Spectre (2015) – English
முன்னுரை – இந்தக் கட்டுரையில் ஸ்பெக்டரின் கதை சொல்லப்படவில்லை. எனவே ஜாலியாக நீங்கள் இதைப் படிக்கலாம்.
கசீனோ ரொயால் படத்தில் இருந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஒரு ஸ்டோரிலைன் தொடர்ந்து வந்துகொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்தப் படத்தில் லீ ஷிஃப்ரே (Mads Mikkelsen) என்பவன் தான் பிரதான வில்லன். வெஸ்பர் லிண்ட் என்ற பெண்ணை பாண்ட் இதில் காதலிப்பார். பாண்ட் கஸினோவில் ஜெயித்த பணத்தை மிஸ்டர் வொய்ட் என்ற நபர் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார். இந்தப் படத்தின் முடிவில், மிஸ்டர் வொயிட்டை பாண்ட் சந்திப்பதாக முடியும். அவர்கள் க்வாண்டம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி கொடுக்கப்படும்.
இதற்கு அடுத்த படமான க்வாண்டம் ஆஃப் சொலாஸில், மிஸ்டர் வொயிட்டை பாண்ட் எம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பார். ஆனால் வொயிட் தப்பித்துவிடுவார். இதன்பின் க்வாண்டம் அமைப்பைப் பற்றி இன்னும் சில தகவல்கள் பாண்டுக்கும் எம்முக்கும் கிடைக்கும். இந்தப் படத்தில் டொமினிக் க்ரீன் என்பவனே வில்லன். மெட்ரானோ என்ற பொலிவியாவைச் சேர்ந்த முன்னாள் ஜெனரலுக்கு இந்த டொமினிக் க்ரீன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவுவான். இதை பாண்ட் முறியடிப்பார்.இதிலும் வெஸ்பர் லிண்டை பாண்ட் மறக்காமல் வருந்துவதாகக் கதை செல்லும். இறுதியில், பாலைவனத்தில் டொமினிக் க்ரீனை பாண்ட் விட்டுவிட்டு வந்துவிடுவார். ஆனால் அவன் சுடப்பட்டு இறப்பான். யாரால் என்பது தெரியாது.
மூன்றாவது படமான ஸ்கைஃபாலில், ரவூல் சில்வா என்ற முன்னாள் MI6 ஏஜெண்ட் தான் வில்லன். எம்மைக் கொன்றாக வேண்டும் என்ற வெறியில் இருப்பவன். ஒரு ஆபரேஷனின்போது இவன் பிடிபட்டதும் எம் அவனை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதால் எம் மீது கொலைவெறியுடன் திரிபவன். எம்.ஐ 6 தலைமையகத்தை குண்டு வைத்துத் தகர்ப்பான். அப்போது, படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் சாகஸத்தில் மணிப்பென்னியால் தற்செயலாக சுடப்பட்டுத் தலைமறைவாக இருக்கும் பாண்ட் திரும்பிவருவார். ரவூல் சில்வாவை எப்படி பாண்ட் முறியடிக்கிறார் என்பதே கதை. இதில், ஆரம்பத்தில் பாண்டுடன் சாகஸம் செய்யும் ஈவ் என்ற பெண் தான் மணிப்பென்னி என்பது கடைசியில்தான் தெரியும். இதில் எம் இறந்துவிடுவார். அவருக்குப் பதில், அவருடன் சேர்ந்து பணியாற்றிய கேரத் மல்லோரி என்பவர் எம்மாகப் பதவியேற்பார்.
இந்த மூன்று படங்களுமே ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை முற்றிலுமாக நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும்படியே காண்பித்தன. ஷான் கான்னரியில் இருந்து பியர்ஸ் ப்ராஸ்னன் வரை ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை ஒரு செக்ஸியான ப்ளேபாயாகவே நிறுவினர். இதற்கு அப்படங்களின் இயக்குநர்களும் திரைக்கதையாசிரியர்களுமே காரணம். அக்காலகட்டங்களின் ரசனையும் அதற்குக் காரணமாக இருந்தது.
ஆனால், முதன்முறையாக, பியர்ஸ் ப்ராஸ்னன் ரிடையர் ஆனதும், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் re-boot செய்யப்பட்டது. பியர்ஸ் ப்ராஸ்னனை கோல்டன் ஐயில் அறிமுகம் செய்த அதே மார்ட்டின் கேம்ப்பெல் திரும்ப அழைக்கப்பட்டார். இவரது அட்டகாசமான இயக்கத்திலும், நீல் பர்விஸ் (Neal Purvis), ராபர்ட் வேட் (Robert Wade), பால் ஹாக்கிஸ் (Paul Haggis) ஆகியவர்களின் டக்கரான திரைக்கதையிலும் கசீனோ ரொயால் திரைப்படம் பாண்டை மறுபடி ஆரம்பத்தில் இருந்து நிறுவியது. இப்படத்தில் பாண்ட் இரக்கமே இல்லாத ஒரு கொலைகாரராகக் காண்பிக்கப்படுவார். அதுதான் நாவல்களில் சித்தரிக்கப்பட்ட ஒரிஜினல் பாண்ட். அதை டேனியல் க்ரெய்க் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தார். இப்படத்தில் இருந்து, இந்த திரைக்கதை ஜோடியே இன்றுவரை தொடர்கிறது. இப்போதைய பாண்ட் படங்கள் சற்றே மாறுபட்டு இருப்பதற்கு இதுவே காரணம். ஸ்கைஃபாலில் பால் ஹாக்கிஸ் இல்லை. அவருக்குப் பதில் ஜான் லோகன் (John Logan). ஸ்பெக்டரில் ஜான் லோகன், நீல் பர்விஸ், ராபர்ட் வேட் ஆகியோரோடு ஜெஸ் பட்டர்வொர்த்தும் (Jez Butterworth) திரைக்கதை எழுதியுள்ளார். ஜான் லோகன் லேசுப்பட்டவர் இல்லை. க்லாடியேட்டர், லாஸ்ட் சாமுராய், ஏவியேட்டர், ஸ்வீனி டாட், ஹ்யூகோ, போன்ற படங்களுக்குத் திரைக்கதை எழுதியவர்). நீல் பர்விஸும் ராபர்ட் வேடும் சொதப்பிய ஒரே படம் க்வாண்டம் ஆஃப் சொலாஸ். இருந்தும் அடுத்த இரண்டு படங்களில் அந்தத் தவறை அவர்கள் செய்யவில்லை.
ஆரம்ப மூன்று படங்களின் கதை இப்போது தெளிவாக இருக்கிறதுதானே? அதில் வரும் மிஸ்டர் வொயிட் என்ற கதாபாத்திரம் இன்னும் இப்படங்களில் சாகவில்லை என்பது புரிந்திருக்கும். அந்தக் கதாபாத்திரம் ஸ்பெக்டரில் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. அதேபோல், பாண்ட்டின் முன்னாள் பாஸாகிய பழைய எம்மும் இந்தப் படத்தின் கதைக்குக் காரணம். மற்றபடி, remember that this time, Bond goes personal.
படத்தில், க்ரிஸ்டோஃப் வால்ட்ஸ் தான் வில்லன் என்பது ட்ரெய்லரைப் பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். எர்னெஸ்ட் ஸ்டாவ்ரோ ப்லோஃபெல்ட் என்ற இந்தக் கதாபாத்திரம் இதுவரை ஏழு படங்களில் வந்திருக்கிறது என்பதும் தீவிர பாண்ட் வெறியர்களுக்குத் தெரிந்திருக்கலாம் ( From Russia with Love (1963), Thunderball (1965), You Only Live Twice (1967), On Her Majesty’s Secret Service (1969), Diamonds Are Forever (1971), For Your Eyes Only (1981) & Spectre. Also in Never say Never Again, an unofficial Bond movie.). பழைய பாண்ட் படங்களில், பூனையை மடியில் வைத்துத் தடவிக்கொண்டிருக்கும் வில்லன் கதாபாத்திரத்தை, முகமே காண்பிக்காமல் காட்டுவார்கள். அதுதான் ப்லோஃபெல்ட். பாண்ட் எவ்வளவு பிரபலமோ, ப்லோஃபெல்டும் அத்தனை பிரபலம். இந்தக் கதாபாத்திரத்தின் பின்னணி அறிந்து இப்படம் பார்த்தால் க்ரிஸ்டோஃப் வால்ட்ஸின் கதாபாத்திரத் தேர்வு நன்றாகப் புரியும். SPECTRE என்று அழைக்கப்படும் பயங்கரவாத நிறுவனத்தின் தலைவர். இதுவரை மூன்று பாண்ட் படங்களில் காட்டப்படும் அனைத்துப் பிரச்னைகளும் இவராலேயே நிகழ்த்தப்படுகின்றன. அந்தந்த வில்லன்களைப் பின்னால் இருந்து இயக்கியவர் இவரே. இக்கதாபாத்திரத்தை நக்கலடித்துதான் ஆஸ்டின் பவர்ஸ் படங்களை மைக் மையர்ஸ் தயாரித்தார்.
மிகவும் தற்செயலாகவே பாண்டுக்கு ப்லோஃபெல்டைப் பற்றித் தெரிகிறது. அதன்பின் ப்லோஃபெல்டை பாண்டால் தடுக்க முடிந்ததா என்பதுதான் ஸ்பெக்டர்.
ஒருவேளை ஸ்கைஃபாலைப் பார்த்துவிட்டு, மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸ்பெக்டருக்கு நீங்கள் சென்றால் ஏமாற நேரிடும். காரணம், ஒருமுறை தான் ஸ்கைஃபால் போன்ற படங்கள் வரும். க்ரிஸ்டோஃபர் நோலனால் ஒரு Dark Knight தானே எடுக்க முடிந்தது? அவரது அடுத்த படமான Dark Knight Rises எத்தனை ஏமாற்றத்தைக் கொடுத்தது என்பது பேட்மேன் ரசிகர்களுக்குத் தெரியும். அதேதான் திரைக்கதையாசிரியர்களுக்கும் சாம் மெண்டெஸுக்கும் நிகழ்ந்துள்ளது. அவர்களால் ஸ்கைஃபாலின் மேஜிக்கை மறுபடி நிகழ்த்த இயலவில்லை. நிகழ்த்தவும் முடியாது. இருந்தாலும், இது அலுப்பான படமும் இல்லை. எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால், ஒரு பியர்ஸ் ப்ராஸ்னன் படம் போலவோ அல்லது ஒரு ரோஜர் மூர் படம் போலவோ உங்களை மகிழ்விக்கும் படம் இது. வழக்கமான பாண்ட் ஸ்டண்ட்கள், சேஸிங் காட்சிகள், சாகஸங்கள் ஆகியவையே இப்படம் முழுதும் நிரம்பியுள்ளன. ஸ்கைஃபால் போன்ற புத்திசாலித்தனமான காட்சிகளோ, ஸ்கைஃபாலின் உணர்வுபூர்வமான காட்சிகளோ இதில் அறவே இல்லை. ஆரம்பத்தில் இருந்தே அடுத்த காட்சிகளை எளிதாக யூகிக்க முடியும் படம் இது. ரோஜர் மூர் படங்களின் தொடர்ச்சியாகவோ அல்லது பியர்ஸ் ப்ராஸ்னனின் படமாகவோ வந்திருக்கவேண்டிய படம்.
உண்மையில் இப்போதெல்லாம் மிஷன் இம்பாஸிபிள், பார்ன் ஐடெண்டிடி, XXX, கிங்ஸ்மென் போன்ற படங்கள் ரகசிய ஏஜெண்ட்களை வைத்து எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முன்பைப்போல் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் தனிப்பட்டதாக இல்லை. எனவே பாண்டுக்கு மிகத்தீவிரமான போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பழைய பாண்ட் படங்களைப் போலவே ஒரு புதிய அம்சமும் இல்லாமல் தேமேயென்று ஒரு பாண்ட் படம் வந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஸ்பெக்டர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் ஒருமுறை (ஒரு சில கொட்டாவிகளை அடக்கிக்கொண்டு) பார்த்துவிட்டு வரலாம்.
பி.கு
1. ஆரம்பத்தில் இருந்து வெளிவந்திருக்கும் எல்லா பாண்ட் படங்களைப் போலவே இதிலும் அந்தந்தக் காலகட்டத்துப் பிரச்னைகள் கையாளப்பட்டிருக்கின்றன. எல்லா பாண்ட் படங்களுமே இப்படி எழுதப்பட்டவையே. அப்படித்தான் அவை ஆரம்ப காலத்தில் இருந்தே எழுதப்பட்டிருக்கின்றன என்பது பாண்ட் ரசிகர்களுக்கு அவசியம் தெரிந்த விஷயமே. உதாரணமாக ஷான் கான்னரி படங்களில் அப்போதைய தலையாய பிரச்னையாகிய Cold war கையாளப்பட்டிருக்கும். பியர்ஸ் ப்ராஸ்னன் படங்களி மீடியா மூலம் உலகைக் கையகப்படுத்துதல், எண்ணைக் கிணறுகளின் பிரச்னை, முன்னேறிவரும் கொரிய அரசாங்கம் என்று காண்பிக்கப்பட்டதைச் சொல்லலாம்.
2. பாண்டின் தனிப்பட்ட, பர்ஸனல் வாழ்க்கை ஸ்கைஃபாலில் அற்புதமாகக் காட்டப்பட்டிருந்தது. அதுதான் ஸ்கைஃபாலின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம். ஆனால் இதில் அது படுபயங்கரமாக சொதப்பப்பட்டுள்ளது. படம் பார்த்தால் புரியும். ஒரு விஷயம் வெற்றியடைந்துவிட்டது என்பதாலேயே இதிலும் அதையே திரும்ப சொல்ல முயன்று கடுப்படித்துள்ளனர். சந்தேகமே இல்லாமல் ஸ்கைஃபால் தான் பெஸ்ட். ஸ்பெக்டர், ஒரு அரத டெம்ப்ளேட் தமிழ்ப்படம் போல சில காட்சிகளில் (குறிப்பாக இந்த பர்ஸனல் பக்கங்களைக் கையாளும் காட்சிகளில்) உங்களுக்குத் தென்படும். சிரிப்பும் கூட வரலாம்.
3. படத்தின் ஒளிப்பதிவு Hoyte Van Hoytama. Interstellar படத்தின் ஒளிப்பதிவாளர்.
4. மோனிகா பெலூச்சி இதில் கௌரவத்திலும் கௌரவ வேடம். ஐந்து நிமிடங்கள் வந்தால் அதிகம்.
5. கஸீனோ ரொயால் படத்தில் அட்டகாசமாக ஆரம்பித்த இந்த பாண்ட் ரீபூட், க்வாண்டம் ஆஃப் சொலாஸில் தொபேலென்று சொதப்பியது. மறுபடியும் ஸ்கைஃபாலில் கம்பீரமாக எழுந்து நின்றது. இப்போது ஸ்பெக்டரில் தள்ளாட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. அடுத்த பாண்ட் படத்தை செங்குத்தாகத் தூக்கி நிறுத்தப்போகும் திரைக்கதை என்ன? அந்த இயக்குநர் யார் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.
எவ்வளவு நேர்மையான உண்மையான விமர்ச்சனம்… ஸ்கைபால் மாதிரி வராதுதான்… ஆனால் அதை ப்பேஸ் பன்ணினாலும் திரைக்கதையை அமைத்திருக்கலாம்…இது 23 பாண்ட் படங்களையும் பார்த்தவங்களுக்குத்தான் புரியும்…மத்தபடி டமால் டுமீல் ஓகேதான்…
Superb
Boss,
Please write review of “Thani Oruvan”.