Softwareம் கருந்தேளும்

by Karundhel Rajesh September 6, 2020   Social issues

அந்திமழை செப்டம்பர் 2020 இதழ், ரெசிக்னேஷன் ஸ்பெஷல். அதில் என் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தது பற்றி நான் எழுதிய கட்டுரை.

பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் Lead SQAஆக இருந்த நான், எனது வேலையை விட்டது செப்டம்பர் 1, 2015. எனது பிறந்தநாளில். அதற்குக் காரணம், அந்தச் சமயத்தில் சினிமாவிலும் சாஃப்ட்வேரிலும் ஒரே சமயத்தில் வேலை செய்ய முடியாததே.  நான் 2012ல் இருந்தே இரண்டு வேலைகளையும் செய்து வந்தாலும், 2015ல் ஏதோ ஒன்றுதான் செய்யமுடியும் என்ற இடத்தில் வந்து நின்றது. எனவே, எது வேண்டும் என்று யோசித்து, பென்பொருள் வேலையை விட்டேன். அதன்பின் சினிமாவுக்கு வந்து இன்றுவரை மனதுக்குப் பிடித்த வேலையை செய்துகொண்டிருக்கிறேன்.

இப்போது யோசித்துப் பார்த்தால், 2003ல் இருந்து 2015 வரை பன்னிரண்டு வருடங்கள் சாஃப்ட்வேரில் இருந்தது ஒரு பெரிய காலகட்டம். மென்பொருள் துறைதான் எனக்கு வீடு வாங்க உதவியது. பல நண்பர்கள் கிடைத்தனர். ஏராளமான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். கல்லூரி முடித்துவிட்டு, வெளிவாழ்க்கை பற்றி எதுவும் தெரியாமல் இருந்த என்னை, ஒரு முழு மனிதனாக மாறுவதற்குப் பெரிதும் உதவியது சாஃப்ட்வேர் துறையே. இருக்கும் பெரிய நிறுவனங்கள் அனைத்துக்கும் சென்றிருக்கிறேன். அவற்றில் சில நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறேன். அவற்றில் அவ்வப்போது நடத்தப்படும் சுயமுன்னேற்ற வகுப்புகள் பலவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். இதனால் பலருடனும் பேசி, நம் கருத்தை ஆணித்தரமாக நிறுவும் திறன் இயல்பிலேயே வந்துவிட்டது. இதுபோல் பல விஷயங்களை நான் சிறுகச்சிறுகக் கற்றுக்கொண்டது மென்பொருள் துறைதான்.

அதேசமயம், சினிமாவில் நான் இல்லாவிட்டாலும் எப்படியும் இந்த ஐந்து வருடங்களில் இன்னும் 2,3 நிறுவனஙக்ள் மாறியிருப்பேன் என்றே தோன்றுகிறது. காரணம், நான் சந்தித்த அரசியல். அதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன். 

முதலில், மென்பொருள் நிறுவனங்களில் பல வகைகள் உண்டு. நான் சொல்வது சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்கள் என்ற அளவுகோல் அல்ல. மாறாக, இந்த நிறுவனத்தில் சேர்ந்தால் பல வருடங்களுக்குப் பிரச்னை இருக்காது; இந்த நிறுவனத்தில் அடிக்கடி ஆட்குறைப்பு நடக்கும் – இதுபோன்ற பிரிவுகளையே சொல்கிறேன். இதெல்லாம், 2003ல் இருந்து 2015 வரையான காலகட்டம்.  இந்தப் பன்னிரண்டு வருடங்களில் நான் 6 நிறுவனங்கள் மாறினேன். இறுதியில் வேலை செய்த நிறுவனத்தில் மட்டுமே நான்கரை வருடங்கள். மற்ற நிறுவனங்களில் 1ல் இருந்து 2 வருடங்களுக்குள் மாறிவிடுவேன். காரணங்கள் பல. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் ஒரே ஒரு முக்கியமான காரணம் – அரசியல். 

ஒரு உதாரணம் கொடுக்கிறேன். நான் பெங்களூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதில் எனக்கு மேலாளராக இருந்தது ஒரு வட இந்தியப் பெண். என்னுடன் ஒரே சமயத்தில் இன்னொரு வட இந்தியரும் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கும் இந்த வட இந்தியப் பெண்தான் மேலாளர். இயல்பிலேயே இந்த இரண்டு பேரும் ஒரே ஊர், ஒரே மொழி என்பதில் ஒன்றுசேர்ந்துவிட்டனர்.  இது ஒரு புறம். அதேபோல், தமிழகம் – ஊட்டியைச் சேர்ந்த ஒரு நபரும் எங்கள் டீமில் இருந்தார். எனவே நானும் அவரும் தமிழில் பேசிக்கொள்வது வழக்கம். ஒரு நாள், அதே நிறுவனத்தின் பக்கத்துக் கட்டிடத்தில் இருந்த எனது கல்லூரி நண்பனுடன் மதிய உணவு சாப்பிடச் சென்றேன். அப்போது என் டெஸ்க்குக்குப் பக்கத்தில் இருந்த அந்த ஊட்டி நபருக்கு இந்த வட இந்திய மேனேஜரிடம் இருந்து ஃபோன். அவர் அப்போது எங்கோ போய்விட்டுக் காரில் அலுவலகம் வந்துகொண்டிருக்கிறார். ஊட்டிக்காரரிடம், ‘ராஜேஷ் அங்கே இருக்கிறாரா? இருந்தால் பேசச்சொல்லுங்கள்’ என்று சொல்ல, நான் அங்கே இல்லை. பக்கத்துக் கட்டிடத்தில் எனது நண்பனுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஊட்டிக்காரர், ராஜேஷ் இங்கே இல்லை என்று சொல்ல, வட இந்திய மேனேஜர் ஃபோனை வைத்துவிட்டார்.

மறுநாள், எங்கள் அனைவருக்கும் பொதுவான மேலாளருடன் ஒரு மீட்டிங். நான் செல்கிறேன். வட இந்திய மேனேஜர் அங்கே இருக்கிறார். இருவர் மட்டுமே. அப்போதே புரிந்துவிட்டது. ஏதோ நடந்திருக்கிறது என்று. குறுக்குவிசாரணை ஆரம்பிக்கிறது.

வட இந்திய மேலாளர் – நேற்று மதியம் உணவு இடைவேளையில் உங்களை நான் அழைத்தேன். அப்போது நீங்கள் அங்கு இல்லை. எங்கு இருந்தீர்கள் என்று சொல்லமுடியுமா?

நான் – பக்கத்துக் கட்டிடத்தில் என் நண்பனுடன் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

வ.இ. மே – இல்லை. நீங்கள் ஒரு பெண்ணை பைக்கில் பின்னால் வைத்துக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்தீர்கள். அதை நானே என் கண்ணால் பார்த்தேன்

நான் – துளிக்கூட வாய்ப்பே இல்லை. இங்குதான் இருந்தேன். வேண்டுமென்றால் இதே நிறுவனத்தில் பணி புரியும் என் நண்பனிடம் கேளுங்கள். 

வ.இ.மே – சரி நீங்கள் போகலாம்

என்ன விஷயம் என்றால், அவர் அலுவலகம் வரும்போது எவனோ ஒரு பெண்ணுடன் பைக்கில் செல்வதைப் பார்த்திருக்கிறார். அவர் கண்ணுக்கு அது நானாகத் தெரிந்திருக்கிறது. உடனே விசாரணை. அன்றில் இருந்து, அந்த வட இந்திய மேலாளர் என்னுடன் சகஜமாகப் பேசுவதை நிறுத்திவிட்டார். அவ்வப்போது வேலை சம்மந்தமாக மட்டுமே பேசுவார்.

இதன்பின் பல மாதங்கள் கழித்து, அலுவலகத்தில் திடீரென்று எனக்கு அழைப்பு. உங்களை வேலை நீக்கம் செய்யப்போகிறோம் என்று. நான் கவலைப்படவில்லை. அடுத்த வாரமே இன்னொரு பெரிய நிறுவனத்தில் 50% அதிக சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டது. அங்கேதான் நான்கரை வருடங்கள் இருந்தேன். ஆனால் இங்கே சொல்லவந்தது, எதற்காக என்னை வேலையில் இருந்து எடுக்கிறீர்கள் என்று நான் கேட்கவில்லை. காரணம், என்னுடன் வேலைக்கு சேர்ந்த வட இந்திய நபர் முதலிலேயே என்னிடம் சொல்லிவிட்டார். முதலில் அவரைத்தான் தூக்குவதாக இருந்ததாகவும், என் வட இந்திய மேலாளர் அவரை அழைத்து, உன்னைத் தூக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்று சொன்னதாகவும் (அப்படிச் சொல்லவே கூடாது. அது அலுவலக விதிகளுக்குப் புறம்பானது), அப்படிச் செய்யவேண்டாம் என்று இவர் கெஞ்சியதாகவும், ‘சரி.. நாம் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். எனவே உன்னைத் தூக்கமாட்டேன். மாறாக ராஜேஷைத் தூக்கிவிடுகிறேன்’ என்று அந்த வட இந்திய மேலாளர் சொல்லியிருக்கிறார். இதுதான் காரணம்.

நான் பார்த்தவரை, எனக்கு அமைந்த மேலாளர்களில் ஓரிருவர் மட்டுமே நியாயமானவர்கள். அவர்களில், அந்த வட இந்திய மேலாளரின் தலைமை மேலாளர் குறிப்பிடத்தக்கவர். அதாவது, வட இந்தியரின் நேரடி மேலாளர். அவரிடம் பலமுறை பேசியிருக்கிறேன். தனக்குக் கீழ் வேலை செய்பவர்களின் பிரச்னைகள் அறிந்து, அவர்களுக்கு உதவுபவர். அவரிடம், இந்த வட இந்திய மேலாளர் எனக்கு எதிராக இப்படி ஒரு பாலிடிக்ஸ் செய்கிறார் என்று சொல்லியிருந்தால் தக்க நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனால் அப்படி நடந்தாலும் எப்படியும் அந்த வட இந்தியருடன்தான் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அவரை நான் அணுகவில்லை. அடுத்த நிறுவனம் மாறிவிட்டேன்.

இது ஒரு சாம்பிள் மட்டுமே. பொதுவாக, முதலில் இருந்தே என் வழக்கம், எனக்கு ஒரு பிரச்னை வந்தால் எங்கிருந்து வந்திருக்கிறதோ அந்தக் காரணத்தை நேரடியாகச் சென்று சந்திப்பதே. மென்பொருள் துறையில் ஒரு protocol உண்டு. ஒரு பிரச்னை வந்தால் நமது மேலாளரிடம்தான் முதலில் பேசவேண்டும். அதன்பின் அவர், அவரது மேலாளரிடம் பேசுவார். இப்படி இருக்கும். ஆனால் மேலாளரே பிரச்னை என்றால்? அந்தச் சமயங்களில் நாம் என்ன பேசினாலும் அது அவரது மேலாளருக்குச் செல்லாது. எனவே, நான் பொதுவாக இப்படிப் பிரச்னை வந்தால், நேரடியாக அலுவலகத்தின் மிகப்பெரிய தலை எதுவோ, அந்த VPயிடமே நேராகப் பேசுவது வழக்கம். இப்படிப் பேசி, பல பிரச்னைகளைத் தீர்த்திருக்கிறேன். எனக்கு மட்டும் அல்ல- பேசவே தயங்கும் சக நண்பர்களுக்காகவும்தான். இதனாலேயே வேறு சில நிறுவனங்களில் என் மேலாளர்களின் வெறுப்பையும் சம்பாதித்திருக்கிறேன். ஆனால் அவற்றைப்பற்றிக் கவலையே பட்டதில்லை. எது நல்லதோ அதைச் செய்யவேண்டும் என்பது என் நோக்கமாக இருந்தது. Hierarchyயை எதைப் பற்றியும் கவலைப்படாமல் மீறுவேன்.

இந்த பாலிடிக்ஸ் என்பது எல்லாபக்கமும் இருப்பதுதான். கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும் மேலாளரின் காலில் விழுந்துவிட்டால் வேலைக்குப் பிரச்னை இருக்காது. ஆனால் அது எனக்குப் பிடிக்காத செயல். மென்பொருள் துறையில் இது அவசியம் ஒரு பெரிய பிரச்னை. அங்கே வேலை செய்பவர்களுக்கு என்று எந்த யூனியனோ அமைப்போ கிடையாது. எனவே பல தொழிலாளர்களின் பிரச்னைகள் வெளியே வருவதே கிடையாது. இந்தக் கட்டுரை போன்று யாராவது எழுதினாலோ பேசினாலோதான் உண்டு. 

ஒருவேளை நான் இன்னமும் மென்பொருள் துறையில் இருந்திருந்தால் இப்போது ஒரு சீனியர் மேனேஜர் ஆகி, எனக்குக் கீழே ஒரு பெரிய டீம் இருந்திருக்கும். ஆனால் அப்போது நான் அவர்களுக்கு ஒரு சுமையாக இல்லாமல், அவர்களின் பிரச்னைகள் அறிந்து, அவர்களுடன் வெளிப்படையாகப் பேசும் மேனேஜராகவே இருந்திருப்பேன். அதுதான் தேவையும் கூட. அனைவரும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் இனம், மொழி, சாதி சார்ந்த பிரிவுகள் மென்பொருளிலும் உண்டு. அவற்றால் தேவையே இல்லாமல் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். 

உதாரணமாக, என்னுடன் வேலை செய்த வட இந்தியர்கள் அத்தனை பேரும், ‘நீ என்ன சாதி?’ என்று கேட்காமல் இருந்ததில்லை. சாதி வாரியாகத்தான் பழகுகிறார்கள் என்பதற்காக இதைச் சொன்னேன். அப்போதெல்லாம், ‘சொல்ல முடியாது. இனி இப்படி யாரிடமும் கேட்கவேண்டாம்’ என்றே பதில் சொல்வேன். அதேபோல், நேரடியாக, அறிமுகம் இல்லாதவர்களிடமும் போய், ஹிந்தியில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார்கள். ஒருவர் கூட விதிவிலக்கில்லை. அப்போதெல்லாம் பதிலுக்கு நான் தமிழில் பேசுவேன். புரியவில்லை என்பார்கள். நானும் எனக்கு ஹிந்தி புரியவில்லை என்பேன். இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏராளம் உண்டு.  நான் வட இந்தியர்கள் மேல் குற்றம் சொல்லவில்லை. எனக்கு நடந்ததைச் சொன்னேன். என் நண்பனுக்கு ஒரு மேலாளர் இருந்தார். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரின் கீழ் வேலை செய்யும் வட இந்தியர்களும், ஒரு சில தென்னிந்தியர்களும்  அவர் சொல்வதை மதிக்க மாட்டார்கள் என்று வெளிப்படையாகவே சொல்லுவார். சில நாட்கள் கழித்து வேறு நிறுவனம் சென்றுவிட்டார்.

இன்னும் நிறைய எழுத முடியும்.  ஆனால், சொல்ல வந்தது, மென்பொருள் மட்டுமில்லாமல் எல்லாத் துறைகளிலும் அரசியல் உண்டு. நாம் அவற்றைத் துணிவுடன் எதிர்க்கவே வேண்டும் என்பதையே. யார் கண்டது? ஒருவேளை மென்பொருள் நிறுவனத்தில் நான் இப்போதுவரை இருந்திருந்தால் இந்நேரம் ஒரு யூனியனைத் துவங்கியிருக்கலாம். 

  Comments

2 Comments

  1. நேரடியாக மேலே பேசமுடியாத அல்லது தலைமை கண்டுகொள்ளாத பட்சத்தில் Employees Union ஒரு (சட்டப்படி) சிறந்த option… ஆனால் அதையும் bypass செய்வார்கள்… எங்கள் நிறுவனத்தில் சேரும் போதே அனைவருக்கும் manager பதவி… Managers யூனியன் துவக்கவோ அல்லது அதில் சேரவோ முடியாதாம்… அரசியல்…

    Reply
    • Hariprasad

      Karthik, மென்பொருள் நிறுவனங்களில் union என்பது எவ்வளவு எடுபடும்

      Reply

Join the conversation