திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 4

by Karundhel Rajesh August 29, 2011   series

சென்ற கட்டுரையோடு, சிட் ஃபீல்டின் ‘Screenplay’ புத்தகத்தின் முதல் அத்தியாயம் முடிவடைந்தது. முதல் அத்தியாயமான ‘What is Screenplay?’ என்பதில், திரைக்கதையின் மூன்று பிரிவுகள் குறித்தும், ஒவ்வொரு பிரிவையும், பிளாட் பாயிண்ட்கள் உபயோகித்து எப்படி இணைப்பது என்பதைப் பற்றியும் தெரிந்துகொண்டோம். இனி, இரண்டாவது அத்தியாயத்தைப் பிரிப்போம்.

Chapter 2 : The Subject

முதல் மரியாதை திரைப்படம்.

பட நாயகன் மலைச்சாமி தேவரைப் பார்க்கிறோம். அவரது மனைவி, இளம்பெண் குயிலு, குயிலுக்கும் மலைச்சாமிக்கும் மெல்ல அரும்பும் காதல், அழகான பாடல்கள், நகைச்சுவை ஆகிய அனைத்தையும் சந்தோஷமாகப் பார்க்கிறோம். நேரம் போனதே தெரியாமல் படம் முடிகிறது. படம் முடிந்தபின்னும், மலைச்சாமிக்கும் குயிலுக்கும் அரும்பிய காதலின் மகிழ்வான நிமிடங்கள், நமது மனதில் தங்கி நிற்கின்றன. பட ஆரம்பத்தில் மரணப் படுக்கையில் இருக்கும் மலைச்சாமி தேவரைப் பார்த்தவுடன், ‘இவர் யார்? ஏன் இந்த நிலையில் கிடக்கிறார்?’ என்ற கேள்வி நமது மனதில் எழுவது இயல்பு. இந்தக் கேள்விக்குப் பதிலாகவே, படம் செல்கிறது. இந்தக் கேள்விக்கு விடையே, ‘subject’ எனப்படுகிறது.

ஒரு திரைக்கதையை எழுத, நமக்கு என்ன தேவைப்படுகிறது? (ஆங்கில டிவிடிக்கள்- இது, ஒரு சில இயக்குநர்களின் பதில்) . ஒரு சிறிய ஐடியா. ஆனால், திரைக்கதையை எழுதி முடிக்க, இந்த ஐடியா போதுமா? ஐடியா வேண்டும் என்பது அவசியம் தான். ஒரு ஐடியாவை மட்டும் வைத்துக்கொண்டு, நூற்றிருபது பக்கங்களை நிரப்ப முடியாதே?

திரைக்கதை எழுத நமக்குத் தேவை, subject.

subject என்பது, action மற்றும் character என்று இரண்டாக விளக்கப்படுகிறது.

Action என்பது, கதையில் நிகழக்கூடிய சம்பவங்கள். கதை எதைப்பற்றி என்று விளக்குவது. Character என்பது, கதையின் பிரதான பாத்திரம். கதை யாரைப்பற்றி என்று விளக்குவது.

Action – எதைப்பற்றி ; Character – யாரைப்பற்றி.

ஒவ்வொரு திரைக்கதையிலும், கதாபாத்திரம் ஒன்றோ பலவோ வருகின்றன. அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதும் எழுதப்படுகிறது. ஒரு திரைக்கதை எழுத்தாளராக நீங்கள் வரவேண்டும் என்று விரும்பினால், கதையில் யாருக்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாக உங்களுக்குத் தெரிய வேண்டும் என்கிறார் சிட் ஃபீல்ட். இது தெரியவில்லை என்றால், திரைக்கதை தெளிவில்லாமல் போய்விடும். இது திரைக்கதைக்கு மட்டுமில்லாமல், எல்லா வகையான எழுத்து வகைகளிலும் உள்ள அடிப்படை விதி.

உங்கள் திரைக்கதையின் subject என்ன? எதனைப்பற்றி ? யாரைப்பற்றி? ஒரு சில வார்த்தைகளால் உங்கள் திரைக்கதையை உங்களால் சொல்ல முடியுமா?

உதாரணமாக, கிராமத்தில் அமைதியான வாழ்க்கையைத் தனது மகனுடனும் மகளுடனும் வாழ்ந்துவந்த ஒரு பண்ணையார், நகரத்துக்கு வந்து சீரழிந்த கதையைப் பற்றிய திரைக்கதையை எழுத விரும்புகிறீர்களா? (மகாநதி). ஆம் என்றால், அந்தப் பண்ணையார் யார்? அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் யார்? அவர்களுடைய பின்னணி என்ன? பண்ணையார் செய்த தவறுகள் என்னென்ன? எதனால் அவரது வாழ்க்கை பறிபோனது? ஏன் அவர் அந்தத் தவறுகள் செய்தார்? திரைக்கதையின் இறுதியில், அவருக்கு என்ன ஆகிறது? இந்தக் கேள்விகளுக்கு விடை, திரைக்கதை எழுதத் துவங்குமுன்னரே உங்களுக்குத் தெரிந்திருந்தால், திரைக்கதை எழுதுவது ஒரு எளிய வேலையாக மாறிவிடுகிறது. நம்பிக்கையுடன் திரைக்கதை எழுதத் துவங்கலாம். இந்தக் கேள்விகளுக்கு விடைகள் தெரியாவிடில், திரைக்கதை நம்மை எங்கெங்கோ இழுத்துக் கொண்டு சென்றுவிடும். கதை சரியாக அமையாது. என்ன செய்கிறோம் என்று தெளிவாகத் தெரிந்திருந்தால், அதனை, மிகச்சிறந்ததொரு முறையில் செய்துமுடிக்கலாம். இல்லையெனில், திண்டாட்டம் தான்.

உங்கள் திரைக்கதையில் யாருக்கு, என்ன நடக்கிறது என்று தெளிவாகத் தெரிந்துவைத்திருப்பதே, திரைக்கதை எழுதுவதன் அடிப்படைப் பகுதி. எந்தத் திரைக்கதையாக இருந்தாலும், subject எனப்படும் இந்த விஷயம் இருந்தே தீரும் என்கிறார் சிட் ஃபீல்ட். Avatar என்ற திரைப்படம், கால்களை இழந்த ராணுவ சார்ஜென்ட் ஒருவன், வேற்றுக் கிரகம் ஒன்றுக்குச் சென்று, இழந்த தனது நம்பிக்கையையும் வாழ்வையும் மீண்டும் பெறுவது பற்றிச் சொல்கிறது. இப்படத்தில், Character என்பது, அந்த ராணுவ சார்ஜென்ட். Action என்பது, அவனுக்கு என்ன நடக்கிறது – எப்படி அவன் இழந்த வாழ்வை மீண்டும் பெற்றான் என்ற விஷயம். டெர்மினேட்டர் 2 : ஜட்ஜ்மென்ட் டே என்ற படம், வருங்காலத்தில் இயந்திரங்களால் ஏற்படப்போகும் உலக அழிவைப் பற்றிப் பேசிய சாரா கான்னர் என்ற பெண்ணையும், அவளது மகனையும் பற்றிய கதை. இதில் பிரதான கேரக்டர்கள் – சாரா கான்னர், அவளது மகன் மற்றும் அவர்களைக் காக்கும் எந்திரம். Action என்பது – எப்படி அந்த இயந்திரம் இவர்களை, வில்லன் எந்திரத்திடம் இருந்து காக்கிறது என்பதே. மூன்றாம் பிறை என்ற படம், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவளைக் காப்பாற்றும் இளைஞன் ஒருவனைப் பற்றியும் சொல்லப்பட்ட படம். இளைஞனும் பெண்ணும் கேரக்டர்கள். அவர்களுக்கு நடக்கும் சம்பவங்களே Action .

இப்படி ஒவ்வொரு கதையும் Action & Character என்று பிரிகிறது.

இதனை மிக எளிதாக, சிட் ஃபீல்ட் இப்படிச் சொல்கிறார்.

‘எப்போது உங்களால் , உங்களது ஐடியாவை, Action மற்றும் Character என்று தெளிவாகப் பிரித்துச் சொல்ல முடிகிறதோ – என் கதை, இந்த நபருக்கு, இந்த இடத்தில், இந்தச் சம்பவங்களின் வாயிலாக நடக்கிறது – அப்போது, நீங்கள் திரைக்கதை எழுதுவதன் முயற்சியை ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று பொருள்’.
சரி. என் கதையை, Action & character என்று பிரித்தாயிற்று. இப்போதாவது நான் எழுத ஆரம்பிக்கலாமா?

பொறுங்கள். அதற்கு முன்னர், இன்னொரு விஷயம் செய்ய வேண்டுமே?

Research .

கேள்வி: ரிஸர்ச்? அது எதற்கு? கதையை முடிவு செய்துவிட்டேன். எங்கு, எப்போது யாருக்கு நடக்கிறது என்பதும் ரெடி. இனி, நேராக எழுத ஆரம்பிக்காமல், என்னய்யா இது ரிஸர்ச் அது இது என்று?

பதில்: சிட் ஃபீல்டின் கூற்றுப்படி, தொண்ணூறு சதவிகித திரைக்கதைகள், ஐடியா உருவானவுடன் கடகட என்று எழுத ஆரம்பிக்கப்பட்டவையே. இதனாலேயே, திரைக்கதையில் ஒரு டெப்த் கிடைக்காமல், அரைவேக்காடாக முடிந்தும் விடுகின்றன. அதாவது, ஒன் லைன் கதை வடிவம் தெரிந்தவுடன் ஒரு திரைக்கதை ஆரம்பிக்கப்பட்டால், முதல் இருபது முப்பது பக்கங்கள் வரை அது ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் எழுதப்படுகிறது. அதன்பின், சரக்கு தடாலென்று தீர்ந்துவிடுகிறது. இதனால், ஒரேயடியான பேச்சு, அல்லது சம்பவங்களின் பற்றாக்குறை, அல்லது கதை சீக்கிரம் முடிந்துவிடுதல் ஆகிய பிரச்னைகளால் தொய்வடைந்து, யாராலும் சீந்தப்படாமல் போய்விடுகிறது (இந்த இடத்தில், கதை தீரும்போதெல்லாம் காமெடிகள் அல்லது பாடல்களால் இட்டு நிரப்பப்படும் பல படங்கள் உங்களுக்கு நினைவு வரலாம்). இதைவிட, ஒரு திரைக்கதை எழுத்தாளராக, கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே நமக்குத் தெரியாமலும் போய்விடலாம். இதனால் சிறுகச்சிறுக எரிச்சல் வந்து, திரைக்கதை எழுதுவதன் மீதே ஆர்வம் போய்விடலாம்.

ஆக, கதை முடிவானவுடன், நாம் செய்யவேண்டியது – ரிஸர்ச்.

ரிஸர்ச்சில் இரண்டு வகைகள். ஒன்று – Text ரிஸர்ச். அதாவது, நூலகங்கள் சென்றோ, இன்டர்நெட் மூலமாகவோ, புத்தகங்கள் படித்தோ, நமக்குத் தேவையான கதாபாத்திரம் குறித்தோ அல்லது காலகட்டம் குறித்தோ அல்லது வேறு பல விஷயங்கள் குறித்தோ நாம் சேகரிக்கும் தகவல்கள். இது, திரைக்கதையை மெருகேற்றப் பயன்படும் (உதாரணம்: ஹே ராம் திரைப்படத்தில், வெவ்வேறு காலகட்டங்களைக் குறிக்கும் காட்சிகள் வரும்போதெல்லாம், அந்தக் காலத்தைச் சேர்ந்த ‘ஆனந்த விகடன்’ புத்தகத்தை சாகேத்ராம் கதாபாத்திரம் படித்துக்கொண்டிருக்கும். அந்தப் புத்தகங்களும், தத்ரூபமாக அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த புத்தகங்களாகவே இருக்கும். வடிவமைப்பில். அதேபோல், காட்சிகளின் பின்னணிகள், இப்படத்தில் சிறப்பாகவே கையாளப்பட்டிருக்கும் – இது, கமல் டீமின் ரிஸர்ச். என்னதான் எதிர்மறைக் கருத்துகளைச் சொல்லும் படமாக இருந்தாலும், தொழில்நுட்ப விஷயங்களில், ஹே ராம் கண்டிப்பாக உதாரணம் காட்டப்படலாம். அதேபோல், ‘Gandhi’ திரைப்படம். இப்படத்தில், நிஜவாழ்வில் மூச்சுவிட்டு முதுகுசொறிந்த (நன்றி: சுஜாதா) பல பிரபலங்கள் வருவதால், அப்படத்தின் காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் கவனித்தால், தத்ரூபமாக அக்காலத்தில் எழுதப்பட்டவைகளைப் போலவே இருக்கும்). இது சரித்திரப் படங்களுக்கான உதாரணம். அதுபோல், தற்காலத்தில் நடக்கும் கதைகளாக இருந்தால், அப்போதும், கதைக்களனைக் குறித்த ரிஸர்ச் அவசியம் தேவை. போலீஸ் துறையில் நடக்கும் கதையா (யுத்தம் செய்), ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் கதையா (அங்காடித்தெரு) – கதைக்களனைப் பற்றிய ரிஸர்ச் இல்லாமல் முடியாது.

ரிஸர்ச்சின் இரண்டாவது வகை – live ரிஸர்ச். இது, கதை எங்கே அல்லது யாரைப்பற்றி நடக்கிறதோ, அந்த இடத்துக்கே நேரில் சென்று, சம்மந்தப்பட்டவைகளைப் பற்றிய ரிஸர்ச் செய்வது. இது, கதையில் சம்மந்தப்படும் நபர்களிடம் நேரில் பேசுவது, அவர்களுடன் கொஞ்ச காலம் வாழ்வது, கதையில் தேவைப்படும் தகவல்களைப் பற்றி, அந்த விஷயங்களைச் செய்துகொண்டிருக்கும் மனிதர்களிடமே நேரில் பேசி, கேள்வி கேட்டு, புரிந்துகொள்வது ஆகியன. இதில் ஒரு வகை தான் ‘Method Acting’ என்று அழைக்கப்படுகிறது. Daniel Day Lewis, Robert De Nero ஆகிய ஜாம்பவான்கள், இதைத்தான் செய்கிறார்கள். நம்மூரில், ஓம்புரி, நஸ்ருதீன் ஷா ஆகியோர். மெதட் ஆக்டிங் என்பதை, முற்றிலும் தவறாகப் பயன்படுத்துவதில், ஒரு குறிப்பிட்ட தமிழ் ‘உலக’ நடிகரைச் சேர்த்துக்கொள்ளலாம் (அதாவது, சரியாக ஸ்டடி செய்துவிட்டு, அதில் தன்னுடைய சொந்தச் சரக்கான ஓவர் ஆக்டிங்கைப் பயன்படுத்தி, பார்க்கும் ஆடியன்ஸைப் படுத்தி எடுப்பது). இப்படி நேரில் சென்று தகவல்கள் சேகரிப்பதில் உள்ள அனுகூலங்கள் – எக்கச்சக்கம். புத்தகப் படிப்பை விட, நேரில் செல்வது, நாமே அந்த விஷயத்தை அனுபவிப்பது போல.

துணுக்குச் செய்தி – ‘The Last Samurai’ படத்தை எடுக்க, இயக்குநர் Edward Zwick, ஒரு வருட காலம், ஜப்பானிய கலாச்சாரத்தைப் பற்றிய ரிஸர்ச் செய்திருக்கிறார். இந்த ஒரு வருட காலத்துக்குப் பின்பே, திரைக்கதையின் முதல் வரி எழுதப்பட்டது.

திரைக்கதையின் golden rule – எவ்வளவுக்கெவ்வளவு நமக்குத் தெரிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நம்மால் அதனை எளிதாகவும், புரியும்படியும் சொல்ல இயலும்.

இப்போது, கீழே தரப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள்.

Action , இரண்டு வகைப்படுகிறது. Physical & Emotional.

Physical action என்பது, வெளிப்படையாக, கதையில் நடக்கும் சம்பவங்கள். அதாவது, ஒரு போர்க்களக் காட்சி (Lord Of the Rings), அல்லது கார் சேஸிங் காட்சி (எண்ணற்ற தமிழ்ப் படங்கள்) , அல்லது ஒரு கைகலப்பு சம்பவம் அல்லது துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளும் பரபரப்பான ஒரு காட்சி இத்யாதி. புறத்தில் நடக்கும் காட்சிகள். இதற்கு நேர் மாறாக, Emotional action என்பது, கதாபாத்திரங்களுக்கு உள்ளே நடக்கும் விஷயங்களைப் பற்றிச் சொல்லும் காட்சிகள். அதாவது, கதாபாத்திரங்களின் மனநிலையைப் பற்றிச் சொல்லும் காட்சிகள் (உதாரணங்களாக, American Beauty , Shawshank Redemption போன்ற படங்கள்) . எந்தப் படமாக இருந்தாலும், physical மற்றும் emotional action கலந்த கலவையாகவே இருக்கும். ஆனால், இவற்றில் ஏதோ ஒன்று, படம் முழுக்க வியாபித்திருக்க, இன்னொன்று, அதற்குத் துணைபுரியும் விதமாக இருக்கும்.

திரைக்கதை எழுதுவதன் முன்பாக, அது ஒரு action படமா (physical action) அல்லது உணர்வுபூர்வமான படமா (emotional action) என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் சிட் ஃபீல்ட்.

அதேபோல், மேலே உள்ள படத்தில், character என்பதும் இரண்டாகப் பிரிந்துள்ளதைக் காணமுடியும்.

முதலில், உங்கள் கதாபாத்திரத்தின் தேவையைத் தெளிவாகப் பிரித்துக்கொள்ளுங்கள் (define the need). உங்கள் கதாபாத்திரத்தின் தேவை என்ன? எந்த நோக்கத்திற்காக, கதை முழுவதும் உங்கள் கதாபாத்திரம் பாடுபடுகிறது? கதையின் இறுதியில் கதாபாத்திரத்தின் நோக்கம் வெற்றியடைந்ததா? Lord Of the Rings படத்தில், மோதிரத்தை அழிப்பதே பிரதான கதாபாத்திரத்தின் நோக்கம். அது, இறுதியில் வெற்றியடைகிறது. அதேபோல், மகாநதியில், தனது தொலைந்துபோன மகனையும் மகளையும் கண்டுபிடித்து, இழந்த வாழ்க்கையை மீண்டும் வாழ்வதே பிரதான கதாபாத்திரத்தின் நோக்கம். அதுவும் இறுதியில் நடக்கிறது. கதாபாத்திரத்தின் தேவையைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கவேண்டும். கதாபாத்திரத்தின் தேவை என்பது, கதையின் போக்கை நமக்கு விளக்கிவிடுகிறது. கதாபாத்திரம், தனது நோக்கத்தை அடைந்ததா அல்லது அடையவில்லையா என்பதே, கதையின் மையமாக அமைந்தும்விடுகிறது. எனவே, கதாபாத்திரத்தின் தேவை தெரிந்தால், அந்த விஷயத்தை அது அடைவதற்குப் பல தடைகளை உருவாக்கலாம். அப்படி உருவாக்குவதன்மூலம், சுவாரஸ்யமான திரைக்கதை ஒன்றை எழுதிவிடலாம்.

அதேபோல், மேலே உள்ள படத்தில், இன்னொரு விஷயம் – action is character .

ஒரு கதாபாத்திரம், திரைக்கதையில் செய்யும் செயல்களை வைத்து, அந்தக் கதாபாத்திரத்தை விளக்கிவிடலாம். அதுவே ‘action is character’ எனப்படுகிறது. ஒரு கதாபாத்திரம், பல விஷயங்களைப் பற்றிப் பேசக்கூடும். ஆனால், அது என்ன செய்கிறது என்பதை கவனித்தால், அதுவே அந்தக் கதாபாத்திரம் யார் என்பதை நமக்குச் சொல்கிறது. உதாரணம்: பல படங்களில், பயங்கரக் கெட்டவனாக நமது கதாநாயகன் இருப்பான். வில்லனின் செயல்களை ஆதரித்தும் பல பக்கம் வசனம் பேசுவான். ஆனால், இறுதியில், அவன் ஒரு போலீசாக இருப்பான். அதற்காகவே, பல கெட்டவர்களைப் படத்தில் கொன்றும் இருப்பான்.

இத்துடன், இரண்டாம் அத்தியாயமான ‘The Subject‘, முடிவு பெறுகிறது.

இந்த அத்தியாயத்தில் நாம் கவனித்த விஷயங்களாவன:

character , action ஆகிய விஷயங்கள், அவற்றின் உட்பிரிவுகள், கதையைப் பற்றிய ரிஸர்ச் செய்வதன் நன்மைகள் ஆகியன.

இந்த அத்தியாய முடிவில், சிட் ஃபீல்ட், நமக்கு ஒரு பயிற்சியைப் பரிந்துரைக்கிறார். அதாவது, நமக்குத் தேவையான ஒரு சப்ஜெக்டை எடுத்துக்கொள்ளுங்கள் (Subject = character & action. கதாபாத்திரம் மற்றும் அதற்கு நிகழும் சம்பவங்கள்). கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுக்கு நிகழும் சம்பவங்கள் என்று உங்கள் கதையைப் பிரியுங்கள். இதனை வைத்து, உங்கள் கதையை எப்படி எழுத வேண்டும் என்று முடிவு செய்துகொள்ளுங்கள். அதாவது, கதாபாத்திரம் அடைய நினைக்கும் விஷயம், அதற்கு நிகழும் தடைகள், முடிவில் கதாபாத்திரம், தனது லட்சியத்தை அடைந்ததா இல்லையா ஆகிய விஷயங்களை, ஒரு சில பத்திகளில் எழுத முயலுங்கள். இதுவே, திரைக்கதையின் ஆரம்பம்.

அடுத்து?

தொடரும் . . .

  Comments

12 Comments

  1. நீங்கள் எழுதும் இத்தொடருக்குப்பின் இருக்கும் அசாத்திய உழைப்பு பிரமிக்க வைக்கிறது நண்பரே,அதற்காக உங்களுக்கு நன்றிகள் மற்றும் பாராட்டுகள்…

    Reply
  2. Below is my comment on your previous post on script writing. Pasting here to get your reply.
    ———————————

    கருந்தேள் கண்ணாயிரம் said:
    ……..
    ஹே ராம் & ஆய்த எழுத்துக்கு , அவைகளின் வலுவில்லாத தடைக்காரனங்கள் பெரிய காரணம். அதுக்கும், கதைல ஸ்ட்ரெந்த் இல்லாதுதானே பேசிக் ரீசன். என்ன சொல்றீங்க?
    —————————————————————–
    இல்லை தேள். நான் இங்கு சற்று மாறுபடுகிறேன். ஹே ராம் – ல் உள்ளது வலுவான கதையாகதான் தோன்றுகிறது. சற்று விரிவாக பார்ப்போம்.
    ஹே ராம் – ஒரு பெரிய தலைவர் கொல்லப்பட்டதன் பின்ணணியை ஒரு புனைவின் வழி அலசுதல். அடிப்படை கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் எந்த ஒரு ஏற்ற இறக்கம்மும் (தடைகளும், அதை உடைப்பதும்) இருக்காது. மாறாக, படம் ஒரு பிரச்சார தோணியில் இருக்கும். இதைத் தவிர, முஸ்லிம் எதிர்ப்பு, இந்துத்துவம், பல மொழிகள் அனைத்தும் கூடுதல் காரணங்கள்.
    எனக்கு Inglourious basterds பார்த்தபோது ஹே ராமின் பாதிப்பு அதில் இருந்ததாக தோன்றியது.

    ஆய்த எழுத்து – இப்படத்திற்கு நீங்க சொன்னது சரி. அடிப்படைக் கதையே தெளிவாக இருக்காது. மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதா, சமூகத்தில் வெவ்வேறு தளங்களில் இருக்கும் இளைஞர்கள் அரசியலால் மோதுவதா என்பதில் குழப்பம்.
    இதில் சம்பந்தமே இல்லாமல் த்ரிஷா -சித்தார்த் காதல்.

    ஒரு நல்ல திரைக்கதை எழுத நல்ல கதை என்பது கூடுதல் பலமாக மட்டுமே இருக்கமுடியும். சராசரியான ஒரு கதைக்கு ஒரு நல்ல திரைக்கதை அமைக்க முடியும் (கில்லி). மேலும் ஒரு சிறந்த கதைக்கு மோசமான திரைக்கதையும் அமையலாம் (ஹே ராம்).

    மாற்றுக்கருத்துகளை தெரிவியுங்கள்.

    Reply
  3. this “subject” is little vague to me. need more time 🙂

    Reply
  4. @ ஐத்ரூஸ் – உங்க பாராட்டுக்கு என்னோட நன்றி. முடிஞ்சவரை விளக்கமா, எளிமையா எழுதனும்ன்றது குறிக்கோள். பார்ப்போம் 🙂

    @ இளங்கன்று – போன கட்டுரையில் பதில் சொல்ல மறந்துவிட்டேன். இதோ பதில்.

    ஹே ராம் கதையில், வலு இல்லை என்று தான் இன்னமும் நான் நினைக்கிறேன். அந்தப் படம், ராம் கதாபாத்திரம் அனுபவிக்கும் mental trauma பற்றியே பெரிதும் பேசுவதாக இருக்கிறது. ஆனால், எந்த வகையில் அது trauma என்பது சரியாக விளக்கப்படவில்லை. மனைவி இறந்தது, அந்தக் கதாபாத்திரத்துக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது? இந்த இடத்தில், முஸ்லிம் எதிர்ப்பும் சேர்ந்துகொள்கிறது. டெய்லரின் கதாபாத்திர அமைப்பு. ஆகவே, ஒருவித சலிப்பே தட்டுகிறது. கூடவே, காந்திதான் இதேகேல்லாம் காரணம் என்ற விஷயம் எப்படி கதாநாயகனின் மனதில் ஆழ பதிகிறது என்பதும் வலுவே இல்லாமல் சொல்லப்பட்டிருகிறது. பார்க்கும் பார்வையாளைகளையும் அந்த எமோஷனில் பங்கேற்க வைப்பதே ஒரு சிறந்த திரைக்கதை. காந்தி மேல் பார்வையாளர்களுக்கும் வெறுப்பு ஏற்படச் செய்ய வேண்டும் (பகத்சிங் படத்தைப்போல). ஆனால் அது இங்கே மிஸ்ஸிங். ஆகவே, இறுதியில் கதாபாத்திரம் திருந்தும்போதும், அது ஏதோ பம்மாத்து வேலை போன்று தோன்றுகிறது. இது என் எண்ணம்.

    கூடவே, நீங்கள் சொல்லிய காரணங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    கில்லி உதாரணம், எஸ். சராசரிக் கதைக்கு சூடான திரைக்கதை. சிறந்த கதைக்கு மோசமான திரைக்கதை – இதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஹே ராம் அதில் சேராது என்பது என் எண்ணம்.

    அதேபோல், இந்தக் கட்டுரையில், எது கடினமாக உள்ளது என்று விளக்கினால், அடுத்து வரும் கட்டுரைகளில் அதனை இன்னும் எளிமைப்படுத்த முயல்வேன்.

    @ barath – subject என்பதை எளிமையாகவே விளக்கியிருக்கிறேன் என்று படுகிறது. எது கடினமாக் ஆல்லது என்று விளக்கினால், அதனை எளிமைப்படுத்திவிடலாம். நன்றி

    Reply
  5. idhula vague’a edhum illa..its a good post as far as im concerned

    Reply
  6. உங்கள் விளக்கத்திற்கு நன்றி
    ——————————————————————————
    கீழ்க்கண்ட விஷயங்கள் எனக்கு குழப்பத்தை உண்டாக்கின.

    1 . subject என்பது Action & Character என பிரிக்கபடுவதாக சொல்லியுள்ளிர்கள். வரை படமும் அதையே காட்டுகிறது. ஆனால் Character -கள் செய்யும் Action மூலம் விளக்கபடுவதே subject என சில இடங்களில் கூறியுள்ளிர்கள் (ex :Subject = character & action ). அது தான் என்னை குழப்பிவிட்டது. கீழ்க்கண்ட வரிகளை கவனிக்கவும்.

    —————————
    subject என்பது, action மற்றும் character என்று இரண்டாக விளக்கப்படுகிறது.

    Action என்பது, கதையில் நிகழக்கூடிய சம்பவங்கள். கதை எதைப்பற்றி என்று விளக்குவது. Character என்பது, கதையின் பிரதான பாத்திரம். கதை யாரைப்பற்றி என்று விளக்குவது.
    —————————
    2 . அதே போல் “action is character ” – ம் சரியாக புரியவில்லை. ஒரு எ-கா தந்தால் நலம்.

    3. ” Action , இரண்டு வகைப்படுகிறது. Physical & Emotional.” என்பது சரி. ஆனால் அது ஒரு படம் action படமா (physical action) அல்லது உணர்வுபூர்வமான படமா (emotional action) என்பதைச் சொல்லவதாக தோன்றவில்லை. மாறாக Subject -யை சொல்வதற்கு ஒரு கேரக்டர் செய்யும் action physicalla அல்லது emotionalla என்பதாகவே தோன்றுகிறது. நீங்கள் இந்த ஒன்றுக்கொன்று முரண்பாடான இரண்டு கருத்துக்களையும் சொல்லிருக்கிறீர்கள்.

    ——————————————————————————————–
    Physical action என்பது, வெளிப்படையாக, கதையில் நடக்கும் சம்பவங்கள். அதாவது, ஒரு போர்க்களக் காட்சி (Lord Of the Rings), அல்லது கார் சேஸிங் காட்சி (எண்ணற்ற தமிழ்ப் படங்கள்) , அல்லது ஒரு கைகலப்பு சம்பவம் அல்லது துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளும் பரபரப்பான ஒரு காட்சி இத்யாதி. புறத்தில் நடக்கும் காட்சிகள். இதற்கு நேர் மாறாக, Emotional action என்பது, கதாபாத்திரங்களுக்கு உள்ளே நடக்கும் விஷயங்களைப் பற்றிச் சொல்லும் காட்சிகள். அதாவது, கதாபாத்திரங்களின் மனநிலையைப் பற்றிச் சொல்லும் காட்சிகள் (உதாரணங்களாக, American Beauty , Shawshank Redemption போன்ற படங்கள்) .

    திரைக்கதை எழுதுவதன் முன்பாக, அது ஒரு action படமா (physical action) அல்லது உணர்வுபூர்வமான படமா (emotional action) என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் சிட் ஃபீல்ட்.

    ——————————————————————–

    சில முறை படித்தபின் நீங்கள் சொல்லவருவது புரிந்து விட்டது, ஆனால் சில முறை தேவைப்பட்டது உண்மை. என் புரிதலில் குறைபாடும் இருக்கலாம். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். மேலும் இந்த post -ல் ஒரு அவசரம் தெரிகிறது, கொஞ்சம் பொறுமையாக செல்லலாம். குறை சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை, அப்படி இருந்தால் மன்னிக்கவும்.

    Reply
  7. மங்காத்தா ரசிகர்களுக்கு மட்டும்.மத்தவங்க போனா கேரண்டி இல்லை!!

    Reply
  8. Mayilraja K

    இந்த விளக்கம்(SUBJECT) எனக்கு மிகவும் பயன் உள்ளதாக உன்னது, அனால் சிலமுறை படித்தபின்னரே புரிகிறது. நன்றி,

    Reply
  9. Mayilraja K

    இந்த அத்தியாய முடிவில், சிட் ஃபீல்ட், நமக்கு ஒரு பயிற்சியைப் பரிந்துரைக்கிறார். அதாவது, நமக்குத் தேவையான ஒரு சப்ஜெக்டை எடுத்துக்கொள்ளுங்கள் (Subject = character & action. கதாபாத்திரம் மற்றும் அதற்கு நிகழும் சம்பவங்கள்). கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுக்கு நிகழும் சம்பவங்கள் என்று உங்கள் கதையைப் பிரியுங்கள். இதனை வைத்து, உங்கள் கதையை எப்படி எழுத வேண்டும் என்று முடிவு செய்துகொள்ளுங்கள். அதாவது, கதாபாத்திரம் அடைய நினைக்கும் விஷயம், அதற்கு நிகழும் தடைகள், முடிவில் கதாபாத்திரம், தனது லட்சியத்தை அடைந்ததா இல்லையா ஆகிய விஷயங்களை, ஒரு சில பத்திகளில் எழுத முயலுங்கள். இதுவே, திரைக்கதையின் ஆரம்பம்.

    துணுக்குச் செய்தி – ‘The Last Samurai’ படத்தை எடுக்க, இயக்குநர் Edward Zwick, ஒரு வருட காலம், ஜப்பானிய கலாச்சாரத்தைப் பற்றிய ரிஸர்ச் செய்திருக்கிறார். இந்த ஒரு வருட காலத்துக்குப் பின்பே, திரைக்கதையின் முதல் வரி எழுதப்பட்டது.

    திரைக்கதையின் golden rule – எவ்வளவுக்கெவ்வளவு நமக்குத் தெரிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நம்மால் அதனை எளிதாகவும், புரியும்படியும் சொல்ல இயலும்.

    துணுக்குச் செய்திக்கு நன்றி.

    Reply

Join the conversation