Singularity (2010) – PC Game

by Karundhel Rajesh August 9, 2011   Game Reviews

நம் கையில் ஒரு பலம்வாய்ந்த துப்பாக்கி இருக்கிறது. அதில் பல குண்டுகளும் உள்ளன. எதிரே, ஒரு பிரம்மாண்டக் கட்டிடம். அதனுள், இருள் கவிந்து கிடக்கிறது. அந்தக் கட்டிடத்தினுள் புகுந்து , பின்வாசல் வழியாக வெளியேற வேண்டும். முதல் அடியை எடுத்து வைக்கிறோம்.

எங்கோ வெகுதொலைவில் ஒரு உறுமல் ஒலி. நமக்கு வெகுதூரத்தில் – கட்டிடத்தின் உள்ளே. எதுவோ உருளும் ஒலி. துப்பாக்கியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். அதனை நமக்கு முன்னால் நீட்டியவாறு, ஒவ்வொரு அடியாக அந்தக் கட்டிடத்தினுள் எடுத்து வைக்கிறோம். மிக மிக மங்கலான ஒளி. அதன் ஊடாக, யாருமற்ற ஒரு வராந்தா தெரிகிறது. தரையெங்கும் குப்பை. கூரையில் இருந்து எதுவோ சொட்டிக்கொண்டிருக்கிறது.

வராந்தாவின் முடிவுக்கு வந்தாயிற்று. எதிரே ஒரு கதவு. மெல்ல நமது கை, கதவை நோக்கி நீள்கிறது.

உர்ர்ரர்ர்ர்ர் . . . . .

நமக்குப் பின்னால். மிக மிக அருகில். மூச்சு சத்தம். கூடவே, மெல்லியதொரு உறுமல். இரையைக் கண்டுகொண்ட மிருகத்தின் சிரிப்பு.

டமால் !

இப்படியொரு சம்பவம் நமக்கு நடந்தால் எப்படி இருக்கும்?

Welcome to Singularity .

அழிந்து கிடக்கும் கடோர்கா தீவு. ஆண்டு – 2010 . ஒரு மின்காந்தக் கதிரியக்க வெளிப்பாட்டினால், அதனை ஆராய, அமெரிக்க அரசு ஒரு சிறு படையை அனுப்புகிறது. தீவில் இறங்கும் நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் ஒரு விபத்தில் சிக்கிக்கொள்வதால், அதில் இருக்கும் அனைவரும் மரணமடைகின்றனர். ஒருவனைத் தவிர – நதானியேல் ரெங்கோ.

ரெங்கோ, தீவில் நுழைகிறான். அந்தத் தீவு, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நடந்த காலத்தில் (1955), ரஷ்யாவின் ராணுவப் பரிசோதனைகளுக்கு ஏற்ற இடமாக இருந்திருந்தது. அந்தச் சமயத்தில் ஏற்பட்டிருந்த ஒரு கொடும் விபத்தினால், தீவே அழிந்தும் விட்டது. ஆகவே, தற்போது அந்த இடம் பாழடைந்து கிடக்கிறது. தன்னெதிரே இருக்கும் பிரம்மாண்டமான ரஷ்யப் பரிசோதனை மையத்தினுள் நுழைகிறான் ரெங்கோ. அங்கே, ரத்த தாகத்துடன் ஒளிந்திருக்கின்றன சில ஜந்துக்கள். ஐம்பதுகளில் நிகழ்ந்த விபத்தினால், கதிரியக்கம் வெளிப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்டு ஜந்துகளாக மாறியிருக்கின்றனர் அங்கே வேலை செய்த மனிதர்கள். அந்த ஜந்துக்களின் பெயர் – Zeks . திடும் திடும்மென்று ரெங்கோவைத் தாக்குகின்றன அவை. ஒவ்வொன்றாக அவைகளைத் தனது சக்திவாய்ந்த துப்பாக்கியால் கொல்கிறான் ரெங்கோ.

அதே நேரத்தில், அங்கே நடக்கும் சில புதிரான சம்பவங்களால், 1955 குப் பயணப்படுகிறான் ரெங்கோ. விபத்து நிகழ்ந்த நேரம். அங்கே, ஒரு மனிதனை, இறப்பிலிருந்து காப்பாற்றுகிறான். காப்பாற்றுகையில், தொலைவில் இருந்து ஒரு குரல், ‘அவனைக் காப்பாற்றாதே. . . விட்டுவிடு. அவன் அழியட்டும்’ என்று ரெங்கோவை எச்சரிக்கிறது. இருந்தாலும் அதனை மீறி, அந்த மனிதனைக் காக்கிறான் ரெங்கோ. அதன்பின் நிகழ்காலத்துக்குத் திரும்புகிறான். அவனுடன் இணைவது, டெவ்லின். ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய இன்னொரு ராணுவ வீரன். இருவரும், திடீரென சிறைப்பிடிக்கப்பட்டு, டெமிசெவ் என்ற மனிதனின் முன்னர் ஆஜர்படுத்தப்படுகின்றனர். டெமிசெவ்தான் உலகிலேயே பலம்வாய்ந்த சர்வாதிகாரி. அவனைப் பார்க்கையில்தான், 1955 ல் ரெங்கோ காப்பாற்றிய மனிதன் அவனே என்பது ரெங்கோவுக்குத் தெரிகிறது. அப்போது காதரீன் என்ற பெண்ணினால் காப்பாற்றப்படுகிறான் ரெங்கோ. டெவ்லின், கொல்லப்படுகிறான்.

காதரீன், அவள் ஒரு ரகசிய உளவு நிறுவனத்தின் மெம்பர் என்றும், அந்தக் கட்டிடத்தில் ஒரு கருவி இருக்கிறது என்றும், அந்தக் கருவியான Time Manipulation Device (TMD) என்பதை உபயோகித்து, இறந்த காலத்துக்குச் செல்ல முடியும் என்றும் சொல்கிறாள். இந்தக் கருவியை உருவாக்கியவர், விக்தோர் பாரிசோவ் என்ற விஞ்ஞானி. அவரை, ஐம்பதுகளில், டெமிசெவ் கொன்றுவிடுகிறான். அச்சம்பவம் நடக்காமல் முதலில் தடுக்கவேண்டும் என்பது, காதரீன் ரெங்கோவுக்குச் சொல்லும் முதல் பணி. அதன்படியே இறந்த காலத்துக்குச் சென்று, சாவிலிருந்து பாரிசோவைக் காப்பாற்றுகிறான் ரெங்கோ. பின், நிகழ்காலத்துக்குத் திரும்பிவருகிறான். பாரிசோவ் காப்பாற்றப்பட்டதால், தற்போது அவர் உயிருடன் இருக்கிறார். காதரீன் மற்றும் ரெங்கோவுடன் கலந்துபேசி, அந்தத் தீவையும், வில்லன் டேமிசெவையும் கொல்ல ஒரு திட்டத்தைச் சொல்கிறார்.

மறுபடியும் இறந்த காலத்துக்குச் சென்று, ஒரு சக்திவாய்ந்த வெடிகுண்டை வைத்து அந்தத் தீவையே அழித்துவிட்டால், தற்போதைய கதிர்வீச்சுப் பிரச்னை முடிந்துவிடும். எனவே, இறந்தகாலத்துக்குப் பயணமாகிறான் ரெங்கோ. அங்கே, வெடிகுண்டை வைத்து தீவையே வெடிக்கவும் வைக்கிறான். உடனேயே நிகழ்காலத்துக்குத் திரும்புகிறான். ஆனால், நிகழ்காலத்தில், பாரிசொவைத் துப்பாக்கிமுனையில் நிற்கவைத்திருக்கிறான் சர்வாதிகாரி டெமிசெவ். அப்போதுதான் ஒரு உண்மை, டாக்டர் பாரிசொவுக்குப் புரிகிறது.

முதன்முதலில் 1955ல் ரெங்கோவால் டெமிசெவ் காப்பாற்றப்பட்டதுதான் முக்கியமான சம்பவம். அதனால், இறந்தகாலத்தில், ரெங்கோ டெமிசெவைக் கப்பாற்றுகையில், அவனிடம் டெமிசெவை தீவிபத்தில் விட்டுவிடுமாறு எச்சரிக்கவேண்டும்; அப்போதுதான் டெமிசெவ் சாவான் என்று சொல்கிறார். அந்த நேரத்தில்தான் டெமிசெவ், இறந்தகாலத்தில் தன்னை ரெங்கோ காப்பாற்றுகையில் அவனை எச்சரித்த குரலே, ரெங்கோவுடையதுதான் என்ற உண்மையைச் சொல்கிறான். அதாவது, ஏற்கெனவே ரெங்கோ இறந்த காலத்துக்குப் பயணப்பட்டு, அங்கே தன்னால் காப்பாற்றப்படும் டெமிசெவை விட்டுவிடுமாறு எச்சரிக்கை செய்த அந்த மனிதனாக இருந்ததைச் சொல்கிறான். ஆக, ஒரே வழிதான் இருக்கிறது. டெமிசெவைக் காப்பாற்றும் ரெங்கோ கொல்லப்படவேண்டும். அப்போதுதான் டெமிசெவ் சாவான். அப்படி ரெங்கோவைக் கொல்வது யாரென்றால், தற்போது நிகழ்காலத்தில் இருக்கும் ரெங்கோதான் ! அவன்தான் இறந்த காலத்துக்குப் பயணப்பட்டு, தனது இறந்தகாலப் பிம்பமான ரெங்கோவைக் கொல்லவேண்டும். எனவே, பாரிசோவ், இதைச் செய்யுமாறு ரெங்கோவைக் கெஞ்சுகிறார். ஆனால் டெமிசெவோ, அப்படிச் செய்யாவிட்டால், தன்னிடம் இருக்கும் பணம், அதிகாரம் ஆகிய யாவையும் ரெங்கோவுக்கே சொந்தம் என்றும் ,தனது சாம்ராஜ்யத்தில் முக்கியமான இடம் அவனுக்கு அளிக்கப்படும் என்றும், எனவே, பாரிசோவைக் கொன்றுவிடுமாறும் சொல்கிறான்.

இந்த இடத்தில், கேம், பலவகையில் பிரிகிறது. இறந்த காலத்திற்குச் சென்று தன்னையே கொன்றால், நமக்கு ஒரு முடிவு கிடைக்கும். அல்லது, பாரிசோவைக் கொன்று, சர்வாதிகாரி டெமிசெவைக் காப்பாற்றினால், வேறொரு முடிவு கிடைக்கும். எதுவும் செய்யாமல் சும்மாவே இருந்தால், மூன்றாவது முடிவு.

கேமின் ஒவ்வொரு இடத்திலும், தூகிவாரிப்போட்டுக் கொண்டே இருந்ததில், இந்த கேம் என்னை சீட்டின் நுனியில் வைத்திருந்தது. அட்டகாசமான கிராஃபிக்ஸ். அபாரமான பின்னணி இசை. தத்ரூபமான ஜந்துகள். ஏராளமான ஆயுதங்கள். எந்த வகையிலும் இந்த கேம் சோடை போவதில்லை.

கேமின் சில இடங்களில், boss battles என்று சொல்லக்கூடிய, மிகப்பெரிய ஜந்துக்களுடன் போரிடும் காட்சிகள் உள்ளன. அவை, கலக்கல். அதேபோல், கேமின் சில இடங்களில் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து, கிடைக்கும் தடயங்களை வைத்து அடுத்த லெவலுக்குச் செல்லும் இடங்கள், அருமை.

பல இடங்களில், call of duty விளையாட்டு போலவே, ராணுவப் படைகளுடன் போரிடும் காட்சிகளும் உண்டு. தத்ரூபமாகக் குறிவைத்து, எதிராளியின் மண்டையை உடைக்கும் ஸ்னைபர் ரைஃபிள்அந்த இடங்களில் நம்மிடம் இருக்கும் என்பதால், அது ஒரு வகை ஜாலி. இந்த விளையாட்டின் அதிமுக்கிய அம்சம் – இருட்டில் மெல்ல நகரும் வகையிலான பல இடங்கள் வருகின்றன. அப்போதெல்லாம், தொலைவில் கேட்கும் உறுமல்கள், நம்மீது திடீரெனப் பாயும் ஜந்துக்கள், ஒளிந்திருந்து இந்த ஜந்துக்களைக் கொல்லும் tactics ஆகியனவே.

இது ஒரு first person shooter .

Singularity ட்ரைலர் இங்கே காணலாம்.

  Comments

10 Comments

  1. ஓப்பனிங் பேராஸ்ல நேர்ல நாமே போற மாதிரி இருக்கு.. செமயான எழுத்து நடை.. டைட்டில்ல சினிமா விமர்சனம்னு போட்டிருக்கலாம். நிறைய பேரு ஏதோ கட்டுரை என நினைத்து வராம போக வாய்ப்பு உண்டு..

    Reply
  2. >>
    நமது தளத்தில் சில முட்டாள்கள், சொந்தப் பெயரில் வர பயந்து பம்பி, வேண்டுமென்றே போலி பெயரில் வந்து இடும் காமெடியான பின்னூட்டங்களையெல்லாம் சேகரித்து, தமிழ்நாடு சைபர் போலீசில் கொடுத்தாகிவிட்டது.

    ஹா ஹா இது வேற நடக்குதா?

    Reply
  3. Hi

    How do you get knowledge from all areas like movie,games,books…
    Its very nice to read your blog.

    Reply
  4. first person shooter கேம்லாம் கொஞ்சம் போர்தான்! சிலதில் கதை காட்சிகளெல்லாம் நல்லாயிருக்கும் ஆனாலும் சும்மா சுட்டுகிட்டே இருக்கிறது போரடிக்கும்:-) ஆனாலும் எனக்கு சில விசயங்கள் அதில் பிடிக்கும் குறிப்பா sniper shooting.

    Reply
  5. டைம் ட்ராவல் மேட்டர்தான் கேமுக்கு த்ரில் கொடுக்குது….. உங்க நடைல அதை விவரிச்ச விதம் சூப்பர் பாஸ்..!

    Reply
  6. எஸ்.கே, Call of Duty series விளையாண்டு பாருங்க.

    கருந்தேள்… PS3 வாங்குங்க தல. இப்படி PC game-க்கே.. விமர்சனம் எழுதி போரடிக்கலையா?

    அஸாஸின் க்ரீடை அதில் விளையாட வேணாமா? 🙂

    Reply
  7. //மறுபடியும் இறந்த காலத்துக்குச் சென்று, ஒரு சக்திவாய்ந்த வெடிகுண்டை வைத்து அந்தத் தீவையே அழித்துவிட்டால், தற்போதைய கதிர்வீச்சுப் பிரச்னை முடிந்துவிடும்.//

    LOST!!!!!!

    Reply
  8. @ மதுரை சரவணன் – படுபயங்கரமான டெம்ப்ளேட் கமெண்டா இருக்கே 🙂

    @ சி.பி. செந்தில்குமார் – சினிமா விமரிசனம்னு போட்டா, மக்களை ஏமாத்துற மாதிரி ஆயிருமே. அதான் போடல. புடிக்கிறவங்க படிக்கட்டுமே. அதான் நம்ம பாலிசி. அப்புறம், அந்த சைபர் போலீஸ் மேட்டர் நம்ம சைட்ல போட்டு ஒரு வருஷம் ஆகுது. அடிக்கடி அவங்க கிட்ட பேசிக்கினு தான் இருக்கேன். ஸ்பேம் பின்னூட்டம் எல்லாமே அப்பப்ப அவங்களுக்குப் போவுது. ஸ்பேம் போடுற லூசுக கலி தின்னா நமக்கு நல்லதுதானே 🙂

    @ selva – எல்லாமே இன்டர்நெட்டாலதான் பாஸ். விக்கிபீடியா இருக்க என்ன கவலை? எது பத்தி தேடினாலும் அது சொல்லுது. இப்புடித்தான் தேடித்தேடி படிக்கிறோம். ஒரு கும்பலே இருக்கு பாஸ். நம்ம சைட்ல இருக்குற ப்ளாக் லிஸ்ட் படிச்சிப் பாருங்க. அத்தனை பேரும் இப்புடி திரியிரவங்க தான் 🙂 . . நன்றி

    @ எஸ். கே – இதுல இருக்குற அட்வான்டேஜ், குறிபார்த்து சுட்டு, எதிரிங்களை வெடிச்சி சிதற வைக்கலாம். ரத்தம் பீய்ச்சும். மண்டை சிதறும். பார்க்கவே ரொம்ப குஷியா இருக்கும் 🙂 . . ஹீ ஹீ ஹீ

    @ பன்னிகுட்டி ராம்சாமி – நன்றி. முடிஞ்சா வெளையாடியும் பாருங்க.

    @ நன்றி – call of duty – black ops முடிச்சாச்சு தல. ரிவ்யு போடுறேன். அப்புறம், ப்ளேஸ்டேஷன் 3 க்கு டார்கெட் – இந்த டிசம்பர். அதுக்குள்ள கட்டாயம் வாங்கிருவேன். வாங்குனவாட்டி சொல்றேன். ரெடியா இருங்க. 🙂

    லாஸ்ட் மாதிரிதான் இருக்கு 🙂 ..

    Reply

Join the conversation