Hollywood & A few Punch Dialogues

by Karundhel Rajesh May 16, 2017   Cinema articles

அந்திமழையின் மே 2017 இதழில், ஹாலிவுட் படங்களின் பஞ்ச் டயலாக்குகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரை இது.


தமிழ்ப்படங்களில் இப்போதெல்லாம் பஞ்ச் டயலாக் என்ற ஒரு வஸ்து தவறாமல் இடம்பெறுகிறது. ரஜினியில் இருந்து நேற்று திரைப்படங்களுக்கு வந்த இளம் ஹீரோ முதல் இப்படிப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் தவறாமல் வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட காட்சிகளுக்கு இளைய தலைமுறையினரிடம் வரவேற்பு இருப்பதே காரணம். இதனாலேயே, கதைக்கே சம்மந்தமில்லாமல், நடிக்கும் கதாநாயகனை மனதில் வைத்துக்கொண்டே இப்படிப்பட்ட பஞ்ச்கள் எழுதப்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில்தான் இப்படிப்பட்ட பஞ்ச்கள் அதிகம். ஹிந்தியில் ஓரளவு உண்டு. ஆனாலும், தமிழர்களுக்கு இப்படிப்பட்ட நாயகரளின் பின்னால் கண்மூடித்தனமாக ஓடும் வியாதி இருப்பது கண்கூடு. அதன் விளைவுதான் ரசிகர்களைத் திருப்திப்படுத்த எழுதப்படும் பஞ்ச் டயலாக்குகள் என்பதிலும் சந்தேகமில்லை. இதுவேதான் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் நடக்கிறது.

சரி. உலகிலேயே அதிகமான படங்களை ஒரு குடிசைத்தொழில் போல உற்பத்தி செய்துகொண்டிருக்கும் ஹாலிவுட்டில் இப்படிப்பட்ட பஞ்ச்கள் உள்ளனவா? அங்கெல்லாம் ரசிகர்களைத் திருப்தி செய்வது நடிகர்களுக்கு அவசியம் இல்லையா?

ஹாலிவுட்டிலும் பஞ்ச்கள் உண்டு. ஆனால் அவை எப்போதுமே கதையோடு சேர்ந்தே இருக்குமே தவிர, நடிக்கும் நாயகனுக்காக எழுதப்படாது. இதுதான் ஹாலிவுட் வசனங்களின் சிறப்பு. இதனாலேயே அங்கெல்லாம் பஞ்ச்கள் என்று அழைக்கப்படாமல், ‘ஒன் லைனர்ஸ்’ என்றே இவை அழைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட ஹாலிவுட் படங்களின் சிறந்த சில ஒன் லைனர்களை நாம் இந்தக் கட்டுரையில் கவனிக்கலாம். இவைகளைத் தவிரவும் ஏராளமான ஒன் லைனர்கள் உண்டு என்றாலும், அவற்றில் ஒரு சிலவற்றைப் பற்றி எழுதுவதே நோக்கம்.

ஹாலிவுட்டின் முதல் பேசும் படமாகிய ‘ஜாஸ் சிங்கர்’ (1927) படத்தில் ஒரு வசனம் உண்டு. “Wait a minute! Wait a minute! You ain’t heard nothin’ yet. Wait a minute, I tell ya, you ain’t heard nothin’! Do you wanna hear ‘Toot, Toot, Tootsie!’? என்று துவங்கும் வசனம் அது. இதைத்தான் உலகின் முதல் பஞ்ச் வசனம் என்று சொல்லவேண்டும். காரணம் இதுதானே உலகின் முதல் பேசும் படம்? அதில் வரும் துவக்க வசனத்தை உலகின் முதல் பஞ்ச் என்றுதானே சொல்லவேண்டும்? ஆடியன்ஸைப் பார்த்து ஜாக் ராபின் என்ற கதாபாத்திரம் இதைப் பேசும். ‘ஒலி திரைப்படங்களில் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. இனி ரகளைதான்’ என்று பொருள்படும் வசனம் இது.

இதன்பின் பெரிதும் நினைவுகொள்ளப்பட்ட வசனம் என்ன தெரியுமா? 1931ல் வெளியான Frankenstein படத்தில், ஃப்ராங்கென்ஸ்டைன் கதாபாத்திரத்துக்கு உயிர் வந்து அது கைகளை அசைக்கும்போது, அதற்கு உயிர் கொடுத்த மருத்துவர், ஆச்சரியம் கலந்த வெறியோடு “Look! It’s moving. It’s alive. It’s alive… It’s alive. It’s moving, it’s alive, it’s alive, it’s alive, it’s alive, IT’S ALIVE!” என்று கத்தும் வசனம்தான். அது இன்றுவரை பிரபலம். ஹாலிவுடின் சாகாவரம் பெற்ற ஒன் லைனர் இது.

யுனைடட் ஸ்டேட்ஸின் மிகப்பிரபலமான நாவல் ‘Gone with the wind’. மார்கரெட் மிட்செலால் எழுதப்பட்டது. இந்த நாவல் ஹாலிவுட்டில் 1939ல் படமாக்கப்பட்டது. அந்த நாவலின் ஹீரோ (ஆண்ட்டி ஹீரோ) ரெட் பட்லர், கதாநாயகி ஸ்கார்லெட் ஓ ஹாராவிடம், “Frankly, my dear. I don’t give a damnஎன்று சொல்லும் வசனம் உலகப் பிரசித்தம் அடைந்தது. ரெட் பட்லராக நடித்தவர் க்ளார்க் கேபிள். ஹாலிவுட்டின் கனவு நட்சத்திரம். எனவே இந்தப் படமும் சரி, இந்த வசனமும் சரி, இன்றும் மறக்கப்படாமல் இருந்துகொண்டிருக்கிறது.

அடுத்த பன்ச் டயலாக், 1941ல் வெளியான ‘Citizen Kane’ படத்தின் பிரபல வசனம். படத்தில் சிடிஸன் கேனாக நடித்து இயக்கியிருந்த ஆர்ஸன் வெல்லிஸ், தனது மரணப்படுக்கையில் உச்சரிக்கும் பெயர்.  “R-o-s-e-b-u-d.” இந்தக் காட்சியில் ஒரு சஸ்பென்ஸ் உண்டு. படத்தின் துவக்கம்  முதலே இதற்கு என்ன அர்த்தம் என்ற சஸ்பென்ஸ் ஏற்படும். இதற்கு விடை, படத்தின் இறுதிக்காட்சியில் விளங்கும். ஒருவேளை படத்தை இன்னும் பார்க்காத நபர்களுக்காக, அந்த சஸ்பென்ஸை உடைக்காமல் விடுகிறேன். ஆனால் ரோஸ்பட் என்பது இன்றும் பல லட்சக்கணக்கான சினிமா ஆர்வலர்களுக்கு ஆர்ஸன் வெல்லிஸை நினைவுபடுத்தாமல் போகாது.

அடுத்த பஞ்ச் வசனம், “Of all the gin joints in all the towns in all the world, she walks into mine” என்ற வசனம். இது 1942ல் வெளியாகி உலகெங்கும் பிரம்மாதமாக ஓடிய ‘Casablanca’ திரைப்படத்தில் இடம்பெறும் வசனம். ஒரு உடைந்துபோன காதல் மறுபடி துளிர்க்கையில் வரும் வசனம் இது. சுருக்கமாக: காதலன் காதலி. திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். ஆனால் திருமணத்தன்று காதலி காணாமல் போகிறாள். சில வருடங்கள் கழித்து, இவனை ஒரு இடத்தில் சந்திக்கிறாள். அப்போது நாயகன் பேசும் காட்சி இது. காதலி எங்கே போனாள்; இப்போது ஏன் இவனை சந்தித்தாள் என்பதெல்லாம் படம் பார்க்கையில் புரியும். கிட்டத்தட்ட இதே உணர்வுகளை ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் காணமுடியும்.

“Well, uh – a boy’s best friend is his mother.” இதுதான் உலகைக் கலக்கிய அடுத்த பஞ்ச். இது இடம்பெற்ற படம் – ‘Psycho’. ஹிட்ச்காக்கின் அமரத்துவம் வாய்ந்த படம். படத்தின் அடிநாதமே, தாயின் பிணத்தைத் தன்னுடனேயே வைத்திருக்கும் சைக்கோ மகன் பற்றியது. அவனது குணத்தை ஆடியன்ஸுக்குத் தெரியப்படுத்தும் வசனம் இது. ஆனால் இது வரும்போது படத்தில் இதெல்லாம் யாருக்கும் தெரியாது. க்ளைமேக்ஸ் முடிந்ததும்தான் இந்த வசனத்தின் முக்கியத்துவம் எல்லாருக்கும் புரியும். படத்தின் கருவை முதலிலேயே வெளிப்படையாகப் பேசும் வசனம் இது. படத்தில் சைக்கோவாக வரும் நார்மன் பேட்ஸ், படத்தில் குளியலறையில் கொல்லப்படும் (இன்னொரு புகழ்பெற்ற காட்சி) விவியன் லேயிடம் படத்தின் துவக்கத்திலேயே பேசும் வசனம். இதுதான் ஹிட்ச்காக்கின் ஜீனியஸ்.

இதற்கு அடுத்த பஞ்ச், இன்றுவரை பல படங்களில் சொல்லப்பட்டுவிட்டது. உலகுக்கு என்றும் அழியாத ஒரு ஹீரோவை அளித்த முதல் படமான ‘Doctor No’ (1962)வில் வரும் வசனம் இது. “…Bond. James Bond.” பேசியவர் ஷான் கானரி. இதுவரை அனைத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் வந்துவிட்ட பஞ்ச் இது.

செர்ஜியோ லியோனி இயக்கிய புகழ்பெற்ற வெஸ்டர்ன் படமான ‘The Good, The Bad, and the Ugly (1966) படத்தில் இடம்பெற்ற “You see, in this world there’s two kinds of people, my friend: Those with loaded guns and those who dig. You digஎன்பதுதான் அடுத்த பஞ்ச். இந்தப்படத்தில் நாயகனாக நடித்த க்ளிண்ட் ஈஸ்ட்வுட் அடிக்கடி பேசும் வசனம் இது. படத்தின் க்ளைமேக்ஸில், சமாதிக்கு உள்ளே இருக்கும் புதையலைத் தோண்டுகையில் வரும் வசனம். இதன் முதல் பகுதியான “You see, in this world there’s two kinds of people, my friend:மட்டும் அடிக்கடி வரும். அதன் இரண்டாம் பகுதி மட்டும் மாறும். என்றும் அழியாமல், மனதில் பசுமையாக நினைவிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.

“I’m gonna make him an offer he can’t refuse.” இது அடுத்த பஞ்ச். இது இடம்பெற்ற படம், நம்மூரில் குஞ்சு குளுவானுக்குக் கூடத் தெரியும். ’1972ல் வெளியான ‘The Godfather’. உலகெங்கிலும் வெளியான பல கேங்ஸ்டர் படங்களுக்கு முன்னோடி. தமிழில் நாயகன் திரைப்படத்துக்கு இன்ஸ்பிரேஷனாக விளங்கிய படம். காட்ஃபாதராக நடித்த மார்லன் ப்ராண்டோவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் பெற்றுத்தந்த படம் (அவர் அதை வாங்கவில்லை என்பது வேறு விஷயம். காரணத்தைத் தேடிப்படித்துக்கொள்க).

இதற்கடுத்த பஞ்ச், 1977ல் வெளியாகி, இன்றுவரை உலகின் அத்தனை பேராலும் விரும்பப்பட்ட கல்ட் படங்களில் ஒன்றாக விளங்கிக்கொண்டிருக்கும் படம் ஒன்றில் இடம்பெறுவது. இதை இயக்கியவர் ஜார்ஜ் லூகாஸ். இப்போது எளிதில் விளங்கியிருக்குமே? Star Wars. The Force will be with you, always”படத்தில் அடிக்கடி இடம்பெறும் வசனம் இது. ஜெடாய் போராளிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது அவர்கள் உச்சரிக்கும் வசனம். இன்றுவரை பல ஸ்டார் வார்ஸ் படங்களில் இது வந்துவிட்டது. இதைச் சொன்னாலே புல்லரிக்கும் வகையில் இந்த வசனம் படத்தில் கையாளப்பட்டிருக்கும். அதே ஸ்டார் வார்ஸ் சீரீஸில் 1980ல் வெளியான இரண்டாம் படமான ‘Empire Strikes Back’ படத்தில், ஒரு முக்கியமான கட்டத்தில், வில்லன் டார்த் வேதெர், ஹீரோ லூக் ஸ்கைவாக்கரிடம் சொல்லும் “No, I am your fatherஎன்ற உலகப்பிரசித்தமான வசனத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இருவருக்குமான உறவு முதன்முறையாக ஸ்கைவாக்கருக்குத் தெரியும் இடம் இது. ஆடியன்ஸ் அதிர்ச்சியடைந்த இடமும் கூட.

“I’ll be back – இது என்ன படம் என்று தெரிகிறதல்லவா? ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘The Terminator’ (1984) படத்தில் அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனிக்கரின் கதாபாத்திரம் பேசும் வசனம். அந்தப் படத்தில் அதுதான் வில்லன். ஆனால் பின்னர் கெமரூன் இயக்கிய ‘Judgement Day’ படத்தில் ஹீரோவாக நடித்த கதாபாத்திரம் இது. அப்படத்திலும் இதை சொல்லும். இந்த வசனத்தைக் கேட்டாலே அர்நால்டின் முகம் மனதில் தோன்றுவதுதான் இதன் விசேடம். இதன் இரண்டாம் பாகத்தில் அர்நால்ட் பேசும் “Hasta la vista, baby” வசனமும் மறக்கமுடியாதது.

அடுத்த பஞ்ச்சின் விசேடம், அது ஒரு கெட்ட வார்த்தை என்பதே. ஆனால், அது உச்சரிக்கப்படும் இடம், மிகுந்த ஜாலியான இடம். ஒரு கட்டிடம். அதனுள் வில்லனிடம் பணயக்கைதியாக மாட்டியிருக்கும் மனைவி. அந்த மனைவியோடு பிரச்னை என்றாலும், அவளைப் பார்க்க வரும் கணவன், இதை உணர்கிறான். தன்னந்தனியாக அவளைக் காப்பாற்ற உள்ளே ரகசியமாக நுழைகிறான். ப்ரூஸ் வில்லிஸை உலகம் முழுக்கவும் சூப்பர்ஸ்டாராக மாற்றிய படம், ‘Die Hard’ (1988). இதில், வில்லனைப் பார்த்து ப்ரூஸ் வில்லிஸ் கதாபாத்திரம் பேசும் வசனமான “Yippie ki-yay, motherfuckerஇன்றும் பிரபலமான வசனம். ப்ரூஸ் வில்லிஸின் கதாபாத்திரமே, ஆபத்தில் குருட்டு தைரியத்தோடு நுழைந்து அதிரடிகள் புரியும் பாத்திரம் என்பதால் இந்த டயலாக் மிகவும் பிரபலம் ஆனது.

1991ல் வெளியான ‘The Silence of the Lambs’, உலகுக்கு ஒரு புதுவகையான வில்லனை அறிமுகப்படுத்தியது. தனக்குப் பிடிக்காதவர்களைக் கொன்றுவிடுவதோடு மட்டும் அல்லாமல், அவர்களை சமைத்துச் சாப்பிட்டுவிடும் கதாபாத்திரம் இது. மட்டுமல்லாமல், அந்த சமையலை, தன் நண்பர்களுக்கும் அவர்கள் அறியாமல் பறிமாறும் சைக்கோவான டாக்டர் ஹான்னிபல் லெக்டர் பேசும் வசனம் இது. படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் க்ளாரீஸ் ஸ்டார்லிங்கிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, “A census taker once tried to test me. I ate his liver with some fava beans and a nice Chianti என்று சொல்வார். அவரது குரூரத்தை முழுக்க வெளிக்கொணர்ந்த வசனம் இது. அப்படி அவர் பேசுவதைக் கவனித்தாலே நம் முதுகெலும்பு சில்லிட்டுப் போகும். இந்தக் கதாபாத்திரத்துக்காக ஆண்ட்டனி ஹாப்கின்ஸுக்கு ஆஸ்கர் கிடைத்தது பற்றிச் சொல்லவே தேவையில்லை.

1994ம் வருடத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இப்போது அட்டகாசமான படங்களாகக் கொண்டாடப்படும் ஷஷாங்க் ரிடெம்ப்ஷன், பல்ப் ஃபிக்ஷன், ஃபாரஸ்ட் கம்ப், ஜுராஸிக் பார்க் ஆகியவை எல்லாமே ஒரே சமயத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில், ஆஸ்கர்களை அள்ளிய ஃபாரஸ்ட் கம்ப் படத்தில், “My Mama always said, ‘Life was like a box of chocolates; you never know what you’re gonna getஎன்ற வசனம் உலகப்புகழ் பெற்றது. இன்றும் பலரால் அடிக்கடி பகிரப்படும் வசனம் இது. ஃபாரஸ்ட் கம்ப்பின் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை இந்த ஒரே வசனத்தில் நம்மால் புரிந்துகொண்டுவிடமுடியும் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.

The greatest trick the Devil ever pulled was convincing the world he didn’t exist என்ற வசனம் The Usual Suspects (1995) படத்தில் பேசப்பட்டபோது, அதுவரை படம் பார்த்த ஆடியன்ஸ், சஸ்பென்ஸின் உச்சகட்டத்துக்குப் போயிருந்தார்கள்> காரணம், படத்தின் வில்லன் யார் என்பதை அந்த வில்லனே பேசும் காட்சி இது. அதுவரை படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களில் யாரெல்லாம் வில்லனாக இருக்கக்கூடும் என்ற கேள்வி ஆடியன்ஸின் மண்டையைக் குடைந்துகொண்டிருந்த நேரத்தில், துளிக்கூட சம்மந்தமில்லாத ஒரு நபர் (ஆனால் படம் முழுக்க வந்துகொண்டிருந்த நபரும் கூட)தான் வில்லன் என்று ரகசியத்தைப் போட்டு உடைத்தால் எப்படி இருக்கும்? இன்றுவரை ஹாலிவுட்டின் மிகச்சிறந்த சஸ்பென்ஸ் தருணங்களில் இதுவும் ஒன்று. இத்திரைக்கதையை எழுதிய க்ரிஸ்டோஃபர் மெக்வார்ரீ, இன்று ஹாலிவுடின் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவர்.

காமிக்ஸ் கதாபாத்திரங்களை வைத்துப் படங்கள் எடுக்கும்போது, காமிக்ஸின் ஃபீல் கச்சிதமாக வரும்படியேதான் படங்கள் எடுக்கவேண்டும். ஆனால் பல இயக்குநர்கள் தவறவிடும் இடம் இது. உதாரணமாக, பேட்மேனை மையமாக வைத்து Batman, Batman Returns, Batman Forever, Batman & Robin என்ற நான்கு படங்கள் வார்னர் ப்ரதர்ஸால் எடுக்கப்பட்டது. இவைகளில் முதலிரண்டு பாகங்களை இயக்கியவர் டிம் பர்ட்டன். இந்த நாங்கு படங்களில், இறுதி இரண்டு படங்கள் கோமாளித்தனத்தின் உச்சகட்டமாக இருக்கும். எனவே இதன்பின் சில வருடங்கள் பேட்மேனைக் கிடப்பில் போட்டது வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம். அதன்பின் க்ரிஸ்டோஃபர் நோலன் என்ற இளைஞர் வந்து Batman Begins என்ற படத்தை இயக்கினார். விமர்சன ரீதியில் அது நல்ல பெயர் வாங்கியது. பின்னர் இதற்குள் பிரபல இயக்குநராக மாறியிருந்த நோலன், The Dark Knight என்ற படத்தை இயக்க, உலகின் மிகச்சிறந்த காமிக்ஸ் தழுவலாக அது மாறியது. இன்றுவரை உலகின் சிறந்த ஆக்‌ஷன் படங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில், ஜோக்கரின் கதாபாத்திரம் ஹீத் லெட்ஜரால் நடிக்கப்பட்டது. நடித்ததும் அவர் இறந்தும் போனார். அவருக்கு சிறந்த துணை நடிகர் ஆஸ்கரும் இறப்புக்குப் பின்னர் வழங்கப்பட்டது. அந்தக் கதாபாத்திரம் பேசிய “Why so serious?”என்ற வசனம் உலகப்பிரசித்தி அடைந்தது. ஜோக்கருக்கு உண்டான பின்னணியை ஜோக்கரே இரு இடங்களில் விவரிப்பான். அப்போது அவன் சொல்லும் வசனங்களில் இது ஒன்று. இந்தப் படம் வந்ததும்தான், இன்று டிஷர்ட்களில் ஜோக்கரின் படத்தைப் போட்டுக்கொண்டு சுற்றும் பலருக்கும் ஜோக்கர் என்ற கதாபாத்திரத்தைப் பற்றியே தெரிந்தது.

இவைகளே உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற ஹாலிவுட் பஞ்ச் வசனங்கள். இவைகளைத் தவிரவும் இன்னும் ஏராளம் உண்டு. அவற்றில் சிலவற்றைக் கீழே கொடுக்கிறேன். எது எந்தப் படம் என்று நீங்களே தேடிப்பாருங்கள். பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கும்.

“He-e-e-e-re’s Johnnie!”  

“Snakes. Why’d it have to be snakes?”

“E.T. phone home.”

“Say ‘hello’ to my little friend!”

“Go ahead, make my day.”

“Get away from her, you BITCH!”

“I’ll have what she’s having.”

“As far back as I can remember, I always wanted to be a gangster…To me being a gangster was better than being president of the United States.”

“You can’t handle the truth!” 

“Get busy livin’, or get busy dyin’.” 

“Houston, we have a problem.”

“They may take our lives, but they’ll never take our freedom!”

“To Infinity and Beyond!”

“I’m the king of the world!”

“The first rule of Fight Club is: you do not talk about Fight Club”

“Are you not entertained! Are you not entertained! Is this not why you are here!”

  Comments

Join the conversation