Samaritan Girl ( 2004) – South Korean

by Karundhel Rajesh July 2, 2010   world cinema

மறுபடியும் கிம் கி டுக்.

சற்று யோசித்துப் பார்த்தால்,. கிம் கி டுக்கின் படங்களைத் தவிர்ப்பது இயலாத காரியம் என்றே தோன்றுகிறது. அவரது படங்களில் நமக்குக் கிடைக்கும் இனம்புரியாத ஒரு அனுபவத்தை விவரிப்பது கடினம். நமக்கு மிகப்பிடித்த ஒரு புத்தகத்தையோ கவிதையையோ உணவையோ மதுபானத்தையோ பாவித்து முடிக்கும் அந்த நொடியில் நமக்குள் எழும் உணர்வை, எப்படி விவரிப்பீர்கள்? அத்தகையதொரு உணர்வே இவரது ஒவ்வொரு படத்தைப் பார்க்கும்போதும் எழுகிறது.

ஸமாரிடன் கேர்ள், அவரது முக்கியமான படங்களில் ஒன்று. வழக்கப்படி தென் கொரியாவில் ஃப்ளாப். ஆனால், அத்தனை வெளிநாட்டுப் பட விழாக்களிலும் தவறாமல் கலந்துகொண்டு, பாராட்டுக்களை அள்ளிக்கொண்டிருக்கும் ஒரு படம் இது.

படம், மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகம் – வசுமித்ரா.

ஸியோலில், இரண்டு பள்ளித்தோழிகள். யோ-ஜின் மற்றும் ஜே-யோங். மிகச் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிக்கும் தோழிகள். இவர்கள் இருவருக்குமே, ஐரோப்பாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அதற்குப் பணம் வேண்டுமே? எனவே, ஒரு அதிர்ச்சியான காரியத்தை, தங்களது பள்ளிப்பருவத்துக்கே உரிய அப்பாவித்தனத்தோடும் துணிச்சலோடும் இருவரும் செய்கிறார்கள்.

ப்ராஸ்டிட்யூஷன்.

ஜே-யோங், ப்ராஸ்டிட்யூஷன் செய்ய, யோ-ஜின், அவளது ஏஜண்ட்டாக செயல்படுகிறாள். ஜே-யோங், யோ-ஜின்னிடம், இந்தியாவில், பண்டைய காலத்தில் வாழ்ந்த வசுமித்ரா என்ற பெண்ணைப் பற்றிச் சொல்கிறாள். அவளிடம் வரும் ஒவ்வொரு ஆணுமே, அவளை விட்டுச் சென்றபின், புத்தபிக்‌ஷுவாக மாறிவிட்டனர் என்றும், அதற்கு, அவளது இனிய சுபாவமே காரணமாக இருந்தது என்றும், ஸெக்ஸில் ஈடுபடும் ஒவ்வொருவருமே குழந்தையாக மாறிவிடுவதனால் இது சாத்தியமானது என்றும் சொல்லி, இனிமேல் தன்னை வசுமித்ரா என்றே யோ-ஜின் அழைக்க வேண்டும் என்றும் சொல்கிறாள்.

ஒவ்வொரு முறையும் வசுமித்ரா புதிய கஸ்டமர்களை நாடிச் செல்ல, அந்தப் பணத்தை யோ-ஜின் சேர்த்து வைக்கிறாள். ஸெக்ஸ் முடித்து வரும் வசுமித்ரா, அந்தக் கஸ்டமர்களிடம் தான் பேசிய விஷயங்களையும், அவர்களிடம் தன்னைக் கவர்ந்த விஷயங்களையும் பற்றி யோ-ஜின்னிடம் பகிர்ந்து கொள்கிறாள். இது யோ-ஜின்னுக்குப் பிடிப்பதில்லை. அவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்றே யோ-ஜின் நினைக்கிறாள்.

ஒருமுறை, வசுமித்ரா, அவளிடம் வந்த ஒரு இசையமைப்பாளனைப் பற்றிச் சொல்லி, அவனைத் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், அவன் தனக்காகப் பாடக்கூடச் செய்தான் என்றும் சொல்கிறாள். அவன் இவ்விருவருக்கும் உணவு வாங்கித் தருவதாகச் சொல்ல, அவனைத் திட்டி அனுப்பிவிடுகிறாள் யோ-ஜின்.

ஓர் நாள், தான் இருக்கும் அறையில் போலீஸ் வந்துவிடுவதால், ஜன்னலில் இருந்து புன்னகையுடன் வெளியே குதித்துவிடுகிறாள் வசுமித்ரா. அவளது மண்டை உடைந்து, அபாயகரமான நிலையில் யோ-ஜின்னால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். இறக்கப்போகும் கடைசி நேரத்தில், அந்த இசையமைப்பாளனைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்று அவள் சொல்ல, அவனைத் தேடி ஓடுகிறாள் யோ-ஜின். அவனோ, தான் பிஸியாக இருப்பதாகவும், அவன் வரவேண்டுமென்றால், யோ-ஜின் அவனுடன் படுக்க வேண்டும் என்றும் சொல்கிறான். யோ-ஜின் சம்மதிக்கிறாள்.

அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றால், அதற்குள் வசுமித்ரா இறந்துவிடுகிறாள்.

தனது உயிர்த்தோழியின் மரணத்தினால் கலங்கிப்போகும் யோ-ஜின், தான் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் எரிக்கப்போகும் நேரத்தில், ஒரு முடிவுக்கு வருகிறாள். தனது தோழியின் மேல் தனக்கு இருக்கும் துக்கத்தைக் குறைக்க, அவளை இதுவரை அனுபவித்த அத்தனை கஸ்டமர்களுடனும் தான் ஸெக்ஸ் வைத்துக்கொண்டு, அவர்கள் தந்த அந்தப் பணத்தை அவர்களிடமே திருப்பித் தந்துவிடவேண்டும் என்பதே யோ-ஜின் எடுக்கும் முடிவு. இப்படிச்செய்தால்தான் இறந்துபோன தனது தோழியின் நினைவு தனக்குள் விதைத்திருக்கும் குற்ற உணர்வு, குறையும் என்பது யோ-ஜின்னின் குழந்தை உள்ளம் எடுக்கும் முடிவு.

அதேபோல் யோ-ஜின் செயல்படத் துவங்க, யோ-ஜின்னின் தந்தையான யோங்-கி – ஒரு போலீஸ் அதிகாரி – அவளை ஒருநாள் இன்னொரு ஆளுடன் பார்த்துவிடுகிறார். அவளை மெல்லப் பின்தொடரும் யோங்-கி, தனது மகள் இதுவரை செய்துகொண்டிருந்த கொடுமையான விஷயத்தைப் பற்றி முழுதும் அறிந்துகொள்கிறார்.

அதன்பின், ஒவ்வொரு நாளும் யோ-ஜின்னைப் பின்தொடரும் யோங்-கி, அவளிடம் வரும் ஒவ்வொரு கஸ்டமரையும், அவளைப் பார்ப்பதற்கு முன்னர், மிரட்டி, திருப்பி அனுப்பிவிடுகிறார்.

இப்படிச் செய்கையில், ஒரு நடுத்தர வயது மனிதனை, அவனது அபார்ட்மெண்டுக்கே சென்று, அவனது மனைவி, தாய், மகள்கள் முன்னிலையில், தனது மகளின் வயதை விடக் குறைந்த வயதுச் சிறுமியிடம் ஸெக்ஸ் வைத்துக்கொள்ள எப்படி மனது வந்தது எனக் கேட்டு, அடிக்கிறார். அவர் அங்கிருந்து சென்றபின், மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறான் அந்த மனிதன்.

நாளுக்கு நாள், இந்தக் கஸ்டமர்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதம், கடுமையாகிக்கொண்டே போகிறது.

இன்னொரு நாள், தனது மகளை அனுபவித்து முடித்த ஒருவனை, அவன் பின்னாலேயே சென்று தாக்கிக் கொன்றுவிடுகிறார் யோங்-கி. அவன் தான் தனது மகளின் பட்டியலில் கடைசி மனிதன் என்றும் அவளது டைரியைப் படித்து அறிந்து கொள்கிறார் யோங்-கி.

அன்று, வீட்டிற்கு வரும் யோ-ஜின்னிடம், அவளது தாயாரின் சமாதியைப் பார்த்துவிட்டு வரலாம் என்று சொல்லி, ஓர் மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு தனது தாயாரின் சமாதியைப் பார்த்துவிட்டு, அஞ்சலி செய்கிறாள் யோ-ஜின். அந்தப் பயணத்தின்போது, தந்தை – மகள் இருவருக்குமே, ஒவ்வொருவரிடமும் சொல்லப் பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இருவரும், பேசிக்கொள்வதே இல்லை. இருவரின் மனதிற்குள்ளும், ஏராளமான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அழுந்தும் மனதோடு, இருவரும் பயணிக்கிறார்கள்.

திரும்பும் வழியில், காரின் ஸ்டியரிங்கை ஆச்சரியத்துடன் திருப்பிக்கொண்டிருக்கும் யோ-ஜின்னைப் பார்த்து, அவளுக்குக் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள ஆசையா என்று யோங்-கி கேட்கிறார். தனக்கு மிகவும் பயம் என்று யோ-ஜின் சொல்கிறாள்.

ஓர் தெள்ளிய ஆற்றில் வண்டியை நிறுத்தும் யோங்-கி, வெளியே இறங்கி, யாருடனோ தொலைபேசியில் பேச, சற்று நேரத்தில் தூக்கம் கலைந்து வெளியே வரும் யோ-ஜின்னின் பின்னால் வரும் ஒரு உருவம்…………………

இதற்கு மேல், படத்தில் பார்த்துக்கொள்ளவும்.

மனித உறவுகளைப் பற்றிய அற்புதம் என்றே இப்படத்தைச் சொல்லிவிடலாம். இப்படத்தில் பல மறக்கமுடியாத காட்சிகள் உள்ளன. யோ-ஜின்னிடம் வரும் கஸ்டமர் ஒருவர், ஸெக்ஸ் முடிந்தபின், அவரது மகளைத் தொலைபேசியில் அழைத்து, அவளது ட்யூஷன் பற்றி அக்கறையுடன் வினவும் காட்சி, ஒரு உதாரணம். யோ-ஜின்னும் அவரது மகள் வயதே உள்ள பெண் தான். இந்தக் கட்சியின் முரண்பாடு, நமது மனதைத் தொடுகிறது.

அதேபோல், யோ-ஜின் மற்றும் யோங்-கி ஆகிய இருவருக்கும் உள்ள தந்தை-மகள் உறவும் அற்புதமாகக் காட்டப்பட்டிருக்கிறது. தனது சொந்த மகள், விபச்சாரம் செய்வதை அறிந்த ஒரு தந்தையின் மனம் என்ன பாடு படும்? அதே போல், தனது தந்தையின் அரவணைப்புக்காக ஏங்கும் அந்தக் குழந்தை உள்ளம்.. இதனை மிக அருமையாகக் கிம் கி டுக் காட்டியிருக்கிறார்.

படத்தின் கடைசிப் பாகம், கிட்டத்தட்ட வசனங்களே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க யோ-ஜின் மற்றும் யோங்-கியைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது இந்தப் பாகம். படத்தின் மிக அழகான பாகமும் இதுதான். கடைசி அரைமணி நேரம், ஒரு கவிதை என்றே சொல்லுவேன்.

இன்றைய உலகின் பல இடங்களில் கொடி கட்டிப் பறக்கும் ஒரு தொழில், இந்த சைல்ட் ஸெக்ஸ். இதில் ஈடுபடுபவர்கள், வேறு யாருமல்ல. நம்மைப் போன்ற சக மனிதர்கள்தான். அவர்களுக்கும் அந்தக் குழந்தைகள் வயதிலேயே மகள்கள் இருக்கலாம். அவர்கள் அனுபவிக்கும் அந்தக் குழந்தைகளின் கதி?
யோசிப்போம். . . .

Samaritan Girl படத்தின் டிரைலர் இங்கே

  Comments

24 Comments

  1. அடுத்தவர்களை மீ தி பார்ஸ்ட் போடா விடாமல் தானே முதல் கமெண்ட்டை இட்ட கிம்-கி-டுக் சீடர் கருந்தேளை எதிர்த்து இன்று மதியம் முதல் கிம்-கி-டுக் படங்களை பார்க்கும் போராட்டத்தில் குதிக்க உள்ளேன்.

    Reply
  2. அருமையா எழுதி இருக்கீங்க.கதையை நீங்கள் சொல்லிய விதம் மிக அருமை.கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது நீங்கள் சொல்லிய விதம்.
    இந்த மாதிரி ஒரு controversial ஆன ஒரு கதைய எடுத்து அதை கவித்துவமா சொல்வதற்கு ஒரு மிகச் சிறந்த படைப்பாளியால் தான் முடியும்.அதை கிம் செய்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.கிம் இல்லாது கொரியன் சினிமா industry இல்லை.கொரியன் படங்களுக்கு ஒரு தனி அடையாளம் கொடுத்தவர் அவர் என்று சொன்னால் அது மிகை கிடையாது.

    Reply
  3. அப்புறம்,profile photo ல யாருப்பா அது? ஹாலிவுட் ஹீரோ மாதிரி? 🙂

    Reply
  4. /அப்புறம்,profile photo ல யாருப்பா அது? ஹாலிவுட் ஹீரோ மாதிரி?//

    என்னாத்தேளு… இப்படி உசுப்பேத்தி விடுறாயங்க… இல்ல காசு கொடுத்து நீங்க சொல்ல வச்சீங்களா???

    Reply
  5. படத்தோட கதை நல்லாருக்கு தேளு… இந்தக்கதை நம்மூருக்கு கூட பொருந்தும்… இந்தியாவுல இலலாத குழந்தை விபச்சாரமா??? படத்தை எடுத்தா ஏதோ உத்தமனுங்க மாதிரி கொடிபுடிப்பானுங்க…

    ஆனா திவாரி மாதிரி ஆளுங்களை கண்டுக்கவே மாட்டானுங்க… என்ன எழவு நாடுய்யா இது…

    Reply
  6. நண்பா,
    என்னமா எழுதிருக்கீங்க?
    இதில் தான் அந்த பன்றியின் பாதத்தை இருவரும் தின்றுவிட்டு தூக்கி எறியும் காட்சி வரும்,தவிர அந்த கம்போஸர்,மாடியில் குதித்து தற்கொலை செய்யும் வயதான ஆள்,இவளின் அப்பா போலீஸ்காரர்,அவர் நண்பர்,என அருமையான பாத்திரப்படைப்பு.

    தன் மகளுக்கு கார் ஓட்டித்கற்றுத்தந்துவிட்டு இவர் தன் ரூட்டில் போவது அருமையான கட்டம்,இதே போலான உத்திகளை,இதற்கப்புறம் வந்த லாஸ்ட் ரைட் என்னும் ஆஸி ரோட்மூவியிலும் வைத்திருந்தனர்.

    படம் முடிந்த பின் எத்தனை கேள்விகள்?எழும்பும்.நல்ல பதிவு நண்பா

    Reply
  7. நண்பரே,

    மிக அருமையான, மனதில் ஒட்டிக்கொள்ளும் கதைசொல்லல். மிகவும் ரசித்துப் பார்த்த ஒரு படைப்பை அப்படியே உங்கள் வார்த்தைகளில் கூறியிருக்கிறீர்கள். சற்று விவகாரமான கதைதான் ஆனால் இதைவிட மோசமாக நடப்பதும் உண்டு. நடந்து கொண்டும் இருக்கிறது. நியாத்தையோ, தீர்ப்பையோ நான் கூற முடியாது. அருமையான ஆக்கம்.

    Reply
  8. ஆங்கிலம் தவிர வேற எதையும் பார்க்கறதில்லை. அதனால இந்த கிம்-கி-டுக், டமுக்கு டப் எல்லாம் தெரியாது.

    ஒரேயொரு டவுட்..!! நம்ம மணிரத்னம் படங்கள் கூட நம்மூரில் ஃப்ளாப் ஆகி, வெளிநாட்டு விழாக்களில் நிறைய ப்ரைஸ் வாங்கியிருக்கு. இராவணன் படம் நிச்சயம்.. நிறைய பரிசுகள் வாங்கும். அது உங்களுக்குப் பிடிக்காத படம்.

    நீங்க மணியை திட்டுற மாதிரி, அவங்க ஊர்ல கிம் வாங்குவார் போல. இவர் படத்தை பார்க்காம விமர்சனம் பண்ணக் கூடாது. எதுக்கும் Isle -ல் இருந்து ஆரம்பிக்கிறேன். இந்த கை ரிச்சி மாதிரி ஓவர் ஹைஃப் புகழா இருந்திடக் கூடாது.

    Reply
  9. இப்படத்தை நானும் பார்த்திருக்கிறேன்… பதிவு பாதியில் நிற்கிறது அதற்குள் நீங்கள் முந்திவீட்டிங்க..எனினும் ரொம்ப நல்ல எழுதியிருக்கிங்க தலை….

    Reply
  10. எல்லாம் இன்பமயம் போல இங்கு எல்லாம் கிம்-கி-டுக் மயம்

    Reply
  11. நல்ல படங்களை அறிமுகப்படுத்தறீங்க… இந்த மாதிரி ஃபீலிங்கான காட்சிகளை ஃபீல் புரியற மாதிரி விவரிக்கறது கஷ்டம்.. ஆனா, அதையும் சூப்பரா எழுதி இருக்கீங்க..

    @ பாலா,
    ஐயையோ… மணிரத்னத்தையும், கிம் கி-டுக்கையும் கம்பேர் பண்ணினா, கருந்தேள் ஜாக்ஸன்வில்-க்கு ஃப்ளைட் பிடிச்சு வந்து ஆட்டோ அனுப்புவாரே… எஸ்கேப்… 🙂

    Reply
  12. // அடுத்தவர்களை மீ தி பார்ஸ்ட் போடா விடாமல் தானே முதல் கமெண்ட்டை இட்ட கிம்-கி-டுக் சீடர் கருந்தேளை எதிர்த்து இன்று மதியம் முதல் கிம்-கி-டுக் படங்களை பார்க்கும் போராட்டத்தில் குதிக்க உள்ளேன். //

    நானும் களத்தில் குதித்துவிட்டேன்

    Reply
  13. guy ritchie over-hypea? Karunthael florida la hitman yaarachum teriyuma?

    Reply
  14. நல்ல நடை.VAT69 போன்ற எழுத்து. அப்பிடியே சென்னை இலக்கியபயணத்த பற்றி பதிவு போட்டா தன்யனாவேன் 🙂 (ஹையா எப்புடியோ தேளக் கொத்தியாச்சு…ஜாலி ஜாலி!!!)

    Reply
  15. ப்ரொபைல் போட்டோ சிம்லாவில் எடுத்ததா?ஜூப்பரா இருக்கு பாய் 🙂

    Reply
  16. @ விஸ்வா – கிம் கி டுக் போராட்டம் என்ன ஆச்சி? அப்டேட் செய்யவும்.. 😉

    @ இல்யூமினாட்டி – //கிம் இல்லாது கொரியன் சினிமா industry இல்லை.கொரியன் படங்களுக்கு ஒரு தனி அடையாளம்

    கொடுத்தவர் அவர் என்று சொன்னால் அது மிகை கிடையாது//

    மிகச்சரி. வழிமொழிகிறேன்.

    //அப்புறம்,profile photo ல யாருப்பா அது? ஹாலிவுட் ஹீரோ மாதிரி? :)//

    ஹீ ஹீ.. அது வேற ஆருமில்ல.. ராஜேஷ்னு ஒரு மானஸ்தன். அவன் எங்கியோ காணாமப்பூட்டான் 😉 பை த பை,

    கோலிவுட்டு வில்லன்னு சொல்லுங்க.. 😉

    @ நாஞ்சில் பிரதாப் – //என்னாத்தேளு… இப்படி உசுப்பேத்தி விடுறாயங்க… இல்ல காசு கொடுத்து நீங்க சொல்ல

    வச்சீங்களா???//

    😉 அட காசக்குடுக்கலாம்னு பார்த்தா, யாரும் அகப்புட மாட்றாங்க பாஸ் . . யாராச்சும் இருந்தா சொல்லுங்கப்பு..

    மடக்கிரலாம் 😉

    @ கார்த்திகேயன் – மிக்க நன்றி. அந்த கிளைமேக்ஸ் காட்சி, என்னால் மறக்கவே முடியாது. அட்டகாசமான ஒரு ஃபீலிங் தந்தது. வாவ் !!

    @ காதலரே – உண்மை. அதுவும், நம்ம இந்தியால இந்த மாதிரி சைல்ட் ஸெக்ஸ் சம்பவங்கள் ஏராளம். ஆனால், இது எல்லாத்தையும் பண்ணிட்டு, ‘இந்தியா புண்ணிய பூமி.. சொர்க்க பூமி.. கடவுள் தேசம்’ன்னு உடுறானுங்க பாருங்க மெகா பீலா.. அதப் பார்த்தாத்தான் கோவம் வருது.. 😉

    @ பாலா – //ஒரேயொரு டவுட்..!! நம்ம மணிரத்னம் படங்கள் கூட நம்மூரில் ஃப்ளாப் ஆகி, வெளிநாட்டு விழாக்களில் நிறைய ப்ரைஸ் வாங்கியிருக்கு. இராவணன் படம் நிச்சயம்.. நிறைய பரிசுகள் வாங்கும். அது உங்களுக்குப் பிடிக்காத படம்.நீங்க மணியை திட்டுற மாதிரி, அவங்க ஊர்ல கிம் வாங்குவார் போல//

    தல.. கிம் கி டுக் ஊர்ல திட்டு வாங்குறதுக்குக் காரணம், மக்களுக்கு இவர் எடுக்குற காண்ட்ரவர்ஷியல் டாபிக்குகள் ஒத்து வரதில்ல.. அவங்களுக்குத் தேவை, மசாலா.. இயல்பு வாழ்க்கைல நடக்குற அவலங்கள் பத்தின கிம்மின் படங்கள், அவர்களின் நிம்மதியைக் குலைப்பது ஒரு காரணம்.. ஆனா, நம்ம ஊர்ல மணிரத்னம் மக்கள் கிட்ட திட்டு வாங்குறதுக்குக் காரணம், இவரோட படங்கள், பல உலக / ஆங்கிலப்படங்களின் அப்பட்டமான காப்பி.. மட்டுமில்லாம, மணிரத்னத்தோட படங்கள்ல அவரு முட்டாள்தனமா ஒரு சமூகப்பிரச்னைய எடுத்துக்கினு, சமூகப்பிரச்னைகளே புரியாம ஐஐஎம், ஐஐடில சுத்திக்கினு இருப்பானுங்களே ஒரு கும்பல்.. அவனுங்களோட மொண்ணையான புரிதல்ல தீர்வு சொல்லுவாரு.. அது இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி.. அதுனால தான் மணிரத்னம் மக்கள் கிட்ட திட்டு வாங்கிக்கினு கீறாரு தல..

    இந்த ரெண்டு பேரையும் கம்பேரே பண்ண முடியாது.. டோட்டலா.. மணிரத்னம், ஒரு காப்பி கேட்.. கிம் கி டுக், ஒரு அற்புதமான கலைஞன்..நீங்க பாருங்க.. பார்த்துபுட்டு சொல்லுங்க..

    அப்பறம், கை ரிட்சி பத்துன உங்க கமெண்டுக்கு.. கீழ பப்பு வந்திக்கினே இருக்காரு.. அருவாளோட 😉

    @ அஷ்வின் – மிக்க நன்றி.. நீங்களூம் கண்டிப்பா எழுதுங்க.. உங்களோட பதிவையும் படிப்போம்..

    @ சிபி – ஹீ ஹீ… கொஞ்ச நாள் அப்புடித்தான் தல.. இதோ வேற போஸ்ட் போட்டாச்சி 😉

    @ ஜெய் – நன்றி.

    //@ பாலா,ஐயையோ… மணிரத்னத்தையும், கிம் கி-டுக்கையும் கம்பேர் பண்ணினா, கருந்தேள் ஜாக்ஸன்வில்-க்கு ஃப்ளைட் பிடிச்சு வந்து ஆட்டோ அனுப்புவாரே… எஸ்கேப்… :)//

    ஹீ ஹீ . . 😉

    @ ஜீவன் பென்னி – நன்றி. கண்டிப்பாகப் பாருங்கள்.

    @ பப்பு – 😉 பாலாட்ட சொல்லிட்டேன் மேல.. நீங்க அருவாளோட ரெடியா நிக்குறத 😉

    @ மயிலு – என்னா.. காண்ட்ரவர்ஸி கிரியேட் பண்ணுறீங்களோ? பின்னிப்புடுவேன் 😉 சென்னை இலக்கியப்பயணத்தைப் பத்தி, தல பதிவு போடட்டும்.. அப்புறம் அதப் படிச்சிக்கலாம் 😉

    ப்ரோஃபைல் ஃபோட்டோ, மணிகரண்ல எடுத்தது.. ஒரு குருத்வாரால.. 😉

    Reply
  17. கிம் கி டுக் படங்கள் dvd, பலான ரசிகர்களும் விரும்பி பார்க்கிறார்கள்.மகாகலைஞ்ஞனின் கலையம்சத்தை விவரிக்கும் பணிக்கு நன்றி.

    Reply
  18. கிம்-கி-டுக்கின் 3-iron க்கு பின் உங்க விமர்சனத்தினை பார்த்து விட்டு இந்த படத்தினை டவுண்லோட் செய்து பார்த்தேன். இந்த டைரக்டரின் அனைத்து படங்களையும் பார்க்க வேண்டும். அருமையாக இருக்கிறது டைரக்‌ஷன்.

    Reply
  19. I have been seeing korean movie around 3 years, I become addict to korean movies (rather than watching vijay movie ( no offence).
    I have some recommendations, why dont you try for,
    Sad romantic movies, I love them all.

    1) Millionaire’s First Love
    2) Daisy
    3) Sad Love story
    4) il mare
    5) My sissy girl ( this is released in English too but korean version is too good. )
    6) Moment to remember (After long time, i cried after a movie)

    i have other list of movie which i dont have in my hand, i will post it soon.

    Reply
  20. பகிர்வுக்கு நன்றி நண்பா.. நான் கிம் கி டுக்கோட “தி ஐல்” மட்டும்தான் பார்த்து இருக்கேன்.. வசனங்களைக் கம்மி பண்ணி காட்சி மொழியில கதை சொல்றதுல கலக்கி இருந்தார்..:-)))

    Reply
  21. //இன்றைய உலகின் பல இடங்களில் கொடி கட்டிப் பறக்கும் ஒரு தொழில், இந்த சைல்ட் ஸெக்ஸ். இதில் ஈடுபடுபவர்கள், வேறு யாருமல்ல. நம்மைப் போன்ற சக மனிதர்கள்தான். அவர்களுக்கும் அந்தக் குழந்தைகள் வயதிலேயே மகள்கள் இருக்கலாம். அவர்கள் அனுபவிக்கும் அந்தக் குழந்தைகளின் கதி?// ….. that’s true…

    Reply
  22. I used to watch ‘My Wife Is a Gangster’ kind of Korean moview…

    Reply

Join the conversation