Sherlock Holmes 2:A Game of Shadows (2011) – Part 2

by Karundhel Rajesh January 4, 2012   English films

பாகம் ஒன்று – Sherlock Holmes 2: A Game of Shadows (2011)

சென்ற கட்டுரையில், பொதுவான ஷெர்லக் ஹோம்ஸின் குணாதிசயங்களையும், இத்திரைப்படத்தில் அவரை சரியான அளவில் சித்தரிக்கவில்லை என்பதையும், இன்னும் சில விஷயங்களையும் பார்த்தோம். இப்போது, இந்தத் திரைப்படத்தில் என்னென்ன தகவல்கள் ஹோம்ஸைப் பற்றி நமக்குச் சொல்லப்படுகின்றன என்பதையும், அவைகள் எந்தெந்தக் கதைகளில் வருகின்றன என்பதையும், திரைப்படத்தில் வரும் இதர கதாபாத்திரங்களைப் பற்றிய விரிவான தகவல்களையும், மேலும் சில விபரங்களையும் முடிந்தவரை சுவாரஸ்யமாகப் பார்க்க முயலலாம்.

ஷெர்லக் ஹோம்ஸ்: குணாதிசயங்கள்

ஷெர்லக் ஹோம்ஸ், பலவித உணர்வுகளின் கலவை. பொதுவாக, ஏதாவது கேஸ் ஒன்றைத் துப்பறிகையில், நாட்கணக்கில் உணவே அருந்தாமல், மிகத்தீவிரமாக விபரங்கள் சேகரிக்கும் பழக்கம் அவருக்கு உண்டு. அதேபோல், எதையாவது யோசிக்கையில், புகையிலையைப் புகைத்துக்கொண்டு, மணிக்கணக்கில் பேசாமல் இருக்கும் மனிதர் அவர். இதனாலேயே, தாழிடப்பட்டிருக்கும் அவரது அறையைத் திறந்துகொண்டுவரும் வாட்ஸன், அங்கே நிலவும் புகைமண்டலத்தைப் பார்த்து, ஹோம்ஸைப் பலமுறை திட்டிய நிகழ்ச்சிகள் உண்டு.

இதுதவிர, துப்பாக்கி சுடுவதிலும், குத்துச்சண்டையிலும், வயலின் வாசிப்பிலும் வித்தகரான ஹோம்ஸுக்குப் பெரிதும் உவகை தரக்கூடிய விஷயம் என்னவெனில், தனது கேஸ்களில், எந்தத் தடயமும் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கும் ஸ்காட்லான்ட் யார்ட் போலீசாரின் முன் நின்றுகொண்டு, தான் கண்டுபிடித்திருக்கும் விஷயங்கள் பற்றிப் பேசுவதே. போலீஸ் துறையினரின் இயலாமையை இப்படித் தீர்த்துவைப்பது ஹோம்ஸின் பிடித்தமான விளையாட்டு. அடிக்கடி இப்படி ஹோம்ஸுக்கு முன் அவமானம் அடைவது, லெஸ்ட்ரேட் என்ற இன்ஸ்பெக்டர்.

ஹோம்ஸின் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை, Sherlock தொலைக் காட்சி சீரீஸிலும் சரி, இந்தத் திரைப்படங்களிலும் சரி, சிறப்பாகவே காட்டியுள்ளனர். ஹோம்ஸின் மூளைக்குள் நடக்கும் படுவேகமான – துல்லியமான அனாலிசிஸ், படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு எப்படிப் புரியும்? Sherlock தொலைகாட்சி சிரீஸில், சம்பவம் நடந்த இடத்துக்கு ஹோம்ஸ் சென்றதுமே, அவரது மூளையில் பளிச்சிடும் விஷயங்களை, ஸ்க்ரீனிலும் காட்டுவார்கள். இதனால், பார்க்கும் ஆடியன்ஸ், ஹோம்ஸின் சிந்தனையைத் தொடர முடியும்.

அதேபோல், இந்தத் திரைப்படங்களில், ஒரு விஷயத்தை ஹோம்ஸ் யோசிப்பதை, மிகச்சிறப்பாகக் காட்டியிருப்பார்கள். எந்த விஷயமானாலும், அவற்றின் பல்வேறு பாதைகளில் ஹோம்ஸ் வேகமாகப் பயணித்து, ஒவ்வொரு பாதையின் முடிவையும் உடனடியாக அனலைஸ் செய்து, அவற்றில் சிறந்த முடிவைத் தேர்ந்தெடுத்து, அதனை செயல்படுத்துவார். இத்தனையும் ஒருசில வினாடிகளில் முடிந்துவிடும்.

உதாரணமாக, இந்த வீடியோவைப் பாருங்கள். இதில், மேலே சொன்ன ஹோம்ஸின் சிந்தனையோட்டம் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

தான் செய்யும் அசைவுகளுக்கு எதிராளியின் எதிர்வினை எப்படியிருக்கும் என்று கணித்து, ஒவ்வொரு ஸ்டெப்பாக மூளையிலேயே ஓட்டிப்பார்த்து, அதனை இம்மி பிசகாமல் செயல்படுத்தும் ஹோம்ஸின் ஜீனியஸ் இப்படிப்பட்டது.

இந்தக் காட்சியை விட அட்டகாசமான ஒரு காட்சி, இரண்டாம் பாகத்தில் உண்டு. ஒரு சண்டையில், ஹோம்ஸ் தனது மூவ்மெண்டுகளை இவ்வாறாக யோசிக்கிறார்.

First, pillage the nest. Clip wings. Then, blunt his beak. Crack eggs, a pinch of salt, a touch of pepper…additional seasoning required. Breakfast is served.

இதில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் ஒரே நொடியில் எப்படி நிறைவேற்றுகிறார் ஹோம்ஸ் என்பதைப் படத்தில் கண்டு களிக்கலாம். படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று.

சுருக்கமாக – தான் எடுக்கும் முடிவுகள் சர்வநிச்சயமாக சரிதான் என்பது ஹோம்ஸின் அசைக்கமுடியாத நம்பிக்கை. கர்வம் என்றுகூடச் சொல்லலாம்.

Mycroft Holmes – இரண்டாவது ஹோம்ஸ்

ஷெர்லக் ஹோம்ஸுக்கு ஒரு அண்ணன் உண்டு. அவரது பெயர், மைக்ராஃப்ட் ஹோம்ஸ். இங்க்லாந்தின் அரசில் முக்கியப் பங்கு வகிப்பவர். ஹோம்ஸுக்கும் மைக்ராஃப்ட்டுக்கும் உள்ள பிரதான ஒற்றுமை – மைக்ராஃப்ட்டும் சிறந்த மூளை உடையவர். ஹோம்ஸை விட புத்திசாலி. ஜீனியஸுக்கும் ஜீனியஸ். இருவருக்கும் உள்ள பிரதான வேற்றுமை – உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்து, தகவல்கள் சேகரிப்பது மைக்ராஃப்ட்டுக்குப் பிடிக்காத விஷயம். ஆகவே, ஒரு தகவல் கிட்டங்கியாக – ஒரு கம்ப்யூட்டராக செயல்படுவதே மைக்ராஃப்ட்டின் வேலை.

சில கேஸ்களில் ஹோம்ஸ், மைக்ராஃப்ட்டை கன்ஸல்ட் செய்ததுண்டு. இருக்கும் இடத்தை விட்டு அகலாத மைக்ராஃப்ட் கொடுக்கும் தகவல்கள், அந்த இடத்துக்கே சென்று புலனாய்வு செய்யும் அளவு துல்லியமாக இருக்கும். சரியாகவும் இருக்கும்.

மைக்ராஃப்டின் பழைய ஓவியம் ஒன்றை இணையத்தில் காண நேர்ந்தது. அதன்பின்புதான், ஷெர்லக் ஹோம்ஸ் பாகம் இரண்டில் ஸ்டீஃபன் ஃப்ரை (Stephen Fry) என்ற நடிகரை ஒப்பந்தம் செய்த மாயம் விளங்கியது. அச்சு அசலாக அந்த ஓவியத்தைப் போலவே இவர் இருப்பதை இங்கே காணலாம்.

இந்தப் படத்திலும் மைக்ராஃப்ட் ஷெர்லக்குக்கு உதவுகிறார். மறைமுகமாக. எப்படி? படத்தில் பாருங்கள். குறிப்பாக, க்ளைமேக்ஸ்.

Sebastian Moran – உலகின் துல்லியமான துப்பாக்கி வீரர்

ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் பிறவி வில்லனான ப்ரொபஸர் மோரியார்ட்டியின் நம்பகமான வலது கை, இந்த செபாஸ்டியன் மோரான். இங்க்லான்ட் ராணுவத்தில் சேர்ந்து, இந்தியாவிலும் ஆஃப்கானிஸ்தானிலும் பணிபுரிந்துவிட்டு, காயம் காரணமாக ராணுவத்தை விட்டு விலகி, மோரியார்ட்டியிடம் சேர்ந்து, அவரது தலையாய கொலையாளியாக மாறிப்போனவரே இந்த செபாஸ்டியன் மோரான். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் துல்லியமாகச் சுட்டு எதிரியை வீழ்த்தும் திறமை கொண்டவர்.

இந்தப் படத்தை ‘The Final Problem’ சிறுகதையை வைத்து எடுத்திருப்பதை இக்கட்டுரையின் முதல் பாகத்தில் கண்டோம் அல்லவா? அக்கதையில், இப்படத்தின் நிகழ்வுகள் அத்தனையும் நடந்துமுடிந்தபின்பு, தப்பித்துப்போய், அதன்பின் ஷெர்லக்கைக் கொல்வதே வாழ்க்கை லட்சியமாக வாழும் மனிதர் இவர். மிக ஆபத்தான மனிதர்.

இந்தத் திரைப்படத்தில், செபாஸ்டியன் மோரான் பல காட்சிகளிலும் வருகிறார். இறுதியில் தப்பிக்கவும் செய்கிறார். ஆகவே, அடுத்த ஷெர்லக் ஹோம்ஸ் படத்தில் இவர் பிரதான பங்கு வகிப்பார் என நம்புகிறேன்.

Professor James Moriarty – ஹோம்ஸின் ‘Other’

மோரியார்ட்டியைப் பற்றிய முதல் விவரணை, ஆர்தர் கானன் டாயலின் ‘The Final Problem‘ கதையில் வருகிறது. அக்கதையில், மோரியார்ட்டி, இங்க்லாந்தின் கிரிமினல்களுக்கெல்லாம் தலைவராக சித்தரிக்கப்படுகிறார். அவரது சாம்ராஜ்யத்தை ஹோம்ஸ் எப்படி அழிக்கிறார்; அதனால் ஹோம்ஸுக்கு நிகழும் ஆபத்து என்ன? என்பதைப் பற்றிய சிறுகதை அது. இக்கதையை கானன் டாயல் எழுதியது, ஹோம்ஸ் கதைகளை வரிசையாக எழுதிக்கொண்டிருந்த அலுப்பில் இருந்து விடுபடவே. ஆகவே, ஹோம்ஸுக்கு ஒரு எதிரியை சிருஷ்டித்த கானன் டாயல், அந்த இருவருக்கும் ஏற்ற முடிவினை இக்கதையில் அளித்தார். அது எப்படிப்பட்ட எதிர்வினையைக் கிளப்பியது என்றெல்லாம் ஹோம்ஸ் ரசிகர்கள் அறிவார்கள். அதனைப் பற்றிச் சொன்னால் இப்படத்தின் க்ளைமேக்ஸ் பற்றிச் சொல்லவேண்டியிருக்கும் என்பதால், இப்போது எதுவும் சொல்ல முடியாது.

மோரியார்ட்டியின் மீது ஹோம்ஸுக்கு இருந்தது, மரியாதை கலந்த எச்சரிக்கை உணர்வு. இந்தப் படத்தில் அது சரியாகக் காட்டப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் மோரியார்ட்டியை மூன்று முறை சந்திக்கிறார் ஹோம்ஸ். முதன்முறை சந்திக்கும்போது, வாட்ஸனைக் கொல்லப்போவதை ஹோம்ஸிடம் சொல்கிறார் மோரியார்ட்டி. இரண்டாம் முறை சந்திப்பதோ, மோரியார்ட்டியின் கைதியாக. அப்போதுதான் மோரியார்ட்டியின் திட்டமான உலகப்போரை உருவாக்குதல் ஹோம்ஸுக்குச் சொல்லப்படுகிறது. மூன்றாம் முறை இருவரும் சந்திப்பதுதான், மறக்கவே முடியாத இப்படத்தின் இறுதி நிமிடங்கள்.

இரண்டு ஜீனியஸ்கள் பொருதிக்கொள்வது எப்படி இருக்கவேண்டும் என்பதற்குச் சரியான உதாரணம் இப்படத்தின் க்ளைமேக்ஸ். இருவருக்குமே ஒவ்வொருவர்களின் அடுத்த ‘மூவ்’ அத்துப்படி. ஆகவே, இருவரும் ஒருவரையொருவர் வெல்ல முயற்சிப்பது அட்டகாசம். குறிப்பாக, இருவரும் ஆடும் செஸ்.

மோரியார்ட்டியின் கதாபாத்திரம், ஷெர்லக் ஹோம்ஸின் முதல் பாகத்தில் ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் (படத்தின் நடுப்பகுதி மற்றும் க்ளைமேக்ஸின் இறுதி நிமிடம்), முகம் தெரியாமல் வருவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம்.

Game of Shadows திரைக்கதை

பொதுவாகவே, ஹாலிவுட் படங்களில் ஒரு திரைக்கதை டெம்ப்ளேட் உண்டு. அதாவது, திரைப்படத்தின் பின்பாதியில் ஏதாவது நடக்க இருக்கிறது என்றால், அச்சம்பவத்தோடு தொடர்புடைய ஒரு விஷயத்தைப் படத்தின் முன்பாதியில் காட்டுவது. ஏனெனில், திடீரென்று ஒரு விஷயம் தொடர்பேயில்லாமல் நடக்கிறது என்பது அங்கே நடவாத காரியம். ஆகவே, முதலிலேயே ஒரு மிகச்சிறிய, முக்கியத்துவமே இல்லாத காட்சி ஒன்றில், பின்னால் நடக்க இருக்கும் பிரதான நிகழ்ச்சி ஒன்றோடு தொடர்புடைய சிறிய விஷயம் ஒன்று நடப்பதாகக் காண்பிப்பார்கள். அத்தனை ஹாலிவுட் படங்களிலும் இது தவறாமல் நடக்கும். அதேதான் இப்படத்திலும். இரண்டாவது பாதியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குத் தொடர்புடைய சிறிய நிகழ்ச்சிகள், படத்தின் முதல் பாதியில் வருகின்றன. அதேபோல், க்ளைமேக்ஸுக்குச் சற்று முன்பு, க்ளைமேக்ஸுக்குப் பெரிதும் தொடர்புடைய மிகச்சிறிய நிகழ்வு ஒன்றும் உண்டு. படம் பார்க்கும் நண்பர்கள் கவனிக்கலாம்.

படத்தின் திரைக்கதை, அலுக்காமல் நகர்கிறது. இருப்பினும், நான் கவனித்த ஒரே குறை, ஹோம்ஸை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜேம்ஸ்பான்ட் போலவே காட்டியிருக்கிறார் கை ரிட்சி. அது எனக்குப் பிடிக்கவில்லை. ஹோம்ஸ் துப்பறியும் விதம்தான் அவரது கதைகளுக்கு அழகு சேர்க்கும். முதல் படத்திலாவது சற்றுத் துப்பறிவார் ஹோம்ஸ். ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் ஹோம்ஸின் துப்பறியும் ஆற்றலைக் காட்டுவது மிகவும் குறைவே. இருந்தாலும், கதை நகரும் வேகம் அதனை மறக்கடிக்கச் செய்துவிடுகிறது.

திரைப்படம் பார்க்கச் செல்லும் நண்பர்கள், அட்லீஸ்ட் நான்கைந்து ஷெர்லக் ஹோம்ஸ் சிறுகதைகளாவது படித்துவிட்டுச் சென்றால், கட்டாயம் திரைப்படத்தோடு ஒன்ற முடியும். அவசியம் பாருங்கள்.

இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் பற்றி எழுத வேண்டும். படத்தை முதலில் பாருங்கள். அதன்பின் க்ளைமேக்ஸ் அனாலிசிஸ் வைத்துக்கொள்ளலாம். ஆகவே, விரைவில் மறுபடியும் ஷெர்லக் பற்றிப் பேசுவோம்.

  Comments

13 Comments

  1. சென்ற பாகத்திலேயே பின்னிட்டீங்க..இதுவும் சொல்லனுமா என்ன ?? இவரு எவ்வளவு பெரிய சினிமா ரசிகரா இருப்பாரு என்று ஒவ்வொரு பதிவிலையும் (நான் படிக்கின்ற) யோசிக்க வைக்கறீங்க..தோடரட்டும் தங்கள் பணி..நன்றிகள் பல..படம் பார்க்க முயற்சி செய்கிறேன்..

    Reply
  2. ஐயோ … படம் பார்க்கும் வெறியை இன்னும் ஏத்துறீங்களே பாஸ். இது உங்களுக்கே தகுமா? நான் ஏதாவது கமரா பிரிண்ட் ஆச்சு எடுத்து பார்க்கலாம்னு தோணுது. ஆனால் ஒரிஜினல் BRRIPல பார்த்தால் தியேட்டர் எஃபெக்ட் இல்லாட்டியும் ஒரு சின்ன ஆடியோ வீடியோ க்ளாரிட்டியாவது இருக்குமேன்னு தான் வெயிட் பண்ணுறேன்.

    நன்றி. அடுத்த அலசலுக்கு வெயிட்டிங்.

    Reply
  3. //இதில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் ஒரே நொடியில் எப்படி நிறைவேற்றுகிறார் ஹோம்ஸ் என்பதைப் படத்தில் கண்டு களிக்கலாம். படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று.//

    இதே விடயம், Sherlock series 2: 1st episode ல் வரும். The Women 😛 – kiss பண்ணும் போதும் வாட்சன் தேநீர் கோப்ாயை கீழே வைக்கும் நொடியில் அவர் எண்ணங்களை சிறப்பாகக் காட்டுவார்கள்.

    Reply
  4. /பொருதிக்கொள்வது/…..super sir…..

    Reply
  5. படம் பாக்காமல் என்ன சொல்வது………

    ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணி தகவல் அட்டகாசம்…

    // ஹோம்ஸை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜேம்ஸ்பான்ட் போலவே காட்டியிருக்கிறார் கை ரிட்சி. //

    போன பதிவு படிச்சப்ப இதுதான் தோணியது…கேப்டன் வாடை அடிக்குதேன்னு……… nevertheless, படம் விறுவிறுப்பா போனா சரிதான்….

    கய் ரிட்சி – ரிவால்வர்……ஒருவேள அந்த மாதிரி சைக்காலஜிகலா படத்த எடுத்து குத்து வாங்குனதுனால இந்த அணுகுமுறையில் எடுத்திருப்பாரோ…..(எனக்கு அந்த படம் ரொம்ப புடிச்சது)

    Reply
  6. வழக்கம்போலவே பின்னி பெடலத்துட்டீங்க! விவரணைகள் அத்துனையும் அருமை!எங்கே கிளைமாக்ஸ் பத்தி சொல்லுருவீங்கலோன்னு நினைச்சேன்! நல்ல வேளை! சீக்கிரம் எழுதுங்க அடுத்த பகுதியை! ஷெர்லாக் ஹோல்ம்ஸ் நாவல் அல்லது சிறுகதைகள் தமிழ்ல மொழிபெயர்ப்பு யாராவது பண்ணி இருக்காங்களா? தெரிஞ்சா சொல்லுங்களேன்! ஆங்கிலத்துல படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு! நெட்ல தேடுனேன்!ஆனா கெடைக்கல!

    Reply
  7. நண்பரே………நலமா……..தங்களை கீதப்ரியன் மேலதிகமாக குசலம் விசாரித்தார்……….மிகுந்த வேலைப்பளுவில் இருப்பதால் இணையம் பக்கமாக அவரால் வர இயலவில்லையாம்…..ஆனாலும்கூட, சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து படங்கள் பார்த்துள்ளார்…..மேலும் இளையராஜாவின் இன்னிசை மழையிலும் நனைந்துள்ளார்……இதுகுறித்து வெகு விரைவில் பதிவு ஒன்றை எழுதப் போவதாக கருணாநிதி மீது சூளுரைத்துள்ளார்….

    Reply
  8. @ குமரன் – நன்றி. புடிச்ச விஷயத்தை செய்யும்போது அது சுவாரஸ்யமா தானே இருக்கும்? அப்படியே ஏதாவது தவறுகள் / குறைபாடுகள் இருந்தாலும் சுட்டிக்காட்டுங்க. திருத்திக்கிறேன்.

    @ ஹாலிவுட் ரசிகன் – BR Rip வெயிட் பண்ணி அதையே பாருங்க 🙂 .

    @ சுபாஷ் – Sherlock இரண்டாம் சீரீஸின் விமர்சனம் வெகு விரைவில் வருகிறது இங்கே 🙂 . . தகவலுக்கு நன்றி நண்பா

    @ Elamparuthi – பார்த்துவிட்டு சொல்லுங்க

    @ @ கொழந்த – ரிவால்வர், இன்னமும் நான் பார்க்கல. வெகு விரைவில் பார்க்கப்படும். கீதப்ரியன் கூட நின்னு போட்டோ எடுத்து FB ல போடுங்க 🙂 .. அவரை சீக்கிரம் எழுதுவதை கண்டின்யூ பண்ண சொல்லுங்க. அவராண்ட பேசணும். சீக்கிரம் பேசுறேன்

    @ கணேசன் – ஷெர்லக் ஹோம்ஸ் நாவலான ‘ A study in Scarlet’ தமிழ்ல பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்ப்புல வந்திருக்கு. நெட்ல தேடிப்பாருங்க கிடைக்கலாம். க்ளைமேக்ஸ் பத்தி தனியா எழுதுவேன் 🙂

    Reply
  9. தேளு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ரொம்ப நாளு ஆச்சி.. வீட்ல சௌக்யமா?

    Reply
  10. @ அண்ணாமலையான் – நானு சின்னக்கொளந்தையா இருக்குறப்ப பதிவு போடுவீங்களே அவரா நீங்க? நல்லாருக்கேன். FB வாங்க

    Reply
  11. sir sathyam la parthen….sema… sema,…//க்ளைமேக்ஸுக்குச் சற்று முன்பு, க்ளைமேக்ஸுக்குப் பெரிதும் தொடர்புடைய மிகச்சிறிய நிகழ்வு ஒன்றும் உண்டு. படம் பார்க்கும் நண்பர்கள் கவனிக்கலாம்.//sir athu OXYGEN MATTER THANA…

    Reply
  12. @ Elamparuthi – அதேதான் 🙂 . . இன்னொரு விஷயம் – தயவு செஞ்சி ‘சார்’ வேணாமே. ராஜேஷ்ன்னே கூப்புடுங்க தலைவா

    Reply
  13. Arun

    பாகம் ஒன்று – Sherlock Holmes 2: A Game of Shadows (2011) link ila bro, kindly update the link

    Reply

Join the conversation