Star Trek Into Darkness (2013) – 3D – English

by Karundhel Rajesh May 11, 2013   English films

Space: the final frontier. These are the voyages of the starship Enterprise. Its five-year mission: to explore strange new worlds, to seek out new life and new civilizations, to boldly go where no man has gone before

 

ஒரு பிரம்மாண்டமான விண்வெளிக் கப்பல். அதற்குள் இருக்கும் பல்வேறு மனிதர்கள். அவர்களின் தலைவராக ஒரு கேப்டன். இந்தக் கப்பலின் வேலை, எந்த மனிதனும் இதுவரை போயிருக்காத பல்வேறு புதிய உலகங்களுக்குப் பயணப்படுதல்.

இந்தியாவில் ஸ்டார் டிவி வந்த புதிதில், அப்போதைய ஸ்டார் ப்ளஸில் ‘ஸ்டார் ட்ரெக்’ என்ற தொலைக்காட்சி ஸீரீஸ் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. அதன்பின்னர் ஸ்டார் ப்ளஸ் ஹிந்தி சேனலாக மாறியபின்னரும், ஸ்டார் வேர்ல்ட் சேனலில் வந்துகொண்டிருந்தது இந்த ஸீரீஸ். அப்போது அதனை தவறாமல் பார்ப்பேன். ஒவ்வொரு எபிஸோடிலும் அந்த ஸீரீஸ் கையாண்ட களன்கள் எனக்குப் பிடிக்கும். உதாரணத்துக்கு, ‘Elementary, dear Data’ என்ற எபிஸோடில் ஷெர்லக் ஹோம்ஸ் கதையில் ஹோம்ஸ் எப்படி துப்பறிகிறாரோ அப்படி Data என்ற ஆண்ட்ராய்ட் ரோபோ ஒன்று துப்பறியும். இதுபோன்று, ஒவ்வொரு எபிஸோடிலும்  ஒவ்வொரு சுவாரஸ்யம் இதில் இருக்கும். சொல்லப்போனால் நாம் இங்கு ஏற்கெனவே பார்த்த Firefly ஸீரீஸுக்கெல்லாம் இதுதான் இன்ஸ்பிரேஷன்.

நேற்று உலகெங்கும் Star Trek in to Darkness வெளியாகியிருக்கிறது. இது, மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்த Star Trek படத்தின் இரண்டாம் பாகம் என்பது பல நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.ஆனால் உண்மையில் இது ஸ்டார் ட்ரெக் வரிசையில் பனிரண்டாவது படம். இதற்கு முன்னர் வெளிவந்திருக்கும் படங்களில் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவைகளைப் பற்றியும் எனக்குத் தெரிந்த விஷயங்களையும் கொஞ்சம் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

spock_rarepb

Mr. Spock

ஸ்டார் ட்ரெக் என்ற இந்த ஸீரீஸ், முதன்முதலில் ஒளிபரப்பாக ஆரம்பித்த ஆண்டு – 1966. மொத்தம் மூன்று வருடங்கள் ஒளிபரப்பாகியது. கேப்டன் ஜேம்ஸ் டி. கிர்க் என்றவரின் தலைமையின் கீழ் இந்த விண்வெளி ஓடம் மொத்தம் ஐந்து வருடங்களுக்கு பல இடங்களுக்குப் பயணப்பட்டு, பல்வேறு சாகஸங்களில் ஈடுபடுவதே கதை. இதில் கிர்க்கின் வலது கையாக, First officer என்ற பொறுப்பில் ஸ்பாக் என்பவர் இருப்பார். லயன் காமிக்ஸில் வெளிவந்துகொண்டிருந்த ஸ்பைடருக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம் கூட இருக்காது. ஒருவேளை ஸ்பைடரை அக்காலத்தில் திரைப்படமாக எடுத்திருந்தால் ஸ்பாக்காக நடித்த லியொனார்ட் நிமாயை (Leonard Nimoy) நடிக்க வைத்திருக்கலாம் என்று நினைப்பேன். இந்த ஸ்பாக் என்பவரின் தாய், மனித இனத்தை சேர்ந்தவர். தந்தை, வல்கன் என்ற கிரகத்தை சேர்ந்தவர். ஸ்பாக், ஒரு நடமாடும் கணினி. ஆனால் எக்காலத்திலும் எந்த விதியையும் மீறாதவர். ஜேம்ஸ் கிர்க்குக்கு பல வகைகளில் உதவுவதைப்போலவே உபத்திரவங்களையும் விளைவிப்பவர். கிர்க், ஸ்பாக்குக்கு நேர் எதிர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் விதிகளை மீறுவதைப்பற்றிக் கவலைப்படாதவர்.

இந்த இருவரைத் தவிர மேலும் டாக்டர் லியொனார்ட் மெக்காய், மாண்ட்கோமரி ஸ்காட், ஸ்பாக்கின் காதலி உஹுரா & ஹிகாரு ஸுலு என்ற அதிகாரி ஆகியவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்த ஸீரீஸ். இந்தக் கதைகள் நடக்கும் காலம் கி.பி. 2266 முதல் 2269 வரை. எண்டர்ப்ரைஸ் என்ற அந்த விண்வெளி ஓடம் தனது ஐந்து வருட பயணத்தில் முதல் மூன்று வருடங்களில் சந்திக்கும் சாகஸங்கள் இவை.

இந்த முதல் ஸீரீஸ் முடிவடைந்ததும், அதன்பின்னர் ஒரு அனிமேஷன் ஸீரீஸ் வெளிவந்தது. இதற்குப்பின்னர் 1987லிருந்து 1994 வரை ஏழு வருடங்கள், முதல் ஸீரீஸின் தொடர்ச்சியான ’The Next Generation’ ஒளிபரப்பப்பட்டது. ஒரிஜினல் கதை நடந்ததற்குப்பிறகு நூறு வருடங்கள் கழித்து, கேப்டன் ஸான் லுக் பிகார்ட் (Jean Luc Picard) என்பவரின் கீழ் நடக்கும் சாகஸங்கள் இவை. நான் பார்க்க ஆரம்பித்தது இந்த ஸீரீஸ் தான். இதில்தான் முதல் பத்தியில் பார்த்த ஆண்ட்ராய்ட் ரோபோ Data வரும். பிகார்டாக நடித்தவர் பாட்ரிக் ஸ்டூவர்ட். இந்த ஸீரீஸின் கதாபாத்திரங்கள் மிகப்பிரபலம்.

இதன்பிறகு Deep Space Nine, Voyager & Enterprise போன்ற ஸீரீஸ்கள் வெளிவந்தன. இதில் Enterprise என்பது எல்லாக் கதைகளுக்கும் முன்னர் நடக்கும் prequel.

இந்த அத்தனை ஸீரீஸ்களையும் கணக்கிட்டால் அவற்றில் வரும் கதைகள், சாகஸங்கள் முதலியன எண்ணிலடங்காதவை. போதாதென்று பத்து படங்கள் வேறு வெளிவந்திருந்தன (அவற்றில் பல படங்கள் மொக்கைகள்).

ஸ்டார் வார்ஸ் போல, ஸ்டார் ட்ரெக்கும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒரு ஸீரீஸாக இருந்தது. இந்த ஸீரீஸின் கடைசிப்படம் 2002ல் வெளிவந்திருந்த Star Trek: nemesis. படுதோல்வி. இதன்பின் சில வருடங்களுக்கு ஸ்டார் ட்ரெக் கிடப்பில் கிடந்தது. ஹாலிவுட் வழக்கப்படி தோண்டியெடுக்கப்பட்டு Reboot செய்யப்பட்ட ஆண்டு, 2009. அப்போதுதான் Star Trek என்ற படம் வெளிவந்தது. இது, முதல் ஸீரீஸில் (1966-1969) இடம்பெற்ற கதாபாத்திரங்களின் இளம் பருவத்தில் இவர்களெல்லாம் எப்படி சந்தித்துக்கொண்டனர் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். எனக்கு மிகவும் பிடித்த படமும் கூட. மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்தப் படத்தில், இளவயது ஸ்பாக், தனது வருங்காலத்திய முதியவர் ஸ்பாக்கை சந்தித்துப் பேசும் காட்சிகளும் உண்டு (முதிய ஸ்பாக்காக நடித்தவர், முதல் ஸீரீஸில் ஸ்பாக்காக நடித்த லியனார்ட் நிமாய்). ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் ரசிகர்கள் தவறவே விடக்கூடாத படம் இது.

இந்தப் படத்துக்குப் பிறகு நடக்கும் கதையே Star Trek Into Darkness.

முதல் பகுதி அட்டகாசமாக இருந்ததால், அதை நம்பி ஆவலோடு சென்ற எனக்கு இந்த இரண்டாவது பாகம் முழுத்திருப்தி அளிக்கவில்லை. பழைய ஸ்டார் ட்ரெக் படங்களின் வாசனை கொஞ்சம் அடித்தது. இதில் வில்லனாக நடித்திருப்பவர், நமது ‘ஷெர்லக்’ – பெனடிக்ட் கம்பர்பேட்ச் (Benedict Cumberbatch). இந்த வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் – ’கான்’ (Khan). தொலைக்காட்சித் தொடரிலும், பின்னர் திரைப்படங்களிலும் இந்த ஸீரீஸின் தலையாய வில்லனாக இடம்பெற்ற கதாபாத்திரம் இது. இந்த கான் யார்? ஏன் வில்லனானான்? போன்ற கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடை இருக்கிறது.

சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கே உரிய டெம்ப்ளேட்டில் கொஞ்சம் அலுப்பாகவே சென்ற இந்தப் படத்துக்கு நான் பரிந்துரைக்கும் மார்க்- 6/10. பெரிதாக எதுவும் இல்லை. ஆங்காங்கே சுவாரஸ்யம் தவறிவிடுகிறது. முதலில் வெளிவந்த பத்து படங்களில் பல படங்கள் அரத மொக்கைகள். இந்தப் படம் அந்த அளவு மொக்கை இல்லை என்றாலும், கிட்டத்தட்ட அதற்கு அஸ்திவாரம் இட்டுவிட்டது. இனிவரும் மூன்றாம் பாகம் செம கடி போடப்போகிறது என்று நினைக்கிறேன்.

பி.கு

1. இரண்டே பத்திகளில் முடிக்கவேண்டிய விஷயத்தை இவ்வளவு பெரிதாக எழுதியதன் நோக்கம் – எனக்குப் பிடித்த டிவி ஸீரீஸை கொஞ்சம் அறிமுகப்படுத்தலாமே என்பதே ?

2. சூது கவ்வும் படத்தின் விமர்சனம் நாளை இரவு எழுதுவேன்.

  Comments

6 Comments

  1. Chandramohan

    சூது கவ்வும் படத்துக்கு விமர்சனம் எழுதுறதுக்கு முன்னாடி அந்த படத்தில உங்க பங்கு என்னனு சொல்லிடுங்க…..
    பிகாஸ் ஒரு வாரமா மண்டைய பிச்சுகிட்டு உக்காந்துருக்கன்
    // மீ த பர்ஸ்ட்

    Reply
    • Omar Sheriff

      me too Boss

      Reply
  2. Chandramohan

    ஸ்டார் ட்ரெக்(டிவி சீரிஸ்) நானும் பல மாசமா டவுன்லோடு பண்ணனும்னு பாக்குறன். பேட் 63 ஜிபி கண்ண கொஞ்சம் கட்ட வைக்குது …..
    மத்தபடி படம் எங்க ஊருல ரிலீஸ் ஆனா பாக்கலாம்…. ஆனா அது நடக்காது…. #வழக்கம் போல ஆறு மாசம் கழிச்சு தான்…

    Reply
  3. ஜி நானும் ஸ்டார் ட்ரேக்இன் ரசிகன்தான்.
    ஆனால் நீங்கள் சொல்லியது போல் \* இளவயது ஸ்பாக், தனது வருங்காலத்திய முதியவர் ஸ்பாக்கை சந்தித்துப் பேசும் காட்சிகளும் உண்டு *// அல்ல 2009இல் வெளிவந்த படம் அது ஒரு alternate realityஇல் நடப்பதுதான் கதை.
    இந்த கதைப்படி Romulanகளின் கிரகம் ஸ்பாக்கின் (லியனார்ட் நிமாய்) விண்வெளி ஒடத்தினால் எதிர் காலத்தில் தவறுதலாக அழிகப்படும், அதற்கு பழிவாங்க Romulan விண்வெளி ஒடம் Narada, Black hole வழியாக வந்து Original ஐ(Time Line) மாற்றிவிடும் என்பது போல கதை நகரும்.
    ஆகா முதிய ஸ்பாக் வேறு ஒரு டைம் லைன்ஐச்(Time Line) சேர்ந்தவர்.

    # தவறு இருந்தால் மன்னிக்கவும் பாஸ் .

    Reply
    • Rajesh Da Scorp

      எஸ் சம்பத். நீங்க சொன்னது கரெக்ட் தான். அது வேறொரு டைம் zone தான். நானு அதை விரிவாக எழுதாமல் மிகவும் சுருக்கி எழுதியதுதான் டவுட்டுகளுக்குக் காரணம். இதுக்குப் போயி எதுக்குங்க மன்னிப்பெல்லாம்? 🙂 விரிவாக எழுதியதற்கு நன்றி.

      Reply
      • இல்ல ஜி இங்கிலீஷ் படம் கொஞ்ச நேரம் புரியாது.
        நான்பாட்டுக்கு தத்து பித்துனு எதாவது தப்பா சொல்ல கூடது அல்ல….

        Reply

Join the conversation