ஷெர்லாக் ஹோம்ஸ் (எச்சரிக்கை – இது திரைப்பட விமரிசனம் அல்ல !)

by Karundhel Rajesh December 23, 2009   English films

இதோ இந்த வாரம், ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ வரப்போகிறது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அவதாரை விட, நான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு படம் என்றால், அது இது தான். எனது சிறுவயதிலிருந்து, எனக்கு மிகப்பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று. ஆர்தர் கானன் டாயலின் அத்தனை ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளையும் படித்திருக்கிறேன் (மீண்டும் மீண்டும்). இக்கதைகளில் எதாவது ஒன்றைப் படிக்கத் தொடங்கினாலே, அந்த இருளும் பனியும் சூழ்ந்த இங்கிலாந்து நம் கண்களில் நிழலாடும். படத்துக்காகப் பல்லைக் கடித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஷெர்லாக் ஹோம்ஸைப் பற்றி ஒரு ட்ரைலர் கொடுக்கலாம் என்று இதை எழுதுகிறேன். அந்த அமர கதாபாத்திரத்தைப் பற்றி, எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி, சுவாரஸ்யமான தகவல்களைக் கொடுக்க முயல்கிறேன்.

ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், ஆர்தர் கானன் டாயலின் நண்பரான ஒரு மருத்துவரின் விளைவாக எழுதப்பட்டவை. அந்த மருத்துவர், மிகச்சிறு தடயங்களிலிருந்து, பெரிய உண்மைகளைக் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு அசாதாரணமான திறமையை உடையவர். இந்த மருத்துவரின் திறமைகளால் கவரப்பட்ட கானன் டாயல், அக்கதாபாத்திரத்துக்கு மேலும் பல குணங்களைக் கற்பனை செய்து, பல திறமைகளை உள்ளடக்கியதாக வடிவமைத்தார்.

முதன்முதலில் ஹோம்ஸ் அறிமுகமான கதை, ‘எ ஸ்டடி இன் ஸ்கார்லெட்’ என்ற நாவல். இக்கதை, டாக்டர் வாட்ஸன் என்ற ஒருவர், இந்தியாவிலிருந்து திரும்பி, லண்டனுக்கு வரும் சமயத்தில், அவராலேயே சொல்லப்படுகிறது. அவர், லண்டனில் தங்குவதற்கு ஒரு அறை தேடிக்கொண்டிருக்கும் வேளையில், அவரது மற்றொரு நண்பர், ஒரு இடத்தில் ஒரு வீடு காலியாக இருப்பதாகவும், ஆனால் அங்கு தங்க விரும்பும் ஒரு நபர், தன்னிடம் போதிய பணம் இல்லாத காரணத்தால், வேறு யாருடனும் அறையைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் சொல்கிறார். அந்த ‘நபரை’ சந்திப்பதற்காக இருவரும் அவரைத்தேடி, அவர் பணிபுரியும் ஒரு லேபரட்டரிக்குச் செல்கிறார்கள். இவர்கள் உள்ளே நுழையும் வேளையில், லேபரட்டரிக்கு உள்ளிருந்து ஓடிவரும் ஒரு கெச்சலான, உயரமான நபர், வெற்றிக்களிப்புடன் வாட்ஸனின் நண்பரிடம், தான் ஒரு ரசாயனத்தைக் கண்டுபிடித்திருப்பதாகவும், ரத்தக்கறைகளை மற்ற கறைகளில் இருந்து தரம்பிரிக்க அது மிகவும் உதவும் என்றும் சொல்கிறார்.

அந்த நபர் தான் ஷெர்லாக் ஹோம்ஸ்.

வாட்ஸனும் ஷெர்லாக் ஹோம்ஸும் சந்தித்துக்கொள்கின்றனர். ஹோம்ஸுக்கு வாட்ஸனை மிகவும் பிடித்துப்போகிறது. இருவரும் அந்த வீட்டுக்குக் குடிபோகின்றனர். அந்த இல்லம்தான், இன்னும் பல லட்சக்கணக்கான வாசகர்களுக்கு நன்கு நினைவிருக்கும் ஒரு வீடு – 221 பி பேக்கர் தெரு.

இங்கு குடிவந்த சில நாட்களிலேயே, வாட்ஸன் ஹோம்ஸைப் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறார். அதை, அவர் வாயாலேயே கேட்போம்:

“ஹோம்ஸின் உயரம் – உறுதியாக ஆறடிக்கு மேல். ஆள் படு ஒல்லியாக இருப்பதனால், இன்னும் வேறு உயரமாகத் தெரிகிறார். பல விஷயங்களில் படு கூர்மையான அறிவு உடையவரகத் தெரிகிறார். எந்த மனிதனும், தனக்கு உறுதியான ஒரு ஆதாயம் இருக்கிறது என்று தெரிந்தால் ஒழிய, சில துறைகளில் இத்தனை கூர்மையான அறிவை வளர்த்துக்கொள்ள மாட்டான்.

ஆனால் அதே நேரத்தில், அவரது அறிவைப்போலவே, அவரது அறிவின்மையும் ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம். தற்கால இலக்கியத்திலோ, அரசியலிலோ அவருக்கு ஒரு சிறிய அளவு பரிச்சயம் கூட இல்லை. அவருக்கு, நம்முடைய சூரியக்குடும்பத்தைப் பற்றிக்கூடத் தெரிந்திருக்கவில்லை. கோப்பர்நிகஸ்ஸின் தியரியைப் பற்றி நான் அவரிடம் பேசியபோது, அதைப்பற்றிய சிறிய அளவு அறிவு கூட அவரிடம் இல்லாதது குறித்து, மிரண்டு போனேன். பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற அடிப்படை உண்மை கூடத் தெரியாத ஒரு மனிதனை நான் அன்று தான் பார்த்தேன்’.

இவ்வாறு செல்கிறது அவரது ஆராய்ச்சி. மேலும், ஹோம்ஸைப்பற்றிய அவரது ஆராய்ச்சியின் முடிவை அவர் இவ்வாறு தருகிறார்.

  1. இலக்கிய அறிவு – பூஜ்யம்
  2. தத்துவம் – பூஜ்யம்
  3. வானசாஸ்திரம் – பூஜ்யம்
  4. அரசியல் – மிகக்குறைந்த அறிவு
  5. தாவரவியல் – தோட்டக்கலையைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், ஓபியம், விஷச்செடிகள் போன்ற விஷயங்களில், அபரிமிதமான அறிவு உண்டு.
  6. மண்ணியல் – நல்ல அறிவு உண்டு. பலவிதமான இடங்களின் மண்ணைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.
  7. ரசாயனம் – பிரமிக்கத்தக்க அறிவு.
  8. அனாட்டமி – கச்சிதமான அறிவு.
  9. குற்றவியல் – அளவுக்கதிகமான அறிவு. நாட்டில் நடந்த அத்தனை குற்றங்களையும் மனிதர் தெரிந்துவைத்திருக்கிறார்.
  10. வயலின் நன்றாக வாசிக்கிறார்.
  11. ஆசாமி ஒரு நல்ல குத்துச்சண்டை வீரர் கூட. கத்திச்சண்டையும் நன்றாகத் தெரிகிறது.
  12. பிரிட்டிஷ் சட்டத்தைப் பற்றிய கூர்மையான அறிவு உண்டு.

(இதை, ஸ்டடி இன் ஸ்கார்லெட் நாவலிலிருந்து கஷ்டப்பட்டு எழுதினேன். அப்புறம் பார்த்தால், விக்கியிலேயே இது இருக்கிறது !!)

இத்தனை ஆராய்ச்சிக்குப் பிறகும், ஹோம்ஸின் தொழில் என்ன என்று வாட்ஸனுக்குத் தெரிவதில்லை. மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்.

ஒரு மனிதன், இத்தனை முரண்பாடுகளின் மூட்டையாக இருப்பதை அவர் இப்போதுதான் காண்கிறார். அந்த ஆச்சரியம் வேறு அவருக்கு.

சிலநாட்களுக்குப் பிறகுதான், ஹோம்ஸ், தன்னைப்பற்றி வாட்ஸனுக்குப் புரிய வைக்கிறார். தான் ஒரு துப்பறிவாளர் என்றும், தன் தொழிலே தனது திறமைகளைச் சார்ந்துதான் இருக்கிறது என்றும் உணர்த்துகிறார்.

அதன்பின் ஆரம்பிப்பதுதான் இந்த நாவலின் முக்கியமான விஷயமான ஒரு கொலை. ஷெர்லாக் ஹோம்ஸின் நிழல் போல் அவர் கூடவே இருக்கும் வாட்ஸன், எவ்வாறு ஹோம்ஸ் அத்தனை தடயங்களையும் கண்டுபிடித்து, கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பதை, படு சுவாரஸ்யமாக சொல்லும் ஒரு நாவல் இது.

இக்கதையிலிருந்து, ஹோம்ஸ் பிரபலமாக ஆரம்பித்தார். மொத்தம் ஐம்பத்தி ஆறு சிறுகதைகளும், நான்கு நாவல்களும், கானன் டாயலினால் எழுதப்பட்டன.

இவரது அத்தனை கதைகளும், யாரோ ஒருவர் ஹோம்ஸை நாடி வருவதிலிருந்து தொடங்கும். அவர், தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தினால், தான் மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருப்பதை ஹோம்ஸுக்கு சொல்வார். அதனைத் தொடர்ந்து, ஹோம்ஸ் துப்பறியத் தொடங்குவார். அக்கதையின் கடைசி அத்தியாயம் வரையிலும், வாட்ஸனோடு நாமும் சேர்ந்து குழம்பிக்கொண்டிருப்போம். கடைசியில், ஹோம்ஸ், வாட்ஸனைப் பார்த்து, ஒரு கமெண்ட் அடித்துவிட்டு, ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கத் தொடங்குவார். அப்போதுதான் அவரது ஜீனியஸைப் பற்றி நாம் புரிந்து கொள்வோம். தடயம் நம் கண் முன்னர் இருக்கும். ஆனால், நாம் யோசிக்காத ஒரு புதிய கோணத்தில் அத்தடயத்தை அணுகி, அந்தக் கேஸைத் தீர்த்துவைப்பது, ஹோம்ஸின் பாணி.

அதுமட்டுமல்லாமல், மாறுவேடம் பூணுவதில், இவர் ஒரு கில்லாடி. நினைத்துப்பார்க்க முடியாத வேடங்களிலெல்லாம் சென்று, உளவறிந்துவருவது இவர் பாணி. வாட்ஸனே பல முறை இவரைப் பார்த்தும், அடையாளம் தெரியாமல் திகைத்திருக்கிறார்.

ஆனால், ஹோம்ஸுக்கும் மிகக்சில சமயங்களில் அடி சறுக்கி விடுகிறது. ஒரு கேசின் போது, ஒரு பெண் இவருக்கு வெற்றிகரமாக ‘டேக்கா’ கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறாள். அதிலிருந்து, எந்தப்பெண்ணையும் அலட்சியப்படுத்தும் ஹோம்ஸின் குணம் மாறுகிறது. (இந்தப்பெண்தான் ஷெர்லாக் ஹோம்ஸ் திரைப்படத்திலும் வருகிறார் என்பது கொசுறுச் செய்தி).

ஹோம்ஸுடன் மோதும் வில்லனின் பெயர் மருத்துவர் மாரியாரிட்டி (அடி மோனை.. ஹி ஹி ). ஒரு சமயம், தொடர்ந்து ஹோம்ஸ் கதைகளாக எழுதிக்கொண்டிருந்த கானன் டாயலுக்கு சலிப்பு ஏற்பட்டு, ஹோம்ஸும் மாரியாரிட்டியும் ஒரு மலையுச்சியில் சண்டை போடுவது போலும், அதில் ஹோம்ஸ் மலையிலிருந்து தள்ளப்பட்டு இறந்துவிடுவது போலும் எழுதிவிட்டார் (‘தி அட்வென்சர் ஆஃப் த ஃஃபைனல் ப்ராப்ளம்’). அவ்வளவு தான்! மக்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். மிரண்டுபோன கானன் டாயல், மறுபடி ஹோம்ஸை உயிர்ப்பிக்க நேர்ந்தது (‘தி அட்வென்ச்சர் ஆஃப் த எம்ப்டி ஹௌஸ்’).

ஹோம்ஸின் பல கதைகள், நம்மையே முடியைப் பிய்த்துக்கொள்ள வைக்கும். ஆனால் கடைசியில் ஹோம்ஸ் விளக்கும்போது, ‘அடங்கொக்கமக்கா. .இவ்ளொவ் சுளுவான மேட்டரா இது?’ என்று ஒரு உணர்ச்சியும் வரும்.

எனக்கு மிகவும் பிடித்த ஹோம்ஸின் கதை, ‘த அட்வென்ச்சர் ஆஃப் த ஸ்பெக்கிள்ட் பேண்ட்’ என்பது. இக்கதையைப் படித்த எனக்கு, பாதிக்கதையில் புல்லரித்து, மயிர்க்கால்கள் குத்திட்டு விட்டன (வேறு என்ன.. பயம் தான்). விட்டால் அலறியே இருப்பேன். அதேபோல், ‘த ஹௌண்ட் ஆஃப் த பேஸ்கர்வில்’ என்ற நாவலும், குறிப்பிடத்தகுந்த ஒன்று (பலபேர் இதை ஆங்கிலத் துணைப்பாடத்தில் படித்திருக்கிறோம்).

எனது சிறுவயதில், பைகோ கிளாஸிக்ஸ் என்ற அருமையான படக்கதை ஒன்று வந்துகொண்டிருந்தது – பூந்தளிர் குழுமத்திலிருந்து (பூந்தளிரை மறக்க முடியுமா? அதைப்பற்றி ஒரு பதிவே எழுதலாம்!!). அதில், பல உலக இலக்கியங்கள் வரும். அருமையான சித்திரங்களோடு. டாம் சாயர், ஹக்கிள்பெரிஃபின், கிட்நாப்பெட், செண்டாவின் கைதி, ட்ரஷர் ஐலாண்ட், ரோமியோ ஜூலியட், மேன் இன் த அய(ர்)ன் மாஸ்க் ஆகிய அருமையான புத்தகங்கள் எனக்கு அறிமுகமானது அதன் மூலமாகத்தான். அதில்தான் ஹௌண்ட் ஆஃப் த பேஸ்கர்வில்லையும் படித்தேன்.

அதே நேரத்தில், நமது மினி லயனில், ஷெர்லாக் ஹோம்ஸைக் கிண்டலடித்து, ஷெர்லாக் ஷோம்ஸ் என்ற ஒரு கதையும் வந்தது. அதுவும் பயங்கரக் காமெடிக் கதை.

மொத்தத்தில், ஷெர்லாக் ஹோம்ஸ் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம். இப்படத்தின் டிரைலரைப் பார்த்தேன். அதில், ஹோம்ஸ் ஒரு ஜாலியான ஆளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு டிபிக்கல் கய் ரிட்சி படமாக அமைந்து, நம் அனைவரையும் மகிழவைக்கப்போகிறது என்று நினைக்கிறேன். இந்த வெள்ளி இந்தியாவில் ரிலீஸானால், பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுகிறேன்.

  Comments

23 Comments

  1. thala
    doordarshanil munbu veliyaana Byomkesh bakshi thodarum.
    Malayathil cinemavil veliyana CBI diary kurippu anaithhthu paagangalum idhan thaluvalil avarar paaniyil vandhavai. adhu poga namma tamil Ganesh vasanth charaters idhota thazhuval nnu kelvip pattaen . padichadhilla , neenga yenna solreenga

    Reply
  2. ட்ரெய்லர போட்டுட்டீங்க.. படம் வரட்டும், பாத்துட்டு எழுதுங்க..

    Reply
  3. @ ஸ்ரீநி.. Byomesh Bakshi பார்த்ததில்ல. . ஆனால், ஒரு வகைல பார்த்தா, உலகத்துல எந்த ஒரு துப்பறியும் கதை எழுதினாலும், அதுல ஹோம்ஸின் பாதிப்பு இல்லாம எழுதுறது கஷ்டம்னு தோணுது. ஏன்னா, இப்போ வர அத்தனை பேரும் கண்டுபுடிக்குறதை, அவரு ரெண்டு நூற்றாண்டு முன்னாடியே கண்டுபுடிச்சிட்டாரு. . நம்ம கணேஷ் வசந்த்ல, கணேஷ் ஓரளவு ஹோம்ஸ் மாதிரி தான். மூளைய நம்புற ஆளு. அந்தக் கதைகளும் நல்லா இருக்கும். சி பி ஐ டைரி குறிப்பு மட்டுமில்ல.. இன்னும் எத்தனை படம் எடுத்தாலும், தலைவர் ஹோம்ஸின் பாதிப்பு கண்டிப்பா இருந்தே தீரும். . (நம்ம சுபா கூட ஷெர்லாக் கமல்குமார்னு ஒரு கேரக்டர் அறிமுகப்படுத்தினாங்க. . )

    @ அண்ணாமலையான் – விமர்சனம் வரப்போறது உறுதி.. ஆனா எப்போன்னு தெரியலையே . . . (சிவாஜி பாணியில் படிக்கவும்) . . . 🙂

    Reply
  4. Guy Ritchie படமாச்சே. நானும் ரொம்ப ரொம்ப ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறேன்.. 🙂

    Reply
  5. @ சரவண குமார் – படம் பட்டைய கிளப்பப் போகுதுன்னு நினைக்கிறேன். . . 🙂 பார்த்துட்டு சொல்லுங்க. .

    Reply
  6. நானும் காத்திருக்கேன்… இங்க எப்போ டி.வி.டி வரும்னு…

    Reply
  7. ‘த ஹௌண்ட் ஆஃப் த பேஸ்கர்வில்///
    படிச்ச ஒரே கதை. அவரோட துப்பறியும் திறமையை சாதாரணமா இல்லாம, ஏதோ ஈ.எஸ்.பி ரேஞ்சுக்கு காட்டியிருப்பாங்க.

    கய் ரிட்சியா? மூணு கேங் வச்சு ரெண்டு கேங்க தீத்து கட்டிடுவாரே. எனக்கு அவரப் பிடிச்சது.

    Reply
  8. @ பேநா மூடி – ஹி ஹி . . நானும்தாங்ணா. . . .(ரகசியமா…. )

    @ பப்பு – hound கத, படிக்க சுவாரஸ்யமா இருக்கும்.. ஆனா ஈ எஸ் பி மாதிரி எதுவுமே அதுல வராதே.. ஒருவேளை, அத பேஸ் பண்ணி எடுத்த படத்துலையோ இல்ல டிராமாலயோ அந்த மாதிரி காட்டிருப்பாய்ங்களோ . . .

    கை ரிட்சி.. ஆமா.. நீங்க சொன்ன அதே மாதிரி ஆள் தான் 🙂 . . . அவர நல்லாவே புரிஞ்சி வெச்சிருக்கீங்க . . 🙂

    Reply
  9. ஹி.. ஹி.. மூணு படம் பாத்திருக்கேன்ல. lock stock and two smoking barrels, snatch, rocknrolla(இது ஒரு ட்ரைலாஜி ஆக சாத்தியகூறுகள் உண்டாம்).

    ஈ.எஸ்பி நு சொன்னது ஒரு வகையான நம்ப முடியாத அளவு எக்ஸ்ட்ராடினரி டிடக்‌ஷன் பவர் உண்டு என்ற தொனியில் சொன்னேன்.

    Reply
  10. @ பப்பு – அமாம். அது சரிதான். . ரொம்ப எக்ஸ்ட்ரார்டினரியான திறமை அவருக்கு இருக்குறமாதிரிதான் அவரு கதைகளும் இருக்கும்.. ஆனா கடைசில அவரு எக்ஸ்பிளைன் பண்ணும்போது ரொம்ப லாஜிக்கலா இருக்கும். . . இந்தப்படத்துல எப்புடி காமிக்குராங்கன்னு பார்ப்போம். .

    @ சரவணக்குமார் – நன்றி… 🙂 மீண்டும் வருக . .

    Reply
  11. nanum intha padathukku waiting pa 🙂

    Reply
  12. satyam la trailer pahen pattaya kelapputhu

    Reply
  13. ///புல்லரித்து, மயிர்க்கால்கள் குத்திட்டு விட்டன///

    அடடே.. உங்களுக்குமா!! ஆனா.. எனக்கு வேற ரீசன்!! ப்லாக் வந்து பாருங்க தெரியும்! 🙂 🙂

    ஹி.. ஹி.. ஹி.. நாளைக்கு நம்ம ஏரியாவுக்கு வந்துடுங்க… நம்மாளைப் பத்தி படிக்க! 🙂

    Reply
  14. @ subash – பார்த்துருவோம்… சீக்கிரமே 🙂

    @ DHANS – அமாம்.. டிரைலர் சும்மா படம் காட்டுது . . .:)

    @ பாலா – இப்போதான் படிச்சி முடிச்சேன் . . 🙂 அதுக்கப்புறம்தான் உங்க கமெண்ட பார்த்தேன் . . ஹா ஹா . . சரியான தமாசு விமர்சனம் . .பின்னிட்டிங்க . . .!! ஷெர்லக் ஹோம்ஸ் பத்தின உங்க விமர்சனத்துக்காகத்தான் வெய்டிங் . . . [ஏன்னா இங்க ரிலீஸ் நாளைக்கி இல்ல . . . . :-)]

    Reply
  15. இந்தப் படத்துல இந்த ஆள காமெடி, கூத்து, பொம்பளன்னு குஜால்டியா மாத்தீட்டாங்களாம்!

    Reply
  16. @ பப்பு – அது !! அங்க நிக்குறாரு நம்ம கய் ரிட்சி . . 🙂 அப்ப படம் ஜாலிலோ ஜிம்கானா தான் !!! 🙂

    Reply
  17. நண்பரே,

    கய் ரிட்சி, ராபர்ட் டவுனி ஜீர்,ஜூட் லோ என அட்டகாசமான கூட்டணி. ட்ரெயிலரே ஸ்டைலில் நிரம்பி வழிகிறது. இங்கு பிப்ரவரிதான் ரீலிஸ். பார்த்தே தீருவேன்.

    உங்கள் பதிவு அட்டகாசமாக இருக்கிறது. பாராட்டுக்கள் நண்பரே.

    Reply
  18. Anonymous

    Sherlock Homes very nice movie.. must watch!!!!

    – Kirikamal

    Reply
  19. Oh.. Super. Thanks for introducing this movie.

    Toto.
    -www.pixmonk.com

    Reply
  20. @ காதலரே – நீங்கள் சொல்வது முற்றிலும் சரி! டிரைலர் மிகவும் ஜாலியாக இருக்கிறது . . .:) இங்கும் இப்போதைக்கு வெளிவராது போல் இருக்கிறது. . . பார்த்து விடுவோம்!! 🙂 உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே . . .

    @ கிரிகமல் – ஓ சூப்பர் !! பார்த்தாச்சா . . 🙂

    @ Toto – 🙂 பார்த்துட்டு எப்புடின்னு சொல்லுங்க . . .

    Reply
  21. வாவ்..அருமையான டிரைலர்! நன்றி!!

    Reply

Join the conversation