Ship of Theseus (2013) -English

by Karundhel Rajesh August 18, 2013   world cinema

நமது சமுதாயத்தில், ‘நல்லது’ செய்பவர்களுக்கும், அவர்களின் பார்வையில் சும்மா இருந்து வாழ்க்கையை ‘வீணடிப்பவர்களுக்கும்’ இடையே எப்போதுமே விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கும். இங்கே இந்த இரண்டு வார்த்தைகளையும் கோட்ஸினுள் கொடுத்திருப்பதற்குக் காரணம் உண்டு. சமுதாயத்துக்கான நாம் நல்லது செய்கிறோம் என்ற எண்ணம் மிகவும் போதை தரக்கூடியது. அந்த எண்ணத்தில் சிக்கிக்கொண்டுவிட்டால் அது நம்மை சிறுகச்சிறுக அரிக்க ஆரம்பித்து, ஒரு நாள் முற்றிலும் அழித்து விடும். இதற்கு மிகச்சில விதிவிலக்குகளே உண்டு. கூடவே, இந்த எண்ணம், இந்த நபர்கள் தங்களைப்போல் இப்படியெல்லாம் சமுதாயத்தின் மேன்மைக்காக தியாகம் செய்யாமல் தான் பாட்டுக்கு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் நபர்களின் மீது விமர்சனங்கள் வைக்கவும் காரணமாக இருக்கும். அந்த நபர்கள் பாவம் அன்றாட வாழ்க்கையில் ஆயிரத்தெட்டு உளைச்சல்களுக்கு நடுவே தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற உழைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களிடம் போய் ‘வாய்யா.. இந்த சமுதாயத்துக்கு உழைச்சி அவங்களை முன்னேற்றலாம்’ என்று சொன்னால் பீதி அடைந்து நம்மைவிட்டு ஓடத்தான் செய்வார்கள்.

ஆனால், வாழ்க்கை எப்படிப்பட்டது? ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் மீது ஒவ்வொரு கருத்து இருக்கிறது. சிலர் நிஜமாகவே சமுதாயத்துக்கு தன்னால் இயன்றதை செய்யக்கூடும். சிலர் மனதார வாழ்க்கையை அவர்கள் பாணியில் ரசித்து மகிழக்கூடும். இந்த இரு சாராரில் யார் மேல்? யார் கீழ்?

Ship of Theseus படத்தில் இந்தக் கேள்வியை நவீன் என்ற கதாபாத்திரம், தனது பாட்டியை நோக்கிக் கேட்கிறது. அவனது பாட்டி, ஒரு களப்பணியாளர். மக்களுக்காக உழைப்பவர். அவரது கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அங்கிருக்கும் தனது பேரன் நவீனிடம் பேசுகிறார். இயல்பான பேச்சினிடையே இருவரின் எண்ணங்களும் மோதுகின்றன. பாட்டி, தனது வாழ்க்கை உபயோகமாக கழிந்ததைப் பற்றி சொல்ல, நவீனுக்கு கோபம் வருகிறது. ‘நான் சம்பாதிக்கிறேன். குடிக்கிறேன். வாழ்க்கையை அனுபவிக்கிறேன். என் பார்வையில் யாருக்கும் பிரச்னையின்றி என் காலம் சென்றுகொண்டிருக்கிறது. அப்படியென்றால் உன் பார்வையில் நான் ஒன்றுக்கும் உதவாதவன் தானே? ஊர் ஊராக போய் ’ஆணுறை அணியுங்கள்’ என்று கோஷம் இட்டாயே? அவர்கள் யாராவது நீ சொல்வதைக் கேட்டிருந்தால் இந்திய மக்கள்தொகையான ஒரு பில்லியன் கொஞ்சமாவது குறைந்திருக்கும்தானே? ஏன் அது நடக்கவில்லை?’ என்று பாட்டியை நோக்கி கத்துகிறான். இருவரில் யாருமே தவறாகப் பேசவில்லை என்பது அந்தக் காட்சியில் தெரியும்.

இன்னொரு காட்சி. மைத்ரேயர் ஒரு சாது. ஆனால் மட்டையடி ஆன்மீகம் பேசுபவர் அல்ல. மிகவும் ப்ராக்டிகலாக ஆன்மீகத்தையும் வாழ்க்கையையும் அணுகுபவர். இவர், மிருகங்களின் மீது தங்களது மருந்துகளை பரிசோதனை செய்யும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அப்போது அது சம்மந்தமாக தனது வக்கீலுடன் பேசும்போது, அவரது ஜூனியரான ‘சார்வாகன்’ என்ற வக்கீலின் பேச்சு அவருக்குப் பிடித்துப்போகிறது. அதனால் அடிக்கடி சார்வாகனுடன் பேசுகிறார்.

’சார்வாகன்’ என்ற பெயர், இந்திய ஆன்மீகத்தில் பிரபலம். பழங்கால இந்தியாவில் ‘சார்வாக மதம்’ என்றே ஒரு மதம் இருந்திருக்கிறது. இந்த மதத்தின் அடிப்படை தத்துவம் – Hedonism என்று அழைக்கப்படும் இன்பம் துய்த்தல். அதாவது, ’கடவுள் என்பவன் இல்லை. மறுபிறப்பும் இல்லை. இந்த வாழ்க்கை ஒன்றே உன் கையில் இருக்கும் வஸ்து. எனவே இஷ்டத்துக்கு அனுபவி. இன்பத்தில் திளைத்து பேரின்பம் அடை’ என்று போதித்த மதம் அது. நாஸ்திகர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பண்டைய காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான சார்வாகர் என்பவர் தொடங்கிய மதம் இது (பள்ளியில் ‘தெய்வத்தின் குரல்’ படித்தபோது தெரிந்துகொண்ட விஷயம். படத்தில் ‘சார்வாகன்’ என்ற பெயர் வந்ததுமே அதன் முக்கியத்துவம் விளங்கிவிட்டது).

சார்வாகனுடன் மைத்ரேயர் பேசும்போது, சார்வாக மதத்தின் ஆணிவேரான Hedonism பற்றியும் existentialism பற்றியும் Nihilism பற்றியுமே சொல்கிறார். இந்தப் பெயர்களும் அப்படியப்படியே அந்த வசனத்தில் அவர் சொல்வதாக வருகின்றன. ஆனால் இதெல்லாம் பயங்கர அலுப்பான விஷயங்களாக இல்லாமல், மிகவும் சுவாரஸ்யமான முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன. எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்பது வாழ்க்கையின் பிரச்னைகள், சந்தோஷங்கள் மற்றும் இன்னபிற விஷயங்களுக்கு இடையே மனித வாழ்வு எப்படி செல்கிறது என்பதை வினவுகிறது. ஹெடோனிஸம் என்ன என்பதை மேலே பார்த்துவிட்டோம். இன்பத்தின் உச்சத்தை வாழ்க்கையில் அடைவது. நிஹிலிஸம் என்பது, வாழ்க்கையில் எந்த மேன்மையும் இல்லை – அது ஒரு தானாக அமைந்த விஷயம் என்றும், வாழ்க்கையே அர்த்தமற்றது என்றும் சொல்வது. எக்ஸிஸ்டென்ஷியல் நிஹிலிஸம் என்ற ஒரு விஷயமும் உண்டு.

சார்வாகன், தன் வாழ்க்கையை தன் இஷ்டப்படி வாழும் நபர். அவனுக்கு எந்தக் கொள்கையும் இல்லை. ஆனால், உலகின் 99% மக்களைப்போல், பிறருக்கு தீங்கு செய்யாமல் வாழவேண்டும் என்ற கருத்து மட்டும் அவனது மனதில் இருக்கிறது. மைத்ரேயர் தொடர்ந்திருக்கும் வழக்கைப் பற்றி சார்வாகன் பேசுகையில், ‘மனித குலத்தின் நன்மைக்குத்தானே மருந்துகள் மிருகங்களின்மேல் பரிசோதிக்கப்படுகின்றன? ஒரு நல்ல விஷயத்துக்காகத்தானே அந்த விலங்குகள் சாகின்றன? அது எப்படி தவறாகும்?’ என்று கேட்கிறான். அதற்கு அவனது சீனியர், ‘மைத்ரேயர் மனித குலத்தின் மேன்மைக்காக பாடுபடவில்லை. எல்லா உயிரினங்களுமே சமம் என்று நினைப்பவர் அவர். அதற்குத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறார்’ என்று சொல்கிறார். இந்த வசனம் மிகவும் அற்புதமான கருத்து ஒன்றினை மிகவும் எளிமையாக சொல்கிறது. இதுபோன்ற பல கருத்துகள், மைத்ரேயரின் வாய்மொழியாக இந்தப் படத்தில் வருகின்றன. மைத்ரேயரும் சார்வாகனும் பேசிக்கொள்ளும் வசனங்களை கவனித்தாலே போதும்.

ஆலியா ஒரு ஃபோட்டோக்ராஃபர் (’புகைப்பட நிபுணி’ என்றோ ‘புகைப்பட கலைஞி (அல்லது) கலைஞர்’ என்றோ அபத்தமாக எழுதப் பிடிக்காததால் இங்க்லீஷ்). ஆனால், பார்வையற்றவள். எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல், இயல்பான வாழ்க்கையில் மனதுக்குப் பிடித்தபோது புகைப்படங்கள் எடுப்பவள். சத்தங்களை மட்டுமே வைத்துக்கொண்டு அவள் எடுக்கும் புகைப்படங்கள் பிறருக்குப் பிடித்திருக்கின்றன. பார்வையில்லாமல் புகைப்படம் எடுப்பதும் அவளுக்கு இயல்பிலேயே கைவந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், புகைப்படங்களைப் பற்றி தனது boyfriend (இங்கும் அதே இங்லீஷ் – தமிழ் ப்ரச்னை. ‘சேர்ந்து வாழும் நண்பன்’ என்றோ ‘காதலன்’ என்றோ இந்த கதாபாத்திரத்தை சொல்லமுடியாது. பாய்ஃப்ரண்ட் என்பதே சரியான வார்த்தை) விளக்குவதைக் கேட்டுவிட்டு, எந்தப் படங்களை வைத்துக்கொள்வது என்றும், எவற்றை அழிப்பது என்றும் முடிவு எடுக்கக்கூடிய அளவு கூர்த்த கவனம் உள்ளவள். தன் மனதுக்குப் பிடிக்காத புகைப்படங்களை எத்தனை நன்றாக இருந்தாலும் அழித்தே விடுவாள்.

ஆலியாவும் அவளது பாய்ஃப்ரெண்ட் வினய்யும் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்று படத்தில் உண்டு. வினய்யின் பேச்சின்மூலம், தனக்குப் பார்வையில்லை என்பதால் தன்மீது அவன் கழிவிரக்கம் காட்டுவதாக அவள் நினைக்கிறாள். அப்போது, பார்வையற்றவர்கள் இசைத்துக்கொண்டிருக்கும் ஒரு விழாவில் அவர்களை ஆலியா புகைப்படம் எடுத்தபோது, அவளது மாமா, அந்த இசை இனிமையாக இருந்ததற்கு அவர்கள் பார்வையற்றவர்களாக இருந்ததுதான் காரணமாக இருக்குமோ என்று பேசியதைப்பற்றி அவள் கோபமாக அவளது கருத்தை சொல்கிறாள். கூடவே, அவளது கதாபாத்திரம் பேசி நடந்துகொள்ளும் காட்சிகளை கவனித்தால் அவளது இயல்பு தெரிகிறது. ஒரு காட்சியில், பார்வை இல்லாமல் ஆலியா ஒலிகளை மையமாக வைத்தே புகைப்படங்கள் எடுப்பது, ஜெர்மனியைச் சேர்ந்த எழுத்தாளர் பாட்ரிக் சுஸ்கிண்டின் (Patrick Süskind) ’Perfume’ நாவலில் வரும் கதாபாத்திரமான Perfumer போலவே இருக்கிறது என்று வினய் சொல்கிறான் (’Perfume – The Story of a Murderer’ என்ற திரைப்படம் நினைவிருக்கிறதா? டாம் டிக்வார் (Tykwer = டிக்வார்) எடுத்த ஜெர்மன் படம் இது).

அப்படிப்பட்ட ஆலியாவுக்கு பார்வை வருகிறது. பார்வையில்லாமல் இருந்த வாழ்க்கைக்கும், பார்வையோடு இருக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் பெரிய வித்தியாசம் அவளுக்கு நன்றாகப் புரிகிறது. பொதுவாக, புதிய பார்வை பெறுபவர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி அவளுக்கும் இருந்தாலும், இந்தப் பார்வை அவளது புகைப்பட வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருப்பதை புரிந்துகொள்கிறாள்.

இதுவரை மேலே நாம் பார்த்த விஷயங்களின் கலவைதான் Ship of Theseus. வாழ்க்கையை முற்றிலும் நேர் எதிரான இரண்டு கண்ணோட்டங்களில் பார்க்கும் இரண்டிரண்டு கதாபாத்திரங்களே இந்தப் படத்தின் மூன்று கதைகளிலும் வருகிறார்கள். இவர்களில் எவரது கருத்து சரி என்பது நமக்கு காட்சிகளின் வாயிலாக விளக்கப்படுகிறது. இதைப்பற்றி என் கருத்தை இந்தக் கட்டுரையின் கடையில் சொல்கிறேன்.

முதலில், இதுபோன்ற ஒரு கருத்துடைய படத்தை, ஸீன் பை ஸீனாக மொக்கையைப் போட்டு தாக்கி மிகவும் மெதுவான வசனங்களோடு வைத்து படம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்காமல், சுவாரஸ்யமான படமாக உருவாக்கியதற்காக இயக்குநர் ஆனந்த் காந்திக்கு பாராட்டுகள். படத்தின் எந்தக் காட்சியுமே அலுக்கவில்லை. அதேபோல், மிகவும் எளிமையான வசனங்கள். நாம் மேலே பார்த்த மண்டையை உடைக்கும் தத்துவ விளக்கங்கள், இது எதுவும் தெரியாமல் படம் பார்க்க செல்லும் மனிதனுக்கும் எளிதில் புரியும்படியான வசனங்கள் இப்படத்தில் உள்ளன. கூடவே, காட்சிகளும் மிகவும் இயல்பாக இருந்தன. படத்தில் முதல் கதையாக வரும் ஆலியாவின் காட்சிகளில் ஆலியாவாக நடித்திருக்கும் ஆய்தா எல் கஷெஃப்ஃபுக்கும் (Aida El-Kashef) மற்றும் அவளது பாய்ஃப்ரெண்ட் வினய்யாக நடித்திருக்கும் ஃபரஸ் கானுக்கும் (Faraz Khan) இடையே சில காட்சிகள் – அவர்களின் சண்டை மற்றும் பேச்சு ஆகியவை, அத்தனை இயல்பாக இருந்தன. சேர்ந்து வாழும் இருவர் இப்படித்தான் பேசிக்கொள்வார்கள். அதில் சந்தேகம் இல்லை. இதேதான் இரண்டாவது மற்றும் மூன்றாவது கதைக்கும். எங்குமே காட்சிகள் திணிக்கப்படவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

அடுத்தது, ஒளிப்பதிவு. படத்தின் கதாபாத்திரங்களைப் பற்றிய செய்திகளை வசனங்களில் சொல்லாமல் காட்சிகளின் மூலமாகவே ஆனந்த் காந்தி விளக்கியிருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் அந்தக் கதாபாத்திரங்களின் மனநிலைக்கேற்றவாறு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலியா ஒரு ஃபோட்டோக்ராஃபர் என்பதால், முதல் கதையின் பல இடங்களில் ஒளிப்பதிவு அதற்கேற்றவாறு அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அந்தக் கதை முடியும் நேரத்தில் வரும் இமயமலையில் நடக்கும் காட்சிகள். அதுவே படத்தின் இரண்டாவது கதையில் வரும் மைத்ரேயரைப் பற்றிய காட்சிகளில், wide angle ஷாட்கள் அதிகமாக இருக்கின்றன. மைத்ரேயர் ஒரு சாது. நடந்தே செல்பவர். Existentialism என்ற கருத்து – அலுப்பான வாழ்க்கையை வாழ்ந்து கடப்பது – இவரது கதையில் வரும் ஷாட்களின் மூலமாகவே புரிகின்றன. மூன்றாவது கதையில் வரும் நவீன், மைத்ரேயருக்கு நேர் எதிரான ஆசாமி. வாழ்க்கையை அவனது பாணியில் சம்பாதித்து, குடித்து ரசிப்பவன். அவனது கதையில் இப்படிப்பட்ட ஷாட்கள் எதுவும் இல்லாமல், இயல்பானதொரு வாழ்க்கையை ஒளிப்பதிவு பிரதிபலிக்கிறது.

மூன்றாவது, இயல்பான நடிப்பு.

ஒரு குறிப்பிட்ட தருணம் வரை நம மனதில் இருக்கும் சிந்தனையும் point of viewவும், அடுத்த நொடியில் தலைகீழாக மாறினால், அதுவரை இருந்துவந்த ‘நாம்’ என்பது உடனே மாறிவிடுகிறதா? அல்லது நாம் அதன்பின்னும் நமது சுய அடையாளத்துடன் வாழமுடியுமா? ’சுயம்’ என்பதே என்ன? ஒரு காலகட்டம் வரை திருடனாகவும் கொலைகாரனாகவும் வாழ்ந்த ஒருவன், திருந்தியபின்னரும் அவனது சுயம் என்பது திருடனோ கொலைகாரனோதானா? நம் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் நமது egoவை உடைக்கின்றன. அதன்பின் நமது சிந்தனை முறையே மாறுகிறது. அப்படியென்றால், அதன்பின் நாம் யார்? இதுதான் Ship of Theseus திரைப்படம் உணர்த்த முயலும் விஷயம் என்று தோன்றுகிறது. இதையே வேறு மாதிரி சொல்வது என்றால், ஒரு கப்பலின் பல்வேறு பகுதிகளும் மாற்றப்பட்டபின், அது பழைய கப்பலேதானா? (Ship of Theseus என்ற பதத்தின் தத்துவ விளக்கம் இது என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும்). ஒரு மரம் முற்றிலுமாக உடைக்கப்பட்டு பல்வேறு கருவிகளாக மாற்றப்பட்டபின்னர் அந்த மரம் இன்னும் அவைகளின் மூலம் வாழ்கிறதா? படத்திலேயே இதே விஷயம் இதேபோல் இரண்டு முறை பேசப்படுகிறது. படத்தின் க்ளைமேக்ஸில் ஒருமுறை. மைத்ரேயரிடம் பேசும் சார்வாகன் மூலம் இன்னொருமுறை. படத்தின் க்ளைமேக்ஸில் இந்த வசனம் இல்லாமலேயே அந்த கருத்து எளிதாக விளங்குகிறது.

Ship of Theseus கட்டாயம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகமில்லை. மனித வாழ்வின் சிக்கல்களை, அதன் தத்துவ விளக்கங்களுக்கு உட்பட்டு இந்த அளவு யாரும் இதுவரை தெளிவான, சுவாரஸ்யமான திரைப்படமாக எடுத்ததில்லை என்று நினைக்கிறேன் (அல்லது அப்படி இருந்தால், அந்தப் படங்களை நான் இதுவரை பார்த்ததில்லை).

குறிப்பிடத்தகுந்த இந்த முயற்சிக்காக ஆனந்த் காந்திக்கு நமது வாழ்த்துகள். இந்தப் படம் தற்போது இணையம் மூலமாக எல்லா பக்கங்களிலும் கவனம் பெற்றுக்கொண்டிருப்பது நல்ல விஷயம். அனைவரும் அவசியம் இந்தப் படத்தை அலுப்பில்லாமல் பார்க்கலாம்.

பி.கு

1. இந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில், எனது கருத்தை கடைசியில் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். பொதுவாக வாழ்க்கையை முற்றிலும் நேர் எதிரான இரண்டு கண்ணோட்டங்களில் பார்க்கும் விவாதங்களில் எப்போதுமே மனித வாழ்க்கைக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த பாத்திரங்களே வெற்றிபெறும். பிறருக்கு இதுபோன்ற தியாகங்கள் செய்யாமல், இயல்பான வாழ்க்கையை தன்னளவில் வாழ்ந்து முடித்த நபர்களை இப்படிப்பட்டவர்கள் எப்போதுமே கீழாகவே நினைப்பது வழக்கம். இந்தப் படத்தின் செய்தியுமே அப்படித்தான் என்று தெரிகிறது. ’வாழ்க்கையில் பிறருக்கு உதவியே ஆகவேண்டும்’ என்பது சட்டம் இல்லையல்லவா? என் தனிப்பட்ட கருத்து என்னவெனில், இப்படிப்பட்ட படங்கள், இதுபோன்ற கருத்துகளை திணிக்காமல் முடிவை திரைப்படத்தைப் பார்க்கும் ஆடியன்ஸின் பார்வைக்கே விட்டுவிடுதல் நல்லது. ஆனால் அப்படி செய்தால், வலுவான காட்சிகளை வைக்க முடியாது என்பதும் இங்கே ஒரு முரண். இதுதான் இந்தப் படத்தில் எனக்குத் தோன்றிய ஒரே குறை.

2. இன்னும் இந்தப் படம் தொடர்பான எந்த ஒரு கட்டுரையையும் படிக்கவில்லை. படம் பார்த்து, அதைப்பற்றி என் கருத்தை எழுதியபின்தான் படிக்கவேண்டும் என்று நினைத்தேன். இனி ஒவ்வொன்றாக படிக்கத் துவங்குவேன்.

3. நான் சொல்லாத பல முக்கியமான விஷயங்கள் படத்தில் உண்டு. இங்கே இருக்கும் ட்ரெய்லரில் அவைகள் சொல்லப்படுகின்றன. படத்தை பார்த்துவிட்டு வாருங்கள். நண்பர்களுக்கு ஆர்வம் இருந்தால் இங்கே பேசுவோம்.

  Comments

6 Comments

  1. ரொம்ப விரிவான அலசல்..ஒரு சராசரி சினிமா விமர்சனம் போன்று இல்லாமல் ஆழ்ந்த கருத்துக்கள்..அருமையாக இருக்கிறது.

    Reply
  2. மிக அற்புதமான நுணுக்கமான வாழ்வியல் விடயங்களை தாங்கிய படம் போலும். அதனை அழகாக கட்டுரையாக்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். 🙂

    Reply
  3. amarkkalam.net

    விரிவான அலசல்
    நன்றி

    அமர்க்களம் கருத்துக்களம்

    Reply
  4. Raj

    Excellent review !! It is kind of learning the art of viewing good cinema. Thank you very much

    Reply
  5. Arasu

    To my surprise, i could not enjoy this movie Rajesh. I felt like it was intellectual …………….. Director wanted to exhibit his knowledge/intelligence through all characters which completely spoil the flow of the movie thereby I could not involve with the characters… Purely my opinion.

    Reply
    • Rajesh Da Scorp

      It happens Arasu :-). Sometimes I too have felt the same feeling, while seeing a few movies my friends suggested :-). ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் 🙂

      Reply

Join the conversation