குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்

by Karundhel Rajesh May 26, 2017   Cinema articles

நான் பதிவு (அல்லது பாதிவு) எழுத வந்ததில் இருந்தே இந்தக் குறியீடு என்ற வார்த்தை இணைய உலகில் நாயடி பேயடி வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். எப்போதுமே பிற இடங்களில் என்னென்ன பின்பற்றப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் ரிவர்ஸில் திருகி, நசுக்கி, பிதுக்கியே பின்பற்றுவது தமிழ் மக்களாகிய நமது வழக்கம்.

உதாரணமாக, புரட்சி என்ற அருமையான வார்த்தையை நாம் ‘புர்ச்சி’யாக மாற்றிவிட்டோம். சினிமாவில் நாலு புர்ச்சி வசனங்கள் பேசி நடித்தால் புரட்சித் தலைவர் என்று பட்டம். அதுவே அந்தப் புரட்சித் தலைவருடன் நடித்தாலே போதுமானது – புரட்சித் தலைவி பட்டத்தை எடுத்து வழங்கிவிடுவோம். இதுகூடப் பரவாயில்லை. இங்லீஷ் மொழியின்மேல் தமிழர்களாகிய நமக்கு இருக்கும் வெறி கட்டுக்கடங்காதது. பின்னே? ஒரு தமிழ்த் தலைவர் இங்லீஷில் நன்றாகப் பேச, எழுதத் தொடங்கிவிட்டாலேயே பெர்நாட்ஷாவை வம்புக்கு இழுத்து, வம்படியாக ‘தென்னாட்டு பெர்நாட்ஷா’ என்று பட்டம் கொடுத்து விடுவோம். இதுபோல் தளபதி, புரட்சி தளபதி, புரட்சித் தமிழன், இளைய தளபதி என்று இந்தப் புரட்சி வாங்கும் அடி கொஞ்சநஞ்சம் அல்ல. இதைப் பற்றிச் சாரு விரிவாகவே எழுதியிருக்கிறார்.

இதேதான் குறியீடு என்ற விஷயத்துக்கும் தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது.

திரைப்படங்களில் குறியீடு என்றால் என்ன?

ஏதோ ஒரு மறைபொருளான கருத்தை, வெளிப்படையான ஒரு சம்பவத்தின் மீதோ காட்சியில் இடம்பெறும் கதாபாத்திரங்கள்/பொருட்கள் மீதோ சுமத்திக் காட்டுவதே குறியீடு. இதில் என்ன முக்கியம் என்றால், ‘இதோ பாருங்கள் குறியீடு.. இதோ இங்கே குறியீடு வைத்திருக்கிறேன் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றெல்லாம் இயக்குநர் கூவக்கூடாது. அதாவது, எதையாவது பார்த்தவுடனேயே வெளிப்படையாகக் குறியீடு என்பது தெரிந்துவிட்டது என்றால் அது குறியீடே அல்ல என்று பொருள்.

உதாரணமாக, பழங்கால, சங்ககாலத்தில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் கூட, முத்தக் காட்சி என்றதுமே ஹீரோ & ஹீரோயின்கள் டகால் என்று குனிந்துகொள்ள, இரண்டு அசிஸ்டெண்ட்கள் கேமராவுக்கு வெளியே தயாராகக் காத்திருந்து, நீட்டும் இரண்டு பெரிய பூக்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும். முத்தத்தைப் பூக்கள் ஒன்று சேர்வதாகக் காட்டுகிறார்களாம். இதுதான் குறியீடு என்று பலரும் இன்றும் நம்புகிறார்கள் (!!!???). அஸிஸ்டெண்டுக்குக் கற்பனை வளம் அதிகமாக இருந்தால், அந்த இரண்டு பூக்களும் கண்டபடி பின்னிப் பிணைந்து கில்மா செய்வதும் உண்டு (!!!!???). அப்படியென்றால், ஹீரோவும் ஹீரோயினும் ‘பெரிய’ வேலை செய்கிறார்கள் என்று அர்த்தமாம்.

இது அல்ல குறியீடு. இரண்டு பேரும் குனிந்தவுடனேயே, ரசிகனுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துவிடும். அங்கே பூக்களே தேவையில்லை. பூக்கள் என்பது ரசிகனை அண்டர் எஸ்டிமேட் செய்யும் வேலை.

குறியீடு என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ‘சிடிஸன் கேன்’ படத்தில், ‘ரோஸ்பட்’ என்ற வார்த்தையை உச்சரித்தபடியே கேன் இறந்துபோகிறார். அது என்ன என்று படம் முழுக்க ஒருவன் தேடுகிறான். இறுதியில்தான் தெரிகிறது – அது அவர் சிறுவயதில் வைத்திருந்த ஒரு Sled – பனியில் சறுக்கும் சாதனம். அப்படியென்றால் என்ன? மரணப்படுக்கையில் அந்த sledஐ அவர் மிஸ் செய்கிறார் என்றா அர்த்தம்? அது கிடைத்தால் ஜிங் என்று படுக்கையில் இருந்து குதித்துப் பனியில் சறுக்கித் துள்ளி விளையாட ஆரம்பித்துவிடுவாரா?

இல்லை. அந்த ஸ்லெட் என்பது அவர் முற்றிலுமாக இழந்த அவரது இளமைப்பருவத்தையே குறிக்கிறது. மரணப்படுக்கையில் இதை நினைவுகூரும் கேன், ‘என்னுடைய அருமையான இளமையை முற்றிலுமாகத் தொலைத்துவிட்டேனே’ என்று ஆற்றாமையால் வருந்தியே இறக்கிறார்.

இதுதான் குறியீடு. ஒரு குறியீடு இப்படித்தான் மறைபொருளாகப் படம் முழுக்க விரவியிருக்கவேண்டும். இப்படி இருந்தால்தான், ஆடியன்ஸின் புத்திசாலித்தனத்தை underestimate செய்யாமல், அவர்களை மதித்து, ஒரு இயக்குநர் அவர்களையும் தனது ஆட்டத்தில் விளையாட அழைக்கிறார் என்று அர்த்தம்.

சிடிஸன் கேன் எடுக்கப்பட்ட வருடம் – 1941 என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதுதான் இங்கே மிகவும் முக்கியம்.

ஆக, 1941இலேயே, ஒரு இயக்குநருக்கு இப்படிப்பட்ட குறியீடுகள் பற்றிய முழுமையான புரிதல் இருந்திருக்கிறது. அதுவும் எப்படிப்பட்ட காலகட்டம் அது? நாம் இந்தியா முழுக்க, நமது புராணங்களில் இருந்து பக்திக் கதைகளை எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்த காலம். இதுகூடப் பரவாயில்லை. அதற்கும் பல ஆண்டுகள் முன்னரே, 1925இலேயே செர்கய் ஐஸன்ஸ்டீன் என்ற மேதை, ‘பேட்டில்ஷிப் போடம்கின்’ என்ற படத்தை ரஷ்யாவில் இயக்கிவிட்டார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும், அந்த நாட்டின் மண் சார்ந்த படங்கள்தான் ஆரம்பகாலத்தில் எடுக்கப்பட்டிருக்கும். யுனைடட் ஸ்டேட்ஸில் கூடத் துவக்ககாலத்தில் பல்வேறு genreகள் இப்படி முயற்சிசெய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், நம் நாட்டில் விடாப்பிடியாகப் புராணங்களையே நாம் பலவருடகாலம் பிடித்துத் தொங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறோம். அப்படியே ஹாலிவுட்டிலிருந்து கவலையே படாமல் காப்பிகளும் துவக்ககாலத்திலேயே அடித்துத் தள்ளியிருக்கிறோம். ஆனால் இவை அல்ல நான் சொல்ல வருவது.

எந்தக் குறியீடுமே, இயக்குநர் வலிந்து திணிப்பதாக இருக்கக்கூடாது. அதுதான் முக்கியம். அப்படித் திணித்தால், அது ‘குறி ஈடு’ ஆகிவிடும். அதாவது, வெளிநாட்டில் புரட்சி என்றால் என்ன? அதுவே தமிழ்நாட்டில் அதற்கு அர்த்தம் என்ன என்று பார்த்தோம் அல்லவா? அப்படிப்பட்ட பரிகாசத்துக்கு உரிய வார்த்தை ஆகிவிடும்.

இது ஒரு புறம் என்றால், ஒன்றுமே இல்லாத ஒரு காட்சியில்கூட, ரசிகர்களுக்கு அந்த இயக்குநரைப் பிடித்துவிட்டால், அவர்களே உருவாக்கும் குறியீடுகள் பற்றிப் பல பக்கங்கள் எழுதலாம். பரத்வாஜ் ரங்கன் என்ற மணி ரத்ன ஆழ்வாரின் பக்தர், இப்படி மணி ரத்னத்திடமே ஓயாமல் பல குறி ஈடுகளைப் பற்றிக் கேட்க, ‘நான் சும்மா வைத்தவை அந்தக் காட்சிகள்.. அவற்றில் குறி யீடும் இல்லை ஒரு மண்ணும் இல்லை’ என்று மணி ரத்னம் இந்த பக்தரை curtஆக வெட்டிவிடுவதை Conversations with Mani Ratnam புத்தகத்தில் காணலாம். அந்த மட்டில் மணி ரத்னத்தின் நேர்மையை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

தமிழில் ஒரு சில இயக்குநர்களுக்கு மட்டும் இந்த ‘குறி ஈட்டுக் குவியல்’ பட்டம் எப்போதுபார்த்தாலும் ரசிகர்களால் வெறித்தனமாகக் கொடுக்கப்படுவதைக் காணலாம். மிஷ்கின் ஒரு உதாரணம். அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் பா. இரஞ்சித். இவர்களின் எந்தக் காட்சியிலும்- ஏன் போஸ்டர்களில் கூட – பல்வேறு குறியீடுகளை ரசிகர்களாகக் கண்டுபிடித்து ஆர்கசம் எய்துவது சமீபகாலங்களில் நடந்துகொண்டே இருக்கிறது. உதாரணமாக, பிசாசு படத்தில் பெரிய பொட்டு வைத்துக்கொண்டு ஒரு அம்மணி ஒரே ஷாட்டில் கொடூரமாக முறைத்துக்கொண்டு நிற்பார். அந்த அம்மணி பற்றி இணையமெங்கும் பல கருத்துகள் கொட்டப்பட்டன. அவற்றையெல்லாம் படித்தால், தன்னை ஒரு செர்கய் ஐஸன்ஸ்டைன் என்றே மிஷ்கின் நம்ப ஆரம்பித்துவிடலாம். அப்படிப்பட்ட கருத்துகள் அவை.

நேற்று வெளியான ‘காலா’ போஸ்டர்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குறி ஈடுகளின் எண்ணிக்கை இதுவரை 132438756321. இன்னும் சில நாட்களில், இந்த எண் infinity கூட ஆகலாம். ரஜினி அமர்ந்திருக்கும் வண்டியின் எண், அம்பேத்கர் இறந்த வருடம் என்று துவங்கி, அதில் வரும் நாய், ரஜினியின் தாடி வெள்ளையாக இருப்பது, மீசை கறுப்பாக இருப்பது, காலா என்ற பெயர்க்காரணம், ஸ்தல புராணம், தண்டவாளம், அதில் இருக்கும் கட்டைகளின் எண்ணிக்கை, மனிதர்கள் நடப்பது என்று துவங்கி, இரஞ்சித்தை ஒரு தேவதூதன் ஆக்கும் வேலை இணையம் முழுக்கவே பயங்கரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரஞ்சித் இயல்பான மனிதர் என்பதால் இவற்றைப் படித்து சிரித்துக்கொண்டிருக்கக்கூடும்.

இவற்றையெல்லாம் குறியீடு என்று எப்படி ரசிகர்கள் சொல்கிறார்கள் என்பதே புதிராக இருக்கிறது. அம்பேத்கர் இறந்த வருடம் பற்றி அம்பேத்கரைத் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அது எப்படிக் குறியீடு ஆகும்? அதன்மூலம் சொல்லவரும் விஷயமல்லவா குறியீடு? வெறுமனே ஒரு எண்ணை ஒளித்துவைத்துவிட்டால்  அது குறியீடு ஆகிவிடுமா?? இதேபோல், ‘நீலம்’ என்ற அமைப்பு இரஞ்சித்தினுடையது. அது மிகவும் வெளிப்படையான கருத்துதானே? அது எப்படிக் குறியீடு ஆகும்? இரஞ்சித் வெளிப்படையாகத்தான் தனது கருத்துகளை எடுத்துவைக்கிறார். இவையெல்லாம் ரசிகர்களால் மிகமிக அதிகமான பில்டப் கொடுக்கப்பட்டு அவர்களைப் பொறுத்தவரை குறியீடுகளாக மாறி, இரஞ்சித்தைக் கடவுள் ஆக்கும் வேலை கனகச்சிதமாக நடந்துகொண்டு இருக்கிறது என்றுதான் இதை அவதானிக்க இயலும்.

Symbolism மற்றும் Semiotics என்பது ஒரு சமுத்திரம். அவற்றைப் பற்றி இணையத்தில் படித்துப் பாருங்கள். ஏராளமான தகவல்கள் கிடைக்கும். அவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் – அவற்றை எப்படிக் கவனிக்க வேண்டும் என்பது நிஜமாகவே நமக்குத் தற்போதைய காலகட்டத்தில்தான் தேவை. அவற்றை முதலில் நாம் உள்ளது உள்ளபடி புரிந்துகொண்டால்தான் குறியீடுகள் என்று நாம் நம்பும் விஷயங்கள் உண்மையில் வெறும் ‘குறி  ஈடு’கள்தான் என்று நமக்குப் புரியும். துவக்ககாலத்தில் இருந்து நமது முன்னோர்கள் உணர்ச்சிவசப்பட்டு நடிகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் என்ன செய்தார்களோ (உணர்ச்சிவசப்பட்ட ஆர்கச நிலையில் அவர்களுக்குப் பட்டம் கொடுத்து அவர்களைக் கடவுள் ஆக்குவது), அதையேதான் நாமும் தற்போது செய்துகொண்டிருக்கிறோம் என்பதாவது நமக்குப் புரியவேண்டும்.

ஒரு இயக்குநரை நிம்மதியாகப் படம் எடுக்க விட்டாலே போதும். அவரைப்பற்றி ஆஹா ஓஹோ என்று பில்டப் கொடுப்பதால் எரிச்சலே மிஞ்சும். இதுவேதான் தற்போதைய அஜீத் பற்றி எழுதப்பட்டு வரும் சம்பவங்களும். அஜீத்தைப் புனிதர் ஆக்கும் வேலை கனகச்சிதமாக நடந்துகொண்டிருக்கிறது. விட்டால் செய்ண்ட் பால் போல அஜீத்தையும் ஒரு செய்ண்ட்டாக இவர்களே உருமாற்றி, போப்பையும் நம்பவைத்துவிடுவார்கள் போல. இப்படி எதையும் நாம் செய்யாமல், அவர்களை அவர்களின் இயல்பில் விட்டுவிட்டாலே போதும் – திரைப்படங்கள் நல்லதாக மாறும்.

எனவே, எதைப்பற்றி நாம் எழுதினாலும், முதலில் அவற்றை நன்றாகப் புரிந்துகொள்வோம். புரிந்துகொண்டு எழுதினால்தானே அவை உண்மை? இல்லாவிட்டால் நாம் எழுதுவது வெறும் உணர்ச்சிவசப்பட்ட நிலையின் சில வரிகள் என்றுதானே பொருள்? ஆகையால், குறியீடுகளின் நிஜப் பொருளை முதலில் அறிவோம். பின்னர் எல்லாவற்றிலும் குறியீடுகளைக் கண்டுபிடித்துக் கன்னாபின்னா என்று உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதைப் பார்த்துக்கொள்ளலாம்.

Lebowski Image source – http://imgur.com/jo5bjEB

  Comments

3 Comments

  1. Pechi

    Totally agree on your point about Baradwaj Rangan 😀

    Reply
  2. Lenin

    Ji waiting for your guardians of galaxy vol 2 review. Please share it

    Reply
  3. deva

    sir.
    nalla pathuvu…aana ithellaam padichchi purinjikara alavukku 100 la 40% makkalukku timeum illa pakkuvamum illa.

    my request. unga 80’s movies seriesa apdiye niruthiteenga.

    Mr.Aabavaanan movies information mudinja share pannunga. like inaintha kaigal,oomaivizhigal movie informations. pls

    Reply

Join the conversation