Stephen King and the Darabont Redemption – கட்டுரை

by Karundhel Rajesh December 18, 2010   English films

திரைப்பட ரசிகர்களால் என்றுமே மறக்கவியலாத ஒரு திரைப்படம் – The Shawshank Redemption. நான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்ததற்கு முதல் காரணி, இந்தப் படம்தான். 2000த்தில், HBO வந்த புதிதில், ஒரு நாள் நள்ளிரவில் இத்திரைப்படத்தை எதேச்சையாகப் பார்க்க ஆரம்பித்து, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றேன். அன்றிலிருந்து இன்றுவரை, குறைந்தபட்சம் இருபது தடவைகளுக்கு மேல் நான் பார்த்த படம் இது. உலகின் எந்த விருது வாங்கிய படத்துக்கும் சளைக்காத திறமையையும், ஆற்றலையும் தன்னுள் வைத்திருக்கும் படம். ஃப்ரான்க் டேரபாண்ட்டின் பெயரை உலகெங்கும் அறிவித்த படம்.

இந்தப் பதிவு, இத்திரைப்படத்தைப் பற்றி அல்ல. இந்தப் படத்தின் திரைக்கதைப் புத்தகத்தை, சென்னை லாண்ட்மார்க்கில், கடந்த 2008 மேயில் வாங்கினேன். இந்தப் புத்தகத்தில், திரைக்கதை மட்டுமன்றி, சீன்களின் விவரிப்பும், மாற்றப்பட்ட சீன்களைப் பற்றிய விபரமும், படத்தின் ஸ்டோரிபோர்டுகளின் உதாரணமும் விரவிக்கிடக்கின்றன. அது மட்டுமல்லாமல், ஸ்டீவன் கிங்கும், ஃப்ரான்க் டேரபாண்ட்டும் எழுதிய மூன்று அருமையான கட்டுரைகள் இதில் உள்ளன. அதில் ஒரு முக்கியமான கட்டுரையின் மொழிபெயர்ப்பே இந்தப் பதிவு. இதை நான் மொழிபெயர்க்கத் தீர்மானித்தது ஏனெனில், ஒரு படத்தை இயக்குவதில் உள்ள கஷ்டங்களைப் பற்றிய டேரபாண்ட்டின் இந்தக் கட்டுரை, ஒரு அற்புதமான தன்னம்பிக்கை டானிக்காகவும் விளங்குகிறது. நாளைய இயக்குநர்களுக்கு இது ஒரு ஊக்க மருந்தாகச் செயல்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்தக் கட்டுரை, பலருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே குறிக்கோள். படித்துப் பாருங்கள்.

Memo from the Trenches’ என்ற பெயரில் டேரபாண்ட் எழுதிய இந்தக் கட்டுரை, மூல வடிவத்தில், இங்கே கிடைக்கிறது.

இனி, டேரபாண்ட் பேசுகிறார்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, ஒரு திரைக்கதையாசிரியனாக இருக்கும் பெரும்பேறு எனக்குக் கிட்டியுள்ளது (இப்பொழுது, வெகு சமீபத்தில், ஒரு இயக்குநராகவும் ஆகியுள்ளேன்). நான் சந்திக்கும் மக்கள், பொதுவாக என்னிடம் எப்பொழுதும் கேட்கும் ஒரு கேள்வி – எனது வாழ்வாதாரமாக நான் கொண்டுள்ள இந்தப் பணியைச் செய்வது எப்படி இருக்கிறது என்பதே. நல்ல கேள்வி. ஆனால், இந்தக் கேள்வியின் தொனி எப்படி இருக்கும் என்றால், ஒருவேளை அவர்களின் மனதில் திரைத்துறையைப் பற்றி – அது ஒரு கொண்டாட்டம் என்றோ அல்லது ஒரு கவர்ச்சிகரமான, சுண்டியிழுக்கக்கூடிய ஒரு துறை என்றோ – இருக்கக்கூடிய பிம்பத்துக்கு மாறாக எனது வாழ்வு இருந்துவிட்டால், அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கக்கூடிய ஒரு விஷயம் என்ற தொனி அவர்களின் கேள்விகளில் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும்.

கட்டாயம் இது ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கை தான். மனதுக்கு முழுத்திருப்தியளிக்கும் வாழ்க்கை. எதனாலும் எனக்குக் கிடைத்த இந்த வாழ்க்கையை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். இருந்தாலும், எனது நேர்மையான கருத்து என்னவெனில், சமயங்களில், இந்த வாழ்க்கை, நான் சிறுவயதில் நினைத்துப் பார்த்ததுபோல் அந்த அளவு சுவாரஸ்யமாக இல்லாமலும் இருக்கிறது என்பதுதான்.

சில காலம் முன்பு, ஸ்டீஃபன் கிங்கின் புத்தகமான Different Seasons (அவரது மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று; அவசியம் படித்துப்பாருங்கள்) என்ற புத்தகத்திலிருந்து, Rita Hayworth & Shawshank Redemption என்ற ஒரு குறுநாவலைப் படமாக்கினேன். இப்படத்தில், பல திறமையான நடிகர்கள் நடித்திருந்தனர் (டிம் ராபின்ஸ், மார்கன் ஃப்ரீமேன் மற்றும் இன்னும் பல அற்புதமான நடிகர்கள்). இப்படத்தை இயக்கியதன் மூலம், எனக்கு சில அனுகூலங்கள் நிகழ்ந்தன. அவற்றில் சில: பதிநான்கு வருடங்களாக ஸ்டீஃபன் கிங்கைத் தெரிந்திருந்தும், முதன்முறையாக அவருடன் சில நாட்கள் பொழுதைக் கழிக்க முடிந்தது (எடிட்டிங் அறையில் ஒருநாள் நுழைந்து சில காட்சிகளை அவர் பார்த்தார். அதன்பின், அவருடன் Sundance cafeல், அவகாதோ – Bacon – சீஸ்பர்கர்கள் உண்டுகொண்டே அளவளாவ முடிந்தது). போலவே, மிகத்திறமையான இயக்குநரான ராப் ரெய்னருடன் பழக முடிந்தது (ஸ்டீஃபன் கிங்கின் இரண்டு கதைகளை – Misery மற்றும் Stand by me – திரைப்படங்களாக இவர் எடுத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களே ஸ்டீஃபன் கிங்கின் கதைகளை வைத்து எடுக்கப்பட்ட படங்களில் தலைசிறந்தவை என்பது என் அபிப்பிராயம்). அதேபோல், ஷஷாங்க் ரிடெம்ப்ஷனின் இறுதி வடிவத்தை ஜார்ஜ் லூகாஸுக்குப் போட்டுக்காட்டியதும் (அவருக்குப் படம் மிகவும் பிடித்துப்போனது), பார்பரா ஸ்ட்ரெய்ஸாண்ட், பில்லி க்ரிஸ்டல், டாம் க்ரூஸ், ஜாக் நிகல்ஸன், அர்நால்ட் ஷ்வார்ஸெனிக்கர் மற்றும் சூஸன் ஸராண்டன் ஆகியவர்களைச் சந்திக்க முடிந்ததும் இப்படத்தை நான் இயக்கியதால் தான்.

சரி. ஒரு விஷயத்தை முயற்சித்துப் பார்க்கலாம். மேலே நான் சொல்லிய விஷயங்களிலிருந்து, எனது வாழ்க்கை படுஜாலியாகவும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள்? கைகளைத் தூக்குங்கள் பார்க்கலாம்.

ம்ம்ம்.. ஓரளவு ஜாலியாகத்தான் எனது வாழ்க்கை உள்ளது. ஆனால், இப்படி நான் சொல்வது, ஒரு நிமிடம் அதனைப்பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதால் மட்டுமே. உண்மையில், பெரும்பாலும், மிகக்கடினமான வேலைப்பளுவோடு இருப்பதே எனது வாழ்க்கை. நம்ப முடியவில்லையா? சரி. என் வேலையைப் பற்றிய இன்னொரு விஷயத்தையும் இப்போது பார்த்து விடலாம்: ஷஷான்க் ரிடெம்ப்ஷனின் படமாக்குதலுக்கு முந்தைய வேலைகளை, ஜனவரி 1993ல் இருந்து தொடங்கினேன். நடிகர்களைத் தேர்வுசெய்தல், லொகேஷன்களைப் பார்வையிடுதல், தொழில்நுட்ப வல்லுனர்களோடு எண்ணற்ற முறைகள் பேசுதல் இன்னபிற வேலைகள் அதில் அடங்கும். எனது தயாரிப்பாளர் நிகி மார்வினும் நானும் எண்ணற்ற இரவுகளில் அமர்ந்து, படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்களின் திறமை பற்றியும் இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் பலவிதமான முடிவில்லாத உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறோம் (இந்த நீண்ட அமர்வுகளை அர்த்தமுள்ளதாக ஆக்கிய ஒரே விஷயம், நாங்கள் நடிகர்களைத் தேர்வு செய்ய அமர்த்திய பெண் – டெபோரா அக்விலா – இவரது படு தமாஷான பேச்சுகள்தான். எத்தனைக்கெத்தனை இரவுகள் நீண்டனவோ, அத்தனைக்கத்தனை அந்த அமர்வுகள் நகைச்சுவை கூடியதாக இருந்தன).

அதன்பின், படத்தின் தயாரிப்பு – படத்தின் நடிகர்கள் தங்களுக்குள் ஒத்திகை பார்ப்பது, தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து பேசிக்கொள்வது இத்யாதி – நிகழ்ந்தது. இது, ஐந்து மாதங்கள் வரை நீண்டது (மூன்று மாதங்கள் லாஸ் ஏஞ்சலீஸிலும், இரண்டு மாதங்கள் ஓஹையோவில் – ஷூட்டிங் ஸ்பாட்டிலும்). இந்த ஐந்து மாதங்கள் கழித்து, மொத்தமாக ஓய்ந்து போனேன். கதைகளில், ஒரு ஒற்றைக்கால் மனிதன், மனிதர்களின் பின்புறங்களை உதைக்கும் போட்டியில் கலந்துகொண்டதைப் பற்றிப் படித்திருப்பீர்கள். படத்தைத் தொடங்கும் முன்னால் நம்மைத் தயார் செய்து கொள்வது, அப்படி உதைக்கப்பட்ட மனிதனின் மனநிலைக்குச் சமம்.

இதன்பிறகே, நிஜமான வேலை தொடங்கியது. மூன்றுமாத ஷூட்டிங் – ஓஹையோவிலும் மேன்ஸ்ஃபீல்டிலும். கிட்டத்தட்ட பதினைந்திலிருந்து பதினெட்டு மணி நேர வேலை – தினமும். உட்காரக்கூட நேரமில்லாத சூழல். ஞாயிறு மட்டுமே ஷூட்டிங் இல்லை. ஆனால், அன்றும், அடுத்து வரும் வாரத்தில், காட்சிகளை எப்படி அமைப்பது என்று சிந்திப்பதிலேயே எனது நேரம் முழுவதும் கழிந்தது. அதாவது, இது எனது ஹோம்வொர்க். ’ஓய்ந்துபோனேன்’ என்பது மிகப் பலவீனமான வார்த்தை. எனது நிலைமையை விளக்குவதற்கு இனிதான் ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். முடிவில், பிணங்கள் நடப்பதைப் போன்று ஒரு நிலையில், வெறித்த பார்வையோடு, தானியங்கி முறையில் நடமாடுவதைப் போல், எங்கோ தொலைதூரத்தில் கண்ணுக்கு எட்டாத இலக்கை நோக்கித் தள்ளாடித் தள்ளாடி நடக்கும் ஒரு மனிதனின் நிலையில் இருந்தேன். அப்படி நடக்கையிலேயே, தவறிக் கீழே விழுந்தாலோ, ஆள் காலி. இதில் வீட்டின் நினைவுகள் வேறு. தூக்கம் என்பது ஒரு அழிந்துபோன நினைவு. மனோபலமும் உடல்பலமும் அபரிமிதமாகத் தேவைப்படும். நம்பவே முடியாத அசதியும் மன உளைச்சலும் கூடவே தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்..

இருந்தாலும், ஷூட்டிங்கின் கடைசி நாளும் வந்தே தீரும். வாழ்த்துக்கள். இந்த எட்டு மாத அவகாசத்தில், அடி மேல் அடி வாங்கி, நடமாடக்கூட முடியாத நிலையில் இருந்தாலும், எப்படியோ கடைசி வரை சென்று போட்டியை வெல்லும் குத்துச்சண்டை வீரனைப் போல், இந்தப் படத்தை முடித்துவிட்டீர்கள். ஓய்வெடுக்கத் தயாராகிவிட்டீர்களா? அந்தோ பரிதாபம். எந்தப் படமும், படப்பிடிப்புக்குப் பின், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் என்ற பயங்கரமான சோதனையுடன் தான் வருகிறது. இதிலும், போஸ்ட் ப்ரொடக்‌ஷனின் இறுதி மாதத்தில் வாரத்துக்கு ஏழு நாட்கள் மிகக்கடுமையாக – எங்களின் மூளை காதுகளின் வழியே வழிந்து ஓடும்வரை – வேலை செய்தோம் (மிக்ஸிங், இசை, வசன உச்சரிப்பு இத்யாதி).

சரி, இப்போது சொல்லுங்கள். எனது துறை, சுவாரஸ்யமாகவும் ஜாலியுமாகவா இருக்கிறது?

இப்போது மிகக்குறைவான கைகளே உயர்வதைப் பார்க்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை, நான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்பினேனோ அதனைச் செய்துகொண்டிருக்கிறேன். அதில் எனக்கு மனம் முழுக்கச் சந்தோஷமே நிரம்பியுள்ளது.

பல கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இதுவரை பேசிய அனுபவத்தில் நான் கண்டுகொண்டுள்ளது என்னவெனில், திரைப்படக் கல்லூரிகளில், உங்களையே நீங்கள் நம்பவேண்டிய அவசியத்தைக் கற்றுக்கொடுப்பதில்லை என்பதையே.

ஒரு முறை ஜார்ஜ் லூகாஸிடம், இருபது வருடங்களுக்கு மேலாகியும் நீங்கள் ஏன் இன்னமும் மறுபடி திரைப்படங்களை இயக்க ஆரம்பிக்கவில்லை என்று கேட்டேன் (இது நடந்தது, ஸ்டார் வார்ஸ் – Phantom Menace அவர் இயக்குவதற்கு முன்). அதற்கு லூகாஸ் கூறிய பதிலானது: திரைப்பட இயக்கம் என்பது மிகக்கடுமையான ஒரு வேலை என்பதும், அது நம்முள் இருக்கும் அத்தனை சக்தியையும் வடித்துவிட்டு, நம்மை எதுவும் இல்லாதவனாக மாற்றிவிடுகிறது என்பதும்தான் (இத்தனைக்கும் லூகாஸின் சிரத்தையும் ராணுவ ஒழுங்கும் புகழ்பெற்றவை). திரைப்படங்களை இயக்கத் துவங்கியபின்னர், அவர் கூறியது உண்மைதான் என்று காண்கிறேன். இந்தத் திரைப்படம், எனது வாழ்வின் ஒன்றரை வருடங்களை என்னிடமிருந்து விழுங்கியது. நண்பர்களை ஒன்றரை வருடமாக நான் சந்திக்கவில்லை. இந்தக் காலத்தில் பெரும்பாலான நாட்கள் கடுமையாகவும் சோர்வுடனும்தான் கழிந்தன. இதிலும், முப்பதே நொடிகளில், எனது ஒன்றரையாண்டு உழைப்பை ஒரு டிவி விமர்சகர் நல்லதாகவோ கெட்டதாகவோ விமர்சித்துவிட முடியும். விமர்சகர்களுக்குத் தெரியாதது என்னவெனில், ஒரு திரைப்படம் எடுக்கப்படுவதே அதிசயம்தான் என்பதே.

அனேகமாக இப்பொழுது உங்களுக்குள்ளேயே நீங்கள் பேசத் துவங்கியிருப்பீர்கள்: ‘இந்த டேரபாண்ட் என்ன ஒரு மூடனைப் போல் பேசுகிறான்? ஒரு புகழ்பெற்ற படத்தை இயக்கியபின்னரும் இவன் இப்படி உளறுவது ஏன்? ஒருவேளை மக்களின் பரிதாபத்தை சம்பாதிக்கத் திட்டம் போடுகிறானோ? அல்லது ஒருவேளை யாராவது இவன்பின்னால் நின்று வயலினில் சோககீதம் வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறானா?’ என்று.

எனது விடை, மேலே நீங்கள் நினைத்த அத்தனையும் தவறு என்பதே. எனது வேலையில் உள்ள கடினமான விஷயங்களை, உங்களில் சிலர் கேட்டதால் கூறினேன். பச்சாத்தாபம் என்பது, அது யாருக்குத் தேவையோ அவர்களுக்குத்தான். எங்களைப் போன்று, வாழ்வின் லட்சியக் கனவை அடைந்துவிட்டவர்களுக்கு அல்ல. எங்களிடம் யாருமே, இது சுலபம் என்றோ ஜாலியான விஷயம் என்றோ சொல்லவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்று விரும்பினேனோ அதனைச் செய்து கொண்டிருக்கிறேன். அதில் எண்ணற்ற மகிழ்ச்சியும் திருப்தியும் உள்ளது. என்னைக் கேட்டால், இந்தப் பூமியிலேயே மிக மிக அதிருஷ்டக்காரர்களில் நான் ஒருவன் என்றே கூறுவேன்.

சரி. இவ்வளவு கடினமாக உள்ள ஒரு வேலையை ஏன் செய்யவேண்டும்?

ஒரு சிறிய ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன். என்னைப்பொறுத்தவரையில், நாம் அனைவருமே மூளைச்சலவை செய்துகொள்ளப்படுகிறோம் என்றே நினைக்கிறேன். நாம் செய்ய நினைக்கும் வேலை, ஜாலியாகவும் மகிழ்ச்சிதரக் கூடியதாகவும் இருந்தால் மட்டுமே அதனைச் செய்ய வேண்டும் என்ற ஒரு தவறான செய்தி நம்மிடையே பரப்பப்பட்டு வருகிறது. எம் டிவியும் வீடியோ கேம்களும் இதைத்தான் நம்மிடையே போதிக்கின்றன. வீட்டில் சொகுசாக அமர்ந்துகொண்டே, எதுவும் கிடைக்கப்பெறும் சோம்பேறிகளாகவே நாம் இருந்துவிட்டோம். எம் டிவி போன்ற சேனல்களும், வீடியோ கேம்களும் நம்மை மனநலம் பிறழ்ந்தவர்களாக மெதுமெதுவே உருமாற்றிக்கொண்டிருக்கின்றன. சமுதாயத்தில் நம்முடைய லட்சிய மாந்தர்கள், ஐன்ஸ்டைன், ஷ்வைட்ஸர், லிண்ட்பெர்க் போன்ற சாதனையாளர்களாக இப்போது இல்லை. நம்முடைய ஹீரோக்கள் யாரென்று பார்த்தால், வெறும் ஸிம்ப்ஸன் (அமெரிக்கத் தொலைக்காட்சியில் வரும் ஒரு மொக்கை கதாபாத்திரம்) அல்லது அதனைப்போன்ற வெறும் பிம்பங்களாகவே இருக்கின்றன. இவை நமக்குச் சொல்லவரும் செய்தி இதுதான்: வாழ்வில் சாதிக்கவே தேவையில்லை. சாதாரண வாழ்வு வாழ்வது மட்டுமல்லாது, பொதுவான வேலைகள் கூடச் செய்யாமல் சோம்பித் திரிவதே நல்ல விஷயம்தான் என்பதுபோன்ற கேடுகெட்ட செய்திகள்தான்.

இல்லை: நான் ஒருபோதும் இவர்களை எனது ஆதர்சங்களாகக் கொண்டவனில்லை. சோம்பலையும் முட்டாள்தனத்தையும் கொண்டாடும் விஷயங்களைக் கண்டால், எனது பொறுமையை நான் இழந்துவிடுகிறேன். ஆனால், பரிதாபகரமாக, நம்முடைய சமூகம் செய்வது என்னவெனில், யாருமே ஏமாற்றப்பட்டவர்களாக இருந்துவிடக் கூடாது என்பதுதான். எனவே, ஜானிக்குப் படிப்பு வரவில்லையா? அவனைத் திட்டாதே. அதற்குப் பதில், சமுதாயத்தின் கல்வியின் நிலையை இன்னும் சற்றுக் கீழிறக்கு. ஜானியால் எவ்வளவு புரிந்துகொள்ள முடியுமோ, அந்த அளவு கல்வி எல்லோருக்கும் கிடைத்தால் போதுமானது. ஆஹா! என்ன ஒரு அருமையான யோசனை! இதற்குப் பின், ஜானியும் அவனது நண்பர்களும், சமுதாயத்தின் கடைந்தெடுத்த முட்டாள்களாக – தங்களது கல்லூரிச் சான்றிதழைக் கூடப் படிக்கத் திறமையில்லாதவர்களாக- மாறுவதைப் பற்றி இந்தச் சமுதாயம் கவலையே படுவதில்லை.

என்னை மன்னியுங்கள். நமது மூதாதையர்கள், நாம் இப்படி மாறுவதைப் பற்றி எண்ணிக்கூடப் பார்க்கவில்லை என்பது எனக்குப் புரிகிறது. வாழ்க்கை என்றுமே ஒரு குதூகல ஒப்பந்தத்துடன் உங்களிடம் வருவதில்லை. நாம் பிறந்தவுடன் நம்மிடம் வாழ்க்கை, ஈ-டிக்கெட்களை நீட்டுவதில்லை. நாம் அமைப்பதே நமது வாழ்க்கை. இதில் பரிதாபமான சோகம் என்னவெனில், நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள மிகக் குறைவான காலத்தில், வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தையும் நாம் அளந்து பார்க்க முயல்வதேயில்லை என்பதுதான்.

ஒருவேளை, எனது இந்தக் கட்டுரை, ஒரு தன்னம்பிக்கை அளிக்கும் பிரசங்கத்தைப் போல் இதற்குள் தோற்றமளிக்க ஆரம்பித்திருந்தால், அதற்கு இதுதான் காரணம். என்னவெனில், எவ்வளவு கடினமான, நிறைவேறுவதற்கு வாய்ப்பே இல்லாத கனவுகளை நாம் நினைத்தாலும், அவை அத்தனையுமே கட்டாயம் நிறைவேறுபவை தான். அவை அத்தனையையும் நம்மால் உறுதியாக அடைந்துவிட முடியும்.

ஆனால், இதற்குத் தேவை, கடும் உழைப்பு. நானே ஒரு உதாரணம். ஒரு திரைக்கதையமைப்பாளராக நான் மாறுவதற்கு, பசியும் போராட்டமும் நிறைந்த ஒன்பது வருடங்கள் ஆயின. அந்த ஒன்பது வருடங்களும் மிகக் கொடுமையான வருடங்கள். இருந்தாலும், திரைக்கதையாசிரியராக நான் ஆனபின், அதற்கு அடுத்த ஒன்பது வருடங்களிலும், ஒரு நாள் கூட நான் வேலை செய்யாமல் இருந்தேயில்லை. நான் ஒரு அதிருஷ்டக்காரன் என்றே எண்ணுகிறேன். அதே சமயத்தில், விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால், எவ்வளவு கடினமான நிலையிலும் – நமது லட்சியம் நிறைவேறவே போவதில்லை என்ற ஒரு இருண்ட சந்தர்ப்பத்திலும் கூட – பிடிவாதமான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதன் மூலம், நமது விதியையும் அதிர்ஷ்டத்தையும் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதிலும் எனக்குத் துளிக்கூட சந்தேகமே இல்லை (இந்தத் தத்துவமே ஷஷான்க் ரிடெம்ப்ஷனின் அடிநாதமாக விளங்குகிறது. இந்தக் காரணத்தினாலேயே தான் ஸ்டீஃபன் கிங்கின் இந்தக் கதையை நான் காதலிக்கத் துவங்கினேன்).

பொதுவாக நான் சொல்லும் ஜோக் – அது உண்மையும் கூட – என்னவெனில், என்னை விடவும் திறமை வாய்ந்த பல இயக்குநர்களும் திரைக்கதையாசிரியர்களும், இந்த நகரத்தின் பல இடங்களில், சிறிய கடைகளிலும் அலுவலகங்களிலும் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஒன்பது வருடங்களை இந்தத் துறையில் செலவிட நான் தயாராக இருந்ததுபோல், அவர்கள் தயாராக இல்லை. எனவே அவர்களால் பளிச்சிடவும் முடியவில்லை. எடிசன் ஆயிரம் முரை முயன்றுதானே ஒரு பல்பை எரியவைக்க முடிந்தது? சற்று யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, 999 முயற்சிகளுக்குப் பிறகு அவர் சோர்வடைந்து, இந்த முயற்சியைக் கைவிட்டிருந்தால்?

நான் சொல்லவரும் செய்தி மிகச் சுலபமானது. ஜான் எஃப் கென்னடியை விட வேறு யாராலும் இதனை எளிதாகச் சொல்லிவிட முடியாது: அவர் கூறுகிறார்: ‘சந்திரனுக்குச் செல்ல நாம் முயல்வது, அது சுலபமானது என்பதால் அல்ல; அது மிகமிகக் கடினமானது என்பதால் மட்டுமே’ . வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்களுக்கு ஒரு கனவு இருக்கும் பட்சத்தில், எழுந்து, அதனை நோக்கி ஒவ்வொரு அடியாக வைக்கத் துவங்குங்கள். என்னைப்பொறுத்தவரை, கென்னடியையும் எடிசனையும் எந்த நாளிலுமே உதாரணங்களாகக் கொண்டு செயல்பட்டு என்னால் வெற்றி காண முடியும்.

Memo from the Trenches’ என்ற ஃப்ரான்க் டேரபாண்ட்டின் கட்டுரை இத்துடன் முடிவு பெறுகிறது. விடைபெறுமுன், டேரபாண்ட்டைப் பற்றிய ஒரு செய்தி: அவர் இயக்கிய இந்த ஷஷாங்க் ரிடெம்ப்ஷன், இந்த நிமிடம் வரை, அமெரிக்கத் திரைப்பட வரலாற்றிலேயே மிகச்சிறந்த படம் என்று பல்வேறு பத்திரிக்கைகளாலும் இணையதளங்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. எந்தப் படத்தினாலும் இதன் பெருமையை அசைக்க முடியவில்லை. அத்தகைய ஒரு iconic நிலையை அடைந்தவர் ஃப்ரான்க் டேரபாண்ட். உலகின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவர்.

கொசுறு: ஷஷான்க் ரிடெம்ப்ஷன் பார்க்காதவர்களுக்கு மட்டும்: இதோ டிரெய்லர்.

  Comments

20 Comments

  1. >>>எவ்வளவு கடினமான, நிறைவேறுவதற்கு வாய்ப்பே இல்லாத கனவுகளை நாம் நினைத்தாலும், அவை அத்தனையுமே கட்டாயம் நிறைவேறுபவை தான். அவை அத்தனையையும் நம்மால் உறுதியாக அடைந்துவிட முடியும். >>

    ரொம்ப சரி

    Reply
  2. அற்புதமான கட்டுரை.சிம்ப்சன்ஸ் தொடரைக் கிண்டல் அடிப்பதை நான் விரும்பவில்லை எனினும் ….[எனது பேவரைட்]அது கூட அபாரமான உழைப்புக்குப் பிறகுதான் வெளிவர முடியும் இல்லையா..பிரச்சினை என்னவெனில் எந்திரனுக்குப் பின்னாலும் மிகக் கடுமையான உழைப்பு இருக்கிறது என்பதே..இவ்வளவு உழைப்புக்குப் பின்னால் வரும் படம் ஒரு மொக்கையான படமாக அமைந்துவிடுவது அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது.[ஹாலிவுட்டிலும்தான்]ஆகவே அது மட்டுமே ஒரு படம் முழுமையான வெற்றிப் படைப்பாக வருவதற்குப் போதாது என்றே தோன்றுகிறது.ஆனால் முயற்சித்துக் கொண்டேதான் இருக்கவேண்டும் வேறு வழியில்லை.

    Reply
  3. படத்தைப் போலவே அவருடைய எழுத்தும் அருமை. மூலத்தை அப்படியே மொழிபெயர்ப்பில் கொண்டுவந்திருக்கிறீர்கள், வாழ்த்துகள்.

    Reply
  4. தன்னம்பிக்கையின் அளவு குறையும் போதெல்லாம் எனக்கு உற்சாகமூட்டும் படங்களாக ஃபாரஸ்ட் கம்ப்பும், ஷஷாங் ரெடம்பஷனும் இருந்திருக்கின்றன. இது ஒரு சிறந்த படம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. ஆனால், நான் எழுதிய இந்த பதிவைப் படித்துப்பாருங்கள். இதற்கு ஸ்டீபன் கிங் ஏதேனும் விளக்கம் கொடுத்திருந்தாரா தெரியவில்லை, லியோ டால்ஸ்ட்டாயை குறிப்பிட்டதாகக் கூட அறியமுடியவில்லை. ஆனால், ஷஷாங் ரெடம்ப்ஷன் மூலத்தை மிஞ்சிய நகல்.

    God sees the truth but waits என்ற லியோ டால்ஸ்டாயினுடைய சிறுகதையை படித்துப்பாருங்கள்.

    Reply
  5. நிறைய எழுதியிருக்கிறீர்கள்! படிக்கிறேன்!

    Reply
  6. எனக்கு மிகவும் பிடித்த படம். பிரான்க் டேராபோண்டின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. மொழிபெயர்ப்பு அருமையாக உள்ளது தல

    Reply
  7. மிக அருமையான மொழிபெயர்ப்பு.அருமையான கட்டுரை.

    Reply
  8. நண்பரே,

    சிறப்பான மொழிபெயர்ப்பு. சுவாரஸ்யமாக படிக்க முடிந்தது. வெற்றி, தோல்வியை தாண்டியும் நல்ல படைப்புக்கள் மனதில் இடம் பிடித்து விடும் அல்லவா. ரிடெம்ப்ஷன் அபார வெற்றி பெற்றிராவிட்டால் அதனை நல்ல படைப்பு அல்ல என்று ஒதுக்க முடியாதது போல.

    Reply
  9. ரொம்ப அருமை! நல்லா சுவாரசியமா இருந்ததுங்க!

    Reply
  10. குறிப்பிடத்தக்க விஷயம் என்னன்னா, இந்தப் படம், தியேட்டர்ல பெருசா வசூல் குவிக்கலை. ஆனா கேபிள் டீவிலயும், டிவிடி லயுமே மொத்த காசையும் எடுத்திருக்காங்க. இங்கயும் திருட்டு டிவிடிக்கு பதில் மக்கள் ஒரிஜினல் டிவிடி வாங்கி பாக்க ஆரம்பிச்சா, ஒரு வேளை, நாம கவனிக்க விட்ட பல நல்ல படங்கள் நல்ல வசூல் பாக்கும். இவர் எடுத்த கிரீன் மைல் படமும் ரொம்ப நல்லாயிருக்கும். கிரிஸ் நோலனுக்கு அப்புறம், நாவலை ரொம்ப அழகா படம் எடுக்குறவர்.

    Reply
  11. superb well translated and written..
    exceptionally inspiring..
    thanks and continue the good job
    அற்புதமான கட்டுரை

    Reply
  12. Super katturaingka. intha padaththai paththi ezuthiddee irukkalaam ezutha ezutha aarvam kuRaiyaatha oree padam ithuvaaththaan irukkum.
    ennooda blog la muthal pathivee intha padaththai paththithaan.

    ungkaludaiya intha veelai uNmaiyileeyee viyappaiyum antha padaththin miithuLLa viruppaththaiyum therivikkiRathu.

    vaazththukkaL sir.

    Reply
  13. மார்கன் பிரீமெனின் நடிப்பு சொல்லவே வேண்டியதில்லை .இந்த படம் அப்புறம் செவன் இரண்டு போதும் இவர் நடிப்பின் சான்றுக்கு.அப்புறம் முதலில் ஜெயிலுக்கு வரும் ஜேமேஸ் வித்மோர் அந்த இடத்தின் பயங்கரமான சூழ்நிலையை கண்டு மிரக்ல்வதும் முரண்டு பிடிப்பதும் பின்னர் போகப்போக (மார்கன் உதவியுடன்) மற்றவர்களை போல் சூழ்நிலைக்கு ஒத்து போவதும் வெறும் ஜெயில் வாழ்க்கைக்கு மட்டுமல்ல நம் எல்லோர் வாழ்வுக்கும் பொருந்தும்.முதலில் பிறக்கும் குழந்தை பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும்.வாழக்கையை கண்டு மிரளும் பின்னர் தொடர் மிரட்டல் கேலி கிண்டல் ஆகியனவற்றை பார்த்து பார்த்து அந்த வளரும் குழந்தையும் (அற்ப)வாழ்வில் தன்னை ஐக்கியபடுத்தி கொள்ளும்.இதை உவமானமாக காட்டிய இயக்குனருக்கும் கதையாசிரியர் மற்றும் திரைக்கதையாலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    *அப்புறம் படத்தில் எனக்கு பிடித்த காட்சி Gilda(1946) படத்தை கைதிகள் பார்ப்பதும் ரீடா ஹெய்வோர்த் வரும் காட்சியில் கரகோஷம் எழுப்புவதுவும் (நானும் எழுப்பினேன் என்பது வேறு விஷயம் 😉 ஹீ ஹீ )அப்புறம் மோர்கனிடம் சின்ன சுத்தியல் கேட்கும் ஜேம்ஸ் வித்மோரிடம் “இதை வச்சி நீ சொரங்கம் தோண்டுனா அம்பது வருஷம் ஆகும்” என மோர்கன் கூறுவதும் அப்புறம் தனது ஜெயில் அறை சுவற்றில் ஜேம்ஸ் முதலில் ரீடா ஹெய்வோர்த் போஸ்டரையும் சிலபத்து வருடங்களா கழித்து மர்லின் மன்றோ போஸ்டரை ஒட்டியிருப்பதாக காட்டியிருப்பது அருமை.அதைவிட அருமை அந்த போஸ்டரை கிழித்த பின்புதான் தெரியும் அதன் வழியே சுரங்கம் தோண்டியிருக்கிறார் என்று.!!!ஹீ ஹீ ஹீ அந்த தப்பிக்கும் காட்சியில் நானே வாழ்க்கையில் இருந்து விடுவிக்கப்பட்டது(ஆமா “உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை” பாபா பாடல் வரிகள்) போல் உணர்ந்தேன்
    *இந்த படம் வெளியான ஆண்டு பொற்கால ஆண்டு.இந்த படம் மற்றும் PulpFiction அப்புறம் நம்ம தல Al Pacino நடித்த Scent of a woman .oscar தேர்வாளர்களுக்கு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்திய ஆண்டு இது.நன்றி..

    Reply
  14. @ சிபி செந்தில்குமார் – நன்றி

    @ போகன் – அது வேறொண்ணுமில்லை பாஸ்.. நீங்க சொன்னபடி, கடும் உழைப்புக்கு அப்புறம் வெளிவர்ர மொக்கை சினிமாங்களால தான் பிரச்னை.. உழைப்பு, கரெக்டாக channalize செய்யப்பட வேண்டும்னு நான் நினைக்கிறேன்.. உங்க கருத்துக்கு நன்றி

    @ தமிழினியன் – உங்க பின்னூட்டம் படிச்சப்புறம்தான் இந்த மேட்டரே தெரிஞ்சது 🙂 .. என்ன கொடுமை பாஸ் இது ! இதைப்பத்தி ஸ்டீஃபன் கிங் எதுவுமே இதுவரை சொல்லல.. 🙁

    @ தேவன் மாயம்- கண்டிப்பா.. படிச்சித்தான் ஆகணும் 🙂

    @ ரவிகாந்த் – மிக்க நன்றி நண்பா.. 🙂

    @ இலுமி – மனமார்ந்த நன்றிகள் 🙂

    @ காதலரே – ஆமாம்.. ரிடெம்ப்ஷன் தோல்விதான். ஆனால், அத்துடன் வெளிவந்து வெற்றியும் விருதுகளும் பெற்ற ஃபாரஸ்ட் கம்ப்பை விட நல்ல படம் என்பது எனது தனிப்பட்ட கருத்து 🙂 .. நன்றி நண்பரே

    @ எஸ்.கே – மிக்க நன்றி

    @ Mrniceguy467 – ஆமாம். கேபிள்லயும் டிவிடிலயுமே இது போட்ட பணத்தை எடுத்துருச்சி.. இங்க ஒரிஜினல் டிவிடி பார்க்கலாம். ஆனா ஹாலிவுட் மாதிரி, ஒரே மாசத்துல ஒரிஜினல் வந்தா நல்லா இருக்கும் 🙂 .. க்ரீன் மைல், எனக்குப் புடிச்ச இன்னொரு படம்.. நன்றி நண்பா

    @ மகேஷ் – மிக்க நன்றி

    @ ஆதவா – உண்மைதான். எனக்கு ரொம்பப் புடிச்ச படங்கள்ல இதுக்குத்தான் முதலிடம் .. அதுனாலதான் எழுதுனேன்.. 🙂

    @ viki – உங்களோட விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. அதுல பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லிருக்கீங்க.. 🙂 எனக்கும் அது எல்லாமே புடிக்கும்.. குறிப்பா வாழ்க்கையைப் பத்தின உங்க உவமானம் டாப் 🙂 .. எங்கியோ போயிட்டீங்க 🙂

    @ padma hari nandan – மிக்க நன்றி நண்பா

    Reply
  15. ஆஸ்கார் அவார்டில் தோற்றாலும் ஃபார‌ஸ்ட் க‌ம்ப்‍ ஐ விட‌ முக்கிய‌மான‌ ப‌ட‌மிது. அரிய பேட்டிக்கு ரொம்ப‌ ந‌ன்றி.

    -Toto
    http://www.pixmonk.com

    Reply
  16. interesting ..translate..very nice

    Reply
  17. எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று. பிரமாதமான படம்.

    Reply
  18. My alltime favourite movie…
    and the movie…
    The Green Mile too…

    Great Writing….

    Reply

Join the conversation