திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 5

by Karundhel Rajesh September 9, 2011   series

சென்ற அத்தியாயத்தில், ஒரு திரைக்கதையின் மையமாக விளங்கும் கதாபாத்திர விளக்கம் மற்றும் அது என்ன செய்கிறது என்பதன் விளக்கம் பார்த்தோம். சிட் ஃபீல்டின் புத்தகத்தில் அடுத்த அத்தியாயம் பற்றி இந்தக் கட்டுரையில் அலசலாம்.

கேரக்டர் என்றால் என்ன என்பதை, சென்ற கட்டுரையில் விரிவாகப் பார்த்தோம். அதாவது, நமது கதையில் வரும் கதாபாத்திரம் எதுவோ, அதுவே கேரக்டர். யாரைப்பற்றிக் கதையைச் சொல்லப்போகிறோமோ, அதுவே கேரக்டர். இதைப் புரிந்துகொண்டோம். ஆனால், எப்படி இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்குவது?

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹென்றி ஜேம்ஸ் என்ற பிரபல நாவலாசிரியரைப் பற்றிய குறிப்புடன், இந்த அத்தியாயத்தை சிட் பீல்ட் துவக்குகிறார். இந்த ஹென்றி ஜேம்ஸ், கதை எழுதுவது எப்படி என்று பல ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். ஒரு கதை எப்படி உருவாகிறது என்ற இவரது கட்டுரைகள், மிகவும் பிரசித்தம். அப்படிப்பட்ட கட்டுரை ஒன்றில் (‘Art of Fiction’), ஹென்றி ஜேம்ஸ், கேரக்டர் – கதாபாத்திரம் – என்பதைப் பற்றி, கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

What is character but the determination of incident? And what is incident but the illumination of character?

கதாபாத்திரம் என்பது, ஒரு சம்பவத்தின் விளைவல்லவா? அதேபோல், சம்பவம் என்பது, ஒரு கதாபாத்திரத்தைத் தெளிவாக விளக்குவதல்லவா? விளக்கமாகப் பார்க்கலாம்.

எந்தத் திரைக்கதையை எடுத்துக்கொண்டாலும், அவற்றில் ஒரே ஒரு விஷயம் பொதுவாக இருக்கும். அதாவது, அந்தக் கதையில் ஏதோ ஒரு சம்பவம் நடக்கும். இந்தச் சம்பவத்துக்குக் கதையின் பிரதான கதாபாத்திரம் எப்படி எதிர்வினை (ரியாக்ட்) செய்கிறது என்பதில் தான் அந்தப் படமே அடங்கியிருக்கும். எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் சரி. இது இருக்கும். உங்களுக்குத் தெரிந்த எந்தப் படத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, ‘கில்லி’ படத்தில், மதுரையில், த்ரிஷா துரத்தப்படும் சம்பவம். இதற்கு விஜய்யின் கதாபாத்திரம் எப்படி ரியாக்ட் செய்கிறது? த்ரிஷாவை மீட்பதே விஜய்யின் reaction. அப்படி விஜய் த்ரிஷாவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டுவந்துவிடுவதால்தான் படம் சூடு பிடிக்கிறது அல்லவா? இதேபோல், இன்னொரு உதாரணம்: மகாநதி. இதில், கிராமத்து பண்ணையாரை, நகரத்தில் இருந்து வரும் ஹனீஃபா கதாபாத்திரம், சிட்ஃபண்ட் ஆரம்பிக்கச் சொல்லிக் கேட்கிறது. அந்தப் பண்ணையார், ‘அதெல்லாம் முடியாது போய்யா’ என்று சொல்லி, தனது இயல்பான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கலாம். ஆனால், பணம் சம்பாதிக்க வேண்டும், தனது நண்பனைப் போல் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், குழந்தைகளைப் பெரிய படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்பதுபோன்ற பல எண்ணங்கள் அந்தப் பண்ணையாரின் மனதில் ஓடுவதால், அரைமனதாக, சரி என்று சொல்லி ரியாக்ட் செய்துவிடுகிறார். அந்தச் சம்பவம் தான் படத்தில் அதன்பின் நிகழும் அத்தனை சம்பவங்களுக்கும் ஆரம்பம்.

இந்த இரண்டு உதாரணங்களையும் கவனமாகப் பார்க்கலாம்.

‘கதாபாத்திரம் என்பது, ஒரு சம்பவத்தின் விளைவல்லவா? அதேபோல், சம்பவம் என்பது, ஒரு கதாபாத்திரத்தைத் தெளிவாக விளக்குவதல்லவா?’

த்ரிஷா துரத்தப்படுவது என்பது ஒரு சம்பவம். அங்கே, விஜய் குறுக்கிடுவது,அவரது கதாபாத்திரத்தைப் பற்றிய ஒரு புரிதலை, படம் பார்க்கும் ஆடியன்ஸான நமக்குள் விளைவிக்கிறது. விஜய் த்ரிஷாவைக் காப்பதால், நமக்குள் ஒரு நிம்மதி ஏற்படுகிறது. அதாவது, ‘அப்பாடா.. த்ரிஷா பிரகாஷ் ராஜ் கிட்டருந்து தப்பிச்சிட்டா மச்சி… விஜய் நல்லவன்டா.. சூப்பர்’ என்பது போன்ற புரிதல். ‘விஜய்யின் கதாபாத்திரம், அநியாயத்தைக் கண்டால் பொங்கி எழுந்துவிடும்’; ‘விஜய்யின் கதாபாத்திரம், ஒரு நல்ல கதாபாத்திரம்’; ‘விஜய்யால் யாருக்கும் எந்தத் தீங்கும் எழாது’ ஆகிய விஷயங்கள், அந்த ஒரு சம்பவத்தின் வழியாக நமக்குப் புரியவைக்கப்படுகின்றன. ஆகவே, த்ரிஷா துரத்தப்படும் சம்பவத்தின் விளைவாக, விஜய்யின் கதாபாத்திரத்தைப் பற்றிய தெளிவான புரிதல் நமக்குக் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், கில்லி திரைப்படம் மேற்கொண்டு வேகமாகச் செல்வதற்கு, இந்தச் சம்பவமே பிரதான காரணம்.

இந்தப் புரிதலோடு, மகாநதி உதாரணத்தை நோக்கினால், என்ன தெரிகிறது?

ஹனீஃபா, கமலிடம், சிட்ஃபண்ட் ஆரம்பிக்கச்சொல்வது, ஒரு சம்பவம். இந்தச் சம்பவம், எப்படிக் கமலின் கதாபாத்திரத்தைப் பற்றிய புரிதலை நமக்குள் ஏற்படுத்துகிறது? கமலின் கதாபாத்திரத்துக்கு அந்தச் சமயத்தில் தேவை, தனது குழந்தைகளுக்கான நல்ல படிப்பு. அதேபோல், ஏற்கெனவே தனது நண்பனின் குடும்பத்தைப் பார்த்திருந்ததால், அவர்களைப் போல் தங்கள் குடும்பம் இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மை. நகரத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணம், ஏற்கனவே கமலின் கதாபாத்திரத்துக்கு இருக்கிறது. எனவே, சிட்ஃபண்ட் ஆரம்பிக்க உதவுவதாக ஹனீஃபா சொன்னதும், ஒரு நப்பாசையில் கமலின் கதாபாத்திரம் சம்மதித்துவிடுகிறது. அந்தக் கதாபாத்திரத்தின் அப்பாவித்தனமான குணம் நமக்கு இதனால் புரிவிக்கப்படுகிறது. ‘வருங்காலத்துல இந்தாளு ஏமாறப்போறான் டோய்’ என்று படம் பார்க்கும் நமக்கும் புரிந்துவிடுகிறது.

இப்படியாக, சம்பவமும் கதாபாத்திரமும், ஒரு புள்ளியில் இணைகின்றன. ஒரு குறிப்பிட்ட சம்பவம் நடக்கையில், கதாபாத்திரங்கள் எவ்வாறு ரியாக்ட் செய்கின்றன என்று ஆராய்ந்தால், அதுவே அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பை நமக்குப் புரியவைத்துவிடுகிறது. அந்தக் கதாபாத்திரத்தின் மனதின் அடியாழத்தில் இருக்கும் அதன் உண்மையான குணத்தின் இயல்பு, நமக்கு இவ்வாறாகக் காட்டப்படுகிறது.

இப்படி சம்பவங்களையும், கதாபாத்திரங்களையும் இணைப்பதற்கு, முதலில் தெரியவேண்டியது என்ன? கதையில் பிரதான கதாபாத்திரம் எது என்பதே. ஒரு திரைக்கதையில், பல கதாபாத்திரங்கள் வந்து செல்லலாம். ஆனால், எந்தக் கதாபாத்திரத்தின் மூலமாகக் கதை நமக்குச் சொல்லப்படுகிறதோ – எந்தக் கதாபாத்திரம் கதையைத் தனது தோள்களில் தாங்கிச் செல்கிறதோ, அதுவே பிரதான கதாபாத்திரம்.

பிரதான கதாபாத்திரத்தை உருவாக்கியாயிற்று. அதன்பின் என்ன செய்யவேண்டும்?

இதோ இங்கே இருக்கும் படத்தை கவனியுங்கள்.

பிரதான கதாபாத்திரத்தை, இரண்டாகப் பிரியுங்கள் என்கிறார் சிட் ஃபீல்ட்.

Interior & Exterior .

உட்புற உருவாக்கம் & வெளிப்புற உருவாக்கம்.

உட்புற உருவாக்கம் என்பது, பிறந்தது முதல் தற்போதுள்ள காலம் வரை, கதாபாத்திரம் என்ன செய்தது என்பது. வெளிப்புற உருவாக்கம் என்பது, திரைக்கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை, கதாபாத்திரத்தின் செயல்கள்.

இது ஏன்?

ஒரு கதாபாத்திரத்தை, பேப்பரில் எழுதிவைத்துக் கொள்வது என்பது வேறு. அந்தக் கதாபாத்திரத்தை நன்றாகப் புரிந்துவைத்துக்கொள்வது என்பது வேறு. ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி நன்கு புரிந்தால் மட்டுமே, குறிப்பிட்ட சம்பவத்தில் அந்தக் கதாபாத்திரம் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதைத் திரைக்கதையில் வெற்றிகரமாக எழுத முடியும். கதாபாத்திரத்தைப் பற்றிய தெளிவு இல்லையெனில், திரைக்கதையில் கதாபாத்திரத்தைத் தெளிவாக விளக்க முடியாமல் போய்விடும். முன்னுக்குப்பின் முரணாக அந்தக் கதாபாத்திரம் நடந்துகொள்வதைப் பார்க்கும் ஆடியன்ஸான நமக்கும், சுவாரஸ்யம் போய்விடும் (ஆய்த எழுத்து மாதவன் – இந்த முன்னுக்குப்பின் முரண் விஷயத்துக்கு சிறந்த உதாரணம்).

சிறு வயதிலிருந்து அந்தக் கதாபாத்திரத்துக்கு நேர்ந்துள்ள சம்பவங்கள், அது வளர்ந்த சூழல் ஆகியவையே அதன் குணத்தை முடிவுசெய்யும் காரணங்களாக இருக்கின்றன. எனவே, திரைக்கதையில் அந்தக் கதாபாத்திரம் ஏதேனும் முடிவு எடுக்கிறது (அல்லது) குறிப்பிட்ட சம்பவத்துக்கு ரியாக்ட் செய்கிறது என்றால், அது, இந்தக் கதாபாத்திரத்துக்கு நேர்ந்த ஏதேனும் ஒரு சிறுவயது சம்பவத்தின் விளைவாக இருக்க நல்ல வாய்ப்பு உண்டு. இதுதானே நிஜவாழ்விலும் நடக்கிறது?

இந்த உட்புற, வெளிப்புற உருவாக்கங்களை சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

முதலில் உட்புற உருவாக்கம்.

நமது பிரதான கதாபாத்திரம், ஆணா பெண்ணா? எந்த ஊரில் பிறந்தது? பெற்றோர்கள் யார்? எத்தனை சகோதர சகோதரிகள்? எந்தப் பள்ளியில் படித்தது? எப்படிப்பட்ட பள்ளிப்பருவமாக அது இருந்தது? சந்தோஷமாகவா அல்லது சோகமயமாகவா? அந்தக் கதாபாத்திரம் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ ஏதாவது தொல்லைகளை அனுபவித்ததா? குழந்தைப்பருவத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததா? அல்லது சோம்பேறியா? பெற்றோர்களுடன் அதன் உறவு எப்படி இருந்தது? அமைதியான குழந்தையா அல்லது அதிரடியான குழந்தையா? குழந்தை பெற்றோரிடம் தான் வளர்ந்ததா? அல்லது வேறு யாரிடமுமா? பெற்றோர் எந்தவகையான வேலையில் இருந்தனர்? அவர்களுக்குள் உறவுமுறை எப்படி இருந்தது? ஏழைகளா பணக்காரர்களா?

இவைகளைத் தெளிவாக விளக்கிக்கொள்வது, திரைக்கதைக்குப் பலவிதங்களிலும் பேருதவி புரியும்.

இதன்பின், கதாபாத்திரத்தின் அடுத்த சில வருடங்களுக்கு வாருங்கள். அதாவது, பத்து முதல் இருபது வயது வரை. எப்படிப்பட்ட நண்பர்கள் அமைந்தனர்? அந்த நண்பர்களின் தாக்கம் இந்தக் கதாபாத்திரத்திடம் இருந்ததா? பள்ளியில் எந்த விளையாட்டுகளில் கதாபாத்திரம் ஈடுபட்டது? அல்லது வெறுமனே படித்துக்கொண்டே இருந்ததா? எப்படிப்பட்ட ஆசிரியர்கள்? ஆசிரியர்கள் மூலமாக ஏதேனும் நல்ல / கெட்ட அனுபவங்கள்? காதல்(கள்)? முதல் செக்ஸ் அனுபவம்(அப்படி ஏதாவது இருந்தால்)? சகோதர சகோதரிகளுக்குள் ஏதாவது சண்டைகள்? வாழ்வையே மாற்றக்கூடிய ஏதாவது சம்பவம் அந்தக் கதாபாத்திரத்தின் பள்ளி / கல்லூரிப்பருவத்தில் நடந்திருந்ததா?

ஒரு விஷயம் விடாமல் அத்தனையும் தயார் செய்துவைக்கவேண்டும்.

சுருக்கமாக, திரைக்கதை ஆரம்பிக்கும் தருணம் வரை, கதாபாத்திரத்தின் அனைத்து விபரங்களும் நமது விரல்நுனியில் இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட விபரங்களின் மூலமாகவே, கதாபாத்திரத்தின் இயல்பு நமக்குப் புரிய ஆரம்பித்துவிடும். அதாவது, கதாபாத்திரம் முழுக்க முழுக்க சாதுவான, நல்ல கதாபாத்திரமா அல்லது அது வேகமான, துடிப்பான பாத்திரமா அல்லது சைக்கோவா
என்பது. இதுதான் உட்புற உருவாக்கம். இப்படி உட்புற உருவாக்கம் செய்வதே, சுருக்கமாக, கேரக்டர் பயாக்ரஃபி (Character Biography) எனப்படுகிறது.

இந்த இடத்தில், இன்னொரு விஷயம். மேலே உள்ள விபரங்களைப் பார்த்து, ‘இது மிகவும் அதிகமாக இருக்கிறது; இதெல்லாம் எனக்குத் தேவையில்லை. என்னால் ஜஸ்ட் லைக் தட் ஒரு திரைக்கதையை எழுதமுடியும்’ என்று உங்களுக்குத் தோன்றலாம். அப்படியும் நீங்கள் எழுதலாம். ஆனால், திரைக்கதையின் முக்கியமான சில காட்சிகளில், முன் விபரம் எதுவும் தெரியவில்லை என்றால், அந்தக் கதாபாத்திரம் முற்றிலும் தவறான வகையில் ரியாக்ட் செய்து, படம் பார்ப்பவர்கள் அதனை எள்ளி நகையாடும் விதமாக அமைந்துவிடலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். அப்படியே, இன்னொரு விஷயம் என்ன எனில், திரைக்கதை என்பது, சும்மா கடையில் சென்று அரைக்கிலோ தக்காளி வாங்கிவிடுவது போன்ற விஷயம் அல்ல. அது ஒரு வேலை. உருவாக்கம். இந்த வேலை, சுலபத்தில் நடந்துவிடாது. ஒரு முழுத் திரைப்படத்துக்கான திரைக்கதை, ‘ஜிங்’ என்று ஒரே அட்டெம்ப்டில் கடகட என்று உருவாகிவிடாது. படிப்படியாக, ஒவ்வொரு காட்சியையும் பலமுறை அடித்துத் திருத்தியே திரைக்கதை உருவாக்கப்படுகிறது. பல சமயங்களில், முழுத் திரைக்கதையே பலமுறை மாற்றப்படுவதும் உண்டு. நமது திறமையை அடியோடு சோதிக்கும் விஷயம் இது. ஆகவே, ஜாலியாக, எந்த ஹோம் வோர்க்கும் இல்லாமல் திரைக்கதை உருவாகி விடாது. இதனை மறந்துவிடவேண்டாம்.

உட்புற உருவாக்கம் முடிந்ததும், வெளிப்புற உருவாக்கம். அதாவது, திரைக்கதை தொடங்கும் காலத்தில் இருந்து, திரைக்கதை முடியும் காலம் வரை கதாபாத்திரத்தின் செயல்பாடுகள். ஒரு திரைக்கதையில், கதாபாத்திரத்தின் செயல்களை எப்படி நம்பும்படி, தத்ரூபமாக அமைப்பது?

கதாபாத்திரத்தின் திரைக்கதையில் சொல்லப்படப்போகும் வாழ்க்கையை, மூன்றாகப் பிரிப்பதன் மூலம்.

Professional,  Personal & private .


Professional life என்பது, கதாபாத்திரம், உயிர்வாழ என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது. வேலைக்குச் செல்கிறதா அல்லது வியாபாரமா? தாதாவாக இருக்கிறதா அல்லது அடியாளா? அது செய்யும் வேலை அதற்குப் பிடித்திருக்கிறதா? ஏதேனும் சிக்கல்கள்? வேலையில் கோபம் கொண்டிருக்கிறதா? கோபத்துக்கு யார் காரணம்? அதன் தலைமையதிகாரி எப்படிப்பட்டவர்? தாதா எனில், போட்டி தாதா யார் மூலமாவது பிரச்னைகள்? நல்ல தாதாவா கெட்ட தாதாவா? மற்றவர்களுடன் அதன் உறவுமுறைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனவா?

முடிந்தவரை கேள்விகளைக் கேட்டு, தெளிவான ஒரு உருவாக்கம் செய்துகொள்ளுங்கள்.

Personal என்பது, கதாபாத்திரத்தின் காதல், திருமணம், குழந்தைகள், கள்ளத்தொடர்பு, டைவர்ஸ் ஆகியன சம்மந்தப்பட்டது. பல கேள்விகளைக் கேட்டு, இதையும் தெளிவாக வடிவமைத்துக்கொள்வது நல்லது.

Private என்பது, கதாபாத்திரம் தனியாக இருக்கையில் என்ன செய்கிறது? டிவி பார்த்துக்கொண்டே இருக்கிறதா? அல்லது, ஜாலியாகக் கொலைகள் செய்து, தலைகளை ஃப்ரிட்ஜில் வைக்கிறதா? ஜிம்முக்குப் போகிறதா? பக்கத்து ஃபிளாட்டில் நடப்பதை பைனாக்குலரில் பார்க்கிறதா? இத்யாதி. தனிமையில் இருக்கும்போது, என்ன நடக்கிறது?

இப்படித் தெளிவான கேரக்டர் பயாக்ரஃபி தயார் செய்து வைத்து, திரைக்கதையில் காட்டுங்கள். சொல்லவேண்டாம். காட்டுங்கள். திரைப்படம் என்பது விஷுவல் மீடியம் என்பதால், சொல்லுவது தேவையில்லாதது. காட்ட வேண்டும்.

அதாவது, கேரக்டர் பயாக்ரஃபி மூலம், கதாபாத்திரத்தின் குணாம்சங்களைக் காட்டுவது. சம்பவங்களை உருவாக்கி, அதற்கு எப்படி இந்தக் கதாபாத்திரம் ரியாக்ட் செய்கிறது என்று சொல்லி, அதன் உண்மைக் குணத்தைப் புரியவைப்பது. மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட சம்பவத்துக்கு அந்தக் கதாபாத்திரம் எந்த வகையில் இயற்கையாக ரியாக்ட் செய்கிறது என்று திரைக்கதையில் காட்டுவது.

இதுவே, கேரக்டர் எனப்படும் கதாபாத்திரத்தை உருவாக்கும் விதம் – The Creation of Character.

இத்துடன் மூன்றாவது அத்தியாயம் முடிகிறது. சுருக்கமாக, இந்த அத்தியாயத்தில், யாரைப்பற்றி சொல்ல விரும்புகிறோம் என்று முடிவு செய்து, பிரதான கதாபாத்திரத்தை உருவாக்குகிறோம். அதன்பின், அந்தக் கதாபாத்திரத்தின் பிறப்பில் இருந்து திரைக்கதை நடக்கும் தற்போதைய காலம் வரை அதன் வாழ்க்கையை அலசி, கேரக்டர் பயாக்ரஃபி உருவாக்குகிறோம். அதன்பின், திரைக்கதையில் அந்தக் கதாபாத்திரம் காண்பிக்கப்படும் காலத்தை முடிவு செய்கிறோம். அந்தக் காலத்தை மூன்றாகப் பிரிக்கிறோம். Professional , personal & Private . இந்த மூன்று பிரிவுகளிலும் பல கேள்விகளைக் கேட்டு, தெளிவாக விளக்கிவைத்துக் கொள்கிறோம். இது ஏன் எனில், அப்போதுதான் திரைக்கதையில் பல சம்பவங்களை உருவாக்கி, அவற்றுக்கு அந்தக் கதாபாத்திரம் எப்படி ரியாக்ட் செய்கிறது என்று காட்டி, அதன்மூலம் அந்தக் கதாபாத்திரத்தின் உண்மைக் குணத்தைப் புரிய வைப்பதற்கு.

அடுத்து?

தொடரும் ….

  Comments

19 Comments

  1. ரொம்ப நல்லா இருக்கு, இவ்வளவு நாளா நான் உங்கள பார்க்கவே இல்ல. ஒரு சந்தேகம் உங்க உண்மையான பெயரே இது தானா இல்ல………….

    Reply
  2. Mr.Manikanda prabhu..ivaru peru rajesh..aana..ivaruku innoru peru irukku(??!!)…

    Reply
  3. //காட்டுங்கள். திரைப்படம் என்பது விஷுவல் மீடியம் என்பதால், சொல்லுவது தேவையில்லாதது. காட்ட வேண்டும்//

    correctu machi..vala vala nu pesa koodathu..scenes moolama padatha move panrathu thaan better(rodriguez,brian de palma etc.,etc.,) than moving the film by dialogues (Q&T)-good post

    Reply
  4. This comment has been removed by the author.

    Reply
  5. excellent one rajesh.

    Reply
  6. sema super ah indha thodar poitu irukku.pinnunga esamaan pinnunga

    Reply
  7. சென்ற பகுதியில் எனக்கு ஏற்ப்பட்ட சில ஐயங்களுக்கு இப்பகுதியில் விடை கிடைத்து விட்டது. நன்றி.

    ஒரு கேள்வி. பார்பதற்கு சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை யோசித்து விட்டு அதன் மூலம் கதாபாத்திரத்தை விளக்குவது நல்லதா அல்லது கதாபாத்திரத்தை விளக்குவதற்காக ஒரு சம்பவத்தை யோசிப்பது நல்லதா?

    Just wanted to know your thoughts…

    One more ques.. Why have you not tried writing/directing a short film?.

    Reply
  8. we want more posts about tamil books from you…

    Reply
  9. boss neenga yen oscar awrdukku try panna koodaathu….??????????

    Reply
  10. அருமையான பதிவு.ஆனால், ஏற்கனவே மறைந்த எழுத்தாளர் சுஜாதா மிக எளிதான தமிழில், மிக சுருக்கமாக, “திரைக்கதை எழுதுவது எப்படி?” என்ற பெயரில் எழுதிய புத்தகம், நண்பர் மனுஷ்யபுத்திரன் நடத்திவரும் உயிர்மை பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்த ஒரு புத்தகம். அதிலிருந்தும் நீங்கள் எழுதலாமே?

    Reply
  11. தொடர் சிறப்பாகச் செல்கிறது. இந்த அத்தியாயமும் மிக அருமையாக இருந்தது. வாழ்த்துகள்.

    தொடருங்கள் நண்பா.

    கூகுள் பஸ்ஸில் இதைப் பகிர்ந்திருக்கிறேன்.

    Reply
  12. @ மணிகண்ட பிரபு – இத்தனை நாலு என்னை நீங்க பார்க்காததுக்கு என்ன பண்ணலாம்? தமிழ்ப் பதிவர்களை எல்லாம் சேர்த்து வெச்சி ஒரு பதிவர் சந்திப்பு போட்ரலாமா? 🙂 . . என்னோட உண்மையான பெயர், ராஜேஷ். சீக்கிரமே கெஜட்ல கருந்தேள்னு மாத்த்க்கப்போறேன். கோபால்சாமி, வைகோன்னு பேரை மாத்தலையா? அதுமாதிரி.

    @ பாலு – அப்சல்யூட்லி. எனக்கு இப்பல்லாம் க்வெண்டின் படங்கள் படு போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சி. ஆனா ரோட்ரிகஸ் படங்கள், டக்கரா இருக்கு. 🙂

    @ mageshp – மிக்க நன்றி

    @ உங்கள் கருத்துகளிற்கு மிக்க நன்றி நண்பரே.

    @ இளங்கன்று –

    //ஒரு கேள்வி. பார்பதற்கு சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை யோசித்து விட்டு அதன் மூலம் கதாபாத்திரத்தை விளக்குவது நல்லதா அல்லது கதாபாத்திரத்தை விளக்குவதற்காக ஒரு சம்பவத்தை யோசிப்பது நல்லதா?//

    என்னோட கருத்து – இது ஒரு பயங்கர சிக்கலான கேள்வி :-). ஆக்சுவலா ஒரு சின்ன கருவை வெச்சிகிட்டு, அதை ஊதி ஊதி டெவெலப் பண்ணுறதுதான் திரைக்கதை. அந்த ரீதில யோசிச்சி பார்த்தா, சில சமயம், கதாபாத்திரத்தை விளக்கவும் காட்சிகள் வேண்டும். அதேபோல், காட்சிகள் மூலம் கதாபாத்திரம் நடந்துகொள்வதையும் விளக்க வேண்டும். இந்த ரெண்டுமே சாத்தியப்படணும். அப்பதான் திரைக்கதை வெற்றிபெறும் என்று நினைக்கிறேன். ஆனால், பெரும்பாலான காட்சிகள், கதாபாத்திர விளக்கத்துக்காகவே பயன்படுகின்றன. சுவாரஸ்யமான ஒரு சம்பவம் – அதன்மூலம் கதாபாத்திர விளக்கம் என்பது, கொஞ்சம் rare தான்.

    //One more ques.. Why have you not tried writing/directing a short film?.//

    காலம் கனியட்டும் நண்பரே. முதலில் திரைக்கதை அமைப்பை அலசிவிடுவோம். அதன்பின் அதில் இறங்குவோம் 🙂 .

    @ Elamparuthi – கட்டாயம். முடிந்த வரை எழுதுகிறேன். நன்றி.

    @ rr – ஆஸ்காரா? அத்தைத்தான் ‘ஓலைக நாயகன்’ கத்தி கூப்பாடு போட்டு, அதுமேல இருக்குற மரியாதையே போற மாதிரி பண்ணிபுட்டாரே? நான் நோபல் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன். ஏன் நீ சிபாரிசு பண்ணப்போறியா?

    @ ராம் ஸ்ரீதர் – இந்தத் தொடரின் முதல் அத்தியாயம் படித்திருந்தீர்கள் என்றால், சுஜாதா எழுதிய புத்தகம், சிட் பீல்ட் எழுதிய புத்தகத்தின் காப்பி என்று தெரிந்திருக்கும். அதனால்தான், அந்தக் காப்பியை விட்டுவிட்டு, சிட் பீல்டின் புத்தகத்தை அலசுவது இங்கே நோக்கம். நன்றி. அதேபோல், அதில் சுஜாதாவின் உதாரணங்கள், மொக்கையாக இருக்கும்.

    @ செ. சரவணக்குமார் – உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா.

    Reply
  13. //ஆனால், பெரும்பாலான காட்சிகள், கதாபாத்திர விளக்கத்துக்காகவே பயன்படுகின்றன. சுவாரஸ்யமான ஒரு சம்பவம் – அதன்மூலம் கதாபாத்திர விளக்கம் என்பது, கொஞ்சம் rare தான்.//

    சுவாரஸ்யமான காட்சிகள் எப்படி கேரக்டருக்காக அமையும்? அமையவே அமையாது. ஒரு காட்சி சுவாரஸ்யமாய் இருந்தால் அது அந்த கேரக்டரை விளக்குவதற்காகத்தான் இருக்குமே தவிர சுவாரஸ்யமான காட்சி மூலம் கேரக்டர்கள் விளக்கப்படுவதில்லை. ஏனென்றால் ஒரு சுவாரஸ்யமான காட்சியில் கதையில் வரும் எந்த கேரக்டரும் சம்பந்தப்படவில்லை என்றால் நிச்சயம் அசுவாரஸ்யமாய் போய்விடும்.

    Reply
  14. //சிட் பீல்டின் தமிழாக்கமா? கொஞ்சம் லேங்குவேஜ் இடறுகிறது கருந்தேள்.//

    எங்க எப்புடி இடறுதுன்னு சொன்னா, சரி பண்ணிப்பிடலாம் கேபிள். அப்புடியே முதல் நாலு பார்ட்டும் படிங்க.

    //ஏனென்றால் ஒரு சுவாரஸ்யமான காட்சியில் கதையில் வரும் எந்த கேரக்டரும் சம்பந்தப்படவில்லை என்றால் நிச்சயம் அசுவாரஸ்யமாய் போய்விடும்.//

    உங்க ரெண்டாவது கருத்து – அது தான் நானும் சொல்லிருக்கேன். ஆனால், நீங்க அது அமையவே அமையாதுன்னு சொல்லிருக்கீங்க. நான், அது rare ன்னு சொல்லிருக்கேன். ஏன்னா, அப்புடி இருக்குறதையும் நாம பார்த்திருக்கேன். முக்கிய கதாபாத்திரங்கள் இல்லாத சுவாரஸ்யமான காட்சி – கண்டிப்பா சாத்தியமில்ல தான் 🙂

    Reply
  15. ஓரே மூச்சில் திரைக்கதை பற்றிய 5 பகுதிகளையும் படித்தேன். மிக தேவையான பதிவு. முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன். தமிழில் சிறந்த திரைக்கதை என்று நீங்கள் கருதும் முந்தைய படங்களைக்கூட குறிப்பிடுங்கள். தமிழில் தொடர்ந்து பல படங்கள் தொல்வியை தழுவுகின்றன அதன் தோல்விக்குகாரணமான திரைக்கதை அமைப்பின் கூறுகளையும் சுட்டிக்காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    Reply
  16. ரவி.. இந்த முயற்சியை நான் செய்யணும்னு இருந்தேன் ஆனா கருந்தேள் தட்டிட்டு போயிட்டாரு. கருந்தேள்.. மொத்தமாக படித்தபின் தான் லேங்குவேஜ் இடறுகிறது என்றேன். தனித்தனியாய் மீண்டும் ஒரு முறை வாசித்து சொல்கிறேன். எனக்கு தெரிந்தவரையில்.

    Reply
  17. @ கேபிள் – ரைட்டு. கண்டிப்பா சொல்லுங்க. அப்புறம், நண்பர் ரவிகுமார் – அவ்வப்போது தமிழ் உதாரணங்கள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். கண்டிப்பாக இனிமேலும் கொடுப்பேன். சீக்கிரமே, இன்னும் நன்றாக அலசலாம்.

    Reply
  18. Mayilraja K

    மிகவும் பயன் உள்ள அத்தியாயம், மிக்க நன்றி…

    Reply

Join the conversation