுத்தத்தை தந்த படம்.

    ரெக்யூம் ஃபார் எ ட்ரீம் என்பதை ஒரு கனவுக்கான இறுதி ஊர்வலம் அல்லது ஒரு கனவுக்கான இரங்கற்பா என்பதை விட ஒரு கனவுக்கான ஒப்பாரி என்பதே பொருத்தமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

    Reply
  3. பாலா லேசா பயமுறுத்துகிறார், இருந்தாலும் லெட்ஸ் ட்ரை..

    Reply
  4. கருந்தேள்,

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் நட்பு வட்டாரத்திற்கும், என்னுடைய உளம் கனிந்த மனம் உவர்ந்த இனிய தைத்திங்கள்-தைப்பொங்கல் மற்றும் உழவர் தின நல்வாழ்த்துக்கள்.

    Reply
  5. நண்பரே,

    எனக்கு பிடித்த படம். இதனைப் பார்க்கும் போது வயது இன்றிருந்ததை விட குறைவாகவே இருந்தது. படத்தின் தாக்கம் அந்த வயதில் வித்தியாசமாக, புதுமையாக இருந்தது. டேரனின் சிறந்த படம் எதுவென்றால் தயங்காது இத்திரைப்படத்தைக் கூறிடுவேன். முடிவைப் பற்றி என்ன கூறுவது. வாழ்க்கையில் இப்படியான சந்தர்பங்களில் வாழ்பவர்களின் கனவுகளின் இசை எவ்வாறாக இருக்கும் என்ற கேள்வியைக் என்னிடம் நானே கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

    Reply
  6. @ பாலா – நன்றி . . 🙂 பார்க்கும்போது என்னை ஒரு கலக்கு கலக்கிச்சு . . வேறே எதையும் பத்தி யோசிக்கவே முடியல. .

    @ Siravanan – இத எழுதுற நேரத்துல எனக்கு நான் போட்ட மீனிங் கரெக்டா இருக்கும்னு தோணிச்சு . .ஆனா, இப்போ நீங்க சொன்ன மீனிங்கும் சரிதான்னு படுத்து . . உங்க கருத்துக்கு நன்றி . .:-)

    @ அண்ணாமலையான் – 🙂 நீங்க போய் பாருங்க.. இதபத்தி நாலு பேருக்கும் சொல்லுங்க . .அந்த மாதிரி ஒரு படம் தான் இது . .

    @ பின்னோக்கி – டாகுமெண்டரின்னு சொல்றத விட , ரொம்ப இயல்பான ஒரு ஸ்டைல்ல இருக்கும் . .

    @ விஷ்வா – உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி. . உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள். . 🙂

    @ காதலரே – நீங்கள் சொல்வது சரி. . இதைப் போன்ற தருணங்களில், அவர்களது கனவுகளின் இசை எவ்வாறாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாலே, மனம் கலங்கி விடுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனது வாழ்வின் ஒரு தருணத்தில், நானும் இதை நோக்கி நடை பயின்றவன் தான் . ஆனால், என்னை மீட்டது காதலும் கடவுளும்தான் என்றே சொல்வேன் . . கடவுள் நம்பிக்கை இல்லாத அன்பர்கள், இதனை இயற்கை என்று மாற்றிப் படித்துக் கொள்ளவும். . 🙂

    Reply
  7. தல செம செம..செமத்தியா எழுதுறிங்க..நேரம் கிடைக்கும்ப்பொழுது படத்தை பார்கிறேன்..
    பொங்கல் வாழ்த்துக்கள்..
    அப்புறம் அந்த போட்டோ நாகேந்திர பிரசாத் மாதிரி இருக்கீங்க..(அந்த அரபிக் கடலோரம்)..:)

    Reply
  8. @ விநோத்கெளதம் – 🙂 ஹா ஹா . .நானு நாகேந்திர பிரசாத் மாதிரின்னு சொன்னது உங்க பெருந்தன்மைய காட்டுதுன்னு நினைக்குறேன் . . 🙂 இப்போ அந்தக் கட்ட மீசை எல்லாம் போயே போச்சு . . 🙁 . . உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். .என்ஜோய்ய்ய்

    Reply
  9. அருமையான பகிர்வு. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    Reply
  10. warcry

    goog review! did you like the bgm(starting and ending credit)? please tell me rajesh

    Reply
  11. Virgo

    nice film and i love the music too…intha padathin ‘music’ patrium solliyurukalam…

    Reply

Join the conversation