Sherlock Holmes (2009) – English

by Karundhel Rajesh January 9, 2010   English films

நான் ஏற்கனவே எழுதியிருந்தபடி, அவதார் படத்தை விடவும் நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு படம் இந்த ஷெர்லாக் ஹோம்ஸ். இந்தியாவில் நேற்றுதான் வெளியிடப்பட்டது. இன்று காலையில் எனது தோழியுடன் ஓடிவிட்டேன். படத்தைப் பார்த்தது முதல், ஹோம்ஸைப் பற்றிய பல சிந்தனைகள். எல்லாவற்றையும் இங்கே பகிர்ந்துவிடலாம் என்று இதை எழுதத் தொடங்கியுள்ளேன். கடைசியில் தான் தெரியும், எத்தனை விஷயங்களைப் பற்றி எழுத முடிந்தது என்று. இப்போது, படத்துக்குச் செல்வோம்.

நான் முன்னரே ஹோம்ஸைப் பற்றி எழுதிய பதிவினை, ஒரு முறை (முடிந்தால்) படித்து விடுங்கள். படத்தின் பல இடங்களில் வரும் சில விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ள அது (ஓரளவுக்கு) உதவலாம்.

படம், ஒரு இரவில் தொடங்குகிறது. ஒரு கோச்சு வண்டியில், சில மனிதர்கள் பரபரப்பாக அமர்ந்துகொண்டு, எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு மனிதர், டாக்டர் வாட்ஸன். வண்டி நிற்கிறது. அந்தக் கட்டிடத்தில், ஒருவர் ஒளிந்துகொண்டு, ஒரு அடியாளை அடித்துப்போட்டுவிட்டு, உள்ளே செல்கிறார். ஷெர்லாக் ஹோம்ஸ் அறிமுகம். உள்ளே, ஒரு ஆள், ஒரு பெண்ணை நரபலி கொடுக்க இருக்கிறான். தக்க சமயத்தில் அங்கு சென்றுவிடும் ஹோம்ஸும் வாட்ஸனும், அதைத் தடுத்து, அவனைக் கைது செய்கிறார்கள் (போலீஸ் துணையுடன்). அந்த நபர், லார்ட் ப்ளாக்வுட்.

துர்மாந்திரீகம் செய்த குற்றத்துக்கு, ப்ளாக்வுட்டிற்குத் தூக்குத் தண்டனை கிடைக்கிறது. அவன், தனது கடைசி ஆசையாக, ஹோம்ஸைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறான். அங்கு செல்லும் ஹோம்ஸிடம், தனது மரணத்துக்குப் பின், மூன்று இறப்புகள் நிகழும் என்றும், அதன்பின் உலகத்தின் போக்கே மாறிவிடும் என்றும் சொல்கிறான். அதன்பின், தூக்கிலும் இடப்படுகிறான்.,

ஹோம்ஸுக்கு, துப்பறிய எந்தப் புதுக் கேஸும் வராததால், சோர்வில் இருக்கிறார். அந்த நேரத்தில், ஐரீன் அட்லர் என்ற பெண் (இவளைப் பற்றி விரிவாகப் பின்னால் பார்க்க இருக்கிறோம்), ஹோம்ஸூக்கு ஒரு புதிய கேஸைக் கொண்டு வருகிறாள். தொலைந்துபோன ரியர்டன் என்ற மனிதனைக் கண்டுபிடிக்கச் சொல்கிறாள். உற்சாகமடையும் ஹோம்ஸ், அவனைக் கண்டுபிடிக்கக் கிளம்புகிறார். அவளிடம் இந்த வேலையை ஒப்படைத்தது யார் என்று அவளைப் பின்தொடர்ந்து சென்று, கண்டுபிடிக்க முயல்கிறார். ஆனால், அவருக்குக் கிடைப்பதெல்லாம், ஐரீன் அட்லரை நியமித்தது ஒரு ப்ரொஃபஸர் என்ற தகவல் மட்டுமே. அந்தப் ப்ரொஃபஸரின் உடையில் இருக்கும் ஒரு சின்னத்தை வைத்து இதைக் கண்டுபிடிக்கிறார் ஹோம்ஸ்.

அதே நேரத்தில், ப்ளாக்வுட்டின் சமாதி தகர்க்கப்பட்டு, ப்ளாக்வுட் வெளியே நடந்து சென்று விட்டான் என்று ஸ்காட்லாந்து யார்டு, ஹோம்ஸிடம் தெரிவிக்கிறது. இந்தப் போலீஸ் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் லெஸ்ட்ரேட் என்பவர், ஹோம்ஸின் நண்பர். அவருடன் பல கேஸ்களில் இணைந்து செயலாற்றியவர். அந்த சமாதிக்குச் செல்லும் ஹோம்ஸ், உடைந்த சமாதியைத் தோண்டியெடுக்கச் செய்து, பிணத்தைப் பார்க்கிறார். அப்போது, அங்கு பிணமாகப் புதைக்கப்பட்டுள்ளது, ஹோம்ஸ் தேடிக்கொண்டிருந்த ரியர்டன் தான் என்று தெரிகிறது. அவனது வாட்ச்சை ஹோம்ஸ் ரகசியமாக எடுத்து வைத்துக் கொள்கிறார். அந்த வாட்ச் தேய்ந்து போனதில் இருந்து, அதற்குச் சாவி கொடுக்க முயன்றதில் ஏற்பட்ட சிராய்ப்புகள், அதன் மீது உள்ள குறியீடுகள் போன்றவற்றையெல்லாம் அவதானிக்கும் ஹோம்ஸ், அந்த வாட்ச் அடகு வைக்கப்பட்ட கடைக்குச் சென்று, ரியர்டனின் முகவரியைப் பெறுகிறார்.

ரியர்டனின் வீடோ, ஒரு ரசாயனக்கூடம் போல் காட்சியளிக்கிறது. அதே நேரத்தில், அந்த வீட்டைக் கொளுத்த வரும் சில ஆட்களை, ஹோம்ஸும் வாட்ஸனும் அடித்துப் போட்டு விடுகிறார்கள். இருந்தும், அந்த வீட்டினுள் திருட்டுத்தனமாக நுழைந்த குற்றத்திற்காக, சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு அவரை ஜாமீனில் எடுக்கும் ஒரு ரகசிய அமைப்பைச் சேர்ந்த சில மனிதர்கள், ப்ளாக்வுட் தங்கள் அமைப்பில் இருந்ததாகவும், இப்போது அவன் ஏதாவது நாசத்தை விளைவிப்பதற்குமுன், அவனைப் பிடிக்கச் சொல்லி ஹோம்ஸிடம் சொல்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுக்கும் ஹோம்ஸ், அங்கிருந்து வெளியேறுகிறார்.

ப்ளாக்வுட் கூறியதுபோல், அந்த அமைப்பைச் சேர்ந்த இரு பிரமுகர்கள், அவனால் கொல்லப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் தலைமைப்பீடத்தில் அமரும் ப்ளாக்வுட், அந்த அமைப்பில் இருக்கும் இங்கிலாந்து நாட்டின் பல முக்கியப் பிரமுகர்களிடம், அமெரிக்காவின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று ஆணையிடுகிறான். அந்த அமைப்பில் இருக்கும் ஒரு அமைச்சரிடம், ஹோம்ஸைக் கைது செய்யவும் சொல்கிறான்.

ஹோம்ஸும் வாட்ஸனும், ஐரீனைத் தேடி ஒரு இடத்துக்கு வருகிறார்கள். அங்கு கட்டிப்போடப்பட்டிருக்கும் ஐரீனையும், ப்ளாக்வுட்டையும் பார்க்கிறார்கள். ப்ளாக்வுட் அங்கிருந்து சென்றுவிடுகிறான். ஆனால், அங்கு அவன் வைத்துள்ள குண்டுகள் வெடித்து, வாட்ஸன் படுகாயமடைகிறார்.

தன்னைப் போலீஸ் தேடுவதால் தலைமறைவாக இருக்கும் ஹோம்ஸ், ரகசியமாக வாட்ஸனை மாறுவேடத்தில் சென்று பார்க்கிறார். தான் ஒளிந்துள்ள இடத்தில், இதுவரை தனக்குக் கிடைத்த தடயங்களையெல்லாம் அவதானித்து, ப்ளாக்வுட்டின் திட்டத்தைக் கண்டுபிடித்து விடுகிறார். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு, எகிப்தின் ஸ்ஃபிங்க்ஸ் என்ற மிருகம் தான் ஆதர்சக் குறியீடு. இந்த மிருகம், நான்கு மிருகங்களின் உடல் பாகத்தினால் ஆனது. அந்த நான்கு மிருகங்கள்: எருது, கழுகு, மனிதன் மற்றும் சிங்கம். இதில், எருதையும் கழுகையும் மனிதனையும் குறிக்கும் மூன்று கொலைகள் இதுவரை நடந்து விட்டன. சிங்கம், இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தைக் குறிக்கிறது என்று கண்டுபிடிக்கும் ஹோம்ஸ், அடுத்த கொலை அந்தப் பாராளுமன்றத்தில் உள்ள முக்கியமான அரசியல்வாதிகள் என்று உணர்கிறார்.

அப்போது அவரைக் கைது செய்யும் போலீஸ், ஹோம்ஸைக் கைதுசெய்ய ஆணை பிறப்பித்த அந்த அமைச்சரிடம் அவரை நிறுத்துகிறது. அந்த அமைச்சர் ஹோம்ஸிடம் அத்தனை திட்டங்களையும் உளறிவிடுகிறார். அங்கிருந்து தப்பிக்கும் ஹோம்ஸ், வாட்ஸனையும் ஐரீனையும் அழைத்துக்கொண்டு, பாராளுமன்றத்துக்கு அடியில் உள்ள கழிவுநீர் நிலவரைக்கு வருகிறார். அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு கருவியைப் பார்க்கிறார். அந்தக் கருவியின் மூலம் விஷவாயுவைப் பாய்ச்சி, அனைத்து அரசியல்வாதிகளையும் கொல்வதே ப்ளாக்வுட்டின் திட்டம் என்று அறிகிறார்.

இந்தத் திட்டத்தை ஹோம்ஸ் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே படம்.

இம்முயற்சியை முறியடிப்பதோடு மட்டும் படம் முடிந்துவிடுவதில்லை. முடிவில் ஐரீனிடம் பேசும் ஹோம்ஸ், அவளை நியமித்த நபரின் பெயர் ப்ரொபஸர் மாரியாரிட்டி (ஹோம்ஸின் முக்கிய எதிரி; அதிபுத்திசாலி. அதே சமயம், படு ஆபத்தான நபரும் கூட) என்று அறிகிறார். அப்போது போலீஸ், அந்தக் கருவியுன் அருகில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டதை அவருக்குத் தெரிவிக்கிறது. மாரியாரிட்டிதான் இதைச் செய்தவர் என்றும், அந்தக் கருவியிலிருந்து ஒரு முக்கியமான பாகத்தை எடுத்துக்கொண்டு விட்டார் என்பதையும் உணர்கிறார் ஹோம்ஸ். மாரியாரிட்டி யார்? அவர் அந்தப் பாகத்தை வைத்து என்ன செய்ய்யப்போகிறார் என்ற விஷயங்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். இத்துடன் படம் முடிகிறது. எனவே, இரண்டாம் பாகம் உறுதி.

சரி. இப்பொழுது, இப்படத்தில் நான் அவதானித்த விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

முதலில், ஹோம்ஸின் கதாபாத்திரம். ஹோம்ஸின் அத்தனை கதைகளையும் படித்தவன் என்ற முறையில், எனக்கு இப்படம் மிகவும் திருப்தியை அளித்தது. கதைகளில் ஹோம்ஸை எவ்வாறு சித்தரித்திருக்கிறார்களோ, அதைத் துல்லியமாக இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். ஹோம்ஸ் ஒரு நல்ல குத்துச்சண்டை வீரர். வயலின் வாசிப்பதில் சூரர். நாள் கணக்கில் தனது அறையில் புகைப்பிடித்துக்கொண்டே யோசித்துக்கொண்டு இருப்பார். வெளியே வரவே மாட்டார். எந்த விஷயத்தையும் அவதானிப்பதில் ஹோம்ஸுக்கு மிஞ்சியவர் எவருமில்லை. எந்த விஷயத்தையும், அது கொண்டு சேர்க்க இருக்கும் அடுத்த விஷயத்தையும் தெரிந்துகொண்டே செய்வார். தற்செயல் என்ற ஒன்று, ஹோம்ஸின் அகராதியிலேயே கிடையாது. அவர் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு அர்த்தம் இருக்கும். இவையெல்லாம், ஹோம்ஸின் கதைகளின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளும் விஷயங்கள். இவைகளை, துல்லியமாக இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

ஹோம்ஸ் கண்டெடுக்கும் வாட்ச்சை வைத்து, அதில் உள்ள சிராய்ப்புகளைப் பார்த்த உடன், நேராக அடகுக்கடைக்குச் செல்வது ஒரு உதாரணம். இந்த விஷயம், அவரது ‘A Study in Scarlet’ கதையில் இருந்து எடுக்கப்பட்ட ஒன்று. வாட்ஸனிடம் அவரே, வாட்ச்சைப் பற்றியும், அதன் விஷயங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன என்றும், அது அவர்களுக்கு முன்னரே தெரிந்த ஒரு முறைதான் என்றும் இப்படத்தில் கூறுவது, இந்த ஸ்டடி இன் ஸ்கார்லெட் கேஸைப் பற்றித்தான்.

இதைப்போலவே, ஐரீன் அட்லர். இந்தப்பெண், ‘A Scandal in Bohemia’ கதையில் வரும் ஒரு கதாபாத்திரம். ஹோம்ஸின் சரித்திரத்திலேயே, அவரைத் தோற்கடித்த ஒரே நபர் என்ற பெருமை இவளுக்கு உண்டு (எப்படி என்று இந்தக்கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளவும்). அதனால், ஹோம்ஸ் அடிக்கடி அவரது கதைகளில் இவளைப் பற்றி மரியாதையாகக் குறிப்பிடுவார். இந்தக் கதாபாத்திரத்தை, புத்திசாலித்தனமாக இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல், வாட்ஸன். கதைகளில் மிகவும் அமைதியாக வரும் இந்தக் கதாபாத்திரம், ஒரு துடிப்பான ஆளாக இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆச்சரிய கரமான நல்ல விஷயம். ஹோம்ஸின் நிழல் போல் அவர் கூடவே இருக்கும் வாட்ஸன், பல தருணங்களில் அவரைக் காக்கிறார். நல்ல சித்தரிப்பு.

கதைகளில் வருவது போலவே, தான் எப்படி எல்லா விஷத்தையும் கண்டுபிடித்தோம் என்பதை இறுதியில் விளக்குகிறார் ஹோம்ஸ். கதைகளில், ஹோம்ஸுக்கு, தனது அவதானிக்கும் திறன் குறித்து ஒரு பெருமை உண்டு. அதை, மற்றவர்கள் முன் விளக்குவதில், அவருக்கு ஒரு சந்தோஷம். இதையும் இப்படத்தில் மிகச்சரியாகக் காட்டியுள்ளனர்.

ஹோம்ஸாக, நம்ம ராபர்ட் டௌனி ஜூனியர். மனிதர் ஹோம்ஸாகவே வாழ்ந்திருக்கிறார். இனிமேல், ஹோம்ஸை நினைத்தால், இவர் தான் அந்த நினைப்பிற்கு ஒரு வடிவம் கொடுக்கப்போகிறார். கச்சிதமாக இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்திப் போகிறார். வாட்ஸனாக ஜூட் லா. இவருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு திறமையான நடிகனை, இப்படம் சரியாக வெளிக்காட்டியுள்ளது. ஒரு துடிப்பான வாட்ஸனைக் கண் முன் நிறுத்துகிறார்.

இப்படத்தின் ஒரு முக்கியமான அம்சம், ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளைப் படிக்காமல் இப்படத்தைப் பார்த்தால், பல இடங்கள் புரியாமல் போகலாம். அவரது கதைகளை ஒரு காலத்தில் வெறித்தனமாகப் படித்ததனால், எனக்கு ஒரு பிரச்னையும் எழவில்லை. ஆனால், என்னருகில் அமர்ந்திருந்த ஒரு வெளிநாட்டுக்காரர், தனது மனைவியிடம் படம் முழுவதும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தார். அந்த அம்மணி, பொறுமையாக அவருக்கு விளக்கிக்கொண்டே இருந்தார். எனவே, அட்லீஸ்ட் ஓரிரு ஹோம்ஸ் கதைகளையாவது படித்துவிட்டு இப்படத்தைப் பார்ப்பது நலம். அவரது கதைகள் மிகச் சிறியவை. எனவே சுலபமாக அவைகளைப் படிக்க இயலும்.

இதோ இந்தச் சுட்டியில் அவரது அனைத்துக் கதைகளும் இருக்கின்றன. படித்துப் பாருங்கள். நான் சிபாரிசு செய்வது, ‘The Adventure of the Speckled Band’ . படு விறுவிறுப்பான ஒரு சிறுகதை இது.

இப்படத்தின் இசையைச் சொல்லாமல் இந்தக் கட்டுரையை முடிக்க இயலாது. இசையமைத்திருப்பது, Hans Zimmer என்ற சிங்கம். பின்னி எடுத்திருக்கிறது. குறிப்பாக, இதன் தீம் ம்யூசிக் அபாரம். வாவ்!

இப்படத்தில், கய் ரிட்சீயின் வழக்கமான ட்ரேட்மார்க் காட்சிகள் எதுவும் இல்லை. மனிதர் இப்படத்தை ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார். இன்னும் பல ஷெர்லாக் ஹோம்ஸ் படங்களைக் கண்டிப்பாக எடுக்கப் போகிறார்.

இது போதும் என்று நினைக்கிறேன். கட்டுரை ஏற்கெனவே மிகப்பெரியதாக வளர்ந்து விட்டது. உங்களுக்கு ஹோம்ஸைப் பிடிக்கும் என்றால், இப்படமும் பிடிக்கும். ஹோம்ஸ் கதைகள் படிக்காமல், அவரைப் பற்றித் தெரியாமல் இப்படத்தைப் பார்த்தால், சற்று புரியாமல் போக வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும், ஒரு முறை இதன் இசைக்காகவும், நடிப்புக்காகவும் பாருங்கள். பார்த்தபின், ஹோம்ஸ் மேல் ஒரு மரியாதையும் ஈர்ப்பும் தோன்றுவதை உணர்வீர்கள்.

ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தின் டிரைலர் இங்கே.

பி.கு – இப்படத்தை, பொங்கல் முடிந்து மறுபடியும் பார்க்கப்போகிறேன்.

  Comments

22 Comments

  1. படம் பார்க்கறதுக்கு முன்னாடி ரொம்ப ஹோம் வொர்க் பண்ண முடியலை கருந்தேள். முடிஞ்ச வரைக்கும் படிச்சேன்.

    எல்லாம் காலேஜில் சப்ஜக்டா வச்சி (ஆங்கில இலக்கியம்) இருந்த இண்ட்ரஸ்ட்டையும் கெடுத்துபுட்டாங்க.

    ரொம்ப சிலாகித்து, மொத்த கதையையும் எழுதிட்டீங்க. அது சரியா??????? ஹோல்ம்ஸின் கதைகளே.. அதன் ட்விஸ்ட்தானே?

    Reply
  2. வணக்கம் பாலா . . அய்யோ இந்த ஆங்கில இலக்கியத்துக்கு சிலபஸ் வேக்குரவங்கள புடிச்சி ஒதைக்கணும் . . 🙂 நல்ல கதைகள இப்புடி வெச்சி நமக்கு இன்ட்ரஸ்ட் போக வெச்சிருவாங்க . . 🙂

    அப்பறம், நானு முழுக்கதையையும் எழுதின காரணம், இந்தப் படத்துல ட்விஸ்ட் எதுவும் இல்ல. இதப் படிச்சிட்டு போய் படத்த பார்த்தாலும் நல்லாவே தான் இருக்கும்னு நெனைச்சேன் . .அது மட்டும் இல்லாம, நம்ம நண்பர்கள் இத பார்த்துட்டு, அவங்களுக்கு சில பகுதிகள் புரியலன்னு சொன்னங்க. . அதான் எழுதிட்டேன் . . இது ஒரிஜினல் ஹோம்ஸ் கதை இல்லைங்கறதும் இன்னொரு காரணம். . வழக்கமா முழுக்கதையையும் எழுத மாட்டேன் . .இனிமேலும் தான். . ஆனா, இத எழுதலாம்னுதோணிச்சி . .

    Reply
  3. //இப்படத்தின் ஒரு முக்கியமான அம்சம், ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளைப் படிக்காமல் இப்படத்தைப் பார்த்தால், பல இடங்கள் புரியாமல் போகலாம்.//

    நூறு சதவீத உண்மை. நான் படிக்காமல் போனதால் ஐந்து நிமிடத்தில் போர் :(. நல்ல விமர்சனம்.

    Reply
  4. கருந்தேள்,

    நானும் நேற்று தான் இந்த படத்தை பார்த்து முடித்தேன். விரைவில் நானும் ஷெர்லக் ஹோல்ம்ஸ் பற்றி ஒரு பதிவிடுகிறேன்.

    இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் புரபசர் எம் தான். அந்த வேடத்தில் நடிக்க இருப்பது யார் என்பதை அறிந்த உடன் ஆர்வம் இன்னமும் அதிகரித்து விட்டது. ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

    Reply
  5. என்னதான் இந்த படம் சிறப்பான தொழில்நுட்பத்துடன் எடுக்கப் பட்டு இருந்தாலும் பேசில் ராத்பொன் நடித்த (நாற்பதுகளில் வந்த) ஷெர்லக் ஹோம்ஸ் படங்களை பார்த்த திருப்தி இதில் இல்லை. ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரின் உதவியால் கருப்பு வெள்ளையில் வந்த பேசில் ராத்பொன் நடித்த பதினான்கு படங்களில் ஆறை புளுரே டிஸ்க்கில் வாங்கி விட்டேன். முடிந்தால், டவுன்லோட் கிடைத்தால் அதனை பாருங்கள். அட்டகாசமாக இருக்கும்.

    Reply
  6. நானும் ஷெர்லாக் ஹோம்ஸ் ரசிகன் தான் தலைவா!
    சிறுவயதில் லைப்ரரி மூலமாக தமிழாக்க கதைகளை படித்துள்ளேன். ஆனால் ஆங்கில மூலங்களை படிக்கும்மளவுக்கு புலமை போதாது. படத்தை பார்த்து விட வேண்டியது தான்.

    இரும்புக்கை மாயாவியின் மினி அதிரடி

    Reply
  7. கருந்தேலு,

    பிரம்மாதம் தம்பி. சும்மா பின்னுற.

    உங்கள் அண்ணன் பிச்சுவா பக்கிரி என்ன பண்றார்?

    Reply
  8. ஹவுண்ட் ஆஃப் பாஸ்கர்வில் படிச்ச உரிமையில் பார்த்திட வேண்டியதான்! ஆனா தெரியலைன்னாலும் படிச்ச ஒரு பொண்ணு கூட போனா நல்ல அனுபவம்னு உங்க பதிவுல தெரியுது!

    மதுரையில ஆச்சானு தெரியல. ஆயிருந்தாலும் பார்க்க கூடாதுனு தட உத்தரவு வீட்டில். கண்ணு வீங்கிருச்சு! 🙁

    Reply
  9. பிரமாதமா இருக்கு தேளு. நல்லா எளிமையா புரியற மாதிரி அசத்தல்…

    Reply
  10. Anonymous

    padam எதிர்பார்த்ததை விட குறைவு என்றுதான் பேச்சு.. இன்னும் பார்க்க வில்லை. ஆனால் நீங்கள் முழு கதையையும் சொல்லாமல் இருந்தாலதான் ஏதோ இருக்கிறது என்று ஒரு எண்ணம் இருக்கும்

    கேபிள் சங்கர்

    Reply
  11. @ கண்ணன் – ஆமாங்க . . பிரச்னை இல்ல உடுங்க . .இனிமே நல்ல படங்கள் எல்லாம் வருது.. ராபின்ஹுட் மாதிரி.. அதை எல்லாம் பார்த்துருவோம் . .

    @ விஷ்வா – 🙂 ஆனா அந்த நபர் நடிக்கப்போறதில்லன்னு சொல்றாங்களே . . எனிவே, அடுத்த படம் இன்னும் நல்லா இருக்கும் . எம் ஜி ஆரும் நம்பியாரும் போல . . 🙂

    பேசில் ராத்போன் நடிச்ச படங்கள பார்த்ததில்ல . .கண்டிப்பா பார்த்துடறேன் . .நமக்குத் தெரிஞ்ச கடை ஒன்னு இருக்கு., . .அங்க இது கட்டாயம் இருக்கும்.. வாங்கிடுறேன் . .

    @ லக்கி – அது போதும் . .பார்த்துட்டு சொல்லுங்கப்பு . . .

    @ வெடிகுண்டு வெங்கட் – வாங்கண்ணா வாங்க . நம்ம அண்ணன் பக்கிரி, இப்போதான் புழல்ல கம்பி எண்ணிகினு இருக்காரு . .நானு எஸ்கேப் ஆயிட்டேன் . .:) சீக்கிரமே அவரும் ஒரு வலைப்பூ ஆரம்பிப்பாருங்கண்ணா . . 🙂

    @ பப்பு – கொடும என்னன்னா, கோவிலையும் இன்னும் ரிலீஸ் ஆகல்ல . . நானு அங்கே நாலு நாலு பொங்கலுக்குப் போறேன் . .அங்கேயும் பாக்க முடியாது . . 🙁 . . உங்க கண்ணு இப்போ எப்புடி இருக்கு? சீக்கிரம் சரி பண்ணிக்குங்க . .

    @ அண்ணாமலையான் – வாங்க வாங்க . .நன்றிண்ணா . .

    @ சங்கர் – முதல்முறையா நம்ம பக்கம் வந்துருக்கீங்க . . ஆனா இப்புடி ஒரு குட்டு வெச்சிட்டீங்களே . . 🙂 ஏற்கெனவே சொன்ன மாதிரி, கதைய சொன்னதுக்கு காரணம், எல்லாருக்கும் புரியணும்னு தாண்ணா . . . நம்ம பசங்க இத பார்த்துட்டு, கொஞ்சம் புரியலன்னு சொன்னாங்க . . அதான் இப்புடி.. ப்ரீயா உடுங்க . . படம் ஷெர்லாக் ஹோம்ஸ் ரசிகர்களுக்கு ரொம்ப புடிக்குண்ணா . . . .

    Reply
  12. நண்பரே,

    படத்தைப் பார்த்த பின்புதான் உங்கள் பதிவைப் படிப்பதாக உள்ளேன். நண்பர்களின் கருத்துக்களிலிருந்து பின்னியிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.

    Reply
  13. படம் பார்க்க முடிவு செய்திருப்பதால், முதல் இரண்டு பாராவுடன் எஸ்கேப் …

    Reply
  14. @ காதலரே – பார்த்து விடுங்கள். உங்களுக்குக் கட்டாயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன் . .பார்த்துவிட்டு, இந்தப் பதிவைப் படியுங்கள். அதன்பின், உங்கள் கருத்தைப் பதியுங்கள் . . . 🙂

    @ பின்னோக்கி – 🙂 பாருங்கள். ஆனால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாக இங்க பதியுங்கள். . 🙂

    Reply
  15. நண்பா . . ப்ரீயா இருக்கும்போது, ரிலாக்ஸ்டா பாருங்க . . பார்த்துட்டு, உங்க கருத்த சொல்லுங்க . . பிடிச்சாலும் சரி . .பிடிக்கலேன்னாலும் சரி . . வோட்டுக்கு நன்றி நண்பா . .

    Reply
  16. டிவிடி வாங்கி வைச்சு ஊருல பார்க்க முடியல.. இனிமே டவுன்லோடானந்தா சுவாமிகள் கருணையில நல்ல ரிப்பை தேடிப் பிடிச்சு பார்க்கணும் 🙁

    Reply
  17. சென்ஷி . . இன்னுமா இத பாக்கல . . சீக்கிரம் பாரும் ஒய் !! (நாகேஷ் படத்த பார்த்தவுடனே இந்த மாதிரி ‘ஒய்’ அப்புடின்னு கமென்ட் போடணும்னு தோணிச்சி . . ஹீ ஹீ ) . . .

    Reply
  18. Padam padu mokkai.Ungal Pathivu arumai.

    Reply
  19. நான் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய, கதைகளைப் படித்ததில்லை.இருந்தாலும் படம் புரிந்தது, பிடித்தது.

    உங்கள் விமர்சனத்துடன் நானும் ஒத்துப்போகிறேன்.

    Reply
  20. மூச்சு வாங்க இந்த கட்டுரைய எழுதீர்கிங்க. மெய்யாலுமே நீங்க ரொம்ப எதிர்பார்த்து ஆசையா பார்த்த படம்தான்கறது தெரியுது… இந்த வருஷ கடைசில அடுத்த பகுதி வருது. அனேகமா இதையும் எதிர்பார்த்திட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறன்.

    Reply

Join the conversation