Shrek – Forever After (2010)
உலகெங்கிலும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு திரைப்பட வரிசையின் இறுதிப்படம் – நேற்று வெளியாகியுள்ளது. இவ்வளவு வருடங்களில், ஷ்ரெக்க்கின் முதல் மூன்று படங்களை அதிவிரைவில் பார்ப்பதைத் தவறவே விட்டதில்லை என்பதால், இந்தப் படத்தையும் இன்று மாலை சென்று பார்த்துவிட்டு, இதோ இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
முதல் பாகத்தில், ஃபியோமா ட்ராகனிடம் மாட்டிக்கொண்டு, சாபக்கேட்டில் தவிப்பதனால், மன்னனும் அரசியும், ஒரு குள்ளநரித்தனமான மந்திரவாதியிடம் செல்கின்றனர். அவனது பெயர் ‘ரம்பெல்ஸ்டில்ஸ்கின்’ (இது, தேவதைக் கதைகளில் வரும் ஒரு காரெக்டர். ஷ்ரெக்கின் மற்றைய கேரக்டர்களைப் போலவே). இவனது வேலை, எதுவாக இருந்தாலும் ஒரு காண்ட்ராக்ட் தயார் செய்து, கையெழுத்து வாங்கிக்கொண்டு, பின் அவர்களை வஞ்சிப்பதே. சாபக்கேட்டில் இருந்து ஃபியோனாவை விடுவிப்பதாகவும், ஆனால் அதற்கு, மன்னர் தனது நாடான ‘ஃபார் ஃபார் அவே’யைத் தனக்கே கொடுத்துவிடவேண்டும் என்ற ஒரு காண்ட்ராக்டைத் தயார் செய்கிறான் ரம்பெல். ஆனால், மன்னர் அதில் கையெழுத்திடும் அயனான சமயத்தில், ஷ்ரெக் என்ற ஒரு பூதம் ஃபியோனாவை விடுவித்துவிட்ட செய்தி மன்னருக்கு எட்டுகிறது. அதன்பின் ரம்பெல் தூக்கியெறியப்படுகிறான். இதனால், ஷ்ரெக்கின் மீது தீராத வன்மம் கொண்டு அலைகிறான்.
நிற்க. முதல் மூன்று படங்களில் நாம் பார்த்த ஷ்ரெக், ஒரு அமைதி விரும்பி. பூத இனங்களில், தனது இயற்கையான, வன்முறை நிரம்பிய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு, தனது மனைவி ஃபியோமாவுடனும், மூன்று குட்டிக் குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறான். ஆனால், அடிக்கடி ஒரு குறை – ஒரு நிராசை வந்து அவனது மனதைக் கவ்விக் கொள்கிறது.
அது என்னவெனில், ஃபியோமாவை அவன் பார்ப்பதற்கு முன் வாழ்ந்து வந்த வாழ்க்கை, அவனது கண்களில் அவ்வப்போது நிழலாடுவது தான். இன்றைய கணத்தில், தனது வீட்டை ஒரு சுற்றுலாத்தலமாக வந்து மக்கள் பார்த்துப்போவதும், குழந்தைகளின் சேட்டைகள் அளவுக்கு மீறிப்போவதைத் தன்னால் தாங்க முடியாததையும், மக்கள் இவனிடம் பயமில்லாததனால், சற்றே அதிக செல்லத்துடன் இவனைக் கவனிப்பதும், ஷ்ரெக்கின் மனத்தில் ஒரு ஆற்றாமையை வளர்க்கிறது.
இந்த ஆற்றாமை, அவனது குழந்தைகளின் முதல் வருடப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எரிமலையாக வெடிக்கிறது. தன்னை எல்லோரும் ஒரு வேடிக்கைப் பொருளாகக் காண்பதை எதிர்த்து, ஒரு ராட்சத கர்ஜனை செய்துவிட்டு, அங்கிருந்து வெளியேறி விடுகிறான் ஷ்ரெக்.
அந்த நேரத்தில் அங்கு வரும் ரம்பெல், ஷ்ரெக்கின் ஆற்றாமையை அவன் தீர்த்து வைப்பதாகக் கூறி, ‘ஒரு நாள் பழைய வாழ்க்கை வாழும்’ ஒரு காண்ட்ராக்டைத் தயார் செய்கிறான். ஒரே நாள் மட்டும் ஷ்ரெக்கைப் பார்த்து அனைவரும் பயப்படுவார்கள் என்று கூறி, ஷ்ரெக்கின் ஒரு முடிந்து போன நாளை அதற்கு ஈடாகக் கேட்கிறான். ஷ்ரெக்கும் அதில் கையெழுத்திட்டுவிட, ஷ்ரெக் பிறந்த முதல் நாளை எடுத்துக்கொண்டு, அதற்குப்பதில் ஒரு புதிய நாள் அவனுக்கு அளிக்கப்படுகிறது. அன்று அவனைக் கண்டு அனைவரும் அஞ்சுகின்றனர்.
ஆனால், இந்தப் புதிய நாளில், ஃபியோமா இல்லை. மட்டுமல்லாது, அவனது உற்ற நண்பனான கழுதையும் அவனை அடையாளம் கண்டுகொள்ள மறுக்கிறது. விழிக்கும் ஷ்ரெக், சூனியக்காரிகளால் கடத்தப்பட்டு, ஃபார் ஃபார் அவேயின் மன்னரின் முன் நிறுத்தப்படுகிறான். அங்கு மன்னனாக அமர்ந்திருப்பதோ ரம்பெல்!
ஷ்ரெக் பிறந்த முதல் நாளைத் தான் எடுத்துக்கொண்டுவிட்டதனால், அவனது வாழ்க்கை மொத்தமாக திசைமாறிவிட்டதனைச் சொல்லும் ரம்பெல், அன்று ஒரே நாள் தான் ஷ்ரெக் உயிருடன் இருக்க முடியும் என்றும், ஷ்ரெக்கின் மீது அவனுக்கு இருக்கும் வஞ்சத்தை இப்படி அவன் தீர்த்துக்கொள்ளப் போவதாகவும் சொல்கிறான்.
கழுதையையும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிக்கும் ஷ்ரெக், தனது வீட்டுக்குச் செல்கிறான். ஆனால், அது பாழடைந்து கிடக்கிறது. ஃபியோமாவும் குழந்தைகளும் அங்கு இல்லை. அப்போது, கழுதை ஷ்ரெக்கிக்கிற்கு உண்மையைப் புரிய வைக்கிறது. அதாவது, இந்தப் புதிய நாளில், ஷ்ரெக் தனது பிறந்த முதல் நாளை அடகு வைத்துவிட்டதனால், அவனது வாழ்வில் ஃபியோமா இடம் பெறவே இல்லை என்றும், இந்தச் சாபத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால், தூய காதலின் முத்தத்தை அவன் அன்றைய தினத்துக்குள் பெற வேண்டுமென்றும் விளக்குகிறது.
அப்பொழுது, ஒரு காட்டில் இருக்கும் ஒரு பொறியினால் கழுதை கடத்தப்படுகிறது. பார்த்தால், பாதாளத்தில் ஒரு பூதக்கூட்டமே ஒளிந்திருக்கிறது. அனைவரும் ஷ்ரெக்கின் ‘ஓகர்’ இனத்தைச் சேர்ந்தவர்கள். வஞ்சக அரசன் ரம்பெல்லை ஒழிக்கப் புரட்சியை எடுத்துவரத் திட்டம் தீட்டுபவர்கள். அவர்களது தானைத்தலைவியோ ……….. யெஸ் – ஃபியோமாவே தான்! ஆனால், இவளுக்கு ஷ்ரெக்கை அடையாளம் தெரிவதில்லை. ட்ராகனிடமிருந்து தானாகவே தப்பித்து வந்திருக்கிறாள் அவள்.
ஷ்ரெக்கினால் ஃபியோமாவை மறுபடி காதல் வலையில் வீழ்த்த முடிந்ததா? அன்றைய தினம் முடிவதற்குள் ஷ்ரெக்கிற்குத் தூய காதலின் முத்தம் கிடைத்ததா? கழுதை தனது காதல் மனைவியான ட்ராகனை அடைய முடிந்ததா? புரட்சி வென்றதா? ஷ்ரெக் – ஃபாரெவர் ஆஃப்டர் பாருங்கள்.
இப்படம், மிக அழகான முறையில் எடுக்கப்பட்டிருக்கிறது. அருமையான வசனங்கள். ஷ்ரெக்கும் ஃபியோமாவும் பேசும் பல வசனங்கள், நம் இதயத்தைக் கரைக்கின்றன. தனது காதல் மனைவிக்கு, தான் யாரென்றே தெரிவதில்லை என்னும் நிலையில், ஷ்ரெக் செய்வதறியாது பேசும் வசனங்கள், நம் உள்ளத்தை உருக்கும்.
அதே போல், இதில், பட்டையைக் கிளப்பும் ‘புஸ் இன் பூட்ஸ்’ பூனையார், மிக வித்தியாசமான கெட்டப்பில் கலக்குகிறார். எதிர்பார்க்கவே இயலாத ஒரு ’கனமான’ பாத்திரம் அவருக்கு. வில்லன் ரம்பெலும், தனது சேட்டைகளால் நம்மைச் சிரிக்க வைக்கிறான்.
ஷ்ரெக் வரிசைக்கு ஒரு அழகான முடிவாக இப்படம் விளங்குகிறது. ஷ்ரெக் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்து. அவசியம் பாருங்கள்.
ஷ்ரெக் – ஃபாரெவர் ஆஃப்டர் படத்தின் ட்ரெய்லர் இங்கே
me the first
படம் ரிலீஸ் ஆனதே தெரியாது பாஸ்.. ஒகே லாஸ்ட் பார்ட் நல்லா இருக்குன்னு நீங்களே சொல்லியாச்சு..இந்த வீக் போய்ற வேண்டியதுதான்….
நண்பரே,
ரத்தம் காயவில்லை ஆனால் பத்திரிகையில் செய்தி வந்து விட்டது என்பார்கள் அதற்கு சரியான உதாரணம் உங்கள் எக்ஸ்பிரஸ் பதிவு.
ஷ்ரெக் படங்கள் அதில் வரும் அனைத்து பாத்திரங்களினதும் தனித்தன்மையால் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும். இப்பாகத்திலும் அது தொடர்ந்திருக்கிறது என்பது உங்கள் விமர்சனம் மூலம் தெளிவாகிறது.
ஆம் பூனைக்கு கனத்த வேடம்தான்!! இங்கு வந்ததும் பார்த்து விடுகிறேன்.
மின்னல் வேகப் பதிவு. பிளாஷ் தோத்தார் போங்கள்.
சீய்யர்ஸ் :))
நண்பரே,
பூனை படுத்திருக்கும் அழகைப் பாருங்கள்.. என்ன ராஜ வாழ்க்கை. பஞ்சனை, மதுக் கிண்ணம்.. சிட்டு மிஸ்ஸிங். என்சாய் பூனை என்சாய்.
கருந்தேள்… உங்கள் வேகம் பிரமிக்க வைக்கிறது…. சென்ற வாரம் தான் மெக்டோனல்டில் ஒரு பர்க்ர் மொக்க சென்ற போது ஷ்ரெக் 3டி படம் வெளிவர போகிறது மூன்றாம் பாகமாக என்று கேள்விபட்டேன்.. அப்போது, அட பாவிகளா இந்த படத்தையும் மொக்கையாக பண்ண போகிறார்களோ என்று எண்ண தோன்றிற்று.,,,
உங்கள் விமர்சனத்தில் அந்த அச்சம் தேவையில்லை என்று தெரிகிறது… 3டி யில் படத்தை தியேட்டரில் ரசிக்கலாம்… இக்கால கட்டத்தில் மக்களை தியேட்டருக்கு இழுக்கும் ஒரு விடயமாக 3டி மாறி கொண்டிருக்கிறது…. நேற்று தான் நார்நியாவும் 3டியில் வரபோகிறது என்று படித்தேன்
அருமையான எக்ஸ்பிரஸ் பதிவு… அதுவும் அந்த பூனை படுத்திருக்கும் கடைசி படம்.. நம் ப்ரான்ஸ் மைனரை தான் நியாபக படுத்துகிறது…:)
ஷ்ரெக் முதல் பாகம் மட்டும் தான் நல்லா இருந்தது. அதற்கப்புறம் வந்ததெல்லாம் பெரும் சொதப்பல் தான். இதுவும் இன்னொரு சொதப்பல் லிஸ்டில் சேர்ந்துகிச்சு…
நான் ஷ்ரெக் முதல் பார்ட் மட்டும் தான் பார்த்து இருக்கேன்.மொத்தமா பார்த்துட வேண்டியது தான். 🙂
தேங்க்ஸ் தல…..
நண்பா அருமையான விமர்சனம்,கலை சேவை தொடரட்டும்
கருந்தேள்,
நேற்றைக்கு காலையில் தான் பிரபல ஆங்கில நாளிதழின் சினிமா விமர்சகரிடம் இந்த படத்தின் விமர்சனத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தேன். அவர் பலமுறை பார்க்க சொன்னார், நானும் சரி என்று சொன்னேன்.
இந்த பட வரிசையிலேயே மிகவும் பிடித்த அம்சம் மைக் மைர்சின் குரல் தான் – அதுவும் ஷ்ரேக்கின் உருவத்திற்கு அந்த குரல் அம்சமாக பொருந்துகிறது.
By The Way, Me the Tenth.
வேற வழி இல்லே, பின்னே நைட்டு ஒரு மணிக்கு எல்லாம் பதிவு போட்ட எப்புடித்தான்…………?
அருமையான விமர்சனம்,
பாஸ்,
நானும் இந்த படத்தை எதிர் பாத்துகொண்டிருந்தேன். முந்தைய மூன்று பாகங்களும் பார்த்து விட்டேன். பூனையார் குண்டாகி காண்பித்துள்ளார்கள். பூனையாரின் அந்த பாவமான பார்வை இந்த படத்திலும் உள்ளது போலவே
நல்ல விமர்சனம்
இப்போதைக்கு பல்பு வாங்கும் ஐடியா இல்லை. இன்னும் 1-2 வாரம் கழிச்சிப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.
இல்லாத ஐமேக்ஸ் தியேட்டருக்கு எல்லாரும் அடிச்சிக்கறாங்க. ஒரு படம் கூட… 2 வாரத்துக்கு மேல ஐமேக்ஸில் ஓட மாட்டேங்குது.
தல, ஒரு சின்ன டவுட் உங்க வெப்சைட் டாப்புல Che, Ran, Spartacus, 4 Months இது நாலு மட்டும் எப்பவுமே இருக்கே…இந்த நாளும் உங்களுக்கு ரொம்ப புடிக்குமா? இல்ல வேற ஏதும் விசேசமா?
ரொம்ப நல்ல படங்கள் மட்டும் போட்டு, ஸ்க்ரோல் பண்ணி பாக்குற மாதிரி இருந்தா நல்ல இருக்குமே அதான் கேட்டேன்…
இன்னமும் வந்து பதிவு போடாத அண்ணன் பாலாவை கண்டித்து நான் உண்ணும் விரதத்தில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதை இங்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
பில் அண்ணன் பாலாவுக்கு அனுப்பப்படும்.
//ஷ்ரெக் வரிசைக்கு ஒரு அழகான முடிவாக இப்படம் விளங்குகிறது. //
தல,
படம் முடியவில்லை. நான்காம் பாகம் வரவிருக்கிறது.
எக்சுவலி, காரிபீல்ட் படத்திற்கு பிறகு நான் என்ஜாய் செய்யும் படவரிசை இதுதான். இன்றைக்கு நைட் இதுதான்.
தேங்க்ஸ்பா.
ஒரு சின்ன ரிக்வெஸ்ட்: அப்படியே நம்ம தலைவரோட “பெண் சிங்கம்” எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொன்ன தேவலாம்.
@ பருப்பு – நீங்க கேட்ட கேள்விக்கி பதில் என்னன்னா – 🙂 மொதல்ல எல்லாம் அப்பப்ப டாப்ல இருக்குற படங்கள மாத்திக்கினு இருந்தேன் . . இப்ப சோம்பேறித்தனத்துனால, புஸ் இன் பூட்ஸ் பூனையார் மாதிரி எதுவும் பண்ணாம, பதிவு மட்டும் போட ஆரம்பிச்சிட்டேன் . . இப்ப சொல்லிட்டீங்கள்ல. . ஸ்க்ரோல் பண்ணுற மாதிரி ஆக்கிரலாம் . . சீக்கிரமே . . அதுதான் இந்த சைட் ஆரம்பிச்சப்போ என்னோட லட்சியமா இருந்தது . . ஆனா இப்ப உட்டுட்டேன் .. இதோ வேலைய ஆரம்பிச்சிட்டேன் . . சீக்கிரமே ஸ்க்ரோலிங் வரும் . . மிக்க நன்றி ..
@ காதலரே – சீய்யர்ஸ் . . !! இந்தப் படம் எனக்கு ரொம்பவும் பிடித்தது . . அதுதான் எழுதிவிட்டேன் . . அதுவும் குறிப்பாக, இப்படத்தில் வரும் பூனையார், என்னமாய் வாழ்வை எஞ்சாய் செய்கிறார் !! அட அட . . அவரைப் பார்த்து எனக்குப் பொறாமையே வந்துவிட்டது . . 🙂 பஞ்சணை, அறுசுவை உணவு, மது . . ஆஹா ஆஹா . . சிட்டு தான் இல்லை . . ஆனால் அதுவும் சீக்கிரம் வந்துவிடும் போல. . 🙂
@ ரஃபீக் – இந்தப் படம் கண்டிப்பாக மொக்கையில்லை . . தாராளமாக ரசிக்கலாம் . .3டியும் நன்றாகவே உள்ளது. . காட்சிகளைத் துல்லியமகப் பார்க்க இது உதவுகிறது . .
அப்பறம், பூனை தானே. . அதே தான் . . . நானும் அப்படித் தான் நினைத்தேன் . . 🙂
@ பிரசன்னா – என்ன கொடும பாஸ் இது? அவரசப்பட்டு இந்த முடிவுக்கு வந்துராதீங்க . . உங மனசுல இருக்குற ஆற்றாமைய கொட்டித் தீத்துருங்க இங்க . .
@ Illuminati – கண்டிப்பா பாருங்க. . காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்தப் படங்கள் கண்டிப்பா புடிக்கும் . . நன்றீ . .
@ கார்த்திகேயன் – நண்பா . . மிக்க நன்றி .. நீங்க எப்ப கலைச்சேவைய மறுபடி தொடரப்பொறீங்க . . வெயிட்டிங் . .
@ விஸ்வா – அட்டகாசம் !! மைக் மையர்ஸ் குரல் பற்றி, படம் ஓடிக்கொண்டிருக்கையிலேயே நான் பல முறை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் . . அது அப்படியே ஷ்ரெக்கிற்குப் பொருந்துகிறது . . வாவ் . . மறுபடி லப்டப் பதி வொர்க்கவுட் ஆகுது . . 🙂
அதே போல், எட்டி மர்ஃபி, பின்னியெடுத்திருக்கிறார். . . கழுதை, அவரால் தான் வாழ்கிறது . . 🙂
@ கே.ஆர்.பி செந்தில் – மிக்க நன்றி . . அடிக்கடி வாங்க . .
@ லக்கி – பூனையாரின் பாவமான பார்வைக்கு, ரொம்ப நேரம் வெயிட் செய்துகொண்டிருந்தேன் . . கரெக்டாக வந்தது . . அடித்தேன் பல விசில்களை . . 🙂 இதில் அந்தப் பார்வை, ரொம்ப நல்லா இருக்கு . . 😉
@ Soundar – மிக்க நன்றி நண்பா . .
@ பாலா – தொடர்ச்சியா வந்த ஆனிமேஷன் படங்கள் உங்கள கடுப்பேத்திருச்சின்னு நினைக்குறேன் . . 🙂 இது எனக்கு ரொம்பப் புடிச்சது . . பார்த்துட்டு சொல்லுங்க . . இந்த தடவ 3டி படங்களின் படையெடுப்பு ரொம்ப அதிகம் தான் . .
@ வெடிகுண்டு வெங்கட் – சரமாரியா பின்னூட்டங்கள பொழிஞ்சி தள்லிட்டீங்க போங்க . . 🙂
பில்ல அவுருக்கு சீக்கிரம் அனுப்புங்க பாஸ் . . 🙂
//ஷ்ரெக் வரிசைக்கு ஒரு அழகான முடிவாக இப்படம் விளங்குகிறது. //
தல,
படம் முடியவில்லை. நான்காம் பாகம் வரவிருக்கிறது.
பாஸு. . . இதுதான் அந்த நான்காம் பாகம் . . . கடைசி படம் . . எனிவே, இத பார்த்துபுட்டு சொல்லுங்க . .
அதே மாதிரி, கேர்ஃபீல்ட் பூனைய எனக்கும் ரொம்பப் புடிக்கும் . . சேம் பின்ச் !!
அப்பறம், பெண் சிங்கம் பத்தி . . . அண்ணா . . நானு நல்லா இருக்குறது புடிக்கலையா .. இப்பதான் நம்ம அகில உலக அண்டவெளி நாயகன் ஜோசப் ச்சேண்ட்ரா படங்கள தயாரிப்பாளர் சங்கம் தடை செய்யப்போகுதுங்கற தகவல் படிச்சி, இடிஞ்சி போயி உக்காந்துருக்கேன் . . ஐ லவ் சுறா க்ளப்ல நானு ஆக்டிவ் மெம்பர் வேற .. வெந்த புண்ணுல ஏன் இப்புடி வேலப் பாய்ச்சுறீங்க?????? முடியல. . . 😉
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com